சனி, 10 பிப்ரவரி, 2024

உயர்நீதிமன்றமும் 80 வயது மூதாட்டியும் மற்றும் நான் படிச்ச கதை




==============================================================================================================



 ====================================================================================================


 

நான் படிச்ச கதை (JKC)

நீர் விளையாட்டு

கதையாசிரியர்: பெருமாள்முருகன்


இவரது பெயர் முருகன். தந்தை பெயர் பெருமாள் என்பதையும் சேர்த்து பெருமாள் முருகன் என்ற பெயரில் எழுதுகிறார். இளமுருகு என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். சொந்த ஊர் திருச்செங்கோடு. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆத்தூர் கலை கல்லூரி முதல்வர்.

காலச்சுவடு ஆசிரியர் குழுவிலும் ஒருவராக இருந்தார். 

மரபு மற்றும் புதுக்கவிதைகள் எழுதுவதில் ஈடுபாடு அதிகம் உள்ளவர். 11 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள், கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். கொங்கு வட்டார  சொல்லகராதி என்ற அகராதியும் வெளியிட்டுள்ளார்.

மாதொரு பாகன் சர்ச்சையால் பன்னாட்டு புகழ் பெற்று நியூ யார்க்கர், பிபிசி, வோக் இந்தியா,  பத்திரிகை செய்திகளிலும் இடம் பெற்று, மிகச்சிறந்த இலக்கிய படைப்பிற்கு கொடுக்கப்படும் புக்கர் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு, குறுகிய காலத்தில் எல்லோருடைய கவனத்தையும் பெற்று மனம் நொந்து எழுத்து தற்கொலை வரை சென்றவர். 

++++++சுட்டி++++++

++++++++++இவரது தளம் ++++++++


முன்னுரை 


நீர்விளையாட்டு என்ற இக்கதை எஸ் ரா அவர்களால் ஒரு சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இக்கதையைப் பற்றி எழுத முன்பே முயன்றது தான்.  தற்போதுதான் அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

தூக்குத் தூக்கி என்றொரு சினிமா படம் பண்டு 50  களில்  வெளிவந்தது அதில் 

கொண்டு வந்தால் தந்தை

கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்

சீர் கொடுத்தால் தங்கை

கொலையும் செய்வாள் பத்தினி

உயிர் காப்பான் தோழன். 

என்ற ஐந்து வாக்கியங்களின்படி ஒருவனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை திரைப்படுத்தியிருப்பார்கள். அதுபோன்று 

இளங்கன்று பயம் அறியாது

விளையாட்டு வினையாகலாம்

ஆழம் தெரியாமல் காலை விடாதே 

என்ற வாக்கியங்களின் உண்மை சம்பவமாக இக்கதை புனையப்பட்டுள்ளது. 

‘மாதொரு பாகனில்’ பட்ட சூட்டினால், ஊர், பெயர், சாதி, காலம், போன்றவற்றைக் குறிப்பிடாமல் எச்சரிக்கையுடன் கதையைக் கொண்டு செல்கிறார் ஆசிரியர். 

இக்கதையில் வரும் கிணறும் ஒரு பாத்திரமாக விறுப்பு வெறுப்பு போன்றவற்றை எப்படி வெளிப்படுத்துகிறது என்று ஒரு சிறிய கதை, கதையில் கதையாக வருகிறது. கதையில் கிணறு பேசவில்லை. நினைப்பதை  செயலில் காட்டுகிறது. 

கதைச்சுருக்கம் மட்டுமே தந்துள்ளேன். கதையின் சுட்டிகள் கடைசியில் உள்ளன. முழுக்கதையும் படிக்க விரும்புவோர் சுட்டிகளை கிளிக்கி படிக்கலாம்.

நீர் விளையாட்டு

கதைச்சுருக்கம்

 

அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன்.ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவில்லை. 

அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால். குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். 

‘துண்டு இல்லையே’ என்றான். அதுதான் இப்போது பெரிய பிரச்சினைப் போல. அவர்கள் வெகு உற்சாகமாகக் கூவிக் கொண்டு எங்கெங்கோ ஓடி ஆளுக்கொரு துண்டை இழுத்து வந்தனர். முகம் முழுக்கப் பரவிய வெட்கச் சிரிப்போடு அவனும் எழுந்து கொண்டான். 

பசுமை மணம் பரவிய காடுகளுக்கிடையே நிலத்தின் பிளந்த வாய்போல சட்டென்று கிணறு தோன்றியது. சீரான சுவர்களையோ சமமான வடிவத்தையோ அது பெற்றிருக்கவில்லை….குதிப்பதற்குக் கால்களைத் துறுதுறுக்க வைக்கும் தோற்றமுடைய கிணறுதான் இது. 

குதித்தலில் தொடக்கம்தான் முக்கியம். ஒரு முறை நீர் சிதறிக் கிணறலையும் சத்தம் கேட்டுவிட்டால் போதும்….

முதலில் குதிப்பவரைக் காவு கொள்ளவெனக் கிணறு காத்திருப்பதாக அச்சம். அவர்களின் கவனம் அச்சத்தில் குவிந்திருந்த போது, குலையிலிருந்து கழன்று விழும் நெற்றுத் தேங்காயென அவன் குதித்திருந்தான். உடனே கிணற்றின் மூலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களும் குதித்தனர். உறைந்திருந்த கிணறு இப்போது பலவித ஓசைகளில் பேசத் தொடங்கிற்று.

நடுக்கிணற்றில் மூழ்கிய சில விநாடிகளில் வெகுதூரம் உள்நோக்கி அமிழ்ந்துவிட்டதாக உணர்ந்தான். கிணறு இன்னும் போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம். ஒன்றும் புரிபடாது மூச்சுத் திணறியது. சட்டெனக் கைகளை அழுத்தி மேல்நோக்கி வந்தான்…..படியோரப் பலகைக்கல்லில் உட்கார்ந்து ஆசுவாசமானான்.

குழந்தைகளோ சற்றும் களைக்கவில்லை. சரியும் மண்ணைப் பொருட்படுத்தாமல், சுவர்களைப் பற்றியேறி மாறி மாறிக் குதித்துக் கொண்டேயிருந்தனர்.

ஒரு முறை வந்துவிட்டவனை மீண்டும் மீண்டும் தூண்டுவதற்கான மந்திரத்தைக் கிணறு தூவிவிடுகிறது. அலையினூடே பாய்ந்தான். இப்போது வெதுவெதுப்பான நீர் அவன் உடலைத் தடவி அரவணைத்தது. அவனையறியாமலே கிணற்றை வட்டமாகப் பாவித்து வலம் வந்தான். அவன் காலடிகள் உடனுக்குடன் மறைந்தாலும் சுளிவுகள் இருந்தன. மறுபடியும் வலம் வரத் தூண்டிற்று. அதற்குள் அந்தச் சிறுமி அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“சித்தப்பா… கெணத்தச் சுத்தி நிக்காம எத்தன ரவுண்டு வருவீங்க?”

அவனால் எண்ணிக்கை சொல்ல முடியவில்லை. கிணற்றை அளவிட்டான். அதன் கோணமற்ற பரப்பு எந்தத் தீர்மானத்தையும் கொடுக்கவில்லை. பதிலின்றி மெலிதாக மழுப்பிச் சிரித்தான். அவள் விடவில்லை.

“பத்து ரவுண்டு வர முடியுமா?”

சிறுவன் அதற்குப் பதில் சொன்னான்.

”சித்தப்பாவால ரண்டு ரவுண்டே வரமுடியாது.”

அவனைக் கிளப்புவதற்காக அந்தச் சிறுவன் சொல்கிறான் என்பதை உணர முடிந்தாலும், இதையும்தான் பார்ப்போமே என்ற சவால் மனம் வந்திருந்தது.

முதல் வட்டம் முடிந்து அடுத்த வட்டத்தின் பாதியில் அவன் மூச்சுறுப்புகள் பலகீனமடைந்தன. வாய் வழியாக மூச்சு வாங்கினான். கைகள் சோர்ந்து கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. மறுபடியும் கிணறு அவனைத் தோல்வியுறச் செய்துவிட்டது. ஒரு மூலையில் நின்றுகொண்டு உடல்குறுகி மூச்சு வாங்கினான்.

 கிணறு யாராலும் ஜெயிக்க இயலாத பிரம்மாண்டம். இதன் முன் தோல்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதனோடு போட்டியிட்டுத் தோற்பதே தைரியம்தான். கர்வத்தோடு பெருமூச்செறிந்தான். படியை நோக்கி நீந்தினான். தேர்வடத்தைப் பிடிக்கும் அடக்கத்தோடு கை துழாவியது. படியோரம் வந்து இறுதி முழுக்குப் போட்டுத் தலையைப் பின்னோக்கி நீர்ச்சீப்பினால் சீவிக்கொண்டான். பின் அறிவித்தான்.

“நான் ஏர்றன். நீங்க குதிக்கறதுன்னா குதிச்சுட்டு வாங்க.” அவன் அறிவிப்பு குழந்தைகளிடம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.

கிணற்றுச் சுகம் இத்தனை சீக்கிரம் தீர்ந்து போய்விடுவதை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவன் ஏறிவிட்டால் அவர்களும் ஏறிவிடவேண்டியதுதான். பெரிய ஆள் யாரும் இல்லாமல் கிணற்றுக்குள் இருக்க அவர்களுக்கு அனுமதியில்லை.

“சித்தப்பாவ உட்ராத பிள்ள” என்னும் குரல் எங்கிருந்தோ கேட்டது. அப்போதும்கூட பிள்ளை விளையாட்டின் பிடிவாதம்தானே இது என சாவதானமாகச் சிரித்தான். எதிர்பார்க்காத நொடியில் சிறுமியின் கை அவனை வாரி உள்ளே தள்ளியது.

உடலெங்கும் அச்சத்தின் மின் துகள்கள் பாய்ந்தன. சுதாரித்து நீந்தி படிக்கு வந்தான். இதுவும் கிணற்றுக்கு எதிரான தோல்விதானோ என்று தோன்றியது. அப்படியொன்றுமில்லை என்று காட்டிக்கொள்பவனாய் ‘ஏங்கண்ணு இப்பிடிப் பண்ணுன’ எனச் சமாதானம் பேசிக்கொண்டு ஏறலானான். இப்போது அவனுக்கு மேல்படியில் – அது படியில்லை துருத்திக்கொண்டிருந்த பையன் அவனைப் பார்த்து கைகளை விரித்து ஆட்டிக் கொண்டு ‘உடமாட்டனே’ என்று கூச்சலிட்டான். ஏறிவிடும் வைராக்கியத்தோடு கால்தூக்க, பையன் குனிந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு புரண்டான்.

இரண்டு பேரும் ஒருசேரக் கிணற்றுக்குள் விழுந்தனர். பையனை நீருக்குள் இழுத்துக் கால் உந்தி ஓர் அழுத்து அழுத்திவிட்டுப் படியை நோக்கி வேகமாக நீந்தினான். பையன் அடிமண்ணைத் தொட்டுத்தான் திரும்ப முடியும். அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள குறி வைத்து வந்த சிறுமியைத் தள்ளிவிட்டுப் பாய்ந்து படியேறினான். ‘ஏய்’ என்று உற்சாகக் கத்தலோடு இன்னொரு பையன் அவன் மீது தாவினான். சற்றும் அவன் எதிர்பார்க்காத கணம். மீண்டும் நீருக்குள் விழுந்திருந்தான்.

எசகுபிசகாக விழுந்ததில் எங்கெங்கோ கற்களின் சிராய்ப்புகளும் காயங்களும் எரியத் தொடங்கின. அவன் அதனைப் பொருட்படுத்தவில்லை. தப்பிப்பதில் குறியாக இருந்தான். அவற்றின் இலக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிதைத்து ஆள்விழுங்கி விடுவதுதான் போலும். மிரண்ட விழிகளோடு சாவுடன் போராடும் மிருகமாய் மூர்க்கமானான். கைபற்ற வரும் பிசாசுகளை இழுத்து அடித்தான். கால் வைத்துக் கிணற்றின் ஆழம் நோக்கி உந்தினான். ஆனால் அவற்றின் மூர்க்கமும் அதற்கேற்ப அதிகரித்தன.

கால்கள் வெடவெடத்தன.

விளையாட்டின் உச்சவெறி எங்கும் பற்றிக் கொண்டது. வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் கடைசி நொடிகள் இதுவாகவே இருக்கலாம். அவன் ஏற ஏற கூச்சலிட்டுக் கொண்டே பாகுக் குழம்பென உருவம் ஒன்று அதிவேகத்தில் பம்ப்பில் வழுக்கி வந்து அவன் மீது மோதிற்று. பிடிப்புத் தளர்ந்து நேராக நீருக்குள் போய் விழுந்தான். அவ்வளவுதான். எல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட்டதுபோல. குழறத் தொடங்கினான். கைகள் அனிச்சையாக நீந்திக் கொண்டிருந்தன. திசை எதுவெனத் தெரியவில்லை. எங்கே பிடிப்பென உணர இயலவில்லை. எதை எதையோ கை பற்றியது. கால்கள் நடுக்கத்தோடு எவற்றின் மீதோ ஏறின. அது கிணற்றின் ஏதோ பக்கச் சுவராக இருக்கலாம். நீட்டிக் கொண்டிருக்கும் கல் விளிம்புகளில் கைகள் பதிகின்றன போலும். சிறிது தூரம் ஏறிவிட்டதான உணர்வு கொண்டான். அது நம்பிக்கை அளித்து ஈர்த்தது. மேலும் மேலும் தாவலானான். அப்போது கிணறு குரலெழுப்பி எதிரொலித்தது. ‘பாம்பு பாம்பு’. துவண்டு கைகளின் பிடி நெகிழ்ந்தது. வாய் பிளந்து கை கால்கள் விரிய மல்லாந்து விழுந்தான் நீருக்குள், தவளை ஒன்றாய்.

பின்னுரை.

//இது என்ன விளையாட்டு? விளையாட்டெனக் கிணற்றின் தந்திரம். விருந்தாளியாக அவன் யார் வீட்டுக்கும் வரவில்லை. கிணறு வரவழைத்திருக்கிறது. நீச்சலுக்கு அவனை யாரும் அழைக்கவில்லை. தன் தூதுவர்களை உருவம் கொடுத்துக் கிணறு அனுப்பியிருக்கிறது. அவர்கள் முகங்களை அவனுக்குத் தெரியாது. மாயத்தின் பிறப்பிடம் கிணறு, மரணக்குழி. காவு கேட்கத் தொடங்கிவிட்டது.//

தலைப்பில் தந்த வாக்கியங்களைப் பார்ப்போம்.

1. இளங்கன்று பயம் அறியாது 

குழந்தைகள் கிணற்றில் நீந்தி விளையாடினாலும் அதில் உள்ள ஆபத்துகளை அறிய முயலவில்லை. அல்லது அறிந்து துணிந்தனர் எனலாம். 

2. விளையாட்டு வினையாகலாம் 

நீந்தி களைத்து மேலே ஏறுபவரை  தள்ளி  விடுவது விளையாட்டாகலாம். அதுவே வினையாகிவிட்டதே.  

3. ஆழம் தெரியாமல் காலை விடாதே 

கிணற்றைப் பற்றி அறியாமல் கிணற்றில் குதித்தது தவறு. 

சரியா?

******சிறுகதைகள்.காம்********

*********அழியாச்சுடர்கள்******** 

33 கருத்துகள்:

  1. வாசிக்க வாசிக்க ஆழத்தின் உள்ளிழுத்துப் போகும் எழுத்துத் தந்திரம். இடையிடையே மரண பய பீதியோடையே
    அடுத்த அடுத்த வரிகள் பாய்ச்சல் வேகத்தில் தாண்டித் தாண்டி வருகின்றன. பாவி எதையாவது பற்றிப் பிடித்து ஆக்ரோஷமாய் அவனைக் காவு வாங்கத் துடிக்கும் கிணற்றுப் பிசாசின் மரணப் பிடியிலிருந்து தப்பி மேலேறி வந்து விடமாட்டானா என்று வாசிப்பவனைப் பதற வைக்கும் எழுத்து மாயம்.
    வயல் காட்டுக் கிணற்றில் குதித்தவர்களே உணர்ந்த உள் ரகசியங்களூடையே பயப்பீதியை குழைத்துப் பூசி எழுத்தில் வடித்த அற்புதம்.

    நீந்தி நீந்திப் பார்த்தால் தான் நீச்சல் வசமாகும் என்பார்கள்.

    எழுதி எழுதிப் பார்த்துப் பழக்கப்பட்டால் தான் எழுத்தின் லாவகமும் பிடிபடும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை அதன் முழு வடிவத்தில் வாசித்தீர்களா? நான் கொடுத்தது abridged version மட்டுமே. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
      வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
      நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
      கொடையும் பிறவிக் குணம்.
      Jayakumar

      நீக்கு
    2. ஏற்கனவே இந்தக் கதையை வாசித்து ரசித்திருக்கிறேன். இப்பொழுதும் கதையின் முழு வடிவத்தை வாசித்து விட்டுத் தான் மனதில் தோன்றிய பின்னால் வரும் குறிப்பை கதாசிரியரின் பங்கு
      உணர்வு நியாயமாகக் கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. வாசிப்பு ரசனையைப் பகிர்ந்து கொள்கிற வாய்ப்பில் வாசிப்போரை வாசிக்க விட்டு என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுக்கிறார்கள் என்று கணிக்க கச்சிதமாக கழண்டு கொண்டிருந்திருக்க
    வேண்டும்.

    ஏதோ பதவுரை, பொழிப்புரை எழுதுகிற மாதிரி --தலைப்பில் தந்த வாக்கியங்களைப் பற்றி என்ற இறுதிப் பகுதி கதை கிளப்பிய பீதியை சவசவக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் ஜெஸி ஸார். மேலே சொன்னது என் சக எழுத்தாள உணர்வின் வெளிப்பாடு. அந்த கோணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். கொஞ்சமும் தளர்வுறாமல் இந்தப் பகுதியைச் சிறப்பாகக் கொண்டு வரும் உங்கள் ஆர்வத்திற்கும் ஆற்றலுக்கும் என் நன்றி. வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. எனக்கு தோன்றும் உணர்வுகளை நான் எழுதுகிறேன். விமரிசனங்கள் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. தற்செயலாக பழமொழிகள் பொருந்துவதை உணர்ந்தேன். அதை முன்பே கூறினாலும் எ பி வாசகர்களுக்கு விரிவாக சொன்னால் தான் புரியும் என்ற நிலையில் கடைசியில் சேர்த்தேன்.
      பெரியோர் ஆயின் இடித்துரைத்து நல்வழிப்படுத்துதல் அவர்களுடைய பண்பு. அம்முறையில் நீங்கள் கூறியது சரியே. நன்றி.
      Jayakumar

      நீக்கு
  3. இர்ண்டு பாஸிட்டிவ் செய்திகளும் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. முதலில் சொல்லிவிடுகிறேன் இதை, கதையை முழுவதும் வாசித்திருக்கிறேன். ஆனால் அப்போது ஜீவி அண்ணாவின் அனுபவம் தெரியாது. அதன் பின் இப்போது இதைப் பார்த்ததும் ஜீவி அண்ணா தாமிரபரணி ஆற்றில் நல்ல வெள்ள ஓட்டத்தின் போது தன் நண்பர்களோடு ஒரு பாறையைச் சுற்றி நீந்தி விளையாடிய போது நடந்ததை அவர் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.

    பெருமாள் முருகன் அவர்களின் கதை மிகவும் ஆழமாக இருக்கும். மன உணர்வுகள் தான் வரிகளில் ஓடும். மாதொருபாகன் பற்றி அடுத்து சொல்கிறேன். இப்போது இக்கதை. இக்கதையை முன்னரே வாசித்திருக்கிறேன். அவரைப் பற்றி அறிந்ததும், மாதொருபாகன் வாசித்த போதும்.

    இக்கதையிலும் கிணற்றைப் போன்று ஆழமான எண்ணங்கள் மன உணர்வுகளோடு புதைந்துள்ளதாகத்தான் நான் பார்க்கிறேன். மனம் கிணற்றையும் விட ஆழமானது.

    //ஏதாவது ஒரு குரல் ’அவரத் தொந்தரவு பண்ணாதீங்கடா’ என்று உயர்ந்து இந்தச் சூழலைச் சிதைத்துவிடுமோ என அஞ்சினான்.//

    என்று என்பது வரை வாசித்தால் நம் மனதில் டக்கென்று தோன்றும், என்று சொல்லி நம்மைத் தப்பிக்க வைத்துவிடாதா என்று. ஆனால் கதையில் அது அந்தச் சூழலைச் சிதைத்துவிடுமோ என்று அஞ்சுவதாக அவன் நினைப்பது என்பதிலிருந்தே கதையின் ஓட்டம் தொடங்குகிறது. சரி அப்போ அவன் கிளம்பிவிடுவான் தயக்கம் இருந்தாலும் உள் மனதில் புதைந்திருக்கும் அந்த அவா. (எனக்கு என் நீச்சல் அனுபவங்களைக் கொண்டு வந்ததது!)

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கதையில் மனித மனதைப் பொருத்திப் பார்த்தால் நிறைய சங்கதிகள் கிடைக்கும்.

    //கிணற்றின் உறைந்த மௌனத்தை முதலில் உடைக்க வேண்டும். அதன் பின் உற்சாக வெறி எல்லோரையும் தொற்றிக் கொள்ளும். அதைத் தொடங்குவதில்தான் அத்தனை சிரமம். //

    அப்படியே மனித மனதைப் பொருத்திப் பார்க்கலாம்.

    ஆசிரியர் அனுபவித்து எழுதியிருக்கிறார்! (இங்கு சில வரிகளைச் சொல்லவில்லை நான். அதை என் கதை ஒன்றில் பயன்படுத்தி இருப்பதால்)

    //குதிப்பதன் மூலம் நீரைத் துன்புறுத்துவதே அவர்களின் லட்சியம் போல தொடர்ந்து குதிக்கும் சத்தம்.//

    என்ன ஒரு வரி!!!! ஒவ்வொரு வரியிலும் ஆழம். அனுபவித்து எழுதியிருப்பது வெளிப்படுகிறது.

    //கிணற்றை அவன் வேறுமாதிரி உணர்ந்தான். பூங்குழந்தையை அள்ளி அணைக்கும் மென்மையுடன் நீரைக் கைகளால் வருடிக்கொண்டு நீந்தினான். //

    ரசனையான எழுத்து.

    //கிணறு இன்னும் போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம். ஒன்றும் புரிபடாது மூச்சுத் திணறியது. சட்டெனக் கைகளை அழுத்தி மேல்நோக்கி வந்தான். கிணற்றுள் எத்தனையோ ரகசியங்கள்.//

    மனதோடு ஒப்பிடும் வகையில் ஆழம்.

    என்னுடைய 'அவன்' ல் அவன் மனம் இப்படித்தான் செல்லும்.

    //என்ன மாதிரியான முட்டாள்தனத்தில் ஈடுபட்டோம் என்று தன்னைக் கடிந்துகொண்டான். //

    அவன் ஆழம் அறியாமல் விடவில்லை. அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கிழவனின் வாயிலிருந்து எழும் புன்சிரிப்பைப் போல, மெல்ல நகைத்துக்கொண்டு அவர்களைக் கிணறு பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.//

    துணையற்ற தனிமையில் வெகுகாலமாக லயித்துச் சலிப்புற்றுப் போய்விட்ட மனோபாவத்தோடு இவற்றையெல்லாம் கிணறு ரசித்துக்கொண்டிருக்கிறது போலும். //

    என்ன ஒரு ரசித்து அனுபவித்து எழுதியிருக்கிறார் என்று வியப்புடன் நானும் ரசித்தேன்.

    //கிணறு யாராலும் ஜெயிக்க இயலாத பிரம்மாண்டம். இதன் முன் தோல்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதனோடு போட்டியிட்டுத் தோற்பதே தைரியம்தான். //

    ஆழமான அர்த்தம். வாழ்க்கையோடு ஒப்பிட்டும் பார்க்கலாம். கிணறும் எந்த ஆழமான நீர்நிலையும் இப்படித்தான்.

    கடைசியில் ஆசிரியர் அவன் மரணத்தைத் தழுவுவதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.. சொல்லும் விதம் !!!!!!!!!!

    //குழந்தைகள் என அவன் நினைத்தது எவ்வளவு தவறு. கிணற்றின் ஏவலாளர்களான மூன்று பிசாசுகள். கழுத்தைக் குறிவைத்துப் பாய்கிறது ஒன்று. காலை வாரி விடுகிறது ஒன்று. நீருக்குள் கட்டிப்புரண்டு இழுக்கிறது ஒன்று//

    அவன் கவனமாகத்தான் இருந்திருக்கிறான் ஆனால் குழந்தைகளின் விளையாட்டு வினை - நீங்க சொல்லியிருப்பது போல்.

    நீச்சலில் நாம் கவனமாகக் குதித்து நீந்துவது வேறு ஆனால் யாரேனும் நம்மைத் தள்ளிவிட்டு நீந்துவதில் சில சமயம் நாம் தப்பிவிடலாம் ஆனால் அது ஆபத்தானது கன்னா பின்னா என்று குதிப்பது...எதிர்பாராத நிலையில் நீருக்குள் விழுவது என்பது மிகவும் ஆபத்தானது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இக்கதையை வாழ்க்கையோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்!!

    இக்கதை என் சிறு வயதையும் நினைவூட்டும்.

    சிறு வயதில் நிறைய நீந்தியதுண்டு. போட்டி போட்டுக் கொண்டு. ஆறு, குளம், கிணறு, சுனை, திருக்குறுங்குடி மலையில் கோயில் அருகில் இருக்கும் சின்ன அருவியும் அது ஏற்படுத்தும் 40 அடி ஆழக் குளமும் என்று. நான் வள்ளியூரில் விளையாடிய கிணறும் கிட்டத்தட்ட இப்படியான கிணறுதான்.

    திருக்குறுங்குடி அந்த அருவி விழும் இடத்தில் உள்ள குளம் போன்றதில் முன்பு நீந்தியிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன் ஒரு பாறையிலிருந்து நீந்தி அருவி விழும் பாறை வரை சென்றிருக்கிறேன். ஆனால் அப்பொதே கொஞ்சம் சிரமப் பட்டேன்...இப்போது கண்டிப்பாக என் மூச்சுறுப்புகள் உதவுமா என்றால் அந்த நீளத்திற்கும் ஆழத்திற்கும் உதவாது. ஆழம் அவ்வளவாக இல்லை என்றால் கூட ஓரளவு நீந்திவிடலாம் ஆனால் ஆழம் அதிகமான பகுதிகளில் அந்த அழுத்தம் உள்ளிழுக்கும். தொடர்ந்து நீந்தும் அனுபவமும் பயிற்சியும் இல்லாததால் இப்போது கடினம்தான். நீச்சல் குளத்தில் மட்டுமே நீந்த முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழமான விமரிசனத்தால் கிணறு, மனம் ஆழங்களை அலசி, ஒரு போட்டிக் கட்டுரையாக் பின்னூட்டம் நீளமாக வடித்ததற்கு பாராட்டுக்கள். இத்தகைய ஆரோக்கியமான விவாதங்கள் இப்பகுதியை சிறக்க வைக்கின்றன. நன்றி கீதா.
      Jayakumar


      ​P S எனக்கு நீச்சல் தெரியாது.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
    3. பரவாயில்லை தண்ணீரில் நீந்தலைனாலும் வாசிப்பில், எழுத்தில் இந்த வயதிலும் நன்றாகவே நீந்துகிறீர்கள்!

      கீதா

      நீக்கு
  8. பெருமாள் முருகன் கதைகள் படித்திருக்கிறேன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் எழுத்துகள் மிகவும் ஆழமாக இருக்கும்
    இக் கதை படிக்கவில்லை இப்பொழுதுதான் படித்தேன்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் நன்றாக உள்ளது.

    இன்றைய கதை பகிர்வு அருமையாக உள்ளது. கதையை ரசித்துப் படித்தேன். கதாசிரியரின் ஒவ்வொரு வரிகளும், அந்த எழுத்துக்களின் தாக்கமும் கிணற்றின் ஆழத்தை விட அதிகமாக மனதுக்குள் ஒரு பீதியை ஆழமாக உண்டாக்குகிறது. சில சமயங்களில் விளையாட்டு வினையாகி விடும் என்பது உண்மைதான்....!

    இந்தக்கதையை இதுவரை படித்ததில்லை. கதையை படிக்க ஆரம்பித்தவுடனிருந்து முடிக்கும் வரை விறுவிறுப்பாக எழுதியிருக்கும் இதன் கதாசிரியர் பெருமாள் முருகன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் . இதற்கு முன்னுரை, பின்னுரை என அருமையாக எழுதி, கதையின் அழகை சிலாகித்து வழி நடத்தி தந்திருக்கும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    எனக்கு இரண்டு நாட்களாக கொஞ்சம் உடல் நிலை படுத்தல். இப்போது பரவாயில்லை. அதனால் இன்று தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது? இப்போது. இரு நாட்களாகக் காணலையே கேட்கலாம் என்றிருந்தேன் உங்க கருத்து பார்த்ததும் தெரிந்தது. உடல் நலன் பார்த்துக்கோங்க கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      எனக்கு இப்போது பரவாயில்லை. என்னவோ மாற்றி, மாற்றி உடம்பு படுத்தல்கள். எதையென்று சொல்வது? அதனால்தான் விட்டு விட்டு பதிவுகளுக்கு வருகிறேன். ஆனால் சில நேரங்களில், தாமதமானாலும் வந்து விடுவேன். ஏனென்றால் இதுவே எனக்கு ஒரு மருந்து.( நட்புகளின் பதிவுகளும், அதை சார்ந்த எண்ணங்களும் எழுத்தும் ) மேலும், தங்கள் அன்பான, ஆறுதலான விசாரிப்புக்கள் என்னை முழுவதுமாக குணப்படுத்தி விடும் எனவும் நம்புகிறேன்.

      சகோதரி கோமதி அரசு அவர்களையும் இரு தினங்களாக பதிவுகளில் காண முடிவதில்லை. வேறு ஏதோ வேலைகளில் அவருக்கும் பொழுது சரியாக இருக்கிறது என நினைக்கிறேன். தங்களது அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      இன்றைய கதையைப் பற்றிய உங்கள் அலசல்கள் படிக்க மிக நன்றாக உள்ளது. கிணற்றைப்பற்றியும், பொதுவாக எல்லா நீர் நிலைகளைப்பற்றியும், அதில் நீந்தும் லாவகத்தைப் பற்றியும் நீங்கள் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை ரசித்துப் படித்தேன். நீங்கள் சின்ன வயதிலிருந்தே நீசசல் அறிந்தவர் ஆகையால், இக்கதையை உள்வாங்கி விபரமாக பதில் கருத்து தர முடிகிறது எனவும் நான் நினைத்தேன். கதையும் அதன் எழுத்தும் என்னையும் மிகக் கவர்ந்தது. உங்கள் கருத்துக்களும் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்
      நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. உறவினர் திருமணம், உறவுகள் வருகை என்று இரண்டு நாள் இங்கு வரவில்லை, நீங்களும் கீதாவும் விசாரித்து விட்டீர்கள்
      உங்கள் அன்புக்கு நன்றி.
      உங்கள் உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.

      நீக்கு
    5. பாசிடிவ் செய்திகள் நன்றாக இருக்கிறது.

      கதை பகிர்வு அருமை. என் சித்தப்பா பெரிய கிணற்றில் குதித்து விளையாடுவது பொழுது போக்காவைத்து இருந்தார்கள்.

      நீக்கு
  10. //சகோதரி தி. கீதா அவர்கள் பின்னூட்டம்:

    தாமிரபரணி ஆற்றில் தன் நண்பர்களோடு ஜீவி அண்ணா....எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.//

    எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னால் என் தளத்தில் நான் எழுதியிருந்தது அது? அபார நினைவாற்றல் உங்களுக்கு.
    அப்பொழுது சங்கப்பாடல்களை நினைவு கொள்ளச் செய்யும் என் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி எழுதி வந்தேன். அவை இலக்கிய இன்பம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு மென்நூலாக கிண்டலில் கிடைக்கிறது.
    இவ்வளவு சொல்லி விட்டு அந்த சங்கப்பாடல் பற்றி சொல்லாமலிருந்தால் எப்படி?
    தொடித்தலை விழுத்தண்டினார் என்ற புலவர் (அவர் இயற்பெயர் தெரியாததினால் அவர் எழுதிய இந்தப் பாடலில் வரும் ஒரு வரியை அவருக்குப் பெயராகவே சூட்டி விட்டார்கள்) தம் முதுமைப் பருவத்தில் தம் இளம் பிராயத்து ஆற்று நீர் விளையாட்டுகளை நினைவு கொள்ளும் புற நானூற்றுப் பாடல் அது.
    நானும் தாமிரபரணி ஆற்றில் என் இளம் வயதில் குளிக்கச் சென்ற பொழுது ஒரு தடவை ஆற்று நீரின் அடி ஆழத்திற்குச் சென்று மீண்ட நினைவு பற்றி எழுதியிருந்தேன். திரு. பெருமாள் முருகனின் கதையில் வரும் 'கால்கள் வெடவெடத்தன' வரியை வாசிக்கும் பொழுது என் அந்த அனுபவத்திலும் கால்கள் வெடவெடத்தது பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. ஆச்சரியம் தான். இந்த வாசிப்பில் நான் எழுதியது என் நினைவுக்கு வர அதையே வாசித்த நினைவு உங்களுக்கு வர...
    நம் நினைவுகளின் படிமங்கள் மூளையில் பதிந்திருக்குமா என்ன?
    புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கிற மாதிரி--
    ஒரு நேரத்து ஒரு நினைவு
    அதே மாதிரியான நம் இன்னொரு நினைவை ஞாபகப்படுத்தி...
    வியக்கவைக்கும் உடற்கூறு சாத்திரம்.. இயற்கையின் படைப்பு மேன்மை எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பொழுது சங்கப்பாடல்களை நினைவு கொள்ளச் செய்யும் என் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி எழுதி வந்தேன். //

      ஆமாம் ஜீ வி அண்ணா. எனக்குப் பொதுவாக நான் வாசித்து உள் வாங்கியவை நினைவில் இருக்கும். அதுவும் சில மிகவும் ரசித்தோ இல்லை, அது வேறு நினைவுகளைத் தூண்டியதாகவோ, பாதித்ததாகவோ இருந்தால் அவை மனதில் நிற்கும். எனக்கு.

      இப்போதும் எனக்கு திருநெல்வேலியைச் சார்ந்த ர சு நல்லபெருமாள் அவர்கள் எழுதிய ஒரே ஒரு கதையை பரிசு பெற்ற நாவல் அது நம்பிக்கை/கள் ? அமுத சுரபியிலோ கலைமகளிலோ வாசித்த நினைவு. கதையின் சாராம்சம் நன்றாக நினைவிருக்கிறது. வரிக்கு வரி என்றில்லை என்றாலும். அக்கதை கிடைக்குமா மீண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை கிடைக்கவில்லை. அசாத்தியமான கதை. அக்கதை பற்றியும், அவர் எழுதிய மயக்கங்கள் என்ற கதை பற்றியும் எழுத ஆசை. இரண்டும் இப்போது வாசிக்கக் கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும் என்று இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

      //நம் நினைவுகளின் படிமங்கள் மூளையில் பதிந்திருக்குமா என்ன?
      புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கிற மாதிரி--//

      கண்டிப்பாகப் பதிந்திருக்கும் ஒவ்வொருவரின் மூளையின் நினைவாற்றல் பொருத்து. வரிக்கு வரி நினைவு இருப்பவை அதை நாம் எந்த அளவு உள் வாங்கியிருக்கிறோம் அலல்து திரும்ப திரும்ப வாசித்திருக்கிறோம் என்பதைப் பொருத்து.

      கண்டிப்பாக நம் மூளையின் உடற் கூறு சாஸ்திரங்கள் வியக்க வைக்கும்.

      நீங்கள் மனசு என்பது பற்றி எழுதியிருந்தீங்க. நான் அதற்கு பதிலும் கொடுத்திருந்தேன். அதுவும் மூளையின் ஒரு பகுதிதான் அதில் தான் நம் உணர்வுகள் பதிகின்றன Scripts அதன் வழிதான் நம் உள் மனம், ஆழ் மனம், குரல் எல்லாம். இது உளவியலில் ஒரு பகுதி. ஆனால் மதம் சார்ந்த தத்துவார்த்தங்களில் மெய்ஞானத்தில் மனசு என்பது வேறாகக் கருதப்படுகிறது. மூளையிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்க்கிறாங்க.

      கீதா

      நீக்கு
  11. பதிலுக்கு நன்றி, சகோ.

    ர.சு. நல்ல பெருமாள்
    என்றாலே அவரது 'கல்லுக்குள் ஈரம்' தான் என் நினைவுக்கு வரும்.

    வானதி பதிப்பகம், தி.நகர்
    சென்னை-17 தான் வழக்கமாக ர.சு.ந. நூல்களை வெளியிடுவோர். நீங்கள் குறிப்பிடும் நம்பிக்கைகள் நூல் அவர்களிடம் கிடைக்கிறது. விலை.ரூ.80/-.
    மொபைலில் தொடர்பு கொண்டு விசாரித்து விலாசம் கொடுத்தால் VPP அல்லது வேறு வழிகளில் அனுப்பி வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  12. இப்பொழுது வானதி பதிப்பகத்தை கூகுள் தேடலில் தேடிப் பார்த்த பொழுது அவர்களிடம் contact information கொடுத்தால்
    வேண்டுகிற புத்தகம் அனுப்பி வைப்பதாகத் தெரிகிறது.. முயற்சி செய்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நானும் புத்தகம் தேடிய போது இந்தத் தகவல் கிடைத்தது.

      மிக்க நன்றி ஜீ வி அண்ணா தொடர்பு கொண்டு பார்க்கிறேன்.

      கீதா

      நீக்கு
  13. பிரேக் வேலை செய்யாமல் போனதும் ஓட்டுநர் மிகத் திறமையாக வண்டியை மிக மெதுவாக ஒட்டி பயணிகளியக் கம்பியைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி ஓட்டி, இளைஞர்கள் மக்கள் உதவிட எப்படியோ பயணிகளைக் காப்பாற்றியுள்ளார். நல்ல செய்தி.

    வேகமாக ஓட்டப்படும் பேருந்தில் நகரத்தில் என்றால் பிரேக் பிடிபடாமல் இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

    இரண்டாவது செய்தி வாசித்திருக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. நீச்சல் தெரிந்த இளைஞர்தான். என்றாலும் திடீரென்று கிணற்றில் ஆழமான கிணற்றில் இறங்கி நீந்துவதும் பிரச்சனை இல்லைதான். அவரும் கவனமாகத்தான் இருந்திருக்கிறார் தன்னிலை உணர்ந்து. ஆனால் இப்படித் திடீரென்று பிள்ளைகள் அவரை ஆளுக்கொரு பக்கமாக இழுத்திட கிணறு யமனாக மாறித் தன்னுள் இழுத்திருக்கிறது. கிணற்றிற்கு நீந்துபவர்கள் கரை ஏறினால் தன்னை விட்டு அகலுகிறார்களே என்று பிடித்து இழுத்துக் கொண்டதோ. நல்ல எழுத்துகாரர், மாதொருபாகன் எழுதிய ஆசிரியர் என்று தெரிகிறது. எங்கள் தளத்தில் மாதொருபாகன் பற்றி எழுதிய நினைவு.

    பகிர்விற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார். உங்கள் கருத்துகளும் அருமை. ஆமாம் இளைஞர் ஆழமறிந்து இறங்கினாலும் விளையாட்டு வினையாகியிருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. இந்த வாரத்தின் செய்திகள் இரண்டும் நன்று. கதைச் சுருக்கமும் நன்று. முழு கதையும் படிக்க வேண்டும் எனத் தோன்றும் விதமான கதைச் சுருக்கம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!