17.8.26

"திங்க"க்கிழமை  :தேங்காய் பச்சை மிளகாய் சிதைத்து போட்ட புடலங்காய் கறி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

 

  தேங்காய் பச்சை மிளகாய் சிதைத்து போட்ட புடலங்காய் கறி

தேவையான பொருள்கள்:


நீளமான புடலங்காய்  - 4

கடலைப் பருப்பு  - குழிக் கரண்டியால் ஒரு கரண்டி

பச்சை மிளகாய்  -  3


தேங்காய் துருவல்   -  4 தேக்கரண்டி


உப்பு  -  2 டீ ஸ்பூன்

தாளிக்க:

சமையல் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல்மிளகாய்(optional)

செய்முறை:

கறி செய்யத் தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே கடலைப் பருப்பை கழுவி, தண்ணீரில் ஊற வைக்கவும்.


புடலங்காயின் நடுவில் இருக்கும் விதைப் பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நுறுக்கிக் கொள்ளவும்.



ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, முதலில் கடலைப் பருப்பை போட்டு அதை கிள்ளு பதத்திற்கு வேக விடவும். பிறகு புடலங்காயை போட்டு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு ஒரு தட்டை போட்டு மூடி விடவும்.

காய் வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இவைகளை மிக்சியில் போட்டு அரைத்து அதை வெந்த புடலங்காயோடு சேர்த்து விடவும்.  

வித்தியாசமான இந்த புடலங்காய் கறியை ஒரு முறை சுவைத்துப் பாருங்கள், பிறகு அடிக்கடி செய்வீர்கள்.

பி.கு: கிள்ளு பதம் என்றால் அரை வேக்காடு எனலாம். கடலைப் பருப்பு பார்க்க கடினமாக இருந்தாலும், கையால் நசுக்கினால் நசுங்க வேண்டும். குழைந்து விடக் கூடாது. 

===========================================================================================

வாட்ஸாப்பில் வந்தது..  மனம் கவர்ந்தது...


80 வயது தாத்தாவிடம் பேரன் கேட்டான்.

"தாத்தா... ஒரே பாட்டியை 60 வருடங்களாக எப்படி காதலிக்க முடிந்தது?"

பேரன் எதிர்பார்த்த பதில்...

"புரிதல் வேண்டும்..." "மனம் விட்டு பேச வேண்டும்..." "விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்..."

ஆனால் தாத்தா சிரித்தபடி பாட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னார்...

"நான் ஒரே பெண்ணை 60 வருடங்கள் காதலித்தேன் என்று யார் சொன்னது?"
பேரன் குழம்பிப் போனான்.

தாத்தா தொடர்ந்தார்...

20 வயதில் அவளின் அழகையும், துறுதுறுப்பையும் காதலித்தேன். அது என் முதல் காதல்.

30 வயதில் அவள் ஒரு தாயாக மாறிவிட்டாள். இரவு தூங்காமல் குழந்தையை தாலாட்டும் அவளை காதலித்தேன். அது என் இரண்டாம் காதல்.

40 வயதில் குடும்பத்தின் சுமைகளை சிரித்தபடி சுமக்கும் துணிச்சலான பெண்ணை காதலித்தேன். அது என் மூன்றாம் காதல்.

50 வயதில் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன் ஆசைகளை மறந்துவிட்ட அவளை காதலித்தேன். அது என் நான்காம் காதல்.

60 வயதில் முகத்தில் சுருக்கங்கள் வந்திருந்தாலும், என் மனக்கவலைகளை ஒரு பார்வையில் புரிந்துகொள்ளும் தோழியை காதலித்தேன். அது என் ஐந்தாம் காதல்.

70 வயதில் மருந்து சாப்பிட்டாயா என்று தினமும் கேட்கும் அக்கறையை காதலித்தேன். அது என் ஆறாம் காதல்.

80 வயதில் என்னுடன் மெதுவாக நடந்து, பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் சொல்லி சிரிக்கும் என் உயிர்த்துணையை காதலிக்கிறேன். அது என் ஏழாம் காதல்.

பேரன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

தாத்தா இறுதியாக சொன்னார்...

"திருமணம் என்பது ஒரே மனிதருடன் வாழ்வது அல்ல...  காலம் காலமாக மாறிக்கொண்டே இருக்கும் அதே மனிதரின் புதிய புதிய வடிவங்களை மீண்டும் மீண்டும் காதலிக்கக் கற்றுக்கொள்வதுதான் திருமணம்."

அழகு மாறும். வயது மாறும். உடலும் மாறும். சூழ்நிலையும் மாறும்.
ஆனால்...

• ஒவ்வொரு மாற்றத்திலும், "இவள் இன்னும் என் காதலிதான்" என்று சொல்ல முடிந்தால்...

அதுதான் 60 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்.

• காதல் என்பது ஒருமுறை விழுவது அல்ல... வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும், அதே மனிதரிடம் மீண்டும் மீண்டும் விழுவதுதான் உண்மையான காதல்

9 கருத்துகள்:

  1. அதே மனிதரின் புதிய வடிவை மீண்டும் மீண்டும் காதலிப்பது..... நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. தேங்காய் போட்டு கறி செய்யும்போது அரைத்து விட்டதில்லை. செய்துபார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  3. ​திப்பிசம்?
    பச்சைமிளகாய் அரைத்து சேர்ப்பது கடைசியில். அப்படி என்றால் மிளகாய் பச்சை வாசனை போகாதே. அதுவும் ஒரு திப்பிசம் என்கிறீர்களா?
    கேரளத்தில் கடலைப் பருப்புக்கு பதில் பாசிப்பயறு வேகவைத்து சேர்த்து சின்ன வெங்காயம் கொஞ்சம் சேர்த்து செய்வோம். பச்சை வாசனை போகும் வரை கறி வதக்கப்படும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திப்பிசம் இல்லை செய்யும் முறையே இப்படித்தான். //பச்சைமிளகாய் அரைத்து சேர்ப்பது கடைசியில். அப்படி என்றால் மிளகாய் பச்சை வாசனை போகாதே// பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டுமோ? அடுப்பில் வைக்கவும் என்றால் அடுப்பை மூட்ட வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை என்பது போல நினைத்து விட்டேன்..

      நீக்கு
  4. காதலாவது கத்தரிக்காய் ஆவது. ஆசை 60 நாள், மோகம் 30 நாள் ஆன பின் ஆண்டாள் அடிமை தான். காதலி பாஸ் ஆகிவிடுவார், சொல்வதை செய்வதே வாழ்க்கைக் கடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காதலாவது கத்தரிக்காய் ஆவது. ஆசை 60 நாள், மோகம் 30 நாள் ஆன பின் ஆண்டாள் அடிமை தான்// இப்படியெல்லாம் சொல்லப்படாது சார். காலம் இருக்கிற இருப்பில் பசங்க,பொண்ணுங்க கல்யாணமே வேண்டாங்கறாங்க, இப்படி ஏதாவது சொன்னால்தானே கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க.. :))

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. பானு புடலங்காய் கறி நன்றாக இருக்கிறது.
    நாங்களும் செய்வோம். தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் அல்லது மிளகாய் வற்றல் வைத்து அரைப்போம்.
    படங்களுடன் செய்முறை அருமை.

    பதிலளிநீக்கு
  7. வாட்ஸாப்பில் வந்தது.. மனம் கவர்ந்தது...//

    எனக்கும் வந்தது. நன்றாக இருக்கிறது.

    வயது ஆக ஆக பாசம், அன்பு அதிகமாகும்.
    முதுமை காலத்தில் தான் தோழமை உணர்வு அதிகமாக இருக்கும்.
    (முதுமை காலத்தில் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிவது கொடுமை.)

    "முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூட வரும்" பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!