செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஒரு நாள் மயக்கம் - ரேவதி நரசிம்மன்



     சீதைகள் ஆங்காங்கே ராமனை மன்னித்தபடிதான் இருக்கிறார்கள்.    அதில் ஒன்றுதான் வல்லிம்மா எழுதி இருக்கும் ஒருநாள் மயக்கம் சிறுகதை.


====================================================================







                                   ஒரு நாள் மயக்கம். 

                                    ரேவதி நரசிம்மன்



மழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம்  மனம் சுறுசுறுப்பானது.

குழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது
இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரே ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.


அடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி
கிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.


அழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.

''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)


...............................


வெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.  ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.  இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.

'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'
யாருக்கு?

'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.

'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம். நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.

ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.


சற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.

ஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி' என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.

சுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.  இரண்டு மூன்று வருடப் பழக்கம்.  அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.

அதுவும் அவர்கள் கல்கத்தாவிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் சேர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.

சுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.  அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.

தான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே!! சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.

அவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,  பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.

11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.
 
இதே போல ஒரு சனிக்கிழமை இரவு.  அடுத்த நாள் சுதா பாசு இருவருக்கும் திருமண நாள்.

கோவை ராம் நகர் ஸ்ரீராமனைத் தரிசிக்க இருவரும் யோசித்துவைத்து, முதலில் சுதாவுக்கும் தனக்குமாக உடைகள் எடுத்து வந்தான் பாசு. அவனுடைய அலுவலகமும் அங்கேயே இருந்ததால் சுலபமாக முடிந்தது வேலை. தனக்குப் பிடித்த மாதிரி,ஆரஞ்ச் வண்ண டெர்கோசா பெரிய பூக்களோடு இருந்த புடவையும், ஸ்கைப்ளூ வண்ண லிபர்டி டெரிகாட்  சட்டையும் வாங்கி வண்டியில் வீட்டுக்கு விரைந்தான்.

தெருமுனை திரும்பும் போதே சுரேஷின் வண்டியைப் பார்த்ததும் மனம் திக் என்றது.

நண்பனைக் காண்பதில் சந்தோஷம் என்றாலும் ,சுதாவின் அதிருப்தியை 
இன்று சம்பாதிக்க வேண்டாமே எனும் யோசனை முன் நின்றது.
வண்டியை நிறுத்தியதும் சுரேஷின் சிறுவர்களும், தன் மழலைகளும் ஆடும் ஆட்டத்தைக் கண்டு மனமகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தான்.

முகம்,மனம் நிறைந்த காதலோடு கணவனையும் அவன் கைகளில் இருந்த பைகளையும் எதிர்கொண்டாள் சுதா. அடிக்குரலில் அவர்களைச் சீக்கிரம் அனுப்பிவையுங்கள் என்ற வேண்டுகோளோடு.

ஹ்ம்ம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.

சுருக்கமாகச் சொல்லப் போனால் விபரீதமாக முடிந்தது.

இரண்டு மூன்று மடக்கு விஸ்கி உள்ளே போனதும் , எல்லோருக்கும் குஷி பிறந்து
பாடல்கள் ஆரம்பிக்க ,சுதா மணியைப் பார்த்தாள் 9 ஆகி இருந்தது.
கண்வனின் அருகில் நின்று தோசை தட்டில் தோசையைப் போட்ட வண்ணம், சீக்கிரம் ஆகட்டும் என்று கிசுகிசுத்தாள்.

சுரேஷின் மனைவி பலமாகச் சிரித்தபடி  நோ சீக்ரெட்ஸ் நவ் என்று பாசுவின் அந்தப்பக்கம் நின்று அவன் தோள் மேல் கைவைத்தாள்.

அவன் அதை உணர்ந்தானோ இல்லையோ, அவன் கை தன்னிச்சையாக அவளை வளைத்தது.  சுதாவின் வயிற்றில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.

சரேலென்று கொந்தளிப்போடு கையிலிருந்த பீங்கான் தட்டை விட்டெறிந்தாள்..சுக்கு நூறாக உடைந்த தட்டை வெறித்தவள்,
தன் பெண்களை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சத்தமில்லாமல் சாத்தினாள்.

கொஞ்ச நேரத்தில் சுரேஷ் வண்டி புறப்படும் சத்தமும், பாசு தன் அறைக்குள் செல்லும் சத்தமும் கேட்க. குழந்தைகள் உறங்கும் வரை தட்டிக் கொடுத்தவள் ,அழுத கண்களோடு உறங்கச் சென்றாள்.

காலை எழுந்தவள் கலக்கத்தைக் களைந்துவிட்டுக் கடவுளிடம் விளக்கேற்றி நிம்மதி வேண்டினாள்.

யந்திரத்தனமாக டோஸ்ட் செய்து, தோசை எல்லாம் வார்த்து, ஆரஞ் கிசான் கலந்து மூவருக்கும் சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு, தன் துளசி, மல்லி என்று செடிகளொடு நேரம் கழித்தாள்.

பின்னால் பாசு வரும் சத்தம் கேட்டதும் தோசை வைத்திருக்கிறேன்.  குழந்தைகளோடு சாப்பிடுங்கள். நான் கோவில் போகவேண்டும் என்று திரும்பினாள்.

அழகான பாசுவின் முகம் சிவந்த கண்களோடு தன்னைப் பார்ப்பதும் தெரிய கண்ணில் தயாராக இருந்த துளிகள் கீழே சிந்தின.
 

சுதா மா. ஸாரி. ஐ டிட் நாட் know what came over me.  நாம் அனைவரும் கோவிலுக்குப் போகலாம். பத்துவருடம் முன் நாம் சேர்ந்த சிறந்த தினம் இல்லையா.

ஆமாம் ஆனால் அந்தப் புனிதம் இருக்கிறதா தெரியவில்லை.
நான் திருச்சி போய் வருகிறேன். எனக்கு அகிலாண்டேஸ்வரியிடம் முறையிட ஆசை என்று கலங்கிய மனைவியின் கரங்களைப் பிடித்தான் பாசு.

நீ போனால் நானும் வருவேன்.  எனக்கும் அவளிடம் கேட்கவேண்டும் என் மனைவி ஏன் என்னிடம் நெருங்க மறுக்கிறாள் என்று.

 மது அரக்கனை அழித்த மாதவன் கிடைத்தால் இந்த லக்ஷ்மியும் பாசுவிடம் வருவாள் என்கிற பதில் சட்டென்று வந்தது.

அன்று ராமர் கோவிலில் இருவரும் தரிசனம் செய்யும் போது மங்கையும் மணாளனும் சேர்ந்திருக்க மது வேண்டாம் என்கிற கையெழுத்திடாத ஒப்பந்தம் நிறைவேறியது.

மது இல்லாத புது இரவு வந்தது.

ஆமாம் இந்த சீதையும் ராமனை மன்னித்தாள்.

57 கருத்துகள்:

  1. படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கதை நல்லாருக்கு. ஏற்கனவே படித்த ஞாபகமும் வருது. சீதைகள் உலகில் இல்லையென்றால் இராமாயணம் ஏது. இந்தப் படத்துக்கு ஓவியம் வரைய ஜெ... தான் சரி. கதைக்கு ஓவியம் வரைய சரியான இடமும் மனதில் தோன்றியது

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை, இப்போதைய தமிழ்நாட்டுக்குத் தேவையும் கூட!

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை வல்லி அக்கா. மாதவன் மனக்கவலை தீர்த்தார்.

    பதிலளிநீக்கு
  5. காலத்திற்கேற்ற செறிவுள்ள கதை..
    ஆனாலும் கதை மாதிரி தெரியவில்லை..

    எதற்கும் கவலைப்படாத மேல்தட்டிலும்
    வறட்டு கௌரவம் பிடித்த நடுத்தரத்திலும் - இப்படியான இருட்டுச் சித்திரங்கள்..

    இருந்தாலும் சுரேஷின் மனைவி திருந்த வேண்டும்..

    குடும்பங்களையும் குதுகலங்களையும் குலைக்கும் மது வேண்டாம்.. ஒருபோதும் வேண்டாம்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. ஹப்பா! என்ன ஒரு சரளம் வல்லிம்மா. குடி குடியை கெடுக்கும்ன்னு சும்மாவா சொன்னார்கள். Superb.

    பதிலளிநீக்கு
  7. நெல்லைத்தமிழன், ரொம்ப நாட்களுக்கு முன் எழுதிய கதை இது.
    என் வயசுப் பெண்தான் அவள். நாங்கள் பைக்கில் போவோம் அவர்கள்
    காரில் வருவார்கள். கரூர்பக்கம் சொந்த ஊர்.
    ஊர் பிடிபட நாளாச்சு.
    பெற்றொருக்கு விவசாயம். அடிக்கடி வரமுடியாத நிலை. நிறைய பேசுவாள்.yes Jeyaraj would be nice.thank you ma.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை வல்லிம்மா.....ஆரம்பமே அமர்க்களம்....கதையின் சீதையின் மனம், குணம் பற்றிச் சொல்லிவிட்டது....மென்மையான மனம்...

    அடுத்து, படிப்பறை க்கு வந்ததும்...கிண்ணம்...சொல்லிவிட்டது...கதையின் ராமனை பற்றி...அடுத்து..சுரேஷ்..குடும்பம் பற்றி சொன்னதும்...தற்போதைய...மேல்தட்டு வர்க்கத்தின் ...அவர்களின் வாழ்வியல் எப்படி.செல்கிறது என்று...வந்ட்ஹ்உவிட்டது...

    பல மேல்தட்டு குடும்பங்களில் நடப்பது...அழகாகச் சொல்லிவிட்டீர்கள்...இப்படி எத்தனை சீதைகள் தினமும் மன்னித்துக் கொண்டு...அதுவும் அடித்தட்டு வர்க்கத்தில்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஆமாம். கீதா,
    பாதி கதை, பாதி நடந்தது.இப்போ நிலைமை இன்னும்
    விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நன்றி கோமதி. பழைய காலக் கதை. நல்ல கருத்துக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சரியாகச் சொன்னீர்கள் துரை செல்வராஜு.
    இப்போதும் காதில் பல விஷயங்கள் விழுகின்றன.
    அமீரகத்தில் கூடப் பார்த்தேன்.
    ஏன் மது ஒரு முக்கியமான விஷயம் ஆகிவிட்டது.
    மிக வருத்தம் ஆக இருக்கிறது. இதனால் முறிந்து போன நல்ல நட்புகளையும் பார்க்கிறேன்.
    காலம் மாறக் கடவுளைத்தன் வேண்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. ஸூப்பர் பொருத்தமாக கொண்டு வந்து முடித்தீர்தள் அருமை.

    பதிலளிநீக்கு
  13. நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான கருத்துள்ள கதை பாராட்டுகள் தொடருங்கள் வெற்றி பெறுங்கள்

    பதிலளிநீக்கு
  14. அன்பு மாலு, ரசித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி. எப்பவும் கதை சொல்லப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  15. வடநாட்டுக் கலாச்சாரங்களிலும், மேல்தட்டு மக்களிடமும் இதெல்லாம் சர்வ சாதாரணமாக தெரிந்தே நடைபெறுவதாக அறிகிறோம்.

    கெட்-டுகெதர் என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாமோ, வெளியில் சொல்லவோ எழுதவோ கூச்சமளிக்கும் விவஸ்தை இல்லாத அசிங்கமான சம்பவங்கள் (மனைவிகள் தங்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பிறரின் கார் சாவிகளில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கார் சாவி உரிமையாளர் அவர்களால், அவள் தனி அறைக்கு ஒதுக்கித் தள்ளிக்கொண்டு செல்வது, விடிய விடிய கூத்தடித்துவிட்டு, காலையில் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல தனது சொந்த ஒரிஜினல் ஜோடியுடன் வீடு திரும்புவது போன்றவை) அரங்கேறித்தான் வருகின்றன என்று ஒருசில பெண் பதிவர்களே என்னிடம் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

    இவை எல்லாவற்றிற்கும் குடி போதையே அடிப்படைக் காரணமாக இருப்பினும், வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதும் இல்லாமல், தேகத்தில் உள்ள கொழுப்பின் காரணமாகவும், பணத்திமிறு, சமூக அந்தஸ்து, குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற லெளகீக விஷயங்கள் போன்ற பலவற்றையும் எதிர்பார்த்து, பல கணவன்மார்களால் இவை தங்கள் மனைவிகள் மீது நிர்பந்திக்கப் பட்டும், திணிக்கப்பட்டும் வருகின்றன.

    ஒரு முறை இந்த சேற்றில் காலை வைத்து விட்டவர்களுக்கு (ஆணோ/பெண்ணோ) அதன்பின் இதுவே .... இந்தச் சேறே பழகிப்போய் சந்தனமாக மணக்கத்தான் செய்கிறது. :(

    அடித்தட்டு மக்கள் என்றால் இவை ஊர் சிரித்துப்போய் வெட்டு, குத்து, கொலை, தற்கொலை என்று முடியக்கூடும்.

    நடுத்த வர்க்கம் என்றால் உடலும் உள்ளமும் நடுங்கிப்போய், குறைந்தபக்ஷம் விவாஹரத்திலாவது போய் முடியக்கூடும்.

    இவ்வாறான கலாச்சாரக் கேடுகள் நம் நாட்டுக்கும், குறிப்பாக நம் நாட்டுப்பெண்களுக்கும் சற்றும் உகந்தது அல்ல என்பதை அனைத்துப் பெண்களும் உணர்ந்து, மிகவும் உஷாராக இருந்து, இந்த விபத்துக்களை வரும்முன் காத்து, முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்.

    இதையெல்லாம் தாங்கள் நன்கு தெரிந்து/புரிந்து மனதில் நிறுத்தி, பட்டும்படாததுமாகக் கச்சிதமாகக் கதையை நகர்த்திச் சென்றுள்ள விதமும், ஏதோ ஒரேயொரு நாள் மட்டும் அவளுக்குத்தெரிந்தே இந்தத் தவறு நடந்துவிட்டது போன்றும் காட்சிகளை அமைத்துக் கண்முன் நிறுத்தி, ‘ஒருநாள் மயக்கம்’ என்ற தலைப்பும் கொடுத்துள்ளதும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. அன்பு கீதா..தில்லைக்காத்து,
    எத்தனை அழகான பின்னூட்டம். ம்ஹூம் எனக்கு வராது இத்தனை அழகா அலச.
    மிக மிக நன்றி.
    மேல்தட்டு விவகாரங்கள் கூட ஒரு மாதிரி முடித்துவிடுவார்கள். இது நடுத்தர வர்க்கம்.
    மாட்டிக் கொண்டு விழிக்கும் ஆழம் தெரியாமல் காலை விட்டு.

    கதைக்கு சுபம் சொல்லலாம். ஆனால் அவதிப் படுபவர்களே அதிகம்.
    அதுவும் கீழ்த்தட்டில் இருக்கும் மக்களுக்கு
    வலுவாகப் போராடவும் முடியாது...நீதி சொன்னால் கேட்கும் நிலையிலும் ஆண்கள்
    இருப்பதில்லை. தானாகத் திருந்தினால் ஒழிய நிம்மதி இல்லை.
    ....

    பதிலளிநீக்கு
  17. மிக நன்றி கில்லர் ஜி. சுலபமாகச் சுபம் போடும் சமாச்சாரம் இல்லை. நெடும் தொடர்கதை எழுத முடியாதே. கண் முன்னால் நடந்த சம்பவம் தான்.கொஞ்சமே கற்பனை.

    பதிலளிநீக்கு
  18. மிக நன்றி. அசோகன் குப்புசாமி. உங்கள் கருத்துகள் எனக்கு முக்கியமானது.

    பதிலளிநீக்கு
  19. நடைமுறையில் மேல்நாடுகள்தான் என்றில்லாமல், நம்நாட்டிலும் பறந்து வளர்ந்து வரும் கலாசார அழிவுகளைத் தெரிவிக்கும் கதை. ஒருநாள் தவறு,மன்னிக்கப் படுகிறது. அழகான நடை. என்ன மன்னித்தாலும் திரும்ப இம்மாதிரி நடந்து கொள்ளாது இருப்பதற்காக, கோபத்தைக் காட்டத் தட்டை எரிவது மட்டும் என்று கட்டுப் படுத்திக் காட்டியுள்ளீர்கள். மனஎழுச்சி ஓரளவாவது இதன் மூலம் காட்டப் பட்டது. இல்லாவிட்டால் ஜட உணர்ச்சியே மேலோங்கும். இதுவும் அவசியம். கடமைகளைத் தவராது முடித்து, கோவிலுக்குப் போய் முறையிடுவதாகச் சொன்னதையும் ரஸித்தேன். யாரிடம் சொன்னால் விஷயம் பரவாது இருக்கும்? இந்தியா. கோவிலுக்குப் போக முடியும். புது மன ஒப்பந்தம் மது அரக்கனை ஒழித்த மாதவன் வேண்டும். நடந்தது ஸமாதானம். நல்ல முடிவு.கதையை அழகாகக் கொண்டு சென்றுள்ளீர்கள். பாராட்டுகள் உங்களுக்கு. ஒப்பந்தம் ஸரிவர அமுலில் இருந்தால் போதும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. மது அரக்கனை அழித்த மாதவனைப் பெற ,சுதா மாதவம்தான் செய்திருக்க வேண்டும் :)

    பதிலளிநீக்கு
  21. நான் வந்துட்டேன்ன்ன்ன்... மை வச்சாத்தான் உள்ளே போகலாம் என சகோ ஸ்ரீராம் வாசலிலே நிற்கிறாரா:) பயத்திலயே மை வச்சுட்டேன்ன்:)..

    ஆகா இது , ராமன் சீதையை மன்னிச்ச.. சே..சே என்ன இது எல்லாம் தடுமாறுது எனக்கு.. அந்தப் பாசு:) வைப்போல... சீதை ராமனை மன்னிச்ச கதையாக இல்லையாக்கும் என்றே படிச்சிட்டு வந்தேனா... முடிவில் சீதை ராமனை மன்னிச்சுட்டா...

    மிக அழகாக நகர்த்தி வந்திருக்கிறீங்க கதையை வாழ்த்துக்கள். ரசிச்சுப் படிச்சேன்.

    பதிலளிநீக்கு
  22. இக்காலத்தில் மதுவால் எத்தனையோ குடும்பங்கள் அழிந்துகொண்டிருக்கிறதே இதை கவனிக்கத் தவறுவோரின் வாழ்க்கை கவலைக்கிடம்தான்.

    சிலருக்கு கொஞ்சம் அதிகம் குடித்தால்தான் நிலை தடுமாறுவார்கள், ஆனா சிலரோ.. கண்ணால் பார்த்தவுடனேயே அவர்களின் சிரிப்பு பேச்சு எல்லாத்தையுமே மாத்தி விடும் இந்த ”கால் எடுத்த மாது”[ கெள அண்ணனின் கேள்வி ஸ்டைலில் சொன்னேன்:)].

    ஊரில் உலகில் நடக்கும் சில உண்மைகளைக் கதையாக வடித்து தந்தமைக்கு கதாசிரியருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.. நானும் பாசு வை மன்னிச்சுட்டேன்ன் ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  23. சீதை என்றால் ராமனை மன்னித்துதானே ஆகவேண்டும் அது காவிய சீஒதையானாலும் கற்பனை சீதையானாலும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  24. உண்மைதான்.இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  25. அன்பு வை கோ சார், எவ்வளவு அழகா சொல்லிவிட்டீர்கள்.
    இந்த மாதிரி செய்திகளை
    நானும் காதில் விழும்போது

    நம்ப முடியாமல் இருந்தது. கலியுகம் தான் என்ன செய்வது.
    பெண்கள் ,ஆண்கள் எல்லோருமே,
    நேர்மையாக இருந்து விட்டால் நல்லது.
    இல்லாவிட்டால் திருமணமே செய்யவேண்டாமே.

    மனம் நிறையப் பாராட்டி இருக்கிறீர்கள். என்ன சொல்லி நன்றி .
    சொல்வது என்று புரியவில்லை. கண்முன் நடந்ததுதான் இது.
    அந்தப் பெண்ணுக்கும் இப்போ என் வயசு இருக்கும்.
    அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  26. அன்பு காமாட்சி மா,
    வெகு நாட்கள் கழித்து உங்களைப் பார்க்க இந்தக் கதை உதவி இருக்கிறது.
    ஆமாம், அவளுக்கு வந்த கோபத்தை எப்படி வெளிக்காட்டுவாள்.

    இதைச் செய்ததுதான் அவள் கணவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்.
    அவனும் அடிப்படையில் நல்லவனே அதனாலயே இது சாத்திய மானது. கூடா நட்பு எப்பொழுதும் நம் மக்களுக்கு வாய்க்கக் கூடாது.

    அது போல சந்தர்ப்பங்கள் ஏற்படும் வாழ்க்கை
    நிம்மதியாக இருக்காது.
    அனைவரையும் மாதவனே காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  27. அன்பு பகவான் ஜி, மாதுவும் அவனும் இணைய மது ஒழியட்டும்.
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  28. மைவைத்த மாது அதிராவுக்கு கதாசிரியையின் நன்றி.
    குடும்பம் குழந்தைகள் என்று பார்க்கும் போது சுதா, பாசுவை
    ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்னிலை.

    அதுவும் மனம் திருந்தினான் மன்னித்தாள்னு சொல்லலாம்.
    எதிர்காலத்தில் இது போல நடக்காமல் இருக்க
    உத்திரவாதம் தான் கோவிலுக்குச் சென்றது.
    இது அந்த நாள் கதை.
    இப்பொழுது எப்படியோ.
    மிக நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  29. ஆமாம் GMB sir,.
    அதுதான் நம் ஊரின் விதி.
    இன்று கூட வாசந்தி அவர்கள் எழுதி இருந்த
    பதிவைப் பகிர்ந்து கொண்டேன். அவர்களும்
    சீதா, துரௌபதி,மண்டோதரி என்று அவரவர் பட்ட துயரங்களை எழுதி
    இருந்தார். இந்த நிலை என்று மாறுமோ.
    நீங்கள் எல்லாம் வந்து படித்தது எனக்கு மிக மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  30. நன்றி Henrimarker,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வல்லிம்மா மிக அழகாக சுதாவின் மனநிலையையும் பாசுவை மன்னித்து ஏற்றுக்கொண்டதையும் எழுதியிருக்கீங்க ..அந்த அறையில் உள்ள ஒரு பொருளாகவே நான் என்னை உணர்ந்தேன் .பீங்கான் தட்டு சிலீரென உடைந்த சத்தம் கூட நிஜம்போலிருந்தது .சம்பவங்களை அப்படியே காண்பது போன்றதொரு உணர்வு ..பாவமில்லையா சீதைக்களும் சுதாக்களும் ..இக்காலத்தில் நிறையபேர் ஒரு கப்பில் துவங்கி அவர்களே அந்த கோப்பையில் மூழ்கும் நிலையில் இருக்காங்க வேதனையான விஷயம் .. நாகரிகம் ஏன்ற போர்வையில் பல கூத்துக்கள் நடக்கின்றன ..இதுதான் நாகரிகம் இதை செய்தால்தான் ஹைக்ளாஸ் மெத்தபடித்தோர்ன்னு உருவவாக்கி விட்டது யார் ? :( ..

    பதிலளிநீக்கு
  32. பாசு போன்றோருக்கு இறைவனே வழிகாட்டணும்

    பதிலளிநீக்கு
  33. இங்கே வருவதற்கு முன்னர் அவரது தளத்திற்குச் சென்றதால் அங்கேயே படித்து விட்டேன். நல்ல கதை. தொடரட்டும் கதைப் பகிர்வுகள்.

    பாராட்டுகள் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  34. . கதை அருமை. சீதை ராமனை மன்னிக்கும் விதம் விதாமான கற்பனைகளுக்கு அடித்தளமிட்ட எங்கள் ப்ளாக்குக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. ஆற்றொழுக்கான நடையில்சிறப்பாக எழுதப் பட்டிருக்கும் கதை.பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  36. தவறு நடக்கும் முன்பே தடுத்து விட்டாள் சீதை! மன்னிக்காமல் என்ன செய்வாள்? பாவம், ஒரு தப்பும் செய்யாத பீங்கான் தட்டுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டாள்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  37. அன்பு ஜெயக்குமார்,
    என்னுடைய எழுத்து முகனூலோடு முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன்,. ஸ்ரீராம்
    அவர்களின் கேட்ட கதை, இந்தத் தலைப்பு என்னை எழுத வைத்தது. அதற்கு அவருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்..உங்கள் கருத்துக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. அன்பு ஏஞ்சல், இதெல்லாம் ஒரு பெக், ஒரு ஸிப் என்று ஆரம்பிக்கும் வழக்கம் தானே.
    இன்று நினைத்தாலும் அந்தப் பெண்ணின் சாமர்த்தியமும்,நல்ல குணமும், அந்த மனிதன் திரும்பி வழிக்கு வந்தது மெய் சிலிர்க்கிறது.
    அடுத்தவீட்டில் நடப்பது திரை போட்டு நடந்தாலும்
    நம்மையும் தாக்குகிறது இல்லையா.
    உண்மைதான். எத்தனை சுதாக்களின் வாழ்வு உடைந்ததோ .இதெல்லாம்
    கணக்கெடுப்பவர் யார்.
    நாம் நல்லபடியாக வளர்க்கும் குழந்தைகள் ,கையில்,பணம்,பவர்,
    கூடா நட்பு என்று வந்துவிட்டால்
    மாறிப் போய்விடுவதை அந்தக் கோவை வாழ்க்கையில் பார்த்தேன்.
    நல்லது நடக்க இறை நம்பிக்கை,விடா முயற்சி,குடும்ப வாழ்க்கையில் அக்கறை இருவருக்குமே வேண்டும். நம் இளைய தலைமுறையையும் இறைவன் தான் காக்கவேண்டும்.
    நன்றி கண்ணா.

    பதிலளிநீக்கு
  39. மீண்டும் நன்றி வெங்கட். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  40. உண்மைதான் திரு.முரளிதரன்.
    ஸ்ரீராமுக்கும் குழுவினருக்கும் என்றென்றும் நானும் கடமைப் பட்டிருக்கிறேன்.
    பள்ளியில் கட்டுரைத் தலைப்பு கொடுத்து எழுதச் சொல்வார்கள்.
    இப்பொழுது தெரியும் விஷயங்கள் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    பொது அறிவு படிக்கும் தினசரிகளோடு,சரி.
    இப்போது அனுபவம்,வயது எல்லாம்
    கூடும்போது எழுத வைக்கிறது. மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  41. மிக நன்றி, பானுமதி வெங்கடேஸ்வரன்.
    இந்த அழ்கான பின்னூட்டங்களுக்காக இன்னும் எழுத ஆசை வருகிறது.

    பதிலளிநீக்கு
  42. மிக நன்றி,
    திரு செல்லப்பா Yagyaswamy,
    ஒரு சாது மிரண்ட கதைன்னு சொல்லலாமா.அதிர்ச்சி வைத்தியமாக
    வைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  43. நன்றி உரை கதையின் முடிவில் வரவேண்டும் இல்லையா.
    அன்பு ஸ்ரீராம் என்னை கதை கேட்க நினைத்தது என் அதிர்ஷ்டம்.
    நானும் பழைய நினைவுகளைப் பிரட்டி, எழுதி வைத்த நெடு நாவலைச் சுருக்கி

    மீண்டும் அந்தக் கதைக்கு உயிர் கொடுத்தேன்.
    ஸ்ரீராம் சொல்லி இருக்காவிட்டால்
    இந்தக் கதை இத்தனை நண்பர்களைப் போய்ச்சேர்ந்திருக்காது.
    மனம் நிறைந்த நன்றியை எங்கள் ப்ளாக் ஸ்ரீராமூக்கு சொல்லிக்
    கொள்கிறேன். தாங்க் யூ ஸ்ரீராம். இது மறக்க முடியாத உதவி.

    பதிலளிநீக்கு
  44. நன்றி வல்லிம்மா. உங்களை போன்ற மூத்த பதிவர்களின் படைப்புகளை இங்கு வெளியிடுவதில் எங்களுக்கும் பெருமை.

    பதிலளிநீக்கு
  45. அட. எனக்குத் தெரியலையே. நீங்க ப்ளாக் வச்சிருக்கிறீர்களா.
    WHAT A SURPRISE. I love Maalu better than Mala.
    so happy ma.thank you.

    பதிலளிநீக்கு
  46. அச்சச்சோ கெளை அண்ணனுக்கு என்ன ஆச்சு?:).. கதிரைக்கு எத்தனை கால்கள் என அவருக்கே தெரியாதுபோல:) அதுதான் மேசைக்குக் கீழ ஒளிச்சிட்டார்ர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  47. அவசியமான கருத்தை அருமையான நடையில் கொண்டு சென்று அழகாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் வல்லிம்மா! நன்றி எங்கள் ப்ளாக்!

    பதிலளிநீக்கு
  48. "இந்த சீதையும் ராமனை மன்னித்தாள்." என்ற முடிவில் கதைகள் வெளியிடும் தளமேலாளருக்கும் எத்தனையோ முயற்சிகளுக்கு அப்பால் "இந்த சீதையும் ராமனை மன்னித்தாள்." என்ற முடிவில் கதை புனையும் அறிஞர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  49. அன்பு ராமலக்ஷ்மி,
    நல்ல வழியில் குடும்பம் இருக்க மனைவிகள் முக்கிய காரணமாகிறார்கள்.
    ஆண்களுக்கு இருக்கும் வேலைப் பளு, தவறான நட்பு இது வாழ்வைச் சிதைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  50. மன்னிக்கும் குணம் சீதைகலிடம் அதிகம் இருப்பது சாத்தியம் தான். ஏனென்று தெரியவில்லை. 'தாய்க்குலம்' என்பதாலா?

    பதிலளிநீக்கு
  51. இயலாமை முக்கிய காரணம் அப்போதும் இப்போதும்.
    துரை. நலமா மா.
    வீட்டில் நிம்மதி வேண்டும் என்றால் யாராவது
    வீட்டுக் கொடுக்கத்தானே வேண்டும். இது 1970ஸ் கதை.
    இப்பவும் சீதைகள் இருக்கிறார்கள்.
    பேசும் சீதைகள்.சண்டை போடும் சீதைகள்.
    அழுதுவிட்டு சமாதானமாகும் சீதைகள்.
    ராமன் களும் இப்போது மன்னிக்கக் கற்றுவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!