செவ்வாய், 19 செப்டம்பர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஈரம் - ஏகாந்தன்



     இந்த வாரம் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் நண்பர் ஏகாந்தன் அவர்களது சிறுகதை இடம்பெறுகிறது.  


 [ சீதா ராம மன்னிப்புக் கதைத் தொடர் அடுத்த வாரம் தொடரும் ]


     அவரது தளம் ஏகாந்தன் Aekaanthan.

     
     வலைப்பிரதேசத்துக்குள் நுழையும் அவரது முதல் கதை என்கிறார் திரு ஏகாந்தன் அவர்கள்.


     அவருடைய முன்னுரை.  தொடர்ந்து அவர் எழுதிய சிறுகதை.



=================================================================






சின்னதாக ஒரு முன்னுரை  :

சிறுவயதிலிருந்தே சுற்றுப்புற உறவுகளை, நட்புகளை, நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்ததின் விளைவே இந்தக் கதை. மனதின் ஆழத்தில் அனுபவக் கருக்களில் ஒன்று கற்பனை ஊட்டம்பெற்று கதையாக உருவெடுத்திருக்கிறது எனலாம். உண்மையின், நிதர்சனத்தின் சாயலில்தானே அனைத்தும் இவ்வுலகில் ? பொய்கூட உண்மையின்  நிழலில்தானே நிற்கிறது !  இது ஒரு பீரியட்  கதை (குறிப்பிட்ட காலகட்டத்தைச் சார்ந்தது)



-ஏகாந்தன்

பெங்களூர் 2-5- 2017



******************************************************************************************************



ஈரம்
ஏகாந்தன்



வெடுக்கென அப்படி அவன் பேசியதைக் கேட்டதும் அர்விந்த் இறுக்கமாக உணர்ந்தான்.  அர்விந்தின் மனைவி ஹேமா தாங்கமுடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.  எழுந்து ஜன்னல் பக்கம் சென்று கம்பியைப் பிடித்து நின்றாள். ஒரு கணம் உறைந்துபோனாள் அகிலா. சில வினாடிகள் மயான அமைதி. இக்கட்டான சூழலிலிருந்து தன்னை முதலில் விடுவித்துக்கொண்டான் அர்விந்த்.

’சரிடா ஸ்ரீதர்.. நான் வரேன்!’ என்று எழுந்தான். குரல் ஒரேயடியாக இறங்கியிருந்தது. மனைவியின் பக்கம் திரும்பி  ’ஹேம்! போலாமா?’ என்றான் ஏதுமே நடக்காததுபோல. அவளும் திரும்பி ‘அகி, வரட்டுமா? போற வழியிலே கொஞ்சம் காய்கறியும் வாங்கிட்டுப்போகணும்..கெளம்புறோம்’ என்றாள்.  அகிலா பதட்டத்துடன் ஹேமாவை நெருங்கி அவளது தோளைத் தொட்டாள்:  ’சரி, அப்பறமாப் பாக்கலாம்’ - சொன்னாள் குரலைத் தாழ்த்திக்கொண்டு.’

வாசலுக்கு அகிலாதான் வந்து வழி அனுப்பினாள். நிதானமாக ஸ்கூட்டரை  ஸ்டார்ட் செய்து, ஹேமா உட்கார்ந்தவுடன் மெல்லச் சிரித்தபடி அகிலாவைப்
பார்த்துக் கை அசைத்தான். கிளம்பிப்போனான் அர்விந்த்.  வீட்டுக்குள் திரும்பிய அகிலாவுக்கு மனது கனமாயிருந்தது.

’அவர்கிட்ட அப்படிப் பேசியிருக்கப்படாது நீங்க !’ என்றாள் பொறுக்கமாட்டாமல்.

அவர் ஒங்களோட க்ளோஸ் ஃப்ரெண்ட்.  ஒரே உருப்படியான நண்பன்னு  நீங்களேதான் சொல்லியிருக்கீங்க..’

’ஒனக்கு இதுலாம் ஒன்னும் புரியாது அகிலா! நீ சும்மா இரு!  –  அவள்  முகத்தைக்கூடப் பார்க்காமல் சொல்லிவிட்டு, கேஷுவலாக வீட்டுக்குக் கொண்டுவந்திருந்த ஆஃபீஸ் பேப்பர்களில் எதையோ குடைந்துகொண்டிருந்தான் ஸ்ரீதர்.

’ஒரு இங்கிதம் தெரியாம மூஞ்சில அடிக்கறமாதிரி இப்படி எப்படி பேசிட்றீங்க!  இன்னொருத்தர் மனம் அடிபடுமேன்னு தோணவேணாம்?’ கோபம் படபடக்கவைத்தது அகிலாவை.  ’கூசாம பணம் பணம்-னு வந்து நிக்கறானே, அது ரொம்ப சரியாத் தோணுதா ஒனக்கு? நண்பனா இருந்தாலும் அடிக்கடிப் பணம் கேட்கறவனை இப்படித்தான் கட் பண்ணனும். இதுல தயவு தாட்சண்யம் கூடாதுன்னு நினைப்பவன் நான்!’ சிடுசிடுத்தான் ஸ்ரீதர்.

‘அப்படி என்ன கேட்டுட்டார் ? கேவலம் ரெண்டாயிரம். ஏதோ அவசரமாயிருக்கும்.  மாசத்தில கடைசி வாரம் வேற. இத்துணூண்டுக் காசு ஒரு பெரிய விஷயமா போச்சா ஒங்களுக்கு ?’ என்றாள் கோபம் இறங்காமல் அகிலா.

’ஏற்கனவே மூவாயிரம் வாங்கியிருக்கான்ல. அதயே இன்னும் திருப்பித் தரல...அதுக்குள்ள இன்னும் ரெண்டு கேட்கவந்துட்டான் ..இடியட் !’ – ஸ்ரீதர்.

ஜிவ்வென்று தலையில் சூடேறியது அகிலாவுக்கு.  மேற்கொண்டு பேசப்பிடிக்காமல் விருட்டென்று திரும்பி கிட்ச்சனுக்குள் போனாள்.  என்ன செய்கிறோம் என்கிற ப்ரக்ஞையின்றி ஸ்டவ்வைப் பற்றவைத்தாள்.  எழுந்து நின்ற நீல ஜ்வாலையை சில கணங்கள் உற்றுப் பார்த்தாள். அணைத்தாள். பாத்திரங்களை உருட்டினாள்.

வெளியே கிடந்த கரண்டிகளையும் டம்ளரையும் ஸிங்குக்குள் தள்ளிவிட்டு பால்கனிக்குப் போய் தொப்பென்று கூடைநாற்காலியில் உட்கார்ந்தாள். மூடு அவுட்.  பண விஷயத்தில ஏன்தான் அவள் புருஷன் இப்படி பயங்கரக் கஞ்சூஸாக இருக்கிறானோ..  முன்னாடி வாங்கினதைத் திருப்பித் தரலயாம். அவன்தான் என் நண்பன்கிற ! பணத்தைத் தூக்கிண்டு ஓடியா போய்டுவான் ? சே..!

தாங்கமுடியவில்லை அவளால்.  அவள் குணமே வேறு.  ஊர்பேர் தெரியாத யாராவது அவசரம்னு கேட்டாக்கூட இளகிப்போய்க் கொடுத்துவிடக்கூடிய மனமுடையவள். அவளுக்கு இப்படி ஒரு புருஷன்.

ஒருவாரம்போனால் அடுத்த வாரம், பெரும்பாலும் ஞாயிறு மாலையில் எப்படியும் மனைவியுடன் ஸ்ரீதர் வீட்டுக்கு ஒரு விசிட் அடித்துவிடுவான் அர்விந்த்.  அகிலா சந்தேகித்தபடியே அந்த ஞாயிறன்று அர்விந்த்-ஹேமா வரவில்லை.  அவளுக்கு றுத்தியது.  எப்படிப் பேசினான் அவள் புருஷன். அர்விந்தின் மனம் நிச்சயம் புண்பட்டிருக்கவேண்டும்.  ரொம்ப சென்சிட்டிவ் டைப் ஆயிற்றே ஹேமாவும்.

அவள்தான் நம்மைப்பற்றி என்ன நினைத்திருப்பாள்?

ஹேமாவைப்பற்றிய சிந்தனையில் அகிலாவின் மனம் மேலும் சுருண்டது.

குணவதி. வெள்ளை மனசு என்று கேள்விப்பட்டிருக்கிறாள். உண்மையில் அப்படி ஒரு ஜீவனை ஹேமாவிடம்தான் கண்டாள் அகிலா. சிரித்தால் மலர்ந்து சிரிப்பாள்.

தன் கூடப்பிறந்தவளிடம் பேசுவதுபோல் எல்லாவற்றையும் அகிலாவிடம் நொடியில் கொட்டிவிடுவாள். ஸ்ரீதரால் அவள் ஹேமாவுடன் நெருக்கமாயிருப்பதும் நின்றுவிடுமோ?  இந்த பெங்களூரில் அவளுக்கு தோழி என்று சொல்லத்தக்க ஒருத்தி ஹேமா மட்டும்தானே….

சில நாட்களுக்குப்பின் அன்று அகிலா அருகிலுள்ள இந்திராநகரின் பெரிய ஸ்டோர் ஒன்றுக்கு வீட்டு சாமான்கள் வாங்க என வந்திருந்தாள்.  இந்திரா நகர் அவளுக்குப் பிடித்த லொகாலிட்டி. பக்கத்தில் ஒரு கிளைச்சந்தில் ஃப்ரெஷ்ஷாக பாலக் கிடைக்கும். ஸ்ரீதருக்கு பாலக் பன்னீர் என்றால் உயிர். அகிலாவின் அப்பா லக்னோவில் வெகுகாலம் வேலைப் பார்த்திருக்கிறார். சிறுபிராயத்தை அங்கே கழித்த அகிலாவுக்கு வடக்கின் உடை, பாவனை, சாப்பாடு இத்தியாதிகள் எனப் பழகியிருந்தது. தன் அம்மாவிடமிருந்து நார்த் இண்டியன் டிஷஸ் செய்வதை சின்னவயசிலிருந்தே ஆர்வமாகக் கற்றுக்கொண்டிருந்தாள். பாலக் பன்னீர், மட்டர் பன்னீர், கோஃப்தா, பர்த்தா என்று புகுந்து விளையாடுவாள். கல்யாணம் ஆன புதிதில், தான் சற்றும் எதிர்பார்த்திராத அகிலாவின் இந்த சமையல் திறமை கண்டு அசந்துபோயிருந்தான் ஸ்ரீதர். 


பிரும்மச்சாரியாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருக்கையில் அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம் ஞாயிறன்று ஏதாவது நல்ல ரெஸ்டாரண்டில் போய் உட்கார்ந்து விதவிதமான ஐட்டம்களாக உள்ளே தள்ளுவது. குறிப்பாக சப்பாத்தி-சப்ஜி, பட்டூரே-சோலே, பானிபூரி என்று வடக்கத்தி வகை சமாச்சாரம்தான். கல்யாணத்துக்குப்பின் அவனுக்குப் பிடித்தமான இத்தகைய பலகாரங்களை ஞாயிறுகளில் வழக்கமாக்கிவிட்டாள் அகிலா. சில ஞாயிறுகளில் அர்விந்த்-ஹேமாவும் சேர்ந்துகொள்வார்கள். 


‘டேய் ஸ்ரீ! நார்த் சங்கதி சாப்பிடணும்னா உன் வீட்டுக்குத்தாண்டா வருவேன். ஹேமாவுக்கும் அகிலா பண்றது ரொம்பப் புடிச்சுப்போச்சு!’ என்று ஒருநாள் ஹாலில் உட்கார்ந்து அர்விந்த் ஸ்ரீதரிடம் சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டு சந்தோஷப்பட்டிருக்கிறாள் அகிலா.

சாமான்களை வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் அகிலா நுழைந்தபோது அங்கே ஹேமா நின்றிருந்தாள். ஒருபக்கம் சந்தோஷம்.  மறுபக்கம் தன் கணவனின் சுடுசொல்லால், ஹேமா தன்னைப் பார்க்காததுபோல் போய்விட்டால் என்கிற உறுத்தல். நினைத்துப் பார்க்கவே பதற்றமாக இருந்தது.

ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. கண்மூடி ப்ரார்த்திருந்த ஹேமா கும்பிட்டுத் திரும்பியவுடன், படியேறிய அகிலாவைக்கண்டு இதமாகச் சிரித்தாள். அகிலாவின் மனம் லேசானது.  ‘என்ன இந்தப்பக்கம்?’ ஆரம்பித்தாள் அகிலா.

’கொஞ்சம் சாமான்கள் வாங்கிட்டு கோவிலுக்கும் போய்ட்டுவரலாம்னு வந்தேன்.. நீ?’ கேட்டாள் ஹேமா. ’வீட்ல பாலக் தீந்துபோச்சு. இங்கதான் காலைல புதுப் பாலக், மத்த கீரைகள்லாம் நெறயக் கெடைக்கும். மேற்கொண்டு கொஞ்சம் சாமானும் வாங்கவேண்டியிருந்தது.  திறந்திருந்த கோவிலப்பாத்ததும் உள்ளேபோய் ஒரு கும்பிடு போட்டுட்டு ஆட்டோ பிடிக்கலாம்னு நுழைந்தால், உள்ளே நீ !’

சிரித்தாள் அகிலா. இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தார்கள். அர்விந்திற்கு லீவு கிடைத்தால், ஒரு வாரம் ஊர்ப்பக்கம் போய்வரத் திட்டமிருப்பதாகச் சொன்னாள் ஹேமா. ஸ்ரீதர் அர்விந்திடம் அன்று நடந்துகொண்ட லட்சணம்பற்றி அகிலா தானாக ஏதும் சொல்லக் கூசினாள்.  ஹேமாவும் வாயைத் திறக்காதது வசதியாய்ப்போயிற்று.

வீட்டுக்குத் திரும்பிய அகிலா இரண்டு மணிநேரத்தில் சமையலை முடித்துவிட்டு. டிவி முன் உட்கார்ந்தாள். ஏதோ ஒரு அழுகைக்காவியம் ஓடிக்கொண்டிருந்தது.

அவள் ஒரு சராசரி தமிழ் ஹவுஸ்வைஃப் இல்லை.  சீரியல், அரட்டைக்கச்சேரி இத்தியாதிகள் அவளுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தின. குக்கரி கொஞ்சம் பார்ப்பாள். பழைய சினிமாப் பாடல்கள் எதிலாவது வந்துகொண்டிருந்தால் ரசித்துக் கேட்பாள்.  அடிக்கடி நியூஸ் கேட்டு தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கொஞ்சம் வித்தியாசமான பெண். நியூஸ் சேனலில் பிரதமர் நரசிம்மராவும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் நியூயார்க்கில் சந்தித்துப் பேசியது பற்றி விளக்கிக்கொண்டிருந்தார் வாசிப்பாளர். டிவியை ஆஃப் செய்தாள். 


பொதுஅறிவை விருத்திசெய்துகொள்ளும் மூடில் அவள் இப்போதில்லை.

மனம் பின்னோக்கி அவளை இழுத்துச் சென்றது. கல்யாண தினத்தன்று மாலை, தன் தோழிகள் என்று சிலரை அகிலா ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்தினாள்.

எல்லோரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது. ஆனால் அவன் யாரையும் அதுவரை தனது நண்பன் என்று அறிமுகம் செய்யவில்லையே. அவனுக்கு நண்பர்களே இல்லையோ என்று அவள் நினைக்க ஆரம்பித்தபோது அங்கே வந்தான் அர்விந்த் ஸ்ரீதரிடம் ஏதோ கேட்பதற்காக.

அவனிடம் பேசியபின், அகிலாவின் பக்கம் திரும்பி தன்னுடைய நண்பன் என்று ஸ்ரீதர் அரவிந்தை அறிமுகப்படுத்தினான் என்பது நினைவுத் திரையில் படமாய் விரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீதரிடம் பேசி மேலும் தெரிந்துகொண்டாள். 

இருவரும் மதுரைக்காரர்கள். சின்னவயதிலிருந்தே ஒன்றாய்ப் படித்தவர்கள். ஸ்ரீதருக்கு இஞ்ஜினியரிங் முடித்து ஆறுமாதத்தில் பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை.

அர்விந்த் படிப்பு விஷயத்தில் சராசரிதான். பி.காம்.தான் அவனால் முடிந்தது.  இரண்டுவருடம் வேலையில்லாமல் அலைந்தபோது ‘தெண்டச்சோறு, தெண்டச்சோறு’ என்று அப்பாவிடம் தினமும் வசவு வாங்கி வாழ்க்கை வெறுத்திருக்கிறான். நண்பர்களைச் சந்தித்தல், வேலை விசாரிப்புகள் எனத் திரிந்துவிட்டு மாலையில் திரும்புகையில், அப்பாவை நினைத்துத் தன் வீட்டுக்குள் நுழையவே பயந்திருக்கிறான். போராடிப் படித்து ஒருவழியாக மத்திய அரசுத் தேர்வில் தேர்ச்சிபெற்றான்.  க்ளார்க் வேலைதான். ஆனால் தானே தன்வயித்துக்கு சம்பாதித்துக்கொள்ளப்போகிறோம் என்கிற எண்ணமே அவனுக்குப் பரமதிருப்தி தந்தது. மத்திய அரசு அலுவலகத்தில் பெங்களூரில் போஸ்ட்டிங். வேலையில் சேர்ந்தபின் முதல் சம்பளத்தில் அப்பாவுக்குக் கொஞ்சம் பணம் மணிஆர்டரில் அனுப்பினான். கூடவே ஒரு கடிதமும் எழுதினான் அர்விந்த். அதில் தன்னால் கடந்த சிலவருடங்களில் அவருக்கு எத்தனையோ சிரமம், தர்மசங்கடம், மனக்கஷ்டம் ஏற்பட்டதைக்குறிப்பிட்டு, அதற்காக மனம் வருந்துவதாக எழுதியிருந்தான். தன்னை மன்னித்தருளுமாறு அவரிடம் வேண்டிக்கொண்டிருந்தான். பதிலாக அடுத்த வாரமே ஒரு போஸ்ட் கார்ட் வந்தது.

‘வேலையில் சேர்ந்ததில் சந்தோஷம். ஆசிகள் – அப்பா’ என்று ரத்தினச்சுருக்கமாக கோணல்மாணல் கையெழுத்தில் கிறுக்கியிருந்தார் அவனது அப்பா.  படித்ததும் அர்விந்தின் கண்கள் குளமாயின. தன்னால் அப்பாவுக்கு சந்தோஷம் என்பது இந்த ஜென்மத்தில் ஏற்படும் என்று அவன் நம்பியதில்லை. அந்தப் போஸ்ட்கார்டை ஒரு பொக்கிஷமாய்க் கருதி, பழுப்புக்கவர் ஒன்றில் போட்டு தன் ப்ரீஃப்கேஸில் பத்திரமாக வைத்துக்கொண்டான் அர்விந்த்.

முதலில் பெங்களூர் வந்த ஸ்ரீதருக்கு நண்பர்கள் என்பதாக யாரும் அமையவில்லை. அகிலாவும் வீட்டிலேயே கிடந்தாள். அவளிடம் ஒரு ‘ப்ளஸ்’  என்னவென்றால் அவளுக்கு வாசிப்புப்பழக்கம் உண்டு. தன்னோடு நிறைய  புத்தகங்களை அள்ளிவந்திருந்தாள். இதுவரை வாங்கி ஆனால் படிக்க நேரமில்லாதுபோன நாவல்கள், சிறுகதைகளை வாசித்து வந்தாள். எப்போதாவது கொஞ்சம் டிவி. அவள் கணவனுக்கு வீடு திரும்ப. இரவு 8, 9 என்று ஆகிவிடும்

அர்விந்தும் பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்ததும் ஸ்ரீதர் உற்சாகமானான்.

ஜே.பி.நகர் பகுதியில் வீடும் வாடகைக்கு கிடைத்து குடிபுகுந்துவிட்டதாக ஒருநாள் சந்தித்தபோது அர்விந்த் சொன்னான். ஸ்ரீதர்-அகிலா இருக்கும் டொம்லூருக்குப் பக்கத்தில்தான். இரவு ஒன்பது மணிவாக்கில் அன்று வீடுதிரும்பியவன் தன் மனைவியிடம் நண்பனைச் சந்தித்ததுப்பற்றிச் சொன்னான். அர்விந்தையும் ஹேமாவையும் வரும் சனிக்கிழமையே மதிய உணவுக்குக் கூப்பிடச்சொன்னாள் அகிலா. அவளுக்கு சுற்றிலும் மனிதர்கள் வேண்டும். நட்பு வேண்டும். முதல் சந்திப்பிலேயே அகிலாவுக்கும் ஹேமாவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்துவிட்டது. இரு குடும்பங்களும் நெருக்கமாயின.

மதுரைக்கு விடுப்பில் போனால் அர்விந்த் தன் மனைவியுடன், இரண்டு தெரு தள்ளி, வடக்கு மாசி வீதியில் இருக்கும் ஸ்ரீதர் வீட்டுக்கும் அவசியம் ஒருமுறையாவது போவான். ஸ்ரீதரின் பெற்றோரோடு உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவான் என்று தன் மாமியார் சொல்லி அகிலா கேட்டிருக்கிறாள். ஹேமாவும் ஸ்ரீதரின் அம்மாவோடு சமையல்கட்டில் ஒத்தாசைக்கு ஏதாவது செய்துகொண்டு பேசிக்கொண்டிருப்பாளாம். ’அரவிந்த் எனக்கு இன்னொரு பிள்ளை!’ என்று மாமியார் கல்யாணமான புதிதில் தன்னிடம் சொன்னபோது, இவ்வளவு நெருக்கமா என்று தான் ஆச்சரியப்பட்டது அகிலாவுக்கு நினைவில் தட்டியது.

அப்படிப்பட்டவனை தன் புருஷன் ஒரு நொடியில் இப்படி இன்சல்ட் செய்துவிட்டான். கடன்கொடுக்க இஷ்டமில்லைன்னா அதை வேறுவிதமாக சொல்லியிருக்கலாமல்லவா?

மூன்று வாரம் போயிருக்கும். அன்று ஸ்ரீதர் ஆஃபீஸுக்குப் புறப்பட்டபின், பால்கனியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தாள் அகிலா. கையில் சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’. சுஜாதா அவளுக்குப் பிடித்த ரைட்டர். கல்லூரி நாட்களிலிருந்தே சுஜாதாவின் கதைகளில் ஈர்ப்பு அதிகம். கதையில் ஆழ்ந்திருக்கையில் ’டிங்!’ என்றதிர்ந்த வாசல் மணி அவளைத் தூக்கிவாரிப்போடவைத்தது. இந்நேரத்தில் யாராயிருக்கும்? வேகமாகச் சென்று வாசற்கதவைத் திறந்தாள். அடுத்தவீட்டு சின்னப்பெண் ஷ்ரேயா சிரிப்பே முகமாக நின்றுகொண்டிருந்தாள். ‘ஆண்ட்டி! யுவர் போஸ்ட்!’ என்று கையிலிருந்த இன்லண்ட் லெட்டரை நீட்டினாள். ‘தேங்க்ஸ் பேபி!’ என்று அதை வாங்கிக்கொண்டு ஏதோ கேட்கபதற்குமுன் சிட்டாகப் பறந்துவிட்டாள் சிறுமி.

பால்கனிக்குத் திரும்பி வந்தவள் கடிதத்தைப் பார்த்தாள். அவளுடைய மாமனாரிடமிருந்துதான் வந்திருந்தது. ’எப்போதாவதுதான் அப்பா லெட்டர் போடுவார், அதுவும் பணம் கேட்டுத்தான்’ என்று அவளுடைய கணவன் குறைசொல்லியிருக்கிறான் பெங்களூர் வந்த புதிதில். ’ஏன் இப்படில்லாம் பேசறீங்க.. அவர் ஒங்க அப்பா!’ என்று கடிந்துகொண்டிருக்கிறாள் அகிலா. அவன் என்ன பெரிதாகக் கிழித்தான்? அவர் போட்ட லெட்டருக்கு ஒப்புக்கு நாலுவரி பதிலாக எழுதுவான். 


பெங்களூர் வந்த இந்த ஒருவருடத்தில் நாலு கடிதம் வந்திருக்கும். அப்பா ஒருபக்கத்தில் சுருக்கமாக எழுதியிருப்பார். அம்மா மற்றொரு பக்கத்தில் தன் பிள்ளைக்காக நுணுக்கி நுணுக்கி எழுதியிருப்பாள். 


போனமாதம் மாமனாரிடமிருந்து வந்த கடிதம் அவளது ஞாபகத்திற்கு வந்தது. அதில் மாமியாருக்கு வயிற்றுவலி தாங்கமுடியவில்லை என்றும் அல்சருக்கு ஆபரேஷன் செய்யவேண்டியது அவசியம் என்று தெரிந்த டாக்டர் கூறியதாகவும் எழுதியிருந்தார். கூடவே ஐயாயிரம் கேட்டிருந்தார். 


எட்டாயிரம் ஆகுமென்றும் ஐயாயிரம் அனுப்பினால் போதும். மீதமுள்ளதை தான் பார்த்துக்கொள்வதாகவும் எழுதியிருந்தார். மாமியாரும் தான் வயிற்றுவலியினால் படும் அவஸ்தைபற்றி பிள்ளைக்கு ஓரத்தில் எழுதியிருந்தாள். ஸ்ரீதர் படித்துவிட்டு ’இவருக்கு வேறென்ன வேலை?’ என்று முணுமுணுத்துக்கொண்டே கடிதத்தை அகிலாவின் கைகளில் திணித்தான். 


படித்த அகிலா பதறினாள். ’முதல் வேலயா நாளைக்கு அனுப்பிட்டு வீட்டுக்கு வாங்க!’ என்றாள். அவன் காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. ஏதோ காரியமாக வெளியேபோய்விட்டான். அடுத்த நாள் இரவில் அவன் ஆஃபீஸிலிருந்து திரும்பியபோது ’பணம் அனுப்பிட்டீங்களா?’ என்று கேட்டாள் அவள். ‘அனுப்பல. அதற்கு அவசியம் இல்ல!’ என்று அலட்சியமாய்ச் சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான் ஸ்ரீதர். அகிலாவுக்கு ஒரே கோபம். இரவுச் சாப்பாடு முடியும்வரை மேற்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள். படுக்கப்போகுமுன் ’பெத்தவளுக்கு ஒரு அவசரத்துக்குப் பணம் அனுப்பமுடியலன்னா என்ன சம்பாதிச்சு என்ன புண்ணியம்’ என்று தான் சீறியதும், அவன் கல்லுளிமங்கனாக ஒன்றும் உறைக்காமல் ஏதோ குருட்டுத் தர்க்கம் பண்ணிவிட்டுத் தூங்கிப்போனதும் ஞாபகத்துக்கு வந்தது.

அதற்கடுத்த ஞாயிறன்று ஹேமாவும் அர்விந்தும் வந்திருந்தார்கள். அகிலா காஃபி போட்டுக்கொண்டுவந்து உட்கார்ந்ததும் பேச்சு அங்குமிங்குமாக அலைந்து, ஒரு கட்டத்தில் ஊரில் இருக்கும் பெற்றோர்பக்கம் திரும்பியது. அப்போது தன் கணவனிடம் ’ஒங்களுக்கு லெட்டர் வந்து நாளாயிடுச்சு. அம்மாவின் ஆபரேஷனுக்குத் தட்டாமல் பணம் அனுப்பிருங்க, ப்ளீஸ்..!’ என்றாள் அகிலா.

நிலைமையை உடனே கணித்துவிட்ட அர்விந்த் நண்பனிடம் உரிமையோடு ‘டேய்! அவங்க உன் அம்மாடா. அனுப்பிடு!’ என்றான். அதைக்கேட்டவுடன் ஸ்ரீதரின் முகம் போனபோக்கு இருக்கிறதே.. ‘ஏற்கனவே நெறய அனுப்பியாச்சு. இனிமே ஒரு காசு பெயராது!’ என்று சீறி, அவர்களது அதுவரைக்குமான ஜாலியான உரையாடலை ஸ்தம்பிக்கவைத்தான். ஹேமாதான் பேச்சை மெல்ல வேறு திசைக்குக்கொண்டுபோய், அவர்களது அந்த மாலை நேரம் பாழாகாது பார்த்துக் கொண்டாள்.

இப்போது மீண்டும் இந்தக் கடிதம். பணத்தை ஜல்தியா அனுப்பச்சொல்லி  பெரியவர் எழுதியிருப்பாரோ? கெஞ்சக்கூடியவர் அல்ல அவளது மாமனார்.

ஆனால் மாமியாரின் நச்சரிப்பு தாங்காமல் மீண்டும் எழுத நேர்ந்திருக்குமோ  
…என்ன கஷ்டம். சிந்தனையுடன் இன்லேண்டைப் பிரித்தாள். கவலையோடு  கடிதத்தின் வரிகளில் கண்ணை ஓட்டியவள் ஒருகணம் நம்பமுடியாது தடுமாறி  மீண்டும் ஆரம்ப வரிகளிலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.

ஸ்ரீதருக்கும் அகிலாவுக்கும் ஆசீர்வாதம்.  நான்தான் உன்னைக் குறைசொல்லிக்கொண்டிருந்தேன் ஸ்ரீதர், நீயோ உன் அம்மாவின் நம்பிக்கை பொய்க்காதவாறு பணம் அனுப்பி அவளது வயிற்றில் பால் வார்த்துவிட்டாய். ஆபரேஷன் நல்லபடியாக புதன்கிழமை முடிந்தது.

இரண்டு நாள் வைத்திருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். நீ அனுப்பிவைத்த பணத்தை உடனே எங்களிடம் கொடுத்ததோடு அல்லாமல், டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதிலிருந்து கூடவே ஆஸ்பத்திரியிலும், வீட்டிலும் ஒத்தாசையாக இருந்த அரவிந்த், ஹேமாபற்றி நான் என்ன சொல்லட்டும்? 

எல்லாம் உன் அம்மாவின் அதிர்ஷ்டம்.  ’நான் சொன்னேனா இல்லியா, என் புள்ள மனசு ஒன்னும் கல் இல்லன்னு!’ என்று அடிக்கடி இப்போதெல்லாம் என்னை சீண்டுகிறாள் உன் அம்மா.

இப்படிக்கு,

அப்பா

கீழே இங்கிலீஷில் எஸ்.மாதவன் 22.2.92 என்று தெளிவாக இருந்தது அவளது மாமனாரின் கையெழுத்து.

அகிலா ஒருகணம் கண்ணை மூடி நடந்ததை உள்வாங்கிக்கொண்டாள். 

அடடா!  ஸ்ரீதருக்குத் திருப்பவேண்டிய மூவாயிரத்தோடு தன்கையிலிருந்து பணம்போட்டு அர்விந்த் ஆபரேஷனுக்காகத் தந்திருக்கிறான்.. எப்படிப்பட்ட மனுஷன்.. அவனுக்கு கனப்பொருத்தமாக இந்த ஹேமா. ‘ஆண்டவா, நீ இருக்கிறாய்!’ என்று மெல்லச் சொன்னது அவள் மனம். இரவில் ஸ்ரீதர் ஆஃபீஸிலிருந்து வந்ததும் நல்லசெய்தியை சொல்லவேண்டும்.

அன்று இரவுச்சாப்பாட்டுக்கென்று அவனுக்குப் பிடித்ததை செய்திருந்தாள். இரவில் வீடு திரும்பிய ஸ்ரீதர் நல்லபசியோடு சப்பாத்தி, கோஃப்தா கறியை சாப்பிட்டான்.

இன்னும் கொஞ்சம் கோஃப்தா போடச்சொன்னான். அவனுக்குப் பிடித்திருக்கிறது என்று அவளாகப் புரிந்துகொள்ளவேண்டும். ‘ப்ரமாதமாயிருக்கு’, ’ நல்லாப் பண்ணியிருக்கே’ போன்ற வார்த்தைகள் அவன் அகராதியில் இல்லை. சாப்பிட்டு முடித்து டிவி-யின் முன்போய் உட்கார்ந்த புருஷனிடம் கடித விஷயத்தைச் சொன்னாள் அகிலா. அர்விந்த் தன் கையிலிருந்தும் போட்டுக்கொடுத்திருப்பதாகத் தெரிகிறது என்றும் உணர்த்தினாள். ‘இப்ப என்ன செய்யனுங்கறே? அந்த ரெண்டாயிரத்தை அர்விந்துக்குத் தந்துடணும் அவ்வளவுதானே? ஹேமாவுக்கு ஃபோன் போடு. இந்த ஞாயிறன்னிக்கி நம்மவீட்டுக்கு வரட்டும். அர்விந்த்கிட்ட  அந்தப்பணத்தை ஒனக்கு முன்னாலேயே கொடுத்திடறேன். இதுக்குப்போயி ஏன் டென்ஷனாகறே நீ?’

சின்னத்திரையின் ஏதோ ஒரு மசாலா நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே அவள்பக்கம் திரும்பாமல் பதில் சொன்னான். 

அம்மாவுக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்ததுபற்றிகூட அவனுக்கு சிந்தனையில்லையா? அங்கேயே நின்று அவனை சிலகணங்கள் பார்த்தாள் அவள். பின் வேகமாகச் சென்று அலமாரியில் fநாவலுக்குள் செருகி வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு பால்கனி கதவைத் திறந்தாள் அகிலா. நாற்காலியில் உட்கார்ந்து மேலே பார்த்தாள்.

மேகமூட்டத்துடன் ஒரேயடியாக இருண்டு கிடந்தது வானம்.  இன்றாவது மழைவருமா, இல்லை ஏமாற்றுவேலைதானா? ஈரக்காற்று அவள் முகத்தை ஜில்லென்று வருடிச் சென்றது.  எங்கோ மழைபெய்திருக்கிறது…

பால்கனி லைட்டைப்போட்டாள். கையிலிருந்த இன்லேண்ட் லெட்டரைத் திறந்தாள். கண்ணில் மீண்டும் பட்டது கடைசிவரிகளாக அவளது மாமனார் எழுதியிருந்தது.  ’நான் சொன்னேனா இல்லியா, என் புள்ள மனசு ஒன்னும் கல் இல்லன்னு!’ என்று இப்போதெல்லாம் அடிக்கடி என்னை சீண்டுகிறாள் உன் அம்மா’.  தன் மாமியாரின் சாந்தமான முகம் அவள் கண்முன் தோன்றி மறைந்தது.

கூடவே அன்று ஹேமாவுடன் கையசைத்துச் சென்ற அர்விந்தின் முகமும்.

அகிலாவின் கண்கள் ஈரமாயின. தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் : 


‘ஆமா  அத்தை.. ஒங்களோட இன்னொரு மகனோட மனசு இருக்கே, அது கல் இல்லே...




***************************************************



தமிழ்மணத்தில் வாக்களிக்க........

85 கருத்துகள்:

  1. அன்பின் ஏகாந்தன் அவர்களின் கைவண்ணம் அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. >>> புள்ளை மனசு ஒன்றும் கல் இல்லை..<<<

    நெகிழ்வான வரிகள்..

    பதிலளிநீக்கு
  3. இப்படியும் பிள்ளை? பெற்றவளை ஒரு முறை போய்ப் பார்க்கக் கூட மனமில்லாப் பிள்ளை! நல்லவேளையா இவங்களுக்குக் குழந்தை இருப்பதாகச் சொல்லலை! இருந்தால் அதுவும் இப்படித் தான் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும்! :(

    பதிலளிநீக்கு
  4. கதை நெகிழ்ச்சியாக இருந்தது. பயணத்தின் அவசரத்திலும் படித்துவிட்டேன். நிறைய சமயம் ஓட்டம் போடுகின்ற உலகில் பணத்துக்குத் தேவைக்கு மிக அதிகமான மதிப்பு வந்துவிடுகிறது. இந்தக் கதைக்கு பீரியட் (1992) தேவையில்லையே. இரண்டு நாட்கள் முன்பு ரேடியோப்பெட்டி தமிழ்ப்படம் பார்த்தேன். இதைப்போன்ற தகப்பனின் அருமை புரியாத மகனின் கதை. பாராட்டுகள் ஏகாந்தன்.

    மே மாதம் அனுப்பிய கதை 4 மாத கர்ப்ப காலத்துக்குப்பின் வெளியிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். பீரியட் கதை வெளியிடவும் பீரியட் :)

    பதிலளிநீக்கு
  5. முடிவில் நல்ல மாற்றத்தை தந்த விதம் அழகு வாழ்த்துகள் திரு. ஏகாந்தன்.

    பதிலளிநீக்கு
  6. துளசி: கதை பல உணர்வுகளைத் தந்தது. நன்றாக இருக்கிறது. ஸ்ரீதர் மீது கோபம் வந்தது. இப்படியும் ஒரு பிள்ளையா என்று. பிள்ளை என்பதை விட இப்படியும் ஒரு மனிதனா என்றும் தோன்றியது. அகிலா இறுதியில் நினைப்பது போல் அரவிந்தன் தான் மகன்!!! பெறாவிட்டாலும் மகன்! ஈரம் மனதிலும் ஈரம் கசியவைத்தது ஏகாந்தன் ஸார். பாராட்டுகள். உங்கள் தளத்தைக் குறித்துக்கொண்டுவிட்டோம்.

    கீதா: ஏகாந்தன் சார் கதை மிக நன்றாக இருக்கிறது. உங்கள் முதல் இரண்டு பத்திகளும் ஆ! என்ன என்ன நடந்தது என்று பரபரக்க வைத்தது. யார் இவர்கள் என்ன நடந்தது என்றெல்லாம்...

    ஸ்ரீதரின் மனம் இத்தனைக் கல்லானதா? மனிதனா? இப்படியும் மனிதர்களா? மென்மையான மனதுடைய அகிலாவால் எப்படி ஸ்ரீதரை ஏற்றுக் கொள்ள முடிகிறது? இதோ மீண்டும் வருகிறென்...

    பதிலளிநீக்கு
  7. கதை ஈரம் நிஜமாகவே ஈரம் தான்...எந்தக் காலக்கட்டத்திலும் பணத்தின் தேவையும், பணம் கடன் கேட்டால் வரும் சில கசப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. பணம் பத்தும் செய்யும் என்பதில் உறவைக் கூட முறிக்கும் என்பதும் அடங்கும் தான். ஆனால் எக்காலக்கட்டத்திலும் ஈர நெஞ்சம் உள்ள அரவிந்தன் போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    மாமியாருக்கு ஆப்பரேஷன் என்ற கடிதம் அதுவும் ஏற்கனவே ஆப்பரேஷன் விஷயம் தெரியும்... அரவிந்தனும் ஹேமாவும் உதவியிருக்கிறார்கள் எனப்தும் கடிதத்தில் இருக்கிறது... அகிலாவுற்குத் தான் நேரில் சென்று மாமனார் மாமியாருக்கு உதவ முடியலையே என்ற வருத்தம் மற்றும் தான் நின்று செய்ய வேண்டியதை ஹேமா வும் அரவிந்தனும் செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்து அகிலா ஃபீல் பண்ணியாதகவோ.... அகிலா தான் மட்டுமேனும் புறப்பட்டுச் செல்ல முயற்சி செய்து ஸ்ரீதரிடம் அதைப் பற்றி பேசியிருப்பதாக ஒரு சில வரிகள் குறிப்பிட்டிருக்கலாமோ ஸார். தன் பெற்றோரிடமே கல் நெஞ்சைக் காட்டும் ஸ்ரீதருக்கு அந்தச் சமயத்திலும் அவனுக்குப் பிடிக்கும் என்று கோஃப்தா செய்து போட்டு அவனிடம் கடித விஷயத்தைச் சொல்லனுமா என்று தோன்றியது...அகிலா மென்மையானவள்தான் என்றாலும் அவள்
    மற்ற பெண்களைப் போலல்லாமல் சற்று முற்போக்குக் கேரக்டர் என்று சொல்லியிருப்பதால், தன் எண்ணங்களை, கோபத்தைச் சற்று வெளிப்படுத்தியிருக்கலாமோ....

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீதர் பேசிய வார்த்தைகளின் அதிர்ச்சியில் அன்று அடுப்பைப் பற்ற வைத்து அணைத்து, பாத்திரங்களை உருட்டி மிக இயல்பாக கோபத்தை வெளிப்படுத்திய அகிலா...ஸ்ரீதர் தன் பெற்றோருக்குப் பணம் அனுப்ப மறுத்த போதும் ஆப்பரேஷனுக்குச் செல்லாத போதும் வெளிப்படுத்தியிருக்கலாமோ என்பதால் எழுந்ததே இதற்கு முந்தைய வரிகள்..

    கடைசி வரிகள்..பால்கனியில் உட்கார்ந்து கடிதத்தை வாசித்து .அகிலா நினைப்பதும் ... அந்த வரிகளும் ஹைலைட் ஸார்!!!! அருமை!!! ரசித்த வரிகள் !!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மிக நன்றாக இருந்தது கதை!! கதையின் போக்கில் முடிவை யூகித்து விட்டேன் எனினும் நெகிழ்வாக இருந்தது!!

    நல்ல வேளை, இது சீதை ராமனை மன்னிக்கும் கதையல்ல, மன்னிக்க முடியாத ராமன் இந்த ஸ்ரீதர்!!

    வாழ்த்துக்கள் எழுத்தாளருக்கும் எங்கள் ப்ளாகுக்கும்!!

    பதிலளிநீக்கு
  10. பிள்ளையை பணம் அனுப்ப விடாமல் மருமகள் தடுத்து நிறுத்துவதாகக் கதைகள் படித்ததுண்டு. இது எப்பேர்பட்ட மருமகள்? இம்மாதிரி பாசமுள்ள ,ஒரு பெண்ணிற்கு கணவன் அமைந்த முறை மனதை கலக்கியது. நண்பன் மூலமாக இந்தப்பிள்ளையின் பணமும் அந்தத் தாய்க்கு மறைமுகமாக உதவியது என்பதில் சிறிது கடமையைும் செய்ததாக கதைஉணர்த்திது. எப்படியோ? வாஸ்தவத்தில் இப்படியும் பிள்ளைகள். உருக்கமாக இருந்தது. அணிப்பிள்ளை.தென்னம்பிள்ளை,கீரிப்பிள்ளை, இவைகளெல்லாம் மேலானவை, இந்தப் பெற்ற பிள்ளையைவிட. அகிலா இரண்டு வார்த்தை காட்டமாகக் கணவனைப் பேசி இருக்க வேண்டும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. //அவரது தளம் ஏகாந்தன் Aekaanthan.//

    விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ... இதைப் பார்த்த பின்பும் இந்த உசிரு இந்த உடல்ல இருக்குமெண்டோ நினைக்கிறீங்க?:).. மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்:) ஃபயபிரிகேட்டருக்கு அடிச்சூஊஊஊஊஊஉ அதிராவைக் காப்பாத்துங்கோ:))

    பதிலளிநீக்கு
  12. நண்பர்களின் சரிதம் மகத்தானது.

    நீங்களும் அப்படியான சரிதத்தில் ஒரு ஏட்டைப் புரட்டிச் சொன்ன கதை நன்றாக இருந்தது.

    மனைவிமார்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் நிலைமை இருந்தால் இந்தக் கதை எப்படி எழுதப் பட்டிருக்கும் என்ற யோசனையும் இன்னொரு கிளைக்கதையாய் மனசில் உதித்தது. இதிலிருந்து அதற்கு என்கிற மாதிரி ஒரு கற்பனையால் தான் இன்னொரு கற்பனையைத் தூண்ட முடியும். அப்படித் தூண்டிய கைங்கரியத்தைச் செய்தமைக்கு நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
  13. ///ஸ்ரீதருக்கும் அகிலாவுக்கும் ஆசீர்வாதம். நான்தான் உன்னைக் குறைசொல்லிக்கொண்டிருந்தேன் ஸ்ரீதர், நீயோ உன் அம்மாவின் நம்பிக்கை பொய்க்காதவாறு பணம் அனுப்பி அவளது வயிற்றில் பால் வார்த்துவிட்டாய். ஆபரேஷன் நல்லபடியாக புதன்கிழமை முடிந்தது.///

    இந்த வரிகள் படிக்கும்போது எனக்குக் கதை புரிந்துவிட்டது... இப்படியான இன்னொரு கதை எங்கோ படித்திருக்கிறேன் அதனால் கூட இருக்கலாம். பெயர்களில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது.. 2 ம்தடவை படிச்சு மனதில நிறுத்திக் கொண்டேன்...

    ஆனா ஸ்ரீதர் போன்றோர் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. எதுக்குமே அசைய மாட்டார்கள்... எனக்கொரு சந்தேகம் இப்படியானோருக்கு நல்ல மனைவி, நல்ல நட்புக் கிடைத்து விடுகிறது... அதனால்தான் டோண்ட் கெயார் ஆக இருக்கிறார்கள்... தாம் எப்படி நடப்பினும் தம்மை விட்டு யாரும் பிரியமாட்டார்கள் எனும் நம்பிக்கை அவர்களுக்கு... ஒரு நாளைக்கு தூக்கி எறிஞ்சு நடந்தால்தான், தம் தவறு புரியும் ஸ்ரீதர் போன்றோருக்கு.

    பதிலளிநீக்கு
  14. எப்பவும் மருமகள்மாரைக் குறை சொல்வார்கள், ஆனால் பல குடும்பங்களில் அதிரா போல.. சே..சே.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு:).. அகிலா போன்ற பெண்கள் இருக்கிறார்கள் என்பது நிஜம். பல ஆண்கள்.. தாமுண்டு தன் வேலையுண்டு என்றே இருக்கிறார்கள்.. இதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் பெண்கள்.. கணவர் குடும்பத்தைக் கைவிட்டு விட்டு தன் குடும்பத்தை மட்டும் தூக்கி நிறுத்தி விடுகிறார்கள்...

    ஆனா அகிலா மாதிரிப் பெண்கள் நீதி நியாயம் கடவுள் என கட்டுப்பட்டு இரு குடும்பத்தையும் பலன்ஸ் பண்ணி நடத்துகிறார்கள்.

    பல விசயங்களை.. பல உண்மைகளை எடுத்துச் சொல்லி நகர்த்தப்பட்டிருக்கு கதை. அழகாகச் சொல்லிய விதம் அருமை. இக்கதை பல வருடங்களுக்கு முன்பட்ட காலத்துக்கதையாகத் தெரிகிறதே:).. ஏனெனில் ரெலிபோன் இல்லை, ஈ மெயில் இல்லை.. நேரில் பார்த்தால் மட்டுமே பேச முடியுது... கடித்தத்திலேயெ தகவல் பரிமாற்றம்... ஆனா ஒரு டவுட்டூஊஊஊஊஊ பன்னீர் மட்டும் அப்போ இருந்துதோ?:) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  15. இப்படியும் சில மகன்கள் :(

    சிலர் மட்டும் ஏன் இப்படி விட்டேற்றியா இருக்காங்க ..மருமகள் அகல்யா நல்லவேளை நல்லவராக இருக்கிறார்

    சில நேரம் கால ஓட்டத்தில் கணவரின் குணம் மனைவிக்கோ அல்லது மனைவியின் குணம் கணவருக்கோ தொற்றும் ..கடவுளே நல்லவேளை அகல்யா ஸ்ரீதரை கொண்டு வரவில்லை பின்னாளில் ஸ்ரீதர் அகல்யாவை போல மாறினாலும் பரவால்ல .

    90 களில் இப்படிப்பட்ட பணம் 5000 என்றாலும் பெரிய விஷயம்தான் ..அதை கொடுத்துதவிய அர்விந்த் ஹேமா கிரேட் ..

    பதிலளிநீக்கு
  16. ஹலோ மியாவ் பனீர் சென்னைக்கு லேட்டா வந்தாலும் பெங்களுர் க்கு அப்போவே வந்திடுச்சு
    தமிழ்நாட்டுக்காரங்க பொங்கல் தோசை இட்லியை விட்டு வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சி :)

    பதிலளிநீக்கு
  17. ///Angelin said...
    ஹலோ மியாவ் பனீர் சென்னைக்கு லேட்டா வந்தாலும் பெங்களுர் க்கு அப்போவே வந்திடுச்சு
    தமிழ்நாட்டுக்காரங்க பொங்கல் தோசை இட்லியை விட்டு வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சி :)///

    நீங்க சொல்வதை படு வன்மையாக நான் நம்புறேன் அஞ்சு:).. இதிலிருந்து தெரியுது நீங்க எந்தக்காலத்து ஆள் என்பது:).. நுணலும் தன் வாயால் கெடுமாமே:).. ஹையோ துரத்துறா.. மீ ரன்னிங்...:))

    பதிலளிநீக்கு
  18. ஆவ் !!என் பக்கம் மியாவ் ஸ்டோரி ஹீரோயின் நினைப்பில் இங்கே அகிலாவை அகல்யான்னு டைப்பிட்டேன் :)

    திருத்தி வாசியுங்க அகிலா என்று

    பதிலளிநீக்கு
  19. வெவெவே அதிராக்கு :)

    இன்னாது பன்னீரா :) ஓஓ பன்னீர் சந்தானம் எல்லாம் அப்போவே வந்தாச்சு

    பதிலளிநீக்கு
  20. //Angelin said...
    ஆவ் !!என் பக்கம் மியாவ் ஸ்டோரி ஹீரோயின் நினைப்பில் இங்கே அகிலாவை அகல்யான்னு டைப்பிட்டேன் :)

    திருத்தி வாசியுங்க அகிலா என்று//

    ஹா ஹா ஹா கு..கு....:)

    பதிலளிநீக்கு
  21. //தமிழ்நாட்டுக்காரங்க பொங்கல் தோசை இட்லியை விட்டு வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சி :)

    எதுக்காக விட்டு வரணும்? இட்லி தோசைக்கு ஈடாக உலகம் முழுதும் ஒரு பண்டம் கிடையாது. சிம்பல் அண்ட் ஹம்பல்.

    பன்னீர், நான், கோப்தா எல்லாம் தமிழ் நாட்டுலந்து வடக்கே போனது தான்.. சங்க இலக்கியத்துல இருக்கு.. (சும்மா சொல்லி வைப்போம்.. அவனவன் தெர்மாகோல் பிடிச்சு தண்ணியைக் காப்பாத்தப் போறான்.. நாம பன்னீரைப் பிடிச்சு தமிழைக் காக்கக் போவோம்)

    பதிலளிநீக்கு
  22. //மனைவிமார்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் நிலைமை இருந்தால் இந்தக் கதை எப்படி எழுதப் பட்டிருக்கும் என்ற யோசனையும் இன்னொரு கிளைக்கதையாய் மனசில் உதித்தது.

    ஜீவி ஜீவி தான்.

    பதிலளிநீக்கு
  23. ஹலோ மியாவ் பனீர் சென்னைக்கு லேட்டா வந்தாலும் பெங்களுர் க்கு அப்போவே வந்திடுச்சு
    தமிழ்நாட்டுக்காரங்க பொங்கல் தோசை இட்லியை விட்டு வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சி :)//

    ஹாஹாஹா ஏஞ்சல் இது வேற ஏதோ சொல்லுது போல இருக்கே ஹையோ!!!பெங்களூரரூக்குப் போனது..??!! தமிழ்நாட்டுக்கு பனீர் லேட்டா வந்தாலும்.....பனீர் தான் இப்ப...வேண்டா வேண்டா.....ஏஞ்சல் நீங்க சொன்னது நிஜமாவே பனீர் டிஷ்தானே!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  24. //ஏஞ்சல் நீங்க சொன்னது நிஜமாவே பனீர் டிஷ்தானே!!! ஹிஹிஹிஹி //

    ஹஆஹாஆ :) இந்தாங்க மிக்ஸர் :)


    பதிலளிநீக்கு
  25. //பன்னீர், நான், கோப்தா எல்லாம் தமிழ் நாட்டுலந்து வடக்கே போனது தான்.. சங்க இலக்கியத்துல இருக்கு.. (சும்மா சொல்லி வைப்போம்.. அவனவன் தெர்மாகோல் பிடிச்சு தண்ணியைக் காப்பாத்தப் போறான்.. நாம பன்னீரைப் பிடிச்சு தமிழைக் காக்கக் போவோம்)//

    ஹாஹாஹாஹாஹா ஹையோ செம அப்பாதுரை சார்....சிரிச்சு முடிலைப்பா....

    கீதா

    பதிலளிநீக்கு
  26. மனைவிமார்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் நிலைமை இருந்தால் இந்தக் கதை எப்படி எழுதப் பட்டிருக்கும் என்ற யோசனையும் இன்னொரு கிளைக்கதையாய் மனசில் உதித்தது. இதிலிருந்து அதற்கு என்கிற மாதிரி ஒரு கற்பனையால் தான் இன்னொரு கற்பனையைத் தூண்ட முடியும். //

    வாவ்! ஆமாம்ல ஜீவி ஸார் சூப்பர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. @அப்பாதுரை :)

    //எதுக்காக விட்டு வரணும்? இட்லி தோசைக்கு ஈடாக உலகம் முழுதும் ஒரு பண்டம் கிடையாது. சிம்பல் அண்ட் ஹம்பல்.

    totally agree with you :)

    குழம்பு சாம்பார்னு எதுனாலும் அதில் மினி இட்லீயை மிதக்கி சாப்பிடற மாதிரி வருமா :)



    பன்னீர், நான், கோப்தா எல்லாம் தமிழ் நாட்டுலந்து வடக்கே போனது தான்.. சங்க இலக்கியத்துல இருக்கு.. (சும்மா சொல்லி வைப்போம்./

    கொஞ்சம் பயந்திட்டேன் உண்மையிலேயே சங்க இலக்கியத்தில் இருக்கோன்னு :)



    பதிலளிநீக்கு
  28. கற்பனைக் கதையை ஆராய்ச்சி செய்வது அபத்தம். எனினும் கற்பனைகள் அனுபவத்தின் நீட்சி என்று ஏகாந்தன் கோடு போட்டுக் கொடுத்திருப்பதால்.. கொஞ்சம் ரோடு போடுவோமே? ஸ்ரீதரின் குணச்சித்திரம் நன்றாக இருக்கிறது.

    என் மிக நெருங்கிய நண்பன் இப்படித்தான். வெளி நாட்டில் வேலைக்காகப் போயிருந்த போது அவசரமாக அவனிடம் ஐந்தாயிரம் டாலர் கேட்க வேண்டியிருந்தது - இரண்டே நாளில் திருப்பி விடுவதாகச் சொல்லிக் கேட்டேன். kyc காரணமாக எனக்கு வர வேண்டிய பெரிய தொகை முடங்கி விட்டது - வெளி நாட்டில் இருந்ததால் புரட்டவும் முடியவில்லை என்று அவனிடம் எல்லாம் விளக்கி ஒரு வழியாகக் கடன் கொடுத்தான். அடுத்த சில நிமிடங்களில் என் இன்னொரு நண்பன் எனக்கு இமெயில் அனுப்பி விசாரித்தான்.. என்னவென்று பார்த்தால் கடன் கொடுத்த நண்பன் என் வட்டாரம் முழுதும் கடன் கொடுத்ததை அறிவித்திருக்கிறான். இரண்டு நாளில் நான் திருப்பியதும் மறு அறிவிப்பு செய்தானா என்றால் இல்லை. தன குடும்பத்தைப் பொறுத்த வரையில் இன்னும் கறார். ஒரு முறை சரவணபவனில் சாப்பிட்டதும் அப்பாவின் பங்கைக் கேட்டு வாங்கியது ஆச்சரியமாக இருந்தது. அப்பாவிடம் பதினொரு ரூபாய் சில்லறை இல்லை. "சாப்பிட வரப்பவே சில்லறை எடுத்துட்டு வர தானே?" என்று எங்கள் முன் கேட்டதும் இல்லாமல், "கடைல மாத்திக் குடுப்பா" என்றான். அப்பாவும் சலனமே இல்லாமல் பக்கத்துக் கடையில் சில்லறை மாற்றிப் பையனிடம் கொடுத்தார்.

    சிறு வயதிலிருந்தே நண்பன் இப்படித்தான். நண்பர்கள் வட்டாரத்தில் அவனைக் கிண்டல் செய்வோமே தவிர ஒருவர் கூட வெறுத்து ஒதுக்கியதில்லை.

    சில நேரம் ஸ்ரீதர்கள் தேவை என்றே நினைக்கிறேன். அவசரம் என்று நட்பின் போர்வையில் லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு பத்து வருடத்துக்கு மேல் அமுக்கமாக இருக்கும் அயோக்கியத்தனத்துக்கு ஸ்ரீதர்தனம் எவ்வளவோ மேல். அர்விந்த் மேல் மதிப்பு ஏற்படவில்லை.

    பதிலளிநீக்கு
  29. //குழம்பு சாம்பார்னு எதுனாலும் அதில் மினி இட்லீயை மிதக்கி சாப்பிடற மாதிரி வருமா :)

    ஒரேயடியா மிதப்படுத்திட்டீங்களே நியாயமா?
    தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காயச் சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வேர்க்கடலை சட்னி, பூண்டு சட்னி, மிளகாய்ப் பொடி, எள்ளுக் காரப்பொடி, கத்தரிக்காய் கொத்சு, பச்சை மிளகாய் கொத்சு, வெங்காய கொத்சு, வெங்காய சாம்பார், முருங்கை சாம்பார்.. என்று வகைக்கு ஒன்றாய் பெரிய தட்டில் வட்டமாக வைத்துக் கொண்டு நடுவில் டஜன் மினி இட்லிகளைக் குவித்து.. சட்னி பொடி சாம்பார் பொடி சாம்பார் சட்னி சாம்பார் சட்னி பொடி என்று பிட்டுத்தொட்டு தொட்டுப்பிட்டு பிட்டுத்தொட்டு விழுங்கும் சுகம் இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
  30. வற்றல் குழம்பு, புளிக்காய்ச்சல், மோர்க்குழம்பு மறந்து விட்டது.

    சப்பாத்தி கிப்பாத்தி எல்லாம் இப்படி சாப்பிட முடியுமான்னேன்?

    பதிலளிநீக்கு
  31. நன்றாக இருக்கிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  32. @ நெல்லைத் தமிழன்:

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    தூர்தர்ஷன், கடுதாசி காலம், செல்ஃபோன் இல்லாத காலம் எனச்சொல்லாமலே அதிரா போன்றவர்களை எச்சரிக்கத்தான் பீரியட் கதை என்றேன்!

    பதிலளிநீக்கு
  33. @ துரை செல்வராஜு:

    பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  34. ஹாஹா :) ம்ம் அப்புறம் வெஜிடபிள் குருமா இட்லி கும்பகோணம் கொத்ஸு :) அதையும் சேர்த்துக்கோங்க
    இங்கே லண்டன் வெதருக்கு மாவு புளிக்கிறதே கஷ்டம் :) அப்படியே செஞ்சாலும் ஒன்லி தோசை மட்டுமே இங்கே வீட்ல வேகமா இறங்கும் .அதனால் அப்படியே உங்க பின்னூட்டத்தை ரசிச்சி அதனை வெரைட்டிசும்சாப்பிட்டமாதிரி நினைச்சிக்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  35. @ கீதா சாம்பசிவம்:

    கதை ரொம்ப டென்ஷனைக் கொடுத்துவிட்டதோ! இல்லாத குழந்தையைப்பற்றியும் கவலைப்பட்டிருக்கிறீர்கள். என்ன செய்வது - ‘ஸ்ரீதர்கள்’ இருக்கிறார்கள்.
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. சப்பாத்தி நம் மேல் டயபடீஸ் பெயரால் திணிக்கப்பட்ட உணவு என்று ஒரு உணவு க்ரூப் இல் படிச்சேன் :)

    பதிலளிநீக்கு
  37. @ கரந்தை ஜெயக்குமார்:

    கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  38. @ கில்லர்ஜி :

    கருத்து/வாழ்த்துக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  39. @ டி.என்.முரளீதரன் - மூங்கில்காற்று:

    வருகை/கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  41. @ பரிவை சே.குமார்:

    வருகை / வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  42. ஆமாம் ஏகாந்தன் சார் ..இங்கே கணவரின் நண்பர் ஒருவர் கெட் டு கெதர் இந்த போது சந்தித்தேன் அப்போ சொல்றார் தன் வயதான தகப்பனுக்கு தான் வெளிநாடு வந்ததுமுதல் 20 வருஷமா அனுப்பிய பணத்துக்கு ரசீது வச்சிருக்கேன் என்று மெகா பெருமையுடன் சொல்லிக்கொண்டிருந்தார் ..எடுத்து வேறு காட்டினார் ..கையில் காபி இருந்தது அப்படியே கொட்டி எல்லா ரசீதையும் இல்லாம போக்கலாமான்னு தோணிச்சி :(

    பதிலளிநீக்கு
  43. @ Thulasidharan V Thillaiakathu :

    @ துளசி: வருகை, பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி. நட்பு ஒருபுறமிருக்க, அவரவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களைக் கதையில் கொண்டுவர முயன்றேன்.

    @ கீதா: உங்கள் ஆதங்கம் புரிகிறது! அகிலாவை ஸ்ட்ராங் கேரக்டராக மட்டுமல்ல; வித்தியாசமான பெண்ணெனவும் காட்டியுள்ளேன். தன் கணவனை ஆழ்ந்து அறிந்தவள் என்பதோடு, வார்த்தை சிதறல்களால் இங்கு ஒன்றும் பெரிதாக மாறாது என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததும் ஒருகாரணம். மேலும் அதுதான் அர்விந்த்-ஹேமா வருகையின்போது அந்தப்பேச்சை அவர்கள் முன்னேயே அகிலா எடுக்கப்போய் அது ரஸாபாசமாகப் போய்விட்டதே !

    இன்னொன்று: வாத/விவாதங்களை சேர்த்துக்கொண்டே போனால் சிறுகதை நீண்டு குறுநாவலாகிவிடும் ஆபத்து ..!

    பாராட்டு/கருத்துகளுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  44. @ middleclassmadhavi :

    வ்ருகை/வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. @ புலவர் இராமானுசம்:

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  46. @ காமாட்சி:

    வருகைக்கும் உணர்வுபூர்வமான கருத்துக்கும் மனங்கனிந்த நன்றி.

    அகிலா விஷயத்தில் நீங்களும் கீதா ரெங்கனைப்போல் உணர்ந்திருக்கிறீர்கள். அவருக்கான பதிலையும் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  47. @ அதிரா:

    என்ன செய்வது, அர்விந்த் போன்று சிலர் இருந்தால் ஸ்ரீதர்போலவும் சிலர் இருப்பார்கள்தானே.. நல்லவள் ஒருத்தி தனக்கு மனைவியாக இருக்கிறாள், விட்டுப்போகமாட்டாள் என்று கேஷுவலாக இருப்பதும் ஸ்ரீதர் போன்றோரின் லட்சணமாகத்தானே இருக்கும்.

    அதான் முன்னுரையிலேயே எச்சரித்திருக்கிறேனே –இது ஒரு பீரியட் கதை என்று. 1992-ல் நடக்கிறது என்பதும் கதையிலே தெரிகிறதுதானே..அப்புறம் மொபைலைக்காணோம், வாட்ஸப்பைக்காணோம் என்றால் எப்படி மேடம்?

    பன்னீர் (சாப்பிடுகிற சங்கதி)பற்றி அஞ்சு, அப்பாதுரை விளக்கங்களில் உங்களுக்குத் தெளிவு கிடைக்கலாம்!

    வருகை, புகழ்ச்சிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  48. ///அப்புறம் மொபைலைக்காணோம், வாட்ஸப்பைக்காணோம் என்றால் எப்படி மேடம்? ///

    ஹையோ நான் மேடம் இல்லை கன்னி:)).. ஆஆஆஆஆஆஅ அது என் ராசியைச் சொன்னேன்ன்:) கடவுளே எங்கின போனலும் விரட்டி விரட்டி அடிக்கினமே:)).. இனிக் கட்டிலுக்குக் கீழயே இருந்திட வேண்டியதுதேன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
  49. @ ஜீவி:

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    நட்பெனும் கதை உன்னதமாயினும் மிகவும் விட்டுக்கொடுத்துப் போகவேண்டியிருக்கிறது இப்போதெல்லாம்.

    உண்மை. கற்பனையிலிருந்து கற்பனை எனத் தாவிக்கொண்டிருப்பது ஒரு
    கதாசாரியனுக்கு அழகுதான்.

    பதிலளிநீக்கு
  50. @அப்பாதுரை:

    உங்களது நண்பர் கதை பயங்கரமாக இருக்கிறதே. இருக்கிறார்கள் இப்படியும் மனிதர்கள். ஆயினும் அப்பனிடமே தின்னதற்குக் காசு வாங்கிக்கொள்ளும் அல்பத்தனம் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம்தான். இருந்தும் நட்பு தொடர்கிறது என்பது நல்லவிஷயம்.

    நட்பைச்சொல்லி காசு வாங்கி, கொடுக்காமல் தட்டிக்கழிக்கும் பிரகஸ்பதிகளை நானும் பார்த்திருக்கிறேன். இதற்கு ஸ்ரீதர்த்தனமே பரவாயில்லை என்கிறீர்கள். சரிதான். தொல்லை குறைவு.

    வருகைக்கும், ரஸமான கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  51. @ ஏஞ்சலின்:

    மகன்கள் மகான்களாக இருந்துவிட்டால் அப்புறம் சுவாரஸ்யமென்ன இருக்கிறது உலகில்?

    வருகை/கருத்துக்கு நன்றி.

    பனீர் விஷயத்தில் அதிராவுக்கு ‘விளக்கியதற்கு’ மேலும் நன்றி.

    பதிலளிநீக்கு
  52. @ அசோகன் குப்புசாமி:

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  53. முதல் கதையா ,நம்ப முடியவில்லை ...ஆற்றோடையான நடை ,வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  54. @ ஸ்ரீராம்:

    சிறுகதையை வெளியிட்டமைக்கு மனங்கனிந்த நன்றிகள்.

    இத்தனைக் கருத்துப்பகிர்தல்களோடு, பன்னீர், நான், கோஃப்த்தா, சப்பாத்தி, தோசை, சாம்பார், சட்னி, பொடிவகைகள், மினி இட்லியை மிதக்கவிடல், உள்ளே தள்ளுதல் என விதவிதமான பரவசங்கள் எல்லாவற்றுக்குமான basic credit உங்களையே சாரும். அதனால் மேலும் நன்றி.

    பதிலளிநீக்கு
  55. @ பகவான் ஜி:

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  56. @ அப்பாதுரை:

    //தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காயச் சட்னி, புதினா சட்னி....நடுவில் டஜன் மினி இட்லிகளைக் குவித்து.. தொட்டுப்பிட்டு பிட்டுத்தொட்டு விழுங்கும் சுகம் இருக்கிறதே..//

    ஓ! அடுத்த ரெஸிப்பி க்ளாஸ் எடுக்கப்போறது நீங்கதானா!

    பதிலளிநீக்கு
  57. @ ஏஞ்சலின்:

    20 வருஷமா அப்பாவுக்கு அனுப்பிய காசுக்கு ரசீதா? கடவுளே, இந்தமாதிரி ஆசாமிகளை ஏன் கீழே அனுப்புகிறாய்?

    பதிலளிநீக்கு
  58. அற்புதமான கதை. எப்படி எல்லாம் மனிதர்கள். நீங்கள் சொல்லி இருப்பது உண்மையே. மனைவிகளுக்குக கணவனை நன்றாகத் தெரியும். அநாவசிய வார்த்தைகள் இல்லாமல் கதையை நிமிர்த்துவிட்டீர்கள் ஏகாந்தன்.

    பதிலளிநீக்கு
  59. இயல்பாக ஶ்ரீதர் போன்ற குணபாத்திரங்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன செய்வது.நல்ல முறையில் பிரச்சினை தீர்ந்தது. நல்ல கட்டமைப்பு. மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  60. @ வல்லிசிம்ஹன்:

    வாருங்கள். கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    மரபுவழி செல்லாது வேறு பாதையில் பயணிக்கும் என்னுடைய இன்னொரு சிறுகதை ‘சொல்வனம்’ இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. அதனைப் படித்தால் நீங்கள் என்ன சொல்வீர்களோ! முயற்சியுங்கள்..

    லிங்க்: http://solvanam.com/?p=50149

    பதிலளிநீக்கு
  61. //உங்களிடமிருந்து இம்மாதிரிக் கதைகளையே நான் எதிர்பார்த்திருந்தேன். எங்கள் ப்ளாகில் வெளியிட்டிருப்பதைப் போன்றும் நீங்கள் எழுதுவீர்கள் என்பதை அதைப் படிக்கையில் தெரிந்து கொண்டேன். இந்தக் கதையும் அருமையாக இருக்கிறது. உள்ளார்ந்த சோகத்தை வெளிப்படுத்தும் மனிதனின் சோகத்தின் காரணம் கடைசிவரை சொல்லப்படாததும், வாசகர்களின் யூகத்துக்கே விட்டதும் நன்றாகவே இருக்கிறது! சுட்டிக்கு நன்றி. // சொல்வனத்தில் என்னுடைய கருத்து!

    பதிலளிநீக்கு
  62. @ கீதா சாம்பசிவம்:

    அந்தக் கதையை வாசித்ததிற்கும் தொடர்பான கருத்திற்கும் நன்றி.
    ஸ்ரீராமின் பின்னூட்டத்தைத் தவிர சொல்வனத்தில் என் கதைக்கு எந்தப்பின்னூட்டமும் காணோமே. ஒருவேளை அப்ரூவலுக்கு நேரமாகிறதோ என்னவோ. பார்ப்போம்.

    அந்தப் பின்னூட்டத்தை இங்கே ரிப்பீட் செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  63. ஏகாந்தன், நாலைந்து முறை முயன்றும் எரர் வந்து கொண்டே இருந்தது. அதனால் வரலையோ என்னமோ! காப்சா எல்லாம் சரியாத் தான் கொடுத்தேன்! :) எதுக்கும் இருக்கட்டும்னு காப்பி, பேஸ்ட் பண்ணி வைச்சதால் இங்கே போட முடிந்தது. :)

    பதிலளிநீக்கு
  64. இந்த மாதிரி கதைகள் நிகழ்வது சாதாரணம் ஆனால் அதை சொல்லும் விதத்தில் சொல்லிச் செல்வது ரசிக்க வைத்தது சில உண்மை சம்பவங்கள் கற்பனையைவிட் சுவாரசியமாயிருக்கும் வாழ்த்துகள் ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
  65. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்:

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  66. தத்தானி :( என்னமோ தெரில தேம்பி தேம்பி அழுதிட்டேன் வாசிக்கும்போது ..


    எந்த அடையாள அட்டையும் தேவைப்படாத அவ்வுலகுக்கு கஷ்டமில்லாம செல்ல எனக்கும் ஆசை ஆனா போறதுக்குள்ள இங்கே பூவுலகின் ஹிம்ஸையெல்லாம் காட்டிடறார் கடவுள்

    //மனம் நிகழ்காலத்தில் நடந்துவர சண்டித்தனம் செய்தது. பின்னோக்கிப் பயணிப்பதில் ஜென்ம சாபல்யம் கண்டது.//


    சூப்பர்ப் சார் மனதை என்னமோ செய்தது கதை ..அப்படியே அந்த சூழலில் இருந்த உணர்வு

    பதிலளிநீக்கு
  67. @ ஏஞ்சலின்:

    மீள் வருகைக்கு நன்றி. லிங்க்கைத் தொடர்ந்துசென்று அந்தக்கதையையும் படித்து கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றி அஞ்சு.

    பதிலளிநீக்கு
  68. சொல்வனம் சென்று கதையைப் படித்து கருத்துமிட்டேன். மனது அதிலேயே சுழன்றது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  69. ஒரு மனிதனின் மனம் எங்கெல்லாம் போகமுடியுமோ போய்விட்டு ,ராம் நாம் சத்யத்தில் முடிந்து நிற்கிறது. அளவிட முடியாத சோகம்.
    எதனால். ஏதாவது காரணம் வேண்டுமா என்ன..
    ஏகாந்தன், தத்தானி எனும் அன்பு ஜீவனை அறிமுகப் படுத்தியதற்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  70. மிக நல்ல கதை! ஒரு பெண்ணின் பார்வையில் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்த விதம் அருமை! முடிவை யூகிக்க முடிந்தாலும் சிறப்பாகவே இருந்தது. பாராட்டுக்கள்👍💐

    பதிலளிநீக்கு
  71. //கற்பனைக் கதையை ஆராய்ச்சி செய்வது அபத்தம்.//

    அப்பாதுரை சொல்லி இருக்கார். ஒரு பக்கம் ராமாயணம், மஹாபாரதம் எல்லாமும் கற்பனை என்று சொல்லிக் கொண்டு அதை ஆராய்ச்சியும் செய்கிறோம்! :) அதை நம்புவதில்லை எனச் சொல்லிக் கொண்டு குணநலன்களை ஆராய்கிறோம். :) நகை முரண்???????

    பதிலளிநீக்கு
  72. @ காமாட்சி:

    வருகை, கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  73. @ வல்லிசிம்ஹன்:

    இப்போதுதான் பார்த்தேன். நெகிழ்வான கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  74. @ பானுமதி வெங்கடேஸ்வரன்:

    உங்கள் பின்னூட்டத்தை இன்றுதான் பார்த்தேன். பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் கதையிலேயே ஈரம் என்ற தலைப்பில் கருவை சொன்ன விதம் அருமை. அகிலாவின் கருணை, அர்விந்த் ஹேமாவின் பாத்திரப் பாத்திரப்படைப்புகள் கதையோடு ஈரத்தோடு ஒன்றுவதை காணமுடிகிறது. நன்று.

      நீக்கு
    2. முதல் கதையிலேயே ஈரம் என்ற தலைப்பில் கருவை சொன்ன விதம் அருமை. அகிலாவின் கருணை, அர்விந்த் ஹேமாவின் பாத்திரப் பாத்திரப்படைப்புகள் கதையோடு ஈரத்தோடு ஒன்றுவதை காணமுடிகிறது. நன்று.

      நீக்கு
  75. @ Vaduvur Rama :

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கமெண்ட்டை அனுமதிப்பதில் ’எங்கள் ப்ளாக்’ கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்கிறது. இரண்டு கமெண்ட்களும் வந்துவிட்டன!
    லமணிநேரங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!