சனி, 13 பிப்ரவரி, 2010

இது கதையா 01

அன்று காலை - அலாரம் சத்தம் வந்த பொழுது திடுக்கிட்டு கண் விழித்தேன். விழித்த அந்த க்ஷணத்தில் அலார சத்தம் நின்றது. அல்லது நின்றது மாதிரி ஒரு பிரமை. அட ஆண்டவா - இது என்ன குழப்பம்? 
மணியைப் பார்த்தேன். காலை மணி நான்கு. அட - அலாரம் வைத்தது காலை ஐந்து மணிக்குத் தானே! 
அப்போதான் - நான் விழித்தெழுவதற்கு முன் கண்ட கனவு கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது. 
ஒளிமயமான ஒரு சோலை. உள்ளே நுழைந்து செல்கிறேன். நடக்கிறேனா பறக்கிறேனா என்றே தெரியாத வேகப் பயணம். வலியே இல்லை. ஆனால் காட்சிகள் வேகமாக நகருகின்றன. அங்கே, ஆத்மா பதிவில் இருப்பதுபோல ஒரு மேடை. அதில் ஓர் உருவம். ஆனால் நிழல் உருவம் இல்லை, ஒளி வடிவம். சந்திர ஒளி போன்ற சூழல் - எல்லாமே சில் என்று இருக்கிறது. 
அந்த உருவம் என்னை நோக்கி 'நில்' என்று சைகை செய்தது.
என் பயணம் மா நகர பஸ்சின் சடன் பிரேக்காக நின்றது. 
'என்ன வேண்டும்?' யாரும் கேட்கவில்லை - ஆனால் அது என்னைப் பார்த்து கேட்ட மாதிரி ஓர் உணர்வு.
'என்ன வேண்டுமா?' என்னய்யா இது - என்னை வேகமாக இங்கே இழுத்துவிட்டு - திடீரென்று இப்படி ஒரு கேள்வி?
திரும்பிப் போக யத்தனிக்கிறேன். முடியவில்லை. கண்கள் அதைவிட்டு விலகவில்லை, காதுகளில் வேறு சப்தம் எதுவும் விழவில்லை. மனம் முழுவதும் வெறுமையாக - வேறு ஏதும் சிந்தனை இல்லாமல் - எனக்கே நான் இப்படி அங்கே ஏதோ ஓர் உருவில் நிற்பது ஆச்சரியமாக இருந்தது.
ஓ! இவர்தான் கடவுளோ?
கேட்க வாயெடுத்தேன்.
தெரிந்த பதில்களுக்கு எதுவும் கேள்விகள் வேண்டாம். அதுதான் ஸ்பஷ்டமாகக் கூறியது.
என் மனம் பதில் தெரியாத கேள்விகளை வேகமாக யோசனை செய்ய ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம் - அந்த சில வினாடிகளில் பதில் தெரியாத கேள்விகள் எதுவுமே எனக்கு சட்டென்று ஞாபகம் வரவில்லை.
சரி - ஏதாவது கேள்வி கேட்டு வைப்போம் என்று, " ஒன்று பலவாகிறதா அன்றி பல ஒன்றாகிறதா" என்று கேட்டேன்.
கேட்டு முடிப்பதற்குள் பதில் வந்தது.
" இரண்டுமே சாத்தியம்தான். சொல்லப்போனால், ஒன்று சாத்தியம் என்றால் மற்றது அதன் முற்றோருமித்த பிரதி பிம்பம் தானே!"  அப்போ புரிஞ்ச மாதிரி இருந்தது. இப்போ புரியல.
அதற்குள் எனக்கு அடுத்த கேள்வி மனதில் உதித்துவிட்டது.
கணமும் தாமதியாது கேட்டுவிட்டேன்.
"கடவுள் உண்டா கிடையாதா?"
கேட்டு முடிப்பதற்குள் பதில். " எது எந்தக் காலத்திலும் சத்தியமாக நிறைந்திருக்கிறதோ  அதை எந்தக் காலத்திலும் யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது" இதுவும் அப்போ புரிஞ்சது - இப்போ?
நான் கேட்ட அடுத்த கேள்விதான் சற்று விசித்திரமானது.
" நான் உங்களை அடுத்தது எப்போ பார்ப்பேன்?"
" நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்."

அந்த உருவம் அப்படியே கரைந்து போயிற்று. மரத்திலிருந்து ஒரு மாதுளம் பழம் மேடை மீதிருந்த தாம்பாளத்தில் விழுந்து, தாம்பாளம் துள்ளித்  தரையில் விழுந்து - புரண்டு செய்த பேரோசையில்தான் நான் விழித்திருக்கிறேன் போலிருக்கிறது!
(தொடரும்)     

15 கருத்துகள்:

  1. இது கதைதான். அதுவும் நல்ல கதை!
    தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  2. பிரபல வாரப் பத்திரிகைகளில் எதாவது தொடர்கதை ஆரம்பித்தால் போதும். அதற்காகவே காத்திருக்கும் சில வாடிக்கைகள் " கதையின் ஆரம்பமே பிரமாதம். மேலும் என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. " என்று ஒரு கார்டு எழுதிப் போட்டு தங்கள் பெயரை அச்சில் பார்த்து மகிழ்வார்கள். இப்போது நான் சொல்ல வருவது என்ன வென்றால்:

    "கதையின் தொடக்கமே மர்மமாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ?"

    பதிலளிநீக்கு
  3. //அதற்காகவே காத்திருக்கும்//

    //எழுதிப் போட்டு தங்கள் பெயரை அச்சில் பார்த்து மகிழ்வார்கள்.//

    நல்லவேளை அனானி அவர்கள் எங்கே என்னைதான் குற்றம் சொல்ல வருகிறாரோ என பயந்து விட்டேன்:))!

    //"கதையின் தொடக்கமே மர்மமாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ?"//

    தொடருங்கள்:)!

    பதிலளிநீக்கு
  4. இது கதைதான்.. அதுவும் அருமையான கதை..

    பதிலளிநீக்கு
  5. அட - சனிக்கிழமைக் காலையில் எல்லோரும் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களே! வெரி குட் - இப்படித்தான் இருக்கவேண்டும் எங்கள் வாசகர்கள். குறிப்பாக ராமலக்ஷ்மி மேடம், சிநேகிதி ஆகியோருக்கு எங்கள் நன்றி. அனானி - நான் கூட ரா ல மேடம் நினைத்ததுபோலத் தான் நினைத்தேன். நல்ல வேளை நீங்க வேற தினுசா பின்னூட்டத்தை முடிச்சுட்டீங்க!

    பதிலளிநீக்கு
  6. ஒருக்கா , கதையில மட்டும் தானா மர்மம் இருக்கணும், பின்னூட்டத்திலும் இருக்கக் கூடாதான்னு நினைச்சே அனானி அந்த பின்னூட்டத்தை எழுதியிருக்'கலாம்!

    அப்படியிருந்தாக்க, அனானிக்கு என் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இது (விடு)கதையேதான்:)) நிசமாவே நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. தொடருங்கள் எதிர் பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  9. இது மர்மக்கதையா அல்லது விடுகதையா அல்லது ஆன்மீகமா புரியல ராம்

    பதிலளிநீக்கு
  10. ஆஹா! என்னங்க இது! நீங்க கனவுல எந்த உலகத்துக்கு போயிட்டு வந்தீங்க!

    நான் இந்தியாவில் இருந்தபோதும், இந்தியா வரும்பொழுதும், என்னிடம் யார் வந்து பிச்சை கேட்டாலும், அவர்களுக்கு பைசா போடாமல் உணவாக வாங்கி கொடுப்பேன். இது என்னுடைய வழக்கம். ஒரு முறை ஒரு 90 வயதிருக்கும் கிழவி, சுருண்டு படுத்திருந்தவள், நான் அவளை கடந்த போது மிகவும் ஈனக் குரலில் பசிக்கிறது என்றால். உடனே அருகில் இருந்த ஒரு பேக்கரியில் அவளுக்கு உணவு வாங்கி, அதை கொடுக்கும்பொழுது ஒரே ஒரு முறை, சில வினாடிகள்தான், அவள் முகத்தை பார்த்தேன். என் கையில் இருந்து பிடுங்காத குறையாய் அந்த உணவை வாங்கி அவள் சாப்பிட துவங்கினாள். மிகவும் பரிதாபமாக இருந்தது. அதன் பின் அவளை நான் மறந்தே போனேன். பிறகு, நான் இந்தியாவில் இருந்து இங்கு வந்து, சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் என் கனவில், அதே கிழவி, சில நொடிகள் பார்த்த அந்த முகம் தெள்ளத் தெளிவாய் தெரிய, அவள் என்னை உலுக்கி 'எனக்கு பசிக்கிறது, சாப்பிடக் கொடு, கொடு என்று, நான் நிஜத்தில் கேட்ட அந்த ஈனக் குரல், அன்று கனவில் ஆவேசமாக ஒலிக்க, நான் பயந்து நடுங்கி கண்விழித்தால், நான் கண்டது கனவு. கை, கால்கள் நடுங்க, (கொலை நடுக்கம்தான்) பயமென்றால், உன் பயம் என்பயம் இல்லைங்க! அப்படி ஒரு பயம், பயந்திருக்கேன். மறுநாள், முதல் வேலையாக என் அம்மாவுக்கு போன் பண்ணி, என் அம்மா வீட்டின் அருகில்,அவளை நான் பார்த்த, அந்த இடத்தை சொல்லி, அந்த கிழவி அங்கு உயிரோடு இருக்கிறாளா என்று பார்த்து, அப்படி இருந்தால் அவளுக்கு எதாவது சாப்பிட வாங்கி கொடுத்து விட்டு வா என்றேன். என் அம்மா, என்னை படுத்தாதே,
    எனக்கு இப்பொழுது நிறைய வேலை இருக்கிறது என்று கூறி விட்டார்கள். ஆனால் ஒரு விஷயம் எனக்கு இன்றுவரை புரியவில்லை, எப்படி ஒரு சில நொடிகள் பார்த்த அந்த முகம், அவ்வளவு நாட்கள் கடந்தும், என் கனவில் தெளிவாக வந்தது? இத்தனைக்கும் நான் அவளை நினைக்கவே இல்லை. கனவில் வந்த பிறகுதான், அந்த ஆவேச முகம், இன்று நினைத்தாலும் என் நினைவில் வருகிறது.

    நான் நிஜத்தில் கண்டது, என் கனவில் வந்தது. உங்கள் கனவில் வந்தது, நிஜத்தில் வருகிறாத பார்ப்போம். வந்தால் நிச்சயம் பதிவில் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. //இது கதையா//
    இது கதையோ! இல்லை நிஜமோ! தொடருங்க. ரொம்ப சுவாரசியமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. கிருஷ் சாருக்கு அனானிதான் நன்றி சொல்லவேண்டும். அனானி - எங்கே இருக்கிறீர்கள்?
    சைவகொத்துப்பரோட்டா, வி ஏ எஸ் சங்கர், தேனம்மைலக்ஷ்மணன் ஆகியோரின் ஊக்க எழுத்துகளுக்கு நன்றி. மீனாக்ஷி வழக்கம்போல கலக்கிட்டீங்க. சுவாரஸ்யமான கனவு விவரங்கள் கூறி.

    பதிலளிநீக்கு
  13. கதை தொடருமா ?காத்திருக்கிறேன்.

    ஸ்ரீராம் உங்க கதையைவிட மீனு சொன்ன கதைதான் பயப்பட வைக்குது.எனக்கும் அப்பிடி ஒண்ணு நடந்திருக்கு !

    பதிலளிநீக்கு
  14. உங்கள் கனவில் வந்தது என்னவென்று எழுதுங்களேன் ஹேமா! அதை தெரிந்து கொள்ள பயம் கலந்த ஆவலுடன் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. கதை சுவாரசியமாக ஆரம்பம் ஆகி இருக்கிறது. அடுத்தது என்ன என்ற ஆவலை தூண்டுகிறது. காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!