வியாழன், 13 அக்டோபர், 2016

முன்னுரை :: சோ இன்பக்கனா ஒன்று கண்டேன்

     இந்தப் பகுதியை சில நாட்களுக்கு முன் தயார் செய்து , வெளியிடும் நேரம் சட்டென என்னுடைய டிராஃப்டிலிருந்தே காணாமல் போனது.  இதை பற்றி ஃபேஸ்புக்கிலும் .அப்போது புலம்பியிருந்தேன்.  மறுபடி தயார் செய்ய இவளவு நாட்களாகி விட்டன.  அப்போது எழுதியிருந்ததில் ஒன்றும் நினைவில்லை இப்போது!  சரி,     ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கும்போது முதலில் வரும் முன்னுரையைப் படித்து விட்டு புத்தகத்தைப் படிப்பீர்களா,  விட்டு விட்டுப் படிப்பீர்களா?  ஏனென்றால் முன்னுரை, என்னுரை, மதிப்புரை எதையும் படிக்காமல், புத்தகத்தின் சாரத்தை மட்டும் படிப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியும்.  


     நான் சில சமயம் முன்னும் பின்னுமாய் இரண்டு முறை கூட முன்னுரையைப் படித்திருக்கிறேன். உதாரணமாய் எஸ் எல் பைரப்பாவின் புத்தகம் ஒன்று.  மற்றும் ஜெயகாந்தனின் புத்தகங்கள்.  

      சில முன்னுரைகள் புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டும்.  சில முன்னுரைகள் கொட்டாவி விடவைக்கும்!  ஏனோதானோ என்று எழுதப்படும் முன்னுரைகளும் உண்டு.  பிரமாதமான முன்னுரைகளும் உண்டு.  இரண்டாவதுக்கு உதாரணம் ஜெயகாந்தன்.  அவரின் முன்னுரைகளே தனியாய் புத்தகமாய் வந்திருக்கிறது.  அதை வாங்கவேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.     இந்தப் பகுதியில் முன்னுரைகள் மற்றும் வேறு சில விவரங்களும் அவ்வப்போது பகிர்ந்துகொள்ள விருப்பம்.  இப்படி சில முன் அறிவிப்புகளை முன்னர் நான் கொடுத்து அதை நிறைவேற்ற முடியாமல் போனதும் நினைவுக்கு வருகிறது.

     முன்னுரைகளைப் பற்றி சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் திருமதி வித்யா சுப்ரமணியம் எழுதியிருப்பதைப் படித்து பாருங்களேன்.  மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.

     இந்தப் புத்தகம் பதினைந்து மூன்றில் வந்தது! (மார்ச் 15 அல்ல!)  சுஜாதா லாண்ட்ரிக் கணக்கு எழுதினாலும் பிரசுரம் செய்வார்கள் என்று சொல்வார்கள்.  அதுபோல, சோ என்ன எழுதினாலும் புத்தகம் போட்டு விடுவார்கள் போல.  என்னை இந்தப் புத்தகம் கவரவில்லை.  சோவுக்கே அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை அவரின் முன்னுரை சொல்கிறது!


 


     //இந்தப் புஸ்தகத்தையே பிரசுரம் செய்ய முன் வந்தவர்களுக்கு என் முன்னுரையைப் பிரசுரிக்க தைரியம் இருக்காதா என்ன?//     அதானே!


     //இந்நாடகத்தை நூறு மு
றைகளுக்கு மேல் சென்னை மக்கள் தாங்கி இருக்கிறார்கள்.  'எதையும் தாங்கும் இதயம்' ஒன்று மெரீனாவில் தூங்குகிறது.  மற்ற எதையும் தாங்கும் இதயங்கள் இந்த நாடகத்தைப் படிக்கப் போகின்றன.//

     உண்மை...... உண்மை!


     அதே சமயம் சோவின் பிற படைப்புகளான கூவம் நதிக் கரையினிலே, துக்ளக் படம் எடுக்கிறார், எங்கே பிராமணன்?  போன்ற ஆக்கங்கள் நன்றாகவே இருக்கும்.


     ஓகே... இந்தப் பதிவுக்கான முன்னுரையை முடித்துக் கொள்கிறேன்!  சோ வின் முன்னுரையைத் தருகிறேன்.இன்பக்கனா ஒன்று கண்டேன்

சோ

அல்லையன்ஸ் பதிப்பகம் - 95 பக்கம் - 45 ரூபாய் 

=======================================================================
 முன்னுரை

     ஒரு நாவலோ, கட்டுரைத் தொகுப்போ, நாடகமோ எதுவாக இருந்தாலும் முன்னுரை எழுதுவது என்பது ஒரு பழக்கமாக இருந்து வருகிறது.  இது வாசகர்களின் வசதிக்காகவே ஏற்படுத்தப்பட்ட பழக்கம் என்று நான் நினைக்கிறேன்.  ஏனென்றால், முன்னுரையைப் படித்த உடனேயே, இந்த எழுத்தாளன் உள்ளே எப்படி எழுதியிருக்கப் போகிறான் என்று அவனுடைய எழுத்தின் லட்சணத்தை வாசகர்கள் அறிந்து கொள்ள முன்னுரை ரொம்ப உதவியாக இருக்கும்.  புஸ்தகத்தைப் படிக்கலாமா வேண்டாமா என்று உடனே தீர்மானம் செய்து கொண்டு விடலாம்.


     இந்த முன்னுரையைப் படிப்பவர்கள் என்ன தீர்மானத்திற்கு வர போகிறார்களோ என்று எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது.  அந்தப் பயத்தின் காரணமாக "முன்னுரை வேண்டாம்" என்று பதிப்பகத்தாரிடம் நான் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன்.  அவர்கள் மசியவில்லை.  "நிச்சயம் முன்னுரை எழுதிக் கொடுத்துத்தான் தீரவேண்டும்" என்று வற்புறுத்தி எழுத வைத்து விட்டார்கள்.  ஆனாலும் அவர்களுக்குத் துணிச்சல் அதிகம்!  இந்தப் புஸ்தகத்தையே பிரசுரம் செய்ய முன் வந்தவர்களுக்கு என் முன்னுரையைப் பிரசுரிக்க தைரியம் இருக்காதா என்ன?


    
     நாடக விற்பன்னர்களுக்கு என்னுடைய எந்த நாடகமுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதில்லை.  நாடக இலக்கணம், முறை முதலானவற்றிற்கும் என்னுடைய நாடகங்களுக்கும் ஸ்நானப்பிராப்தி கூட கிடையாது என்று அவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.  இது பற்றி நான் கவலைப்படுவது கிடையாது.       "இதுதான் நாடகம் - நாடகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்றெல்லாம் வலியுறுத்திக் கூற நாடகம் ஒரு கனக்குப் பாடமோ, விஞ்ஞானப் பாடமோ அல்ல.  அந்தந்த ஆசிரியர்கள் மனப்போக்கிற்கு ஏற்றவாறு நாடகங்கள் அமையும்போதுதான், பலவகையான நாடகங்கள் தோன்றும்.  மக்களுக்குப் பிடித்தவைகளை அவர்கள் ஏற்கட்டும், மற்றவை அல்பாயுசில் போகட்டும்.  தீர்ப்பை மக்களுக்கு விடுவதையே நான் விரும்புகிறேன்.


     இந்த நாடகத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.  வழக்கமாக என் நாடகங்களில் "அரசியலைப் பெரும் அளவில் புகுத்துகிறேன் ; மற்ற விஷயங்களைக் குறைத்தே கொடுக்கிறேன்" என்பது பல விமர்சகர்களுடைய குற்றச்சாட்டு.  அந்தக் குற்றச்சாட்டை அவர்களால் இந்த நாடகத்தில் கூற முடியாது.  ஏனென்றால் இந்த நாடகத்தில் நான் மற்ற விஷயங்களைக் குறைத்துக் கொடுக்கவில்லை.  அறவே விட்டு விட்டேன்.  அரசியலைப் புகுத்தவில்லை - அரசியலையே தான் நாடகமாக்கி இருக்கிறேன்.


     இந்நாடகத்தை நூறு முறைகளுக்கு மேல் சென்னை மக்கள் தாங்கி இருக்கிறார்கள்.  'எதையும் தாங்கும் இதயம்' ஒன்று மெரீனாவில் தூங்குகிறது.  மற்ற எதையும் தாங்கும் இதயங்கள் இந்த நாடகத்தைப் படிக்கப் போகின்றன.  


     இந்தப் புத்தகத்தின் பதிப்பகத்தாரை எப்படியாவது காப்பாற்றுமாறு இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


==============================
===================================

46 கருத்துகள்:

 1. சோவின் முன்னுரையும் அட்டகாசம். உங்களுடையதும் தான்!

  பதிலளிநீக்கு
 2. சோ வின் முன்னுரை சுவாரசியம். எந்த நோக்கோடு படிக்க வேண்டும் என்பதை முன்னுரை சொல்லிவிடும். நமக்கு ஏமாற்றம் இருக்காது.

  பதிலளிநீக்கு
 3. இந்தப் புத்தகத்தின் பதிப்பகத்தாரை எப்படியாவது காப்பாற்றுமாறு இறைவனை வேண்டிக்கொள்கிறேன். //


  காப்பாற்றினாரா ??

  சுப்பு தாத்தா

  பதிலளிநீக்கு
 4. ரசித்தேன், நன்றி!
  நான் ஜெனரலா முன்னுரையை கடைசியில் தான் வாசிப்பது வழக்கம் - புத்தகத்தின் பகுதிகளையோ காரக்டர்களின் தன்மையையோ சில பேர் முன்னுரையில் சொல்வார்கள், ஸஸ்பென்ஸ் போய் விடும் என்பதால்!!

  பதிலளிநீக்கு
 5. நல்ல முன்னுரை. நீங்கள் அளித்த முன்னுரையும் அருமை.

  பதிலளிநீக்கு
 6. சுவையான முன்னுரை.. :))) சிலர் மற்றவர்கள் தங்களை கேலி செய்யுமுன் தங்களைத் தாங்களே கேலி செய்து அவர்கள் வாயை அடைத்துவிடுவார்கள். இதுவும் அப்படியான ஒரு தந்திரம் போலத்தான் தெரிகிறது.

  \\முன்னுரை, என்னுரை, மதிப்புரை எதையும் படிக்காமல், புத்தகத்தின் சாரத்தை மட்டும் படிப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியும். \\

  நான் என்னிடம் கருத்துரை கேட்டு வழங்கப்படும் புத்தகங்களில் முன்னுரை தவிர்த்த பிற அணிந்துரை மதிப்புரை போன்றவற்றைத் தவிர்த்துவிடுவேன். நூலை வாசித்து என் கருத்தை எழுதி முடித்த பின்னரே ஏனையவற்றை வாசிக்கத் துணிவேன். நம்முடைய விமர்சனத்தில் மற்றக் கருத்துரையாளர்களின் பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்ற பயம்தான் காரணம். மற்றபடி சொந்த வாசிப்பனுவத்துக்கான நூல் எனில் எதையும் விட்டுவைப்பதில்லை.. முன்னுரைகள் சில நூலின் மதிப்பைக் கூட்டும். சில முன்னுரைகள் நூலைத் தொடர்ந்து வாசிக்கலாமா வேண்டாமா என்னும் தயக்கத்தை உண்டாக்கும்.

  சமீபத்தில் ஒரு புத்தகம் என்னுடைய கருத்துரைக்காக வந்தது. அதில் பிரபல எழுத்தாளர் அணிந்துரை தந்துள்ளார்.. அவசியம் பாருங்க என்று சொல்லியிருந்தார் அந்த நூலாசிரியர். வாசித்தபோது அடப்பாவமே என்றுதான் தோன்றியது. சிலர் கேட்டுக்கொண்டால் மறுக்கமுடிவதில்லை.. என் மதிப்புக்குரிய மற்றொரு எழுத்தாளர் வேண்டிக்கொண்டதால் வேறுவழியில்லாமல் நான் இதற்கு அணிந்துரை வழங்குகிறேன். உண்மையில் இந்த நூலாசிரியரின் பெயரை இதற்குமுன் நான் கேள்விப்பட்டதில்லை என்று ஒன்றரை பக்கத்துக்கு சுய விளக்கம் அளித்துவிட்டு அதன்பிறகே நூல் பற்றிய தன் கருத்துகளை வழங்கியுள்ளார் அந்த பிரபல எழுத்தாளுமை.

  பதிலளிநீக்கு
 7. கீதா மதிவாணன் சொல்வதுபோல் இதுவொரு தந்திரமே. ஆனாலும் அதை பயன்படுத்தும் துணிச்சல் 'சோ'வுக்கு சற்று அதிகம் இருப்பதை இந்த முன்னுரையில் காண முடிகிறது.
  த ம 6

  பதிலளிநீக்கு
 8. சில முன்னுரைகள் நன்றாக இருக்கும். சில, சவ சவ என்று இருக்கும். சோவின் தனித்துவமே தன்னையும் சேர்த்து satire செய்துகொள்வதுதான். உண்மையைப் பேசுவதற்கு அவர் தயங்கியதில்லை. அவரின் 'முகமது பின் துக்ளக்' நாடகம், இப்போதும் relevantஆக ரசிக்கும்படியாக இருப்பதுதான் அவருடைய திறமைக்குச் சான்று.

  பதிலளிநீக்கு
 9. முன்னுரை கதைச் சுருக்கம் கொடுக்காதவரையிலும் அதைப் படிக்கலாம். இல்லைனா கதை படிக்கும் சுவாரசியம் போயிடும்.

  பதிலளிநீக்கு
 10. புதன்கிழமை புதிர் எங்கே? கௌதமன் லீவ் எடுத்துட்டாரா? பங்கெடுக்கலைனாக் கூடப் படிக்க சுவாரசியம் இருக்கும். :(

  பதிலளிநீக்கு
 11. சில எழுத்தாளர்களுக்கு முன்னுரை தேவை இருக்காது. ஏன் என்றால் அவர்கள் ஊரறிந்த பார்ப்பனர்கள். அவர்களுக்குப் பூணூல் தேவைஇல்லை.

  பதிலளிநீக்கு
 12. 'சோ'வின் முன்னுரைக்கு நீங்கள்கொடுத்திருக்கும் முன்னுரையும் அருமையாகவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. 'சோ'வின் முன்னுரைக்கு நீங்கள்கொடுத்திருக்கும் முன்னுரையும் அருமையாகவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. வணக்கும் நண்பரே திரு. சோ அவர்களைப்பற்றி விவாதிக்கும் அளவுக்கு நமக்கு எமக்கு பக்குவம் இல்லை நான் சந்திக்க விரும்பும் ஒரு மனிதர் இவர் இதுவரை வாய்க்கவில்லை.
  எப்பேர்ப்பட்ட கேள்விக்கும் ஒருநொடியில் அற்புதமான பதில் தரக்கூடியவர் அரசியல் சாணக்கியர்.

  நான் நூலை வாங்கிய பிறகு முழஉவதும் படித்த பிறகே முன்னுரை, முவுரை படிப்பேன் காரணம் சுவாரஸ்யம் போய்விடும்.
  இது எனது பழக்கம்.

  பதிலளிநீக்கு
 15. எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும் இருட்டில் அடித்தேன்

  பதிலளிநீக்கு
 16. எனக்கு சினிமா என்றால் வெள்ளித்திரை டு வெள்ளித்திரை பார்க்க வேண்டும். அதேபோல் புத்தகம் என்றால் அட்டை டு அட்டை படிக்க வேண்டும். எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் நூல்கள் என்றால் முதலில் புத்தகத்தை படித்து விடுவேன். இல்லாவிட்டால் முன்னுரையை படித்து விட்டு தொடர்வேன். என்னை மிகவும் கவர்ந்த முன்னுரை பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலுக்கு மாலன் எழுதியது.

  பதிலளிநீக்கு
 17. எனக்கு சினிமா என்றால் வெள்ளித்திரை டு வெள்ளித்திரை பார்க்க வேண்டும். அதேபோல் புத்தகம் என்றால் அட்டை டு அட்டை படிக்க வேண்டும். எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் நூல்கள் என்றால் முதலில் புத்தகத்தை படித்து விடுவேன். இல்லாவிட்டால் முன்னுரையை படித்து விட்டு தொடர்வேன். என்னை மிகவும் கவர்ந்த முன்னுரை பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலுக்கு மாலன் எழுதியது.

  பதிலளிநீக்கு
 18. கீதா அக்காவின் கேள்வியை நானும் வழி மொழிகிறேன். எங்கே இந்த வார புதிர்? எங்கே சென்ற வார புதிருக்கான விடை?

  பதிலளிநீக்கு
 19. கீதா அக்காவின் கேள்வியை நானும் வழி மொழிகிறேன். எங்கே இந்த வார புதிர்? எங்கே சென்ற வார புதிருக்கான விடை?

  பதிலளிநீக்கு
 20. வாங்க சுப்பு தாத்தா... அல்லையன்ஸ் பதிப்பகத்தில் கேட்டுப் பார்த்தால் தெரியும்!

  பதிலளிநீக்கு
 21. வாங்க மிடில்க்ளாஸ்மாதவி. நல்ல பாலிசி. முன்னுரையை சிலசமயம் முன்னாலேயேயம் படிக்க நேரிடும்!

  பதிலளிநீக்கு
 22. விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி சகோதரி கீதமஞ்சரி.

  சரியாகச் சொன்னீர்கள். சோ தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வதில் வல்லவர். நீங்கள் சொல்லியிருக்கும் அந்த பிரபல எழுத்தாளர் யார், அந்த நண்பர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது! கிசுகிசு பாணியில் சொல்லி ஆவலைக் கிளப்பி விட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 23. நீங்கள் சொல்வது சரி. நன்றி நண்பர் செந்தில் குமார்.

  பதிலளிநீக்கு
 24. வாங்க நெல்லைத்தமிழன். உண்மையே உன் விலை என்ன, வெறுக்கத்தக்கதா பிராமணீயம், எங்கே பிராமணன்?, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக் படமெடுக்கிறார்.. என்று இன்னும் நிறைய நல்ல படைப்புகள் சோவுடைய படைப்புகள் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 25. வாங்க கீதாக்கா... கதைச் சுருக்கத்தை பெரும்பாலும் யாரும் முன்னுரையில் தர மாட்டார்கள்தானே?

  பதிலளிநீக்கு
 26. புதன்கிழமை புதிர் புதிராய் போச்சு கீதாக்கா!

  பதிலளிநீக்கு
 27. வாங்க ஜி எம் பி ஸார். நீங்கள் சொல்வது சரி.

  பதிலளிநீக்கு
 28. நன்றி நண்பர் கில்லர்ஜி. ஆம், அவர் திறமையான ஒரு எழுத்தாளர்தான்.

  பதிலளிநீக்கு
 29. நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்...முன்பு நானும் கிடைத்த புத்தகம், பேப்பர் எல்லாம் அட்டை டு அட்டை, வரிக்கு வரி படித்துக் கொண்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 30. நீங்களும் புதிர் பற்றிக் கேட்கிறீர்களா? கௌதமன்..... கௌதமன்.... கௌதமன்......!

  பதிலளிநீக்கு
 31. சோவின் முன்னுரையை விட உங்கள் முன்னுரை நன்றாக இருந்தது. சோ எப்போதும் போல் தம்மையே கிண்டல் செய்துள்ளார். திருட்டு முழி முழிக்கிறான் பாரு; அச்சச்சோ என் முழியே அப்படித்தாங்க என்று சினிமாவில் தம்மையே கிண்டல் செய்து கொள்வார். நீங்கள் சொன்னது போல் ஜெயகாந்தன் முன்னுரை படிக்க மிகவும் சுவாரசியமாயிருக்கும். வித்யா சுபரமணியன் பதிவை இனி தான் படிக்க வேண்டும். நன்றி ஸ்ரீராம்!

  பதிலளிநீக்கு
 32. இப்பொழுது தான் பார்த்தேன், ஸ்ரீராம். மணி ராத்திரி 10.47.

  நிறைய எழுத வேண்டும் போல் இருக்கிறது. பின்னூட்டம் தாங்குமா?.. தெரியவில்லை.

  மேலோட்டமாக ஒன்றிரண்டு வரிகள் நாளைக்கானும் எழுதி விட்டு, முன்னுரைகள் பற்றி-- என் சிறுகதைத் தொகுப்புக்கான என் முன்னுரையில் தொடங்கி-- நிறைய என் பூவனம் பதிவில் எழுத வேண்டும் போல் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 33. ஜீவி ஸார்... இங்கேயும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்கள் தளத்திலும் எழுதலாம். நான் தனிப்பதிவாக வேண்டுமானாலும் போடத்தயார்.

  பதிலளிநீக்கு
 34. என் சிறிய வயதில், இன்பக் கனாவை எழுத்து வடிவில் கண்டதுண்டு ,மறந்ததை நீங்கள் ஞாபகப் படுத்தி விட்டீர்கள் :)

  பதிலளிநீக்கு
 35. ஆரம்பகாலங்களில் முன்னுரை என்பது கதைப் புத்தகங்களுக்கு ஒரு ஃபார்மாலிட்டி மாதிரி தான் இருந்தது.
  எதைப் பற்றிய புத்தகம் இது, புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை லேசாகக் கோடி காட்டுகிற மாதிரி முன்னுரையில் சொல்வது வழக்கம். புததகக் கடையில் புத்தகம் பார்த்து புரட்டியவுடன் கண்ணில் படுவது முன்னுரை தான். அதனால் முன்னுரையை எடுப்பாக சிறப்பாக வெளியிடுவது வழக்கமாயிற்று. இந்த முன்னுரை எழுதும் பணியை யாராவது பிரபலமானவர் செய்தால் புத்தகத்திற்கு மதிப்பு கூடும் என்ற யதார்த்த கணிப்பு பிற்காலத்தில் வந்தது. சில பிரபலங்கள் புத்தக உள்ளடக்களிலிருந்து விலகி தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் தன் முன்னுரையில் திணிக்க ஆரம்பிக்க அப்படியான முன்னுரைகளின் மேல் வாசிப்பவர்க்கு சலிப்பே தோன்ற ஆரம்பித்தது. நூல் விற்பனையை அதிகரிக்க, பதிப்பகங்களே தங்கள் சொந்த கித்தாப்பில் சில பிரபலங்களிடம் பேருக்காக முன்னுரை எழுதி வாங்கும் பழக்கமும் இடையில் இருந்தது. நகைக்கடைகளுக்கு பிரபல சினிமா புள்ளிகள் தோன்றும் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வருகிறதே, அந்த மாதிரி. கமலஹாசன் போன்றார்கள் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதினால் அதன் விற்பனை எகிறும் என்கிற கணக்கு போலத் தான் இதெல்லாம்.

  இந்த வாலாயமான பழக்கங்களையெல்லாம் புறந்தள்ளி மண்மூட வைத்தவர் ஜெயகாந்தன் தான். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு,'ஒரு பிடிச் சோறு' நூலுக்கு மட்டும் மஞ்சரி பத்திரிகை ஆசிரியராக இருந்த தி.ஜ.ர. முன்னுரை எழுதியிருக்கிறார். கவியரசர் கண்ணதாசன் அந்த நூலுக்கு கவிதை வாழ்த்துரை அளித்திருக்கிறார். கடுமையான பொருலாதார நெருக்கடிகளுக்கு நடுவே எழுத்தாளர் விந்தன் 'புத்தகப்பூங்கா' என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து ஜெயகாந்தனின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். விந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'முல்லைக் கொடியாள்' நூலுக்கு முன்னுரை எழுதியவர் கல்கி அவர்கள்.

  'என் நூலுக்கு நெருக்கமானவர்கள் என்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது' என்ற உண்மையில் சொல்கிறேன், என் நூலுக்கு முன்னுரை எழுத என்னை விடப் பொருத்தமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது' என்று டிக்கேர் செய்து விட்டு தன் நூல்களுக்கு அழகான முன்னுரைகளை எழுதிக் குவித்தவர் ஜெயகாந்தன். அவர் தன் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளே இலக்கிய அந்தஸ்த்து பெற்று, அவரின் முன்னுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்திருக்கின்றன. அந்த அளவுக்கு ஜெயகாந்தனின் முன்னுரைகள் பிரசித்தம். அதுவும் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்'
  'கோகிலா என்ன செய்து விட்டாள்?' நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் அடடா என்று வியந்து வாசிப்பவர்களை ரசிக்க வைக்கும்.

  இப்போதைக்கு இது. 'பொதுவாக முன்னுரைகளை யாரும் கண்டுகொள்வதில்லை' என்ற நிலையைப் புறக்கணித்து, முன்னுரைகளைப் பற்றி கூட நிறைய எழுத இருக்கிறது என்ற விழிப்புணர்வை பதிவுலகில் ஏற்படுத்திய ஸ்ரீராமிற்கு நன்றி.

  பிரபலமான முன்னுரைகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சொல்ல முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 36. முன்னுரையின் வெற்றி
  நாலின் வெற்றி
  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 37. முன்னுரைக்கே ஓர் முன்னுரையும் சோவின் முன்னுரையும் அற்புதம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 38. இப்படி முன்னுரை எழுத தைரியம் வேண்டும்.
  நான் எப்பவும் முன்னுரை, அணிந்துரை, வாழ்த்துரை எல்லாம் வாசித்துத்தான் ஆரம்பிப்பேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!