Dodly லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dodly லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.1.14

திங்க கிழமை 140120 :: தோட்லி!

தேவையான பொருட்கள்: 

வெண் புழுங்கல் அரிசி : மூன்று கப்.
முழு வெள்ளை உளுந்து : ஒரு கப். 
வெந்தயம் : இரண்டு தேநீர்க்கரண்டி அளவு.
தேவைக்கேற்ப பொடி உப்பு. 
மைக்ரோ வேவ் ஓவன் (சிலர் அவன் என்று சொல்வார்கள்) 
பவர் சப்ளை: தேவையான அளவு, தேவையான நேரத்தில்! 
ஹார்லிக்ஸ் வாங்கிய பொழுது இலவசமாகக் கிடைத்த கண்ணாடி பவுல்.     


முதல் நாள் மதியம் பன்னிரண்டு மணிக்கு, ஒரு கப் உளுந்து, மூன்று கப் வெண் புழுங்கல் அரிசி ஆகியவைகளை நல்ல தண்ணீரில் ஊறவைக்கவும். அரிசி ஊறும்பொழுது, அதனுடன் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் போட்டு அதையும் சேர்த்து ஊறவைக்கலாம். 

மாலை நான்கு மணிக்கு, ஊறிய உளுந்தை மிக்சியிலோ / வெட் கிரைண்டரிலோ நைசாக அரைக்கவும். 

ஊறிய அரிசி & வெந்தயத்தையும் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

இரண்டு மாவையும் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

உப்பு சேர்த்த மாவை மீண்டும் கலக்கி, ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி விடவேண்டும். 

மறுநாள் காலையில் தான் நாம் செய்ய வேண்டிய தோட்லி. 

கண்ணாடி பவுலில் பாதி அளவுக்கு மாவை ஊற்றவும். எச்சரிக்கை: முக்கால் அளவு / முழு அளவு எல்லாம் மாவு ஊற்றாதீர்கள். வெப்பத்தினால் பொருட்கள் விரிவடையும் என்கிற அறிவியல் விதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணாடி பவுல் கெட்டியான, காற்றுக் குமிழிகள் இல்லாத கண்ணாடியாக இருக்கவேண்டும். 
    

மாவு ஊற்றப்பட்ட கண்ணாடி பவுலை, மைக்ரோ வேவ் சுழல் கண்ணாடித் தட்டின்   மேலே வைத்து, ஓவனை மூடி, பிறகு 'ஆன்' செய்யவும். 
     

ஒன்றரை நிமிட நேரம் செட்டிங் போதும். 

மாவுக் கிண்ணம் சுழலும் பொழுதே, கண்ணாடிக் கதவின் மூலமாகப் பார்த்தால், மாவு உப்பி வருவதும், மேற்புறத்தில் சிறிய காற்றுக் கொப்புளங்கள் வருவதும் தெரியும். 
     

ஒன்றரை நிமிட நேரம் போதவில்லை என்றால், மேலும் அரை நிமிடம் ஓவனை ஓட்டவும். 

அவ்வளவுதான்! தோட்லி தயார்! 

தோசை சைசில் ஊற்றி, எண்ணை இல்லாமல் / ஆவி இல்லாமல் இட்லி வார்ப்பது போல் செய்யப் படுகின்ற இந்த சிற்றுண்டிக்கு தோட்லி என்று பெயர் கொடுத்துள்ளேன். 

தோட்லியை, சற்று ஆறியவுடன், கிண்ணத்திலிருந்து அப்படியே ஸ்பூனால் எடுத்து சாப்பிடலாம்.