7.5.10

பிடித்த பாடகர்கள் - தொடர் பதிவு

அநன்யா மகாதேவன் அவர்களின் எண்ண அலைகளில் இருந்து இந்த மைக்கை எங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறோம். நன்றி அநன்யா.

பிடித்த பாடகர்கள் என்பது பிடித்த பாடல்களைப் பொறுத்து அமைகிறது. பிடித்த பாடல்கள் என்பது அந்தப் பாடலின் வரிகளைப் பொறுத்தோ, டியூனைப் பொறுத்தோ அமைகிறது. பிடித்த பாடகர் என்பதால் அவர்கள் பாடிய எல்லாப் பாடல்களையும் கண்ணை மூடிக் கொண்டு ரசித்து விட முடிவதில்லை. எல்லாப் பாடகர் பாடிய பாடல்களிலும் பிடித்த பாடல்கள் நிறைய இருக்கும். 


அப்பாதுரையைக் கேட்டால் MSV அவர்களையும், சாய்ராமைக் கேட்டால் TMS போல பாடகர் உண்டா என்றும் சொல்வார்கள்...! 

தமிழ் உதயம்  ரமேஷ் தெரிவு செய்யும் பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களாகவே இருக்கும். அவர் தன் ப்ளாக்கின் சைட் பாரில் பிடித்த பாடல் லிஸ்ட் சொல்ல ஒரு நிரந்தர இடமே ஒதுக்கி விட்டார். ஐந்து பாடகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கும் இந்தத் தொடர் பதிவு அழைப்பை விடுத்திருக்கும் அநன்யா மஹாதேவன் அழைப்பை ஏற்றுக் கொள்ளும்போது தமிழ் உதயம் பாடல்களையும் நம் கணக்கில் (!) சேர்த்து விடலாமே..



விஷயத்துக்கு வருவோம்..கடல் கணக்கில் உள்ள பிடித்தவைகளிலிருந்து ஐந்து மட்டுமா...மனசே வரலை. எனக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரொம்பப் பிடிக்கும், யேசுதாஸ் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் திரை இசையில் தன் குரலால் என்னைக் கவர்ந்தவர், மயக்கியவர், இப்போதும் உருக வைப்பவர் ஹிந்தித் திரையுலப் பாடகர் கிஷோர் குமார். அவர் அறுபது அல்லது அறுபத்தைந்துகளுக்குப் பின் பாடிய பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள் என்றாலும் ஹிந்தியின் கிரேட் R.D.பர்மன் இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மனதை விட்டு அகலாதவை. லாக்கோ மே ஏக் 'சந்தாவோ சந்தா', புத்தா மில் கயா 'ராத்துக் கலி', ஜோஷீலா 'கிஸகா ரஸ்தா தேகே..' கட்டி பதங் பாடல்கள், எதைச் சொல்ல, எதை விட....SD பர்மன் இசையில் பிரேம் பூஜாரி 'ஃபூலோன்கே ரங்ஸே...' ஷர்மிலீயில் 'கில்தே ஹை குல் யஹான்...', லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் 'தாக்'கின் 'மேரே தில் மே ஆஜ் கியா ஹை', பியா கா கர் 'யே ஜீவன் ஹை..' தோஸ்த் 'காடி புலாரி ஹை..' கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் ப்ளாக் மெயில் பாடல்..."மேலும் அஜ்நபி, அபிமான், ஆந்தி, அந்தாஸ், அனாமிகா, அமர்ப்ரேம் பாடல்கள்... நிறைய இருக்குங்க...

 Mere Dil Mein Aaj Kya Hai .mp3
Found at bee mp3 search engine
அடுத்து பி. ஜெயச்சந்திரன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் பாடல்கள் நிறைய நல்ல பாடல்கள் இருந்தாலும் எல்லா பாடல்களையும் மிக நல்ல பாடல்கள் என்று சொல்ல முடியாது. TMS பாடல்களும் அப்படியே...(ஸாரி சாய்ராம்..!) ஏன், இது எல்லாப் பாடகர்களுக்குமே பொருந்தும். ஆனால் ஜெயச்சந்திரன் பாடிய தொண்ணூறு சதவிகிதப் பாடல்கள் மெலடி வகையைச் சேர்ந்தது..இளையராஜா இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள்..வைதேகி காத்திருந்தாள் படத்தில் காத்திருந்து காத்திருந்து, ராஜாத்தி உன்னை, (இந்தப் படம் வெளியானபோது மதுரை சினிப்ரியா தியேட்டரில் ஒன்ஸ் மோர் கேட்டு மறுபடி போட்டார்கள்) இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, காற்றினிலே வரும் கீதம் படத்தில் ஒரு வானவில் போலே, சித்திரச் செவ்வானம், கிழக்கே போகும் ரயில் படத்தின் மாஞ்சோலைக் கிளிதானோ...



பட்டியலில் அடுத்து நினைவுக்கு வருகின்ற பிரபலப் பாடகர், பி பி ஸ்ரீனிவாஸ். பல பாடல்கள் உள்ளன. இவருடைய ஹிட் ரேட்டும் அதிகம். (இதையும் அப்பாதுரை ஒத்துக் கொள்ள மாட்டார்..!)
உடனே நினைவுக்கு வருகின்ற பாடல்கள்,
பூ வரையும் பூங்கொடியே, ரோஜா மலரே ராஜகுமாரி, பார்த்தேன் சிரித்தேன் பக்கம்வர துடித்தேன் - அன்று உனைத் தேன் என நான், நிலவே என்னிடம் நெருங்காதே. ... நிலவுக்கு என்மேல், இளமை கொலுவிருக்கும், சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?, மையேந்தும் விழியாட, துள்ளித் திரிந்த பெண்ணொன்று, ஏதோ மனிதன் பிறந்து விட்டான், காலங்களில் அவள் வசந்தம்.....



டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா -
இவர் பெயரைச் சொன்ன உடனேயே ஒரு நாள் போதுமா, தங்க ரதம வந்தது, சின்னக் கண்ணன் அழைக்கிறான், (குருவிக்காரன் பொஞ்சாதியை மறந்து விடுங்கள்! அது ஒரு திருஷ்டிப் பொட்டு) எல்லாமே ஞாபகம் வருகிறது. திரை இசையை விடுங்கள்..அவர் பாடிய எண்ணிலடங்காத கர்னாடக சங்கீதப் பாடல்கள்...தியாகராஜர் கீர்த்தனைகள், சம்பிரதாயக் கீர்த்தனைகள், சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள், அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள், அஷ்டபதி, இன்னும்..இன்னும்..அவற்றை கேட்க ஒரு நாள் போதுமா?



ஹரிஹரன்...
இவர் தொன்னூறுகளில் தமிழில் அறிமுகமாகி புகழ் பெற்றிருந்தாலும் எண்பதுகளுக்கு முன்பிலிருந்தே ஹிந்தியில் கஜல் முதலான தனிப் பாடல்கள் முதல் சினிமாப் பாடல்கள் வரை பாடியிருப்பவர். நீ காற்று.. நான் மரம், முதல் முதலில் பார்த்தேன், நிலா காய்கிறது, உயிரே உயிரே, (இந்தத் தலைப்பில் இரண்டு பாடல்கள் உண்டு..இரண்டுமே ஹிட்..ஒன்று பம்பாய் படப் பாடல், இன்னொன்று சல்தே சல்தே என்ற லதாஜியின் ஹிந்திப் பாடல் மெட்டில் அமைந்த பாடல்...) சீனு என்ற படத்தில் வரும் கேசவா என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களோ... இவருடைய கலோனியல் கசின்ஸ் ஆல்பம் ரொம்பப் பிரபலம். கஜல்கள் அதை விட...



எங்கள் ஐந்து பாடகர்கள் பட்டியல் இது: (இங்கே உள்ள வரிசை & எழுதப்பட்டுள்ள வரிசை தர வரிசை அல்ல. அவர்கள் எல்லோருமே சமமாக எங்களுக்குப் பிடித்தவர்கள்.)


# கிஷோர குமார்,


# ஜெயச்சந்திரன்   


# பி பி ஸ்ரீனிவாஸ்   


# எம் பாலமுரளிகிருஷ்ணா    


# ஹரிஹரன்.  
 'எல்லாமே நாம் ஏற்கெனவே கேட்ட, கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்கள்தானே...இங்கு கொடுத்துதான் கேட்க வைக்க வேண்டுமா?' என்று தோன்றியதால் அதிகமாக இங்கே பாடல்கள் இணைக்கவில்லை ...சரிதானே?

இந்த மைக்கை இங்கே மேடையில் அப்படியே விட்டுச் செல்கிறோம். எங்களுக்கு நன்றி சொல்லி மைக்கைக் கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும், அவர்களின் சுவையான பதிவுக்கும் எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகள்.  

6.5.10

எங்களுக்கு வந்த யானைகள்

படைப்பாற்றல் பயிற்சி இரண்டு பகுதிக்கு வந்த எல்லா யானைகளையும் ஏன் ஒரு பதிவாக வெளியிடவில்லை என்று எல்லோரும் அலை, தொலை, வலை மூலமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ராமலக்ஷ்மி மேடம் சொன்னது மாதிரி பாட்டுப் பாடி விட்டு சென்ற ஜெகநாதன் எப்போது யானையை அனுப்புவார் என்று வலை மீது கண் வைத்துக் காத்திருந்தோம். யானை வரும் பின்னே, காலடி ஓசை வரும் முன்னே என்று பார்த்தால் எங்களுக்குக் காதும் கேட்கவில்லை, கண்ணும் பூத்துப் போய்விட்டது. 

ஒரு நண்பர் எவ்வளவு முறை முயன்றாலும், யானை வரவில்லை, மிக்கி மவுஸ்தான் வருகிறது என்று எழுதியிருந்தார். அதையாவது அனுப்பி வையுங்கள் என்று கேட்டால் அவர், 'நீங்க அடுத்த பயிற்சியாக மிக்கி மவுஸ் படம் போடக் கற்றுக் கொடுங்கள் அப்போ நான் வரைந்த எலி ஃபண்ட்  படத்தை அனுப்புகிறேன்' என்கிறார். 

சரி இனிமே வெயிட் பண்ண வேண்டாம் என்று இதோ வந்த படங்களை வெளியிட்டுவிட்டோம்.


வரைந்த யானைகள் இப்படி இருக்கும்பொழுது, திருக்கடையூர் யானையை எங்களுக்கு அனுப்பி வைத்து உண்மையில் யானை எப்படி இருக்கும் என்று உணர்த்தியிருக்கிறார் ஸ்ரீமாதவன். இங்கே பாருங்க:








4.5.10

அண்ணனோட அற்புதப் படைப்பு !

அது நான் ஐந்தாம் வகுப்பு (நாகப்பட்டினம் தேர்முட்டி ஸ்கூலில்) படித்துக்கொண்டிருந்த பொற்காலம். வீட்டிலே மின்சார உபகரணம் என்று பார்த்தால் மாலையில் ஆறு மணிக்கு போடப்பட்டு, இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு அணைக்கப்படும் பல்புகளும், அதற்குப்பின் போடப்படும் டிரான்ஸ்பார்மர் - சிறிய விளக்கும் மட்டும்தான். இந்த டிரான்ஸ்பார்மர் விளக்கும் கூட அண்ணனால் அசம்பிள் செய்யப்பட்டதுதான். சுற்றுப்புற வீடுகளில் உள்ள மக்களால், இது கூட ஒரு அதிசயமாகத்தான் பார்க்கப்பட்டது அந்த நாட்களில். 

நான் எழுத எடுத்துக்கொண்ட விஷயம் என்ன என்றால் (இது இன்னொரு அண்ணனின் மாணவர் மன்ற பேச்சுக்களின் ஆரம்ப வரிகள்.) ரேடியோ.

ரேடியோ என்றால் உங்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஒரு கன செவ்வகப் பெட்டி, அதைச் சுற்றி அமர்ந்து கேட்கின்ற சிலர் இது போலவா? அல்லது பார்க்குகளில் (எங்க நாகை கொடிமர மேடைப் பூங்காவில் - ஆங்கிலத்தில் Flagstaff park ரேடியோ சிலோன் கேட்பதற்காகவே அப்போ எக்கச் சக்கக் கூட்டம் சேரும்) அலறுகின்ற பெரும் புனல் வடிவ ஒலி பெருக்கிகள் இதெல்லாமதானே?


இப்படி எல்லாம் நினைப்பவர்கள் - அப்போ எங்க வீட்டுக்கு வந்திருந்தா நிச்சயம் ஏமாந்து போயிருப்பீங்க.. அண்ணன் செய்த ரேடியோவுல இவைகள் எதுவுமே இருக்காது. அவரு அந்திக்கடையில ஓரணா இரண்டணா அதிக பட்சம் நாலணா கொடுத்து வாங்கிய சில பொருட்களை வைத்து அந்த ரேடியோவை அமைத்திருந்தார். அந்தப் பொருட்கள் எல்லாம் அவருடைய பாலிடெக்னிக் பாடப் புத்தகங்கள் வைக்கப்படும் ஒரு மர செல்ஃபில் அமைதியாக அமர்ந்திருக்கும். அம்மா புடவை உலர்த்த உபயோகிக்கும் கம்பியில் / கயிற்றில் தொங்குகிற மூங்கில் கம்பை சற்று உற்றுக் கவனித்தால் - அதில் ஏதோ ஒரு தாமிரக் கம்பி சுற்றப் பட்டுள்ளது என்று தெரியும். அந்தக் கம்பியை அண்ணன் ஆண்டன்னா என்றார். நாங்க எப்பவுமே அண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டோம். பேசினால் அண்ணனின் கண்டுபிடிப்புகளை பார்க்கக்கூட விடமாட்டார். 

கொஞ்சம் விபரம் தெரியவந்த வயதில்தான் ஆண்டன்னா என்றால் வெகுஜனங்கள் பாஷையில் ஏரியல் (இல்லே இல்லே - சலவைத்தூள் இல்லே. சர்ஃப் தவிர வேறு எதுவும் அப்போ யாருக்கும் தெரியாது.). என்று தெரிந்துகொண்டோம். இந்த ரேடியோவைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லோரும் என்னை எக்ஸ்பிளாயிட் பண்ணி வேலை வாங்கிக் கொண்டார்கள். நீ கடைக்குப் போயிட்டு வந்தால்தான் ரேடியோ கேட்கலாம், மெஷினுக்குப் போயி மாவு அரைத்து வந்தால்தான் ரேடியோ இத்யாதி, இத்யாதி.

மாலை நாலு மணி சுமாருக்கு வீட்டில் உள்ள எல்லோரும் தரையில் வட்ட வடிவமாக அமருவோம். ஒரு சிறிய பித்தளைத் தம்ளர் வடிவத்தில் இருக்கின்ற கனமான ஒரு பாத்திரத்தை மாறி மாறி ஒவ்வொருவரும் காதில் வைத்துக் கொண்டு சற்று நேரம் உற்றுக் கேட்போம். கேட்கின்ற ஒவ்வொருவர் முகத்திலும் அப்போ வந்த ஆனந்தத்தைப் பார்க்கணுமே!

என் காதில் வைத்துக் கொண்ட பொழுது கேட்டவை இவை:

வாராயோ this is தோழி the வாராயோ voice of மணப்பந்தல் america காண வாராயோ 

மலர்களைப்போல் …--- டன் ட டன்-- தங்கை --- ட ட ட டன் – --உறங்குகிறாள் --- டா ட டா ட டன்---

சில சமயங்களில் மலேசிய வானொலி என்று கூட இரண்டு வரிகள் கேட்ட ஞாபகம். 

இது இலங்கை வானொலி வர்த்தக ஒலி பரப்பு என்பது மட்டும் அடிக்கடி ஸ்பஷ்டமாகக் காதில் கேட்கும். ஆனால், பாட்டு ஆரம்பிக்கும் பொழுது அத்தனை வேற்று மொழி வில்லன்களும் படை எடுத்து வந்து ஹோ - டிரியோ என்று கலக்குவார்கள். மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்று ஜமுனா ராணியைப் பாட விடாமல் அல்லது நம்மைக் கேட்கவிடாமல் ஒருத்தி மூக்காலேயே சைனா பாஷை பேசி இம்சிப்பாள்.

முதன் முதலில் இந்த ரேடியோவை காதில் வைத்துக் கேட்ட அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னமும் அப்படியே ஞாபகம் உள்ளது. 'இந்தக் கட்டையில போறவன் ஒருத்தன் அடிக்கடி வந்து திஸ் - ஈஸ் வாத்து அமரிக்கா என்று அடிக்கடி நடுவுல பேசாம இருந்தா எவ்வளவோ நல்லா இருக்கும்.'   

3.5.10

கொலைகாரப் பாவிகள்!



” எனக்கு என்னமோ காபியில் விஷம் தான் ஈஸியாகப் படுகிறது ” என்றாள் லதா. 

“ உன் வழக்கம் போல பட்ஜெட் கம்மினு சொல்லாதே! விஷம் ஆனாலும் அடிச்சுக் கொல்றதானாலும் ஒண்ணுதான் “ இது மாதவன்.

“ என்னதான் சொல்லு, கண்ணு மண்ணு தெரியாம கட்டையால அடிச்சு சாகடிக்கறது தான் எனக்குப் பிடிக்கும்.  சேர்த்து வைத்த கோபம் எல்லாம் தீர்ந்த மாதிரியும் இருக்கும்.  அதில ஒரு திருப்தி “ ராகவன் ஒரு சிகரட்டை பற்றவைத்துக் கொண்டான்.

“ என்ன செய்வீங்களோ என்னவோ எனக்குத் தெரியாது, காமாட்சியம்மாள் சாகணும்.  அதுவும் நல்லா அடிபட்டுச் சாகணும். வழக்கம் போல ரிவால்வர் எடுத்து மூணு குண்டு சுட்டாலும் சரி! “ இது பாலு.  அவர்தான் தலைவர்.  எனவே அவர் சொன்னபடியே சுட்டுக் கொல்ல முடிவு செய்யப் பட்டது.

டிவி சீரியல் ஸ்டோரி டிஸ்கஷன் திருப்திகரமாக முடிந்தது.   

1.5.10

ஜே கே 08 உடனுக்குடனான செயல்பாடு.


உங்கள் மனைவி, மக்கள், நீலவானம், மேகக்கூட்டம் எதனுடனானாலும் நீங்கள் தொடர்புடன் இருக்கும்போது எண்ணம் குறுக்கிடுமானால் தொடர்பு அறுந்து போகிறது.  எண்ணம் என்பது நினைவின் வெளிப்பாடு.   நினைவு என்பது ஒரு பிம்பம். பதிவு செய்யப்பட்ட உருவம். அங்கிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே காண்பவருக்கும் காணப்படுவதற்கும் இடையில் ஒரு பிரிவு உண்டாகிறது. 

இதை நீங்கள் வெகு ஆழமாகப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். காண்பவரை காட்சியினின்றும் தனிமைப் படுத்துவதுதான் ஒருவர் இன்னும் அதிகமாக வேண்டும், அதிக நுகர்ச்சி வேண்டும், என்று இடைவிடாத தேடுதல் ஏங்குவதற்குக் காரணமாக இருக்கிறது.  இப்படியான ‘காண்பவர்’- அதாவது, அனுபவங்களை நாடும் ஒருவர், சரி தவறு என்று தணிக்கை செய்யும் ஒருவர், மதிப்பீடு செய்பவர், நியாயமா அல்லவா என்று சீர்தூக்கிப் பார்ப்பவர், கண்டிப்பவர் இருக்கும் வரை, அந்தந்தக் கணம் என்ன இருக்கிறதோ அதனுடன் உண்மையான தொடர்பு அற்றுப் போகிறது. 

உங்களுக்கு உடலில் வலி உண்மையான வலி உண்டாகும் போது, வலி நேரடியாக உங்களுக்கு இருக்கிறது.  வலி இருக்கிறது என்று கண்டு சொல்லிக் கொள்பவர் இல்லை.  காண்பவர் தனியே இல்லாததால் வலிக்கான நடவடிக்கை நேரடியாகவும் உடனுக்குடனும் இருக்கிறது.  கருத்தும் அதன் பின் செயலும் இல்லை.  நேரடியான செயல் மட்டும் தான் இருக்கிறது. வலி நேரடியாக உடல் அளவில் உணரப் பட்டது.  அதற்கான நடவடிக்கை உடன் தொடர்ந்தது.  நீங்கள்தான் வலி. வலிதான் நீங்கள்.  காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, தெரிந்து கொள்ளாதவரை, புரிந்து கொண்டு ஆழமாக அறியப்படாதவரை, முழுதும் பிடிபடாதவரை, அறிவு பூர்வமாகவோ, தர்க்க ரீதியிலோ இல்லாமல் நேரடியாக உணரப் படாதவரையிலும் வாழ்க்கை ஒரு போராட்டமாக, எதிரெதிர் ஆசைகளினிடையே நடக்கும் முரண்பாடுகளாக, ‘எது வேண்டும்’ ‘எது இருக்கிறது’ இவற்றிடையே மோதலாகத்தான் இருக்கும்.  

ஒரு பூவையோ, ஒரு மேகக் கூட்டத்தையோ, எதையுமோ பார்க்கும்போது ஒரு ‘காண்பவராக’ இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும்.  அப்போது உங்களுக்கு இது சாத்தியமாகும்.