வெள்ளி, 30 அக்டோபர், 2020

வெள்ளி வீடியோ : கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொள்ளும்போது கொள்ளு தாண்டிச் செல்லும்போது செல்லடி


சென்ற வார "அவள் ஒரு தொடர்கதை" யின் தொடர்ச்சி!

தெலுங்கிலோ, கன்னடத்திலோ இந்தப் படத்தில் திடீர்க் கன்னையா செய்த கண்டக்டர் ரோலை ரஜினி செய்தார் என்று நினைவு.  கமல் இந்தப் படத்துக்காக மிமிக்ரி கற்றுக்கொண்டாராம்.  'கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடலில் மிமிக்ரி குரல்கள் கொடுத்த திரு சீனிவாசன் பற்றி இங்கு படிக்கலாம்.  



மணிரத்னம் பாராட்டியது கேரக்டர்களின் நிலைத்த தன்மையை.  கவிதா போன்ற வேலைக்குச் செல்லும் மிடில் க்ளாஸ் இளம் பெண்களின் சோகக்கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொல்லி உள்ளார்.

பாலச்சந்தர் தனது அரங்கேற்றம், மற்றும் மனதில் உறுதி வேண்டும் படங்களிலும் இதே கருவை வெவ்வேறு விதங்களில் கையாண்டிருப்பார் - திறமையான இசை அமைப்பாளர்கள் ஒரே டியூனில் அல்லது ராகத்தில் ரசிகர்கள் இனம் காண முடியாதபடி வெவ்வேறு பாடல்களை படைத்துத் தருவது போல...  



அரங்கேற்றம் படத்திலும் கமல் நடித்திருப்பார்!

எல் ஆர் ஈஸ்வரி குரலில் பலப்பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.  பாலச்சந்தர் படங்களில் எல் ஆர் ஈஸ்வரி குரலில் எனக்கு சட்டென நினைவுக்கு வரும் இரண்டு பாடல்களில் இது ஒன்று.  

இதே போன்ற அர்த்தம் தொனிக்கும் இன்னொரு பாடல் பாலச்சந்தரின் இன்னொரு படத்தில் உண்டு.  அது எங்கள் எஸ் பி பி பாடிய பாடல்!  யூகித்திருப்பீர்கள்!  



மறுபடியும் கவியரசரைச் சொல்லவேண்டும்.  "கோடுபோட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே...  சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே..."  வாழ்க்கை என்பது ஒன்றுமே இல்லை, ஜஸ்ட் உடையும் பலூன்...  படாஃபட்! 

கவிதாவுக்கு ஏதாவது கவலை என்றால் படாஃபட்தான் கவலை தீர்க்கும் தோழி.  ஆனால் அவளின் கொள்கைகளை பார்த்துக் கேட்டு தாண்டிச் செல்வாளே தவிர கவிதாவுக்கு அதில் சம்மதமில்லை.  அவள் வழி தனி,  இவள் வழி தனி!

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்..
பந்தம் என்பது சிலந்திவலை 
பாசம் என்பது பெருங்கவலை 
சொந்தம் என்பது சந்தையடி 
இதில் சுற்றம் என்பது மந்தையடி 

செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா 
சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா 
கொக்கைப்பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை 
கொத்தும்போது கொத்திக் கொண்டு போகவேண்டும் நல்லதை 
படாஃபட்...

கோடுபோட்டு நிற்கச்சொன்னான் சீதை நிற்கவில்லையே 
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே 
கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி 
கொள்ளும்போது கொள்ளு தாண்டிச் செல்லும்போது செல்லடி 
படாஃபட் 

காதல்போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை 
காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை 
பங்குனிக்குப் பின்பு என்ன ஐயமின்றி சித்திரை 
பார்ப்பதெல்லாம் பார்க்கவேண்டும் பழமை ஒரு கண்திரை 
படாஃபட்..


 

 கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலைவிட அதிகமுறை ஒளிபரப்பாகும் பாடல் இனி வரும் பாடல்.  கே ஜே யேசுதாஸ் குரலில் தெய்வம் தந்த வீடு...   தத்துவத்துக்கு கவையரசருக்குக் கேட்கவா வேண்டும்?  ஏற்கெனவே இதில் இன்னும் மூன்று பாடல்களும் அந்த வகையிலேயே மிளிர்பவைதான்.  இது இன்னும் ஸ்பெஷலாக, முழுக்க முழுக்க தத்துவம்.



பொறுப்பில்லாத அண்ணன்..  கண்டித்து வெளியேற்றும் தங்கை சிடுசிடு கவிதா..  தவிக்கும் அண்ணி, தடுமாறும் தாய்...   ரகசியமாக நள்ளிரவில் சோறு திருடும் இந்தக் குழு!  கண்டு கண்டிக்கும் கவிதா..   பதிலாக வருகிறது அண்ணன் எனும் குடிகாரனிடமிருந்து, யேசுதாஸ் குரலில் எம் எஸ் வி இசையில் கவியரசரின் வரிகள்...



யேசுதாஸின் கணீரென்ற, அழகான ஹம்மிங்குடன் தொடங்கும் பாடல்..  'ஞானப்பெண்ணே' என்பதில் 'பெண்ணே' என்பதை 'பென்னே' என்று பாடுவார்!

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா - இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன
அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம் உன்
மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன இதில்
தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு...  

83 கருத்துகள்:

  1. அன்பு ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் என்றும் வளமுடன் நலமுடன் இருக்க
    பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா...   வாங்க...  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. ஃபடாஃபட் மகிழ்ச்சியாக பாடும் பாட்டையும் வைத்திருக்கலாமே.

    பாவம் அந்தப் பெண்.
    எஸ்பிபி பாடியிருக்கிறாரா. எந்தப் படம்.

    சொல்லத்தான் நினைக்கிறேன் படமோ.
    கல்யாணம் கச்சேரி... பாட்டா,?

    மிமிக்ரி ஸ்ரீனிவாசன் பற்றிப் படிக்கப் போனால் லாகின்
    செய்யச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகப்பாடல் இணைத்திருக்கிறேன் என்று அறியவில்லை.  இப்போது சாதாரணப் பாடலை இணைத்து விட்டேன்மா...   முந்தைய பாடலை நீக்கத் தெரியவில்லை!!!

      நீக்கு
    2. // மிமிக்ரி ஸ்ரீனிவாசன் பற்றிப் படிக்கப் போனால் லாகின்
      செய்யச் சொல்கிறது. //

      ஆம்...    இப்போது அது ஒரு படுத்தல். நான் லாகின் செய்திருக்கிறேன் என்பதால் எனக்கு ஓபன் ஆகிறது.

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம். நானும் இந்தத் தப்பை செய்கிறேன்.
      சிலசமயம் இப்படி ஆகிறது.

      இப்போது மகிழ்வாகப் பாடுவதும் வந்துவிட்டது.
      நன்றி ஸ்ரீராம் கோட்டுக்குள் வாழாத பெண்.
      என்ன பயன் பெற்றார்.
      கோடு போட்டு வாழ்ந்த சுஜாதா என்ன பயன் பெற்றார்.
      புரியவில்லை.

      நீக்கு
    4. நான் இந்த சினிமாவில. அவள் ஒரு கவிதை கவிதாவைச் சொன்னேன். சொல்கிறேன் மா. சுஜாதா எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் இருந்தார். இன்னும்அவர் கணவர் அங்குதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன் மா.

      நீக்கு
    5. படாபட் தற்கொலை செய்துகொண்டார் என்று நினைவு.  சுஜாதா கணவர் ஜெய்சங்கர் ஊறுகாய் பிசினஸ் செய்து வந்ததாய் நினைவு!

      நீக்கு
    6. சுஜாதாவின் கணவர் பெயர் ஜெயகர்.

      நீக்கு
    7. ஹா...  ஹா...  ஹா...   நான் ஜெயகர் என்றுதான் டைப் அடித்தேன்.  அது முதல் ஆப்ஷன் ஜெய்சங்கர் என்று தந்திருக்கிறது.  பார்க்காமல் வைத்து விட்டேன்!

      நீக்கு
    8. ஓ, சரி ரேவதி! நானும் நினைச்சேன், சுஜாதா கணவர் பெயர் மராட்டி வாடை அடிக்குமேனு! ஃபடாஃபட் எம்.ஜி.ஆரின் சகோதரர் மகனைக் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள். ஃபடாஃபட் தூக்கில் தொங்கினார். :( நல்ல நடிகை. சாவித்திரி எல்லாம் ஒண்ணுமே இல்லை. ஆறு முதல் அறுபது வரை, முள்ளும் மலரும் ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக வந்து அசத்துவார். என்னைப் பொறுத்தவரை ரஜினிக்கு அவர் தான் சரியான ஜோடியாக (படங்களில்) இருந்தார்.

      நீக்கு
    9. உண்மைதான் கீதாமா. எனக்கு மிகப் பிடித்த நடிகை. என்ன சுறு சுறு பட்டாசு!!!!!

      நீக்கு
  3. /////////செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா
    சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா
    கொக்கைப்பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
    கொத்தும்போது கொத்திக் கொண்டு போகவேண்டும் நல்லதை //////////////////////

    தனக்காகவே பாடிக்கொண்டாரோ.
    சூழ்னிலைக்கேற்றபடி பாடல் இயற்றும் கவிஞர் திறனை எப்படிச் சொல்வது!!!!
    இது என்ன ஞானம். அற்புதமான வரிகள் திரைப்படம் முழுவதும் விரவி
    இருக்கின்றது.

    ///////நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா இல்லை
    என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா.///

    இந்தப் பாடலும் எத்தனை ஆயிரம் தடவை கேட்டிருப்போமோ.
    இருந்தும் இந்தத் தத்துவங்கள் உரைக்கும் நீதி
    இன்னும் அப்படியே தான். மாற ஏது வழி.?
    படம் முழுவதும் இழையோடும் சோகம், கையால்
    ஆகாத்தனம், எல்லாமே சமூகத்தின் அடிப்படை.

    மீறி வென்றவர்கள் சிலரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியரசர் இந்தப் பாடல்களில் விளையாடி இருக்கிறார்.  அதுவும் 'அடி என்னடி உலகம்' பாடலில் தூள் கிளப்பி இருக்கிறார்!

      நீக்கு
  4. சுஜாதாவின் நடிப்பு மிக மிக நேர்த்தி.
    பாலச்சந்தர் சார் இன்னும் சந்தோஷமான படங்களை
    எடுத்திருக்கலாம்.
    இதே போல வாழ்ந்து மறைந்த பெண்களும்,
    இந்த படாஃபட் போன்ற பெண் தற்கொலை செய்ததும் மனதில்
    வந்து போகிறது.
    அவர்களோடு சம்பந்தப் பட்ட ஆண்கள்
    பாதிக்கப் படவே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
    நல்ல பாடல்கள் ஸ்ரீராம் நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..அவர்களோடு சம்பந்தப் பட்ட ஆண்கள்
      பாதிக்கப் படவே இல்லை என்பதுதான் நிதர்சனம்.//

      'அவர்கள் பாதிக்கப்படுவதற்கு’ இன்னும் காலம் வரவில்லை என்று அர்த்தம்.

      நீக்கு
    2. பாதிக்கப்படுவதற்கு காலம் வரும் முன்பு அவர்கள் காலம் முடிந்து விடும்!

      நீக்கு
    3. ஶ்ரீதரோட கடைசித்தமிழ்ப் படத்தில் சுஜாதா நன்றாக நடித்திருப்பார், அதில் திரைப்பட நடிகையாக வருவார். குடும்பப் பெண்ணாக இருந்தவர் தற்செயலாக ஓர் விளம்பரத்தில் நடிக்கப் போகத் திரைப்பட வாய்ப்பு வர குடும்பத்தைப் பிரிந்து தனியாக வாழ்வார். தன் மகள் எனத் தெரிந்தும் மகளைக் கொஞ்ச முடியாமல் தவிப்பார். இளவரசி தான் அவர் மகளாக வருவார். ராஜேஷ் தான் கணவன் என நினைக்கிறேன்.நல்ல கதைக்கரு, நல்ல நடிப்பு எல்லாம் இருந்தும் படம் வெற்றி பெறவில்லை. படத்தின் பெயர் மறந்துவிட்டது. இதய தெய்வமோ, ஆலய தெய்வமோ தெரியலை!

      நீக்கு
    4. ஸ்ரீதர் பின்னாளில் இயக்கிய பல படங்களை நான் அறிந்தது கூட இல்லை!

      நீக்கு
    5. வாசந்தியின் ஒரு நாவலைத் தழுவி, சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ்(?) ஆகியவர்களை வைத்தும் ஒரு படம் எடுத்திருந்தார். திருமணமான ஜெயஸ்ரீக்கு விபத்தில் எல்லாம் மறந்து போய் தனக்கு மருத்துவம் செய்த சிவகுமாரையே காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள இருப்பார். கடைசியில் கிளைமாக்ஸ்! வெள்ளித்திரையில் பாருங்கள்! இஃகி,இஃகி,இஃகி, உங்க வீட்டு யூ ட்யூபில் பார்த்துக்கொள்ளுங்கள். படம் பெயரெல்லாம் தெரியாது. ஆனால் கவிதைத் தனமான பெயர். :)))))))) ஜெமினி பெண் ஜிஜியை வைத்தும் ஓர் படம். ஜிஜி அதில் அறிமுகம். கார்த்திக்(முத்துராமன் பிள்ளை) கதாநாயகர்! எல்லாப் படங்களுமே ஸ்ரீதருக்குப் பின்னாட்களில் சொதப்பி விட்டன.

      நீக்கு
    6. வாஸந்தி நாவல் படித்திருக்கிறேன்.  மாருதி ஓவியம்.  படம் பார்க்கவில்லை.  கவிதை பாடும் அலைகள் என்று நினைவு.  கார்த்திக் ஜீஜி நடித்த படம் நினைவெல்லாம் நித்யா.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை, மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். வரப்போகும் தீபாவளியில் இருந்து அனைவர் வாழ்க்கையிலும் உலக மக்கள் வாழ்க்கையிலும் தொல்லைகள் நீங்கி சுகமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. இந்தப் படம், பாடல்கள் எல்லாமே பல முறை கேட்டவை. நல்லதொரு பகிர்வு. சமூகத்தின் மறைக்கப்பட்ட பக்கத்தை முதல் முதல் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் சத்யஜித் ரே, "பதேர் பாஞ்சாலி" மூலமாக. அதற்கும் விமரிசனங்கள் உண்டு. அதைத் தனியாகப் பார்த்துக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட அந்தப் பாணியில் எடுப்பதாக நினைத்துக் கொண்டு பாலசந்தர் எடுத்த படங்கள் தனி ரகம். சமூகம் முன்னேறியதா என்றால் இல்லை. அவர் படங்களைப் பார்த்து இன்னமும் மோசமாக ஆனது தான் மிச்சம்! அதிலும் வக்கிரமான காதல் தான் இவர் அதிகம் காட்டியவை! இன்றைய அவல நிலைக்கு அவர் படங்களும் ஒரு காரணமோ என நினைக்கத் தோன்றுகிறது. பாலசந்தர் ரசிகர்கள் வந்து மொத்தும் முன்னர் ஓட்டமாய் ஓடிடறேன். நன்றி. வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலச்சந்தர் படம் என்ற தரம் கீழே இறங்க ஆரம்பித்தது அரங்கேற்றம் படத்திலிருந்து.

      நீக்கு
    2. எதிர்மறையில் சிந்தித்தால் அறிவுஜீவி ஆகி விடுகிறார்கள்!

      நீக்கு
  7. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    நலமே வாழ்க என்றென்றும்...

    பதிலளிநீக்கு
  8. தொடர்ந்து அவள் ஒரு தொடர்கதை...மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. இனிய பாடல்களுடன் அழகான பதிவு..

    இந்தத் திரைப்படம் வெளியானதும் பரபரப்பான பேச்சுக்களும் விமர்சனங்களும் நண்பர்களிடத்தில்...

    நானெல்லாம் - அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற ரகம்...

    ஆனாலும் இன்றுவரை பார்க்கவில்லை...

    தெய்வம் தந்த வீடு - பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்பதில் கணக்கு ஏதும் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆனாலும் இன்றுவரை பார்க்கவில்லை...// ஆச்சரியமாக இருக்கு! ஆனால், இந்தப் படத்தை அந்தக் கால கட்டத்தில் மட்டுமே பார்த்தால் ரசிக்கும். இந்தக் காலத்துக்கு அவ்வளவா எடுபடாது.

      நீக்கு
    2. இந்தப் படத்துக்கு என்னை என் அப்பா அழைத்துச் சென்றார்!  தஞ்சாவூர் அருள் தியேட்டர் என்று ஞாபகம்!  கேஜிஜி சொல்லி இருப்பதுபோல அந்தக் கால கட்டத்தில் மட்டுமே பார்த்தால் ரசிக்கும்.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. இன்றைய பாடல்கள் அருமை. சோகம் இழையோடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   சோகமில்லை!  தத்துவ ரசம் பிழி பிழி  என்று பிழியப்பட்டுள்ளது!

      நீக்கு
  12. அடி என்னடி உலகம்.. - எனக்கு பிடித்தது. அடுத்த பாட்டை ரசித்ததில்லை.
    படம் பார்த்ததில்லை. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் மட்டுமே ஜாஸ்தியா ஒன்னும் புரியா வயதில் கேட்டிருக்கிறேன். வார்த்தைகளைப் பூரணமாக இப்போதுதான் பார்க்கிறேன். கண்ணதாசன் பெண்மனதின் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து, ஆழ்ந்து, அனுபவித்து எழுதியிருக்கிறார். இத்தகைய வரிகள் வேறொரு கவிஞனிடமிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. ஈஸ்வரி அவர் வார்த்தைக்கேற்ற குரல். ஃபடாஃபட் (Fatafat) பொருத்தமான பாடல் நாயகி. சுஜாதாவையும் ஃபடாஃபட்டையும் இந்தப் படத்தில் கொண்டுவந்தததற்காக கேபி-யைப் பாராட்டலாம்.

    அது சரி, அசட்டுக் கமல் அங்கே? இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு ஒரு வேலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...   எல் ஆர் ஈஸ்வரியின் குரலுக்கென்றே மெல்லிசை மன்னர் தனியாக டியூன் போட்டுக் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.  நிறைய அருமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

      நீக்கு
  13. ஸ்ரீராம் இரண்டுமே மிகவும் பிடித்த பாட்டு. நிறைய கேட்டிருக்கிறேன்

    எல் ஆர் ஈஸ்வரி என்ன ஒரு எனர்ஜி பாட்டுல...குரலே தனிக்குரல்.

    அடி என்னடி உலகம் பாட்டு நல்ல ராகம். தர்மவதியா ஹேமவதியா சிவரஞ்சனியா என்று குழப்பம் வந்தது. ஆனால் ஹேமவதி என்று தோன்றுது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படாஃபட் பாத்திரத்தைப் பொறுத்தவரை, அந்தப்படத்தில் அவர் ஓர் 'அதர்மவதி!'

      நீக்கு
    2. ஹா..  ஹா...  ஹா..  கேஜிஜி!

      வாங்க கீதா...   நல்வரவு.  இவ்வளவு நாள் ராகம் சொல்ல ஆள் இல்லாமல் போர் அடித்தது!  நான் பாட்டுக்கு இஷ்டத்துக்கு ராகம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  இனி அது முடியாது!

      நீக்கு
    3. படாஃபட் பாத்திரத்தைப் பொறுத்தவரை, அந்தப்படத்தில் அவர் ஓர் 'அதர்மவதி!'//

      ஹா ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா!!

      ஸ்ரீராம், அதெல்லாம் ஒன்றுமில்லை நீங்களும் சொல்லலாமே! நானும் கத்துக்குட்டிதான்.

      கீதா

      நீக்கு
  14. கவியரசரின் வரிகள் அசாத்தியமான வரிகள், வரிகள், இசை, பாடியவர்கள் என்று எல்லாமே தூள் கிளப்புபவை.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அனைத்து பாடல்களையும் பகிர்ந்துள்ளேன்... அட்டகாசமான பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  16. பாலச்சந்தர் அந்த நாயகி கவிதாவின் பாத்திரப்படைப்பை சரியாக வார்த்தெடுக்கவில்லை என்பது என் அபிப்ராயம். திரு. எம்.எஸ்.பெருமாள் மூலக்கதையில் அந்தப் பெண் மீது வாசிப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படுகிற மாதிரி எழுதியிருப்பார். அந்தக் குடும்பத்தில் அலுவலக வேலைக்குச் சென்று சம்பாதித்து வரும் ஒரே பெண் என்ற திமிர்த்தனத்தை கொஞ்சம் அதிகமாகவே காட்சியமைப்பில் காட்டியிருப்பார். சொல்லப்போனால் அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டு தான் இருப்பார்கள் பெற்ற தாய் எதிரே நிற்க ஈஸிச்சேரில் கால் தூக்கி அமர்ந்தபடி அமர்த்தலாக தாயுடன் விவாதம் செய்கிற மாதிரியான காட்சிகளைப் பார்க்கையில் வேண்டுமென்றே தான் பாலசந்தர் அப்படி அந்த பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் என்று தோன்றும். சொந்த வாழ்க்கையில் சில பொழுதுகளில் தனக்கிருந்த குணாம்சங்களை அந்தப் பாத்திரத்தின் மேல் ஏற்றிச் சொல்லியிருக்கிறார் என்று தெளிவாக உணரலாம். அந்நாளைய கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் அடிப்பட்ட இளம் வயது ஆண்கள் இதை நன்றாகவே உணர்வார்கள்.

    இதனாலேயே கண்ணதாசனின் 'தெய்வம் தந்த வீடு' பாடல் அந்த கதை நாயகிக்கு சவுக்கடி கொடுக்கிற பாடல் போலவே அந்த நாட்களில் நான் உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சொந்த வாழ்க்கையில் சில பொழுதுகளில் தனக்கிருந்த குணாம்சங்களை அந்தப் பாத்திரத்தின் மேல் ஏற்றிச் சொல்லியிருக்கிறார் என்று தெளிவாக உணரலாம். //

      எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.   அப்படி இருக்கலாம் என்பது நமது கற்பனையாக இருக்கலாம்.

      நீக்கு
  17. அந்தக் குடும்பத்தில் அலுவலக வேலைக்குச் சென்று சம்பாதித்து வரும் ஒரே பெண் என்ற திமிர்த்தனத்தை கொஞ்சம் அதிகமாகவே பாலசந்தர் காட்சியமைப்பில் காட்டியிருப்பார்.--
    என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.  சற்றே அதிகபப்டியாகக் காட்டுவதுதானே சினிமாக்களின்  இலக்கணம்!

      நீக்கு
  18. தனது புதுமைப்பெண் படத்தில் கிட்டத்தட்ட இதே மாதிரியான ஆனால் வேறுபட்ட சிக்கல் சூழ்ந்த கதை நாயகியின் பாத்திரப்படைப்பை பாரதிராஜா மிக வெற்றிகரமாக ஹேண்டில் பண்ணியிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுமைப் பெண் படத்தில் ஒரு சாதுவான பெண் எதிர்பாராமல் நிகழும் சூழ்ச்சியிலிருந்து தன் கணவனை மீட்பதற்கு போராடுவாள். அ.ஒ.தொ.வில் வீட்டில் இருக்கும் யாருக்கும் பொறுப்பு இருக்காது. அப்படிப்பட்ட குடும்பங்களில் பொறுப்பை ஏற்றுக் கொள்பவர்கள் இப்படி கடுகடுவென்று இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆண்கள் அப்படி இருப்பது பெரிதாக இகழப் படுவதில்லை, மாறாக பாவம் குடும்ப பாரத்தை சுமக்கிறான் என்று பரிதாபத்தை வேறு சம்பாதித்துக் கொள்வார்கள். பெண்கள் அப்படி இருந்தால் சகிக்க முடியவில்லை.

      நீக்கு
    2. காட்சி அமைப்பை இவ்வளவு விவரமாகச் சொல்லியும் ஏதோ கடுகடுப்பைப் பற்றிச் சொல்கிறீங்களே!

      நீக்கு
    3. புதுமைப்பெண் கதையும், காட்சி அமைப்பும் வேறு என்று நினைக்கிறேன்.   சூழ்நிலையும் வேறு.

      நீக்கு
  19. வணக்கம் நண்பர்களே. வீட்டில் விசேஷம் இருந்ததால் மூன்று நாட்களாக வர முடியவில்லை. அப்படியா? நீங்கள் கேட்பது என் காதில் விழவில்லை.
    நேற்று என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கள் பானுமதி .
      உங்கள் மகளுக்கும், பேத்திக்கும் வாழ்த்துகள்
      வாழ்க வளமுடன்
      வாழ்க நலமுடன்.

      நீக்கு
    2. வணக்கம் பானுமதி சகோதரி

      தங்களுக்கு பேத்தி பிறந்திருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தாயும் சேயும் நலமுடன் பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வாழ்த்துகள் பானு பாட்டி...   மன்னிக்கவும் பானு அக்கா.

      நீக்கு
    4. @ Banumathi, இரண்டாம் முறையாகப் பாட்டி ஆகி இருப்பதற்கு வாழ்த்துகள். அடுத்துப் பேரன் பிறக்கவும் முன் கூட்டிய வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
  20. மிமிக்ரி ஸ்ரீனிவாசன் பற்றிப் படிக்கப் போனால் லாகின்
    செய்யச் சொல்கிறது அதனால் படிக்கவில்லை.
    பாடல்கள் பிடித்த பாடல். கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா!   முடிந்தால் மிமிக்ரி சீனிவாசனின் பேட்டியை அப்புறம் ஒரு வியாழனில்  பகிர்கிறேன்!

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் குறித்த தகவல்கள் நன்று. பகிர்ந்த இரு பாடல்களுமே இனிமையானவை. அடிக்கடி கேட்டு ரசித்தவை. தத்துவப் பாடல் திரு.யேசுதாஸ் அவர்களின் குரல் வளத்தில் கருத்துக்களுடன் நன்றாக இருக்கும்.

    எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும் இனிமை. அவர் பாடிய பாடல்கள் என்றுமே அவருக்கு பெயர் வாங்கி தந்தவைதான்.

    /இதே போன்ற அர்த்தம் தொனிக்கும் இன்னொரு பாடல் பாலச்சந்தரின் இன்னொரு படத்தில் உண்டு. அது எங்கள் எஸ் பி பி பாடிய பாடல்!. /

    அது "தப்பு தாளங்கள்" படத்தில் எஸ். பி. பி பாடிய"என்னடா பொல்லாத வாழ்க்கை." பாடல் என நினைக்கிறேன்.சரியா?இந்தப்பாடலும் அவர் குரலில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    இரண்டு பாடல்களையும் இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே கமலா அக்கா...   எஸ் பி பி பாட்டை மிக மிகச்சரியாகப் பிடித்து விட்டீர்கள்.  அதேதான்.  எஸ் ஆர் ஈஸ்வரி குரலும் ஸ்பெஷல்.  அவர் பாடல்களும் ஸ்பெஷல்.  நன்றி அக்கா.

      நீக்கு
    2. நன்றி சகோதரரே. "இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?" இந்த வரிகளை எஸ். பி.பி குரலிலும், ரஜினியின் நடிப்பிலும் அப்போது எத்தனை முறை ரசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருந்ததை பார்த்தவுடன் இந்தப் பாடல் நினைவுக்கு வந்து விட்டது.

      நீக்கு
  22. பாடல் வரிகள்,காலத்தால் அழியாதது,
    பார்த்து கேட்டு ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  23. படம் பார்த்திருக்கிறேன் நல்ல பாடல்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!