திங்கள், 10 அக்டோபர், 2016

"திங்க"க்கிழமை பதிவு – வாழைக்காய் பொடிமாஸ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



     இந்த வாரம் 'திங்க'க் கொடுக்கும் கடமை நெல்லைத்தமிழனுக்கு!


     என் ஆபீசில் வேலைபார்ப்பவர்களை எப்போதாவது வீட்டிற்கு அழைத்தால் இந்தக் கறியமுது செய்வேன். இது பொதுவாக எல்லோரும் செய்வதல்ல என்பதால், அவர்களுக்குப் பிடிக்கும். இதுக்கு முக்கியம் ஓரளவு முத்தின வாழைக்காய். இதில் நான் வெங்காயம் சேர்ப்பது என் ஹஸ்பண்டுக்குப் பிடிக்காது. அவங்க, 'ஏன் நம்ம பழக்கத்தை மாத்தி இதுலல்லாம் வெங்காயம் சேர்க்கிறீங்க?' என்பாள். (ஆமாமாம்...  இங்கும் அப்படித்தான் இருந்தது.  ஆனால் இங்கு இப்போது 'பழக்கத்தை' மாற்றி விட்டேன்!!)





     என்னுடைய டேஸ்ட் மாறிடப் போகுதேன்னு அவளுக்கு ரொம்பக் கவலை. அவங்க சொல்றதும் சரிதான். எனக்கு சில மாதங்கள் முன்பு ஆசிரமத்தில் சாப்பிட்ட மதிய உணவு (ஆசிரமம்?) சுவை குறைவதுபோல் தோன்றியது, எதிலும் வெங்காயம் இல்லததால். (ஆமாம்..  அந்த மாளயபட்சப் பதினைந்து நாட்களே கஷ்டம் பாஸ்!)  என்னுடைய சுற்றங்களின் வீட்டிலும் வெங்காயத்தைக் கண்ணால் காணமுடியாது. இனி வாழைக்காய் பொடிமாஸ் செய்முறை.




     ஒரு வாழைக்காயை இரண்டா வெட்டி, (இரண்டு முனைகளையும் கட் பண்ணிவிடவும்) 1 ஸ்பூன் ஆயிலும், கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து (100 மி.லிக்கும் குறைவாக) குக்கரில் வேகவிடவும். அப்புறம் வெளியில் எடுத்து ஆறவிடவும். வாழையில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.  





     ஆறின பின்பு, வாழைத்தோலை உரித்துவிடவும். ரொம்ப சுலபமா வந்துடும். பின்பு, கேரட் சீவியின் துணை கொண்டு, வாழைக்காயைச் சீவிக்கொள்ளவும். இது கஷ்டமாக இருந்தால் (அல்லது, வாழைக்காய் கொஞ்சம் அதிகமாக வெந்துவிட்டால்), கையினால் உதிர்த்துக்கொள்ளவும்.




      கொஞ்சம் இஞ்சியை சீவி (grate) வைத்துக்கொள்ளவும். 1 மேசைக் கரண்டி தேங்காய்த் துருவலையும் வைத்துக்கொள்ளவும். வெங்காயம் சேர்ப்பதானால், நீளவாக்கில் வெங்காயத்தை வெட்டிவைத்துக்கொள்ளவும். தாளிப்பதற்கு, 1 மிளகாய் வற்றல், 1 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு மற்றும் கருவேப்பிலை.



     இலுப்புச் சட்டியில் சிறிது எண்ணெய் விட்டுத் தாளித்தபின், வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின்பு, சீவி வைத்த வாழைக்காய், இஞ்சி, உப்பு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அட்டகாசமான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.





     இது, வற்றல், வெந்தய, புளிக்குழம்புகளுக்கு மிக அருமையாக இருக்கும்.  (நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்... எனக்கும் ரொம்.......பப் பிடிக்கும்)
 


அன்புடன்,

நெல்லைத்தமிழன்

35 கருத்துகள்:

  1. பிரமாதம். இது வெங்காயப் பொடிமாஸ் நெல்லைத் தமிழன்..]
    மாளய பக்ஷம் கொஞ்சம் சிரமம். ரொம்ப சிரமம் இல்லை.
    என் வயசில் நான் பேசலாம்.
    சின்னவர்களுக்குக் கஷ்டமா இருக்கலாம்.
    மத்தபடி மிக நன்றாக இருக்கிறது. ரசித்துச் சாப்பிட வேண்டிய உணவு.
    நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. படமும் குறிப்புகளும் பார்த்தால் சுவையாக இருக்குமென்று தோன்றுகிறது.

    நாம் செய்தால் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை.

    முயல்வோம்.

    த ம

    நன்றி

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் மிகவும் பிடிக்கும்.. நானும் அப்படியே சாப்பிடுவேனாக்கும். :))))

    பதிலளிநீக்கு
  4. இதை “வாழைக்காய் புட்டு” என்று எங்க ஊர்ல சொல்வோம். பூண்டு, காயப் பொடியும் தாளிக்கும்போது சேத்துக்குவேன். ரொம்பப் பிடிக்கும் எனக்கு. இதுல எனக்கு ஒரே ஒரு சிரமம் என்னன்னா, வாழைக்காயைப் பதமாக அவித்து எடுப்பதுதான். சில சமயம் அதிகம் வெந்துவிடும், அல்லது குறைவாக வெந்திருக்கும். பதம் செக் பண்ணுவது இன்னும் கைவரவில்லை. (எதுதான் வந்திருக்கு சமையல்ல...)

    //குக்கரில் வேகவிடவும்//
    பாத்திரத்தில் தண்ணீரில் வேகவிட்டாலே சில சமயம் குழைந்துவிடுகிறது. குக்கர்னா, எவ்ளோ நேரம் வைக்கணும்? புட்டுக்குப் பதமாக வெந்தால்தானே கரெக்டா வரும்...

    பதிலளிநீக்கு
  5. ஹூசேன் அம்மா சொல்வது சரி. குக்கரில் வேக வைத்தால் ரொம்பவே குழைந்து விடும். நான் தண்ணீரைக் கொதிக்க விட்டு வாழைக்காயை இரண்டாக நறுக்கிப் போட்டுத் தோல் நிறம் மாறும் வரை வைத்திருப்பேன். பின்னர் வெந்நீரோடு மூடி வைத்துவிட்டுப் பத்து நிமிஷம் கழித்து எடுத்தால் உதிர் உதிராக வரும். வெங்காயமெல்லாம் இதுக்கு நல்லா இருக்காது. தென்மாவட்டக் கல்யாணங்களில் கல்யாணத்தன்று மதியச் சாப்பாட்டில் வாழைக்காய்ப் பொடிமாஸும், கத்திரிக்காய் பிட்லையும் கட்டாயம் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. இப்போல்லாம் மாறிப் போச்சு! தயிர்ப் பச்சடியுடன் இதைச் சாப்பிட எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  6. //நான் தண்ணீரைக் கொதிக்க விட்டு வாழைக்காயை இரண்டாக நறுக்கிப் போட்டுத் தோல் நிறம் மாறும் வரை வைத்திருப்பேன். பின்னர் வெந்நீரோடு மூடி வைத்துவிட்டுப் பத்து நிமிஷம் கழித்து எடுத்தால் உதிர் உதிராக வரும். //

    இந்த முறையில் செய்து பாக்கிறேன், நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  7. வாழைக்காயை இரண்டாக நறுக்கி வேகவைத்து எடுத்து உறித்து உதிர்த்துக் கொண்டு இஞ்சி,பச்சைமிளகாய், கடுகு உளுத்தம்பருப்புடன் தாளித்து,தேங்காய்த் துருவலும் சேர்த்து சற்று வதக்குவதுதான் எங்கள் அகராதியில் வாழைக்காய் பொடிமாஸ். வெங்காயம் சேர்த்ததில்லை.
    செய்து பார்த்து விட்டால்ப் போகிறது. வெங்காயம் சாப்பிடுவதில்லை என்பதெல்லாம் கிடையாது. நாள்,கிழமை, பூஜை,புனஸ்காரம்,முக்கிய திதிகள் இவைகள் பார்ப்பதோடுஸரி. இன்று ஒரு புது விதம் தெரிந்து கொண்டேன். ஸந்தோஷம்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. #என் ஹஸ்பண்டுக்குப் பிடிக்காது.#
    சொல்வதைப் பார்த்தால் நெல்லைத் தமிழன் இல்லையா ,நெல்லைத் தமிழச்சியா :)

    பதிலளிநீக்கு
  9. பகவான்'ஜி - 'நான் செய்யவேண்டிய வேலைகளை, வேறு வழியில்லாமல், அவங்க பார்த்துக்கறதுனாலயும், பசங்களையும் மேனேஜ் பண்ணறதுனாலயும் (அப்புறம் அன்பாலயும்) அவங்களை ஹஸ்பண்ட் என்று அப்போ அப்போ அழைப்பேன்.. என்ன இருந்தாலும் மனைவிதானே பெரும்பாலான வேலைகளைச் செய்வதோடு, வீட்டை நிர்வாகம் பண்ணவும், நமக்குத் தெரியாததை, 'உனக்கு ஒண்ணுமே தெரியாது' என்று சொல்லாமல், மரியாதை கொடுத்து, அதே சமயம் ஆலோசனை சொல்லி நடத்துவதால் அவங்கதானே பாஸு. நம்ம வேலை பணம் சம்பாதிப்பதோடு நின்று விடுகிறதில்லையா?

    பதிலளிநீக்கு
  10. வாழைக்காயை வேக வைத்துத் தோல் எடுத்து வெந்த உருளைக்கிழங்கை பிசைவதுபோல் பிசந்து பொடிமாஸ் செய்வாள் என் மனைவி. சாதாரணமாகச் செய்வதுண்டு. ஸ்ரீராமும் மனைவியை பாஸ் என்பார்.

    பதிலளிநீக்கு
  11. நான் செய்து கொடுத்தால் தின்பேன்

    பதிலளிநீக்கு
  12. வாழைக்காய் பொடிமாஸ் மிக அருமை. நானும் வாழைக்காய் புட்டு என்ற பதிவாக சிறிது வித்தியாசமாக கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. விளக்கமாய்... படங்களுடன் விவரமாய்...

    பதிலளிநீக்கு
  14. நல்லதொரு குறிப்பு. வெங்காயம் சேர்த்து சாப்பிட்டதில்லை. செய்து பார்க்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  15. அட! நம்ம வீட்டுலயும் வெங்காயம் போட்டுத்தான் செய்வாங்க!!! இதே போன்று வாழைக்காயை சரியான பதத்தில் வேக வைத்துத் துருவிக் கொண்டு..இதே முறையில் செய்வார்கள்.

    கீதா: நெல்லைத் தமிழன் நீங்க மட்டுமில்ல இங்க எங்க வீட்டுலயும் வெங்காயம் இல்லாமால்....ம்ம்ம் அதுவும் என் மகன் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்...இப்படியேதான்...சில சமயம் உதிர்த்துக் கொண்டு சில சமயம் துருவிக் கொண்டு என்று...அப்படியே சாப்பிடுவதும் உண்டு.

    வாழைக்காய்ப் பொடி என்று எங்கள் மாமியார் வீட்டில் வாழைக்காயை இப்படி உதிர்த்துக் கொண்டு வெங்காயம் இல்லாமல் தாளிப்பு எல்லாம் இப்படித்தான் செய்து விட்டு கொத்தமல்லிவிரை, கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் வறுத்துப் பொடி செய்து போட்டு சிறிது தேங்காய் வேண்டும் என்றால் போட்டுச் செய்வார்கள். இந்தப் பொடி வீட்டில் ரெடியாகவே இருக்கும்...

    பதிலளிநீக்கு
  16. தில்லையகத்து கீதா செய்வது போலத் தான் என் மாமியார் வீட்டிலும் செய்வார்கள். கும்பகோணத்துக்காரங்களுக்குக் குறிப்பாத் தஞ்சாவூர்க்காரங்களுக்கே மேலே பதிவில் சொல்லி இருக்கும் இந்த வாழைக்காய்ப் பொடிமாஸ் தெரியாது. வாழைக்காயைச் சுட்டு விட்டு கீதா சொன்னாப்போல் ஆனால் என் மாமியார் வீட்டில் கொத்துமல்லி விதை வைக்காமல் மற்ற சாமான்கள் வைத்துச் செய்வார்கள். சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள். எங்க வீட்டிலும் இந்தக் காரப் பொடியும் செய்தாலும் எப்போவானும் தான். அதிகம் செய்வது மேலே சொன்ன வாழைக்காய்ப் பொடிமாஸ் தான், வெங்காயம் இல்லாமல்.

    பதிலளிநீக்கு
  17. 'நன்றி ஸ்ரீராம்... வெளியிட்டதற்கும் உங்கள் கருத்திற்கும். ஹஸ்பண்ட் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. தவறு என் மீதுதான். நம்ம உணவுப் பழக்கத்தை நான் மாற்றிக்கொண்டால், அதுக்காக அவள் செய்வதை மாற்றிக்கொள்வாள். அப்புறம் பரம்பரையாக வருகின்ற வீட்டு உணவுப்பழக்கமும் பாரம்பர்யமும் விட்டுப்போகுமல்லவா?

    விடுமுறைக்குப் பிறகு இப்போதுதான் வேலை ஆரம்பித்தது. அதனால் தாமதம்.

    பதிலளிநீக்கு
  18. 'நன்றி கரந்தையாருக்கும், ஊமைக்கனவுகளுக்கும். ஊ.க - இது சுலபம். தவறு நிகழ வாய்ப்பு கிடையாது.

    பதிலளிநீக்கு
  19. 'நன்றி செந்தில்குமார். நன்றி கீத மஞ்சரி. 'அப்படியே சாப்பிடுவேன்'-நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  20. 'நன்றி ஹுசைனம்மா.. "எதுதான் சரியா வந்திருக்கு சமையல்ல' - நீங்கள்லாம் இப்படிச் சொன்னால், கற்றுக்கொண்டிருக்கும் நாங்களெல்லாம் என்ன செய்வது? பெண்களுக்குப் பரவாயில்லை. ஒரே குழம்பையோ அல்லது பொரியலையோ செய்யும் வாய்ப்பு, குறைந்தபட்சம் மாதத்திற்கு இரண்டு முறையாவது வரும். அதனால், ஓரிரு மாதங்களில் எக்ஸ்பெர்ட் ஆகிவிடலாம். நானெல்லாம், ஒரு ஐட்டம் திரும்பச் செய்வதற்குப் (வெகு சில exception உண்டு) பல மாதங்கள் ஆகும் (சமயத்தில் வருடம்). அப்போ எப்போக் கத்துக்க?

    பதிலளிநீக்கு
  21. 'நன்றி கீதா மேடம்.. உங்கள் பின்னூட்டங்களில் நான் தெரிந்துகொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும் எப்போதும் ஏதாவது இருக்கும். உங்கள் மெதட்டில் வாழைக்காயைத் தளிகைப்பண்ணிப்பார்க்கிறேன் அடுத்தமுறை.

    பதிலளிநீக்கு
  22. காமாட்சி மேடம்..நன்றி. உங்கள் பின்னூட்டம் பெரும்பாலும் பேசுவதுபோலே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  23. ஜி.எம்.பி ஐயா... ஒரு நாள் கையில் கரண்டி எடுத்துத்தான் பாருங்களேன்... சரியா வரலைனா, தடுமாறினா, இதான் சாக்குன்னு திருமதிக்கு ஐஸ் வைக்கலாம். நல்லா வந்துருச்சுனா, உனக்கு ஓய்வு கொடுப்பதற்காகச் செய்துகாண்பித்தேன் என்று சொல்லலாம். உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. கில்லர்ஜி... இப்போதுதான் பசங்களோட இருக்கப்போகிறீர்களே.. இப்போது டிரை பண்ணாவிட்டால் எப்போது.. முயற்சியுங்கள்.. நல்லாப் பண்ணுனீங்கன்னா, பசங்களுக்கு உதாரணம். இல்லைனா, நம்ம பட்ட கஷ்டம் போதும், நாமளாவது நல்லா சமைக்கக் கத்துக்கணும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடும்.. இரண்டுமே லாபம்தானே.

    பதிலளிநீக்கு
  25. சாரதா மேடம்.. உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.. நீங்களெல்லாரும் சமையல் எக்ஸ்பர்ட். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. 'நன்றி பரிவை. நன்றி வெங்கட்ஜி.. நீங்கள் வட இந்தியராக (?) மாறிவிட்டதனால், சப்பாத்தி, சப்ஜி, .. என்று சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள்.. ஒரு நாள், வெந்தயக் குழம்பும், வெங்காயம் போட்டோ இல்லாமலோ வாழைக்காய் பொடிமாஸ் செய்துபாருங்கள்... வீட்டோட சாப்பிட்ட ஞாபகம் வரும்.

    பதிலளிநீக்கு
  27. தில்லையகத்து... உங்கள் கருத்துக்கு நன்றி.. நான் சாப்பிடும்போதுதான் இந்த வெங்காய டிரையல் எல்லாம். பசங்களோட இருக்கும்போது, என் ஹஸ்பண்ட் தான் பாஸ். அவங்க சொல்றபடிதான் (மெதட் அவங்களோடது. அன்னைக்கு எந்த வேளைக்கு என்ன சமையல் என்பது.. என்னோடது. இதைத்தான் கல்யாணம் ஆன தினத்திலிருந்து ஃபாலோ பண்ணுகிறோம்). இல்லாட்டா வீட்டு வழக்கம் அடுத்த தலைமுறைக்குப் pass ஆகாது என்பதால்

    பதிலளிநீக்கு
  28. கீதா ரங்கன், கீதா மேடம் - வாழைக்காய்ப் பொடி என்பதை என் வாழ்வில் கேள்விப்பட்டதில்லை, கல்யாணம் ஆகும்வரை. என் ஹஸ்பண்டும் கும்பகோணம்தான். அவங்க அவ்வப்போது (என்ன சமையல் என்பது என்னுடைய ஏரியா என்பதால், எனக்கு அன்னியப்பட்டது எதுவும் சமையலில் வராது. பசங்க 9-10 வயசுக்கு அப்புறம்தான், அவங்களுக்கு என்று அவங்க விருப்பப்படி பாவ் பாஜி, உளுத்தம் பச்சிடி இதெல்லாம் வீட்டில் எட்டிப்பார்த்தது. அப்போதும், நான் அன்றைக்குச் சொல்லியிருக்கும் மெனுவைத் தவிர வேறு எதுவும் சாப்பிடமாட்டேன்... இப்போ நினைத்துப் பார்த்தால், நான் இழந்தது அதிகம் என்றுதான் தோணுகிறது) வாழைக்காய்ப் பொடி செய்வார்கள். பசங்க (அனேகமாகப் பையனுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்) ஆசையாச் சாப்பிடுவாங்க.. நீங்கள் சொன்னபிறகுதான், இது கும்பகோணம், தஞ்சாவூர் வழக்கமோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  29. நெல்லைத் தமிழன், சுத்த ஆணாதிக்கவாதியா இருப்பீங்க போல! :) ஹிஹிஹி, நம்ம வீட்டிலேயும் சிதம்பரம் ஆட்சி தான்! அதிலே பாருங்க இந்தப் புளிக்கீரையை இங்கே செய்யவே முடியாது! எத்தனை கெஞ்சினாலும் நோ தான்! ஆனால் இப்போ நம்ம ரங்க்ஸே இன்னிக்குப் புளிவிட்ட கீரை செய்யச் சொல்லிட்டுச் சாப்பிட்டார். மெது மெதுவாம இப்போத் தான் மதுரைப் பக்கத்துச் சமையல் எங்க வீட்டிலேயும் இடம் பிடிக்குது! அதிலே ஒண்ணுதான் நீங்க சொல்லி இருக்கும் இந்த வாழைக்காய்ப் பொடிமாஸ்! :) உருளைக்கிழங்கு பொடிமாஸ் அடிக்கடி செய்யறது உண்டு. குழந்தைங்க இருக்கையிலே அவங்களுக்காக சப்பாத்தி, சப்ஜி அடிக்கடி பண்ணிக் கொடுத்திருக்கேன்.விதம் விதமான வட இந்திய உணவு வகைகள் நிறையவே இடம் பெற்றிருந்தன. இப்போல்லாம் இல்லை!

    பதிலளிநீக்கு
  30. வாழைக்காய்ப் பொடி நான் சின்ன வயசிலே இருந்தே பார்த்து, சாப்பிட்டு இருக்கேன். கும்முட்டி அடுப்புத் தணலில் வாழைக்காயைச் சுட்டு விட்டுப் பண்ணுவாங்க! அதே வாழைக்காய்ப் பொடிமாஸ் எனில் வெந்நீரில் நிறம் மாறும் வரை வேக வைத்துச் செய்வாங்க. ஒன்று பிசைந்து சாப்பிடுவதற்கு, இன்னொன்று தொட்டுக் கொள்ளும் உணவு. வாழைக்காய்க் கூட்டுக் கூட என் அம்மா செய்வார். கச்சல் வாழைக்காய்க் கூட்டு ரொம்பவே நல்லா இருக்கும். புளி விட்டும், புளி விடாமலும் பண்ணி இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  31. வல்லி மேடம்.. முதல் பின்னூட்டத்திற்கு நன்றி. எழுத மறந்துவிட்டது.

    பொதுவாவே... வெங்காயத்தின் பின்னால் நான் போவதில்லை. ஆனால், இன்று வெங்காயம் சேர்க்கக்கூடாது என்றால், அதைச் சேர்த்துச் செய்யப்படும் உணவுதான் நினைவிலேயே இருக்கும். (குரங்கை நினைத்து மருந்து அருந்தக்கூடாது என்ற பழமொழிபோல)

    பதிலளிநீக்கு
  32. கீதா சாம்பசிவம் மேடம்... நீங்க சொல்றது உண்மைதான். நான் அ்தி்மு்க டைப் ஜனநாயகவாதிதான். இப்பவும் சாப்பாட்டுக்கு பத்த நாளுக்கு மெனு சொன்னேன்னா குறைந்தது அஞ்சு ஐட்டமாவது ரிபீட்டாகும். இதை ஏன் ஆணாதிக்கம்னு பார்க்கறீங்க.. பெண்களை ரொம்ப சிரம்ப்படுத்தாதவங்கன்னு பாருங்களேன் 😀.

    புளிக்கீரைன்னு நீங்க எழுதிதைப் பார்த்ததும் என் அம்மா நினைவு வந்துவிட்டது. அதெல்லாம் ஒரு காலம்.. வாழ்க்கைப் பயணத்தில் கடந்த சாலைகள் திரும்பவும் வருவதில்லை.😭

    பதிலளிநீக்கு
  33. எங்க வீட்டிலே கீரையைச் சும்மா மசித்தே நான் பார்த்ததில்லை எங்க வீடு என்பது இங்கே பிறந்த வீட்டைக் குறிக்கும். ஆனால் என் மாமியார் வீட்டிலோ கீரையைச் சும்மா உப்புப் போட்டு மசிப்பது மட்டுமே தெரியும். அதிலே ஜீரகத்தைப் போட்டிருப்பார்கள். மாவு கரைத்து விடுவார்கள்.ஆனால் நாங்க விதம் விதமாகக் கீரையைச் சமைப்போம். அதெல்லாம் இங்கே வந்து பண்ண முடியாமலே இருந்தது.அதிலும் அப்போல்லாம் கூட்டுக் குடும்பமா! கொஞ்சம் மாற்றினாலே தெய்வக் குற்றம் என்ற ரேஞ்சுக்குப் போயிடும். :))))))) இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது! :) அது போல் நீங்களும் மாறிடுவீங்க. உங்க ஹஸ்பெண்டிற்குப் பிடித்த சமையலைச் செய்யச் சொல்லிச் சாப்பிடுவீங்க! :)))))) விரைவில் ஆரம்பிச்சு வைங்க! வாழ்த்துகள். ஹாப்பி சமையல்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!