புதன், 24 ஏப்ரல், 2024

கோடை விடுமுறை நாட்கள்.

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

அரசியல்வாதிகள் இவ்வளவு ஊழல் செய்தும், நாட்டை சுரண்டியும் இந்த பாரத தேசம் வளர்கிறதே எப்படி? என்று யக்ஷன் தர்மபுத்திரரிடம் கேட்டால் அவர் என்ன பதில் கூறுவார்?

# பெரியவாளோட   ஆசீர்வாதம் . பூர்வ ஜென்ம புண்ணியம்.

& 'அதுதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது!' என்று சொல்வாரோ! 

= = = = = =

எங்கள் கேள்விகள் :

1) எந்தக் காலத்தை சமாளிப்பது கடினமானது - வெயில் காலம், மழைக்  காலம், குளிர் காலம். 

2) கீழ்க் கண்டவற்றுள் எந்த விஷயங்கள் உங்களால் முடியும்? 

அ ) காபி தயாரித்தல். 

ஆ ) உப்புமா செய்வது 

இ ) மாவு அரைத்து, இட்லி அல்லது தோசை வார்ப்பது 

ஈ ) சாம்பார் செய்வது 

உ ) வெந்நீர் போடுதல் 

ஊ ) ஊஹூம் - எதுவுமே தெரியாது! 

3) பார்க் - பீச் அல்லது ரயில் பயணங்கள் போன்ற பொது இடங்களில் முன் பின் தெரிந்திராத நபர்களிடம் சகஜமாக பேசுவீர்களா? 

= = = = = = = = =

KGG பக்கம். 

விடுமுறை காலங்கள். 

பள்ளி / கல்லூரி படித்த நாட்களில், விடுமுறை காலங்கள் எப்படி போயின என்று யோசித்துப் பார்த்தேன். 

ஆரம்பப் பள்ளி நாட்களில், கோடை விடுமுறை நாட்களில், நானும் என்னுடைய சின்ன அண்ணனும், எங்கள் கிராமம் ஆகிய கல்யாணமகாதேவி - என்னும் ஊருக்குச் செல்வோம். ஊருக்குச் செல்லும்போது நானும் என் அண்ணனும் , அப்பாவோடு கிளம்பிச் செல்வோம். இரண்டொரு நாட்களில் அப்பா அலுவலகம் செல்லவேண்டும் என்பதால் அவர் மட்டும் நாகைக்குத் திரும்ப வந்துவிடுவார். நானும் என் அண்ணனும் எங்கள் கிராமத்தில் இன்னும் கொஞ்ச நாட்கள் தங்கி இருந்து பிறகு யாராவது உறவினருடன் திரும்பி வருவோம். கிராமத்தில், எங்கள் சித்தப்பாக்கள், அத்தைகள், அவர்களின் மகன், மகள் என்று உறவினர் குடும்பங்கள் பலர் இருந்தனர். 

அந்தக் காலத்தில் எங்களுக்கு - குறிப்பாக எனக்கு இருந்த ஈர்ப்பு அந்த ஊரோ அல்லது அங்கிருந்த உறவினர்களோ அல்ல! ஊருக்குச் செல்வதற்காக ரயில், பஸ் பயணம்தான் எனக்குப் பிடித்த விஷயம்! 

நாகை ரயில் மேடையில், திருவாரூர் செல்லும் ரயிலுக்காகக் காத்திருந்த நேரங்கள். தூரத்தில் வருகின்ற ரயிலை அது ஏன் இவ்வளவு மெதுவாக வருகின்றது என்று சற்று அலுப்பு கலந்த ஆர்வத்துடன் கவனித்தது எல்லாம் நினைவில் வருகின்றது. 

தூரத்தில் வரும்போது அவ்வளவு மெதுவாக ஒரு புள்ளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த அந்த ரயில் பெருத்த சத்தத்துடன் என்னைக்  கடக்கும்போது மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக செல்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும்! 

ரயிலில் ஏறியதிலிருந்து, ஜன்னலோரத்து சீட்டு பிடித்து, ஸ்டேஷன் நடைமேடை மனிதர்களைப் பார்ப்பது சுவாரஸ்யம். விசில் சத்தம், பச்சைக் கொடி ஆட்டுவது எல்லாம் கேட்க, பார்க்க பரவசமாக இருக்கும். ரயில் நகரத் தொடங்கியதும், ஸ்டேஷனில் நடப்பவர்கள் முன்னால் நடந்தபடியே பின்னே செல்வது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்! 

நாகப்பட்டினம், அந்தணப்பேட்டை, சிக்கில், கீவளூர், கூத்தூர், அடியக்கமங்கலம், திருவாரூர் என்று எல்லா ஸ்டேஷன் பெயர்களும் அத்துப்படி! 

ஒவ்வொரு ஸ்டேஷன் பெயருக்கும் நானும் என் அண்ணனும் அந்த ஸ்டேஷனின் பெயர் அப்படி உள்ளதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பேசிக்கொண்டு வருவோம். 

அடியக்கமங்கலம் ஸ்டேஷன் பெயர் வரக் காரணம் - என்று அண்ணன் சொன்னது இது:

அந்தப் பகுதிக்கு வந்த ஆங்கிலேய துரை, அங்கு குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த சிறுமியிடம் " வாட் இஸ் தி நேம் ஆஃப் திஸ் பிளேஸ் ?" என்று கேட்க, ஒன்றும் புரியாத அந்த சிறுமி, குளத்தில்  குளித்துக் கொண்டிருந்த தன் அக்காவைப் பார்த்து, " அடி அக்கா - மங்களம் " என்று அழைத்து "துரை என்னவோ கேட்கிறார் " என்று சொல்ல - அந்த ஆங்கிலேயர் உடனே அந்த இடத்திற்கு 'அடியக்கமங்கலம்' என்று பெயர் வைத்துவிட்டார். இது அண்ணனுக்கு வேறு யாராவது சொன்ன கதையோ அல்லது அண்ணனின் சொந்தக் கற்பனையோ தெரியவில்லை! 

ரயில் பயணம் திருவாரூர் வந்ததும் முடிவடைந்துவிடும். 

அப்புறம் ஒரு பஸ் பயணம் - திருவாரூரிலிருந்து மாங்குடி(?) அல்லது காட்டாற்றுப் பாலம் வழியாக செல்லும் ஒரு பஸ் பிடித்து, காட்டாற்றுப் பாலம் என்னும் இடத்தில் இறங்கி கல்யாணமகாதேவி சென்று அடைவோம். 

அப்புறம்? 

அடுத்த வாரம் பார்ப்போம். 

= = = = = = =

30 கருத்துகள்:

  1. செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்
    காக்கின் என் காவாக்கால் என். 

    தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..

    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க

    பதிலளிநீக்கு
  4. /// தன் அக்காவைப் பார்த்து, " அடி அக்கா - மங்களம் " என்று அழைத்து "துரை என்னவோ கேட்கிறார் " என்று சொல்ல -///


    உங்களுக்கும் இதே பாயாசம் தானா!...

    பதிலளிநீக்கு
  5. மாங்குடி மருதனார் உங்களுக்குச் சொந்தமா!..

    பதிலளிநீக்கு
  6. எந்தக் காலத்தைச் சமாளிப்பது கடினம் என்பது முற்றிலும் வயதைப் பொறுத்தது. எனக்கு மழைக்காலம், குளிர் காலம் பிடிக்கும். வெயில் காலமே அதிகமாக இருக்கும் இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். சமீப காலமாக வெயில் அதிகமாக இருப்பது அயர்வை உண்டாக்குகிறது. நிறைய வயதானவர்களுக்கு குளிர் காலம் தாங்குவதில்லை.வேலைக்குப் போகிறவர்களுக்கு, பணியாட்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு மழைக்காலம் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  7. எந்த விஷயம் முடியாது என்று கேட்டால், காபி தயாரிப்பது. அதைச் செய்ததே இல்லை. எங்கள் வீட்டில் காபி கிடையாது. விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்குக் கொடுக்கவும் பல நேரங்களில் காபிப் பொடி இருக்காது. மாமியாருக்காக மிகச் சிறிய அளவில் இன்ஸ்டன்ட் காபி பாக்கெட்டுகள், தேவையானால் வாங்கிவைத்துக்கொள்ளுவோம்.

    பதிலளிநீக்கு
  8. 1, வெயில் காலம், மழைக்காலம் ,குளிர் தேசம், அதிகவெயில் ,அதிக குளிர் பொறுக்கமுடியாது. மழை வீட்டுக்குள் அடைந்து விடலாம்.:)
    2,3, பதில் ஆம்.

    "அடி அக்கா மங்களம்." ரசித்தேன்.

    ரயில் பயணம் அடிக்கடி செல்லாததால் பிடித்தமானது.அண்மையில் மலை நாட்டு அப்புத்தளை ரயிலில் சைட் சீயிங்குக்காக சென்று வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. அடியக்காமங்கலம் பெயர் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில் சுவாரஸ்யம்.

    1.கோடைகாலம், மழைக்காலம், குளிர் காலமென அந்தந்த காலங்கள் பருவங்களுக்கு ஏற்ற மாதிரி மாறி வரும் போது "வெய்யிலின் அருமை நிழலில் தெரியும்" கதைதான்.

    2..எல்லா வேலைகளையும் நாட்தோறும் செய்துதான் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழிக்கிறோம்.

    3. யாரிடமும் அவ்வளவாக பேசுவதில்லை. மௌனந்தான் பல சமயங்களில் சிறந்தென தோன்றும்.

    உங்கள் பகுதியை ரசித்தேன். சிறு வயதில் எப்போதாவது செல்லும் ரயில் பயணங்கள் எனக்கும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் உறவுகளுடன் விடுமுறைகளை கொண்டாடவென சொல்லிக் கொள்ளும்படியாக வருடந்தோறும் எங்கும் சென்றதில்லை.

    உங்கள் சகோதரரால் அடியக்காமங்கலம் பெயர் உருவான வரலாறு நன்றாக உள்ளது உங்கள் சகோதரருக்கு நல்ல கற்பனை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. ஆனால் பழமொழி(?)யை மாற்றிவிட்டீர்கள்.
      நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதுதான் சரியானது.

      நீக்கு
    2. /ஆனால் பழமொழி(?)யை மாற்றிவிட்டீர்கள்.
      நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதுதான் சரியானது./

      ஹா ஹா ஹா. . ஆமாம் ஏதோ அவசரத்தில் மாற்றி சொல்லி விட்டேன். திருத்தியமைக்கு நன்றி. இப்போது தண்ணீரின் அருமை பெய்யும் மழையில்தான் தெரிய வரும். ஆனால் மழைதான் கண்டும் காணாமல் ஏமாற்றி வருகிறது.

      நீக்கு
  11. கேள்வியும், பதிலும் அருமை.
    1. அதிக வெயில். அதிக குளிர், பிடிக்காதுதான். இருந்தாலும் சில நேரங்களில் அதையும் அனுபவிக்க வேண்டி உள்ளது.
    வெயில் காலத்தில் மழை, மழை காலத்தில் வெயிலை விரும்புவது மனித இயற்கை.

    பதிலளிநீக்கு
  12. 2. கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் முடியும் என்ற பதில்.

    3. சக பயணிகளிடம் ஒரு புன் சிரிப்பு பேச்சு உண்டு. மருத்துவமனையில் காத்து இருக்கும் போதும் பேசுவேன்.
    எதிராளியின் உரையாடலை பொருத்து இருக்கிறது, தொடர்வது.

    பதிலளிநீக்கு
  13. விடுமுறை காலங்கள் பகிர்வு அருமை.

    அடியக்கமங்கலம் ஸ்டேஷன் பெயர் வரக் காரணம் உங்கள் அண்ணன் சொன்ன கற்பனையா கதையா? அல்லது உண்மை கதையா தெரியாது படிக்க நன்றாக இருக்கிறது.

    //ரயில் நகரத் தொடங்கியதும், ஸ்டேஷனில் நடப்பவர்கள் முன்னால் நடந்தபடியே பின்னே செல்வது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்! //


    ரயில் பயண அனுபவம் சிறு வயதில் ஒவ்வொருவரும் உணர்ந்த அனுபவம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!