செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

சிறுகதை : வலி 1/2 - ஜீவி

 வலி 

ஜீவி

1/2 

செருப்பைக் கழட்டி வெளி ஷூ ராக்கில் வைத்து விட்டு ரேழி தாண்டி ஹாலுக்கு வந்தேன்.

வயது மூப்பில் என்னென்னவோ தொந்தரவுகள்.   டாக்டர் க்ளினிக்குச் சென்று வருகிறேன் என்று தெரியும்.  இருந்தும் பங்கஜம் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.  விசாரித்தால் தான் ஆச்சரியம் என்று நானும் எதுவும் சொல்லாமல் உள் அறைக்குச் சென்று ஷர்ட்டைக் கழற்றி  ஸ்டாண்டில் மாட்டி விட்டு பின்பக்கம் சென்று கால் அலம்பி வந்தேன்.

திரும்பி வரும் பொழுது ஹாலில் பங்கஜம் இல்லை.  வாசல் பக்கம் பேச்சுக் குரல் கேட்டது.   "என்ன நான் சொல்றது?" என்ற கீச்சுக் குரல். பக்கத்து வீட்டு கற்பகம்  தான்.  ஏதாவது சொன்னாள் என்றால் அடுத்து 'என்ன நான் சொல்றது?' தொடரும்.  அதுக்கு கேட்டுக் கொண்டிருப்பவர் பதில் சொல்லணும் என்றில்லை.  பதிலை எதிர்பார்க்காமல் ஏதாவது சொல்லி விட்டு மறுபடியும் 'என்ன நான் சொல்றது?' என்று கேட்பாள்.  யாரிடம் பேசினாலும் அப்படித்தான். அந்த அம்மாளிடம் பேசிப் பேசிப் பழக்கப்பட்டு போனவர்களுக்கு இந்த 'என்ன நான் சொல்றது'ம் பழக்கப்பட்டுப் போய் விட்டதால் வித்தியாசம் தெரியாமல் அவர் என்ன சொல்கிறார் என்பதோடு இழைந்து இருக்கும்.


கற்பகம் என்ன சொன்னாளோ தெரியவில்லை. பங்கஜம் குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. "கற்பகம்! ஆம்பளைங்கன்னா அப்படித் தான் இருப்பாங்க, நாம தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகணும்.." என்று எதற்கோ புத்திமதி சொல்கிற மாதிரி. 

"பங்கஜம்மா.. விட்டுக் கொடுக்கறதுக்கு ஒரு அளவு வேண்டாமா? நானும் தான் எவ்வளவு விஷயங்களில் விட்டுக் கொடுக்கறது?"

"விட்டுக் கொடுத்துத் தான் இழுத்துப் பிடிக்கணும். விட்டுக் கொடுக்கறதாலே நாம ஒண்ணும் குறைஞ்சு போயிடறதில்லே."

"பத்து வருஷமா இதே ரோதனை தான்.. நானும் என்ன சின்னப் பொண்ணா என்ன? முப்பத்தி மூணு வயசாயிடுச்சி.  என்ன நான் சொல்றது?"

"முப்பத்தி மூணு வயசுக்கே இந்த சலிப்பு கூடாது, கற்பகம்.." 

"அது சரி.. நீங்கள்லாம் இத்தனை வயசு எப்படி தாக்குப் பிடிச்சிங்களோ தெரிலே.."

பங்கஜம் கலகலவென்று சிரிப்பது இங்கே கேட்டது.

"எல்லாத்துக்கும் விட்டுக் கொடுக்கணும்ன்னு இல்லே. அவசரப்படாதே.
போகப் போக எதுக்கெல்லாம் விட்டுக் கொடுக்கணும்.. எதிலேல்லாம் கறாரா இழுத்துப் பிடிக்கணும்ன்னு ஒனக்கே தெரிஞ்சிடும்.."

இன்னொருத்தருக்கு  அட்வைஸ் சொல்லணும்னா பங்கஜம் அப்படியே வெண்ணையாய் வழிவாள். அதுவே தனக்கென்றால் அதுக்கான நியாயம், நீதில்லாம் அப்படியே தலைகீழாய் மாறிப்போகும். அதுவே இவளுக்கு ஒன்றானால் புருஷன் எப்படி கவலையில் உருகிப் போகிறான் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க மாட்டாள்.

நேற்றைக்கு நான் கிடந்த கிடை அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். முதுகு வலியில் உட்கார முடியவில்லை. டாக்டரிடம் போனால் போதை மருந்து மாதிரி வலியை அந்த நேரத்திற்கு மறக்கடிக்க ஏதோ மாத்திரை தருகிறார். நிரந்தரத் தீர்வு என்று பல விஷயங்களுக்கு இருக்காது போலிருக்கு.

இந்தத் தடவை பால்ய நண்பன் பாலகுமாரன் சொல்லி ஒரு புது டாக்டரிடம் போன வாரம் போயிருந்தேன்.  மாத்திரை ஒன்றை எழுதித் தந்திருந்தார். அதை ஒரு வாரம் தவறாமல் உட்கொண்டு விட்டு வந்து பார்க்கச் சொல்லியிருந்தார். அதன்படி தான் இன்று போயிருந்தேன். 

"இப்போ முதுகு வலியெல்லாம் எப்படி இருக்கு?" என்று கேட்ட டாக்டருக்கு "கொஞ்சம் பரவாயில்லை தான்" என்றேன்.

"உடம்புலே எந்த இடத்திலாவது எரிச்சல், இல்லேனா ஏதாச்சும் அன்- ஈஸினஸ் தெரிஞ்சித்தா?" என்று கேட்டதுக்கும் ஞாபகப்படுத்திப் பார்த்திட்டு "இல்லை டாக்டர்.." என்றேன்.

"அதைத் தெரிஞ்சிக்கத்தான் ஒரு டெஸ்ட் மாதிரி அந்த மாத்திரையை எழுதிக் கொடுத்தேன்.. இப்போ எழுதிக் கொடுக்கிற கேப்ஸூலை இரண்டு மாசத்துக்கு நிறுத்தாம சாப்பிடணும்.  கூடவே ஆஸ்பிரின் மாத்திரை ஒண்ணும் எடுத்துக்கணும். இரண்டு மாசம் கழிச்சு வந்தாப் போதும். சரியா?" என்றார்.

டாக்டர் கிளினிக்கை ஒட்டியே அவரது சைடு பிஸினஸாய் மெடிகல் ஷாப்.  இவர் எழுதிக் கொடுக்கும் பல மருந்துகள் சகஜமாக வெளிக் கடைகளில் கிடைக்காது என்பதை ஏற்கனவே பாலகுமாரன் சொல்லியிருந்ததினால் ப்ரிஸ்கிரிப்ஷனைக் காட்டி மருந்தையும் இங்கேயே வாங்கிக் கொண்டேன். 

ஊபரில் போய் ஊபரில் திரும்பி விட்டேன். அதுவே முதுகுப் பக்கம் ஸீட்டில் இடித்து விடாதபடி வெகு ஜாக்கிரதையாக முன்பக்கம் முன்னிருத்தி உட்கார்ந்து கொண்டு வந்து சேர்ந்தேன்.

வழி பூரா மெட்ரோ ரயிலுக்காக வெட்டிப் போட்டிருக்காங்க. டிராபிக் நெரிசல் சொல்லி மாளாது.

நெரிசலைத் தவிர்க்க ஊரைச் சுத்தி வரவேண்டி இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி ஒண்ணுக்கு ரெண்டா ஊபருக்கு அழ வேண்டியிருந்தது. செலவோடு செலவாக என்று சில விஷயங்களை நான் பொருட்படுத்துவதில்லை. அது தான் இந்த வயசில் வாழ்க்கையை கொஞ்சம் ஈஸி படுத்தியிருக்கிறது என்று வைச்சுக்கோங்களேன்.

காலை சிற்றுண்டிக்குப் பிறகு வழக்கமாக உட்கொள்ளும் பிபி மாத்திரை, மதியம் சாப்பாட்டிற்குப் பிறகு கேப்ஸூல், இரவு ஆஸ்பிரின் மாத்திரை
அப்புறம் ஒமேகா--3 ஒண்ணுன்னு மருந்து சீட்டு சொன்னது.  அதன்படியே
இன்று இரவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது செல் சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தால் லயனில் சுந்தர்.  "என்னப்பா, எப்படியிருக்கே?" என்றேன்.

"நான் நல்லா இருக்கேம்ப்பா.."

"டாக்டர் கிட்டே போயிட்டு வரணும்ன்னு சொன்னியே? போனையா?" 

மனைவிக்கு அக்கறை இல்லேனாலும் பெற்ற மகன் என் உடல் நலன் பற்றி கவலையோடு விசாரிப்பது மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

"புதுசா ஒரு கேப்ஸூல் எழுதிக் கொடுத்திருக்கார்ப்பா. அதோட ஆஸ்பிரின். வழக்கம் போல பிபி மாத்திரை. இன்னிலேந்து ஆரம்பிக்கணும்.."

"என்ன காப்ஸ்யூல்? ஸ்பெல்லிங் சொல்லு குறிச்சிக்கறேன்." என்றான்.

சொன்னேன்.

"சரிப்பா. குறிச்சிண்டுட்டேன். நாளைக்கு சாயந்தரத்துக்கு மேலே அங்கே வர்றேன்.." என்றான்.

"அப்படியா? வா. மைதிலியையும் கூட்டிண்டு வர்றையா?"

"இல்லேப்பா.. நான் மட்டும் தான்.." என்று சொல்லி தொடர்பைத் துண்டித்து விட்டான்.

இன்னும் கொஞ்சம் பேசியிருக்க மாட்டோமா என்றிருந்தது.  'அதான் நாளைக்கு நேராகவே வருகிறானே' என்று மனசை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

'மைதிலியைக் கூட்டிண்டு வர்றையா' என்று நான் தான் அவன் கிட்டே பாசத்தோடு அடிக்கடி கேட்பேன். ஆனா அவன் அதைச் செய்ய மாட்டான் என்று நன்றாகவே எனக்கும் தெரியும்.  என்னைக்கு அவன் மைதிலியை ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக் கொண்டு ஆசிர்வாதம் வாங்கிக்க இந்த வீட்டுக்குள் நுழைந்தானோ அன்னிக்கே கடுகடுவென்று ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்து விட்டாள் பங்கஜம்.

அன்று மைதிலி வீட்டுக்குள் நுழைந்தது தான். அதற்கு அப்புறம் இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட  இரண்டு வருஷம் ஆகிவிட்டது. பங்கஜம் மனசு இன்னும் அவளுக்காக இரங்கவில்லை.

ஆனால் தான் பெத்த பையன் விஷயத்தில் வேறாக இருந்தது. அடுத்த தடவை அவன் மட்டும் வீட்டுக்கு வந்த பொழுது வெறுப்பைக் காட்டாமல் சகஜமாக இருந்தாள்.  எப்படியோ அப்பா-அம்மாவைப் பார்த்தால் போதும் என்று நினைத்தானோ என்னவோ சுந்தர் மட்டும் அப்பப்போ தனியே வந்து போக ஆரம்பித்தான்.

இந்த மட்டும் பங்கஜம் தன் வெறுப்பை உமிழாமல் இருந்ததே எனக்கு ஓரளவு மனசுக்கு ஆறுதலாக இருந்தது.  இறைவன் புண்ணியத்தில் எல்லாம் 
நல்லபடி நடந்து பிரிந்து கிடக்கும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்தால் சரி என்பதே என் நினைப்பாயிற்று.

***
பொழுது சாயவில்லை.  மாலை ஐந்தரை இருக்கும்.  வாசல்பக்கம் பங்கஜத்தின் குரல் கேட்டது.  குரலிலிருந்த உற்சாகமும் கலகலப்பும் உள்பக்கம் வரை அதிர்ந்தது.

சுந்தர் வந்து விட்டான் போலும்.


[ அடுத்த வாரம் நிறைவு பெறும் ]

40 கருத்துகள்:

 1. நல்வரவு. அடுத்த ப்குதியையும் வாசித்தபின் தான் கருத்து கூறமுடியும். துவக்கம் பாத்திரங்களின் ஒரு அறிமுகம் என்ற ரீதியில் உள்ளது.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசிப்பு என்பது எப்பொழுதுமே நம்மையும் வாசிக்கும் விஷயத்தையும் இணைக்கும் ஒன்று. அந்த இணைப்பு நடைபெறும் பொழுது வாசிக்கும் பொருளோடு உங்கள் அனுபவ உணர்வால் பெற்ற அறிவு கலக்கிறது. அதன் அடிப்படையில் வாசித்தது பற்றி யாராவது கேட்டால் நமக்குப் புரிந்த அளவுக்கு சொல்கிறோம்.
   இதனால் தான் வாசிக்கும் விஷயத்தைப் பற்றிய வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது..

   ஒரே விஷயத்தை
   ஜெயமோகனும் நானும் வாசிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாசிக்கும் பொருளில் இருவருக்கும் வேறுபாடில்லை. வாசிக்கும் விஷயம் அப்படியே தான் இருக்கிறது. அதை வாசித்த பிறகு வாசித்த விஷயத்தில் ஜெயமோகனும் நானும் வேறுபடுகிறோம் என்பது தான் உண்மை.
   இது தான் ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் எழுதுவதில் நடக்கிறது. அடுத்த பகுதியையும் தவறாது வாசித்து விட்டு உங்கள் வாசிப்பை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன், ஜெஸி ஸார்.

   நீக்கு
 2. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுள் வாழ்த்து வேண்டுதல் போல ஒவ்வொரு நாளும் நானும் வாசித்து மனத்தில் பிரார்த்தித்துக் கொள்வேன் தம்பி.
   தங்களுக்கு நன்றி.

   நீக்கு
 3. கதை இயல்பான நடையில் நடுத்தரக் குடும்பத்தைக் கண்முன் காட்டிச் செல்கிறது. மற்றபடி கதை எதை நோக்கிச் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

  இந்த வலி எதுவாக இருக்கும்? மன வலியா (மருமளை அழைத்துக்கொண்டுவராத), பெற்றோரைப் புறம்தள்ளி திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட வலியா என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் கதையில் அப்பாவின் உடல் நலம் பற்றி அதிகம் பேசப்படுவதால் அவர் கண் நோக்கில்தான் கதை செல்லப்போகிறது என யூகிக்க முடிகிறது.

  கதை மாந்தர்களின் வயதிலும் (புரிந்துகொள்வதிலும்) குழப்பம் இருக்கிறது. கற்பகம் பேச்சுமொழி வயதானவளாகத் தெரிகிறது, ஆனால் 33தான். கௌதமன் அவர்கள் வரைந்த படத்திலும் வயது சரியாக பிரதிபலிக்கவில்லை. அப்பா 65+? மகனுக்கு இரண்டு வருடம் முன்னால்தான் திருமணம்? ரொம்ப போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய புரிதல் இதுதான் :
   அப்பா : 60+ வயது.
   பங்கஜம் : 55+ வயது
   மகன் : முப்பது வயது. (இருபத்தெட்டு வயதில் திருமணம்)
   கற்பகம் : 33 வயது. ( அட நான் படம் வரைவதற்கு ஏதோ ஒரு வாய்ப்பு!)
   இதில் குழப்பம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. கௌ அண்ணா, யெஸ்ஸு.

   நெல்லை வயதுக் குழப்பம் எதுவும் இல்லை. எனக்கு திருவனந்தபுரத்தில் இருந்தப்ப பக்கத்துவீட்டு மாமி 60 தை நெருங்கிக் கொண்டிருந்தவர். நான் அப்ப சின்னப் பொண்ணு!!!!!!! இந்தப் பக்கம் நானும் அந்தப்பக்கம் மாமியும் மதில் பக்கம் நின்று கொண்டு பேசுவோம். நான் நிற்பது வெளியில் யாருக்கும் தெரியாது ஹிஹிஹி நாம் குள்ளமாச்சே. மாமி என்ன தனியாகப் பேசிச் சிரிக்கிறார் என்று ஸ்ரீவராகம், அயோத்தியாமண்டப ராமர் கோயிலுக்குப் போவோர் எல்லாம் ஆச்சரியமாக அப்படியும் இப்படியும் பார்த்துக் கொண்டு போறாங்கன்னு மாமி சொல்வார்.

   கீதா

   நீக்கு
  3. கற்பகத்துக்கு அவ்வளவு அலுப்பு வந்துவிட்டதுன்னு சொல்லலாம் இல்லைனா, இன்னும் பக்குவம் வரவில்லைன்னும் எடுத்துக் கொள்ளலாம்.
   //அந்த அம்மாளிடம் பேசிப் பேசிப் பழக்கப்பட்டு போனவர்களுக்கு இந்த 'என்ன நான் சொல்றது'ம்//

   அம்மாள் என்று ஜீவி அண்ணா எழுதியிருப்பதால் உங்களுக்குக் குழப்பம் வந்திருக்கும்.

   நெல்லை, கௌ அண்ணா இந்தக்கால 55 வயசைக் காட்டியிருக்கிறார். இப்பல்லாம் 60 ஆ சான்ஸே இல்லைன்னு சொல்ற அளவுக்கு தலைமுடி கறுப்பாக, தங்களை நன்றாக வைத்துக் கொள்ளும் பெண்கள்.

   நான் அடை அடிப்பதில்லை. எல்லாரும் எனக்கு என்னவோ வயசாகிடுச்சுன்னு நினைச்சுக்கறாங்க!!!!! ஆ இந்த வயசுலயும் நல்லா சூரியநமஸ்காரம் பண்ணறீங்கன்னு வேற சொல்றாங்க!!!

   கௌ அண்ணா படம் நல்லாருக்கு! என்ன ....பங்கஜத்தையும் ரொம்ப இளமையாக இந்தக்காலப்பெண்கள் போல காட்டியிருக்கீங்க! யதார்த்தம். அதான் நெல்லைக்கு ஜந்தேகம் வந்திருச்சு!

   கீதா

   நீக்கு
  4. பக்கத்து வீட்டு பெண்ணை ஒரு தடவை தன் வயது மூப்பின் காரணமாக
   அவள் (அவர் என்று சொல்லாமல்) என்று இயல்பாகச் சொல்கிறார். அவரே அதே பெண்ணை இன்னொரு வீட்டுப் பெண் ஆதலால் மரியாதை கொடுத்து அந்த அம்மாள் என்கிறார்.

   நீக்கு
 4. முழுப் பகுதியையும் வெளியிட்டிருக்கலாம். நல்ல கதையைப் படித்த திருப்தி ஏற்பட்டிருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. வாங்க, நண்பரே.
   அடுத்த பகுதிக்கும் வந்து வாசித்து விடுங்கள். நன்றி.

   நீக்கு
 6. இயல்பாக செல்கின்றது கதை..

  சிறப்பு..

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

  சகோதரர் ஜீவி அவர்கள் எழுதிய கதை நன்றாகப் போகிறது.

  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கணவன் மனைவியின் உடல்நிலையை பற்றி அவ்வளவாக கவலையுறாத இந்த மாதிரி மனிதர்கள் இன்னமும் உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு எதுவுமே நல்லபடியாக நடக்கும் என்கிற திடமான பாஸிடிவ் எண்ணங்கள் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் மகன் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து வந்ததை ஏற்க முடியாமல் போனதும், மனித மனங்களின் ஒரு விதமான வக்கிரங்கள்தான். ஏதோ ஒரு வித எதிர்பார்ப்புக்கள், அதன் விளைவாக மனமது உறங்காமல் கண்ட கனவுகளென அது ஏமாற்றமாகும் போது அதனால் உண்டாகும் வலிகள் இந்த மாதிரி ஏற்பட்டு விடும் சில வக்கிரங்களுக்கு காரணமாக இருக்கலாம். மற்றபடி அந்த வலிகளை நீக்கும் வித்தையையும் அவர்களின் பாஸிடிவ் எண்ணங்கள் மருந்தாக இருந்து செயல்படுத்தும்.

  அடுத்த வாரம் பெற்றோரை காண வரும் மகன் வந்து விட பங்கஜத்தின் உரையாடல்கள் அந்த கணவருக்கு அதை தெளிவுபடுத்தி விடும் என நம்புகிறேன். அதனால் வலிகளின் சுவடுகள் இருந்த இடமின்றி நகர்ந்து விடுமென்றும் நினைக்கறேன். அடுத்தப்பகுதி கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  கதைக்கேற்ற ஓவியம் வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, சகோதரி.
   உங்களுக்கெல்லாம் தெரிந்தது தான்.
   ஒரு வயதுக்கு மேல்
   பெண்கள் மன நிலையில் பல்வேறு அனுபவ காரணங்களால் மாற்றங்கள் ஏற்டுகின்றன என்று உளநல ஆராய்ச்சிகளில் சொல்லியிருக்கிறார்கள். பத்து மாதம் சுமந்து ரத்தமும் நிணமும் சதையும் என்று கலந்து போன தாய்க்கு தன் குழந்தையின் மேல் இருக்கும் சீராட்டலும் நெருக்கமும் அதிகம் தான். எல்லாவற்றிலும் தான் பெற்றெடுத்த பெண்ணுக்கும் பையனுக்கும் தன் சம்மதத்துடன் தன் கண்காணிப்பில் பார்த்துப்பார்த்து செய்ய வேண்டும் என்ற உணர்வு மன ரீதியான பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

   நீக்கு
 8. கதையின் போக்கு எப்படி இருக்கும் எனத் தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும்...

  தொடக்கம் நன்று. அடுத்த வாரத்திற்கான காத்திருப்பில் நானும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வாரம் என்பது
   வலிந்து ஒரு முடிவைக் கொடுத்து முடிப்பது தானே வெங்கட்..?
   கதை என்பது எழுத எழுத எழுதிக் கொண்டே போவது தானே?.. உங்களுக்குத் தெரியாததா? வந்து வாசித்து விடுங்கள்.

   நீக்கு
 9. ஜீவி அண்ணா, கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். இயல்பான நடை! வாசிக்கும் போது கண் முன்னே நடப்பது போன்று. தொடரும் வந்துவிட்டதே என்று தோன்ற வைக்கிறது.

  கதையை வாசித்து வரும் போது வலி ஏதோ மன வலி போன்றுதான் ஊகிக்க முடிகிறது.

  அப்பா இயல்பானவராக, பங்கஜம் வழக்கமான சில அம்மாக்களைப் போன்று. ரெஜிஸ்தர் கல்யாணம் என்றாலும் கூட பங்கஜம் ஏன் மைதிலியிடம் வெறுப்பாக இருக்கிறாள் என்பதற்கு அடுத்த வாரக் கதையில் தெரியுமோ!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். இன்றும் பதிவுத் திருமணம் என்றால் சில சமூகங்களில் 'ஒரு மாதிரி' தான். திருமணப் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள்.
   ஒரு திருமணம் என்பது எப்படி நிச்சயப்படுகிறது என்று. அந்த மாதிரி சம்மதங்கள் இருபக்கமும் இருப்பதை அறிவித்து நிச்சயதார்த்தம் பொழுது குடும்ப பெரியவர்கள் முன்பு பெண்ணை -- பிள்ளையைப் பெற்றவர்கள் சம்மதக் கையெழுத்திட்ட பிறகு தான் மணப்பையனும், மணப்பெண்ணும் அருகருகே அமர்வார்கள். சில ஜாதித் திருமணங்களில் திருமணத்திற்கு முதல் நாள் மாலை கூட பையனும் பெண்ணும் நெருங்கமாக இருக்கமாக இருக்கும் திருமண வரவேற்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. தாலி கழுத்தில் ஏறிய பிறகு எல்லாம் என்று வைத்திருக்கிறார்கள்.

   நீக்கு
 10. "அதைத் தெரிஞ்சிக்கத்தான் ஒரு டெஸ்ட் மாதிரி அந்த மாத்திரையை எழுதிக் கொடுத்தேன்..//

  ஹாஹாஹாஹா இந்த வரியை ரொம்ப ரசித்தேன். சிரித்துவிட்டேன். உண்மைதான் ஜீவி அண்ணா, நாமதான் சோதனை எலிகள் அதுவும் மருத்துவர்களே தங்கள் க்ளினிக்கோடு மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் இப்படிச் செய்கிறார்கள். அடுத்து ரெண்டு மாசத்துக்குக் கொடுத்திருக்கிறாரே அதுவும் அப்படித்தானோ என்னவோ!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல அலோபதி மருந்துகளுக்கு பக்க விளைவுகள் இருக்கின்றன. எல்லா மருந்துகளும் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளாது. அதுவும் Auto Immune Disease-களில் இவை அதிகம். அதனால் குறிப்பிட்ட நபர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மாற்றித் தருவதற்காக பரிட்சித்து மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

   நீக்கு
 11. நடுத்தர வர்க்க குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் இயல்பான நடையில் செல்கிறது. வீட்டுத் தலைவரின் ஆதங்கம் மனைவியின் போக்கு ... மகனின் அன்பு அவருக்கு ஆறுதல் தருகிறது.

  பொறுத்து இருக்கிறோம் அடுத்த பகுதிக்கு......

  கதைக்கு ஏற்ற படம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, மாதேவி.
   அடுத்த பகுதியை தவறாது வாசித்து விடுங்கள்

   நீக்கு
 12. கணவனை அவ்வளவாகக் கண்டு கொள்ளாத விட்டேத்தியான பங்கஜம் ஆனால் அடுத்த வீட்டுப் பெண்ணிடம் பேசும் போது முதிர்ச்சியுடன் பேசுகிறாள்..மனதின் விசித்திரப் போக்கோ?- ஏதோ இருப்பது போல் தோன்றுகிறது. மகனின் திருமணத்திற்கு கணவர் மறுப்பு தெரிவிக்காததால் வந்த விளைவோ?

  உடல் வலிக்கு மாத்திரைகள் மருந்துகள் ஆனால் மன வலிக்கு எந்த மாத்திரையும் மருந்தும் வேலை செய்யாது. எந்த மனது வலியால் அவதியில் இருக்கிறதோ அந்த மனதில்தான் மருந்தும் இருக்கிறது.

  மனங்கள் விச்சித்திரமானவை. ஆழமானவை. புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று என்றால் அது மனம் தான். மகன் திருமணம் குறித்து மைதிலி பற்றி இப்பகுதியில் இல்லாததால் அடுத்த பகுதியில் வரும் என்று நினைக்கிறேன். அது என்னவாக இருக்கும் என்று அதிகம் ஊகத்துக்குச் செல்லவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊகங்கள் தாம் விதவுதமாக நம்மை யோசிக்க வைத்து கதைகளுக்கு அடித்தளமாகின்றன. அதனால் மைதிலி பற்றியும் நீங்கள் யோசிக்கலாம்.

   நீக்கு
  2. நான் யோசித்தேன் தான் ஊகித்தேன் தான். உண்மைதான் ஊகங்கள் பல கதைகளுக்கு அடித்தளமாகின்றன.

   உங்கள் பதில்கருத்துகளில் பொதுவாகக் கதை எழுதுவதைப் பற்றியும். வாசிப்பு பற்றியும் சொன்ன கருத்துகள் அனைத்தும் எடுத்துக் கொண்டேன் கருத்தில் கொண்டேன் ஜீவி அண்ணா. நல்ல கருத்தான அறிவுரைகள் எழுதுபவர்களுக்கு.

   கீதா

   நீக்கு
  3. உங்கள் (தம்பி or அண்ணா)
   நெல்லைக்கு சொன்ன மாதிரி
   அடுத்த பகுதி எப்படியிருக்கும் என்று உங்கள் வழியில் யோசித்துப் பாருங்கள். அது உங்களின் ஒரு செவ்வாய் கதைக்கு வேறு வகையான மாற்றங்களுக்கு வித்திட்டு இன்னொரு கதையாகலாம்.
   சரியா?

   நீக்கு
 13. ஜீவி சார் கதை நன்றாக இருக்கிறது. முதுமையில் வரும் உடல் தொந்தரவுகள் அதற்கு நண்பர் சொன்ன டாக்கடரிடம் போய் வந்தது , டாக்டர் மருந்துகளை கொடுத்துபார்த்து சரி செய்யலாம் என்பது போன்றவை எல்லாம் நடப்பது. ஒவ்வொரு முதியவர்களும் அனுபவிக்கும் ஒன்று.

  இயல்பாக இருக்கிறது எழுத்து நடை.

  //இன்னொருத்தருக்கு அட்வைஸ் சொல்லணும்னா பங்கஜம் அப்படியே வெண்ணையாய் வழிவாள். அதுவே தனக்கென்றால் அதுக்கான நியாயம், நீதில்லாம் அப்படியே தலைகீழாய் மாறிப்போகும். அதுவே இவளுக்கு ஒன்றானால் புருஷன் எப்படி கவலையில் உருகிப் போகிறான் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க மாட்டாள்.//


  மனைவியின் மன இயல்பை கூறிவிட்டார்.

  //"பத்து வருஷமா இதே ரோதனை தான்.. நானும் என்ன சின்னப் பொண்ணா என்ன? முப்பத்தி மூணு வயசாயிடுச்சி. என்ன நான் சொல்றது?"//

  முப்பத்தி மூணு வயசுக்கே வயதாகி விட்டது என்ற எண்ணம் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை.

  மகன் வரவை எதிர்பார்த்து இருக்கும் அவருக்கு உடல் வலியுடன் மன வலியும் இருக்கிறது. இரண்டும் தீர வேண்டும்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெடு நாட்கள் கழித்து என் கதையை வாசிக்கிறீர்கள், அல்லவா? அடுத்த பகுதியையும் தவறாது வாசித்து விடுங்கள். நன்றி.

   நீக்கு
 14. முதலில் அன்பர் கேஜிஜிக்கு நன்றி சொல்லி விடுவோம்.
  பத்திரிகை ஓவியருக்கான திறமை அவரிடம் எதேஷ்டம்.
  நெல்லையிடமிருந்து கதாபாத்திரங்களின் வயது பற்றி இப்படி ஒரு கேள்வி வரும் என்பது நான் எதிர்பார்க்காத விஷயம். ஆனால்
  எழுதும் பொழுது ஒவ்வொருவருக்கும் என்ன வயதிருக்கலாம் என்று நான் கணித்து எழுதினேனோ அதை அச்சு அசலாக KGG யூகித்துச் சொன்னது பார்த்து அசந்து போனேன். ஆண்களுக்கு 30 வயதுக்குத் தான் திருமணம் குதிர்ந்து வருவது காலத்தின் கட்டாயமாகி ரொம்ப காலமாயிற்று. நானஆரம்பத்தில் சுந்தரின் வயதைத் தான் தீர்மானித்து உத்தேச கணக்குப் போட்டேன். ஆணுக்கு படித்து, வேலை கிடைத்து, ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கு ஏற்ப வாழ்க்கையில் செட்டில் ஆவது என்று ஏகப்பட்ட முன் ஏற்பாடுகள். இன்னும் கணக்கிலடங்கா துணை விஷயங்கள் வேறு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த வயசிலேயே சொந்த வீடு இருக்கா, கார் இருக்கா, பெற்றோர் தனியா இருக்காங்களா (கடன் ஈ.எம்.ஐ. இருக்கா என்ற கேள்வி தவிர) என்று கேட்கும் பெண்களை வைத்துப் பல கதைகளும் எழுதலாம். எழுதும் லாவகம் மட்டும்தான் எனக்கு அமையமாட்டேங்குது

   நீக்கு
  2. நீங்கள் முன்பு எழுதிய கதையும் என் நினைவில் நிற்கிறது.

   உங்களுக்கென்ன?
   ஜோராக எழுதுவீர்கள், நெல்லை..
   ஒரு தடவைக்கு இரு தடவைகள் எழுதியதைப் படித்து தொடர்பில்லாத அனாவசியங்களை நீக்கி.... லேசான எடிட்டிங்! அவ்வளவு, தான்! கமான்!..

   இந்தக் கதையின் அடுத்த பகுதி எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.. நீங்கள் நினைப்பது மாறுபட்டால், அதுவும் வேறொரு கதையாகலாம்.. எழுத எழுத பழகிவிடும்!

   நாம் எழுதிப் பழகத் தானே எபி செவ்வாய்க்கிழமை இருக்கிறது?..

   வாருங்கள்!
   வாசல் கதவுகள் பரக்கத் திறந்தே இருக்கின்றன!


   நீக்கு
 15. 'இயல்பான' என்பது அநேகமாக எல்லோரும் உபயோகித்த வார்த்தை.
  இயல்பான நடையும் கதைப் போக்கும் அமைய எனக்குத் தெரிந்த பரிந்துரைகள்:

  1. கதையெழுதும் நீங்கள் கதாபாத்திரங்களின் குண நலன்களில் புகுந்து கொண்டு நீங்கள் எப்படியிருக்கிறீர்களோ அதே மாதிரி அவர்களையும் படைத்து உலாவ விட வேண்டும் என்று என்று எண்ணாதீர்கள். கதாபாத்திரங்கள் சமூகத்தில் நீங்கள் பார்க்கிறவர்கள் மாதிரி இருக்க வேண்டுமே தவிர உங்களைப் போல் அல்ல.

  தீமையான குணநலன்களை உள்ளவர்களைப் படைத்து அவர்கள் அனுபவங்களின் மூலம் நல்வழிப்படுத்துகிறீர்கள் என்றால் அவர்களின் அடையும் அனுபவங்கள் தான் கதையம்சம் ஆகும்.

  சமூக அனுபவங்களைப் போல நல்லதும் கெட்டதும் கலந்தது தான் கதை என்ற அடிப்படை விஷயம் புரிந்து விட்டால் இந்த 'இயல்பான' என்கிற அம்சம் தன்னாலே வந்து விடும்.

  அந்தந்த சமூகத்திற்கு ஏற்ப உரையாடல்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமணங்களில் தாய் மாமனுக்குக் கொடுக்கும் மரியாதையே அலாதி தான். உறவுகள் முன்னிலையில் இதையெல்லாம் பகிரங்கப்படுத்திக் கொண்டாடி
   இருவரின் இணைப்புக்கு ஒரு சமூக உறவினர் அங்கீகாரம் பெற வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அது நடைபெறாத பொழுது ஆத்திரம் வருகிறது. அவ்வளவு தான். ரொம்ப சிம்பிள்.

   நீக்கு
 16. கற்பகம் ஒரு துணை பாத்திரம் தான். அதற்கேற்பவான உரையாடல்.

  'இன்னொருத்தருக்கு அட்வைஸ் சொல்லணும்னா பங்கஜம் வெண்ணெயாய் வழிவாள். அதுவே தனக்கென்றால்..' என்ற வரியின் மூலம் கற்பகம்
  அவள் மாமியார் செயல்கள் பற்றிச் சொல்ல அதற்கு பங்கஜம் அட்வைஸ் செய்ததாகக் கொள்ளலாம்.

  'முப்பத்து மூணு வயசுக்கே' என்று கற்பகம் சொன்னது நானும் சின்னக்குழந்தை இல்லையே என்பதற்காக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸாரி.. கற்பகத்திற்கு மாமியார் இல்லை..
   வீட்டில் பெரியவர்கள், யாரேனும் அல்லது அவள் புருஷன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

   நீக்கு
 17. அப்புறம் வேறென்ன?

  எல்லோரும் சலித்துக் கொள்ளாமல் வாசித்து ஆசை ஆசையாக மனத்தில் தோன்றிய பின்னூட்டங்களை மறைக்காமல் போட்டதிற்கு நன்றி.

  இந்தக் கதையை ஒரே கதையாகப் போடவேண்டும் என்று தான் ஆரம்பத்தில் ஸ்ரீராம் விரும்பினார், நெல்லை.
  ஆனால் கொஞ்சம் நீளமாகப் போய்விடும் என்று இரண்டாகப் பிரித்து விட்டார் என்று நினைக்கிறேன்.

  இந்தப் பகுதிக்கு எழுதியவர்களையெல்லாம் நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எழுதாமல் இருந்தால் எழுதுவதற்கே
  தயக்கம் ஏற்பட்டு பழகிய திறமையெல்லாம் மங்கி விடும். அதற்காகத் தான் சொல்கிறேன்.

  அடுத்த பகுதிக்கு தவறாமல் வந்து விடுங்கள். மனம் திறந்து பேசலாம்.

  அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. கதை மிகச் சிறப்பு. அடுத்த வாரத்துப் பகுதியையும் வாசித்துவிட்டுக் கருத்திடுகிறேன், ஜீவி சார்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 19. அப்படியே செய்யுங்கள் துளசிதரன். உங்கள் (கேரளத்து) அனுபத்திலான இது மாதிரியான கதைகளின் வாசிப்பு நேர்த்திகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!