புளிக்காய்ச்சல் (அ) சாதம் கலந்தால் புளியோதரை
வேண்டிய பொருட்கள் :
புளி (பழையதாக இருந்தால் சுகம்) : ¼ கிலோ
(ஒரு மணி நேரம் புளியை இளம் சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்)
நல்லெண்ணை : ¼ லிட்டர்
மஞ்சள் பொடி : 3 டீஸ்பூன்கள்
கடுகு : 2 டீஸ்பூன்கள்
வெந்தயம் : 2 டீஸ்பூன்கள்
(நன்றாக எண்ணை விடாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்)
சிவப்பு மிளகாய் (குண்டு மிளகாய்
அதிக காரம் கொடுக்காது) : 8 – 10 மிளகாய்கள்
உப்பு : தேவைக்கேற்ப
க.பருப்பு : 2 டீஸ்பூன்கள்
கருவேப்பில்லை தழைகள் : 2 கொத்துகள்
செய்முறை :
முதலில் சிறிய ஸ்பூனால் 4 ஸ்பூன் ந.எண்ணையை வாணலியில் விட்டு நன்றாக சுட்ட பின், கடுகு, க.பருப்பு ஆகியவைகளை வறுத்துக் கொள்ளவும். பாதி வறு பட்ட பிறகு மிளகாயை சேர்த்தால், மிகவும் கலர் மாறாமல் இருக்கும். இவை யாவையும் இறக்கி தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும். இப்போது ஒரு கொத்து கருவேப்பில்லையை உருவி நன்றாக எண்ணை வானலியில் சேர்த்து வறுக்கவும். அதையும் வறுத்தவைகளோடு சேர்த்து வைக்கவும்.
இப்போது, நன்றாக ஊறிய புளியை இரண்டு அல்லது மூன்று முறைகள் கை அழுந்த கரைத்து எண்ணை வானலியில் சேர்க்கவும். முதலில் ஊற வைத்த நீரை மட்டும் உபயோகிக்கவும். மேலும் நீர் சேர்த்தால் புளிக்காய்ச்சல் நீர்த்து விடும். வைத்திருக்கும் மஞ்சள் பொடியை சேர்க்கவும். அந்த கரைசலை நன்றாகக் கொதிக்க விடவும். அது நன்றாகக் கொதித்து கலர் சிறிது மாறும்போது மீதியிருக்கும் ந.எண்ணையைச் சேர்க்கவும். தேவையான உப்பை கலந்து, வெந்தயப் பொடியையும் சேர்க்கவும். இன்னொரு கொத்து கருவேப்பில்லையை கொத்தாக சேர்க்கவும். சல சலவென கொதிக்க விடவும். அடியில் பிடிக்காமல் சிறிது நேரத்திற்கு ஒரு முறை கிளறி விடவும். ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கொதித்த பின் தானாக சேர்த்த எண்ணை ஓரங்களில் பிரியத் துவங்கும். நன்றாக கொதிக்கும்போது நல்ல புளிக்காய்ச்சல் வாசம் வீட்டு வாசல் வரை மிதந்து வரும்.
இப்பொழுது, புளிக்காய்ச்சலை கீழை இறக்கி ஒரு எவர்சில்வர் சம்புடத்திற்கு மாற்றி விடவும். நான் வாணலியில் அதிக நேரம் வைப்பதில்லை.
இப்பொழுது, வறுத்து வைத்த கடுகு, க.பருப்பு மற்றும் கருவேப்பிலையை புளிக்காய்ச்சலுடன் சேர்த்து கலக்கவும்.
சிலர் வேர்க்கடலையை வறுத்து புளிக்காய்ச்சலுடன் சேர்ப்பார்கள். எங்கள் வீட்டில் நான் முந்திரி பருப்புகளை சிறிது சிறிதாக உடைத்து நன்றாக வறுத்து புளியோதரை கலக்கும்போது சாதத்துடன் சேர்ப்பேன். அவ்வாறு செய்தால், உண்ணும்போது மொறு மொறுவென்றிருக்கும். சிலர் சிறிது வெல்லம் சேர்ப்பார்கள். எங்கள் வீட்டில் அந்த வழக்கம் கிடையாது.
புளியோதரை கலக்கும்போது சாப்பிட்டு பார்த்து வேண்டுமானால் பொடி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் சிறிது ந.எண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டில் தனியா, மிளகு யாவற்றையும் வறுத்து பொடி செய்து சேர்க்கும் வழக்கம் கிடையாது.
நான் புளியோதரை கலக்கும் முன் நன்றாக சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி ஆற வைத்து விடுவேன். சாதம் பொல பொலவென ஆனதும் புளிக்காய்ச்சலைக் கலப்பேன். உங்கள் வசதிக்கேற்ப கலக்கவும்.இதற்கு தொட்டுக் கொள்ள தளி வடாம், ஜவ்வரிசி வடாம் மற்றும் அப்பளம் பொரித்து வைப்பேன்.
நான் புளிக்காய்ச்சல் செய்யும்போதே சிறிது ஒதுக்கி ஒரு தனி டப்பாவில் போட்டு வைத்து விடுவேன். என் கணவரும் இரு பெண்களும் தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். போன வாரம்தான் பெரியவளுக்கு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் நிரப்பி ஆரிசோனாவிற்கு அனுப்பி வைத்தேன். (அப்பொழுது எடுத்த புகைப்படங்கள்தான் மேலே காணப்படுபவை.)
நீங்களும் இந்த ஐயங்கார் புளியோதரையை செய்து பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.
=========
========
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவிஜயதசமி நல்வாழ்த்துகளுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குவிஜயதசமி வாழ்த்துகள்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கமும் நன்றியும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
இன்றைய பதிவில் சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் புளிக்காய்ச்சல் செய்முறை படங்களுடன் நன்றாக வந்துள்ளது. சகோதரிக்கு பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குவிஜயதசமி நல்வாழ்த்துகள்.
தேங்க்யூ கமலா.
நீக்குபுளிக்காய்ச்சல் செய்முறை நன்று. புளியோதரை மாதிரி பயணத்துக்கு உற்ற நண்பன் கிடையாது.
பதிலளிநீக்குநாக் கவர் நண்பன்.
நீக்குஉண்மை நெல்லைதமிழன் சார்.
நீக்குவல்லிம்மா, கீசா மேடம் இவங்களை இன்னும் காணோமே
பதிலளிநீக்குஏற்கெனவே சொல்லி இருந்தேனே. ஆனால் நீங்க அப்போ இல்லை போலிருக்கு. நாளையிலிருந்து காலை வரலாம். அல்லது எப்படி வேணாலும் மாறலாம். ஒண்ணும் சொல்றதுக்கில்லை. இப்போக் கொஞ்சம் ஓய்வு எடுக்கப் போறேன்.
நீக்குபுளிக்காய்ச்சல் வீட்டில் செய்யச் சொல்லணும்.
பதிலளிநீக்குஇந்த கொரோனா காலத்தில் பெயரைச் சொல்லத்தான் சற்று கிலியாகிறது.
கில்லர்ஜி...இதைப் படித்தவுடன் என் ஹாஸ்டல் காலம் நினைவுக்கு வந்துவிட்டது.
நீக்குஹாஸ்டலில் இருக்கும் மாணவர்களை ஊருக்கு அனுப்பமாட்டார்கள். (விடுமுறை காலம் தவிர). உடம்பு சரியில்லைனா (தலைவலி போன்ற மைல்ட்) அங்கயே பார்மஸியும் டாக்டரும் உண்டு. நான் சொல்வது 10ம் வகுப்பு வரை உள்ள ஹாஸ்டல். அப்போ பசங்க என்ன பண்ணுவாங்கன்னா, புளியை சிறிது எடுத்துக்கொண்டு கக்கத்தில் வச்சுப்பாங்க. அப்படி வைத்துக்கொண்டால் காய்ச்சல் அதிகமாகும். அதைக் காண்பித்து ஊருக்குப் போயிடுவாங்க.
புளியா? அலைகள் ஓய்வதில்லை படத்தில் வெங்காயம் அல்லவா வைத்துக் கொள்வார் கார்த்திக்? அப்போ அது பொய்யா?!!!
நீக்குஹா.. ஹா.. எனக்கும் அலைகள் ஓய்வதில்லை'தான் ஞாபகம் வந்தது.
நீக்குஆமா !! அந்த கார்த்திக் ராதா பாரதிராஜா நம்மெல்லோரையும் பொய்ச்சொல்லி ஏமாத்தியிருக்காங்க :)))))நானும் என் தோழிகளும் (6 பேர் ) அரையாண்டு ஹிஸடரி தேர்வை தவிர்க்க ஆளுக்கு நாலு குட்டி வெங்காயம் வச்சிக்கிட்டு படுத்தோம் அடுத்த நாள் போனோம் ஸ்கூலுக்கு இல்லையில்லை துரத்தி எக்ஸாமுக்கு அனுப்பப்பட்டோம் :)))))))))))
நீக்கு:)) வெங்காயத்தை நறுக்கி பிறகுதான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் செய்ததில்லை.
நீக்குஇப்போ டூ டூ லேட் :)))))))))
நீக்குரமா ஸ்ரீநிவாசன் வீட்டில், தேங்காய் சாதம், தயிர் சாதம் போணியாகாதா? புளியோதரைதான் அதிகமா இருக்கு. மற்ற சாதம் கம்மியா இருக்கே?
பதிலளிநீக்குஎனக்கு ரொம்பப் பிடித்தது தேங்காய் சாதம். அப்புறம் கசப்பு ஏறும் வரை பிழியாமல் ஆனால் புளிப்புச் சுவை இருக்கும் எலுமிச்சை சாதம், இனிப்பு கலந்த எள்ளோரை.
வயதானவர்களுக்கு தேங்காய் சாதம் கொஞ்சம் சாப்பிடுவது கடினம். அதனால் கொஞ்சம் குறைவாக செய்வேன்.
நீக்குபுளியோதரை நன்றாக இருக்கிறது. அரிசோனாவுக்கு அனுப்ப முடியும் என்றால், பெங்களூருக்கும் அனுப்பலாம்.
பதிலளிநீக்குசென்னைக்குள்ளேயே வரக் காணோமாம்...
நீக்குபுளிக்குக் காய்ச்சலா?.. எதுக்கும் டெஸ்ட் பண்ணிப் பார்த்து விடுவது நல்லது. :))
பதிலளிநீக்குசெய்முறை அருமை... நன்றி...
பதிலளிநீக்குதேங்க்யூ சார்.
நீக்குரமா ஸ்ரீநிவாசன் புளிக்காய்ச்சல் செய்முறை என் மாமியாரை நினைவூட்டியது. அவங்க இப்படித்தான் வெறும் வெந்தயப் பொடி மட்டும் போட்டுப் புளிக்காய்ச்சல் கிட்டத்தட்ட இதே முறையில் காய்ச்சுவாங்க, ஆனால் கட்டாயமாய் வெல்லம் உண்டு. என் அம்மா மி.வத்தல், தனியா, வெந்தயம், கடுகு, எள், மிளகு(இதை மட்டும் நெய்யில் வறுத்து) வறுத்துப் பொடி செய்து போடுவார். நானும் இப்படித்தான் போட்டுக் கொண்டிருந்தேன், சமீப காலம் வரை. ஆனால் மிளகாயை மட்டும் காயும் எண்ணெயில் முதலிலேயே போட்டு நல்ல கறுப்பாக வறுத்துக் கொள்வேன். ஒரு காஞ்சீபுரம் மாமி சொல்லிக் கொடுத்த முறை. இப்போப் பத்து நாட்கள் முன்னால் காய்ச்சியபோது மி.வத்தல், தனியா போடாமல் கடுகு, எள், வெந்தயம்(கடுகு, எள்ளில் பாதி அளவு) வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மிளகு மட்டும் தூக்கலாக நெய்யில் இரண்டு தேக்கரண்டி வறுத்துக் கொண்டு எல்லாவற்றையும் பொடி செய்து வைத்துக் கொண்டேன். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பேருக்கு நாலைந்து மிளகாயைத் தாளிதத்தில் முத்லில் போட்டுக் கறுப்பாக்கிக் கொண்டு பின்னர் கடுகு, பெருங்காயம், க.பருப்பு/கொ.கடலை, வேர்க்கடலை, கருகப்பிலை போட்டுப் பொரித்துக் கொண்டு அதிலே புளி ஜலம் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்கவிட்டு வெல்லம் நினைவாச் சேர்த்து இந்தப் பொடியைப் போட்டுக் கலந்து வைத்தேன். இது வரை 3 தரம் புளியஞ்சாதம் கலந்தாச்சு! உண்மையிலேயே அருமைனா அருமை! இது வெங்கடேஷ் பட் சொன்ன முறை. கோயில் புளியோதரை போல் இருப்பதோடு கொண்டைக்கடலை, வேர்க்கடலை எல்லாம் இன்னமும் கரகர!
பதிலளிநீக்குதனக்கு (தன் முறைக்கு) கிரெடிட் வேண்டும் என்று நினைக்கிற நீங்க, அடுத்தவங்களுக்கும் கிரெடிட் கொடுக்க மறக்கறதே இல்லை கீசா மேடம். பாராட்டுகள். நான் வெங்கடேஷ் பட் சொன்ன முறையைப் பார்க்கிறேன்.
நீக்குஅவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்குத் தானே தெரியும்! வெங்கடேஷ் பட் செய்முறையில் பண்ணிட்டு என்னோடதுனு சொல்லிக்க முடியுமா? என்னதான் அடிபப்டை, பெயர் எல்லாம் ஒன்றாக இருந்தாலும் அவரவருக்கு என ஒரு தனித்தன்மை உண்டு. அதே போல் பொங்கல், கொத்சுவும் அவர் செய்முறையில் அலாதி தான்.
நீக்குதட்டிலே புளியஞ்சாதம் தான் அதிகம் வைச்சிருக்கு! மற்றவை பெயருக்கு! பார்க்க நிறமும் நன்றாக இருக்கிறது. ஐயங்கார்ப் புளியோதரை எப்போவுமே சிறப்புத் தான்.
பதிலளிநீக்குஅப்படி போடுங்க கீதா. புகுந்தவீட்டிற்கு வந்த பிறகு பிறந்த வீட்டு சமையல் பின் தள்ளப் பட்டு விடுகிறது என்பது என் வாழ்வில் உண்மை.
பதிலளிநீக்குரமா ஸ்ரீநிவாசன் - நீங்க சொன்னது எனக்கு ஒன்றை நினைவுபடுத்தியது. திருமணம் ஆனபிறகு துபாய் வந்த மனைவி, தினமும் அவள் மெதடில் கண்டதிப்பிலி சாத்துமது, பருப்புத் துவையல் என்பது போல ஒரு ஆர்டரில் செய்துகொண்டிருந்தாள். சில நாட்களிலேயே, எனக்குப் பிடித்தவைகளை மட்டும் அடிக்கடி பண்ணச் சொல்லுவேன். (மோர்ச்சாத்துமது, கோஸ் மிளகூட்டு, தக்காளி சாத்துமது பருப்புசிலி என்பது போல). பல வருடங்கள் கழித்து நீங்க நிறைய வெரைட்டியாக என்னை பண்ணச் சொல்லலை என்று சொன்னாள். முதலில் வெண்டைக்காய் பச்சிடி என்று அவள் சொல்லி பண்ணினதே, என்னடா இது..எங்கம்மா இதனை வெண்டைக்காய் கிச்சிடின்னுதானே சொல்லுவாள் என்று தோன்றியது. இன்றுவரை அவள் செய்யும் வெண்டைக்காய் புளிக்கூட்டு, நான் அம்மா வீட்டில் சாப்பிட்டதில்லை என்பதால் எனக்குப் பிடிக்காது என்றே சொல்லிடுவேன். ஒருவேளை ஆண்கள் ஓபன் மைண்டோடு இருப்பதில்லையோ?
நீக்குஆமாம், ரமா, எங்க புக்ககத்தில் இது கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும். இன்னும் சொல்லப் போனால் அன்றாட சமையலிலேயே மாற்றிப் பண்ணினால் என் கடைசி நாத்தனாருக்குக் கோபம் வரும். அம்மா பண்ணினா இப்படிப் பண்ண மாட்டா! என்பார். தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை கூட வைக்கக் கூடாது. தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை வைத்து அரைத்துவிட்டால் கருவேலியிலே இப்படியா பண்ணுவாங்க என (மாமியார்)அம்மாவிடம் சண்டை போடுவார். நீ சொல்லவேண்டாமா இப்படிப் பண்ணக்கூடாதுனு என்பார். :)))))) எல்லாம் பார்த்தாச்சு!
நீக்குஹையோ, எங்க வீட்டுப் பழக்கப்படி வெண்டைக்காய்க் கூட்டுப் பண்ணினால் அப்போவே மாமா உங்க வீட்டுக்கே போயிடுனு சொல்லி இருப்பார்! :))) எங்க வீட்டில் வாரம் ஒரு முறையாவது வெண்டைக்காய்ப் புளிக் கூட்டு உண்டு. புளிக்கூட்டுப் பண்ணினால் குழம்பு மோர்க்குழம்பு அல்லது மோர்ச்சாறு என வைப்பார்கள். ரசம் கட்டாயம் உண்டு.இப்போவும் எங்க வீட்டுச் சமையல்களில் சிலது நான் இங்கே பண்ண முடியாது, பாகற்காய்ப் பிட்லை! கத்திரிக்காய்ப் பிட்லை, கத்திரிக்காய் ரசவாங்கி! இதில் முதல் இரண்டும் எங்க பக்கம் (மதுரை) கூட்டு மாதிரித் தளரப் பண்ணிட்டுக் கூடவே மோர்க்குழம்பும் (கட்டாயமாய்) வைப்போம். ஆனால் இங்கே சாம்பார் மாதிரிக் காய்களைப் போட்டுப் பொடியும் போட்டுக் கொஞ்சமாய் அரைச்சு விட்டுட்டுப் பிட்லை என்பார்கள். நாங்க அதை சாம்பார் என்போம்.
நீக்குகீசா மேடம்...இப்படித்தான் மூன்று வாரங்கள் முன்பு, அழகிய சிறிய பீட்ரூட்கள் வாங்கிவந்தேன். எனக்கு பீட்ரூட் கரேமது ரொம்பப் பிடிக்கும். மறுநாள் டைனிங் டேபிளில் பீட்ரூட் கூட்டு இருந்தது. எதுக்கு சுத்தமா எனக்குப் பிடிக்காததை பண்ணியிருக்க என்று கடு கடு என்று சொல்லி, நாலு ஸ்பூன் கூட்டு போட்டுக்கொண்டேன். ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது (அதுவரை பீட்ரூட் கூட்டு சாப்பிட்டதில்லை). Very sorry.. எனக்குப் பிடிக்காதுன்னு நானே நினைத்துக்கொண்டேன் என்று சொல்ல வேண்டியதாயிற்று.
நீக்குஉங்க வீட்டில் வந்து சாப்பிடும்போது, வாயைத் திறந்து எதுவும் சொல்லிடக்கூடாது. என்ன இது சாம்பார் மாதிரி பிட்லையைப் பண்ணியிருக்கீங்க, மதுரைல சரியா பிட்லை பண்ணமாட்டாங்க போலிருக்கு, நெல்லைல நாங்க நல்லா பண்ணுவோம்னு, உங்களிடம் சொல்லி, மாமாவின் அதிருப்தியை எதுக்கு வாங்கிக்கணும்? ஹாஹா
புளியோதரை அருமை.
பதிலளிநீக்குநாங்கள் புளிச்சாதம் என்று சொல்வோம்.
மின் நிலா நல்ல பிரகாசமான ஒளியோடு திகழ்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎங்கம்மா இப்படித்தான் புளிக்காய்ச்சல் செய்வாங்க .அவங்க மெதடில் நீங்க சொன்ன மாதிரிதான் செய்வாங்க எண்ணெய்க்குள்ள புளி காய்ச்சல் மிதக்கும் .மல்லி விதை அரைத்து சேர்க்கமாட்டாங்க . எனக்கும் டவுட் வந்து தனியாதூள் சேர்த்தா அது குழம்பாச்சேன்னு ஆஆ யாருகிட்டயும் கேக்கலை :) என் பொண்ணு இதை டைகர் ரைஸ்னு சொல்லுவா :)
பதிலளிநீக்குசிறிது எள்ளுப் பொடியும் இணைந்தால் நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குந.பரமசிவம்
புளியோதரை அருமை.
பதிலளிநீக்குமின் நிலா நன்றாக இருக்கிறது. நண்பர்களின் கையெழுத்துக்களும், ஆசிரியரின் கையெழுத்தும் நன்றாக இருக்கிறது. படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு