செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

சிறுகதை : வலி 2/2 - ஜீவி

 

வலி

ஜீவி

2

 [சென்ற வார தொடர்ச்சி ]  

முன்கதை படிக்க 


என்னைப் போலவே தான் என் மகனும்.  ஒருவர் மீதான இன்னொருவர் பாசத்தை இருவருமே வெளிக்காட்டிக் கொண்டதில்லை.  ஆனால் பங்கஜம் அப்படி இல்லை.

அவள் அன்பு வெளிப்படத் தெரியும்.  ஒரே மகன் என்பதினாலேயோ என்னவோ சுந்தர் மீதான அவள் பாசம் நேரடியாக அவனைப் பார்க்கும் தருணங்களில் அடக்க முடியாது அவள் செய்கைகளில் வெளிப்படும்.

அப்பா-- அம்மா கூடவே இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்ளத் துடிக்கும் மகனை குடும்ப ஒற்றுமையைக் குலைத்துத் தன்னோடு கூட்டிக் கொண்டு போய் விட்டாளே என்று மருமகள் மைதிலி மீது பங்கஜத்திற்கு தாங்கிக் கொள்ளவே முடியாத எரிச்சல்.  மருமகள் தனியாகப் பிரிந்து குடும்பம் நடத்துவதற்கு இவள் தான் காரணம் என்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாத படிக்கு அவள் மூளை மழுங்கிப் போயிருந்தது.  அது உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ளும் என்ற நப்பாசை கூட எனக்கில்லை.  அந்தளவு ஒரு அடமெண்ட் அழிச்சாட்டியம் அவளுக்கிருந்தது.

வாசல் பக்கம் அவன் செருப்பைக் கழட்டி விடுவதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது.  தலைகாணியை முதுகுக்கு அண்டை கொடுத்தபடி ஒருக்களித்து வாசல்பக்கம் பார்த்தபடி சாய்ந்திருந்தவன் எழுந்து உட்கார்ந்து மகனை வரவேற்க ஆயத்தமானேன்.

"எப்படிப்பா இருக்கே?" என்று கேட்டபடியே ஹாலுக்குள் நுழைந்தவன் கட்டிலில் என் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

"இந்த டாக்டரிடம் போனதிலிருந்து எவ்வளவோ பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.." என்றேன்.

"முதுகு வலி இப்போ ரொம்ப குறைஞ்சிருக்குப்பா.." என்று அவன் கவலைப் படாதிருக்க கொஞ்சம் கூடவே வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.

"நீ சொன்னையே அந்த கேப்ஸ்யூல் என்னன்னு கூகுள்லே சர்ச் பண்ணிப் பார்த்தேன்ப்பா.  அது மஸில் ரிலாக்ஸ் கேப்ஸ்யூல்ப்பா.  ரொம்ப எஃபக்டிவ்வான ஒண்ணு. இப்பக் கொடுத்திருக்கிற வரை சாப்பிட்டுப் பாரு. அடுத்த தடவை நீ டாக்டர்கிட்டே போறேச்சே, சொல்லு.  நானும் கூட வர்றேன்.." என்றான்.

"அது என்னவோ தெரிலே. ரெண்டு நாள் வலியில்லே, நல்லாருக்கு என்பார் உன் அப்பா.. மூணா நாள் பழைய குருடி கதவைத் திறடின்னு வலி வந்திடும்.  எப்பவுமே அப்பப்ப ஒண்ணு. நிலையா குணமாயிடுத்துன்னு இவரைப் பொறுத்தமட்டில் ஒண்ணுமில்லையோன்னு எனக்குத் தோணும்.." என்று தன் பங்குக்கு பங்கஜம் எதையோ உளறினாள்.

அவ எப்பவுமே இப்படித்தான்.

தான் என்ன நினைக்கிறாளோ அது தான் உண்மை என்று நம்புகிற குணம்.  சின்ன வயசிலே லேசா மனசிலே படிஞ்சிருந்தது நாளாவட்டத்திலே கெட்டிப் பட்டுப் போய்விட்டதுன்னு நினைக்கிறேன். அதை எப்படி இனிமே இளக்கி சரிப்படுத்தறதுன்னு தெரிலே.

கையோடு கொண்டு வநதிருந்தப் பையைத் திறந்து ஒரு டப்பாவை எடுத்தான் சுந்தர்.  என் பக்கத்தில் வந்து நின்று "அப்பா,  'ஆ' திற பாக்கலாம்.." என்றான்.

"என்னடா.. உன் அப்பா ஆறு வயசு குழந்தைன்னு நெனைச்சையா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் பங்கஜம்.

திறந்த என் வாயில் ஒரு ஜிலேபி விள்ளலை வைத்தான்.  "இந்தம்மா உனக்கும்.." என்று பங்கஜத்தையும் வாய் திறக்கச் சொல்லி தன் கையால் ஊட்டுகிற மாதிரி கொடுத்துச் சிரித்தபடியே டப்பாவை அவளிடம் கொடுத்தான்.

பையனின் அன்பில் சொக்கிப் போனாள் பங்கஜம்.  "என்னடா ஸ்வீட்லாம் கொடுக்கறே என்ன விசேஷம்?" என்றாள் சிரித்தபடியே.
 
"எல்லாம் நல்ல விஷயம் தான்மா.  மைதிலி கன்ஸீவ் ஆகியிருக்கா.  இன்னையோட அஞ்சு மாசம் முடிஞ்சு ஆறாவது மாசம் ஆரம்பம்.  அதான் சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்.."

"என்னடா இவ்வளவு சாதாரணமா சொல்றே?.." என்று பங்கஜம் படபடத்தாள்.  "உன்னைப் பெத்தவா இங்கே குண்டு கல்லாட்டம் இருக்கோம். அவா கிட்டே இந்த நல்ல சமாச்சாரத்தைச் சொல்லாம வேறு யாரு இருக்கா ஒனக்கு? இதைச் சொல்றதுக்கு மீன மேஷ நட்சத்திரம் பார்த்து ஆறு மாசத்துக்கு வெயிட். பண்ணிண்டு இருந்தையோ?.. ஏண்டா. தெரியாமத் தான் கேக்கறேன்.. எங்க கிட்டே இதை சொல்லணும்ன்னு உனக்குத் தோணவே இல்லையா, இல்லே, ஒன் பெண்டாட்டிக்காரி இதை எங்ககிட்டே சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டாளா? சொல்லு.. என்ன நான் சொல்றது?.." 

"அம்மா.. ஏம்மா இப்படி சத்தமா பேசறே?.. பீ காம்.  இப்படி உட்காரு.." என்று அவள் கையைப் பிடித்து சுந்தர் தன் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டான்.

நான் எதுவும் பேசலே. இந்த நல்ல விஷயத்தை சுந்தர் சொல்லாம இத்தனை நாள் இருந்தது எனக்கு. வருத்தமாக இருந்தாலும் பேசாமலிருந்தேன்.  பையன் எப்படியும் அவளை கன்வின்ஸ் பண்ணிடுவான்னு தெரியும்.  அதுக்காக காத்திருந்தேன்.

"என்னை சமாதானப்படுத்துவதற்காக எதையோ கதை கட்டப்போறே.. அவ்வளவு தானே?" என்றாள் பங்கஜம், விட்டேற்றியாக.

"கதை இல்லேம்மா.. உண்மைலே நடந்தது என்னன்னா,  மைதிலி கன்ஸீவ் ஆயிருக்கான்னு அந்த லேடி டாக்டர் கன்ஃப்ர்ம் பண்ணினாங்களே தவிர, தொடர்ச்சியா மைதிலிக்கு ஒண்ணு மாத்தி ஒண்ணுனு ஒடம்பு சரியில்லாம இருந்தது.  ஆபிஸ், டாக்டர் க்ளினிக்னு மாத்தி மாத்தி போயிண்டு அவளுக்கே வெறுத்துப் போயிடுத்து... இப்போ இந்த ரெண்டு வாரமா கொஞ்சம் பரவாயில்லை.  உடம்பு தேறி வர்றா.."

"அடப்பாவமே.. பிள்ளைத்தாச்சி பெண்ணுக்கு என்னலாம் கஷ்டம் பாரு.. இதெல்லாம் நீ எங்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கலாமில்லையா? மனசுக்குள்ளேயே புழுங்கிண்டு ஒண்டியா அவஸ்தை பட்டிருக்கே.. போனது போகட்டும்.  இப்போ நாங்க அவளைப் பாக்கணும். என்ன சொல்றே?... எங்களைப் பார்த்தாத் தான் அவளுக்கும் தனக்கு மனுஷா இருக்கான்னு ஒரு தெம்பு வரும்..  அது சரி, மைதிலி அம்மாக்கு விஷயம் தெரியுமா?  சொல்லிட்டையா?"

"இல்லேம்மா.  உனக்கு சொன்ன பிறகு தான் மத்தவாளுக்கெல்லாம் தெரியப்படுத்தணும்னு மைதிலி பிடிவாதமா இருக்கா.."

"அடப்பாவமே!.." என்று நெட்டுயிர்த்தாள் பங்கஜம். 

அதைப் பார்த்து ஒரு வழியா எல்லாம் ஒண்ணு சேர்ந்து வருகிறதே என்று எனக்கும் பரம திருப்தி.

அன்றைக்கு வியாழக்கிழமை. மைதிலிக்கும் சனி.  ஞாயிறு ஆபிஸ் விடுமுறையாதலால் சனிக்கிழமை இங்கு வந்து, தன் வீட்டிற்கு அழைத்துப் போவதாக சுந்தர் சொல்லிருந்தான்...  கிடைத்த ஒரு நாள் இடைவெளியில் பங்கஜம் மைதிலிக்காக தேன்குழல், முறுக்கு என்று என்னவெல்லாமோ படசணங்கள் பண்ணி ஆசையாக எடுத்து வந்திருந்தாள்.

வீட்டுக்குள் நுழையும் போதே,  "வாங்க அம்மா -- வாங்க அப்பா" என்று எங்கள் அருகில் வந்து முகம் மலர வரவேற்றாள் மைதிலி.  பங்கஜம் வாத்ஸல்யத்துடன் அவள் கைபற்றி தன் அன்பை வெளிப்படுத்தினாள்.

இரண்டு ரூம்கள், கிச்சன், ஹால், பாத்ரூம் என்று பெட்டி போல சின்னதாய் இருந்த வீட்டை அடைசல் இல்லாமல் அழகாய் வைத்திருந்தாள் மைதிலி.
ஹால் பளிச்.  சுவரில் என்லார்ஜ் செய்யப்பட்ட பெரிய சைஸ் புகைப்படத்தில் லேசான புன்னகையுடன் நானும் பட்டுப் புடவையில் தானும்   இருப்பதைப் பார்த்ததுமே மனம் நெகிழ்ந்து போனாள் பங்கஜம்.   மைதிலியை வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என்று நிர்தாட்சண்யமாய் துரத்தின பழைய நினைவுகள் மனசில் உலா வந்து அவளை வதைத்தது.

ஹால் சோபாவில் அமர்ந்தோம். "இங்கே, வா.." என்று மைதிலியை அழைத்து தன் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டு ஆதரவுடன் அவள் கை பற்றி நெகிழ்ந்து போனாள் பங்கஜம். "சுந்தர் எல்லாம் சொன்னான்.  இப்போ உடம்பு பரவாயில்லையா?" என்று விசாரித்தாள்.

"இப்போ எவ்வளவோ பெட்டர், அம்மா.  முன்னாடி தான் ஒரு வழி பண்ணிடுத்து.." என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மைதிலி.

கிச்சனிலிருந்து பிளேட்டில் வைத்து பஜ்ஜி+ சட்னி என்று எடுத்து வந்தான் சுந்தர்.. சின்ன ஸ்டூலை எங்களுக்கு எதிரே சாப்பிட வசதியாக நகர்த்திப் போட்டான். "இப்போத்தான் பண்ணினா.  சூடா சாப்பிட்டா நன்னா இருக்கும்.." என்று அவன் எங்களிடம் சொன்ன பொழுது காலத்தின் மாற்றங்களை நினைத்து எனக்குள் சிரிப்பு தான் வந்தது.  

எங்க மடியில் தவழ்ந்த குழந்தை!...

இப்பொழுது தனி வீடு, தனி குடுத்தனம் என்று... தாத்தா, கொள்ளு தாத்தா, பேரன் என்று ஒரே வீட்டில் ஒன்றாய் சாப்பிட்டு ஒன்றாய் உறங்கின ஒரே கூட்டுக் குடும்ப வாழ்க்கை பலதாய் சிதறுண்டு சின்னாப்பின்னமாய் போன கதை!.. சிதறுண்டதை ஒன்றாய்த் திரட்டி ஒரே குடையின் கீழ் ஸ்தாபிப்பது தான் வருங்கால இலட்சியமாய் இனி ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்குமோ என்று நினைவு புரண்டதுமே ஏதோ புது சக்தி என்னுள் முகிழ்த்த மாதிரி உடம்பு சிலிர்த்தது.  என் அப்பாவை தாத்தா என்று மழலையில் மிழற்றிய சுந்தர் மாதிரி சுந்தரின் குழந்தை தாத்தா என்று என் விரல் பற்றி ஒரே வீட்டில் வளைய வர வேண்டாமா?.. மனதின் அடி ஆழத்தில் ஏக்கமாய் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன.

சின்ன வயசிலேயே மைதிலி தன் தந்தையை இழக்க அவளை வளர்த்து ஆளாக்கியதெல்லாம் அவள் தாய் தான்.  ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம்.  மைதிலிக்கு மத்திய அரசுப் பணி கிடைத்ததும் தான் லேசா தலை நிமிர்ந்த குடும்பம் என்று சுந்தர் எங்களிடம் சொல்லியிருக்கிறான். 

"சரி.. அங்கே எப்போ வர்றே? எங்களோடயே இப்போ வந்திடறையா?" என்று ஆசை ஆசையாக பங்கஜம் கேட்டதற்கு "இப்போ வேணாம்.." என்று மைதிலி சொன்ன பொழுது சட்டென்று பங்கஜம் முகத்தில் ஏற்பட்ட சலனத்தை நான் கவனிக்கத் தவறவில்லை.

வழக்கமா பெண்கள் பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு வந்து விடுவது வழக்கமாக இருப்பதால் மைதிலி தயங்குகிறாளோ என்று பங்கஜம் நினைத்தாளோ என்னவோ

"இப்போ அம்மா எங்கே இருக்காங்க?" என்றாள்.

"திருச்சிலே.. அண்ணா வீட்டில்.." 

மைதிலிக்கு பதிவுத் திருமணம் ஆன அடுத்த வாரத்திலேயே அவள் அம்மா தன் பையன் வீட்டுக்குப் போய் விட்டதை சுந்தர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறான்.

"வர்ற மே மாசத்லேந்து மெட்டர்னிட்டி லீவு எடுக்கறதா இருக்கேன். பின்னாடி தான் லீவ் தேவை இருக்கும் என்பதால் முடிஞ்ச வரை ஆபிஸ் போய்டலாம்ன்னு உத்தேசம்.  இங்கே அடுத்த தெருலே தான் ஆபிஸ்ங்கறதாலே போய்ட்டு வர்றதும் கஷ்டமில்லாம இருக்கும். அதானாலே தான்..." என்ற மைதிலி ஒரு வினாடி தயங்கிச் சொன்னாள். "அப்பாக்கு வேறே ஒடம்பு முடியாம இருக்குன்னு இவர் சொன்னார். நானும் இப்பவே அங்கே வந்து..." என்றவள் தலை குனிந்து,

"ஆனா டாக்டர் டேட் குறிச்சதும் அங்கே வந்திடுவேன்.. பிரசவ வலி எடுத்ததும் ஆஸ்பத்திரிலே அட்மிட் ஆகி உங்க வாரிசை பெத்தெடுத்து உங்க கைலே ஒப்படைச்சிடணும் என்பதில் உறுதியா இருக்கேன்.." என்று அவள் சொன்ன பொழுது வெட்கத்தில் ஏற்கனவே சிவந்த அவள் முகம் மேலும் சிவந்தது.

பங்கஜம் அவள் பிறவி குணத்திற்கு மாறாக ரொம்பவும் இணக்கமாய் போனது எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

கடைசியில் எல்லாம் மைதிலி சொன்ன மாதிரி தான் நடந்தது.  

ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் குடும்ப வாரிசாய் கண்ணன் பிறந்தான். முன் கூட்டியே மைதிலியின் தாயாரும் வந்திருந்து ஆறு மாசத்திற்கு எங்கள் உடனேயே இருந்தது எங்கள் எல்லோருக்கும் மிகவும் உதவியாகவும் மன ஆறுதலை அளிப்பதாகவும் இருந்தது. என் முதுகு வலியெல்லாம் மாயமாய் மறைந்து போனது இன்னொரு சந்தோஷ விஷயம்.  அது மட்டுமில்லை,  கண்ணன் பிறந்ததும் அவன் கூடவே சேர்ந்து நான் ஆசைப்பட்ட மாதிரியே  கவிதைகளும் பிறந்தன.

பாரதி நிவாஸ் என்ற கவிதை பற்றி உங்களுக்கும் சொல்ல வேண்டும்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் எங்கள் முன்னோர்கள் குடும்பச் சொத்தாய் அரண்மனை மாதிரி ஒரு கட்டிடம் காலத்தின் இடிபாடுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. சித்தப்பா, பெரியப்பா, மாமா, மைத்துனன் என்று பங்காளி -- தாயாதி உறவுகள் எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து முடிவெடுத்து ஒரே தீர்மானமா அந்தப் பழைய கட்டிடத்தைப் புதுப்பித்து புத்தம் புதுசா தனித்தனி குடில்களாகக் கட்டி ஒரு பெரிய காம்பவுண்ட் சுவர் அரணுக்குள் எங்கள் குடும்பங்கள் அத்தனையையும் ஒன்று சேர்த்திருக்கிறோம்.  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று சொன்ன பாரதியின் பெயரை எங்கள் குடிலுக்கு சூட்டி பண்டைய கூட்டுக் குடும்ப கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்ததில் எங்கள் எல்லோருக்கும் பரம திருப்தி. 


- நிறைவுபெற்றது -

24 கருத்துகள்:

 1. ஒரு யோசனை: வார இதழ்களில் வெளிவ
  ரும் கதைகள் போலவான கோர்வையான வாசிப்புக்கு சென்ற பகுதி சுட்டியைக் கிளிக்கி வாசித்து விட்டு தொடர்ந்து இந்தப் பகுதியையும் வாசிக்கலாம்.

  ஒரு ஆலோசனை: இணையத்தில் இஷ்டப்படி எழுதுதல் வேறே. அச்சுக்காக எழுதும் முறை வேறே. வழக்கமாக நான் எழுதும் பொழுது நேரடியாக அச்சுக்குப் போகிற மாதிரி எழுதி விடுவதுண்டு. அதனால் பிற்காலத்தில் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட வேண்டுமானாலும் கூட அந்த நேரத்தில் மாற்றங்கள் செய்ய அவசியமில்லாமல் சுலபமாகப் போய்விடுகிறது. என் எழுத்துக்கள் புத்தகங்களாக ஆன முறை இது தான். இந்த முறை மற்றவர்களுக்கும் பயன்படலாம்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு மூத்த எழுத்தாளர் எழுதிய கதை போல் இல்லை. Expected more from you, but the story went on the beaten track. ஆனால் இந்த வயதிலும் கதை எழுதுவதை விடாமல் முயற்சி செய்வதற்கு பாராட்டுக்கள்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. கதை நன்றாக இருந்தது. வழக்கமான கதை, உயிர்ப்புடன் கூடிய நிகழ்வுகளால் சிறப்படைகிறது.

  அம்மாக்கள் எப்போதுமே தன் குழந்தை தன் கைக்குள் இருக்கணும், அவனுக்கு வரும் மனைவியும் அப்படியே தன் கைக்குள் அடங்கிடணும் என்று எதிர்பார்க்கறாங்க. அப்பாக்கள், உலகின் அனுபவத்தால் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு விசால மனதுடன் இருக்கிறார்கள். பாசம் என்பது இருவருக்கும் ஒன்றே, அது வெவ்வேறு வித்த்தில் வெளிப்படுகிறது என்பது அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. மருமகள், மகன் ஆகியோர் மீது தவறு சொல்லாமல் அப்பாவின் பார்வையில் கதை நகர்கிறது.

  முடிவில் கூட்டுக்குடித்தனப் பகுதி, கதையுடன் ஒட்டாமல் சம்பவமாகிவிடுகிறது.

  இந்த டாபிக்கில் ஒன்று எழுத நினைக்கிறேன். அது கதை பற்றிய விமர்சனத்தைத் தாண்டி, பின்னூட்டங்களை வேறு பகுதிக்கு இழுத்துவிடும் என்பதால் எழுதலை.

  பதிலளிநீக்கு
 5. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 7. கதை நன்றாக இருக்கிறது. பங்கஜம் நல்ல தாய் என்பது புரிந்து விட்டது.
  தாத்தாவின் முதுகு வலி சரியாகி விட்டது. பேரனை உப்பு மூட்டை தூக்க வேண்டுமே!
  சின்ன கண்ணன் வயிற்றில் இருக்கும் போதே பாட்டியின் மனதை மாற்றி விட்டான். பிறந்தவுடன் அனைவரும் ஒன்றாய் இருக்க செய்து விட்டான். உறவுகள் வாழ்க!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான முற்பகல் வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  வீட்டில் தண்ணீர் பிரச்சனை தலைகாட்ட ஆரம்பித்து விட்டது காலை மணி பத்துக்குள் தண்ணீர் சம்பந்தபட்ட . வேலைகளை முடிக்க வேண்டிய நிர்பந்தம். அப்புறம் தண்ணீர் இல்லாத காடுதான். "என்னடா இது பெங்களூக்கு வந்த சோதனை..!! " என மனம் அலுத்துக் கொள்கிறது. கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு பதிவுலகிற்கு வருகிறேன்.

  இன்று என் பதிவுக்கு வந்து கருத்துக்கள் தந்தவர்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். (இதுவும் சும்மா ஒரு சுய விளம்பரம்தான்.. :)))) நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொல்றதைப் பார்த்தால், நேரே காவிரிக்கு குறுக்காக நின்னு, முதல்ல பெங்களூருக்கு அனுப்புங்க, பிறகு தஞ்சையையெல்லாம் பார்த்துக்கலாம்னு சண்டைக்குப் போவீங்க போலிருக்கே... ஹா ஹா ஹா. என் அனுபவத்தை எழுதுகிறேன்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   ஹா ஹா ஹா. இருக்கும் தண்ணீர் கஸ்டத்தில் எங்கே போராட்டமெல்லாம்...!! போராட செல்ல கூட நேரமில்லை. தவிரவும் இப்போதெல்லாம் காவிரி எங்கே தடையின்றி வருகிறது.? நாங்கள் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த வாடகை வீட்டில் கூட எல்லாவற்றிற்கும் காவிரி அன்னைதான் துணையாகவே இருந்தாள். நிலத்தடி தண்ணீர் வசதியே அங்கில்லை.

   இப்போது இங்கு வந்த பின் காவிரி தண்ணீர் வசதிக்காக ஆரம்பத்திலேயே பணம் தந்தும் கூட எப்போதும் நிலத்தடி தண்ணீர்தான். கா"விரி" இல்லையென கை "விரி"த்து விட்டார்கள். போன தடவை தென். மே. மழை வேறு பொய்த்து விட்டது. இந்த தடவையாவது காவிரி அன்னை மனம் குளிர அனைவருக்கும் நல்லதை செய்யட்டும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 10. வெவ்வேறு வித குணாதிசயங்கள் அன்பில் மலர்ந்து அழகில்
  வெளிப்படுவதாக மனதிற்குப் படுகின்றது..

  வழக்கமான மாவாக இல்லாதது சிறப்பு..

  பதிலளிநீக்கு
 11. அவ எப்பவுமே இப்படித்தான்.

  தான் என்ன நினைக்கிறாளோ அது தான் உண்மை என்று நம்புகிற குணம். சின்ன வயசிலே லேசா மனசிலே படிஞ்சிருந்தது நாளாவட்டத்திலே கெட்டிப் பட்டுப் போய்விட்டதுன்னு நினைக்கிறேன்.//

  இப்படியான குணம் யாருக்கு இருந்தாலும், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி அந்தக் குடும்பத்தில் பிளவு என்பது சர்வ நிச்சயம். இது கொஞ்சம் மனரீதியான plus attitude பிரச்சனை. அதுவும் பிறவி குணம் என்பது போலச் சொல்லிவிட்டு அது டக்கென்று மாறுவதாக வருகிறதே, ஜீவி அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
 12. ம்ம்....பங்கஜம் அவள் பிறவி குணத்திற்கு மாறாக ரொம்பவும் இணக்கமாய் போனது எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.//

  இந்த இடத்தில் கதை முடிகிறதே என்று தோன்றுகிறது. அதன் பின்னானவை நேர்மறையாக முடிக்க வேண்டும் என்றோ இல்லை, கூட்டுக்குடும்பம் பற்றிச் சொல்ல வேண்டும் என்பது போலவும் ஆகிறதோ என்றும் தோன்றுகிறது அண்ணா. கொஞ்சம் சினிமாக்கு போல...

  தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா. என் மனதில் பட்டதைச் சொல்கிறேன்.

  நீங்கள் சொல்லியிருந்த கருத்துதான்....எழுத்தாலரின் எண்ணங்கள் இல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகள் மன நிலை வெளிப்படுவதாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது எனக்கு ரொம்பப் பிடித்தது அண்ணா. ஆனால் இக்கதையில் அது கொஞ்சம் விலகிப் போகிறதோ என்று தோன்றியதால்...

  முதல் பகுதியும் இதில் மகன் வந்து சொல்வதும் வரை அருமை. அதன் பின் தான் கொஞ்சம் டக்கென்று கதை நகர்ந்து முடிவது போல் இருக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
 13. கதை நன்றாகவே இருக்கிறது அண்ணா மற்றபடி. அதுவும் சம்பவங்கள் யதார்த்தம்தான். டக்கென்று முடிவுற்றது போல் இருக்கின்றது,

  கீதா

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஜீவி சகோதரரே.

  கதை நன்றாக உள்ளது. இறுதியில் சுபமாக முடித்து நிறைவானபடிக்கு தந்திருப்பதற்கு நன்றி.

  /அப்பா-- அம்மா கூடவே இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்ளத் துடிக்கும் மகனை குடும்ப ஒற்றுமையைக் குலைத்துத் தன்னோடு கூட்டிக் கொண்டு போய் விட்டாளே என்று மருமகள் மைதிலி மீது பங்கஜத்திற்கு தாங்கிக் கொள்ளவே முடியாத எரிச்சல். /

  மகன் மேல் (அதுவும் தன் ஒரே மகன்) வைத்திருக்கும் அந்த தாயின் பாசம் அவளை அப்படி கண்மூடித்தனமாக நடந்து கொள்ள வைத்து விட்டது. மற்றபடி அவள் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் வந்த மருமகளின் அன்பு, அவள் தன்னை மதிக்கும்படியாக நடந்து கொள்ளும் செயல்கள், தங்கள் புகைப்படத்தை நினைவாக தங்கள் வீட்டு ஹால் சுவற்றில் மாட்டி வைத்து பெருமைபடச் செய்தது என பல செயல்கள் அந்த தாயின் மனதை மாற்றி விட்டது.

  தனக்கு வேறு பெண் பிள்ளைகளோ , இல்லை வேறு பிள்ளை குழந்தைகளோ இல்லையென்ற எண்ணமே நாளாவட்டத்தில் ஒரு தாய்க்கு தன் மருமகள் மேல் பாசம் கொள்ள ஆரம்பிக்க வழி வகுத்து விடும்.

  எப்படியோ அந்த தந்தை ஆசைபட்டபடி விரைவில் பங்கஜத்தின் மனம் மாறி குடும்பம் இணைந்தது மகிழ்ச்சி கொள்ள வேண்டிய விஷயம். குட்டிக்கண்ணன் தன் நற்செயலாக தான் தோன்றிய உடனேயே பாட்டியின் மனம் மாற வழி வகுத்து விட்டான்.

  /சித்தப்பா, பெரியப்பா, மாமா, மைத்துனன் என்று பங்காளி -- தாயாதி உறவுகள் எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து முடிவெடுத்து ஒரே தீர்மானமா அந்தப் பழைய கட்டிடத்தைப் புதுப்பித்து புத்தம் புதுசா தனித்தனி குடில்களாகக் கட்டி ஒரு பெரிய காம்பவுண்ட் சுவர் அரணுக்குள் எங்கள் குடும்பங்கள் அத்தனையையும் ஒன்று சேர்த்திருக்கிறோம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று சொன்ன பாரதியின் பெயரை எங்கள் குடிலுக்கு சூட்டி பண்டைய கூட்டுக் குடும்ப கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்ததில் எங்கள் எல்லோருக்கும் பரம திருப்தி. /

  பாரதி நிவாஸ் பெயரும் அருமை. கதை இறுதியையும் கூட்டுக் குடும்பமாக இணைத்தது நன்றாக உள்ளது. கூட்டாக முன்பு போல் அனைவரும் சேர்ந்து ஒரே குடும்பமாக இல்லாவிடினும், தனித் தனிக்குடில்களுடன் "நீ நல்லாயிருக்கிறாயா..? என அருகருகே இருந்து ஆத்ம திருப்தியுடன் கேட்டபடி, வாழும் வாழ்க்கையின் நடுவே தோன்றும் எந்த பிரச்சனைகளையும் லேசாக எண்ணி கடந்தபடி, ஒவ்வொரு நாட்களையும் இனிமையை மட்டுமே தரும்படிக்கு வாழ அந்த கூட்டாக சேர்ந்த குடும்பத்திற்கு வாழ்த்துகள். அருமையான கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. குழந்தைகள் எப்போதும் எல்லா குடும்பங்களிலும் உள்ள விரிச ல்களை இல்லாமல் செய்வது இயல்புதானே. கண்ணன் பிறந்து எல்லோரையும் ஒன்றுபட வைத்ததை.மனதைந்தொடும்விதம்.சொல்லியிருக்கிறீர்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 16. முதல் பாகம் ரொம்ப சிறப்பாக இருந்தது. இரண்டாவது பாகம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. உங்கள் அனுபவத்திற்கு ஒரு மாற்று குறைச்சல்தான். ஆரம்ப எழுத்தாளர் கதை போல முடிவு.

  பதிலளிநீக்கு
 17. அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

  வார இதழ்களில் அந்நாட்களில் என்
  கதைகள் வெளிவரும் பொழுது அந்தக் கதைகளை வாசிப்போர்
  என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது. கதை வெளிவந்த சந்தோஷத்தோடு சரி. அடுத்த கதை தயாரிப்புக்கு மனம் தாவி விடும்.

  ஆனால் இந்த இணைய தள காலத்தின் வளர்ச்சியடைந்த மாற்றங்கள்
  என்னன்னவோக்கெல்லாம் வழி வகுத்திருக்கிறது.
  இதுவும் நல்லத்தற்கு தான்.

  ஒரு ரகசியம் சொல்லட்டுமா?...

  கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் தங்களுக்காகத் தான் எழுதுகிறார்கள். தங்களை பாதித்த, அல்லது தங்களுக்குத் தெரிய வந்த விஷயங்களால் தாங்கள் அடைந்த பாதிப்புகளை மனத்திற்குள்ளேயே
  வைத்துப் புழுங்காமல்
  தம் மனத்தை விட்டு அந்தப் புழுக்கத்தை வெளியேற்றும் காரியமாகத் தான் செய்கிறார்கள். ஆக, இது ஒரு சுயதேவை சமாச்சாரம். இந்த சுயதேவை தீர்த்தல்
  இதே மாதிரி பாதிப்பு அடையும் இன்னொருவருக்கு ஆலோசனையாகவும் ஆகலாம். 'இல்லை, இல்லை, இந்த மாதிரி இந்த விஷயத்தை நீ அணுகியிருக்கலாம்' என்று அதை வாசிக்கும் ஒருத்தர் மாற்றுக் கருத்தும் சொல்லலாம்.

  மொத்தத்தில் மனிதர்களாகப் பிறந்த
  நாம் வெவ்வேறு வழிகளில் நம்மைப் பாதித்த செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம்.
  அதனால் வெவ்வேறு பலன்களையும் அடைகிறோம். இதெல்லாம் தான் இதனால் விளையும் நன்மைகள்.

  சில பாக்யவான்கள் சிலதை வாசிக்கும் பொழுதே தான் வாசித்த விஷயத்தில் மனம் ஒன்றி அதை தம் கற்பனையில் இன்னும் மேலான ஒரு நிலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

  சகோதரி கோமதி அரசு அவர்கள் 'தாத்தாவின் முதுகு வலி தீர்ந்து விட்டது. பேரனை உப்பு மூட்டை தூக்க வேண்டுமே' என்று சொன்ன பொழுது திகைத்துப் போனேன். அடடா! இது அந்த தாத்தாவின் நினைவுக்குக் கூட வராத சுகானுபவமாச்சே' என்று மனதில் பட்டது.

  அதே மாதிரி,.நம்ம துளசிதரன், 'குழந்தைகள்
  எப்போதும் எல்லா குடும்பங்களிலும் உள்ள விரிசல்களை இல்லாமல்
  செயவது இயல்பு தானே' என்று சொன்ன பொழுது
  நாம் மாங்கு மாங்கென்று பக்கம் பக்கமாக எழுதிய விஷயத்தை இந்த நண்பர் ஒரே வரியில் சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டாவிட்டாரே!'
  என்று வியந்து போனேன்.

  கருத்திடல் என்பது ஒன்றை வாசித்ததின்
  வெளிப்பாடாய் ஒவ்வொருவரிடமும் விளைவது. அந்த விதத்தில் அவரவருக்கே சொந்தமானது. ஒன்றை எழுதியவனின் அனுபவிப்பு வேறே மாதிரி, அதை வாசித்த இன்னொருவரின் அனுபவிப்பு இன்னொரு மாதிரி' என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

  மொத்தத்தில் நாம் நம்மளவுக்குத் தெரிந்த ஒரு விஷதத்தை எந்த அளவுக்கு நமக்கு அது பற்றித் தெரியுமோ அதைச் சொல்கிறோம்.
  அது பற்றிக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பது தான் உண்மை. முழுமையான தெளிவும் அதற்கான விமர்சனமும்
  எந்தக் காலத்திலும் எதற்கும் இருந்து விடப் போவதில்லை என்பதே உண்மை.

  பெரியவர்கள் சொல்லியிருக்கிற 'கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை' என்பதே நமக்கான தெளிவாக இருக்கிறது.

  கதையை வாசித்து தமக்குத் தோன்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
  நாம் அளவளாவ வாய்ப்பு தந்த எபி குழுமத்திற்கும் நன்றி.

  அடுத்த கதையில் சந்திப்போம். அப்பொழுது இன்னும் இன்னும் பேசிக் களிப்போம்.

  பதிலளிநீக்கு
 18. குழந்தையின் வரவு குடும்பத்தில் இருந்த சின்னச் சின்ன விரிசல்களை விலக்க உதவியிருப்பது நன்று. பல குடும்பங்களில் இப்படி நடப்பது சாதாரணம் தான் என்றாலும், கதை வழி படிக்கும்போது மனதில் மகிழ்ச்சி.

  சின்னச் சின்ன மனஸ்தாபங்களை அவ்வப்போது பேசி தீர்த்துக் கொள்வதும், விட்டுக் கொடுத்துப் போவதும், குடும்பத்தில் ஈகோ இல்லாமல் இருப்பதும் நல்ல விஷயம் என்றாலும் இன்றைக்கு பல வீடுகளில் இப்படியான விஷயங்கள் இல்லை என்பதும் நிதர்சனம்.

  தொடரட்டும் உங்களது சிறப்பான கதைகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!