சனி, 17 அக்டோபர், 2020

இந்த வார நே ம செய்திகள்

 

டில்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை இண்டிகோ நிறுவனம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற இண்டிகோவின் 6E 122 விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த நேரத்தில் அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் விமானத்திலேயே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இது விமானத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


latest tamil news

இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛6E 122 டில்லி - பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. மாலை 7:40 மணிக்கு விமானம் தரையிறங்கியது. அனைத்து செயல்பாடுகளும் இயல்பானவை. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துகிறோம்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திலேயே பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும், இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணம் செய்யும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

====
லண்டன்: சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகள் வழங்குபவர்களுக்கு எர்த்ஷாட் பரிசு என்ற புதிய பரிசு வழங்கும் திட்டத்தை பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகம் செய்துள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், ‛உலகம் இன்று முக்கிய பிரச்னையான சுற்றுச்சூழல் மாசு அடைதலை சந்தித்துள்ளது. சமூகத்தில் ஒரு சிலர் அற்புதமான விஷயங்களை அறிந்துள்ளனர். சுற்றுச்சழலை காக்க அற்புதமான யோசனை கூறுபவர்களுக்கு எர்த்ஷாட் பரிசு வழங்கப்படும். எர்த்ஷாட் பரிசின் நோக்கம் இயற்கையை பாதுகாப்பதும், மீட்பதும், காற்றினை தன்மையை பாதுகாப்பதும், சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்துவதும் ஆகும். இத்திட்டத்தின் மூலம் 50 தீர்வுகள் மக்களிடம் பெறப்படும்' இவ்வாறு இளவரசர் வில்லியம் பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு தலா 10 லட்சம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூ 9 கோடியே 48 லட்சம் பரிசு வழங்கப்படும். அடுத்த 10 ஆண்டுகள் வரை இந்த பரிசினை வழங்குவதற்காக இளவரசர் 474 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.====

ஓய்வுக்குப் பின் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவில் இடம் பெற்றுள்ள ஐந்து நகரங்களில் கோவை மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

'டுமாரோ மேக்கர்ஸ்' என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனம், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து பல்வேறு கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், ஓய்வு காலத்தில் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்கள் குறித்து சமீபத்தில் தேசிய அளவிலான ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.


வாழ்க்கைத்தரம், மருத்துவம், போக்குவரத்து வசதிகள், குற்ற விகிதம் மற்றும் சீதோஷ்ண நிலை ஆகிய ஐந்து விஷயங்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. விலைவாசி, வாடகை உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சேகரித்து அதன் அடிப்படையில், ஐந்து நகரங்களை பட்டியலிட்டுள்ளது.

இதில், சண்டிகார், முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹாராஷ்டிராவின் புனே நகரம், இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவை மாநகரம், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை தெலங்கானா தலைநகரம் ஹைதராபாதும், உத்தரகண்ட் மாநிலத்தின் குளிர்காலத் தலைநகராக விளங்கும் டேராடூனும் பிடித்துள்ளன.

குறிப்பாக, 64 சதவீத இந்தியர்களுக்கு, தங்களுடைய ஓய்வு கால வருவாய் இலக்கு குறித்த அச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த நிறுவனம், சென்னையை விட நுகர்பொருட்களின் விலை, கோவையில், 19 சதவீதம் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

====


+++++ 
====

தெற்கு டில்லியின் மால்வியா நகர் நடைபாதையில் உள்ளது ‛பாபா கா தாபா' என்ற சிறிய உணவகம்.சப்பாத்தி,சாப்பாடு என்று பலவித உணவுகள் உண்டு.இதன் உரிமையாளரான 80 வயது கந்த பிரசாத்தும் அவரது மனைவி பாமினி தேவியும்தான் சமைப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது என்று எல்லா வேலைகளையும் பார்த்து வருகின்றனர்.


latest tamil news


காலை 6 மணிக்கு கடையை திறந்தால் மதியம் 2 மணி வரை கடை திறந்திருக்கும்.ஒரு நாள் முழுவதும் வியாபாரமானால் செலவு போக எண்பது ரூபாய் லாபம் கிடைக்கும்.ஆனால் கொரேனாவால் குறைந்து போன நடமாட்டம் காரணமாகவும் ஒரு நாளைக்கு 60 ரூபாய்க்கு கூட உணவு பொருட்கள் விற்பனையாவதில்லை, செய்த உணவுப் பொருட்கள் எல்லாம் வீணாகி நட்டம்தான் ஏற்பட்டது.


உழைக்க தயராக இருந்தாலும் எங்களால் தொடர்ந்து பிழைக்க முடியாத நிலை என்று கடைக்கு வந்த வாடிக்கையாளர் சவுரவ் என்பவரிடம், கந்த பிரசாத் கண்ணீருடன் தனது நிலையை பகிர்ந்து கொண்டதுடன் விற்காமல் மீந்து போயிருக்கும் பொருட்களையும் காண்பித்திருக்கிறார்.

கந்த பிரசாத்தின் கண்ணீர் பேட்டியை அப்போதே சமூக வலைதளங்களில் பதிவிட்டார் இவரது பதிவு வைரலாகியது கிரிக்கெட் வீரர்கள் அரசியல் பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் கந்த பிரசாத் தம்பதிக்கு உதவ முன்வந்ததுடன் மற்றவர்களையும் உதவி செய்ய கேட்டுக் கொண்டனர்.

மறுநாள் காலை கடையை திறந்த கந்த பிரசாத்திற்கு பெரிய ஆச்சர்யம் கடை வாசலில் ஒரு பெரிய வரிசை காத்திருந்தது சமைத்த உணவுகள் எல்லாம் ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது பத்து ரூபாய்க்கு சாப்பிட்டவர்கள் எல்லாம் நுாறு ரூபாய் கொடுத்து மீதம் வேண்டாம் எங்கள் சிறிய பங்களிப்பு மற்றும் அன்பளிப்பு என்று என்று வாழ்த்திவிட்டு சென்றனர் நிறைய பேர் அரிசி பருப்பு என்று உணவுப்பொருளாகவும் தந்து உதவி வருகின்றனர்.

இங்கே முப்பது வருடமாக இந்த கடையை நடத்திவருகிறேன் என்றைக்காவது ஒரு நாள் என் உணவின் தரத்தையும் ருசியையும் பார்த்து நிறைய பேர் வாசலில் வந்து வரிசைகட்டி நிற்பர் சமைத்த உணவுகள் எல்லாம் தீர்ந்து போய் காலியான பாத்திரங்களிலும் எங்கள் மனதிலும் மகிழ்ச்சியை நிரப்பிவைப்பேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன் அந்த கனவு இப்போதுதான் நிறைவேறியுள்ளது.தினமும் இப்போது என் கடைக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இந்தியாவே என் பக்கம் பாசமும் நேசமும் காட்டி இருப்பதாக உணர்கிறேன்.

கடவுள் எப்போதுமே நம் கோரிக்கையை எப்படியும் நிறைவேற்றிவைப்பார் ஆனால் அது எப்போது என்பதுதான் யாருக்கும் தெரியாது எனக்கு 80 வயதில் நிறைவேற்றி வைத்துள்ளார் இனி மிஞ்சியுள்ள நாட்களை மிகவும் மகிழ்ச்சியாக கழிப்பேன் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது என்கிறார் ஆனந்த கண்ணீருடன்.

ஜொமோட்டோ உணவு விநியோக நிறுவனம் தனது பட்டியலில் பாபா கா தாபா என்ற கந்த பிரசாத்தின் உணவகத்தையும் சேர்த்துக் கொண்டு உள்ளதுடன் தனது நிறுவன ஊழியர்கள் சிலரையும் கந்த பிரசாத்தின் கடைக்கு சேவை செய்ய அனுப்பிவைத்துள்ளது.

நண்பர்களே பெரியோர்களே இதைப் படித்ததும் நாமும் இந்தகந்த பிரசாத் தம்பதிக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று எண்ணுகிறீர்களா? நல்லது இதற்காக டில்லி வரை போக வேண்டாம் கொஞ்சம் கவனித்து பார்த்தீர்கள் என்றால் நமக்கு பக்கத்திலேயே நிறைய ‛கந்த பிரசாத்' போன்றவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு உதவினாலே கந்த பிரசாத்திற்கு உதவியது போலத்தான்.

-எல்.முருகராஜ். (தினமலர்) 
====  ==== 

ஐஐடி.,க்களில் சேர்வதற்காக நடந்த ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில், குஜராத்தை சேர்ந்த விவசாயி மகன் வெற்றி பெற்றுள்ளார்.
ஆமதாபாத்தின் நவி அகோல் பகுதியை சேர்ந்த சிறு விவசாயியின் மகன் விஜய் மக்வானா. இவர் ஜேஇஇ அட்வான்ட்ஸ்டு தேர்வில், அகில இந்திய ரேங்க் பட்டியலில், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 1,849வது இடத்தை பிடித்துள்ளார். பொறியியலில் கம்ப்யூட்டர் அல்லது மெக்கானிக்கல் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பட்டமேற்படிப்பு படிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள விஜய், அதற்கு முன்னதாக தனது குடும்பத்திற்கு உதவ வேலைக்கு செல்ல உள்ளதாக கூறினார்.
அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம் மட்டுமே. இது அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. இவரது மூத்த சகோதரர், குஜராத் அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், இந்தூஸ் பல்கலையில் எம்டெக் முடித்துள்ளார். விஜய்யும், தனது பள்ளிப்படிப்பை ஆமதாபாத்தை சேர்ந்த விஸ்மோ கிட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முடித்தார். ஜேஇஇ மெயின் தேர்வில், விஜய் 94,382வது இடத்தை பிடித்திருந்தார்.
விஜய் மக்வானா கூறுகையில், 3 குழந்தைகளுக்கும் கல்வியை கொடுக்க எனது தந்தையிடம் போதிய பணம் இல்லை. இருப்பினும், வறுமையை விரட்ட கல்வி தான் ஒரே வழி என்பதை தெரிந்திருந்தார். ஐஐடியில் சேர வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற பெற்றோர்கள் கடுமையாக உழைத்தனர். தினசரி பாடங்களை படித்து முடித்த எனக்கு, பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் பெரிதும் உதவினர். அங்கு கொடுக்கப்பட்ட புத்தக குறிப்புகள், ஆன்லைன் தேர்வு பயிற்சி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற முடிந்தது. பள்ளி தேர்வையும், ஜேஇஇ மெயின் தேர்வையும் ஒரே நேரத்தில் என்னால் சரியாக கையாள முடியவில்லை. இதனால், தான் மெயின் தேர்வில், மதிப்பெண் குறைந்தது என்றார்.


latest tamil news

கிரிக்கெட் வீரர் தோனியின் மிகப்பெரிய ரசிகரான விஜய் மேலும் கூறும்போது, கடினமான நேரங்களிலும் தோனியின் பொறுமை மற்றும் அவர் வெளிப்படுத்திய திறமை எனக்கு முன்மாதிரியாக இருந்தது. நான் பிளஸ் 2 தேர்வு மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த போதும், நான் பொறுமையாக இருந்து, கடுமையாக உழைத்து அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றேன்.
நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும், எனது கிராமத்தில் நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி செய்வதும், நாட்டின் உயிரிய கல்வி நிறுவனங்களில் சேர விரும்புவர்களுக்கு வழிகாட்டுவதே எனதுஇலட்சியம் என்றார்.
=====   === 

நார்வே: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.


latest tamil news

2020 ம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இன்றைய அறிவிப்பில் பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபட்ட 2 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.இதன்படி பால்.ஆர்.மில்க்ரோம், ராபர்ட்.பி.வில்சனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏல கோட்பாடின் மேம்பாடு மற்றும் ஏலத்திற்கான புதிய வடிவமைப்பை உருவாக்கியதற்காக பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

====

மதுரை : மதுரை விளாச்சேரி டாக்டர் லாவண்யா ராகவி, வங்கி மேலாளர் முகேஷ்கண்ணா தம்பதியின் 19 மாத குழந்தை ருத்திக், பெயர்களை அடையாளப்படுத்தும் சாதனைக்காக, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றான்.

மழலையின் சாதனை குறித்து தாய் கூறியதாவது:
வீட்டில் செல்லமாக குழந்தையை கூப்பிடும் போது என்ன கண்ணா… என்போம். பேச ஆரம்பித்த போது அம்மா, அப்பா என்று சொல்லவில்லை. ஒவ்வொரு பொருளாக என்ன என்ன… என்று கேட்க ஆரம்பித்தான். அவனது கேள்விக்கு பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சொல்லி கொடுத்தோம். சீக்கிரமே அவனுக்கு போரடித்து விட்டதால் பறவை, விலங்குகள்
புத்தகம், அடிப்படை தமிழ் புத்தகங்களை வாங்கி சொல்லி கொடுத்தோம். 25 பறவைகளின் படங்களை காண்பித்து பெயரை கேட்டால் அந்த பறவையின் படத்தை அடையாளம் காண்பிப்பான். இதே போல விலங்குகள் பெயர் மற்றும் நிறங்கள். தமிழ் எழுத்துக்களை அடையாளம் காட்டுவான். காரில் ஏறி உட்காரும் போது காரின் பாகங்களை சொன்னால் சரியாக புரிந்து கொண்டு தொட்டு காட்டுவான்.

குழந்தையின் அனைத்து செயல்களையும் வீடியோவாக எடுத்து இந்திய சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்தோம். அவர்களும் பரிசோதனை செய்த பின், சாதனை மழலைக்கான விருது வழங்கினர். அடுத்ததாக உலக சாதனை புத்தகத்திற்கு முயற்சிக்கிறோம், என்றார்.====

லக்னோ : உத்தர பிரதேசத்தில், குழந்தை பெற்ற, 14 நாட்களில், கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர், சவுமியா பாண்டே. இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மோதிநகர் துணை கலெக்டராக பணியாற்றி வந்தார். ஜூலை முதல், கொரோனா தடுப்பு பணிக்கான தனி அதிகாரியாக, காசியாபாத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார்.கர்ப்பிணியாக இருந்த சவுமியா, செப்டம்பரில், பிரசவத்திற்காக விடுப்பில் சென்றார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிரசவம் முடிந்து, 14 நாட்களில், கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பினார். இதனால், உடன் பணியாற்றும் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.


latest tamil news


இது குறித்து, சவுமியா கூறியதாவது:


குழந்தை பெற்று கொள்வதற்கும், குழந்தையை கவனிப்பதற்கும் தேவையான வலிமையை, பெண்களுக்கு கடவுள் வழங்கி உள்ளார். கைக்குழந்தையுடன் நிர்வாக பணியையும் கவனித்து கொள்வது, கடவுளின் ஆசியாக கருதுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

==== 


பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா சோதனைக் கருவி கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் பணி முடித்துவிட்டு வந்து தங்களுக்கு வைரஸ் தாக்கி உள்ளதா இல்லையா என வீட்டிலேயே சோதனை செய்து கொள்ள பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


latest tamil news


முன்னதாக அரைமணி நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ள கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலை விஞ்ஞானிகள் வெறும் ஐந்து நிமிடத்தில் சோதனை செய்துகொள்ள ஓர் டெஸ்ட் கிட்டை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கருவி விமான நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குடிமக்களை சோதனை செய்ய உதவும்.ஐந்து நிமிடத்துக்குள் கொரோனா உள்ளவர் யார் என தெரிந்துகொள்ளப் படுவதால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். இந்த டெஸ்ட் கிட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரிட்டனின் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி அடையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இந்த டெஸ்ட் கிட் மூலமாக கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் இன்ஃப்ளூயன்சா மற்றும் இதர வைரஸ்கள் தாக்கப்பட்டவர்களையும் அறிந்துகொள்ள முடியும். மற்ற டெஸ்ட்களில் இல்லாத சிறப்பம்சம் இதில் உள்ளது. ஜீனோம் மாறுபாடு குறித்து இதில் ஆய்வு செய்யப் படுவதில்லை. அதற்கு மாறாக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


டெஸ்ட் டியூப்களில் திரட்டப்பட்ட டிஎன்ஏ சாம்பிள்கள் பின்னர் நுண்ணோக்கி வழியாக பார்க்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.இதன்மூலம் வைரஸ் தாக்கி உள்ளதா இல்லையா என எளிதில் தெரிந்துகொள்ள முடியும். பிரிட்டன் விஞ்ஞானிகளின் இந்த முயற்சி வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


========


53 கருத்துகள்:

 1. காலை வணக்கம்.

  சனிக்கிழமை பாசிடிவ் செய்திகள் (நேர்மறைச் செய்திகள்னு எழுதலைனா எதிர்மறையா திட்டுவாரோ கேஜிஜி சார்?) நன்றாக்க் கோர்க்கப்பட்டிருக்கிறது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. இன்டர்நேஷனல் விமானங்களில் ஸ்டிரிக்டாக 7 3/4 மாதங்கள் தாண்டிவிட்டால் கர்ப்பிணிகளை ஏற்றுவதில்லை. அதற்கும் மருத்துவச் சான்றிதழ் வேண்டும்.

  ஏற்கனவே விமானப் பணிப்பெண்களுக்கு ஏகப்பட்ட டிரெயினிங். இதில் பிரசவம் பார்க்கிற டிரெயினிங் வேறா என நினைத்திருப்பார்களோ? இல்லை வழியில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருக்குமோ என்று நினைத்திருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 3. கொரோனா சோதனையில் பலவித ப்ராடுகள் நடக்கின்றன என பரவலான செய்திகள். இதுதான் சாக்கு என்று மருத்துவமனைகள் பணம் சுருட்டுகிறார்களாம். பாசிடிவ் நெகடிவ் என்பதிலேயே தவறுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்காம்.

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

  நலம் வாழ்க என்றென்றும்...

  பதிலளிநீக்கு
 6. இன்றையச் செய்தித் தொகுப்பு அருமை...

  நல்லோர்கள் வாழ்க..
  நலமெலாம் பெற்று வாழ்க...

  பதிலளிநீக்கு
 7. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நவராத்திரி ஆரம்பம் இறை அருளோடு
  எல்லோருக்கும் வளம் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 8. ஆகாயத்தில் பிறந்த குழந்தைக்கும் ,அதை உலகிற்கு வரவேற்று. மகிழ்வித்த ஏர்லைன் அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. பிரசவ வழி ஏற்பட்டது - வலி?

  நேர்மறைச் செய்திகள் அனைத்தும் சிறப்பு. சில ஏற்கனவே படித்தவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'ஒரிஜினல் செய்தி' தவறு இங்கேயும் தவழ்ந்து வந்துவிட்டது. சரி செய்துவிட்டேன். நன்றி.

   நீக்கு
 10. குழந்தை நலமாக பிறந்ததில் மகிழ்ச்சி.
  இண்டிகோ நல்ல விதமாக தொடரணும் இந்தக் குழந்தையின் ஓசி டிக்கெட்டுக்காகவாவது...

  கிங்ஃபிஷர் முதலாளி போல நாடு விட்டு ஓடக்கூடாது...

  பதிலளிநீக்கு
 11. மின் நிலாவுக்கு அனுப்பும் பதிவுகளோ மற்ற வையோ நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை. எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். கொஞ்சம் நகாசு வேலைகள் தேவையிருந்தால் மட்டும் செய்வோம். மற்றபடி, படைப்பாளி உரிமையில் தலையிடமாட்டோம்.

   நீக்கு
 12. அனைத்து செய்திகளும் அருமை/ இன்டிகோ குழந்தை தொலைக்காட்சி, தினசரிகளும் வெளியிட்டன. பூல் பாண்டியன் பற்றியும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. நோபல் பரிசு பெற்றவர்களையும் பார்த்துட்டேன். அந்தக் குழந்தை ருத்திக் அடையாளம் காட்டுவது! இது பற்றிச் சொல்வதானால் நம்ம குட்டிக் குஞ்சுலுவுக்கு இதெல்லாம் எப்போவோ தெரிஞ்சுடுச்சே! இப்போதைய குழந்தைகள் இம்மாதிரி விஷயங்களில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர். குஞ்சுலு கோணங்களை முதற்கொண்டு என்ன கோணம் என்று சொல்லி விடும். ஹெக்சகன் என்று சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கும். பசில்ஸ் கொடுத்தால் போட்டு விடுகிறது. அன்றொரு நாள் வாட்சப்பில் எங்களுக்குப் போட்டுக் காட்டியது. ஆனால் வீடியோவெல்லாம் எடுத்துப் பகிரப் பெற்றோர் அனுமதிக்க மாட்டாங்க! :))))))

  பதிலளிநீக்கு
 13. குழந்தையுடன் அலுவலகம் வரும் பெண் அதிகாரி! இவங்க பத்தி ஏற்கெனவே எங்கோ படிச்ச நினைவு. மற்றச் செய்திகளும் அநேகமாப் படிச்சவை தான்.

  பதிலளிநீக்கு
 14. நேரம் கிடைக்குதில்லை எனப் புலம்பாமல் கிடைக்கும் நேரத்தில் எட்டிப் பார்க்கலாமே என வந்தேன்.... “ஞானிக்கு ஏது.. சே சே டங்கு ஸ்லிப்பாகுது:), பழைய நினைப்பிலயே இருக்கிறேன்ன்:),.. அல்லிக்கு ஏது..., சனியும் ஞாயிறும்”...

  எல்லோரின் பெயர்களையும் கொமெண்ட்டில் பார்க்கும்போது மனதில் உற்சாகம் .. மகிழ்ச்சி பிரவாகிக்கின்றது.. அனைவரும் நலமாக இருக்கிறீங்கள் என்பதும் தெரிகிறது.. என் செக்”.. இன் தொடர் மிரட்டலால்.. எப்படியும் புளொக்குகளை எட்டிப் பார்க்க வேண்டும் என வந்திட்டேன்.

  சனிக்கிழமைச் செய்திகள் மிக அதிகமாக இருக்கின்றன போலும்.

  விமானத்தில் குழந்தை பிறந்தால், அதில் இன்னொரு சட்டமும் இருக்கின்றது, குழந்தை பிறக்கின்றபோது, விமானம் எந்த நாட்டின் மேல் பறந்துகொண்டிருக்கிறதோ, அக்குழந்தைக்கு அந்நாட்டுப் பாஸ்போர்ட் கொடுக்கப்படும்... அப்படி முன்பு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.. இதனால் தான் 7 மாதமானால் பயணிக்க முடியாது என நினைக்கிறேன். சில பெண்களுக்கு வயிறு பெரிதாக தெரிவதில்லை, அவர்கள் ஷோல் போட்டுக் கொண்டு பிரயாணம் செய்துவிடுவதாக அறிந்திருக்கிறேன்...

  நன்றி முடியும்போது மீண்டும் வருகிறேன்...

  நெல்லைத்தமிழன், வல்லிம்மா, கமலாக்கா.. கீசாக்கா.. யாரையும் இங்கு காணமே:)).. எங்க போயிட்டினமோ.. என்ன பிஸியோ அவர்களும் இந்த அல்லிராணியைப்போல:)).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மழை வரும்போல இருட்டிட்டு இருக்கு! சமயங்களில் வாயு பகவான் வந்து நுழைந்து எல்லாத்தையும் மாத்திடுவார். பார்க்கலாம்!

   நீக்கு
  2. ஆகா.. வாங்க அதிரா.. வாங்க. அத்திப்பூத்தாற் போன்று, வந்திருக்கும் இந்த அல்லிராணியின் வருகையை கம்பளம் விரித்து வரவேற்கிறேன். ராணியின் வருகை கண்டு எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது. அத்தி பூத்ததோ என்னவோ, தினமும் எதிர்பார்த்து எங்கள் கண்கள் பூத்து விட்டன. இனி இன்றிலிருந்து வருகை தொடர்ந்து நீடிக்கட்டும்.

   நீக்கு
  3. அன்பு அதிரா,
   வாங்க வாங்க. இரண்டு நாட்கள் முன்பு உங்களை
   நினைத்துக் கொண்டேன்.
   குளிர் செமையாக ஆரம்பித்திருக்கும். அப்பப்போ தலை காட்டுங்கள்:)

   நீக்கு
  4. ஹா ஹாஹா மழை இல்லை கீசாக்கா:)...
   நன்றி கமலாக்கா, வல்லிம்மா... முடிந்தவரை வரப்பார்க்கிறேன்...🙏

   நீக்கு
 15. பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே சிறப்பு. ரமா ஸ்ரீநிவாசன், சாவித்ரி வைத்தி பற்றி எழுதியிருப்பாரென்று எதிர்பார்த்தேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா, இல்ல! இந்த வாரம் ரமா ஶ்ரீநிவாசனின் கட்டுரையே இல்லை. அதைக் கவனிக்கவே இல்லை!

   நீக்கு
 16. பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அதன் ஆயுள் பரியந்தம் இலவச டிக்கெட் வழங்க வேண்டுமென்பது ஏர்லைன்ஸ் விதி. மேலும் இன்டர்நேஷனல் விமானங்களில் பிறக்கும் குழந்தைக்கு எல்லா நாடுகளுக்கும் விசா தரப்பட வேண்டும், என்பதும், அந்த குழந்தை ஆகாயத்தில் பிறந்ததால் எந்த குறிப்பிட்ட நாட்டையும் சேர்ந்ததாக கருதப்பட முடியாது, எந்த நாட்டின் பிரஜா உரிமைக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். பூமிக்குத்தானே எல்லைகள்,   வானிற்கு ஏது? என்பது காரணமாம். 

  பதிலளிநீக்கு
 17. பிரசவித்து 14 நாட்களில் வேலைக்கு திரும்பிய சௌமியா  பாண்டேயின் மனஉறுதி பாராட்டத்தக்கது. பிரதமராக இருந்து கொண்டே குழந்தை பெற்ற பெனாசிர் புட்டோ கூட பிரசவித்த மூன்றாம் நாளே வேலைகளை பார்க்கத் துவங்கி விட்டார் என்று அப்போது செய்திகள் வந்தன. 
  கனடாவில் இருக்கும் என் மகள் இரண்டாவது பிரசவத்திற்காக காத்திருக்கிறாள். எந்த நேரத்திலும் குழந்தை  பிறக்கலாம். என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அவளுக்கு இப்படிப்பட்ட செய்திகளை மோட்டிவேஷனல் மெசேஜ் ஆக  அனுப்புகிறேன்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   நல்ல பாஸிடிவ் செய்திகளை தந்துள்ளீர்கள். எங்களுக்கு மட்டுமல்ல..! தங்கள் மகளுக்கும்... தங்களுக்கு விரைவில் பேரன் பிறந்து, தாயும் மகனும், என்றும் ஆயுள் ஆரோக்கியத்துடன் நலமே வாழ இறைவனை மனதாற நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. உங்களால் போக முடியாதது வருத்தமாக இருக்கிறது பானுமதி! விரைவில் உங்கள் மகளின் பிரசவம் நல்லபடியாக நடக்கப் பிரார்த்தனைகள். பேத்திக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள்? அங்கெல்லாம் இதுக்குள்ளே பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கணுமே!

   நீக்கு
  3. கமலா பேரன் என்று சொல்கிறார்; கீதா பேத்தி என்று சொல்கிறார் - கடவுள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. விமானத்தில் நலத்துடன் குழந்தை பிறந்த செய்தி மகிழ்வூட்டுகிறது. சின்னக் குழந்தை ருத்திக்கின் சாதனைகளுக்கும், குழந்தை பிறந்த பதினான்கு நாட்களில் தன் கடமையை செய்ய அலுவலகம் வந்த ஐ.ஏ. எஸ் அதிகாரிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல நல்ல செயதிகளை தந்தமைக்கு நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. எல்லா செய்திகளுமே நல்ல செய்திகள்.
  தொகுத்துப் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
  மிகத் தாமதமாக வருகிறேன்.
  நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 20. ஜொமோட்டோ உணவு விநியோக நிறுவனம் தனது பட்டியலில் பாபா கா தாபா என்ற கந்த பிரசாத்தின் உணவகத்தையும் சேர்த்துக் கொண்டு உள்ளதுடன் தனது நிறுவன ஊழியர்கள் சிலரையும் கந்த பிரசாத்தின் கடைக்கு சேவை செய்ய அனுப்பிவைத்துள்ளது./////////////////////////////////////////////////////
  This is the best positive message.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், உண்மை. உழைப்புக்கு எல்லா இடத்திலும் மேன்மை !! நன்றி.

   நீக்கு
 21. இன்றைய செய்திகள் அனைத்தும் நன்று.

  பதிலளிநீக்கு
 22. நேர்மறை செய்தி தொகுப்புகள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!