Tuesday, February 14, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: தொழில் தர்மம்.


     எங்களின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம்பெறும் எழுத்தாளர் திரு இராய செல்லப்பா அவர்களுடையது. 
     அவருடைய வலைத்தளங்கள்  செல்லப்பா தமிழ் டயரி,  மற்றும் இமயத்தலைவன்.

     நண்பர் ஜி எம் பி அவர்களை ஒருமுறைப் பார்க்கச் செல்லும்போது அவரைப் பார்க்க வந்திருந்த இவரையும் அங்கு சந்தித்து ஐந்து நிமிடங்கள் உரையாடியிருக்கிறேன். 

     அவருடைய முன்னுரையைத் தொடர்ந்து அவர் படைப்பு தொடர்கிறது.

======================================================================== 


2௦13இல் நியூஜெர்சி வந்திருந்தபோதுதான் வலைப்பதிவு எழுதும் யோசனை வந்தது. ஆரம்பமே இரண்டு வலைத்தளங்கள்: ChellappaTamilDiary, மற்றும் Imayathalaivan. இரண்டுமே blogspot.com தான். முன்னதில் அன்றாட நிகழ்வுகளையும், பின்னதில் இலக்கியமானவைகளையும் எழுத ஆரம்பித்தேன்.
அதன் விளைவாக 2௦14 இல் ஒரு சிறுகதை தொகுதி வெளியானது. (“தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்”). அகநாழிகை பதிப்பகம். இந்த ஆண்டு புத்தகக் காட்சியிலும் பிரதிகள் கிடைக்கலாம்.

அதன் பிறகு ChellappaTamilDiary யில் மட்டும் கவனம் செலுத்தினேன். அதுவும் ஓராண்டாக எழுதாமல் விட்டுவிட்டேன். காரணம் ஏதுமில்லை. சில சமயம் எனது செயல்களுக்குக் காரணம் தெரிவதில்லை.

இப்போது மீண்டும் நியூஜெர்சி வந்திருக்கிறேன். திரும்பிச் செல்லும்போது அடுத்த புத்தகத்திற்கான வரைவு இருக்கும் என்று நம்புகிறேன். வலைப்பதிவும் இனி தொடர்ந்துவரும்.

குமுதம் அல்லது குங்குமம் வார இதழுக்காக ஒரு பக்கக் கதைகள் எழுதலாமா என்று யோசித்திருந்த வேளையில் உங்கள் அழைப்பு வந்தது. இதுதான் முதல் கிறுக்கல்....!


========================================================================

தொழில் தர்மம்
-இராய செல்லப்பா- நியூஜெர்சி

பெற்றவர்கள் இருவரும் சாலை விபத்தில் மரணம் அடைந்ததும் வேறு வழியின்றி சூப்பர் மார்க்கெட் நடத்திவந்த தாய்மாமன் வைகுண்டம் வீட்டில் அடைக்கலம் புகுந்தான் சங்கர். ஏற்பாடு செய்தவள் அவனுடைய ஒரே சகோதரி. எங்கே தனக்குப் பாரமாக வந்துவிடுவானோ என்று பயம். மாமன் வீட்டில் இருந்தால் படிப்புக்கும் உதவுவார், கூடவே தொழிலும் கற்றுக்கொண்டது போலாகும் என்று சங்கரை மூளைச்சலவை
செய்திருந்தாள்.

ஆனால் நடந்தது வேறு. பள்ளிக்கூட யூனிபாரத்தைத் தவிர இரண்டே இரண்டு டிராயர் சட்டைகள் தான் இந்த மூன்று வருடத்தில் அவனுக்குக் கிடைத்தவை. பள்ளிக்கூடம் போவதற்கு முன்பும் சரி, வந்த பின்பும்சரி,  அரைமணி நேரம் தான் அவனுக்கு அனுமதிக்கப்பட்ட ஓய்வுநேரம். மற்றபடி கடையில் எல்லா வேலைகளுக்கும் அவன்தான் எடுபிடி.  ஆனால் கடையிலிருந்து ஒரு குளிர்பானத்தையோ பிஸ்கட்டையோ எடுத்துச் சாப்பிட அனுமதி கிடையாது. மற்ற ஊழியர்களுக்கு தினசரி பேட்டா.  சங்கருக்கோ எதுவுமில்லை.

எப்போதும் அரைப் பட்டினிதான்.

லட்சங்களிலும் கோடிகளிலும் மாமன் புரள்வது எப்படி என்ற ரகசியம் இந்த மூன்று வருடங்களில் சங்கருக்கு அத்துபடியாகியிருந்தது. கலப்படம் செய்வதில் திறமைசாலியாக இருந்தவர் தன் மாமன் என்று புரிந்தது.

மிளகில் பப்பாளி விதைகளையும், கடுகிலும் உளுந்திலும் கருப்பு மண் உருண்டைகளையும் தானே முன் நின்று கலப்படம் செய்வார்.  டீத்தூளில் செங்கல்பொடி கலப்பார்.  இப்படி எத்தனையோ.  அதெல்லாம்கூடப் பரவாயில்லை. இப்போது சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் அரிசியைக் கொண்டுவந்து பொன்னி பச்சரிசியில் கலப்படம் செய்ய முற்பட்டபோதுதான் சங்கரால் பொறுக்கமுடியவில்லை.

பிளாஸ்டிக் அரிசியால் படிப்படியாக மரணம் கூட ஏற்படுமாமே!  ஒருவேளை தானும் இறந்துவிடுவோமோ?

பயம் அதிகரித்தது.

எனவேதான் அந்த முடிவை எடுத்தான் சங்கர். தயக்கமும் பயமும் அதிகமாக இருந்தாலும், தன்னை அனாதைபோல் நடத்தும் மாமனுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்ற ஆவேசம் அவனை உந்தித்தள்ளியது. “என்னைப் பட்டினி போட்டதுமன்றி ஊரையுமா கலப்படத்தால் கொல்லப் பார்க்கிறாய்? இன்று மாலைக்குள் என்ன நடக்கப் போகிறது பார்’ என்று மனதிற்குள் பொருமினான்.

சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. ‘வைகுண்டம் சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம். மனித உயிர் களுக்கு ஆபத்து. நடவடிக்கை எடுப்பீர்களா?’ என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதினான். காவல் நிலையத்தில் வீசி விட்டு நகர்ந்தான்.


****


அன்று காலையிலிருந்தே சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வைகுண்டத்திற்கு ஒரே ஆச்சரியம். திங்கட்கிழமையில் அவ்வளவு கூட்டம் வருவதில்லை. கூட்டத்தோடு கூட்டமாகச் சாதாரண உடையில் காவல்துறை அதிகாரிகளும் உணவுப்பொருள் வழங்குதுறை அதிகாரிகளும் இருந்தது அவனுக்குத் தெரியவில்லை. விளைவு? அன்று மாலையே வைகுண்டம் ‘கலப்படத்தடுப்பு’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.  சங்கர் முகத்தில் வெற்றிப் பெருமிதம்.


****


எமுசமு கட்சியின் ரகசியக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொதுத்தேர்தலுக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.  இந்த ஒரு தொகுதிக்குத்தான் வலுவான வேட்பாளர் கிடைக்கவில்லை. மூன்று மாதங்களில் தேர்தல் வரப்போகிறதே! கட்சித் தலைவருக்கு ஒரே குழப்பம். வட்டச் செயலாளர் இன்னும் வரவில்லை. ‘எங்கே போய்த் தொலைந்தார்?’ என்று ஆத்திரப்பட்டார்.

அதே நேரம், அவசரமாக உள்ளே நுழைந்தார் வட்டச் செயலாளர். “அப்பாடா, சரியான வேட்பாளரைக் கண்டுபிடித்துவிட்டோம்” என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார். யாராக இருக்கும் என்று கவலையுடன் நோக்கினார் தலைவர்.

“தேர்தல் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் உள்ளவர்,  இந்தத் தொகுதியிலேயே வைகுண்டம் ஒருவர்தான் என்று சிஐடி ரிப்போர்ட் வந்திருக்கிறது. மனுஷன் கலப்படத்தில் படு கெட்டிக்காரனாம். இப்போதுதான் அவரை நம் கட்சியில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டு வருகிறேன்” என்றார்.

அன்று மாலை, வெற்றிப்புன்னகையுடன் வைகுண்டம் போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கியபோது சங்கருக்கு ஒன்றுமே புரியவில்லை.

19 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்வியல் யதார்த்தத்தைப் போட்டு உடைத்து விட்டார்
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

வைகுண்டம் - வைகுண்டம் போகிற வரையில் திரு(த்)ந்துவது சிரமம் தான்...!

கோமதி அரசு said...

//வெற்றிப்புன்னகையுடன் வைகுண்டம் போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கியபோது சங்கருக்கு ஒன்றுமே புரியவில்லை.//

பாவம் சங்கர். வைகுண்டம் போல் உள்ளவர்கள் வெற்றிப்புன்னகை பூக்கும் காலம் இது என்று தெரியவில்லை.
கதை அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

“அப்பாடா, ’தொழில் தர்மம்’ என்ற கோட்பாடுக்கு ஏற்றபடி சரியான வேட்பாளரைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அரசியல் யதார்த்தத்தை அப்படியே மிக இயல்பாக இங்கு கதையாக்கிச் சொல்லியுள்ள கதாசிரியருக்கும், அதனைப் படிக்க வாய்ப்பளித்துள்ள ‘எங்கள் ப்ளாக்’குக்கும் நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

த ம நியூ ஜெர்சிக்குப் போயிருக்கு!!! லேன்ட் ஆயிடுச்சானு தெரியல!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான உண்மையைப் பறைசாற்றும் கதை!! வாழ்த்துகள் ராய செல்லப்பா சார்! வாழ்த்துகள் மற்றும் நன்றி! எங்கள் ப்ளாக்!

கீதா: சார் என்ன சார்!!! இப்படி உண்மையை, யதார்த்ததைப் போட்டு உடைப்பீர்களா??!!! அதனால் உங்களை உங்கள் தொகுதியில் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்!!! ஹஹஹ்ஹ்
ஜோக்ஸ் அபார்ட்...பாவம் சங்கர் இன்னும் சின்னப் பையன் தான்! வளர்வதற்கு உன்னும் வருடங்கள் இருக்குது!
அருமையான கதை சார்!!! எங்கள் ப்ளாகிற்கும் நன்றி!

'நெல்லைத் தமிழன் said...

ஒவ்வொரு தொழிலுக்கும் உள்ள தர்மத்தைச்(?) சொல்லும் கதை. இனி சூப்பர் மார்க்கெட் வைக்கணும்னா என்ன செய்யணும், அரசியல்தான் தொழில்னா என்ன செய்யணும்கறது தெரிகிறது.

athira said...

ஹா ஹா ஹா எங்கேயோ யாரோடயோ சொந்தக்கதை கேட்டது போல ஒரு ஃபீலிங் வருது. இப்படித்தான் படக்கதையும் எழுதுவினமோ?..

athira said...

புதிய வேட்பாளர், சங்கர்தான் என வாய் பிளக்க(சாதாரண மக்களின் எதிர்பார்ப்புப்போல:)) பார்த்திருக்க... வைகுண்டத்தை மாலையுடன் பார்த்ததும் மீயும் கடுப்ப்ப்ப்ப்பாயிட்டேன்ன்ன்ன்:))..எங்கின பார்த்தாலும் எல்லாத்திலயும் என்னை ஏமாத்துறாங்க:) யுவர் ஆனர்ர்ர்ர்:)..

ஹா ஹா ஹா சோட் அண்ட் சுவீட்டான கதை எழுதிய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Dr B Jambulingam said...

ஐயாவை நன்கறிவோம். அவரது எழுத்துக்களையும்கூட. பாராட்டுகள்.

Bhanumathy Venkateswaran said...

கதை நன்றாகத்தான் இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட காலத்தில் எந்த மாதிரி தலைவர்களைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுதுதான் வருத்தமாக இருக்கிறது.

Nagendra Bharathi said...

அருமை

Bagawanjee KA said...

பாமரனுக்குத்தான் சிம்பாலிக்கா சங்கர் என்று பெயர் வைத்துள்ளீர்கள் என்று படுகிறது :)

Angelin said...

ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டும் அப்பாவிகள் ஏமாந்து கொண்டும் இருப்பார்கள் என்பது தலையெழுத்து ..
இப்படித்தான் அரசியலுக்கு ஆள் சேர்க்கிறார்களா :) ஹ்ம்ம்
சிந்தையை தூண்டிய கதை ..வாழ்த்துக்கள் ஐயா .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக்

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றாக இருக்கிறது

Asokan Kuppusamy said...

மிகவும் நன்றாக இருக்கிறது

Saratha J said...

பதிவு மிக அருமை.

G.M Balasubramaniam said...

வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு படிப்பினை தருகிறது சில தற்கால நிகழ்வுகளையும் கலந்து கலக்கி எழுதிய ஒரு சிறுகதைபோல் தெரிகிறது வாழ்த்துகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!