வெள்ளி, 21 ஏப்ரல், 2023

வெள்ளி வீடியோ : வானும் ந(ம)தியும் மாறாமல் இருந்தால் நானும் அவளும் நீங்காமல் இருப்போம்...

தமிழ் நம்பியின் பாடல்.  இசை TMS ஆகவே இருக்கலாம்.  அல்லது குன்னக்குடி வைத்தியநாதன்?  தெரியவில்லை. 

பாவம் பாடுபட்ட கலைஞர்கள்.  தங்கள் பெயரை இங்கு சொல்லிக்கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் நமக்கு இது போன்ற இனிமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்
நடுவில் மனிதன் வாழுகிறான்
வீணில் மனம் தடுமாறுகிறான்
இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்

மனம் போல் மாங்கல்யம் என்பார்
தன்மனமே சகலமும் என்பார்
மனம் போல் மாங்கல்யம் என்பார்
தன்மனமே சகலமும் என்பார்
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்
இதயம் குலைந்து தவிக்கிறான்
இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்

அடிக்கும் அவன் கை அணைக்கும்
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்
அடிக்கும் அவன் கை அணைக்கும்
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்

தன்னை அடித்தால் பழிக்கிறான்
இறைவா இறைவா

அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்

கற்றது கைமண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கற்றது கைமண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்
யாவும் அருள்வான் நம் இறைவன்
இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்
வீணில் மனம் தடுமாறுகிறான்
இறைவா இறைவா இறைவா இறைவா

===================================================================================

"பாட்டுக்காக வேணும்னா இந்தப் படம் பார்க்கலாம்..  இல்லன்னா படம் வேஸ்ட்..  போர்"  என்று விகடன் விமர்சனம் எழுத, "இல்லை. இல்லை, பரவாயில்லை..  படம் பார்க்கலாம்" என்று கல்கி எழுத, எபப்டியோ 70 நாட்கள் ஓடிவிட்ட எம் ஜி ஆர் படம் நாடோடி.  

1966 ல் வெளிவந்த இந்தப் படத்தின் இயக்குனர் B R  பந்துலு.

பத்து பாடல்கள் படத்தில்!  அதில் ரிப்பீட் ஒன்று!  ஆறு பாடல்கள் கண்ணதாசனும், நான்கு பாடல்கள் வாலியும் எழுத, இசை எம் எஸ் விஸ்வநாதன்.

இன்றைய பாடலை கண்ணதாசன் எழுதி, TMS - சுசீலா பாடி இருக்கிறார்கள்.  "அற்றைத் திங்கள் அந்நிலவில்" பாடல், இந்தப் பாடலை எழுத கவிஞருக்கு உந்துதல் தந்திருக்கலாம்.

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ

பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே நீ பார்த்தாயே வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன்
அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

வானும் ந(ம)தியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்காமல் இருப்போம்

சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே
நீ சாட்சியடி வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்

45 கருத்துகள்:

  1. முதல் பாடல் நான் அதிகம் இரசித்த பாடல்.

    இரண்டாவதும் கேட்ட நல்ல பாடலே...

    பதிலளிநீக்கு
  2. 'வானும் நதியும் மாறாமல் இருந்தால்' -- ஆஹா.. என்ன அழகான வரிகள்!! எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் முழுவதுமே அருமையான வரிகள், அருமையான பாடல்.

      நீக்கு
  3. 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்'
    கபிலரின் நினைவுகள் மனத்தில் கவிகின்றன. அதைத் தொட்டு வள்ளல் பாரிமகளிர்-- அங்கவை, சங்கவை.
    என்ன துயரமான வாழ்க்கைச் சூழல்கள்;
    அதைத் தொட்டு ரஜினி நடித்த அது என்ன படம்? சிவாஜியா? சாலமன் பாப்பையாவை வைத்து நகைச்சுவை என்ற பெயரில்..

    பதிலளிநீக்கு
  4. கபிலர் என்றதும் கவுஞர் வைரமுத்துவின் திருமகனார் கவிஞர் கபிலனின் ஞாபகம் வந்ததையும் சொல்ல வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரமுத்துவுக்கு மதன் கார்க்கி என்றொரு மகன் உண்டு. நல்ல வரிகளைக் கொடுக்கும் படைப்பாளி.

      நீக்கு
    2. மாக்ஸிம் கார்க்கி --/அவரது ஒப்பற்ற படைப்பு 'தாய்'.

      நீக்கு
    3. //மாக்ஸிம்//

      முன்பு பெண்கள் அணியும் மாக்ஸி என்றொரு ஆடை இருந்ததது.  அதைப் போட்டுக் கொண்டு அவர்கள் வெளியே எல்லாம் கூட  வருவார்கள்.  கிட்டத்தட்ட நைட்டி போல இருக்கும்.  ஆனால் இடுப்பில் சுருக்கு போடா ஒரு முடிச்சு இருக்கும்.  நான் தினமும் பார்க்கும் பெண் அதை அணிந்து சைக்கிளில் செல்லும் காட்சி கண்முன்னே வருகிறது!

      நீக்கு
    4. ஆமாம், வலம்புரி ஜான் ஏன் நினைவுக்கு வருகிறார்?

      நீக்கு
    5. வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த பத்திரிகையின் பெயர் 'தாய்' என்பதால்.

      நீக்கு
  5. ஒன்றைத் தொட்டு ஒன்று என்ற இந்த சங்கிலி நினைப்புகள்-- கதைகள் எழுத எனக்கு வாசிப்பின் விளைவில் கிடைத்த வரம்.. நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வார்தையைக் கேட்டதுக்கு அதிலிருந்து என் நினைவுக்கு வரும் திரைப்படப் பாடல்களை சொல்லலாம். ​எனக்கும் இதுபோல நினைவுக்கு வரும். கபில என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு சித்தார்த்தர், மூப்பனார் என்று செல்லலாம். ஓரளவுக்கு போகலாம். ரொம்பப் போனால் பேசுபொருளிருந்து
      அர்த்தமில்லாத பயணமாகி விடும்.

      நீக்கு
    2. அப்ப்டிப் போவதை நம் தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்திக் கொள்வதில் தான் சாமர்த்தியம் இருக்கிறது. சுதந்திரம் மட்டுமில்லை சும்மா கிடைத்து விடாதது தான் எந்தத் திறமையும்.

      நீக்கு
    3. சுதந்திரம் என்றே பெயருடைய ஒருவரை நான் சந்தித்திருக்கிறேன்.  ஆட்டோ டிரைவர்.  என்னை ஆச்சர்யப்படுத்திய பெயர்.

      நீக்கு
    4. ஒன்றைத் தொட்டு ஒன்று என்ற இந்த சங்கிலி நினைப்புகள்-- கதைகள் எழுத எனக்கு வாசிப்பின் விளைவில் கிடைத்த வரம்.. நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு..

      ஒரு வார்தையைக் கேட்டதுக்கு அதிலிருந்து என் நினைவுக்கு வரும் திரைப்படப் பாடல்களை சொல்லலாம். ​நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு..இது தேரோட்டம் திரைப்படப் பாடல்

      நீக்கு
    5. அடடா...   மறந்து விட்ட ஒரு பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள்.  ஒருமுறை கேட்டு விடுகிறேன்!

      நீக்கு
  6. இரண்டு பாடல்களுக்குமே காணொளி தேவையில்லை.

    வரிகளைப் படிக்கப் படிக்க பாடல் மனதில் ஓடியது.

    வானும் மதியும் மாறாமல் இருந்தால் - அர்த்தமுள்ளது. வானும் ந்தியும் மாறாமலிருந்தால் - என்ன அர்த்தம்? சரியானதுபோலத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க.. வாழ்க..

      வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  8. அந்தத் தொகுப்பின் பாடல்கள் அனைத்துமே அருமையானவை..அதில் பல பாடல்களும் மனதில் பதிந்து விட்டவை...

    முருகன் அழகு எனில்
    முருகனைப் பற்றிய பாடல்களும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  கேட்கக்கேட்க திகட்டாதவை.  எதைப் பகிர்ந்தோம், எதைப் பகிரவில்லை என அவ்வப்போது குழப்பம் வந்து விடுகிறது!

      நீக்கு
  9. அன்றொரு நாள் இதே நிலவில்
    அவர் இருந்தார் அவர் இருந்தார்..

    மெல்லிய சோகத்துடன் கூடிய இனிமையான பாடல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகம் என்பது ராகத்தைப் பொறுத்து இருக்கலாம்.  இதற்குமேல் சோகமாக இதே பாடல் சோகவெர்ஷனிலும் இருக்கிறது!

      நீக்கு
    2. ஆமாம்...
      இன்னொரு பாடலும் இருக்கின்றது..

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள், கேட்டு ரசித்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வேறே ஏதோ எம்ஜார் படத்தைப் பார்க்கப் போயிட்டு இந்த நாடோடி படத்தைப் பார்த்துட்டு வந்தோம். மதுரை சென்ட்ரல் சினிமாவில்னு நினைக்கிறேன். பரவாயில்லை ரகம். சஸ்பென்ஸை முதலிலேயே போட்டு உடைத்துவிடுவார்கள். பாரதி மிக அழகாக இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ சிவாஜி படம் பார்க்கத்தான் போகமாட்டீர்கள்!  எம்ஜார் படம் பார்க்கப் போவீர்கள்!

      நீக்கு
    2. அதெல்லாம் இல்லையே! பள்ளி நாட்களிலேயே ஜிவாஜி படம் தான் அதிகம். வீரபாண்டியக்கட்ட பொம்மன், வ.உ.சியாக நடிச்சாரே அந்தப் படம், பாவமன்னிப்பு, ரத்தத் திலகம், சிவந்த மண், நெஞ்சிருக்கும்வரை, கலாட்டா கல்யாணம், எங்க மாமா, உயர்ந்த மனிதன், ராமன் எத்தனை ராமனடி, லக்ஷ்மி கல்யாணம், நீலவானம் என்று நிறையப் பார்த்திருக்கேன். இதிலே வீர பாண்டியக் கட்ட பொம்மன் தவிர்த்த மற்றப் படங்கள் எல்லாம் ஓசிப்பாஸ். திருவு விளையாடல், திருவருட்செல்வர், தில்லானா, திருமால் பெருமை, கந்தன் கருணைனு மற்றதெல்லாம் தனீஈஈஈஈ

      நீக்கு
  13. முதல் பாடல் தெரியாது. இரண்டாம் பாடல் நிறையக் கேட்டது. வேடிக்கை என்னன்னா, பாரதிக்குத் தங்கையாக வருவார் சரோஜா தேவி. சிப்புச் சிப்பா வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..  சில சமயம் அப்படி நேரும்.  படிக்காதவன் படத்தில் ரஜினிக்கு தம்பியாய் வரும் நடிகர் அப்படிதான்.

      நீக்கு
    2. ஆ.. முதல் பாடல் தெரியாதா? ஆ...

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    நேற்றைய இரு பாடல் பகிர்வும் அருமை. (நேற்று என்னால் வர இயலவில்லை) முதல் பாடல் கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன். இதுவும் பல திரைப்படங்களில் வரும் தத்துவ பாடல் போன்று உள்ளது.

    இரண்டாவது பாடல் நிறைய தடவை கேட்டுள்ளேன். இரண்டுமே "அன்று" என வருவதாக தேர்ந்தெடுத்த முறைக்கு வாழ்த்துகள். பாடல்கள் அன்றையதானாலும், இன்றும் சரி, என்றுமே சரி இனிமையானதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அப்படிதான் தெரிவு செய்தேன். நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  15. முதல் பாடல் ரொம்ப அழகான பாடல் கேட்டு ரசித்த பாடல் ஆனா பல பல வருஷங்களுக்குப் பிறகு இன்றுதான் கேட்கிறேன் ஸ்ரீராம். இறைவா இறைவாந்னு வரும் இடம் ரொம்ப நல்லா இருக்கும்

    அரசன் அன்றே செய்வான் இறைவன் நின்று செய்வான்னு சொல்வது போல பாடல் முதல் வரிகள்

    வரிகள் அருமை இல்லையா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அதில் எதிரொலி கேட்பது போல டி எம் எஸ் குரலும் அழகு. அவர் பாடலில் எந்த இறைவனையும் பெயரிட்டு சொல்லவில்லை பாருங்கள்.

      நீக்கு
  16. ரெண்டாவது பாட்டும் அருமையான பாட்டு. சீன் பார்க்காம பாட்டு கேட்டேன். சீன் மோசம்னு இல்லை ஆனா ரசிப்பதற்கு எதுவும் இல்லை அதில்!!!!

    அற்றைத் திங்கள் அந்நிலவில்…//

    இந்த வரி டக்குனு நறுமுகையே நறுமுகையே பாடலுக்குப் போய்டுச்சு...ஒரு நிமிஷம் கெதி கலந்துப் போச்சு!!!! கவிஞர் இந்தப்பாட்டை எப்படி கேட்டிருப்பார்னு!!! அப்புறம் ஓ சங்கப்பாடல் அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்!!

    வைமு அந்த வரிய அப்படியே எடுத்துப் போட்டிருக்காரு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா,,  ஹா..  ஹா..  கடைசியில் ஒரிஜினல்களை மறந்து விடுகிறோம்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!