செவ்வாய், 21 மார்ச், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : எதிரும் புதிரும் ஜம்பு



     இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப்
போடும் கதை" பகுதியில் முனைவர் ஐயா ஜம்புலிங்கம் அய்யாவின் படைப்பு வெளியாகிறது.

     அவரின் தளம் முனைவர் ஜம்புலிங்கம்.

     இவர் மிகவும் பாஸிட்டிவான மனிதர் என்பதை அறிந்த அந்த வாரப் "பாஸிட்டிவ் செய்திகள்" பகுதியில் இவரையும் சொல்லியிருந்தோம்.  இவரது கட்டுரைகள் இப்போதும் செய்தித் தாளில் வந்துகொண்டிருக்கின்றன.

     தன்னைப்பற்றியும், தன் கதை பற்றியும் ஜம்புலிங்கம் அய்யாவின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் எழுதிய "சிறு" கதை இடம்பெறுகிறது.



===================================================================


என் எழுத்திற்கான அறிமுகம்


1983இல் என் முதல் வாசகர் கடிதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியானது. பின்னர் தொடர்ந்து பல தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள் எழுதியுள்ளேன். வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்த ஆர்வம் மென்மேலும் என்னை எழுதத் தூண்டியது.

1993இல் முதன் முதலாக சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். தஞ்சாவூரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு அந்த ஆர்வத்தைத் தூண்டினார்.  வாழ்விற்கான பொருளை முதன் முதலாக எனக்கு உணர்த்தியதோடு நல்ல பாடமும் கற்றுத் தந்தவர் அவர்.  நான் எழுதிய முதல் சிறுகதை குங்குமம் (9-15 சூலை 1993) இதழில் வெளியானது.  தொடர்ந்து பாக்யா, இதயம் பேசுகிறது, தமிழ் அரசி, வாசுகி, மேகலா, உஷா, சாவி, மாலை முரசு, தின பூமி, மங்கையர் பூமி, ராஜ ரிஷி உள்ளிட்ட இதழ்களில் என் கதைகள் வெளியாயின. இதே காலகட்டத்தில் சில கட்டுரைகளையும், கவிதை என்ற பெயரில் சிலவற்றையும் எழுத ஆரம்பித்தேன். 1997 வரை தொடர்ந்த இப்பயணத்தில்  40க்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகளை எழுதினேன். மற்றொரு நண்பரின் முயற்சியால் இச்சிறுகதைகள் வாழ்வில் வெற்றி என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றன.


முனைவர் பட்ட ஆய்விற்குப் பதிவு செய்த பின்னர் எனது இலக்கானது ஆய்வுக்களம் நோக்கி திரும்ப ஆரம்பித்தது.  1994 முதல் எழுதத் தொடங்கி  ஆய்வுக்கட்டுரைகள், பதிவுகள் (130+), பேட்டிகள் (6),  மேற்கோள்கள் (20+),  அணிந்துரை, வாழ்த்துரைகள் (8), சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ (90+), முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூ (150+), தமிழ் விக்கிபீடியா (ஜனவரி 2017இல் நடைபெற்ற விக்கிக்கோப்பை போட்டியில் கலந்துகொண்டு எழுதிய 253 கட்டுரைகள் உட்பட 570), ஆங்கில விக்கிபீடியா (108+)  எழுதியுள்ளேன். மொழிபெயர்ப்பு ஆர்வம் காரணமாக தி இந்து, தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் எனது கட்டுரைகள் வெளியாயின. இவ்வகையில் 1000க்கும் மேற்பட்ட பதிவுகளை அண்மையில் நிறைவு செய்துள்ளேன். இத்துடன்  தமிழகத்தில் 29 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளை தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்களின் துணையோடும் கண்டுபிடித்துள்ளேன். கண்டுபிடிப்புகள் பற்றிய செய்தி நறுக்குகள் (150+) தமிழகத்தின் பெரும்பாலான தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியாயின.  


1983இல் வாசகர் கடிதமாக தொடங்கி தற்போது கட்டுரைகள் எழுதுமளவு உயர்த்தியமைக்குப் பல நண்பர்களும், அறிஞர்களும், குடும்பத்தாரும் துணை நின்றனர், நிற்கின்றனர். தற்போது முகநூல் மற்றும் வலையுலக நண்பர்களும் என்னை ஊக்குவிக்கின்றனர். என் எழுத்து ஆர்வத்தை நான் கடந்த 40 ஆண்டுகளாக வாசித்து வருகின்ற The Hindu நாளிதழும் என் வாசிப்பு மற்றும் எழுத்து ஆர்வத்தை மேம்படுத்துகிறது.  அனைத்திற்கும் மேலாக நான் பணியாற்றும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தை இப்போது நன்றியோடு நினைவுகூர்கிறேன்.  


என்னிடம் சிறுகதை கேட்டு வாங்கி வெளியிடும் எங்கள் பிளாக் தளத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.


===================================================


எதிரும் புதிரும்  
(குங்குமம் இதழில் வெளியான என் முதல் சிறுகதை)
-ஜம்பு


“பஸ்ல ஜன்னல்கிட்ட உட்காரும்போதே சந்தேகப்பட்டேன். எல்லாரோட சட்டையையும் வீணாக்கிட்ட பாரு.“

“நெனச்ச மாதிரியே நடந்துடுச்சி. “

கும்பகோணத்திலிருந்து தஞ்சையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த பஸ் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

அருணும் தன் பங்கிற்குத் திட்ட ஆரம்பித்தான்.

 “உடம்பு முடியலைன்னா டவுன் வண்டிலே வரவேண்டியதுதானே. இல்லாட்டி இது மாதிரி உள்ளதுங்க வசதிக்குத்தான் டிரெயின் இருக்குல்ல. எந்த தொந்தரவும் இல்லாம வரலாம்ல.“

வாந்தி எடுத்துக் கொண்டிருந்த பெரியவர் வாயில் துணியை வைத்து மூடிக் கொண்டு கீழே உட்கார்ந்தார்.

பக்கத்திலிருந்த மூதாட்டி – அவருடைய மனைவி – அவருடைய வாயைத் துடைத்துவிட்டபடி பஸ்சில் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு சோகப்பார்வையோடு இருந்தாள்.

“சக்கராப்பள்ளி ஸ்டாப்பிங் வந்துடுச்சி. அய்யம்பேட்டைல பெரியவரை இறக்கிடுக். தஞ்சாவூர் வர்ற வரைக்கும் யாரும் பஸ்சில் உட்கார முடியாது போலிருக்கு. அவ்வளவு நாத்தமாக இருக்கு.“

அய்யம்பேட்டை வந்ததும் டபுள் விசில் கொடுத்தார் புத்திசாலி கண்டக்டர். தஞ்சைக்கு டிக்கட் எடுத்திருந்த அந்தப் பெரியவரையும் மூதாட்டியையும் தஞ்சையிலேயே இறக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. அதைவிட, மனிதாபிமானமே இல்லாத இந்தக் கூட்டத்திற்கு புத்தி கொடுக்க வேண்டும் என்ற நினைப்பும் அவருக்கு!


*********


தஞ்சை வந்து சேர்ந்தான் அருண். இறங்கி  நேராக வீட்டிற்குப் போனபோது அவனுடைய மகள் இந்திராவின் சட்டையை அவனுடைய மனைவி பிரியா அலசிக் கொண்டிருந்தாள்.


“நீங்க கும்பகோணத்திலேந்து வர லேட்டாகும்னு நெனச்சி நானும் இந்திராவும் மாரியம்மன் கோயிலுக்குப் போனோம். போய்ட்டுத் திரும்பும்போது இந்திரா பஸ்சில வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டா. எனக்கு ஒண்ணுமே புரியலே. பஸ்சில வந்த பெரியவர் ஒருத்தர் அவளை மடியில போட்டுக்கிட்டு அவர் வச்சிருந்த துண்டுலயே வாந்தி எடுக்கச் சொன்னார். அவரோட வேட்டி துண்டு எல்லாம் பாழாயிடுச்சி. அதை அவர் பெரிசா எடுத்துக்கல. ஊருக்கு வந்ததும் டாக்டர்கிட்ட இந்திராவைக் காட்டிட்டு வந்தேன்.“


“அப்பா! பஸ்சுல அந்த தாத்தா என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டார்ப்பா. ரொம்ப நல்ல தாத்தாப்பா அவரு.“


மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்திரா தன் அப்பாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.


இந்திரா சொன்ன எதுவும் அருணின் காதில் விழவில்லை.
இயற்கை நியதிகள் ஏளனமாக அருணைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது.   

29 கருத்துகள்:

  1. என்னைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். மறக்கமுடியாத என் முதல் சிறுகதையை பல ஆண்டுகளுக்குப் பின் தங்களுடன் பகிர்ந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் 2011 முதல் வலைப்பூவில் எழுதிவருகிறேன். உங்களைப் போன்றோரின் ஊக்கம் என்னை மென்மேலும் எழுதவைக்கிறது. அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான நீதிக் கதை
    முனைவர் ஐயாவின் எழுத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  3. மனிதர்கள் பலவிதம்....ஆனால் அவரவருக்கு பிரச்சனைகள் வரும் போதுதான் புத்தியே வருகிறது

    பதிலளிநீக்கு
  4. கதை வள வளவென்று வர்ணனை வார்தைகளை போட்டு நீளாமல் நறுக்கென்று சொல்ல வந்த விஷயத்தை சொல்லி சென்றவிதம் நன்றாக இருந்தது பாராட்டுக்கள் ஜம்புலிங்கம் சார்..

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுக்கள் என்று சொல்லும் போது உங்களை பாராட்டா எனக்கு தகுதி உள்ளதா என்று மனம் கேட்கிறது.....

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு கதை. தனக்கு வரும்போது தான் புரிகிறது அடுத்தவர் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  7. அருமை எல்லோரும் எல்லா நிலைக்கும் ஆயத்தமாகும் சூழல் உண்டு என்பதை புரிய வைத்த விடயம்.

    முனைவருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அந்தக் காலத்திலேயே ஒரு பக்கக்கதைகள் இருந்தனவா? விக்கிபீடியாவுக்குள் போகாமல் இருந்திருந்தால் நீங்கள் இந்நேரம் ஆயிரக்கணக்கான ஒரு பக்கக் கதைகள் எழுதியிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். சபாஷ்!
    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    பதிலளிநீக்கு
  9. கதை நல்லா இருந்தது. என் சமீபத்தைய கொடைக்கானலிலிருந்து சென்னை திரும்பும்போது ஏற்பட்ட அனுபவத்தையும் நினைவுகூற வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. எதிரும் புதிரும்....இயல்பான வாழ்க்கை தத்துவம்...

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொருவரையும் ஒரு நிமிடமாவது நன்கு சிந்திக்க வைக்கும் மிகவும் அருமையான அழகான குட்டியூண்டு கதை இது. ஷார்ட் + ஸ்வீட் ஸ்டோரி. எனக்கோர் அனுபவம் ஏற்பட்டதைச் சொல்ல விரும்புகிறேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  12. ஒரு பிரஸவ ஆஸ்பத்தரியில், ஒரு தாய்க்கு அன்றுதான் பிறந்துள்ள அழகான பெண் குழந்தையை, ஆசையுடன் நான் தூக்கி, துணி ஏதும் இல்லாமல் என் மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டு இருந்தேன்.

    அது ஏனோ அப்போது என் பேண்ட் + ஷர்ட் களில் மல ஜலம் கழித்து விட்டது. அந்தத் தாய் உடனே பதறிப்போய் விட்டாள்.

    நான் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அந்தத்தாயிடமிருந்து துணியை வாங்கி குழந்தையை லேஸாக ஒத்தித் துடைத்துவிட்டு, பிறகு அதனைத் தொட்டிலில் போட்டுவிட்டு, பாத் ரூம் போய் என் ஆடைகளை சுத்தம் செய்துகொண்டு, விடை பெற்றுப் புறப்பட்டு விட்டேன்.

    அந்தத்தாய், நான் அணிந்திருந்த என் ஆடைகள் மிகவும் ஈரமாகிவிட்டதே என மிகவும் ஃபீல் செய்து மீண்டும் புலம்ப ஆரம்பித்தார்கள்.

    ”அதனால் பரவாயில்லை ... நான் ஆட்டோவில்தான் வந்துள்ளேன். அடுத்த 10-15 நிமிடங்களில் என் வீட்டினை நான் அடைந்து விடுவேன். தற்செயலாக இதுபோலெல்லாம் நிகழ நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கணும், அடுத்து எனக்கு ஓர் பேத்தி பிறக்கப்போகிறாள் என்பதற்கான அறிகுறி இது” என அந்தப் பிரஸவித்த தாய்க்கு நான் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  13. அறிமுகம் பகுதியில் மேலே முனைவர் ஐயா அவர்களின் எழுத்துலக சாதனைப் பட்டியலைப் பார்த்ததும், எனக்கு அப்படியே மயக்கமே வந்துவிட்டது.

    அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் அவர்கள் தொடர்ந்து பெறவும் என் வாழ்த்துகள்.

    இங்கு இதனைப் பகிர்ந்து படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. முனைவர் ஜம்புலிங்கம் சார் திறமைகள் மலைக்க வைக்கிறது.
    அவரின் கதை மிக மிக அருமை.
    வாழ்த்துக்கள் சாருக்கு.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. முனைவர்கதைஅருமைமகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  16. டபுள் விசில் கொடுத்த புத்திசாலி பஸ் கண்டக்டர் மனசில் நிற்கிறார்.

    குட்டிக் கதைகளின் இலட்சணம் ஏதாவ்து நீதி சொல்லுதல். ஜம்பு சாரின் இந்தக் கதையும் அந்த இலக்கணத்திலிருந்து தப்பவில்லை.

    எல்லா எழுதுவோருக்கும் முதல் கதை பிரசுரம் என்பது அலாதி சந்தோஷத்தைக் கொடுப்பது. முனைவரின் பிரசுரமான முதல் கதையைப் படித்தத்தில் ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
  17. சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது ,தனக்கும் இது போல் நிலை வரும் என்பதை சிந்திக்க வைத்த சிறுகதை :)

    பதிலளிநீக்கு
  18. முனைவர் ஐயா அவர்களின் அறிமுகம் .. அம்மாடியோவ் !! வியக்க வைத்தது மலைக்க வைத்தது எத்தனை சாதனைகள் !!
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை சொல்லிச்செல்கிறது நாமும் எந்த காரியத்தை செய்தாலும் யோசித்து ஆராய்ந்து செய்ய சொல்ல நடக்க வேண்டுமென்பதை அறிவுறுத்துகிறது ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா அவர்களுக்கும் பகிர்ந்த எங்கள் பிளாகிற்கும்

    பதிலளிநீக்கு
  19. முனைவருக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. கண்டக்டரின் மனிதாபிமானம் மனதை மகிழ்வித்தது!!

    நல்லதொரு பாடம் அருணுக்கு! தன் வினை தன்னைச் சுடும்! நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நம்மைத் திருப்பி பௌன்ஸ் செய்யும்!! அருமையான கதை முனைவர் ஐயா!

    வாழ்த்துகள்! பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  21. அந்த நடத்துநரைப் பாராட்டியே ஆகணும்! அருணும் நல்ல பாடம் கற்றுக் கொண்டான். முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் சாதனைகளைப் பார்த்து வியந்தேன்.

    பதிலளிநீக்கு
  22. மிக அருமையாகப் பாடம் புகட்டும் கதை, என்ன தான் கதை கதையாக சொன்னாலும், எப்படி புரிய வைத்தாலும் நம்மவர்கள்.. முக்கியமாக நம் நாடுகளில் பெரியவர்களெனில் மதிப்புக் கொடுப்பது குறைவாகவே உள்ளது.

    இதனாலேயே நான் அதிகம் கவனிப்பதும் முக்கியத்துவம் கொடுப்பதும் பெரியவர்களுக்கே. 83 இலிருந்தே கதை எழுதுகிறாரா... ஓ மை கடவுளே.. வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு.

    பதிலளிநீக்கு
  23. பட்டு கத்தரித்தாற்போன்ற கதையும், கண்டக்டர் கொடுத்த டபுள் விஸிலும் மனதில் அப்படியே நிற்கிறது. மெத்தப் படித்தவர். எவ்வளவு தகுதிகள். வியப்போ வியப்பு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. அனுபவம் நல்ல படிப்பினையைக் கொடுக்கும் டாக்டர் ஜம்புலிங்கத்துக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  25. முனைவர் அய்யாவின் சிறுகதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  26. அறிஞரின் ஆய்வுப் பதிவுகள் அதிகம்
    கதை எழுதியிருக்கிறார் என்பது
    இன்றுதான் தெரியும்
    அருமையான கதை

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
  27. மிக யதார்த்தமான நிகழ்வு. அதற்கு விளக்கம் நீதியோடு வருகிறது. அறிஞர்களை விமர்சிக்கப்
    போய் நாம் இன்னும் வளர எத்தனை நாட்கள் வருடங்கள் ஆகுமோ என்ற தயக்கம் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  28. முதல் கதையே இவ்வளவு சிறப்போடு வந்துள்ளதே. அருமை ஜம்பு சார். & பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  29. இந்த மாத இறுதியில் பணி நிறைவு அடைகிறீர்கள். மாதம் ஒரு சிறுகதை எழுதி ஒரு நூலாக வெளியிடுங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!