திங்கள், 12 அக்டோபர், 2020

"திங்க"க்கிழமை  :  ஆடிப்பால்  - ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி 

ஆடிப் பால்

தமிழ் மாதங்களில் யாவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் மாதம்
ஆடியாகத்தான் இருக்கும்.  ஏனெனில் ஆடி மாதப் பிறப்பிலிருந்து
பண்டிகைகள் வரிசை போட்டுக் கொண்டு நம் வீடு தேடி வர வாசலில்
காத்துக் கொண்டிருக்கும். புதுத் துணிகள், புதுப்  பண்டிகைகள், புது வரவுகள் என ஆடி முதல் ஒரே கொண்டாட்டம்தான்.

வைணவக் குடும்பங்களில் ஆடி மாதப் பிறப்பு என்பது ஓர் திருமண
விழாவிற்கான முக்கியத்துவத்தை இன்றும் சுமக்கிறது.  ஒவ்வொரு ஆடி
மாதப் பிறப்பன்றும் வைணவ இல்லங்களில் இன்றும் ஆடிப் பால் காய்ச்சுவது ஒரு மகிழ்ச்சியான வழக்கம்.

திருமணத்திற்குப் பின் வரும் முதல் ஆடி மாதப் பிறப்பன்று மாப்பிள்ளையையும் வீட்டுப் பெண்ணையும் பெண் பிறந்த இல்லத்திற்கு அழைத்து விருந்தோம்பி மகிழ்வது வழக்கம். இதில் மிக முக்கியமான சடங்கானது புத்தம் புது வெள்ளி டம்ளர் வாங்கி வீட்டிற்கு வந்த மாப்பிள்ளைக்கு அதில் ஆடிப் பால் வழங்கி குடும்பத்தார் மகிழ்வதேயாகும்.

அந்தக் காலத்தில், திருமணத்திற்கு பின் வீட்டுப் பெண் என்பவள் அடிக்கடி வருகை தருவது கடினமாதலால் இம்மாதிரியான சடங்குகளை சாக்கிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்து கௌரவிக்கும் சாக்கில் அவர்களை பார்க்க ஓர் மகிழ்ச்சியான ஏற்பாடாய்தான் நான் இப்பண்டிகையைப் பார்க்கின்றேன்.

அந்த சுவை மிக்க ஆடிப் பால் எவ்வாறு காய்ச்சுவது என்பதுதான் என்னுடைய இன்றைய ரெசிப்பியாகும்.

நாங்கள் ஐந்து நபர்கள் கொண்ட குடும்பம் என்பதால், நான் எங்கள் குடும்ப அளவிற்கேற்ப ஒரே ஒரு ஃப்ரெஷ்ஷான தேங்காயை அப்போது உடைத்து நன்றாக முழு தேங்காயையும் துருவிக் கொண்டேன்.

வேண்டிய பொருட்கள் :

தேங்காய் : 1

வெல்லம் : ஓரு பெரிய கப் (எங்களுக்கு அதிகம் இனிப்பு வேண்டியிருக்காததால், நான் ஒரு பெரிய கப் என்று கூறுகிறேன். உங்கள் வசதிக்கு நீங்கள் வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள்)

ஏலக்காய் (அ) ஏலப்பொடி : ஓரு சிறிய ஸ்பூன் (அ) 2 (அ) 3 முந்திரி பருப்பு : 10 பருப்புகள் உங்களுக்கு வேண்டுமானால் பச்சை கற்பூரம், குங்குமப் பூ ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பாலின் சுவை குறைந்து விடும் என்பதால் நாங்கள் எதையும் சேர்ப்பதில்லை.

செய்முறை :

முதலில் தேங்காயை உடைத்து நன்றாகத் துருவிக் கொள்ளவும்.அத் தேங்காய்த் துருவலை மிக்ஸியில் சேர்த்து முதல் முறை அரைக்கும்
போது நீர் சேர்க்காமல் நன்றாக அரைக்கவும்.அந்தப் பாலையும் அரைத்த விழுதையும் சேர்த்து வடிகட்டியில் போட்டு நன்றாக கீழே ஓர் பாத்திரத்தை வைத்து பாலை மட்டும் வடிகட்டி
எடுத்துக் கொள்ளவும். இரண்டு அல்லது மூன்று முறைகள் சிறிது நீர் சேர்த்து இதே போல் அரைத்து மறுபடியும் வடிகட்டி, வடிகட்டி பாத்திரத்தில்
சேர்த்துக் கொள்ளவும். எங்கள் வீட்டில் மூன்று முறைகள் மட்டுமே அரைப்போம்.இப்பொழுது அந்த வடிகட்டிய தேங்காய்ப் பால் பாத்திரத்தை அடுப்பில்
வைத்து வேண்டிய வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும். ஏலக்காய் அல்லது ஏலப் பொடியை பாலுடன் சேர்த்து சுமார் பத்து நிமிடங்கள் நன்றாக வெல்லம் கரைந்து கொதிக்கும் வரை அடுப்பில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.இப்போது ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரி பருப்புகளை முழுதாகவோ
அல்லது பாதியாகவோ உடைத்தோ வறுத்து தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும்.

அவ்வளவுதான். சுவையான ஆடிப் பால் அல்லது தேங்காய்ப் பால் தயார்.இது செய்வது மிகவும் சுலபம். சாப்பிடுவது மிகவும் இன்பம். செய்து பாருங்கள் நண்பர்களே...

ஒரு சிறிய டிப்ஸ். ஒரே நேரத்தில் ஒரு டம்ளருக்கு மேலே அருந்தினால் சில சமயத்தில் தலை சுற்றுவது போல் இருக்கும். ஆகவே, ஜாக்கிரதையாக அருந்துங்கள்.  வைத்து மதியம் கூட சுட வைத்து அருந்தலாம்.  ஆடிப் பால் ஆடிப் பால்தான்.

=====


=====

31 கருத்துகள்:

 1. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் அனைவருக்கும் இனிய திங்கள் காலை வணக்கம்.
  இன்னாளும் இனி வரும் எல்லா நாளும்
  வளமும் ஆரோக்கியமும் மிக
  இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. ஆடிப்பால் அருமையாக வந்திருக்கிறது,.
  தமிழ் நாட்டில் அனைவரும் கொண்டாடும்
  ஆடி மாதத்தில் , காவிரிக்கரைக் காரர்கள்
  மதுரைக்காரர்கள், நெல்லை எல்லா ஊராரும்

  தண்ணீர் வரவைக் கொண்டாடி , முன்னோர்களைக்
  கொண்டாடி ஆடிப் பால்
  செய்வது வழக்கம்.
  அதை மிக அழகாகச் சொல்லி இருக்கும்
  ரமாவுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பிரச்னை அதிகரிக்கும் என ஒரு சாராரும், குறைய ஆரம்பித்துள்ளது என இன்னொரு சாராரும் கூறினாலும் முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதே நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. ஆடிப்பால் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும், எல்லோரும் செய்யும் ஒன்று. "ஆடிக்கழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்துச் செருப்பால் அடி" என விளையாட்டாகச் சொல்லுவார்கள். ஆடிக்குப் பெண் மாப்பிள்ளையை அழைத்து விருந்து செய்வித்துப் புதுத்துணிகள், பருப்புத்தேங்காய், பக்ஷணங்கள் இவற்றோடு மாப்பிள்ளைக்கு வெள்ளி வட்டை (டபரா) தம்பளரில் ஆடிப்பாலும் கொடுப்பது வழக்கம். இப்போதெல்லாம் இவை பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. என் மாமியார் என்னோடு இருந்தவரைக்கும் ஆடிப் பண்டிகையன்று ஆடிப்பால் கட்டாயம் பண்ணுவோம். கூடவே வடை, போளியும் உண்டு. பின்னாட்களில் மெல்ல மெல்லக் குறைந்து இப்போது கொஞ்சமாகப் பாயசம் மட்டும். வடை பண்ணுவேன். போளியெல்லாம் பண்ணியே சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

  பதிலளிநீக்கு
 6. சித்திரை மாதம் பௌர்ணமி அன்று பண்ணும் சித்ரகுப்தன் விரதத்திலும் தேங்காய்ப் பால் நிவேதனம் முக்கியம். மாமியார் அந்த விரதம் இருப்பார். வாசலில் கோலம் போடும்போது தெற்கு வாசலை அடைத்து மற்ற வாசல்களைத் திறந்தாற்போல் கோலம் போடணும் என்பார். அன்று உப்பு, மற்ற தானியங்கள் சேர்க்காமல் இந்தத் தேங்காய்ப் பாலும் எருமைத் தயிர் சேர்த்த உப்புச் சேர்க்காத தயிர்சாதமும் நிவேதனம் பண்ணுவார். மற்ற பத்ததிகள் மறந்துட்டேன். :( நமக்கெல்லாம் சாப்பாடு விஷயம்னால் அது மட்டும் நினைவில் நிற்கும்.

  பதிலளிநீக்கு
 7. ரமா ஸ்ரீநிவாசன் செய்திருக்கும் ஆடிப்பால் தாமதமாய் வந்தாலும் சுவையாகவே உள்ளது ஏலக்காய் மட்டும் தான் நாங்களும் போடுவோம்.

  பதிலளிநீக்கு
 8. பால் கொழுக்கட்டை பண்ண இப்படித் தான் தேங்காய்ப் பால் எடுத்து 2 ஆம், மூன்றாம் பாலில் வெல்லம் சேர்த்துக் கொதிக்கவைத்துக் கொழுக்கட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுச் சேர்ந்து வந்ததும் முதல் பாலைச் சேர்த்து அந்தத் தேங்காய்ச் சக்கையையும் நெய்யில் வறுத்து ஏலக்காய்ப் பொடியோடு சேர்ப்போம். அதே போல் இலை அடையும் பண்ணி இம்மாதிரித் தேங்காய்ப் பாலில் மிதக்க விடுவது உண்டு. சேவை பிழியும்போது இப்படித் தேங்காய்ப் பாலில் பிழிந்து எடுப்பதும் உண்டு. முன்னெல்லாம் மாதம் ஒரு முறையாவது இருக்கும். இப்போதெல்லாம் நினைப்போடு சரி.

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. சுவையான பால்தான் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. சுவையான, சுலபமான இனிப்பிற்கு நன்றி. எங்கள் தாத்தாவிற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி பண்ணச் சொல்லுவார். வீட்டில் யாருக்காவது வாய்ப்புண், வயிற்றுப் புண் வந்தால் அம்மா பண்ணிக் கொடுப்பார். புளியா தோசைக்கு சைட் டிஷ்ஷாக செய்வோம்.

  பதிலளிநீக்கு
 12. ஆடிப்பால் குறித்து படிக்கும்போதே சுவையாக தோன்றுகிறது.
  மிக்க நன்றி ரமா மேடம்.
  ஆடி மாதத்தை புது மாப்பிள்ளை மற்றும் புது பெண், மற்றவர்களோடு சேர்ந்து கொண்டாடுவார்களா என்பது எநக்கு சந்தேகமே.
  எனினும், ஆடிப் பெருக்கு, ஆடியில் விர்ப்பனை இல்லாததால் தள்ளுபடி போன்ற பிரம்மிக்கச் செய்யும் சம்பவங்கள் பரவசமானவை.

  பதிலளிநீக்கு
 13. நல்லவேளை ஒரு சிறிய டிப்ஸ் சொன்னீர்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 14. ஆடிப்பால் - செய்முறை நன்று. எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு.

  பதிலளிநீக்கு
 15. அடை பிரதமன் - அடை = ஆடிப்பால் ?

  Jayakumar

  பதிலளிநீக்கு
 16. அன்னப்பால் காணாத ஏழையர்க்கு நல்ல
  ஆவின்பால் எங்கிருந்து கிடைக்குமம்மா?..

  - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது பாடலில் வரும் வரிகள்...

  பள்ளியில் படித்தது.. முழுப்பாடலும் நினைவில் இல்லை...

  பதிலளிநீக்கு
 17. அன்னப் பால் என்பது சோறு வடித்த கஞ்சி..

  69/70 ஆண்டுகளுக்கு முன்பு கூட
  அன்னப் பாலுக்கும் ஆவின் பாலுக்கும் இடையில் வெகு தூரம் இருந்திருக்கிறது..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!