திங்கள், 31 அக்டோபர், 2016

"திங்க"க்கிழமை 161031 :: புடலை மிளகூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



புடலை மிளகூட்டு

மிளகூட்டு என்பது எங்கள் வீட்டில் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவையாவது பண்ணுவது உண்டு. இதில் மிளகு சேர்த்திருப்பதால் உடம்புக்கு மிகவும் நல்லது என்பது ஒரு காரணம் (பகைவன் வீட்டுக்கு பத்து மிளகோடு செல் – பழமொழி. அனேகமான அர்த்தம். ஒருவேளை உணவில் விஷம் கலந்திருந்தால் மிளகு சாப்பிட்டால் விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு என்பதால். உடனே சந்தேகம்லாம் கேட்கக்கூடாது. பழமொழியை ரொம்பவும் ஆராயக்கூடாது). இன்னொரு காரணம், கோஸையும் புடலையையும் கறியமுதாகச் சாப்பிடுவதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இருப்பதில்லை. மிளகூட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கெல்லாம், கடைகளில் புடலங்காய் உபயோகப்படுத்துவது குறைவு. (விலை அதிகம். வேறென்ன காரணம் இருக்க முடியும்). பொதுவாகவே எல்லா உணவகங்களிலும், கோஸ் அல்லது கோஸ் + கேரட் சேர்ந்த பொரியல் நிச்சயமாக மதியத்துக்கு இருக்கும். ஒண்ணு விலை குறைவு. இன்னொண்ணு, ஆள் வரத்துக்கேற்ப, இரண்டாவது தடவை விரைவாகப் பண்ணிக்கொள்ளலாம். இப்போது செய்முறை. (எப்படிச் செய்யணும் மாமூ.. ‘நினைவுக்கு வருகிறதா?)




1 ½ அடி புடலைக்கு ¼ டம்ளர் பாசிப்பருப்பு என்பது கணக்கு. புடலையின் அளவைப் பொறுத்து, பாசிப்பருப்பின் அளவு மாறுபடும். பாசிப்பருப்பு அளவு அதிகமானா நல்லதுதான். பாசிப்பருப்பை, சாதம் வைக்கும்போது மேல் தட்டில் வைத்து தளிகைப்பண்ணிக்கொள்ளவும்.



 
புடலையைக் கழுவிக்கொண்டு, அரை வட்டமாகத் திருத்திக்கொள்ளவும். சின்ன வயசுல புடலையின் உள்ளே விதைகளை எடுக்காமல் கூட்டு சாப்பிட்டதால், எனக்கு உள்பகுதியை சுத்தம் செய்யாவிட்டால் பிடிக்காது. இள புடலங்காய்க்கு, சுத்தம் செய்யவேண்டியதில்லை என்று சொல்வார்கள். கூட்டும் கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். இருந்தாலும், விதை கூட்டில் அகப்பட்டால் நன்றாக இருக்காது. 




4 மிளகாய்ப் பழம், 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு, துளி பெருங்காயம், 15 மிளகு இவற்றைச் சிறிது எண்ணெயிட்டு வாணலியில் சிவப்பாக வறுத்து (மிளகை எப்படி சிவப்பாக வறுப்பது என்று கேட்கக்கூடாது. சிவப்பு, உளுத்தம்பருப்புக்குச் சொன்னது. கறுத்துவிட்டால், கூட்டின் ‘நிறம், சுவை குறையும்) ஒரு தட்டில் இட்டு ஆறவைக்கவும். காரம் பிடிப்பவர்கள் (என்னைப் போன்றவர்கள்), 6 மிளகாய்ப் பழம், 20 மிளகு எடுத்துக்கொள்ளலாம்.  2 அல்லது 3 ஸ்பூன் தேங்காய்த் துருவலை எடுத்துக்கொள்ளவும்.




சூடு ஆறினபின்பு, வறுத்த மிளகாய்ப்பழம் போன்றவற்றையும், தேங்காய்த்துருவலையும் மிக்ஸில அரைக்கவும்.  இதற்கு முன்பே, திருத்திய புடலையை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். புடலை ஓரளவு வெந்தால் போதும். அத்துடன், அரைத்த மிக்ஸ், வெந்த பாசிப்பருப்பு, தேவையான உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பாசிப்பருப்பு சேர்த்திருப்பதால், கூட்டை அவ்வப்போது கிளறிவிடவேண்டும். இல்லாட்டா அடி பிடித்துவிடும்.


அப்புறம், கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு ஆர்க்கு கருவேப்பிலை திருவமாறி கூட்டில் சேர்த்துவிடவேண்டியதுதான். நெய்யில் திருவமாறினால், வாசனையாக இருக்கும்.





இது பருப்புக் குழம்பு, சாத்துமது சாதம் இவற்றுடன் நன்றாக இருக்கும். நான் பெரும்பாலும், மிளகூட்டும், சாதமும் மட்டும் சாப்பிடுவேன். தொட்டுக்கொள்ள உருளைக் கறி அல்லது சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நன்றாக இருக்கும். அன்றைக்கு நான் பண்ணின உருளை கட் கறியமுது சுருக்கமாக.

உருளையை சிறிய சதுரமாக கட் செய்துகொண்டு, உப்பு போட்ட தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அது வெந்ததும், தண்ணீரை இரத்து (இது புதிய வார்த்தை.. நாங்கள் உபயோகப்படுத்துவது), காயில், பெருங்காயப்பொடி, சிவப்பு மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தேவையான அளவு போட்டு பிசிறிக்கொள்ளவும். வாணலியில், எண்ணெய் சிறிதுவிட்டு, கடுகு, உ.பருப்பு திருவமாறி, அதில் உருளைக்கிழங்கைப்போட்டு நன்கு பிரட்டி எடுக்கவேண்டியதுதான்.  முதலிலேயே தளிகைப்பண்ணிவிடுவதாலும், காரம், பெருங்காயம் போன்றவற்றைப் பிசிறிவிடுவதாலும், நான் குறைவாகத்தான் எண்ணெய் சேர்ப்பேன். நிறைய எண்ணெய் சேர்த்தால் கறியமுது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவ்வளவு நல்லதல்ல.


54 கருத்துகள்:

  1. ஆஹ்....ஹா....!!! காலங்கார்த்தாலே 'வாசனையா மிளகூட்டல்' பத்தி படிச்சதும் சாப்பிடற ஆவல் வந்தாச்சு. எங்கம்மா கை பக்குவத்தில் சாப்பிட்டது.....!!!

    பதிலளிநீக்கு
  2. சாப்பிட்டுப் பார்க்க ஆவல் மேலிடுகிறது நண்பரே
    தம =1

    பதிலளிநீக்கு
  3. அம்மா, அமிர்தமாகச் செய்வார்.
    அருமையா இருக்குப் பார்க்க. வார்த்தைகள் பிரயோகம் சாப்பிட அழைக்கிறது.
    உ.கிழங்கு மாமியார் இப்படி செய்வார். அவரும் நெல்லை தான். மிக நன்றி நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  4. படங்களைப் பார்க்கும் போதே ஆசையாக இருக்கின்றதே...

    பதிலளிநீக்கு
  5. எனது குழந்தைக்கு மிகவும் பிடித்த கூட்டு வாரம் ஒரு முறை எங்கள் வீட்டில் இதுஇல்லாமல் சமையல் இல்லை.... இந்த கூட்டு செய்யும் போது மிளகு ரசம் அல்லது வத்தல் குழம்பு கண்டிப்பாக உணடு இந்த கூட்டிற்கு பாசிப்பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் சிறிது கடலைபருப்பையும் சேர்த்து வேக வைப்போம்

    பதிலளிநீக்கு
  6. அருமையான மிளகூட்டல், உருளை கறி.

    படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. அப்புறமா வந்து சாப்பிட்டு சொல்றேன் ,இப்போ டோக்கன் அட்வான்ஸ் மட்டும் (அதான் த ம வாக்கு :)

    பதிலளிநீக்கு
  8. பூஜை அறையில் விளக்கேற்றி பெருமாள் தாயார் படங்களுக்கு சாதம், புடலங்காய்க் கூட்டு, உ.கி.காரக் கறி ஆகியவற்றை படைத்துள்ளது பார்க்க அழகாக உள்ளது.

    அனைத்துப்படங்களும், செய்முறைப் பக்குவமான எழுத்துக்களும், வைஷ்ணவ வாசனைத் தூக்கலாக சூப்பரோ சூப்பர் ! :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. என் மனைவி மிளகூட்டல் செய்யும் முறை வேறு சாதாரணமாகப் பாலக்காட்டுப்பக்கம் செய்வது பாசிப்பருப்பு உபயோகிப்பது இல்லை துவரம் பருப்புதான் இந்தச் சுட்டியில் பூவையின் எண்ணங்களில் செய்முறை பகிர்ந்திருக்கிறேன் /http://kamalabalu294.blogspot.in/2013/06/blog-post.html

    பதிலளிநீக்கு
  10. படங்களுடன், செய்முறையும் பிரமாதம்..

    பதிலளிநீக்கு
  11. படங்களுடன், செய்முறையும் பிரமாதம்..

    பதிலளிநீக்கு
  12. நெல்லைத் தமிழன் என்று பெயர் பார்த்து வந்தால், சமைய்ல் முறையைச் சொல்வதில் கூட அசத்துகிறாரே!
    பக்குவ விவரிப்பு பிரமாதம்.

    பலர் புடலங்காயை விலக்காக கொள்கிறார்களே, அது ஏன்?.. நானெல்லாம் அப்படியில்லை. எங்கள் வீட்டில் இன்று கூடப் புடலங்காய் கறி தான். (வாங்கிண்டு வருவது நான் தான். வேறே வழி?..)

    தண்ணீரை இரத்து.. (இரத்து என்பதின் வேர்ச்சொல் இறுத்து) இறுத்து நல்ல தமிழ்ச்சொல்.
    இறுத்து = வடிகட்டி.


    பதிலளிநீக்கு
  13. செய்முறை மற்றும் படங்கள்
    சிறப்பாக இருக்கிறது
    சுவையூட்டும் பதிவுகள்
    தொடரட்டும

    பதிலளிநீக்கு
  14. @நெல்லைத் தமிழன், http://sivamgss.blogspot.in/2015/07/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  15. காரஸாரமாகவே இருக்கு கூட்டு. பிஞ்சு புடலங்காய் வாஸனையுடன் கூட்டு நன்றாகவே இருக்கும். காயுடைய பச்சைநிறம் தெரியும்படி இருக்க அழகும் கூடும். எல்லா பொரிச்ச கூட்டுக்குமே இந்த முறை பொருந்தும். கூட்டென்றால், பச்சடியோ, ஏதாவது துவையலோ கூட இருக்கும். ரஸம் இருக்கவே இருக்கு. பச்சை மல்லாக் கொட்டை போட்டும் செய்யலாம். சாப்பிடத் தயார். பரமாருங்கள். அன்புடன். வைஷ்ணவ பாஷை எனக்கும் அத்துப்படியாகிறது சிறிது.

    பதிலளிநீக்கு
  16. வெளியிட்ட ஸ்ரீராமுக்கு நன்றி. உங்கள் commentsதான் காணோம்.

    பதிலளிநீக்கு
  17. பாரதி - நன்றி. நல்லா சாப்பிடற இளமைக்காலத்தில் (20-22 வரை), அம்மாதான் விதவிதமாகச் சமைத்துப்போடுவதால், அதன் ருசியை மறக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  18. கரந்தையார்-உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வல்லி மேடம்-உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அதிலும் உங்கள் மாமியாரை நினைவுகூர்ந்து, எங்கள் பகுதி என்று எழுதியது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  20. கில்லர்ஜி-பசி நேரம் வந்துவிட்டதா? நன்றி...

    பதிலளிநீக்கு
  21. அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன் - மிளகு சேர்ப்பதால் உடம்புக்கு மிகவும் நல்லது. உங்களுக்கும் பிடிக்கும் என்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  22. பகவான்'ஜி - இடுகையைப் பார்க்கும்போதே மிளகு வாசனை வரவில்லையா? மிளகூட்டு உங்களுக்குக்காகக் காத்திருக்கும். நன்றி

    பதிலளிநீக்கு
  23. கோபு சார், உணவில் உங்களுக்கு என்று பிடித்தமானவைகளைத் தவிர வேறு எதையும் கிட்டத்தில் சேர்க்கமாட்டீர்கள் என்று உங்கள் பதிவுகளில் எழுதியிருக்கிறீர்கள். அதுல மிளகூட்டல் இருந்ததுபோல் ஞாபகம் இல்லை.

    இருந்தாலும், படித்துக் கருத்துரையிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. ஜி.எம்.பி ஐயா.. கருத்துக்கு நன்றி. உங்கள் செய்முறையையும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  25. கீதா சாம்பசிவம் மேடம் - ரொம்ப பிஸியாயிட்டீங்களா அல்லது செய்முறை சரியில்லையா? இரண்டு இடுகையிலும் உங்கள் ஆர்வமான பின்னூட்டத்தைக் காணோம். அதைப் பார்த்து என்ன என்ன variations என்று தெரிந்துகொள்வேன் (வோம்). உங்கள் இடுகையையும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  26. திருமதி வெங்கட் - கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. மீரா பாலாஜி - இந்தச் செய்முறைகளெல்லாம் தலைமுறை தலைமுறையாக வருவன. உங்கள் வீட்டிலும் உண்டு என்பதறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  28. ஜீவி சார் - உங்கள் கருத்துக்கு நன்றி. புடலங்காயை விலக்கிக் கேள்விப்பட்டதில்லை. பொதுவா, காசிக்குப் போனா, ஒரு காய், ஒரு இலை, ஒரு பழம் விட்டுவிடவேண்டும் என்று சொல்வார்கள். தாத்பர்யம், தனக்கு எது பிடிக்குமோ அதை விலக்குவது. அதாவது உலகியல் ஆசைகளைத் துறக்கும் யுக்தி. ஆனால், பெரும்பாலும் எது பிடிக்காதோ அதை விலக்கிவிடுகிறார்கள். (எங்கள் பெரியம்மா, பெரியப்பாவோடு காசியாத்திரை சென்றபோது, போகும் வழியில் வடக்கில் பெரிய பெரிய கொய்யாப் பழங்களைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கிறார். பெரியப்பா, திரும்பிவரும்போது வாங்கலாம் என்று ஒத்திப்போட்டிருக்கிறார். காசியில், எந்தப் பழத்தை விடப்போகிறீர்கள் என்று கேட்டபோது, சட்டென்று கொய்யா ஞாபகத்தில் இருந்ததால் சொல்லிவிட்டாராம். எங்க பெரியம்மா இதைப் பலதடவை சொல்லியிருக்கிறார்கள்).

    எனக்கு காய்கறி வாங்குவதென்றால் ரொம்ப ஆசை. என் ஹஸ்பண்டை (மனைவி) வாங்கவிடமாட்டேன். காய்கறி மார்க்கெட்டில் பார்க்கும்போதே எந்தக் காயை எந்தக் காரணத்துக்காக வாங்குகிறேன் (மிளகூட்டல், பாசிப்பருப்புக் கூட்டு, ரோஸ்ட் என்றெல்லாம்) என்பதையும் சொல்லிவிடுவேன். அவங்க அதைக் குறித்துக்கொண்டு அந்த வாரம் செய்துவிடுவார்கள் (அது ஒரு நிலாக்காலம். ஐந்து வருடத்துக்கு முன்பு).

    இறுத்து-என்பது தெரியும். பேச்சுவழக்கில் இரத்து என்று சொல்வதால் எழுதியுள்ளேன். நிறைய நல்ல தமிழை நாம் (பெரும்பாலானவர்கள்) மறந்துவருவது வருத்தத்துக்குரியது. புலரி- இது இப்போ மலையாளத்துல உபயோகிக்கிறார்கள். அதுபோல் வைகுன்ன நேரம்- பொழுது சாயும் நேரம். நாம இப்போ உபயோகப்படுத்துவது, ஈவினிங்ல.

    பதிலளிநீக்கு
  29. ஜீவலிங்கம் - உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. கீதா மேடம் - உங்கள் இடுகையைப் படித்தேன். இருந்தாலும் நீங்கள் ஓரிரண்டு வரிகள் எழுதியிருக்கலாம் (criticize பண்ணியாவது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

    பதிலளிநீக்கு
  31. காமாட்சி மேடம் - உங்கள் பின்னூட்டமே படிக்க நன்றாக இருக்கிறது. (அதுவும் பேசும் வழக்கத்தில்.. வாஸனை...). நன்றி

    பதிலளிநீக்கு
  32. //'நெல்லைத் தமிழன் said...
    கோபு சார், உணவில் உங்களுக்கு என்று பிடித்தமானவைகளைத் தவிர வேறு எதையும் கிட்டத்தில் சேர்க்கமாட்டீர்கள் என்று உங்கள் பதிவுகளில் எழுதியிருக்கிறீர்கள். அதுல மிளகூட்டல் இருந்ததுபோல் ஞாபகம் இல்லை.//

    அன்புள்ள நெல்லைத் தமிழன் அவர்களுக்கு, வணக்கம்.

    மிளகு எனக்குப் பிடித்த ஐட்டம் மட்டுமே. மிளகூட்டும் நான் சாப்பிட்டுள்ளேன்.

    கருவேப்பிலையும் சேர்த்து அரைத்து சற்றே கெட்டியாகச் செய்யப்படும் மிளகு குழம்பு, மிளகு ரஸம், மிளகு ஜீரகப்பொடி + நெய் சேர்த்து செய்யும் சூடான சம்பா சாதம், ஆஞ்சநேயருக்கு சார்த்தும் மிளகு வடை, மிளகு-ஜீரகம் போட்ட வெண்பொங்கல் போன்ற அனைத்துமே எனக்குப்பிடித்தவைகள் மட்டுமே.

    மிளகு விலையும் ஜாஸ்தி. உடம்புக்கும் நல்லது. (மிளகின் இன்றைய விலை கிலோ ரூ. 820/-) அன்றாட குடும்பத்தேவைக்காக மாதம் 50 கிராம் அல்லது 100 கிராம் வாங்கிக்கொள்வோம்.

    எங்கள் அகத்து ஸ்ராத்தத்தில், வாழைக்காய், வாழைத்தண்டு, மிது பாகற்காய், அவரைக்காய், பலாமுசு ஆகிய ஐந்து வித கறிகளுடன், மிளகு குழம்பு, சேம்பு போட்ட மோர்க்குழம்பு, புடலங்காய் பொரிச்ச கூட்டு, மிளகு ரஸம், தயிர், கருவேப்பிலை துவையல், வடு மாங்காய் + இஞ்சி பிசறியது, வெல்லப்பாயஸம், வெல்லப்பச்சடி, தயிர் பச்சடி, பக்ஷண வகைகளில் திரட்டுப்பால், மிளகு வடை, அதிரஸம் அல்லது சீயம், எள்ளுருண்டை, பயத்தம் லாடு உருண்டை; மாம்பழம், மலை வாழைப்பழம், பலா ஆகிய முக்கனிகளுடன் தேன், நல்ல ஒஸத்தி பச்சரிசி சாதம், பாசிப்பருப்பு, நெய் முதலிய அனைத்தும் உண்டு. இதில் ஏதேனும்கூட விட்டுப்போய் இருக்கலாம். :)

    வற்றல் மிளகாயோ அல்லது பச்சை மிளகாயோ சேர்ப்பது இல்லை. ஸ்ராத்தத்தில் காரம் அனைத்துக்கும் மிளகு மட்டுமே உபயோகிப்பது உண்டு. புடலங்காய் பொரிச்ச கூட்டு நிச்சயமாக உண்டு.

    மேற்படி ஸ்ராத்த சமாச்சார வகையறாக்களில், மோர்க்குழம்பில் போடப்படும் தான் ஆகிய சேம்பு மற்றும் கறி வகைகளில் பலாமுசு கறி ஆகியவைகளை மட்டும் நான் தவிர்த்து விடுவேன். மீதியெல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்துவிடுவேன். :)

    பதிலளிநீக்கு
  33. கோபு சார், ஒன்று மட்டும் உறுதி. பசி இருக்கும் சமயங்களிலோ அல்லது டயட்டில் இருக்கும் சமயங்களிலோ, உங்கள் உணவு இடுகையையோ அல்லது உணவு சம்பந்தமாக நீங்கள் போடும் பின்னூட்டங்களையோ படிக்கக்கூடாது. படிச்சோம்னா, பிரசவ வைராக்யம்போல் ஆகிடும்.

    எனக்கு உங்கள் உணவு ரசனை மிகவும் பிடித்துள்ளது. சிராத்த உணவில் விட்டுப்போனது, தேன்'குழல் அப்புறம் வெள்ளரிப் பச்சிடி (அதைத்தான் தயிர் பச்சிடி என்று எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்).

    பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. 'நெல்லைத் தமிழன் said...

    //கோபு சார், ஒன்று மட்டும் உறுதி. பசி இருக்கும் சமயங்களிலோ அல்லது டயட்டில் இருக்கும் சமயங்களிலோ, உங்கள் உணவு இடுகையையோ அல்லது உணவு சம்பந்தமாக நீங்கள் போடும் பின்னூட்டங்களையோ படிக்கக்கூடாது. படிச்சோம்னா, பிரசவ வைராக்யம்போல் ஆகிடும்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    //எனக்கு உங்கள் உணவு ரசனை மிகவும் பிடித்துள்ளது.//

    அப்படியா .... மிக்க மகிழ்ச்சி. :)

    //சிராத்த உணவில் விட்டுப்போனது, தேன்'குழல்//

    தேன் குழல் எங்கள் அகத்தில் ஸ்ராத்ததன்று செய்வது இல்லை.

    //அப்புறம் வெள்ளரிப் பச்சிடி (அதைத்தான் தயிர் பச்சிடி என்று எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்).//

    ஆமாம். வெள்ளிப்பிஞ்சுகளைப் போட்டு செய்திடும் தயிர் பச்சடியே தான்.

    என்னால் எழுத விட்டுப்போனது: மூன்று வைதீகாளுக்கும் போடும் 3*2=6 முரட்டு நுனி இலைகள் ... வாழையிலைகள், தொன்னைகள், குடிக்க வெந்நீர், சாதா தண்ணீர், ஜில் வாட்டர் முதலியன மட்டுமே இருக்கலாம் என நினைக்கிறேன். :))

    பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. //உங்கள் கருத்துக்கு நன்றி. புடலங்காயை விலக்கிக் கேள்விப்பட்டதில்லை.//

    @நெல்லைத் தமிழன், வேல் வைத்துப் பூஜை செய்பவர்களும், முருகனைக் குலதெய்வமாகக் கொண்டவர்களும், சஷ்டி, கிருத்திகை தினங்களில் விரதம் இருப்போரும் புடலங்காய் சேர்ப்பதில்லை. அதிலும் வரிவரியாக இருக்கும் புடலை கிட்டே கூட வராது. என் அம்மா வழித் தாத்தா தினமும் வேல் பூஜை செய்வதால் என் தாத்தா வீட்டில் புடலை சமைத்தே நான் பார்த்ததில்லை. இப்போதும் என் மாமாக்கள் வேல் பூஜையை எடுத்துக் கொண்டிருப்பதால் புடலங்காய் சேர்க்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  36. நாகப்ப ஸ்வாமியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ளவர்களில் பலர், அவர்களின் வீடுகளில் புடலங்காயைச் சேர்த்துக்கொள்வது இல்லை. விலக்கி வைத்து விடுகிறார்கள். சென்னை வியாசர்பாடியில் சுந்தரேச ஐயர் என்ற ஒருவர் இருந்தார். அவரின் குலதெய்வம் நாகப்ப ஸ்வாமி. இங்கு திருச்சி வயலூர் அருகே ஏதோ ஒரு ஊரில் உள்ள அவர்களின் குல தெய்வமாகிய நாகப்பனுக்கு ஆண்டுதோறும் அபிஷேக ஆராதனைகள் செய்ய குடும்பத்தோடு வந்து போவார்கள். அந்த சுந்தரேச ஐயர் என்பவர், தனது வலது கையில் படமெடுக்கும் பாம்பை பச்சை குத்திக்கொண்டு இருந்தார்.

    அபார சம்சாரியான அவருக்கு ஐந்து பிள்ளைகள் + ஐந்து பெண்கள். அவரின் மூத்த பெண்ணை என் மைத்துனருக்குக் கொடுத்துள்ளார்கள். அந்தப்பெண்ணே இப்போது 60+ சீனியர் சிடிஸன் ஆகிவிட்டாள். அவளுக்கே இன்று கல்யாணம் ஆன + குழந்தைகள் உள்ள மூன்று பெண்களும் + கல்யாணம் ஆகாத ஒரு பிள்ளையும் இருக்கிறார்கள்.

    ஆல விருக்ஷம் போன்ற இந்த மிகப்பெரிய குடும்பத்தினர் யாருமே இதுவரை புடலங்காய் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்து வருபவர்கள் மட்டுமே.

    அதைவிட வேடிக்கை என் மைத்துனரும் (தன் மாமனார் + மனைவி எவ்வழியோ தானும் அவ்வழியே என்பதுபோல) புடலங்காயைத் தொடுவதே இல்லை. புடலங்காயை அவர்கள் பாம்பாக நினைக்கிறார்கள். அதனால் அதனை நறுக்குவதோ சமைப்பதோ சாப்பிடுவதோ இல்லை.

    >>>>>

    பதிலளிநீக்கு
  37. புடலங்காயில் பாம்பு ஏறின புடலங்காய்களும் உண்டு. அவை மிக அதிக பச்சை நிறமாகவும், நீளமாகவும் இருக்கும். ஒரேயடியாகக் கசந்து வழியும்.

    எனவே நான் புடலங்காய் வாங்கும் போது, மிகச்சிறியதாக, பிஞ்சாக, வெள்ளரிப்பிஞ்சுகள் போல, ஒரு ஜான் அளவுக்கு மேற்படாமல், அதுவும் வெளுப்பாக, கட்டை குட்டையாக உள்ளதை மட்டுமே வாங்கி வருவது உண்டு.

    அதையும் நறுக்கும் வேலை என்னுடையது என்பதால், முதலில் அந்த முழுப் புடலங்காய்கள் அனைத்தையும், தண்ணீரில் காட்டி தேய்த்து அலம்பி விடுவேன். பிறகு ஒவ்வொன்றாக நான் கத்தியால் நறுக்கும்போது, ஒரு சின்ன துண்டத்தை பச்சையாகவே வாயில் போட்டு கடித்து ருஸித்து விட்டு (கசப்பு ஏதும் இல்லையா என சோதித்து சரி பார்த்துவிட்டு) அதன் பிறகே நறுக்குவேன்.

    இல்லாவிட்டால், நாம் கஷ்டப்பட்டு அனைத்தையும் நறுக்கிவிட்டு, அதற்கு மேல் போட வேண்டிய அனைத்து சாமான்களையும் போட்டு, அடுப்பில் ஏற்றி சமைத்த பின், அது கசந்து வழிந்தால் யாருமே சாப்பிட முடியாது அல்லவா? நம் பொருட்களும், பொன்னான நேரமும், கடும் உழைப்பும், அதுவும் நல்ல பசி வேளையில் வேஸ்ட் ஆகிவிடும் அல்லவா?

    அதனால் இதில் நான் எப்போதும் மிகவும் முன்னெச்சரிக்கையாகவே இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  38. பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்களும் வாயில் போட்டுப் பார்த்தே வாங்க வேண்டியவை! பீர்க்கங்காயைச் சுரண்டி வாயில் போட்டுப் பார்க்கலாம். வெள்ளரிக்காயையும் அப்படித் தான்! :)

    பதிலளிநீக்கு
  39. கீதா மேடம், வேல் பூஜை செய்பவர்கள் புடலையைச் சாப்பிடுவது இல்லை என்று சொன்னதுமே தெரிந்துவிட்டது. ஆனால் இதெல்லாம் ஒரு வகை நம்பிக்கைதானே (லாஜிக் இல்லாத). ஒரு விதத்தில் வைராக்யம்னுகூட வச்சுக்கலாம்.

    எங்க ஊர்ல (இங்க), வெள்ளிரிக்காய் வாங்கும்போது (நம்ம ஊர்ல இருந்து வர்றது இல்லை. இங்க விளையற நீள வெள்ளரிக்காய்) விற்பவர்களே, ஒவ்வொண்ணையும், ஓரத்தில் ஒடித்து சாப்பிட்டுப்பார்த்துத்தான் நமக்கு எடை போடுவார்கள். பீர்க்கங்காய் பற்றிக் கேள்விப்பட்டதில்லை (கசக்கும்னு). வெள்ளரிப்பச்சிடியில் ஒரு வெள்ளரி கசந்தாலும் கோபு சார் சொன்னமாதிரி, மொத்தமும் வீண்தான். நான் பார்த்தவரை, எல்லார் வீட்டிலேயும் ஆம்பளைங்கதான் கீரை ஆயறதும், கறிகாய்களைத் திருத்தறதும். இதுல ஏதேனும் காரணம் இருக்கா (அல்லது மெதுவாத் திருத்தி, வேறு வேலை எதுவும் கொடுக்காமல் பார்த்துக்கறத்துக்கா? சொன்னா எனக்கும் வசதியாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  40. @நெல்லைத் தமிழன், எங்க வீட்டிலே எல்லாமும் நான் தான்! காய்களைத் திருத்துவதும் சரி, (நறுக்குவது) கீரை ஆய்ந்து நறுக்குவதும் சரி! நான் மட்டுமே! வீட்டில் விருந்தாளிங்க இருந்தால் கூட நான் தான்! ஒரு சிலர் செய்து கொடுக்கிறேன்னு சொல்வாங்க. அப்போ சரினு விட்டுடுவேன்! ஆனால் அப்படி யாரும் வரதில்லை என்பதே உண்மை! வரவங்க அவங்க வேலையா வெளியே போயிடுவாங்க! :)

    பதிலளிநீக்கு
  41. 'நெல்லைத் தமிழன் said...

    //நான் பார்த்தவரை, எல்லார் வீட்டிலேயும் ஆம்பளைங்கதான் கீரை ஆயறதும், கறிகாய்களைத் திருத்தறதும். இதுல ஏதேனும் காரணம் இருக்கா (அல்லது மெதுவாத் திருத்தி, வேறு வேலை எதுவும் கொடுக்காமல் பார்த்துக்கறத்துக்கா? சொன்னா எனக்கும் வசதியாயிருக்கும்.//

    மற்றவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது. என்னைப்பொறுத்தவரை மட்டும் சொல்லுகிறேன்.

    என் பணி ஓய்வுக்குப்பின், பெரும்பாலான காய்கறிகளை நானே விருப்பப்பட்டுத்தான் கேட்டு வாங்கி நறுக்கித்தருகிறேன். அது ஒரு தனிக்கலை. IT IS AN ART WORK .... பொறுமையாக உட்கார்ந்தவாறு TABLE WORK செய்வது என்றால் எனக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும்.

    ஏதோ நம்மால் ஆன ஒரு உபகாரம் .... அதுவும் நம் குடும்பத்தாருக்கு + நாம் சாப்பிடும் சமையலுக்கு.

    என் மனைவிக்கு ஷுகர் அதிகமாகிவிட்டதால், கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அவளால் முன்பு போல அருவாமனையில் காய்கறி வெட்ட முடிவது இல்லை. கை விரல்களை வெட்டிக்கொள்வோமோ என்ற பயமும் வந்து விட்டது.

    எனக்கு இந்த அருவாமனையெல்லாம் சரிப்பட்டு வராது. நல்ல அருமையான ஸ்பெஷல் கத்தி மட்டுமே. அதாவது வெட்டும் பகுதி வெண்ணெய்வெட்டி போல வழவழப்பாக வழுவட்டையாக இல்லாமல், அதில் ரம்பம் அல்லது ஹாக்ஸா ப்ளேடு போல டிசைன் செய்யப்பட்டு இருக்கும். அதனை சாணை பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

    வருடம் ஒருமுறை தூக்கிப்போட்டுவிட்டு வேறு கத்தி வாங்கிக்கொள்வேன். கைவசம் எப்போதுமே 2-3 கத்திகள் இருப்பதுபோல வாங்கும்போதே, கொஞ்சம் கூடுதல் எண்ணிக்கையில் வாங்கி வந்து விடுவேன்.

    சுமார் ஒன்றரைக்கிலோ முட்டைக்கோஸை, பொடிப்பொடியாக டைமன் கல்கண்டு ஷேப்பில் அழகாக ஆசையுடன் நறுக்கிக்கொடுப்பேன். அதில் தேங்காய் துருவிப்போட்டு கறி செய்தால், அப்படியே அதனை சாதத்தில் போட்டு பிசைத்து சாப்பிட ஜோராக இருக்கும். தேங்காய் சாதம் போல இருக்கும். அதன் பிறகு சாம்பார், ரஸத்துக்கும் தொட்டுக்கொள்வேன்.

    முட்டைக்கோஸை சிலர் பெரிசு பெரிசாக சத-சதன்னு, சட-சடன்னு அவதி அவதியாக வெட்டித் தள்ளி விடுவார்கள். அது என்னவோ எனக்கு அவ்வளவாகப் பிடிப்பது இல்லை. எதைச் செய்தாலும் அதில் ஓர் தனித்திறமையும் தொழில் நேர்த்தியும் வேண்டுமாக்கும். அதுதான் என் கொள்கையாக்கும்.

    >>>>>

    >>>>>

    பதிலளிநீக்கு
  42. அதுபோல நல்ல முரட்டு வாழைப்பூக்களாக 5-6 வாங்கி வருவோம். என்னிடம் அவற்றை ஒப்படைத்து விடுவார்கள்.

    முதல் நாள் ஒவ்வொன்றிலும் ஒரு 10-15 மடல்கள் வீதம் எடுத்துக்கொண்டு, அதில் கள்ளன்களை நீக்கிவிட்டு, பொடிப்பொடியாக நறுக்கிக்கொடுத்து விடுவேன். அதில் முதல் நாள் கறியோ அல்லது பருப்பு உசிலியோ செய்துவிடுவார்கள்.

    மறுநாள் ஒவ்வொரு வாழைப்பூவிலும் மேலும் உள்ள மடல்களை அதே போல கள்ளன் ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கிக்கொடுப்பேன். அதை கூட்டு செய்வார்கள். ருசியோ ருசியாக இருக்குமாக்கும்.

    உள்ளே மொட்டு என்று இருக்குமே அதனை நான் வெட்டும் அழகே அழகாக இருக்கும். கைகளில் பிசின் வழியாமல், அந்தக் கட்டையுடனேயே கையில் பிடித்துக்கொண்டு, சுற்றிலுமாக ஒருவித தொழில்நுட்பத்துடன், பம்பரம் போலச் சுற்றிச்சுற்றி நறுக்குவேனாக்கும். இதை வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து மகிழ்வார்களாக்கும். :)))))

    நிறைய நிலக்கடலை அல்லது கொத்துக்கடலை போட்டு, காரசாரமான புளிக்கூட்டாகச் செய்தால் A1 ஆக தேவாமிர்தமாக இருக்கும். மோர் சாதம் வரை இந்தக்கூட்டினைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

    மேலே சொன்ன இரண்டும் ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. எல்லாக்காய்கறிகளையும், பூச்சி புழுக்கள் இல்லையா என ஆராய்ந்து ஜோராக ஆசை ஆசையாக நறுக்கித்தருவேன்.

    பெரும்பாலும், காலையில் 10 மணிக்கு மேல் டிபன் சாப்பிட்டுவிட்டு, பகல் 11 மணிக்கு மேல் 1 மணிக்குள் இந்த காய்கறி நறுக்கித்தருவது தான் என் வேலையாகும்.

    தினசரி சாப்பாடு 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் மட்டுமே. ஆபீஸ் போக வேண்டிய நிர்பந்தங்கள் ஏதும் இல்லையே. அதனால் எல்லாம் பொறுமையாக அருமையாக அவசரமில்லாமல் மட்டுமேவாக்கும். :)))))

    பதிலளிநீக்கு
  43. வைகோ ஸார்... சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழைப்பூவில் அந்தக் கடைசிப் பகுதியை நான் அப்படியே சாப்பிட்டு விடுவேனாக்கும்!

    எங்கள் இல்லத்தில் நானும் காய் நறுக்குவதுண்டு. ஆனால் ரெகுலராக அல்ல. வித்தியாசமாக செய்ய முயற்சிப்பேன். சேனைக்கிழங்கு எடுத்துக் கொண்டோமானால் ஒருமுறை டயமண்ட் டயமண்டாக நறுக்கி முழு ரோஸ்ட்டோ, அரை ரோஸ்ட்டோ செய்தோமானால் அடுத்த முறை பாடல் படலாக நறுக்கி வித்தியாசமாக முயற்சிப்பேன்! நான் சமையல் என்றால் எனக்கு யாரும் எதுவும் செய்து தரக் கூடாது! நானேதான் எல்லாம்!

    பதிலளிநீக்கு
  44. அன்புள்ள ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

    //வைகோ ஸார்... சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழைப்பூவில் அந்தக் கடைசிப் பகுதியை நான் அப்படியே சாப்பிட்டு விடுவேனாக்கும்! //

    நெருக்கமான ஆயிரம் புடவைகள் கட்டி, ஆயிரம் பாதுகாவலர்களைத்தாண்டி, பலத்த பாதுகாப்புகளுடன், மிகவும் பரம இரகசியமாக பரம்பொருள் போல உள்ளே உள்ள அந்த வாழைப்பூவின் மொட்டுப் பகுதியினை நானும் அப்படியே கடித்துச் சாப்பிட்டுள்ளேன்.

    இருப்பினும் நான் சொன்னதும், ஒரு ஸ்டேஜுக்கு மேல் கள்ளன் ஆயமுடியாமல் மிகவும் குருத்துப் பூக்களாக இருக்குமே அவற்றை அப்படியே மொட்டுடன் சேர்த்து நறுக்கி விடுவது பற்றி. கீழே மட்டும் தீபாவளி கலசம் (பூச்சட்டி) போல கொஞ்சம் வெட்டியெறிந்துவிட்டு, பிறகு சிண்டை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு, சுற்றிலும் பூக்கள் + மடல்கள் + மொட்டு ஆகியவற்றை, ஒட்ட முகச் சவரம் செய்வதுபற்றி. :)))))

    பதிலளிநீக்கு
  45. சேனைக்கிழங்கு, சேம்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, பீர்க்கங்காய், மேலே முள்ளு-முள்ளாக உள்ள செள-செள என்ற சீமைக் கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற எவ்வளவோ காய்கறிகளை எனக்குப் பார்க்கவே பிடிக்காது. கையால் தொடவும் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  46. //நெருக்கமான ஆயிரம் புடவைகள் கட்டி, ஆயிரம் பாதுகாவலர்களைத்தாண்டி, பலத்த பாதுகாப்புகளுடன், மிகவும் பரம இரகசியமாக பரம்பொருள் போல உள்ளே உள்ள அந்த வாழைப்பூவின் மொட்டு//

    ஹா.... நல்ல வர்ணனை!

    பதிலளிநீக்கு
  47. **நெருக்கமான ஆயிரம் புடவைகள் கட்டி, ஆயிரம் பாதுகாவலர்களைத்தாண்டி, பலத்த பாதுகாப்புகளுடன், மிகவும் பரம இரகசியமாக பரம்பொருள் போல உள்ளே உள்ள அந்த வாழைப்பூவின் மொட்டு**

    //ஹா.... நல்ல வர்ணனை!//

    பூ என்றாலே அது ஒரு பெண்போல அல்லவா !

    அதுவும் உள்ளே பரம இரகசியமாக உள்ள மொட்டுப் பகுதி என்றால் கேட்கவா வேண்டும். :)))))

    காம்னி, காஞ்சனங்களை ஜெயித்தவர்கள் இந்த பூலோகத்தில் யாரும் கிடையாதே !!

    அதனால் எனக்கும், வர்ணனைகள் தானாகவே என்னையறியாமலேயே, மிகச் சரளமாக வந்து விழுந்துவிடுகின்றன.

    பின் குறிப்பு:
    =============

    [காம்னி = பெண் மீது ஆசை; காஞ்சனம் = பொன் பொருள்களில் ஆசை + மண் ஆசை]

    பதிலளிநீக்கு
  48. கோபு சார்... உங்கள் பின்னூட்டத்தைப் படித்தால் படத்தில் சொல்வதுபோல் (தவறாக நினைக்காதீர்கள்) 'நீ ரசிகன்டா' என்று சொல்லாமல், 'நீங்க செம ரசிகர் சாப்பாட்டு விஷயத்துல' என்று சொல்லத்தோன்றுகிறது. பொதுவா ஓவியக்கலை தெரிந்தவர்கள் எதையும் கொஞ்சம் அழகுணர்ச்சியோடு அணுகுவார்கள். காய்தானே பண்ணப்போறோம், மொத்தமா வாய்க்குள்ளதானே போகப்போறதுன்னு, இஷ்டப்படி ஒரு ஒழுங்கில்லாமல் திருத்துவது appearanceக்கு நல்லா இருக்காது. என்னோட மாமனார், இப்போயும், கீரையை, ஒவ்வொரு இலையாக, பின்னால பூச்சி அல்லது தூசு கூடு இருக்கான்னு பார்த்து நல்லா அலம்பி மெதுவா கட் பண்ணுவார். இவ்வளவு வேலை அவர் செய்யவேண்டுமே என்று அங்கு போகும்போதெல்லாம் எனக்குக் கீரை பிடிக்காது என்று சொல்லிவிடுவேன். நான் கோஸ் பண்ணும்போது ரொம்பக் கஷ்டப்படாம நார்மலாத்தான் (உங்க பாஷைல அவதி அவதியா..) அவ்வளவு மோசமா இல்லை... ஆனாலும் ரொம்ப அழகோடு கட் பண்ணமாட்டேன்.

    முரட்டு வாழைப்பூ - படிக்கும்போதே எனக்கு வாசனை வருகிறது. நாங்கள் சிறிய வயதில், வாழை மடல்லதான் இரவுச் சாப்பாடு (மோர் சாதம், குழம்பு). செம வாசனையா இருக்கும் மடல்ல வச்சுச் சாப்பிடும் சாதம். அதேமாதிரி, கடைசி வாழைப்பூ (வெள்ளையா இருப்பது) பசங்களுக்கெல்லாம் சமமா கட் பண்ணிக்கொடுப்பார்கள்.

    ஸ்ரீராம்... இப்படி வித்யாசமா நானே பண்ணப்போகிறேன் என்று உட்கார்ந்தால், வீட்டில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கும். அதுவும், அவங்க சீரியல்ல உட்கார்ந்திருக்கும்போது, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நீங்கள் சமையலறையில் பண்ணினால், யார்தான் வரவேற்கமாட்டார்கள்?

    பதிலளிநீக்கு
  49. அன்புள்ள நெல்லை... எங்கள் வீட்டில் யாருமே சீரியல் பார்ப்பதில்லை! முட்டை கோஸை பஜ்ஜிக்கு சீவுவோமே அதில் சீவலாம். அதில் சீவி விட்டு, கொஞ்சம் அதையும் நறுக்கலாம்! அதிலேயே இருக்கும் துருவரிலும் துருவலாம்! கோஸோ வெங்காயமோ நான் நறுக்கினால் நைஸாக இருக்குமாக்கும்!

    பதிலளிநீக்கு
  50. ”எப்படிச் செய்யணும் மாமூ” நினைவுக்கு வருகிறதா! :) இந்த வரியை அதிகம் ரசித்தேன்.... :) அதிக இடைவெளி வந்து விட்டது எனது பக்கத்தில் வெளியிட்டு!

    கூட்டு - மிளகூட்டல் எனக்கும் பிடித்தது. அத்தைப்பாட்டி குமுட்டி அடுப்பில் செய்து தருவார் - அத்தனை ருசியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  51. 'நன்றி வெங்கட். 'இடைவெளியை' ஞாபகப்படுத்திவிட்டேன். அதுக்காக, லவ்பானி/அபாங்க் செய்முறையை எழுதிவிடப்போகிறீர்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!