சனி, 7 நவம்பர், 2020

இ வா நே ம செ

 

ஏழை மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த தலைமை ஆசிரியர்


உடுப்பி: ஓய்வு பெற்ற நாளில், ஏழை மாணவியின் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சியூட்டும் வகையில், தலைமை ஆசிரியர் ஒருவர், தன் சொந்த பணத்தில் வீடு கட்டி கொடுத்த, நெகிழ்ச்சி சம்பவம் உடுப்பியில் நேற்று நடந்தது.

கர்நாடக மாநிலம், உடுப்பியின் நிட்டூர் அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் முரளி கடேகார். இவர், 32 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்றார். நேற்று(அக்., 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

பள்ளியிலிருந்து செல்வதற்கு முன், நயனா என்ற ஏழை மாணவியின் குடும்பத்தின் நிலைமை அறிந்து இன்ப அதிர்ச்சி வைத்தியம் அளிக்க நினைத்தார்.இதற்காக தன் சொந்த பணத்தில் அந்த மாணவி குடும்பத்துக்கு புதிய வீடு ஒன்றை கட்டி நேற்று காலை நேரில் வரவழைத்து சாவி வழங்கினார். பத்து ரூபாய் கடன் வழங்க யோசிக்கும் இந்த காலத்தில், புதிதாக வீடு ஒன்றை கட்டி கொடுத்து மாணவிக்கு பரிசளித்த தலைமை ஆசிரியரின் செயலுக்கு பலரும் பாராட்டுகின்றனர். வீட்டை பார்த்ததும் மாணவியின் குடும்பத்தினர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தன. ஆசிரியை ஆரத்தழுவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


latest tamil news

உடுப்பி அதமாரு மடத்தின் மடாதிபதி விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள், பா.ஜ., எம்.எல்.ஏ., ரகுபதி பட் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

==========


நடந்து முடிந்த நீட் தேர்வில் 508 மார்க்குகள் எடுத்த அரசு பள்ளி மாணவன் நரசிம்மனின் தாய் நாகலட்சுமி வீட்டு வேலை செய்பவர்

தனது மகனின் படிப்பிற்காக நகைகளை விற்றும்,கடன் வாங்கியும் படிக்க வைத்தவர் எப்படியும் தன் மகன் டாக்டராகிவிடுவான் என்ற கனவில் இருக்கிறார்.


சென்னை சூளைமேடு அருணாசலம் நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் ஆட்டோ ஒட்டுனர் இவரது மனைவி நாகலட்சுமி பல வீடுகளில் வேலை செய்துவருபவர்.

இவர்கள் இருவருமே அதிகம் படிக்காதவர்கள் என்பதால் தங்களது இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் நன்கு படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் இவர்களது ஒரே லட்சியம்.


அதிலும் மகன் நரசிம்மன் சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்ற தாகத்துடன் படித்தார்,கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தார்.

பிளஸ் டூவில் நல்ல மார்க்குகள் எடுத்த நிலையில் நீட் தேர்வு எழுதினார் ஆனால் அந்த வருடம் 220 வது இடத்தைத்தான் பெற்றார்.

சோர்ந்து போயிருந்த நரசிம்மனை உற்சாகப்படுத்தியது அவரது தாய் நாகலட்சுமிதான்.அம்மா நான் இருக்கேன் கவலைப்படாதே திரும்பவும் நீட் தேர்வு எழுதுப்பா என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்.

கோச்சிங் சென்டரில் சேர்ந்தால் நல்ல மார்க்குகள் வாங்கலாம் என்று வந்த ஆலோசனையின் பேரில் கோச்சிங் சென்டரில் சேர்ந்தார் அதற்கான கட்டணமாக ஒரு லட்ச ரூபாய்க்காக வீட்டில் இருந்த நகைகளை பாங்கில் அடமானம் வைத்தார் அதுவும் போதாது என்ற நிலையில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கினார்.

வாங்கிய கடனை அடைப்பதற்காக கூடுதலாக பல வீடுகளில் கூட்டிப் பெருக்குவது உள்ளீட்ட வேலைகளை செய்தார் அப்பா வெங்கடேசனும் வீட்டிற்கே வராமல் விடிய விடிய ஆட்டோ ஒட்டினார்.

பெற்றோர்களின் சிரமத்தை குறைப்பதற்காக நரசிம்மனும் மருந்துக் கடையில் பகுதி நேர வேலை பார்த்தார்.

ஒரு வருடம் நீட் தேர்விற்காக கடுமையாக படித்தார் இரவு முழுவதும் துாங்காமல் கூட படிப்பார் இவரது படிப்பிற்கு இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக அந்த சின்ன வீட்டில் இருந்த ஒரே சந்தோஷமான டி.வி,யைக் கூட யாரும் பார்க்காமல் மொத்த குடும்பத்தினரும் ஒத்துழைத்தனர்.ஒரு வருடம் படிப்பு படிப்பு என்று மட்டுமே நரசிம்மன் இருந்துள்ளார்

இதன் விளைவு 508 மார்க்குகள் எடுத்துள்ளார் இந்த மதிப்பெண்ணிற்கு மருத்துவக்கல்லுாரியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடும் சேர்ந்துள்ளதால் சீட் கிடைப்பது உறுதி என்ற நிலை உள்ளது.

இதன் காரணமாக உழைப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அந்த குடும்பத்தில் சந்தோஷம் பூத்துள்ளது அதிலும் தாய் நாகலட்சுமியின் கண்களில் ஆனந்த கண்ணீர் என் மகன் டாக்டராகி ஏழை பாழைகளுக்கு எல்லாம் நல்லா வைத்தியம் பார்ப்பேன் என்றார் ஆனந்தகண்ணீருடன்.

மாணவர் நரசிம்மனிடம் பேசுவதற்கான எண்:6379954104.

-எல்.முருகராஜ்.

========

33 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. ஏழை மாணவிக்கு வீடு கட்டித் தந்த ஆசிரியர்
    மனிதருள் மாணிக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I will sing for you என்று அவருக்காக நாம் பாடி விடுவோம்!

      நீக்கு
    2. ஓ!... புரிகிறது.. புரிகிறது.. ஆனால்,
      அந்தப்படம் தான் ஓடவில்லையே!.

      அது படுதோல்விப் படங்களுள் ஒன்று..

      நீக்கு
    3. மற்றவருக்காகப் பாடும்போது தோல்வி விரட்டுகிறதோ என்னவோ..?

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. கர்நாடகத்தில் அருமையான ஆசிரியர் எனில் இங்கே தமிழ்நாட்டில் நம்பிக்கை ஊட்டும் அரசுப் பள்ளி மாணவன், கூடவே குழந்தைகளுக்கு ஆதரவான பெற்றோர்கள். வீட்டு வேலை செய்தாலும் ஆட்டோ ஓட்டினாலும் அதைக் குழந்தைகள் படிப்புக்காகச் செலவழிக்கும் இத்தகைய பெற்றோர்கள் இருந்தால் தமிழகத்து மாணவர்கள் அனைவருமே நல்வழியில் செல்ல முடியும். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    சனிக்கிழமையின் நேர்மறை நற்செய்திகளுக்கு இக நன்றி.

    வீடு கட்டிக் கொடுப்பது எத்தனை பெரிய விஷயம்.!!!!!!
    அந்த நல்ல ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
    அந்தப் பெண்ணும் நல்லபடியாக மேலே படித்துப்
    பெற்றோரை உயர்த்த வேண்டும்.

    நம் தமிழ்னாட்டுப் பெற்றோர்களின் பெருமை எப்பொழுதும் உயர்வுதான்.

    இந்த ஏழ்மை நிலையில் மனம் தளராமல் படித்து
    நீட் தேர்வும் தேர்ந்து விட்டார் மகன்.
    அவனை இத்தனை தூரம் உயர்த்திய பெற்றோர் மகிழ
    அந்தப் பையன் நல்ல மருத்துவராகி
    மற்றவரையும் வாழ வைக்க வேண்டும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  இவர்களை பாராட்டி வாழ்த்துவோம்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. தன் உழைப்பால் சேர்ந்த பணத்தைக் கொண்டு தான் வேலை பார்த்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிக்கு வீடு கட்டித் தந்த ஆசிரியரின் பெருந்தன்மையான செயல் வியக்க வைக்கிறது. அவரின் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்.

    இரண்டாவது செய்தியும் மகிழ்ச்சி தந்தது. கல்விக்கு முதலிடம் தந்து கடுமையான கவனத்துடன் விரும்பி படிக்கும் அந்த மாணவர் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் எண்ணப்படி மருத்துவராகி சிறந்த முறையில் வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவரின் தாய், தந்தையரின் நல்ல மனதுக்கும் வாழ்த்துவோம். பாராட்டுவோம்.

    இன்றைய இரு செய்திகளும் மன நிறைவை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அணைவருக்கும் காலை வணக்கம்.
    இரு மகிழ்வூட்டும் ஊக்கமூட்டும் தகவல்கள். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  9. மனிதம் இன்னும் அங்கிங்கு சற்று உயிர்புடன் இருக்கிறது.

    வாழ்க நல்ல மனங்கள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான நேர்மறை செய்திகள்.

    ஆசிரியரின் நல்ல மனம் வாழ்க !
    ஏழை மாணவன் மருத்துவாராகி அவர் பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும்.
    மாணவனுக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்களுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும், மாணவனுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. போற்றத்தக்கவர்களைப் பற்றிய அரிய பதிவு.

    பதிலளிநீக்கு
  12. நேர்மறைச் செய்திகள் சந்தோஷம் தருகின்றன

    பதிலளிநீக்கு
  13. நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்... தாய் நாகலட்சுமி அவர்களுக்கு வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  14. நல் உள்ளங்களுக்கு ,அயராத உளைப்பாளிகளுக்கு வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!