திதிப்பு தோசை (இனிப்பு தோசை) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திதிப்பு தோசை (இனிப்பு தோசை) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.1.17

"திங்க"க் கிழமை 170102 – திதிப்பு தோசை (இனிப்பு தோசை) - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


“உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா” டோன்ல கேட்டுக்குங்க. ‘உங்களுக்கு இனிப்பு சாப்பிடணும்னு ஆசையா?’. ‘பிரஷர் ஏறக்கூடாதா?’. ‘இனிப்பு எண்ணெயில பொரித்திருக்கக்கூடாதா?”- உங்களுக்கு நான் சிபாரிசு செய்வது இனிப்பு தோசை. இது இல்லைனா மத்த சாய்ஸ் இனிப்புக் குழக்கட்டை (பிள்ளையார் குழக்கட்டை இல்லை. அதுல தேங்காய் உண்டு) அல்லது திருவாதிரைக்களி. பாயசம்லாம் இந்த கேட்டகரில வராது. இன்னைக்கு ரொம்ப சுலபமான வாழைப்பழ இனிப்பு தோசை எப்படிச் செய்வதுன்னு சொல்றேன்.




படம் நிறைய இருந்தாலும், செய்முறை சுலபம். தேவையானவை.. 2 கப் அளவு கோதுமைமாவு, 3 ஸ்பூன் மைதா மாவு, 4 ஸ்பூன் ரவை, 2 வாழைப்பழம் (கொஞ்சம் கனிந்திருந்தால் பரவாயில்லை), 1 ½ கப் வெல்லம், ½ ஸ்பூன் ஏலக்காய் பொடி.  கோதுமை மாவுக்குப் பதிலா மைதா மாவுலயும் செய்யலாம். மைதா வேண்டாம்னு நினைச்சா கோதுமைமாவுல மட்டுமே செய்யலாம்.




வெல்லத்தை, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைங்க. அப்புறம் கசடை வடிகட்டிமூலம் நீக்கி, வெல்லத் தண்ணீரை மாத்திரம் பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. கொஞ்சம் ஆறட்டும்.




வாழைப்பழத்தின் தோலை எடுத்துவிட்டு, மிக்சியில் போட்டு கூழாக்கிக்கோங்க. 




கோதுமைமாவு, மைதா, ரவையை ஒரு பாத்திரத்தில் நல்ல கலந்துக்குங்க. அதுல வாழைப்பழக் கூழையும் ஏலப்பொடியையும் சேர்த்துக்குங்க. அதோட கொஞ்சம் கொஞ்சமா வெல்லத் தண்ணீரை விட்டு, நல்லா கையால கலந்துக்குங்க. தேவைனா கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக்கலாம். தோசைமாவு பதத்துக்கு வரணும். தேவைனா, ஒரு அரை மணி’நேரம் இந்த மாவை அப்படியே விட்டுடலாம்.




அப்புறம், சின்னச் சின்ன தோசையா வார்த்துடவேண்டியதுதான். நான் ‘நான்-ஸ்டிக்’ தோசைக்கல்லில் வார்த்தேன். அதுனால, தோசைவார்ப்பது சுலபமா இருந்தது. சாதாரண தோசைக்கல்லில் ஏகப்பட்ட preparatory வேலைகள் செய்து, தேவைக்குக் கொஞ்சம் அதிகமாவே எண்ணெய் விட்டால்தான் தோசை வெளியே வரும். ‘நான்-ஸ்டிக்’ல் இந்தத் தொல்லை இல்லை.




கடைசிப் படம் எடுக்கும்போது எனக்கு ‘அரியலூர் அடுக்குதோசை’தான் ஞாபகம் வந்தது (ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதியது). பிளாக் படிக்கும் பெரும்பாலானோர் அதனைப் படித்திருப்பார்கள்.  ஆனா, நான் போட்டுள்ள படம், ‘எங்க ஊர் எடுப்பு தோசை’. 




இந்த தோசை மறுநாள் ஆனாலும் நல்லா இருக்கும். (ஈரமோ, தண்ணியோ படாத வரை. இல்லாட்டா குளிர்சாதனப் பெட்டியில் வைத்துடலாம்). என் ஹஸ்பண்ட் இதைப் பண்ணும்போதெல்லாம், மைதா மாவு போட்டு உப்பு தோசையோ அல்லது நான் ரொம்பக் கேட்டேன்னா, வெங்காயம் போட்டு ரவா தோசையோ செய்வார்கள். அதான் காம்பினேஷன். ஆனா இன்னிக்கு நான் திதிப்பு தோசை மட்டும்தான் பண்ணினேன். (வெங்காய ரவா தோசை…அதுவும் நான் பண்ணினதுதான். ஆனால் பழைய படம்)



(கடைசிப்படம்....  அந்த தோசை அடுக்கு!  ரொம்பவே கவர்கிறது நெல்லைத்தமிழன்..  ஸ்ஸ்ஸ்ஸ்....  ஆ!)