8.12.25

"திங்க"க்கிழமை  : தினைஅரிசி புட்டு - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

தினை அரிசி புட்டு

நம்ம JKC அண்ணா புட்டு செய்முறை கொடுத்திருந்தார் இங்கு. 

இதுவும் அதே செய்முறைதான், ஆனால் தினை அரிசியில் கேரளத்துப் புட்டு செய்முறை.

பொதுவாக, தேனும் தினைமாவும் கலந்து முருகனுக்குப் படைப்பதுண்டு. தினை மாவில் இனிப்புப் புட்டு, லட்டு, இனிப்புக் கொழுக்கட்டை எல்லாம் செய்வதுண்டு.

தினையை உடைத்து உப்புக் கொழுக்கட்டை செய்யலாம். இட்லி தோசை, பொங்கல் செய்வதுண்டு. அப்படி தினை மாவில் புட்டும் செய்யலாம்.

அளவு என்று ரொம்பச் சொல்ல முடியாது.

தினையை 1-2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்றாக வடித்துவிட வேண்டும். நான் அதே சல்லடையில் அப்படியே 1 மணி நேரம் போல வைத்துவிடுவேன். தண்ணீர் நன்றாக வடிந்ததும் மிக்ஸியில் சிரோட்டி ரவை பக்குவத்திற்குப் பொடித்து எடுத்து அதை வாணலியை அடுப்பில் ஏற்றி அதில் நன்றாக வறுக்க வேண்டும். நல்ல வாசனை வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆறவிட்டுவிடலாம்.

பின்னர் அதை ஒரு அகலமான பத்திரத்தில் இல்லைனா அதே வாணலியில், உப்பு கலந்து தண்ணீரைத் தெளித்துத் தெளித்து விரவ வேண்டும். ஒரு கப் மாவிற்கு 1/4 கப்பிற்குள்தான் தண்ணீர் தேவைப்படும். தினையைப் பொருத்து. தினை அரிசி மாவு போலில்லாமல் தண்ணீர் கொஞ்சம் கூடுதல் இழுத்துக் கொள்ளும். சிறுதானியங்கள் எல்லாமே அப்படித்தான். பிடித்தால் பிடிபட வேண்டும் உதிர்த்தால் உதிர வேண்டும். அப்படியே கட்டி இல்லாமல் விரவி 1/2 மணி நேரம் வைத்துவிடலாம்.

ஒரு கப் மாவிற்கு 3/4 - 1 கப் தேங்காய்த் துருவல் தேவைப்படும் இதெல்லாம் அவரவர் விருப்பம்.

புட்டுக் குழல் பானையில் தண்ணீர் கொதிக்க வைத்து சூடாகும் நேரத்தில், குழலில் அடியில் சின்ன ஓட்டைகள் உள்ள சில்லைப் போட்டு, முதலில் கொஞ்சம் தேங்காய், அப்புறம் கொஞ்சம் தினை மாவு அப்புறம் தேங்காய் என்று போட்டு மேலில் தேங்காய் இருப்பது போல் போட்டுவிட்டு மூடி போட்டு பானை மேல் வைத்து 20 நிமிடம் ஆவியில் விட வேண்டும்.

அவ்வளவுதான். எடுத்து குழலில் இருந்து வெளியே தள்ளி, தொட்டுக் கொள்ள ஆவியில் வேகவைத்த நேந்திரன் பழம், பப்படம் அல்லது கடலைக்கறி, பயறு என்று அவரவர் விருப்பப்படி தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். 

செய்த அன்று கடலை ஊற வைக்காததால் கடலைக்கறி இல்லை. பழத்துடன் பப்படம் தான் நல்லாருக்கும். அன்று பப்படமும் இல்லை. நான் மகனுக்குப் போட்டு வைத்திருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் (காய வைத்து) கொஞ்சம் இருந்தது அதைப் பொரித்துக் கொண்டேன். கூடவே பழம்.

இது போன்று சிவப்பு அரிசி, சிறுதானியங்கள் எல்லாவற்றிலும் செய்வதுண்டு. 

38 கருத்துகள்:

  1. தினை அரிசி புட்டு...
    மிகச்சிறந்த இயற்கை உணவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், துரை அண்ணா.

      பெரும்பாலும் சிறுதானியங்கள் தான் நம் வீட்டில்.

      மிக்க நன்றி, அண்ணா.

      கீதா

      நீக்கு
  2. சிறப்பான செய்முறை
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. ​தினைப்புட்டு இதுவரை சாப்பிட்டதில்லை. தினைமாவு கடைகளில் கிடைக்காது. சாதாரணமாக தேனும் தினைமாவும் என்று சொல்வார்கள். வறுத்த தினைமாவில் தேன் சேர்த்து உருண்டை பிடிப்பது. தினைமாவில் மாலாடு போல தினைலட்டு செய்வார்கள். கொஞ்சம் மெனக்கடல் உண்டு தான். அடுத்தமுறை செய்யும்போது புட்டுமாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பிசறி அவித்துப் பாருங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வறுத்த தினை மாவில் தேன் சேர்த்து உருண்டை பிடித்து முருகனுக்கு வைப்பதுண்டு, அண்ணா. நான் செய்திருக்கிறேன்.

      நெய் சேர்த்தேன். சொல்ல விட்டுப் போச்சு. இனிப்பு மாவிற்குப் பதிலாக உப்புப் புட்டு. எனவே கொஞ்சம் நெய் சேர்த்தேன் பதிவில் விட்டுப் போச்சு. நெய் சேர்த்துச் செய்யும் போது வாசனை நன்றாக இருக்கும். மற்ற புட்டு செய்யும் போதும் கொஞ்சம் சேர்ப்பதுண்டு.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  4. படம் கம்பு போல் அல்லவா இருக்கிறது. தினை போன் நிறம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா உங்களின் இந்தக் கருத்தைப் பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆனேன். காரணம், கம்பு பொடித்து மாவுண்டாக்கியும் வறுத்து செய்திருக்கிறேனா...அதுவும் படங்கள் இருக்கா...ஹையோ மாற்றி அனுப்பிட்டேனான்னு தோன்றியது. படங்களை மீண்டும் பார்த்தேன்.

      இல்லை தினைதான்...கம்பு கொஞ்சம் உருண்டையாக கன்னாபின்னான்னு இருக்கும்

      இது நாவ்னே என்று அதாவது ஃபாக்ஸ் டெய்ல் - தினை - அதை கொஞ்சம் தீட்டீருப்பாங்களோன்னு தோன்றியது கடையில் பார்த்தப்ப. ஆனால் அப்ப கிடைத்தது வழக்கமான அந்தப் பொன் நிறம்..கொஞ்சம் லைட்டாக. ஆனால் பாக்கெட் பார்த்ததும் தினைதான் என்று தெரிந்தது.

      ஆனால் என் மொபைல் கேமரா....அதிகாலைல் செயற்கை வெளிச்சத்தில் எடுத்ததால் கலர் சரியாக வரலையாக இருக்கும்.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. https://www.indiamart.com/proddetail/foxtail-bird-feed-navne-22683118555.html?srsltid=AfmBOooXFH6xRfRiwpU-M3BWRKYGNDZygLnX6rY9mbVxNXmTryUC3WQS

      அண்ணா இந்தச் சுட்டியில் போய்ப்பாருங்க.

      கீதா

      நீக்கு
    3. தினைமாவு கடைகளில் கிடைக்காது.//

      இங்கும் கிடைப்பதில்லைதான்.

      நான் தினையை வீட்டில் (பெரும்பாலும் சிறுதானியங்களில் செய்யும் போது இப்படிச் செய்வது) ஊற வைத்துப் பொடித்து வறுத்து....பதிவில் சொல்லியிருப்பது போலதான்

      கீதா

      நீக்கு
    4. bird feedனு போட்டிருக்கே , பரவல்லியா? நாம தைரியமா சாப்பிடலாமா?

      நீக்கு
    5. வாங்க திருவாழிமார்பரே! சாப்பிடலாம். தைரியமாகச் சாப்பிடலாம். தினை மாவு லட்டு சாப்பிட்டிருப்பீங்களே முருகனுக்குப் படைப்பதும் தினைமாவுடன் தேன் கலந்து.

      அந்தச் சுட்டியில் அப்படிப் போட்டிருக்கிறது.

      தினை கொஞ்சம் பொன் நிறமாகக் கிடைக்கும் தினை அரிசி என்று போட்டுப் பாருங்க. அதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கும்.

      நான் பல வருடங்களாகச் சிறுதானியங்களைப் பயன்படுத்தறேன்.

      அதனால, 'ஒரு வேளை கீதா பறப்பாளோ ன்னு நினைச்சுடக் கூடாது கேட்டேளா!

      கீதா

      நீக்கு
    6. பறப்பனவோன்னு!!!

      கீதா

      நீக்கு
    7. தகவல்களுக்கு மிக்க நன்றி. பறக்கை பக்க ஆட்களெல்லாம் பறப்பாங்களோன்னு ஒரு சந்தேகம். ஐயம் தீர்ந்தது :-)

      நீக்கு
    8. பறக்கை பக்க ஆட்களெல்லாம் பறப்பாங்களோன்னு ஒரு சந்தேகம். ஐயம் தீர்ந்தது :-)//

      சிரிச்சுப்புட்டேன்! திவமா!

      உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன். சின்னவயசுல என்னை எங்க வீட்டில் 'பறக்கா'வட்டின்னு சொல்லுவாங்க! பறக்கை - பறக்கா! சரியாகிடுச்சுல்ல!ஹிஹிஹிஹி.....

      கீதா

      நீக்கு
  5. புட்டு, கடலை எனக்கு பிடிக்கும். என் மகனுக்கு பிடிக்காது,அதனால் வீட்டில் செய்வதில்லை. கம்பு மாவில் செய்திருக்கிறேன். வயிறு திண்ணென்று ஆகி விடும். படங்களோடு தெளிவான விளக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கம்பு மாவில் செய்தால் வயிறு நன்றாக நிரம்பிவிடும் அதுவும் கடலையோடு சாப்பிட்டால்.

      எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.

      நன்றி பானுக்கா.

      கீதா

      நீக்கு
  6. படங்களோடு சொன்னது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. தினை அரிசி புட்டு செய்முறை படங்களோடு நன்றாக இருக்கிறது.
    தினை மாவு கிடைக்கும் அதை வாங்கி வறுத்து செய்து இருக்கிறேன்.
    புட்டுகுழல் என்னிடம் இல்லை வாங்கவில்லை. ஆனால் இட்லி தட்டில் கொஞ்சம் தேங்காய் கொஞ்சம் மாவு என்று வைத்து செய்து இருக்கிறேன்.
    தினை அதிரசம், தினை மாவிளக்கு அதிரா செய்வார் முருகனுக்கு அவர் நினைவுக்கு வந்து விட்டார்.

    திருச்செந்துரில் "தினையமுது" என்று பிரசாதம் கிடைக்கும். வெல்லம், சுக்கு எல்லாம் மாவில் போட்டு அற்புதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் செஞ்சுருக்கீங்க என்பது மகிழ்ச்சி, கோமதிக்கா

      புட்டுக்குழல் இல்லைனாலும் இட்லி தட்டில் வைத்தும் செய்யலாம் நானும் முன்பு அப்படிச் செய்ததுண்டு.

      //தினை அதிரசம், தினை மாவிளக்கு அதிரா செய்வார் முருகனுக்கு அவர் நினைவுக்கு வந்து விட்டார்.//

      ஆமாம்.

      //திருச்செந்துரில் "தினையமுது" என்று பிரசாதம் கிடைக்கும். வெல்லம், சுக்கு எல்லாம் மாவில் போட்டு அற்புதமாக இருக்கும்.//

      ரொம்ப நல்லாருக்கும். நானும் சாப்பிட்டிருக்கிறேன். வருஷங்களுக்கு முன்...கோவிலில் அல்ல. உறவினர் கோவிலில் இருந்து கொண்டு வந்துகொடுத்து சாப்பிட்டிருக்கிறேன்.

      நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  9. எங்கள் குடும்ப நண்பர் அத்தை தினை அதிரசம் செய்து கொண்டு வருவார் எங்களை பார்க்க வரும் போது எல்லாம்.அந்த பழைய நினைவுகளையும் கொண்டு வந்தது உங்கள் தினைபுட்டு கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினை அதிரசம் எப்பவோ செய்தது அக்கா. அதுவும் உறவினரிடம் கற்றுக் கொண்டு செய்தது. செய்ய வேண்டும் ஆசை உண்டு ஆனால் இப்ப சாப்பிட முடியாதே.

      நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  10. படத்துடன் நல்லா செம்முறை சொல்லியிருக்கீங்க. இந்த மெனெக்கெடலுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. எனக்கு புட்டு கடலைக்கறி பிஸினெஸ் பிடிக்காது. மனைவிக்கு பஹ்ரைனில் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இது என்ன உணவுன்னு தோணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பும் சொல்லிருக்கீங்க இது!!!!

      கீதா

      நீக்கு
  12. புட்டுன்னா இனிப்புப் புட்டுதான். எனக்கு ரொம்பப் பிடிக்கும்

    அதுல தினை பனை வெரைட்டி ஓகே.

    பண்ணுன செய்முறையைப் பத்தி கமென்ட் கொடுக்கச்சொன்னா புது ஜட்டத்தைப் பத்தி எழுதுனதுனால கோச்சுக்காதீங்க.

    புட்டுக்கு நேந்திரம்பழமா? அட ஆண்டவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியுமே நீங்க இனிப்பு பக்கம் என்று.

      பண்ணுன செய்முறையைப் பத்தி கமென்ட் கொடுக்கச்சொன்னா புது ஜட்டத்தைப் பத்தி எழுதுனதுனால கோச்சுக்காதீங்க.//

      ஹாஹாஹா கோசுக்க மாட்டேனே!!!

      புட்டுக்கு நேந்திரம்பழமா? அட ஆண்டவா//

      உங்களுக்குத் தெரியலை!!!! எதுக்கு பாவம் அவரையும் சேர்த்துக்கறீங்க....ஹாஹாஹா ஆனா ஆண்டவனுக்குத் தெரியும் அது நல்லாருக்கும்னு!!!!!

      கீதா

      நீக்கு
  13. எப்படி எப்படி செய்யறதுன்னு புட்டுப் புட்டு வைச்சுருக்கீங்கன்னாலும் எனக்கு புட்டு பிடிக்காது.  ஹிஹி...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன! ஸ்ரீராம். ஒவ்வொருவர் சுவையும் மாறுபடும்தானே! பதிவு பாத்திட்டீங்களே....அது போதும்.

      கீதா

      நீக்கு
  14. தினைப் புட்டு படங்களும் செய்முறையும் அருமை.சிறுதானிய உணவுகள் நலனுக்கு உகந்தவை.

    இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஏனும் புட்டு, இடியப்பம் எமது உணவில் இருக்கும். அரிசி, கோதுமை, ஆட்டா, மைதா, ஒடியல், சிறுதானியங்களில் புட்டு செய்வோம்.

    நீங்கள் கூறியதுபோல சிறு தானியங்களில் செய்யலாம். குரக்கன் புட்டாக இருந்தால் இறக்கிய உடன் சுடச்சுட சாப்பிட வேண்டும் சற்று நேரமானால் இறுக்கமாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரக்கன் புட்டாக இருந்தால் இறக்கிய உடன் சுடச்சுட சாப்பிட வேண்டும் சற்று நேரமானால் இறுக்கமாகிவிடும்.//

      ஆமாம் மாதேவி.

      அங்கு நீங்கள் புட்டு இடியாப்பம், ஒடியல் எல்லாம் செய்வதுண்டு அங்குதானே நம் வீட்டில் பெரியவங்க கற்றுக் கொண்டு அப்படியே எனக்கும் வந்தது.

      அப்புறம் எங்கள் ஊரும் கிட்டத்தட்ட இலங்கை உணவை ஒத்ததுதானே

      மிக்க நன்றி மாதேவி.

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நேற்று என்னால் வர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும். திணை மாவில் புட்டு செய்முறையையும், அழகான படங்களுடன் அருமையாக விளக்கியுள்ளீர்கள். பார்த்துப் படித்து ரசித்தேன். இந்த குழல் புட்டுக்கருவி என்னிடம் இல்லை. ஆக இதை நாங்கள் இதுவரை சாப்பிட்டதில்லை. ஒரு வேளை கணவர், குழந்தைகள் வெளியில் சென்ற போது சாப்பிட்டு ருசி பார்த்திருக்கிறார்களா என்பதும் தெரியாது. சாதரணமாக ஒவ்வொரு நவராத்திரி சமயங்களில் இனிப்பு அரிசிமாவு புட்டு உதிரியாக செய்வேன். அது கூட இப்போது செய்வதில்லை.

    உங்கள் பதிவை படித்ததும் ஒரு தடவை இந்த குழல் புட்டை சாப்பிடும் எண்ணம் வந்தது. வீட்டில் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!