சனி, 31 அக்டோபர், 2020

இ வா நே ம செ

 

மனம் திறக்கிறார் முடிதிருத்தும் தொழிலாளி மாரியப்பன். 

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மக்களிடம் ரேடியோ மூலமாக பேசிவருகிறார்

‛மனதின் குரல்' என்ற மக்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தூத்துக்குடி மில்லர்புரத்தில் முடிதிருத்தும் கடையில் நுாலகம் வைத்து நடத்தும் பொன்.மாரியப்பனுடன் பேசினார், நுாலகப்பணிக்கு தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானதை அடுத்து பொன்.மாரியப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது பல பிரபலங்கள் போன் மூலம் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.தினமலர் சார்பில் நாம் நமது பாராட்டை தெரிவித்ததுடன், நீங்கள் பிரதமரின் கவனத்தை பெற்றது எப்படி?என்று பேட்டியை போனிலேயே துவங்கினோம்.


latest tamil news

அவரோ அடுத்த கேள்வியை நாம் கேட்பதற்கு வாய்ப்பு தராமல் முழுமையாக நடந்த நிகழ்வைப்பற்றி விவரித்தார்.

பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருவது எல்லாம் துாத்துக்குடிதான்.எட்டாவது வரை படித்தேன் அதற்கு பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியவில்லை.தாத்தா வைத்திருந்த சலுான் கடைக்கு போய் தொழிலை கற்றுக் கொண்டேன்,ஆனாலும் வேறு வேலை செய்வோம் என முடிவு எடுத்து பல தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தேன், திருப்தி வரவில்லை சொந்தத் தொழிலையே துவங்குவது என இங்கே கடை வைத்து நடத்திவருகிறேன்.


latest tamil news

எனது கடை சின்னக்கடைதான் இரண்டு பேர் உட்கார்ந்து முடிவெட்டலாம் ஆனால் கடையில் நான் மட்டுமே இருக்கிறேன். நானே முதலாளி நானே தொழிலாளி.எனக்கு சிறு வயது முதலே வாசிக்கும் பழக்கம் உண்டு.நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், சிறுகதைகள், வரலாறு போன்றவைகளை தேடி தேடி படித்துக் கொண்டிருந்தேன்.

படித்த புத்தகங்களை கொண்டு வந்து சலுானில் போட்டேன் வந்தவர்கள் ஆர்வமாக படித்ததைப் பார்த்ததும் எனக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது.ஐந்து பத்து ஐம்பது நுாறு என்று அதிகரித்துக் கொண்டே போய் இப்போது எனது சலுானில் ஆயிரத்து ஐநுாறு புத்தகங்கள் உள்ளன.

வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பிடித்த சிறுவர் கதை புத்தகங்கள் நிறைய வாங்கிப் போட்டேன், அந்த புத்தகத்தை படித்துவிட்டு விமர்சனம் எழுதச் சொல்வேன் சிறந்த விமர்சனத்திற்கு புத்தகங்களை பரிசாக கொடுப்பேன் இந்த விஷயம் நிறைய மாணவர்களுக்கு பரவி புத்தகங்களை பரிசாகப் பெறுவதற்காகவே இங்கு வந்து புத்தகங்களை படித்து அது பற்றி எழுத ஆரம்பித்தனர்.

புத்தகங்களை இரவலாக கொடுத்தால் திரும்பி வருவதில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் இங்கே உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை இதன் காரணமாக பலர் புத்தகங்களில் தாங்கள் படித்த பக்கங்களை குறித்து வைத்துவிட்டுச் சென்று மீண்டும் மீண்டும் வந்து படித்து முடிப்பர்.

இந்த நிலையில்தான் கடந்த வாரத்தில் ஒரு நாள் துாத்துக்குடி வானெலி நிலையத்தில் இருந்து என்னை அழைத்தார்கள்.

ஏதாவது புத்தகம் தருவார்கள் போல என்று எண்ணி பையோடு போயிருந்தேன் ஆனால் அவர்களோ முடிதிருத்தும் இடத்தில் நுாலகம் நடத்தும் உங்கள் செயலை பாராட்டி பிரதமர் பேசப்போகிறார் தயராக இருங்கள் என்றனர்.

எனக்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை ஒரு இரண்டு மணி நேரம் ஒரே டென்ஷனாக இருந்தது டில்லியில் இருந்து வந்திருந்த ஒரு தமிழ்-இந்தி தெரிந்த ஒரு அதிகாரி என்னுடன் இருந்தார்.

பிரதமர் இந்தியில் பேசுவார் நான் அதை உங்களுக்கு தமிழில் மொழிபெயர்க்கிறேன் நீங்கள் தமிழிலையே பேசுங்கள் நான் அதை இந்தியில் பிரதமருக்கு மொழிபெயர்ப்பேன் என்றார்

ஆனால் அவர் சொன்னதற்கு நேர்மாறான விஷயம் நடந்தது. பிரதமர் லைனில் வந்தார்,‛ என்ன மாரியப்பன் நல்லா இருக்கீங்களா?' என்று தமிழிலேயே பேசினார் எனக்கு சந்தோஷம் தாளவில்லை மிகவும் நன்றாக இருக்கிறேன் பிரதமரிடம் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்றேன் நான் பேசியதை இந்தியில் பிரதமருக்கு மொழி பெயர்க்கப்பட்டது அதன்பிறகு எனக்கு நுாலகம் நடத்தும் ஆர்வம் எப்படி வந்தது என்ன புத்தகம் மிகவும் பிடிக்கும் என்றெல்லாம் கேட்டு பாராட்டினார் நான் திருக்குறள் பிடிக்கும் என்று சொன்னதும் பிரதமரே திருக்குறள் பற்றி சில நிமிடம் பெருமையாக பேசினார் .

சில நிமிடங்கள் நீடித்த எங்கள் உரையாடல் எனது நன்றி கூறுதலுடன் முடிந்தாலும் அந்த தருணம் தந்த மகிழ்ச்சி இன்னும் முடியவில்லை நீடித்துக் கொண்டே இருக்கிறது.வியாழக்கிழமை ரிக்கார்டிங் செய்யப்பட்ட இந்த நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒலிபரப்பப்பட்டது அப்போது முதல் இப்போது வரை நிறைய பேர் நேரிலும் போனிலும் பாராட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

பிரதமரின் பாராட்டும் பொதுமக்களின் வாழ்த்தும் எனக்கு இன்னும் உத்வேகத்தை தந்துள்ளது மாணவர்களுக்கு இடையே வாசிப்பு பழக்கத்தை என்னால் முடிந்த அளவு மேலும் வளர்த்தெடுப்பேன் என்று கூறி முடித்த பொன்.மாரியப்பனிடம் நீங்களும் பேசலாம்,

எண்:95971 56246.

-எல்.முருகராஜ்.(தினமலர்) 

=====


பயன்படுத்திய சமையல் எண்ணெயை எரிபொருளாக்கலாம்!


பயன்படுத்திய சமையல் எண்ணெய், உலகெங்கும் பல லட்சம் லிட்டர்கள், தினமும் வீணடிக்கப்படுகின்றன. அதை மறு சுழற்சி செய்ய பல உத்திகள் இருந்தும் இது தொடர்கிறது. இந்த நிலையை மாற்ற, ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி.யை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய பொருளை உருவாக்கியுள்ளனர்.

இது ஒரே நேரத்தில் கிரியா ஊக்கியாகவும், நுண்வடிகட்டியாகவும், கடற்பஞ்சு போன்ற உறிஞ்சியாகவும் செயல்படுகிறது.இதனால், ஒரு பக்கம் கசடு மிக்க சமையல் எண்ணெயை செலுத்தினால், அது பல்வேறு வேதி வினைகளுக்கு உள்ளாகி, சுத்திகரிக்கப்பட்டு, குறைந்த கரிமச் செறிமானம் கொண்ட உயிரி டீசல் திரவமாக வெளியே வருகிறது.

தற்போது பரிசோதனையில் உள்ள இந்த வித்தியாச மான நேனோ வடிகட்டி, அடுத்து விவசாயக் கழிவுகள், ரப்பர் கழிவு, நுண் பிளாஸ்டிக் கழிவு போன்ற வற்றையும் வடித்தெடுக்கும்படி செய்யலாம் என ஆர்.எம்.ஐ.டியின் ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்.


======
facebook / Whatsapp post :

அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுக்கியா மாவட்டத்தில்,சோபிரான் என்னும் 30 வயது இளைஞன், வண்டியில் காய்கறி விற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு என்று யாரும் கிடையாது. திருமணமும் ஆக வில்லை.

ஒரு நாள், மாலைப் பொழுதில், சோபிரான், தன் காய்கறி வண்டியைத் தள்ளிக் கொண்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, சாலை ஓரம் இருந்த ஒரு புதர் நிரம்பிய குப்பை கொட்டும் இடத்தில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. சோபிரான் போய்ப் பார்க்க, அங்கு ஒரு பெண் குழந்தை கிடந்துள்ளது. கொஞ்ச நேரம் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பக்கத்தில் இருந்து, “யாராவது குழந்தையை எடுத்துப் போக வருகிறார்களா?” என்று சோபிரான் பார்த்துள்ளான். யாரும் வரவில்லை! குழந்தையைத் தானே எடுத்துக் கொண்டு, வீட்டை அடைந்த சோபிரானுக்கு, அன்று முதல், அக்குழந்தையை வளர்க்கும் ஒரே வேலை தான்!

அதற்கு ஜோதி என்று பெயர் சூட்டினான். ஜோதிக்காக, சோபிரான் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. காய்கறி விற்பதிலும், ஜோதியைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வதிலுமே, தன் வாழ்நாளை ஓட்டி விட்டான்!

ஜோதி, சோபிரானின் அரவணைப்பில் வளர்ந்தாள். 2013-ல், கணினிப் பாடத்தில் பட்டம் வாங்கினாள். 2014-ல், அஸ்ஸாம் பொது சேவை ஆணையம் நடத்தியத் தேர்வில் தேறி, இப்போது வருமான வரித் துறையில் , உதவி அதிகாரியாகப் பணி புரிகிறாள். தன்னை வளர்த்த சோபிரானைத் “தாங்கு தாங்கு” என்று தாங்குகிறாள்.
இன்றைக்கும், சோபிரான், வண்டி தள்ளிக் கொண்டு போய் காய்கறி விற்பதை நிறுத்த வில்லை!

ஜோதி, சோபிரனை, ஓய்வு எடுக்கச் சொல்லிப் பார்த்தாள். அவர கேட்கவில்லை! ஜோதியும் அதைத் தடுக்க வில்லை. சோபிரான் இப்போது தான் பெறாத மகளின் பாசத்தில் கட்டுண்டு கிடக்கிறார். “எனக்குக் கிடைத்தது குப்பையில் கிடந்த பெண் அல்ல; சுரங்கத்தில் இருந்த வைரம்” என்று சோபிரான், ஜோதியை எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளுகிறார்!


=====


=====

Facebook post of Rajappa Thanjai : (30.10.2020)


ஜெர்மன் தொழில்நுட்ப மழைநீர் வடிகால் வாரியம் கட்டமைப்பால் நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் சென்னை வடபழனி ஆலயத்தில் குளத்திற்கு தண்ணீர் கணிசமாக கிடைத்துள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே ஜெர்மன் தொழில் நுட்பத்தினால் ஆன மழைநீர் வடிகால் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. கோவில் நுழைவாயிலில் இருக்கும் 320 மீட்டர் சாலையின் ஓரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்துடன் மழைநீர் ஊடுருவல் வடிகால் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
கடந்த பத்தாண்டு காலமாக வறண்டிருந்த கோவில் குளத்தில் இதன் மூலம் தண்ணீர் கிடைத்துள்ளது. குளத்தை தூர்வாரி பராமரிப்பு செய்தால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மழைநீர் சேகரிப்பு துறையின் தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறியதாவது : ஜெர்மனி, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நவீன மழைநீர் சேகரிப்பு முறை சோதனை முறையில் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஈக்கோ பிளாக் எனும் மக்காத தடிமனான கலன்களில் நான்கு பக்கமும் சிறு துளைகள் இருக்கும். நான்கு அடி உயரம் மற்றும் இரண்டரை அடி அகலம் கொண்ட கலன்களை மக்காத துணியை கொண்டு மூடி பின்னர் பூமிக்கு பத்து அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி வைக்கப்படுஅதன் மேலே கூழாங்கற்கள், ஜல்லி கற்கள், மணல் போன்றவைகள் கொண்டு நிரப்பப்படும். மழைநீர் இந்த இயற்கை வடிகட்டி அடுக்குகள் வழியாக வடிகட்டப்பட்டு நேரடியாக நிலத்திற்குள் சென்று சுத்தமான தண்ணீராக சேகரிக்கப்படும். அறுபது டன் எடையைக் கூட சாதாரணமாக தாங்கும் தன்மை கொண்ட இந்த கலன்களை கொண்டு பிரதான சாலைகளுக்கு அடியில் கூட மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த முடியும். தற்போது நடைமுறையில் உள்ள உறைகிணறு சேமிப்பு முறையில் மழைநீர் ஒரு வழியாக மட்டுமே நிலத்திற்கு செல்லும் ஆனால் இந்த கலன்களில் நான்கு பக்கமும் துளைகள் உள்ளதால் பூமியின் அடியில் நான்கு பக்கங்கள் வழியாகவும் மழைநீர் செல்லும்.
தற்போது சென்னை பெருநகர் வளர்ச்சி நிதியின் கீழ் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளில் இந்த திட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, சோழிங்கநல்லுர் பகுதிகளை உள்ளடக்கிய தென்மேற்கு கடற்கரை வடிநிலப்பகுதிகளில் 52 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டதில் இந்த முறை முழுமையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.=====

47 கருத்துகள்:

 1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம் கௌதமன் ஜி. அனபு துரை, அனபு ஶ்ரீராம் அனைவருக்கும் எந்நாளும் இனிமையாக இருக்க வாழ்த்துகள.

  பதிலளிநீக்கு
 3. நேர்மறை செய்திகளைப் படிக்கும் போது மனதில் ஏற்படும. மகிழ்ச்சி அளவிட முடியாதது. மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 4. திரு. மாரியப்பன். அவர்களின் சேவை அற்புதம். வெறும் தொலைக்காட்சியைப் போட்டு வைக்காமல் புத்தகங்களை வைத்திருக்கிறாரே , அதற்கே நன்றி சொல்ல வேண்டும். அதுவும் பிரதமர் அவரை அவர் புகழ் எட்டியது இன்னும் நம் நாட்டுப் பெருமையை உயர க் கொண்டு செல்கிறது. மனம்நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், உண்மைதான். தனக்காக இல்லாமல் பிறர்க்காக சிந்தித்து செயல்படுபவரை வாழ்த்துவோம்.

   நீக்கு
 5. நானோ வடிகட்டி. செயல்பட்டு உலகத்தைக் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. திரு சோபிரானின். தடையில்லாத அன்பு, ஒரு நல்ல பெண்குழந்தையை , ஒரு வெற்றிப் பெண்ணைக் கொடுத்திருக்கிறது. எத்தனை பெரிய தியாகம். எத்தனை பெரிய தொண்டு. ! முகத்தில் தான் எத்தனை அமைதி. மிகப் பெரிய பூரிப்பு! மிக மிக நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
 7. கிட்டத்தட்ட 2 , லட்சம் சேர்த்துக் கொடுத்து விட்ட. பெரியவருக்கு வந்தனங்கள்.

  பதிலளிநீக்கு
 8. சென்னையில் இத்தனை மழையும் வீணாகாமல் எல்லாக் குளங்களிலும் ஏரிகளிலும் சேகரிக்கப் பட்டால் வெள்ளம் அவர் சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகளுடன் கூடிய பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 10. மாரியப்பனுடன் பிரதமர் பேசும் நிகழ்வைத் தொலைக்காட்சிகள் மூலம் நேரிலேயே கேட்டு அறிந்து கொண்டோம். இம்மாதிரிச் செய்திகள் மனதிற்கு உற்சாகத்தை ஊட்டுகின்றன. திருவாரூரில் கூட ஓர் சின்னப் பெண் தான் கேந்திரிய வித்யாலயாவில் படிக்க ஆசை கொண்டிருப்பதைப் பிரதமரிடம் கடிதம் மூலம் தெரிவிக்கப் பிரதமரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அந்தப் பெண் இப்போது கேந்திரிய வித்யாலயாவில் ஆறாம் வகுப்புப் படிக்கிறார். அந்தப் பெண்ணுடனும் பிரதமர் பேசி இருப்பதாகச் செய்திகள் கூறின. ஆனால் இது அதிகம் வெளியே வரவில்லை. சென்ற மாதம் எங்கள் நாத்தனார் பெண் பிரதமரால் குறிப்பிடப்பட்டதில் அவளுக்கு இப்போது அதிக அளவில் கதை சொல்லும் நிகழ்ச்சிகளுக்கு, பல்வேறு பள்ளிகளில் இருந்து கூப்பிட்டிருக்கின்றனர். அதே போல் இந்த மாரியப்பன் வாழ்க்கையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. பொதுவாக சமையல் எண்ணெயைக் குறைவாகவே வைத்துப் பயன்படுத்தினாலும் சில சமயங்களில் மிஞ்சத்தான் செய்கிறது. அதைக் கொட்டி விடுவேன். ஒரு கெட்டியான ப்ளாஸ்டிக் கவரில் கொட்டி ரப்பர் பான்ட் போட்டு மூடி இன்னொரு கவரில் போட்டுத் தூரப் போடுவேன். இப்போதெல்லாம் வேலை செய்யும் பெண்மணி நாங்க சாப்பிடுவோம், எங்களுக்குக் கொடுங்கனு சொல்லி வற்புறுத்தி வாங்கிப் போய்விடுகிறார். கொஞ்சம் பயமாய்த் தான் இருக்கும். ஆனாலும் கொடுக்க வேண்டி இருக்கு. எரிபொருளாக மாறுவது நல்ல விஷயம் என்றாலும் இதற்குப் பயன் படுத்திய எண்ணெயைப் பெருமளவில் சேமிக்க வேண்டி இருக்கும்.ஜோதி, சோபிரன், பூல் பாண்டியன் (நேற்றுக் கூட வந்திருந்தது), ராஜப்பா, தஞ்சை கொடுத்திருக்கும் செய்தி எல்லாம் ஏற்கெனவே அறிந்தவை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல செய்திகளுடன் இன்றைய பதிவு...

  சோபிரானைப் பற்றிய தகவல் Fb ல் வந்திருந்தது...

  உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே!..

  பதிலளிநீக்கு
 14. கிரிக்கெட்டிற்கு நடுவே தமிழ் நியூஸ் சேனல் ஒன்றை அவ்வப்போது நான் செக் செய்வது வழக்கம். ஓரிரு நிமிடங்களுக்குத்தான்! அதுமாதிரி அன்று இரவு ஐபிஎல் -லுக்கு நடுவே, -ஸ்ட்ரேடஜிக் டைம்-அவுட்டின் 2 1/2 நிமிட இடைவேளையில்- தந்தி நியூஸை பார்க்கையில் இந்த பொன் மாரியப்பன் பிரதமரோடு பேசுவதை சில நிமிடங்கள் காட்டினார்கள். நன்றி வணக்கமென சம்பிரதாய வார்த்தைகளைத் தாண்டி சில தமிழ் வாக்கியங்களை கிட்டத்தட்ட சரியான உச்சரிப்பில் பிரதமர் மாரியப்பனோடு பேசியது, அவர் எவ்வளவு இதற்காக நேரம் செலவிட்டு, முயன்றிருக்கிறார் என்பதைக் காட்டியது. மாரியப்பனும் நெகிழ்ந்து பரபரப்பில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

  மாரியப்பனின் வாசிப்புப் பழக்கம், கடையையே ஒரு நூலகம்போல் ஆக்கிவிட்டது’ புத்தக வாசிப்பை உள்ளூர்ப்பசங்களிடையே ஊக்குவிக்க அவர் செய்யும் முயற்சிகள்.. எத்தனைப் புகழ்ந்தாலும் தகும். பெரும் சமூக சேவை ஒன்றைத் தன் தொழிலோடு சேர்த்தே அவர் செய்துவருகிறார் என்பது ஊர்க்காரர்களுக்கும், மற்றோருக்கும் புரியவேண்டும். இவர் வழி செல்ல பிறரும் விரும்பினால், முனைந்தால், வாசிப்பு வளரும். சிறுவர்கள். பெரியவர்களென நிறையப்பேர் வெட்டிச் சலசலப்பை விட்டுவிட்டு, சரியான வழியில் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். பிரதமரே நேரடியாக வாழ்த்தியதால், மாரியப்பனுக்கும் பெயர். மற்றவர்களுக்கும் உற்சாகம் - நல்ல விஷயத்தை நோக்கிய உற்சாகம் - கிடைக்கும். அவரது வாழ்க்கை மேன்மேலும் சிறக்கட்டும். நூலகங்கள் சிற்றூர்களிலும் பெருகிப் பிரகாசிக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 15. சனிக்கிழமை சங்கி பதிவு என்று, மே மாதம் வரை (?) வரும் சனிக்கிழமைகளில் (எ*)உங்கள் Blog உறுதி ஆகலாம்... புரிதலுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 16. முடி திருத்தும் நிலையங்களில் தந்தி பேப்பர் வைத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாரியப்பன் ஒரு நூலகமே வைத்திருப்பதும், குழந்தைகளிடம்  படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க  போட்டிகள்  நடத்தி, பரிசுகள் அளிப்பதும் சிறப்பான விஷயம். 
  குப்பையில் கிடைத்த பெண்ணை கோபுரத்திற்கு உயர்த்திய  சோபிரான் போற்றுதலுக்குரியவர்.
  சுட்ட எண்ணையில் டீசலா? வாவ்!
  ஈக்கோ பிளாக் பற்றி ஏற்கனவே படித்தது போல் இருக்கிறது.       

  பதிலளிநீக்கு
 17. //புத்தகத்தை படித்துவிட்டு விமர்சனம் எழுதச் சொல்வேன் சிறந்த விமர்சனத்திற்கு புத்தகங்களை பரிசாக கொடுப்பேன் இந்த விஷயம் நிறைய மாணவர்களுக்கு பரவி புத்தகங்களை பரிசாகப் பெறுவதற்காகவே இங்கு வந்து புத்தகங்களை படித்து அது பற்றி எழுத ஆரம்பித்தனர்.//

  தன் கடைக்கு வருபவர்களை புத்தங்களை வாசிக்க வைப்பது மகிழ்ச்சி. அதைவிட மாண்வர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை வளர்க்க அவர்களை விமர்சனம் எழுத வைத்து பரிசு வழங்குவது நல்ல விஷயம். திரு. மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


  பயன்படுத்திய சமையல் எண்ணெயை எரிபொருளாக்கலாம்!//

  நல்லதுதான்.

  //“எனக்குக் கிடைத்தது குப்பையில் கிடந்த பெண் அல்ல; சுரங்கத்தில் இருந்த வைரம்” என்று சோபிரான், ஜோதியை எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளுகிறார்!//

  வளர்த்தவருக்கு பெருமை சேர்த்த பெண் வைரம் தான். வைரத்தின் வளர்ப்பு அப்பா உயர்ந்த மனிதர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  மழைநீர் வடிகால் திட்டம் முழுமையாக எல்லா இடங்களிலும் செயல்பட வாழ்த்துக்கள்.

  அனைத்து நேர்மறை செய்திகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 18. ஆசாம் ஜோதி கதை பிரபல பழைய மலையாள சினிமா "ஓடையில் நின்னு" (from the gutter) கதை. 

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!