9.8.25

தோப்புக்கரணம் போட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி மற்றும் நான் படிச்ச கதை

 

தோப்புக்கரணம் போட்ட துணை கலெக்டர்: பணியின் முதல் நாளிலேயே அதிரடி

ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் துணை கலெக்டராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, முதல் நாளிலேயே அதிரடியான நடவடிக்கை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.  ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரிங்கு சிங் ரஹி, நேற்று முன்தினம் ஷாஜஹான்பூர் துணை கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு முன், தன் அலுவலகம் துாய்மையாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வந்தார்.  அப்போது, பலர் தங்கள் இயற்கை உபாதைகளுக்கு கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர்களை பயன்படுத்தியிருந்தது கண்கூடாக தெரிந்தது.  தவிர, கலெக்டர் அலுவலக குமாஸ்தாவும், துாய்மையை பற்றி கவலைப்படாமல் பொது வெளியில் இருக்கும் அந்த சுற்றுச்சுவரை இயற்கை உபாதைக்காக பயன் படுத்திக் கொண்டிருந்தார்.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த துணை கலெக்டர் ரிங்கு, உடனடியாக அவரை அருகே அழைத்து தோப்புக்கரணம் போட வைத்தார்.  இது பற்றி அறிந்ததும் கலெக்டர் அலுவலகத்திற்குள் குவிந்த வழக்கறிஞர்கள், தோப்புக்கரணம் போட வைத்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அவர்களை கலெக்டர் சமாதானம் செய்ய சென்றபோது, 'ஒட்டுமொத்த கலெக்டர் அலுவலக வளாகமும் சுத்தம் இல்லாமல் இருக்கிறது. அதற்கு நீங்கள் பொறுப்பேற்று தோப்புக்கரணம் போடுவீர்களா?' என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்த விநாடியே, ரிங்கு சிங், அனைவரது முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட்டு, நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைகளுக்காக மன்னிப்பு கேட்டார்.  துணை கலெக்டரின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத வழக்கறிஞர்கள், உடனடியாக தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  கலெக்டர் அலுவலகத்தின் துாய்மைக்கு பொறுப்பேற்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரிங்கு சிங் தோப்புக்கரணம் போட்ட 'வீடியோ' சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

==============================================================================================


============================================================================================


===========================================================================================

 

நான் படிச்ச ஒரு பக்க கதைகள்

JKC

கதையாசிரியர்: ஐரேனிபுரம் பால்ராசய்யா

 

குமரி மாவட்டம் ஐரேனிபுரம் எனது சொந்த ஊர். சிறு வயதிலேயே நாடகங்கள் நடிப்பது, எழுதுவது, பாடல் எழுதுவது, இயக்குவது என்பதில் எனக்கு ஆர்வம் அதிகமிருந்தது.

31 நாடகங்கள் எழுதி 1000க்கும் மேற்பட்ட மேடைகளில் இயக்கியிருக்கிறேன். ஒரு பக்கக் கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்தி சுமார் 284 ஒருபக்கக் கதைகளும், 115 சிறுகதைகளும், 12 நாவல்களும் எழுதியிருக்கிறேன்.

பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

தமிழக அரசின் கலை நன்மணி விருது, சாதனையாளர் விருது, தமிழ்சுடர் விருது, கலைவேந்தன் விருது, சிறந்த எழுத்தாளர் விருது. என பல விருதுகள் பெற்றிருக்கிறேன்.

இறப்பு  : August 2024

 

மொய் – ஒரு பக்க கதை

எளிமையான கல்யாண நிகழ்ச்சி. தீபக்கும் அவன் மனைவி தன்யாவும் மணமக்களை வாழ்த்திவிட்டு, மொய் எழுதும் இடத்திற்கு வந்தார்கள்.

“என்னங்க… வசதியில்லாத குடும்பம். கஷ்டப்பட்டு கல்யாணத்தை நடத்தறாங்க. ஒரு ரெண்டாயிரம் ரூபா மொய் எழுதிடுங்க, கவுரவமா இருக்கும்!”

“இல்ல தன்யா! வெறும் இருநூறு ரூபாதான் என் பேருக்கு எழுதப் போறேன்.”

“என்னங்க நீங்க… ரெண்டு பேரும் ஐ.டி கம்பெனியில வேலை செய்யறோம். மாசம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம். ரெண்டாயிரம் ரூபா மொய் எழுதினா குறைஞ்சா போயிடுவீங்க..?” – கடுப்பாய் கேட்டாள் தன்யா.

 

“தன்யா, இவங்க என் உறவுக்காரங்க.  நீ சொல்ற மாதிரி ரெண்டாயிரம் ரூபாய் மொய் எழுதினா, மூணு மாசம் கழிச்சு நடக்கப் போற என் தங்கச்சி கல்யாணத்துக்கு அதை அவர் திருப்பி எழுதணும். அந்த சமயத்துல ரெண்டாயிரம் புரட்டுறது அவங்களுக்கு சிரமமாக்கூட இருக்கலாம். அதனால என் பேர்ல இருநூறு ரூபா எழுதிடுறேன். லண்டன்ல இருக்குற உன் அம்மா பேர்ல ரெண்டாயிரம் எழுதிடலாம். அவங்களை யாருன்னு பொண்ணோட அப்பாவுக்குத் தெரியாது!”

கணவனின் தாராள மனசு கண்டு வியந்து, “அப்படியே எழுதுங்க..!” என்று பெருமையாகச் சொன்னாள் தன்யா.

மனைவி – ஒரு பக்க கதை

குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் வாகினி.

“கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள்.

“கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோன வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய் சொன்னாள் வாகினி.

“என்னடி சொல்ற?’’ திவ்யா புரியாமல் கேட்டாள்.

“இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம். அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும். என் சம்பளத்துல இருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோனுக்கு அப்ளை பண்றேன்!.

தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக் கூடாது என விரும்பும் வாகினியின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் திவ்யா.

– 29-06-11

 

பழசு – ஒரு பக்க கதை

பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய இளமதியன் ஊரிலிருந்து வந்திருந்த தனது தாத்தாவைப் பார்த்ததும் சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போனான்.

”தாத்தா எப்போ வந்தீங்க..? ” கேட்டுக்கொண்டே அவர் மடியில் அமர்ந்தான்.

”காலையிலேதான் வந்தேன், நல்லா படிக்கிறியா ராசா…’!’

ம்…தாத்தா, போனவாட்டி மாதிரி எனக்கு கதை சொல்லிகுடுங்க….!

”உன் அப்பாவோட கதையே பெரிய கதை. இப்போ நீயும் உன் அப்பா அம்மாவும் வசதியா இருக்குற மாதிரி, நானும் உன் அப்பாவாவும் இல்ல. அந்தக் காலத்துல கரண்ட் கிடையாது. அரிக்கேன் விளக்குலதான் படிச்சான். போட்டுக்க நல்ல சட்டை கிடையாது. சாப்பாட்டுக்கே கஷ்டம். அந்தக் கஷ்டத்துல உன் அப்பா எஸ்.எஸ்.எல்.சி.யிலயும் பிளஸ் டூவிலயும் தோத்துத்துட்டு அப்புறமா எழுதி பாஸ் ஆகி டிகிரி வாங்கிட்டான்….!”

”அப்பா…எதுக்கு தேவையில்லாம பழசையெல்லாம் அவன்கிட்டே சொல்றீங்க…? நான் ஃபெயில் ஆன விஷயம் ரொம்ப முக்கியமா…? தனது தந்தை மீது கோபப்பட்டான் இளமதியனின் தந்தை.

“இல்லடா…இன்னைக்கு படிக்குற புள்ளைங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கு, கஷ்டம்னா என்னன்னு தெரியல, தோல்வியக்கூட தாங்கிக்கத் தெரியல, குழந்தைகளுக்கு அத சொல்லித்தரணும், கஷ்டத்த சகிச்சுக்கிட்டும் தோல்விய தாங்கிக்கிட்டும் பழக கத்துக்கிட்டாங்கன்னா எதிர்காலத்துல உன்ன மாதிரி தன்னம்பிக்கையோட வருவாங்க…!”

அவர் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்து மௌனமாக வெளியேறினான் இளமதியனின் தந்தை.

– 19-9-12

என்னுரை

மொய் ஒரு பக்க கதை குங்குமம் வார இதழிலும், மனைவி, பழசு இரண்டும் குமுதத்திலும் பிரசுரமானவை. கதைகள்  sirukathaigal.com இலிருந்து எடுக்கப்பட்டவை.

இவரைப்பற்றிய விவரங்களை தேடியபோது முகநூலில் இவரது இறப்பிற்கு இரங்கல் மடல் கண்டேன். இரங்கல் செய்தியுடன் இருந்த புகைப்படமே இங்கு இடம் பெறுகிறது.

இவருக்கு என்று தனியான முகநூல் பக்கம் இருந்தது. அதில் நண்பர்கள் என்று, ஆசிரியர்கள் ஸ்ரீராம், தளிர் சுரேஷ் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆகவே ஸ்ரீராம் அவர்களுக்கு ராசையா பற்றி தெரிந்திருக்கும். அவர் மேலும் விவரங்களை சேர்க்கலாம்.

இவர் திருவனந்தபுரத்தில் வசித்தார் என்பதை நான் அவருடைய முகநூல் பக்கத்திலிருந்து அறிந்தேன்.

மேலோட்டமாக பார்க்கும்போது கதைகளின் வித்யாசமான முடிவுகள் சரியானதாக தோன்றலாம். ஆனால் அம்முடிவுகளிலும் குறைகள் உள்ளன என்பது எனது கருத்து.

மொய் கதையில்

//“தன்யா, இவங்க என் உறவுக்காரங்க. நீ சொல்ற மாதிரி ரெண்டாயிரம் ரூபாய் மொய் எழுதினா, மூணு மாசம் கழிச்சு நடக்கப் போற என் தங்கச்சி கல்யாணத்துக்கு அதை அவர் திருப்பி எழுதணும். அந்த சமயத்துல ரெண்டாயிரம் புரட்டுறது அவங்களுக்கு சிரமமாக்கூட இருக்கலாம். அதனால என் பேர்ல இருநூறு ரூபா எழுதிடுறேன். லண்டன்ல இருக்குற உன் அம்மா பேர்ல ரெண்டாயிரம் எழுதிடலாம். அவங்களை யாருன்னு பொண்ணோட அப்பாவுக்குத் தெரியாது!”//

பத்திரிக்கை வைத்து அழைக்கப்பட்டவர்கள் தாம் மொய் எழுதுவது வழக்கம். பெண்ணோட அப்பாவிற்கு தன்யாவுடைய அம்மாவை தெரியாது என்றால் பத்திரிக்கை வைத்திருப்பாரா? ஆலோசிக்க வேண்டிய விசயம்.

மனைவி கதையில்

//“கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோன வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய் சொன்னாள் வாகினி.

“என்னடி சொல்ற?’’ திவ்யா புரியாமல் கேட்டாள்.

“இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம். அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்,. என் சம்பளத்துல இருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோனுக்கு அப்ளை பண்றேன்!.//

பேங்க் பாஸ் புக்கை பார்க்கும் கணவன் சம்பளம் அல்லாமல் மேற்கொண்டு ரூ 50000 வரவு எப்படி வந்தது என்று கேட்க மாட்டாரா? அப்படிப்பட்ட கேள்வி பல சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்குமே!

கணவர் குறைந்த சம்பளத்தில் தனியார் கம்பெனியில் வேலை, மனைவி மத்திய அரசு கெஜெட்டட் ஆபீசர் என்று பல தம்பதியரைப் பார்த்திருக்கிறேன். இரு கோடுகள் ஜெமினி?

பழசு கதையில்

 //“இல்லடா…இன்னைக்கு படிக்குற புள்ளைங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கு, கஷ்டம்னா என்னன்னு தெரியல, தோல்வியக்கூட தாங்கிக்கத் தெரியல, குழந்தைகளுக்கு அத சொல்லித்தரணும், கஷ்டத்த சகிச்சுக்கிட்டும் தோல்விய தாங்கிக்கிட்டும் பழக கத்துக்கிட்டாங்கன்னா எதிர்காலத்துல உன்ன மாதிரி தன்னம்பிக்கையோட வருவாங்ங…!”//

ஆனால் பசங்க ‘ நீங்க கஷ்டப்பட்டீங்க என்பதால் நாங்களும் கஷ்டப்பட வேண்டுமா? வருமானம் உள்ளபோது ஏன் கஷ்டப்பட வேண்டும்? ‘ என்று எதிர்வாதம் செய்பவர்களும் இருக்கிறார்கள். சில தந்தைகள் தங்கள் அனுபவிக்காததை பிள்ளைகளாவது அனுபவிக்கட்டும் என்று அப்பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமான செல்லம் கொடுத்து வளர்க்கின்றனர். வளர்ந்த பிராயத்தில் அம்மாதிரி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் உதாவக்கரைகளாகி விடுகிறார்கள்.  செல்லமும் கண்டிப்பும் சரியான விகிதத்தில் கொடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்டால் பிள்ளைகள் வாழ்க்கையைப் புரிந்து கொள்வார்கள் என்பது எனது அபிப்ராயம்.

15 கருத்துகள்:

  1. பழசு கதையின் ஜெயகுமார் சாரின் கருத்தைப் படித்தபோது நேற்று என் பெண் சொன்னது நினைவுக்கு வருது. குழந்தைகளுக்கு பயத்தையே கற்பிக்கக்கூடாதாம். அவர்கள் எதைச் செய்யவும் சப்போர்ட்டாக இருக்கணுமாம். சின்ன வயதில் நாம் சொல்லுபவை அவங்க மனதில் ஆழமாய்ப் பதிந்து, பெரியவங்களா அவங்க ஆனபோதும் பயம் மனதில் தங்கிவிடுமாம்.

    என்னைப் பொறுத்த வரையில் பணம் எவ்வளவு வருகிறது, என் அலுவலகப் பதவி என்ன என்பதைக் கவனத்தில் கொள்ளாது எளிமையாகத்தான் வளர்த்தேன். பையன் என்னை கஞ்சூஸ் என்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை உங்க பெண் சொல்வதை டிட்டோ செய்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. நெல்லை, நிச்சயமாக உங்கள் வளர்ப்பு தவறே இல்லை நெல்லை. எளிமையாக வளர்த்தது. அது நல்ல பழக்கம். பிள்ளைகள் புரிந்து கொள்வார்கள் அவர்களும் வாழ்க்கையில் நுழையும் போது.

      கீதா

      நீக்கு
  2. ஒரு பக்கக் கதைகள் பெரும்பாலும் செயற்கையாக இருப்பதால் அவைகள் என் ஆர்வத்தைத் தூண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
  3. ஆட்டோ டிரைவரைப் பாராட்டத் தோன்றுகிறது. இந்தர்ஜித் சிங் சித்து அவர்களை வணங்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. ஒரு பக்கக் கதைகள் எனக்குப் பிடிக்கும். சுலபமாகப் படித்து கடந்து விடலாம் ! Time saver.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் கதையைப் பற்றி உங்கள் அபிப்ராயம் இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

      நீக்கு
  5. சிங் - சல்யூட்!

    மீடியாவைப் பாருங்க! என்ன மோசமான மீடியா! கொஞ்சம் கூட அறிவு இல்லை. மக்களுக்கு சுய ஒழுக்கம், பொதுநலன் பற்றிய அக்கறை இல்லை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இப்படியா செய்வது...என்ன மீடியா என்று ச்சீ ஆகிடுச்சு.

    அவங்க கேட்ட கேள்வி சரியில்லை.

    சிங் இப்பதானே பதவி ஏற்றிருக்கிறார். இனிதானே சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்? இது வரை இருந்த நிர்வாகம்தானே அதற்குப் பொறுப்பு. அவங்க இந்த ப்யூன் செய்வதைக் கண்டு கொள்ளவே இல்லைதானே? பொது மக்கள் செய்வதையும் கண்டுக்காம இருந்திருக்கான அதை அல்லவா கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆனால் தான் ஓர் உதாரணம் என்று சப் கலெக்டர் நிரூபித்திருக்கிறார். பாராட்ட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இந்தர் ஜித் சிங்கிற்கும் சல்யூட்!

    வாவ் போட வைக்கிறது! பாராட்டோடு வணக்கங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அட! ஆட்டோ ஓட்டுநருக்கும் பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அட! எங்க மாவட்ட எழுத்தாளர்!

    நல்லாருக்கு கதைகள், குமுதம் கதைகள் போன்று. கதைகளைப் பற்றி ரொம்பச் சொல்வதற்கு இல்லை.

    சிறிய விஷயங்களைக் கூட அதாங்க ஒன்லைன் ஸ்டோரிய கூட நாவலாக்கும் அதே நேரம் சிறிய கதைகளாக்கி எழுதுவதற்கும் திறமை வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பழசு கதையில் அண்ணா, நீங்க சொல்வதை அப்படியெ வழி மொழிகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த 'அண்ணா' யாரு? அறிஞர் அண்ணாவா? கௌதமன் அண்ணாவா இல்லை ஜெயகுமார் அண்ணாவா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!