19.8.25

ஒரே ஒரு ஊரிலே - தொடர் கதை - ஸ்கை :: பகுதி 05 (கோபியின் சதி)

 

முன்னறிவிப்பு : 

அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க. 

முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" 

= = = = = = = = = =

முந்தைய பகுதி சுட்டி <<<<<

சில சந்தர்ப்பங்களில் ராஜா, அழகர் பெண் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் கோபி விவரம் கூறாமல் தட்டிக் கழிப்பதோ அல்லது பேச்சை மாற்றுவதோ வழக்கம். 

ராஜா & சாந்தி பரஸ்பர காதல் பற்றி கோபி அரசல் புரசலாக நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டான்.

மெடிக்கல் ரெப் என்பதால் விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் காலையிலிருந்து இரவு 10 மணி வரை ஊர் முழுவதும் அலைவான்.

இந்த ராங்கிக்காரியை எப்படியாவது ராஜாவிடமிருந்து பிரித்துவிடுவது என்று முடிவெடுத்தான் கோபி.

* ** 

அதற்கு ஒரு சதித்திட்டம் தீட்டினான் கோபி.

என்ன சதி?

டிஸ்டிரிக்ட் லெவல் கிரிக்கட் போட்டி அவனுக்கு வசதியாகப் போயிற்று.

முதலில் மாவட்ட அளவில் இறுதி அணி தேர்வு செய்யப்பட,   ஒவ்வொரு ஊரிலும் ஊர் லெவல் போட்டிகள் நடைபெறுகின்றன

ஊர் லெவல் போட்டியில் வெற்றி பெறும் அணி மற்ற ஊர் அணிகளுடன் மோத வேண்டும்.

அப்படி விளையாடுகின்ற அணிகளிலிருந்து மாவட்ட அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கோபி அந்த மாதத்திற்கான டார்கெட் மருந்து விற்பனையை 25 ஆம் தேதியே முடித்துவிட்டான்.

மாதத்தின் கடைசி வாரம் முழுவதும் கிரிக்கெட் பயிற்சிப் போட்டிகள் ஊர் லெவல் போட்டிகள் இவற்றில் மும்முரமாக ஈடுபாடு கொண்டான்.

விவரங்களை ராஜாவிடம் கூறி, தான் அழைக்கும்போதெல்லாம் மாலை நேரத்தில் கிரிக்கட் ப்ராக்டிஸ் செய்ய வரவேண்டும் என்று சொன்னான்.

* * * * * * *

ராஜா அதற்கு ஒப்புக் கொண்டான்.‌

சாந்தி அவனை சந்திக்க கடை மாடிக்கு வரும் போது அவளிடம் " அடுத்த நாலஞ்சு நாட்களுக்கு கடை மாடி மீட்டிங் வரவேண்டாம். கிரிக்கட் ப்ராக்டிஸ் இருக்கு. நீ ஃபோன் பண்ணினா கூட நான் ஃபோன் அட்டெண்ட் செய்வது கஷ்டம் " என்று சொன்னான்.

" அப்பாடி எனக்குக் கூட சில முக்கிய டிசைன் வேலைகள் இருக்கு. நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். நீயும் என்னை டிஸ்டர்ப் செய்யாதே" என்றாள் சாந்தி.

=====

மறுநாள் மாலை பிராக்டிஸ் செய்ய வருமாறு ராஜாவிடம் சொன்னான் கோபி.

" ஐந்து மணிக்கு நேராக ப்ளே கிரவுண்டுக்கு வந்துடு"

ராஜா நேராக விளையாட்டுத் திடலுக்கு போனான்.

பிராக்டிஸ் செய்யும் சமயம் அப்படிச் செய்பவர்கள் தங்கள் பையில் ஃபோன் வைத்திருக்கமாட்டார்கள். பந்து ஃபோனில் பட்டால் ஃபோன் பழுதாகிவிடும் என்பதாலும், ப்ராக்டிஸ் செய்யும் நேரத்தில் ஃபோன் கால் இடைஞ்சல் செய்யும் என்பதாலும் இந்த நடவடிக்கை.

அந்த நேரங்களில் ஃபோனை தன்னுடைய நண்பன் யாரிடமாவது கொடுத்துவிட்டு, ' ஏதேனும் முக்கிய கால் வந்தால் சொல்லு' என்று சொல்லி விடுவார்கள்.

ராஜா பௌலிங் பயிற்சியில் மும்முரமாக இருக்கும் சமயத்தில் பார்வையாளர் பகுதியில் இருக்கும் தன் நண்பர்கள் அல்லது சிறுவர்கள் யாரிடமாவது ஃபோனைக் கொடுத்து வைப்பான்.‌

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கோபி ( பேட்டிங் பயிற்சி இல்லாத சமயத்தில்) ராஜாவின் ஃபோனை ஏரோப்ளேன் மோடில் செட் செய்துவிட்டான்.

அதன் பின் அழகர் வீட்டின் அருகே உள்ள தன் நண்பன் பாபுவுக்கு ஃபோன் செய்தான் கோபி.

" பாபு! நான் கோபி பேசறேன். ராஜாவை கிரிக்கெட் ப்ராக்டிஸ் பண்ண கிரௌண்டுக்கு வரச் சொல்லியிருந்தேன். இது வரை இங்கே வரலை. ஃபோன் செய்தாலும் எடுக்கவில்லை.  நீ போய் அழகர் வீட்ல 'ராஜா வந்தானா' என்று விஜாரித்து எனக்கு ஃபோன் செய்"

பாபு வந்த நேரத்தில் சாந்தியின் அம்மாதான் வாசல் பக்கத்தில் இருந்தார்கள்.

பாபு, கோபியின் நண்பன் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் பெயர் தெரியாது. பாபு வந்ததைப் பார்த்தவுடன் " கோபி மாடியில் இல்லை. கிரிக்கெட் ஆடப் போயிருக்கான் போலிருக்கு" என்று சொன்னார்கள்.‌ 

" ஆமாங்க , கிரிக்கெட் ப்ராக்டிஸ் பண்ற கிரௌண்டிலிருந்து எனக்கு ஃபோன் செய்தான். ராஜாவை ப்ராக்டிஸ் செய்ய கிரௌண்டுக்கு வரச் சொல்லியிருந்தானாம்; ஆனால் இதுவரை அங்கே வரலியாம். இங்கே வந்தானா என்று உங்களை கேட்டு ஃபோன் பண்ண சொன்னான். " 

" ராஜாவா! இங்கே வரலியே. வந்தா சொல்லி அனுப்பறேன்" 

பாபு கோபிக்கு ஃபோன் செய்து விவரம் சொல்லிவிட்டு திரும்பச் சென்றான். 

வாசல் பக்கம் பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்த சாந்தி, அம்மாவிடம் " என்னம்மா விஷயம்?" என்று கேட்டாள்.‌ 

" கோபியோட ஃப்ரெண்ட் வந்து, ராஜா இங்கே வந்தானான்னு கேட்டான்கிரிக்கெட் ப்ராக்டிஸ் பண்ண கிரௌண்டுக்கு வரவில்லை என்று சொன்னான். " 

சாந்தி உடனே ராஜாவுக்கு ஃபோன் செய்தாள். ஃபோனை யாரும் எடுக்கவில்லை.

'பிராக்டிஸ் என்று சொல்லிவிட்டு எங்கே போயிருப்பான் ராஜா' என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது.

கோபி, ப்ராக்டிஸ் முடிந்தபின் ராஜா திரும்ப வருவதற்குள் அவனுடைய ஃபோன் செட்டிங்கை திரும்ப நார்மல் மோடில் வைத்தான்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தபின் சாந்தியிடமிருந்து மிஸ்ஸுடு கால் வந்திருப்பதைப் பார்த்த ராஜா, சாந்திக்கு ஃபோன் செய்தால் அவள் கோபத்தில் ஃபோனை எடுக்கவில்லை.

**

ராஜா, சாந்திக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினான். " ஸாரி சாந்தி. கிரிக்கெட் ப்ராக்டிஸில் இருப்பேன் என்று சொல்லியிருந்தேனே நினைவில்லையா?" 

சற்று நேரம் கழித்து இந்த செய்தியைப் பார்த்த சாந்தி, தன்னுடைய அறைக்குச் சென்று அங்கிருந்து ராஜாவுக்கு ஃபோன் செய்தாள். 

" ஏய்! கிரிக்கெட் ப்ராக்டிஸா! உன்னை கிரௌண்ட் பக்கமே காணோம் என்று ஒருத்தன் வந்து சொன்னான்! " 

" யார் சொன்னது? " 

" ஆள் பேரு எல்லாம் தெரியாது. கோபி அனுப்பினதா சொன்னான்" 

" எப்போ? எத்தனை மணிக்கு?"

" டைம், நாள் நட்சத்திரம் எல்லாம் பாக்கலை. நீ ப்ராக்டிஸ் போறேன்னு சொல்லிட்டு வேறே எங்கேயோ போயிருக்கே! எங்கே போனே சொல்லு"

" சரி நீ நம்பலைனா, ஒரு சூப்பர் ஃபிகர் கூட ஊர் சுத்தினேன்னு வெச்சுக்கோயேன்!"

" வெச்சுக்கறேன் வெச்சுக்கறேன். அடுத்த கடை மாடி மீட்டிங் அப்போ இருக்கு உனக்கு கச்சேரி"

அப்போதைக்கு அப்படி சொன்னாலும், சாந்திக்கு, ராஜாவின் மீது சிறிய சந்தேக நிழல் படிந்தது என்பது உண்மைதான். ஒருவேளை - தான் ராஜாவின் வேலை விஷயத்தில் உடனடியாக சம்மதம் தெரிவிக்காததால் அவனுக்கு தன் மீது வருத்தம் இருக்குமோ’ என்று நினைத்தாள்.

(தொடரும்?)  

ரகசிய குறிப்பு - வாசகர்களுக்கு மட்டும் .. 

ஸ்கை ரொம்ப வருத்தமாக உள்ளார். அவர் எதிர்பார்த்த அளவு response வாசகர்கள் யாரும் கொடுக்கவில்லை என்பது காரணம். 

ஆகவே கதையை இப்போதைக்கு பாதியில் நிறுத்திக் கொண்டு வாசகர்கள் மேற்கொண்டு வற்புறுத்தினால் மட்டுமே தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்துள்ளார். 

கருத்துரை பகுதியில் எல்லோரும் கதை பற்றி கருத்து எழுதி அவருக்கு 'ஊக்கம் வர' அல்லது 'தூக்கம் கெட' வைக்கவும் .. 

= = = = = = = = =

26 கருத்துகள்:

  1. தொடர்கதைனாலும் பரவாயில்லை, அப்போ அப்போ படித்துவிடுவோம்னு படிக்கறேன்.

    ராஜாவின் காதலுக்கு எதிராக கோபியின் சதி எளிய முயற்சி. அது என்ன தாக்கத்தை ஏற்படுத்துதுன்னு பார்க்கணும்.

    சிந்துபாத் படக் கதைலதான், கடலில் காற்றினால் அலை அதிகமானது, லைலா படகைத் திருப்பினாள், தூரத்தில் பெரிய உருவம் கடலில் மிதந்தது, ஐயோ.. என்று நாலு படம் போட்டு, தொடரும் போடறாப்புல சிறிய பகுதியா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் தினத்தந்தியில் சிந்துபாத் படக் கதை வருகின்றதோ? ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன் ஆர்வத்துடன் படித்த ஞாபகம் வருகின்றது.

      நீக்கு
    2. நானும் அந்தக் காலத்தில் முடி வெட்டிக்கொண்ட கடைகளில் (1963) படித்தது உண்டு.

      நீக்கு
  2. இந்த ராங்கிக்காரியை எப்படியாவது ராஜாவிடமிருந்து பிரித்துவிடுவது என்று முடிவெடுத்தான் கோபி.//

    எதிர்பார்த்த ஒன்று. ஆனால் அந்த டெக்னிக் தான் கொஞ்சம் க்ளிஷேவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அப்போதைக்கு அப்படி சொன்னாலும், சாந்திக்கு, ராஜாவின் மீது சிறிய சந்தேக நிழல் படிந்தது என்பது உண்மைதான்.//

    மாடிவீட்டு மாப்பிள்ளை எனும் படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது.

    "பெண்கள் என்றாலே சந்தேகம், சந்தேகம் என்றாலே பெண்கள்" இது 1967 ல் வசனம். இப்பவுமா இதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு பழைய, ஹிட் ஆகாத படத்தின் வசனம் ஞாபகம் உங்களுக்கு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

      நீக்கு
    2. கீதா ரங்கன்.... ஹா ஹா ஹா.... எத்தனையோ நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய நம் மூளையில், காலாவதியான படத்தின் வசனத்தையா ஸ்டோர் பண்ணி வச்சிருக்கீங்க.

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா

      ஹையே!!!! கௌ அண்ணா அண்ட் நெல்லை, எனக்குப் படங்களின் வசனங்கள் எதுவும் நினைவுக்கு வராது. படங்கள் பார்த்தால்தானே...பார்த்தாலும் நினைவுக்கு வராது.

      இது தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி கேட்டு கேட்டு எழுதணுமே...வேலை...

      இல்லைனா இந்தக் கீதாவாவது இப்படி கோட் பண்ணி சொல்றதாவது!!!!! கீதாவின் நினைவுத்திறன் பத்தி தெரியாத கௌ அண்ணா, நெல்லை!! ம்ம்ம்

      கீதா

      நீக்கு
    4. 1967 ல் வந்த வசனத்தை 2024லிலும் வைக்கலாம். நேற்றுதான் GOAT படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சினேகாவின் கேரக்டரை அப்படி சந்தேகப் பேர்வழியாகத்தானே காட்டுகிறார்கள் " கணவன் மொபைலை சைலண்ட்டில் போட்டால் சந்தேகம்....ரெண்டு ரிங்கில் எடுத்தால் சந்தேகம்....மூணு ரிங்கில் எடுக்காவிட்டால் சந்தேகம்....". காதலனோ, காதலியோ (கணவனோ, மனைவியோ) சந்தேகப் பேர்வழியாகச் சித்தரிப்பது என்பது வழி வழி வந்த மரபு...ஸ்கையும் இதற்கு விதி விலக்கில்லை போல் இருக்கிறது.

      நீக்கு
    5. நல்ல கருத்து. நன்றி.

      நீக்கு
  4. உண்மையான காதல் என்றால் வரக் கூடாதே! மட்டுமல்ல இப்போதைய பெண்கள் கில்லாடிகள், தாங்களே உண்மையை அறிந்து கொள்ள ஸ்பை எல்லாம் வைப்பாங்க என்பது ஸ்கைக்கும் தெரிஞ்சுருக்குமே!! ஹாஹாஹாஹா

    சாந்தி பக்குவப்பட்ட பெண்ணாக, புத்திசாலியாக இந்த இடத்தில் காட்டியிருக்கலாமோ என்ற ஒரு ஆர்வம் எழுந்தது என்னவோ உண்மை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்கைக்கு (எழுத்தாளர்களுக்கு) இப்ப தூக்கம் கெட்டுவிட்டதா அல்லது ஆர்வத்துடன், சரி சரி இனி சாந்தியை பக்குவமாகக் காட்டிவிடுவோம் என்று அடுத்த பகுதியில் டர்ன் அடிக்கப் போகிறாரா (ர்களா) என்று பார்ப்போம்.

      கீதா

      நீக்கு
    2. ஸ்கை ஏற்கெனவே தேசாந்திரம் கிளம்பிட்டார் . மொபைலில்
      அழைத்தால் எடுக்கவில்லை.

      நீக்கு
    3. தேசாந்திரம்... இந்த வார்த்தையைக் கேட்டு எவ்வளவோ வருடங்களாகிவிட்டன. கிராமங்களில் கோயில் திருவிழா நடக்கும் சமயம் த்தீயாராதனை எனச் சொல்லப்படும் உணவு அளிக்கும் செயல் மூன்று வேளையும் நடக்கும். கோவில் விசேஷம் முடிந்த மறுநாள் காலையில், தேசாந்திரம் என்ற பெயரில் உணவு வழங்குவார்கள். அதற்கு அர்த்தம் வெளியூரைச் சேர்ந்தவர்கள் கிளம்புவதற்கு முன்னால் பசியாறிவிட்டுச் செல்லணும், அடுத்த வேளை எப்போதோ என்ற எண்ணம்தான். இது பழைய கால வழக்கம். நான் கிராமத்தில் கோடை விடுமுறையில் பெரியப்பா வீட்டில் இருந்தபோது (4-5ம் வகுப்பு) கோயிலில் போய் தேசாந்திரம் இலையில் வாங்கிவந்தேன். அப்போதான் தெரியும் இது வெளியூருக்குச் செல்பவர்களுக்கானது என்று. சிறுவன் உள்ளூர் என்பதால் எனக்குக் கொடுத்துவிட்டார்கள்.

      நீக்கு
    4. தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    5. தேசாந்திரம் கிளம்பிவிட்டாரா? எங்கே காசிக்கா!!!!! அதான் நிறுத்தலாம்னு யோசனையா.?

      எடுத்த காரியத்தை ஒழுங்கா முடிக்க வேண்டாமோ?!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  5. சந்தேக விதை விதைத்தாகிவிட்டது. அப்படி என்றால் கொஞ்சம் பூசல், ஊடல்கள் என்று தொடருமோ? தடங்கல்கள் வேறு வர இருப்பது தெரிகிறது. முடிவையும் சொல்லிவிட்டீர்கள். முடிவை நோக்கிப் போவோம். இடையில் என்னாகும்? என்னாகும் ஏற்படப் போகும் தடங்கல்கள் பற்றித் தெரிந்துகொள்வோமே, என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று.

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவு என்று எழுதப்பட்டிருக்கும் வரிகளில் எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. // " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" //
      எவர்கள் இருவரும்?
      எதற்குப் பிறகு?
      சந்தோஷம் ஏன் போனது?
      ஏன் நிம்மதி போயிற்று? ...

      நீக்கு
  6. /ஸ்கை ரொம்ப வருத்தமாக உள்ளார். அவர் எதிர்பார்த்த அளவு response வாசகர்கள் யாரும் கொடுக்கவில்லை என்பது காரணம்.

    ஆகவே கதையை இப்போதைக்கு பாதியில் நிறுத்திக் கொண்டு வாசகர்கள் மேற்கொண்டு வற்புறுத்தினால் மட்டுமே தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்துள்ளார். /
    இப்படியா வாசகர்களை பயமுறுத்துவது? சில பட்டி மன்றப் பேச்சாளர்கள் "இந்த இடத்தில் கை தட்டலாமே" என்று ரகசியக் குறிப்பு கொடுப்பது போல் ஸ்கை ரகசியக் குறிப்புக் கொடுக்கிறாரே!
    கதை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. தயங்காமல் மேலே எழுதுங்கள்.
    பி.கு: வாசகர்களின் வற்புறுத்தல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஸ்கை! இந்த ஆதரவு போதுமா - இன்னும் கொஞ்சம் வேணுமா?

      நீக்கு
  7. ஸ்கைக்கு ஏதாவது முக்கிய வேலை இருந்தால் போய் பார்க்கட்டும், அதற்காக வாசகர்கள் மீது ஏன் பழி போட வேண்டும்? நாங்கள் ரசித்துக் கொண்டுதானிருக்கிறோம். இருந்தாலும் ஒரு விஷய்ம் சொல்லி விடுகிறேன், சென்ற வாரங்களில் இருந்த ஃப்ரெஷ்னெஸ் இந்த வாரத்தில் இல்லையே ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Freshness?? அப்படி என்றால் என்ன? விவரிக்கவும். நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!