சனி, 3 அக்டோபர், 2020

இந்த வார பாஸிட்டிவ் செய்திகள்

 

ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தலால், பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் மூடப் பட்டுள்ளன. ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் உயர்நிலை பள்ளி ஆசிரியராக இருப்பவர் சபன் பத்ரலெக்.

இவர் மாணவர்களுக்கு கல்வி பயில, புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளார். அந்த கிராமத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன், வீட்டு திண்ணையின் களிமண் சுவரை கரும்பலகையாக மாற்றியுள்ளார். இதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வகுப்புகளை நடத்தி வருகிறார்.

தும்கா மாவட்ட தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள டுமார்த்தர் கிராமத்தில் நடுநிலை பள்ளி உள்ளது. ங்கு சுமார் 290 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாணவரும் சமூக தொலைதூர விதிமுறைகளை மனதில் வைத்து ஒரு தனி கரும்பலகையைப் பெறுகிறார்கள். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் அனைவரும் சுழற்சி முறையில் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். பள்ளி வகுப்புகளை நடத்துவதற்கான புதுமையான வழி இப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தற்போது பலரின் வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது.


latest tamil news

===

பூச்சி அளவை கொண்ட சிறிய ரக ரோபோக்கள் 'பக் சைஸ் பார்ட்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற மிகச் சிறிய ரக ரோபோக்களை தயாரிப்பதே மிகவும் சவாலான விஷயம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த ரோபோக்களை கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன. சிறியரக பூச்சிகள் போலவே ஆறு சிறிய கால்கள் கொண்டதாக இவை வடிவமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து பிட்ஸ்பர்க் கார்னிஜி பல்கலை., பேராசிரியர் சேநெப் செமல் கூறுகையில் 'சிறியரக ரோபோக்களால் பல நன்மைகள் உள்ளன. மனிதர்கள் புகமுடியாத சிறிய இடங்களில் இந்த ரோபோக்கள் எளிதில் உள்ளே செல்லும். மேலும் பூச்சிகள்போல நீர்நிலைகள், ஆகாயம் ஆகிய அனைத்து இடங்களிலும் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது.

சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டால் அவர்களைக் காக்க, தீயணைப்பு வீரர்களுக்கு இந்த சிறியரக ரோபோக்கள் உதவும். பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் இடிபாடுகளுக்கு நடுவே செல்ல இந்த எட்டுக்கால் பூச்சி அளவே உடைய சிறிய ரோபோக்கள் உதவும். இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா கொண்டு பாதிக்கப்பட்டவர்களை எளிதில் மீட்கமுடியும். இந்த ரோபோக்களை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் எறும்பு, ஈ, சிலந்தி, கொசு, சில்வண்டு உள்ளிட்ட உயிரினங்களின் அசைவுகள் மற்றும் செயல்திறனை கண்காணித்து வருகின்றனர்.

இதன்மூலம் இந்த சிறிய ரக ரோபோக்களும் பூச்சிகள் போலவே நடந்து கொள்ளுமாறு புரோகிராம் செய்யப்படும். டிராப் ஜா ஆண்ட் எனப்படும் ஒருவகை எறும்பு ஆபத்தின்போது இருந்த இடத்திலிருந்து மணிக்கு 90 மைல் வேகத்தில் குதிக்கும் திறன் கொண்டது. இதேபோல இந்த சிறிய வகை ரோபோக்கள் செயல்பட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.


எறும்புகள்போல தொலைதூரத்தில் இருந்தாலும் சங்கேத பாஷை மூலமாக ஒரு சிறிய ரக ரோபோ தூரத்தில் இருக்கும் மற்ற ரோபோ உடன் தொடர்பு கொள்ள அதில் தொழில்நுட்பத்தை புகுத்தி உள்ளனர். நமது செல்போன்களில் பயன்படுத்தப்படும் சிம்கார்டுகள்போல காட்சியளிக்கும் இந்த ரோபோக்கள் இன்னும் 10 ஆண்டுகளில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் அளவுக்கு இதன் தொழில்நுட்பம் வளர்ந்துவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.===


ஆக்ஸ்போர்ட் பல்கலை தயாரித்துள்ள, 'கோவிஷீல்டு' தடுப்பூசி பரிசோதனை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்த, 'கோவாக்சின்' தடுப்பூசி, இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.latest tamil news

இந்நிலையில், பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்துள்ள, கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை, இந்தியாவில் துவக்கப்பட்டுள்ளது.ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசியை, 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனம் தயாரிக்க உள்ளது.கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை, மத்திய அரசு வழங்கி உள்ளது.


latest tamil news

அதன்படி, 17 நகரங்களில், 1,600 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது.சென்னையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக, 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இரண்டு தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு, சோதனை நேற்று துவங்கியது. அதேபோல, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் இந்த சோதனை துவக்கப்பட்டுள்ளது.


===


மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மதுரையில் கலெக்டர் வினய்யிடம், 15வது முறையாக, துாத்துக்குடி யாசகர் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இதுவரை அவர் 1.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார். யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தில் உணவுசெலவு போக மீதமுள்ள தொகையை பள்ளி,கல்லுாரிகளில் இருக்கைகள், சேர்கள் வாங்க செலவிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் மதுரையில் தங்கி விட்டவர், இதுவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 14 முறை ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த வாரம் வரை ரூ.1.40 லட்சம் வழங்கியிருந்தார். அவரது சேவையை பாராட்டி கலெக்டர் வினய் சுதந்திர தின விழா விருது வழங்கினார்.

===


கிரிக்கெட் வீர்ர் டீன் ஜோன்ஸிற்கு ஒரு நினைவாஞ்சலி:: ரமா ஸ்ரீநிவாசன் நான் என் கல்லூரி காலங்களிலிருந்துதான் கிரிக்கெட் போட்டிகளை வானொலி மூலம் பின் தொடரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். ஏனெனில் எங்கள் இல்லத்தில் இரு கிரிக்கெட் பைத்தியம் பிடித்த அண்ணன்மார். அப்பொழுது செல் ஃபோனும் கிடையாது, தொலைக்காட்சியும் கிடையாது. எனவே, பொழுதுபோக்கு என்றாலே கிரிக்கெட் மேட்ச்களை ரேடியோவில் கேட்பதுதான். அதன் சுவாரசியம் உங்களைப் பிடித்துக் கொண்டால் போதும். நீங்களும் அதற்கு அடிமையாகி விடுவீர்கள். அப்படித்தான் நான் ஆஸ்திரேலியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸின் ஆட்டத்திற்கு அடிமையாகிப் போனேன். எனவேதான் இந்த கட்டுரை.

1961ல் பிறந்து 2020 வரை கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் டீன் ஜோன்ஸ் ஆச்சரியமிக்க வகையில் பரிமளித்தவர். அவர் ஒரு அபாரமான கிரிக்கெட் வீர்ர். அவர் ஐந்து நாள் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் செய்தவர். இது மட்டுமல்லாமல் அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர் மற்றும் நேர்த்தியான வர்ணணையாளரும் கூட. 

அவருடைய ஐந்து நாள் கிரிக்கெட் சாகசங்கள் எண்ணிலடங்கா. அதே சமயம், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தனக்கென ஒரு தனி பாதையை வகுத்து அவரது பேட்டிங்கும் ஃபீல்டிங்கும் என்றும் எல்லோர் மனங்களிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும்படி விளையாடியவர்.

டீன் ஜோன்ஸ் ஒரு வலது கை பேட்ஸ்மேன். பந்து வீச்சில் அவர் வலது கை ஆஃப் ஸ்பின்னர். 

ஒரு மனிதர் தன் வீட்டை விட்டு, தன் நாட்டை விட்டு பல கோடி மைல்கள் தாண்டி, தன் குடும்பத்தையும் இஷ்ட பந்துக்களை விட்டு வெகு தூரம் பயணித்து வந்த இடத்தில் தன் இறுதி மூச்சை விடுவதென்பது யாராலும் ஜீரணிக்க முடியாத ஒரு முடிவு. இம்முடிவை பங்களூரில் தான் தங்கியிருந்த ஒரு ஹோட்டலில் டீன் ஜோன்ஸ் சந்தித்தார். 

இங்கு நான் டீன் ஜோன்ஸ் என்ற கிரிக்கெட் வீரரைப் பற்றி எழுதப் போவதில்லை. டீன் ஜோன்ஸ் என்னும் ஒரு மாமனிதரைப் பற்றியும் நாட்டுப் பற்று மிக்க ஒரு கிரிக்கெட்டரைப் பற்றியும் எழுத முனைகிறேன்.

டீன் ஜோன்ஸ் என்பவர் சென்னையில் நடந்த பிரபலமான வெற்றி தோல்வியற்ற மேட்ச்சில் 200 சதம் வெளுத்து வாங்கியவர் மட்டுமல்ல. டீன் ஜோன்ஸ் ஏதோ வேகத்தில் ஒரு முறை இனவெறி பற்றிய கருத்து ஒன்றை தொலைக்காட்சியில் வெளிப் படுத்திவிட்டு பின்னர் வாழ்நாள் முழுவதும் அதைப் பற்றி வருந்திக் கொண்டிருந்தவரும் அல்ல. அவர் “ப்ரோஃபஸர் டீனோ” என்னும் ஒரு விளையாட்டான கதா பாத்திரமும் அல்ல. 

பின் டீன் ஜோன்ஸ் என்பவர் யார் என்று கேட்டீர்களானால் அவர் ஒரு மிகுந்த நுணுக்கமான மனிதர். கிரிக்கெட்டிடம் தனக்குள்ள ஈடில்லா காதலை யாவரும் அறியும் வண்ணம் தன் சட்டையாக அணிந்திருந்தவர். கிரிக்கெட்டின் சம்பந்தமுள்ள எதிலும் முழு கவனத்தை செலுத்துவது அவரது இயல்பாகும். கிரிக்கெட் விளையாடும்போது தன் நாட்டின் தேசக் கொடியை தன் தேசப் பற்றின் வடிவில் பேட்டிங்க் க்ரீஸிற்கே கொண்டு சென்று தன்னுடைய நோக்கத்தையும் உறுதியையும் யாவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர். 

அந்த சென்னையில் நடந்த வெற்றி தோல்வியற்ற மேட்ச்சில் டீன் ஜோன்ஸ் விளையாடிய விளையாட்டு அவரது திறமையைப் பறைசாற்றும் ஒன்றாக அமைந்தது. எட்டு மணி நேரம் விளையாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே ஜோன்ஸ் அளவிற்கதிகமான வெயிலில் திரவச் சத்தையும் தாது சத்தையும் இழந்து கொண்டிருந்தார். 

அவருடைய அந்த இன்னிங்க்ஸானது எல்லா உண்மைகளையும் பொய்யாக்கியது. அவரது கண் பாப்பாக்கள் (pupils) அபாயகரமாக விரிந்திருந்தன, அவரது உதடுகள் வீங்கியிருந்தன, அவரது முகம் சிவந்திருந்தது. அவருடைய உடல் முழுக்கவே பலவீனமாகி, அவர் தன் உடை மாற்றும் அறையை அடைந்தவுடன் மயங்கி விழுந்து உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டார். ஆயினும் அடுத்த நாள் திரும்பி வந்து 174 ரன்களிலிலிருந்து 200 ரன்களைத் தொட்டு அதற்கு மேலும் அடித்து அந்த இன்னிங்க்ஸில் ஒரு வரலாறு படைத்தார்.

ஒரு நாள் ஆட்ட களத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜாவேத் மியான்டாட் போன்ற பிரபலங்கள் இருந்தாலும் டீன் ஜோன்ஸ் அன்றே தன் திறமையால் தனித்து நின்றார். அவரது விக்கட்டுகளுக்கு நடுவில் ஓடும் ஓட்டமும் யாருமே அறியாத வியக்கத் தக்க ஸ்ட்ரோக்ஸை அடிப்பதும் யாவருக்கும் உற்சாகத்தை கொடுத்தது. அவர் அழகான ரன்கள் எடுப்பதும் அல்லது லாவகமாக ரன்கள் தடுப்பதும் பார்வையாளர்களை மிகவும் மகிழ வைத்தும் உற்சாகப் படுத்தியும் விளையாட்டிற்கே ஒரு தனிப் பொலிவைத் தருவித்தது.

ஒரு வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பைக்காக திரும்பி சென்னை வந்து இந்தியாவை எதிர்த்து விளையாடியபோது ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியாவின் வெற்றியைக் குறிப்பிட டீன் ஜோன்ஸ் ஃபீல்டிலிருந்து பார்வையாளர்களுக்கு நடுவில் தூக்கி எரிந்த பந்தானதுதான் அந்த மறக்க முடியாத மேட்சின் முடிவாக இன்றும் என் நினைவில் நிற்கின்றது. 

பல வருடங்களுக்குப் பின்னர் வர்ணனையாளர் பெட்டியிலும் அவர் மாறாமல் அதே வெளிப்படையான, நேர்மையான மற்றும் குழப்பமில்லாத பேச்சுடனும் வர்ணனையளித்து யாவரையும் மகிழ்வித்தார்.

டீன் ஜோன்ஸ் என்னும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் கிரிக்கெட் விளையாட்டு தொடரும்வரை அதில் ஒரு தொடர்கதையாகவே தொடர்ந்து வாழ்வார். அவரது ஒளிவு மறைவில்லாத பேச்சு அவரை பல நேரங்களில் பல இடங்களில் பிரச்சனைக்குள்ளாக்கினாலும் அவருடைய விளையாட்டு சிறப்பு சில காலம் இவை யாவையும் ஓரமாகத் தள்ளியது. முடிவில் அவரது வாயே அவருக்கு எதிரியாகி கிரிக்கெட் விளையாட்டிலிருந்தே விலகி ஒரு மிக நேர்த்தியான பயிற்சியாளராக பணி புரிய வைத்தது. அதற்குப்  பின்னர், ஒரு அழகான அதே சமயம் உண்மையை மட்டும் கூறும் வர்ணணையாளராகவும் டீன் ஜோன்ஸ்ஸை நாம் பார்க்க முடிந்தது.

அவர் இருந்தபோது நம்மை தன் ஆட்டத்தால் மகிழ்வித்தார். அவர் மூச்சு அடங்கியபின் உலகம் தொட்டு நாம் அனைவரும் அவரைப் பற்றி மருகி மருகி பேசும்படி வாழ்ந்து விட்டு சென்றார். அதுவல்லவோ வாழ்க்கை!


கட்டுரையாளர் : திருமதி ரமா ஸ்ரீநிவாசன் 

===

37 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  உலகம் முழுவதும் நோயிலிருந்து
  விடுபட இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. ஒடிஷாவின் சபன்,
  மிகவும் பாராட்டுக்கு உரியவர்.
  மாணவர்கள் மேல் இத்தனை அன்பு கொண்டு,
  தொற்று நோய் காலத்திலும் இத்தனை உதவி
  செய்திருக்கிறாரே.
  எவ்வளவு பெரிய நன்மை.
  நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் பாராட்டு
  பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. இதன்மூலம் இந்த சிறிய ரக ரோபோக்களும் பூச்சிகள் போலவே நடந்து கொள்ளுமாறு புரோகிராம் செய்யப்படும். டிராப் ஜா ஆண்ட் எனப்படும் ஒருவகை எறும்பு ஆபத்தின்போது இருந்த இடத்திலிருந்து மணிக்கு 90 மைல் வேகத்தில் குதிக்கும் திறன் கொண்டது. இதேபோல இந்த சிறிய வகை ரோபோக்கள் செயல்பட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.///////////////பக் ரோபோக்கள் நிறைய உதவிகளைச் செய்யப் போகின்றன.
  நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.
  பூகம்பத்திலும், வெள்ளங்களிலும்
  அகப்பட்டுக் கொண்டவர்களை இந்த பக் மீட்கும் என்றால்
  நம்ப முடியாத நன்மைகள் விளையும். மிக நன்றி இந்த செய்திக்கு,

  பதிலளிநீக்கு
 4. கோவிட் வாக்சின்
  நல்ல பலன் தரட்டும்.
  தீமைகள் ஒழிய இறைவன் உதவட்டும்.

  பதிலளிநீக்கு
 5. ரமாவின் டீன் ஜோன்ஸ் தகவல்களுக்கு நன்றி.

  திடமான வீரர். தேசப்பற்று நிறைய உண்டுதான்.
  கொஞ்சம் நல்ல வார்த்தைகள் சொல்லி
  இருக்கலாம்.:(
  ஆனாலும் கிரிக்கெட்டுக்காகவே உயிரையும் கொடுத்து விட்டார்.

  ஆஸ்திரேலியாவில் அப்போது நிற வெறி நிறைய இருந்தது.
  நம் வீரர்கள் எல்லாவற்றையும் தாண்டி வந்துதான்
  இப்போதைய நிலைமைக்கு வந்திருக்கிறோம்.
  ஆன்மா சாந்தி அடையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்றுமே நம் நாதான் நமக்கு சத்ரு. எனவேதான் நா காக்க என்றார்களோ

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வயது, தகுதி, பணபலம் வித்தியாசமில்லாமல் எங்கும் புகுந்து தன் ஆற்றலைக் காட்டும் நோய் ஒட்டுமொத்தமாக அழியப் பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் இயல்பு நிலை திரும்பப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 7. ஜார்க்கண்ட் மாவட்டத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சபன் அவர்களின் யோசனையை நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இயன்றவரை கடைப்பிடித்துப் பார்க்கலாம். பூல்பாண்டியன் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரோபோக்கள் தயாரிப்பில் விஞ்ஞானிகள் வெற்றியடைய வாழ்த்துகள். கோவிட் தடுப்பூசி விரைவில் பலன் அளிக்கப் பிரார்த்திப்போம்.

  திருமதி ரமா ஸ்ரீநிவாசன் டீன் ஜோன்ஸ் பற்றி எழுதியுள்ள கட்டுரை அரிய செய்திகளைத் தாங்கி வந்துள்ளது. திருமதி ரமாவுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 8. டீன் ஜோன்ஸ் என்னும் மனிதரை அறிந்தேன் நன்றி மேடம்.

  பிற செய்திகளும் நன்று.

  பதிலளிநீக்கு
 9. மாமனிதர் பூல்பாண்டியன் அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  டீன் ஜோன்ஸ் அவர்களின் நாட்டுப் பற்று உட்பட கட்டுரை தகவல்கள் அருமை...

  பதிலளிநீக்கு
 10. //வீட்டு திண்ணையின் களிமண் சுவரை கரும்பலகையாக மாற்றியுள்ளார். இதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வகுப்புகளை நடத்தி வருகிறார்.//

  நல்ல யோசனை.

  சபன் பத்ரலெக் ஆசிரியருக்கும் அவர்கூட பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  //இந்த ரோபோக்கள் இன்னும் 10 ஆண்டுகளில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் அளவுக்கு இதன் தொழில்நுட்பம் வளர்ந்துவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.//

  விஞ்ஞானிகள் நம்பிக்கை பலிக்கவேண்டும்.

  கோவிஷீல்டு தடுப்பூசியால் நல்லது நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

  இந்த தொற்று காலத்திலும் புதிய விதத்தில் கல்வி பயில செயல்படுத்திய ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தின் உயர் நிலைப் பள்ளி ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  பதிய ரோபோ செய்திகள் படிக்கப்படிக்க ஆச்சரியமூட்டுகின்றன. விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்.

  கூடிய விரைவில் தொற்றுக்கு நல்ல மருந்து வந்து, அதனை எதிர்த்து போராடி பயன்கள் தர வேண்டும் உலக மக்கள் அனைவரும் இதிலிருந்து முழுமையாக பயம் அகன்று முன்பு போல் சகஜ நிலை காண பிரார்த்திப்போம்.

  சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை மிக நன்றாக உள்ளது. கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டேன். சகோதரிக்கு நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. ஆசிரியர் சபன் பத்ரலெக் நிஜமாகவே பாராட்டுக்குரியவர். ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு உதவ ஓரறிவு  கொண்ட பூச்சிகள் போல் படைக்கப்படும் ரோபோக்களா? கொரோனாவுக்கான தடுப்பு மருந்து விரைவில் வரட்டும். 

  பதிலளிநீக்கு
 13. கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் பற்றிய கட்டுரை சுருக்கமாகவும், சுவையாகவும் இருந்தது. 

  பதிலளிநீக்கு
 14. பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே சிறப்பு.

  டீன் ஜோன்ஸ் கட்டுரை - கட்டுரையாளர் திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 15. பள்ளி ஆசிரியருக்கு பாராட்டுகள்.
  டீன் ஜோன்ஸ் கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!