செவ்வாய், 25 ஜூலை, 2023

சிறுகதை - ஒரு நாள்.. - துரை செல்வராஜூ -

 ஒரு நாள்.. 

துரை செல்வராஜூ 

*** *** ***

" நமஸ்காரம் அண்ணையா!.. "

அனந்து - சித்தூர் அனந்த ராம கிருஷ்ணா - எதிரில் நிற்கின்றான்..

எழுதிக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து நோக்கினேன்..

அனந்தையாவின் முகமெல்லாம் புன்னகை..

இருக்காதா பின்னே!.. ரெண்டு வருஷம் கழித்து ஊருக்குப் புறப்படுகின்றான்..  போன வாரம் தான் லீவு பேப்பர் எழுதி அனுப்பி வைத்தேன்... ஓக்கே ஆகி வந்து விட்டது..

அடடா... என்ன விவரம் என்று சொல்லாமல் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.. நீங்களும் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்..

வளைகுடா நாடு.. கேட்டரிங் நிறுவனம்... இதில் நான் ஸ்டோர் இன் சார்ஜ்.. ஸ்டோரில் வேலை செய்யும் இருவரில் இவன் ஒருவன்.. மற்றவன் நம்ம ராமநாதன்..


கல்யாணம் முடிந்த பதினைந்தாம் நாளில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தவன் - ரெண்டு வருஷம் கழித்து ஊருக்குப் புறப்படுகின்றான் 

கலியாணம் முடித்து விட்டு  இங்கு வந்த நாளில் இருந்து வாங்குகின்ற சம்பளத்தில் பாதியை புது மனைவிக்கு கடிதம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டியே
தீர்ப்பவன்..

மெல்ல பல்லைக் காட்டினான்..

" என்னடா?.. "

" அண்ணையா.. ஒக்க டின் பாலு!.. "

வளைகுடா நாடுகளில் - எடுபிடி, துப்புரவு - இந்த மாதிரியான வேலைகளுக்கு வருபவர்களுக்கு குறைவிலும் குறைவான சம்பளம்.. இவனுக்கும்  அதே.. 

குறைவான சம்பளம்.. சரி..  குறைவிலும் குறைவான சம்பளம் என்றால்?..

விசா ஸ்டாம்பிங், மெடிக்கல், என்று வேறு வேறு காரணம் காட்டி ரெண்டு வருட காலத்துக்கு இவனது சம்பளத்தில் கம்பெனி பிடித்துக் கொள்வது.. 

கம்பெனி விமான டிக்கெட் வழங்கியிருந்தாலும் உள்ளூர் ஏஜென்ட்  அதை அமுக்கி விட்டு இவனிடமே ஒன்றுக்கு இரண்டாக வசூல்  செய்திருப்பான்..

80/90 களில் வளைகுடா நாடுகளுக்கு ஆள் அனுப்பி வைக்கும் புரோக்கர்கள் ஆசை வார்த்தை பல கூறி பத்துக்கு நாலு பேரை அனுப்பி வைத்து விட்டு ஆடம்பர அடுக்கு மாடிகள் கட்டியதும் வயல் வெளிகளுக்கு வேக்காடு வைக்க ஆரம்பித்ததும் இப்படித் தான்..

வெறும் இருபது தினார் சம்பளத்துக்கு பத்து மணி நேரம் வேலை செய்து விட்டு குறைவிலும் குறைவான சம்பளம் என்றால் எப்படி இருக்கும்?..

பனையேறி விழுந்தவனை கிடா வந்து மிதித்தது என்பது போல சொற்ப சம்பளத்தைப் பார்த்து கலங்கி நிற்கும் மனதுக்கு இதமாக இருப்பது ஓவர்டைம் என்ற  ஒரு வார்த்தை.. இதற்குள்ளும்  கண்ணீரால் எழுதப் பெற்ற சரித்திரங்கள் கணக்கற்றவை.. 

பொதுவாக சமையல் கூடத்தில் வேலை என்றால் இந்நேரம் மூட்டு தேய்ந்து போயிருக்கும்.. 

மற்ற கடபுடா  மாதிரி இவன்  இல்லாததால் ஸ்டோரில் இழுத்துப் போட்டாயிற்று.. 

இவனும் ராமநாதனுமாக ஒவ்வொரு நாளும் காலையில் வெயிலோ குளிரோ சமையல் கூடத்துக்காக வருகின்ற ஆயிரம் கிலோ வரையான காய்களையும் பழங்களையும் கை பார்த்து எடுக்க வேண்டும்.. வேலை முடிந்த பிறகு  தான் காலைச் சாப்பாடு.. அதற்குப் பிறகு ஸ்டோரில் சின்னச் சின்ன வேலைகள்.. விளையாட்டு போல பொழுது போய் விடும்..

ஏதோ ஸ்டோரில் வேலை செய்வதால் ஒரு டின் பால் பவுடர் கேட்கிறான்.. வெளியில் வாங்குவது என்றால் அது ஒரு தனிச்செலவு.. அதுவும் தரமான ஐரோப்பிய பால் பவுடர் என்றால் விலையும் அதிகம்..  கம்பெனி ஸ்டோரில் இருந்து இப்படி அரசல் புரசலாகக் கிடைக்கும் போது யாருக்கும் சந்தோஷம் தான்..

" தர்றேன்... வேற?.. " 

" ம்... தோடா காஜூ.. " 

" அவ்வளவு தானா!.. "

" அவுர் ஏக் ஐட்டம்.. தோடா பாதாம்!.. "

" அதுதானே பார்த்தேன்...  காஜூ பாதாம் நஹியே து ஜிந்தகி நஹி டா!.. "

பெரிதாக சிரிப்பு அவனிடம்..

" அவன் இருக்கானே!.. " - என்றேன்..

" கோன்?.. "

" ராமநாதன்!.. "

" அவந்தான் சொல்லிச்சு.. அண்ணகாரு அச்சா ஆத்மி.. ன்னு.. "

" இது வேறயா!.. சரி..சரி.. ராகேஷ் டிரைவர் கிட்ட கொடுத்து விடுறேன்.. " - என்றதும் அவனுக்கு ரொம்பவும் சந்தோஷம்..

" தன்யவாத்.. அண்ணையா!.. " - என்றான் கை கூப்பியபடி..

" அண்ணையா.. "  - என்றவன், ' நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.. சாப்பாடு எடுத்து வரவா?.. '  - என்று சைகை காட்டினான்..

" இன்னைக்கு என்னடா லஞ்ச்?.. " 

" சிக்கன் பிரியாணி.. " 

" வேண்டாம்!.." - என்றபடி எழுந்தேன்..

உள்ளுக்குள் ஒரு குரல்.. 

" கடைத் தேங்காய்  வழிப் பிள்ளையாருக்கா?..  கம்பெனி சாமானை எடுத்துக்   கொடுக்கறியே.. இது நியாயமா?.. " 

நெஞ்சுக்குள்ளிருந்து ஒரு சத்தம்..

" நியாயம் இல்லை தான்.. நாலு பேருக்கு நல்லது ன்னா.." 

" போதும்.. போதும்.. வசனத்தை நிப்பாட்டு.. " 

மனசாட்சி தூங்கப் போய் விட்டது..

வேற வழியில்லை.. இது தப்பு தான்.. ஆனால் இங்கே இது ஒருவிதமான நியாயம்..  இவனுங்களோட  ஜோதியில நான் சேரலை.. ன்னா எனக்குத் தான்  கெட்ட பெயர்.. நான் தான் களவாணி.. அதுக்கு ஆமாம் போட நாலு பேர்.. 

சரி.. இது மேனேஜருக்குத் தெரியாதா?..

தெரியுமே!..  வாரத்துக்கு ரெண்டு தடவை ஸ்பெஷல் ஸ்வீட் வாங்கினதா அவனே டூப்ளிகேட் வவுச்சர் கொண்டு வந்து கொடுக்கறான்.. ' நானும் பொழச்சுக்கறேன்.. நீயும் பொழச்சுக்கோ.. ' - இது அவன் சொல்லியது தான்.. 

என்னவோ ஆற்றில வர்றது மணல் ல சொருகுது.. ன்னு போக வேண்டியது தான்.. 

செப் வருவார்.. வந்ததும் எல்லாவற்றுக்கும் அப்ரூவல் வாங்கணும்..  அவருக்கு ரெண்டு ஜூஸ் பாட்டில்  கொடுக்கணும்.. அவருக்கும் குறைவான சம்பளம்  என்பதால் இந்த விஷயத்தில் ஒன்றும் சொல்ல மாட்டார்..

ஜூஸ் குடித்தபடி கம்பெனியைத் திட்டுவார்..  திட்டி விட்டு அப்ரூவ் பண்ணி விடுவார்.. 

அந்நேரத்தில் இண்டர்காம் ஒலித்தது.. 

மானேஜர் தான்..

' விஷயம் வேறொன்றும் இல்லை..  உயர்நிலை அதிகாரிகள்  செக்கிங் வருகின்றார்கள்..  டேக் கேர்.. ' 

அவ்வளவு தான்...

எனக்குள் சற்றே பரபரப்பு.. ஸ்டோரை நோட்டமிட்டேன்... எல்லாம் சுத்தமாகவே இருக்கின்றன...  ஆனாலும் அவர்கள் வந்து பார்த்து விட்டுப் போகும் வரைக்கும் கொஞ்சம் பதற்றம்...

மறுபடியும் இண்டர்காம்..  

' கம்பெனி ஆள் ஸ்டாக செக்கிங் செய்வதற்கு வருகின்றான்..  '

இது கொஞ்சம் பிரச்னை... வழக்கமாக வருகின்ற பாலக்காட்டு ஹரி - நாட்டுக்குப் போய் இருக்கின்றார்.. புதிதாக யார் வருவது?.. தெரியவில்லை.. குடைச்சல்..

ஸ்டோர் வாசலிலேயே நின்றிருந்தேன்..

உயர்நிலை அதிகாரிகள் மூவர் வந்தனர்.. தூய வெள்ளை அங்கி, தலைத் துணி கயிறு.. கறுப்புக் கண்ணாடி.. 

மூவரில் ஒருவரை முன்னமே தெரியும்.. புன்னகை.. அரேபிய வணக்கத்துடன் நல்வரவு சொன்னேன்..

புன்னகையுடன் ஸ்டோரினுள் வந்தார்கள்.. சில்லர், பிரீஸர் என்று பார்த்தார்கள்..  அரிசி டிரம்மைத் திறந்து பார்த்து விட்டு - பால், ஜூஸ் பாக்கெட்களின் முடிவு தேதியை பரிசோதித்தார்கள்..

" தமாம்!.. "  ( நன்றாக இருக்கின்றது..) என்றபடி புறப்பட்டுச் சென்றார்கள்..

சில நிமிடங்களில் கம்பெனியின் ஆள்.. எகிப்தியன்.. கையில் பெப்சி டின்.. 

கோழி பிரியாணி தின்ற மகிழ்ச்சிப் புன்னகை முகத்தில் தெரிந்தது..

" ஹாய்.. ஸூலோனக்?.. " (எப்படி இருக்கிறாய்..)

ஸ்டோருக்குள் சுற்றி வந்தான்.. 

" எல்லாம் சரியாக இருக்கின்றதா?.. " 

" இருக்கின்றது!.. " 

நெஸ்கஃபே பாட்டில்களின் அருகில் நின்று கொண்டு என்னைப் பார்த்தான்..

புன்னகைத்தேன்..

" தேங்க்யூ.. " - என்றபடி பதிவேடுகளில் கையெழுத்து இட்டு விட்டு நெஸ்கஃபே பாட்டிலுடன் புறப்பட்டான்.. 

பின்னாலேயே டிரைவர் ராகேஷ் வந்து நின்றான்.. 

" அவனுக்கு ஒரு  பாக்ஸ் பெப்சி வேணுமாம்.. " 

" அவனுக்கா.. உனக்கா?.. "

" யே.. க்யா பாத் ஷில்பா பாய் ?.. " - என்றபடி சிரித்தான்..

" உதர் செக்யூரிட்டி ஹேயே னா!.. " 

" நான் பார்த்துக் கொள்கிறேன்.. "

சாப்பிட்டு விட்டு அனந்து வந்து கொண்டிருந்தான்..

அவனுக்கானவை எப்போது என்று அவனுக்குத் தெரியும்..

நாட்கள் நகர்ந்தன..  அந்த மாதத்தின் முடிவில் இருப்பு கணக்கிட்டபோது மாதாந்திர பயன்பாட்டுப் புள்ளி 38 ஆக இருந்தது... மேனேஜரிடம் எழுதிக் கொடுத்தேன்.. ரொம்பவும் மகிழ்ச்சி..

" கடவுளே!.. "  - என்றபடி நெஸ்கஃபே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டேன்..

***

55 கருத்துகள்:

  1. இயல்பான நடை.. வளைகுடா வாழ்க்கை.... தொழிலில் வேறு வழியில்லாத சமரசம். நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு அன்பின் நல்வரவு..

      பணியில் வேறு வழியில்லாத சமரசம்..

      வேறு வழி ஒன்றும் இல்லை..

      நீக்கு
  2. அளவில்லாமல் போட்ட சாப்பாட்டை, அளவுச் சாப்பாடாக்கி வேலையாட்கள் வயிற்றில் அடித்து கம்பெனிக்கு நம்ம ஆட்கள் பணம் சம்பாதித்துக் கொடுப்பாங்க, க்ளீனிங் கம்பெனிகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// வேலையாட்கள் வயிற்றில் அடிக்கும் கம்பெனிக்கு நம்ம ஆட்கள் பணம் சம்பாதித்து ///
      வேதனையான உண்மை..

      ஆனால் இங்கே பேரு மட்டும் பெரிதாக இருக்கும்!..

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. வளைகுடா வாழ்க்கையின் நிஜவாழ்க்கை.... பலருக்கும் இதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// வளைகுடா வாழ்க்கையின் நிஜவாழ்க்கை.. பலருக்கும் இதுதான்... ///

      உண்மை இதுதான்..

      அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக வாழ இறைவன் அருள வேண்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. நியாயம் தர்மம் என்பதை நாம் மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ளவர்களும் பின்பற்ற வேண்டும். அது இயலாத நிலை சில சமயங்களில் உருவாகி விடுகிறது.

    இப்போதைய காலகட்டத்தில் இந்த மாதிரி வேலைகளில் உள்ள தர்ம சங்கடங்கள் எப்படியென விளக்கமாகச் சொல்ல எனக்குத் தெரியாது. ஆனாலும், கதை மாந்தர் அண்ணைய்யா அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டேன்.

    நல்ல நடையுடன் கதையை அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதைக்கேற்ற ஓவியமும் அழகாக கணினி மூலமாக புகழ் பெறுகிறது. நல்லதொரு ஓவியத்தை தந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது விருப்பத்தையும் மீறி சில சமயம் வாழ்க்கை அமைந்து விடுகின்றது..

      கவியரசர் சொல்கின்றார்..

      இது தான் வாழ்க்கை
      இது தான் பயணம்
      என்பது யாருக்கும் தெரியாது!..

      எல்லாருமே சூழ்நிலைக் கைதிகளே..

      அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பரிதாபப்பட்டு எடுத்துக் கொடுத்து விட்டு செக்கிங் வரும் பொழுது மாட்டிக் கொள்கிற மாதிரி கதைக்காக 'கதை' பண்ணாமல் நிகழ் வாழ்க்கையில் நடப்பதை நடக்கிற மாதிரியே எழுதியது தான் கதைக் கான சிறப்பாகத் தெரிகிறது.

    வளைகுடா நாடுகள் விஷயங்கள் எனக்குத் தெரியாது. அச்சு அசலாக தமிழகத்தைப் பார்த்த மாதிரி இருந்தது.

    இயல்பான நடையில் நகர்ந்த கதை. வாழ்த்துக்கள் தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா..
      தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி..

      தங்களுக்கு எனது அன்பின் வணக்கம்..

      நீக்கு
    2. /// இயல்பான நடையில் நகர்ந்த கதை. வாழ்த்துக்கள் தம்பி..///

      அன்பின் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வளைகுடா நாட்டிலும்
      வளைவு நெளிவுகள் ஏராளம்..

      அங்கே வேலை செய்த போது
      உத்தமர்களாக ஒரு சிலரைக் கண்டிருக்கின்றேன்..

      நீக்கு
  10. அடடா... என்ன விவரம் என்று சொல்லாமல் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.. நீங்களும் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்..//

    ஹாஹாஹாஹா. அண்ணையா அடுத்து அதையும் சொல்லாமலா போகப் போறார்னு பார்த்துக் கொண்டே தானே இருக்கிறோம்!!!!!!!

    யதார்த்த, ஆனால் இதில் தர்மசங்கடங்களும் உண்டுதான். அதுவே வாழ்க்கையாகிப் போவதுதான். இப்படித்தான் பல இடங்களிலும் நடக்கிறது. நல்லகாலம் ஸ்டாக் பரிசொதனை மற்றும் கடைசியிலும் பயன்பாட்டுப் புள்ளி 38. மாட்டிக்கலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதார்த்தம்.. ஆனால் இதில் தர்மசங்கடங்களும் உண்டு. அதுவே வாழ்க்கையாகிப் போவது மிகவும் ஆபத்தானது..

      மகிழ்ச்சி.. நன்றி சகோ

      நீக்கு
  11. அனுபவங்கள் இல்லாததால் கடைசிப் பயன்பாட்டுப் புள்ளி 38 என்பதெல்லாம் புரியைவில்லை. இடையிடையே எடுத்துக் கொடுத்தது போக பயன்பாட்டிற்கும் போதுமானதாக இருந்ததா? இல்லை அட்ஜஸ்ட் செய்துவிடுவதா இப்படிக்காட்ட?

    அண்ணையாவுக்கு கடைசி வரை திக் திக் நு இருக்குமோ மனசு என்று பார்த்தால்...கடைசி வரி - ஹாஹாஹா

    //" கடவுளே!.. " - என்றபடி நெஸ்கஃபே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டேன்..//

    அண்ணையாவும் ஜோதியில் கலந்திட்டார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இடையிடையே எடுத்துக் கொடுத்தது போக பயன்பாட்டிற்கும் போதுமானதாக இருந்ததா? இல்லை அட்ஜஸ்ட் செய்து விடுவதா இப்படிக் காட்ட?.. //

      Monthly food cost 41.5 % தாண்டக் கூடாது.. இங்கே 38 %.. இப்படி சமாளிப்பது மிகவும் சிரமம்..

      ஆனால் மேனேஜருக்கும் அவ்வப்போது கை காட்டி விட வேண்டும்.. இடையில் செஃப் வேறு.

      ஒவ்வொரு நிலையிலும் பற்பல குறுக்கீடுகள் இருக்கும்..

      பாவப்பட்ட துப்புரவு தொழிலாளியும் மேனேஜரும் ஸ்டோர் கீப்பரிடம் தான் வந்து நிற்பார்கள்..

      கயிற்றின் மீது நடனம் தான்..

      அதிகம் நியாயம் பேசினால் நமக்குத் தான் ஆபத்து..

      ஊருடன் கூடி வாழ்.. இதுதான் நீதி..

      இதைக் கடந்து தான் வந்திருக்கின்றேன்..

      கதைக்குள் - ஷில்பா பாய்!.. - என்றொரு வார்த்தை வருகின்றதே..

      நீக்கு
  12. சிறுகதையைப்படித்தேன். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!
    உண்மையில் இது தொடர்கதை தான்!
    வளைகுடாவிற்கு சொத்தை விற்று கடன் சுமையோடு வீட்டில் காத்திருக்கும் ஆயிரம் பொறுப்புகளுடனும் கடமைகளுடனும் கனவுகளுடனும் வந்து இறங்கியவர்கள் ஆயிரக்கணக்காக இருந்தார்கள் அந்த காலக்கட்டத்தில்! நான் சொல்வது 80களிலும் 90களிலும்!!
    புரோக்கர்களிடமும் ஏஜெண்டுகளிடமும் ஏமாந்த மனிதர்களின் கதைகள் கண்களில் இரத்தத்தை வரவழைக்கும். அப்படி ஏமாந்த மனிதர்களில் தமிழர்கள் இருந்தால் பார்ப்பவர்கள் எங்கள் உணவகத்தில் தான் கொண்டு வந்து விடுவார்கள். அவர்களுக்கு எங்களின் வேலையாட்கள் தங்குமிடத்தில் நாள்கணக்கில் தங்க வைத்து மூன்று வேளையும் சாப்பாடு போட்டு அவர்களுக்கு அவுட்பாஸ் இந்தியன் கவுன்ஸ்லேட்டில் வாங்கிக்கொடுத்து திரும்ப அனுப்புவது வரை என் கணவர் தமிழ் நண்பர்களுடன் பல நாட்கள் செய்திருக்கிறார்கள். அதனால் அந்த வலி, வேதனை, ஏமாற்றம் அனைத்துமே எனக்கு முழுமையாகப்புரிந்த விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ அக்கா உங்கள் கணவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

      கீதா

      நீக்கு
    2. பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்..

      அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்..

      நீக்கு
    3. அதனால் அந்த வலி, வேதனை, ஏமாற்றம் அனைத்துமே எனக்கு முழுமையாகப்புரிந்த விஷயம்..

      இந்த செய்தியை ஏற்கனவே சொல்லி இருக்கின்றீர்கள்.

      தலை வணங்குகின்றேன்..

      நீக்கு
  13. நேர்மையாக இருக்க நினைத்தாலும் சூழ்நிலை எப்படி மாற்றுகிறது!

    கௌ அண்ணா படம் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நேர்மையாக இருக்க நினைத்தாலும்//

      அங்கிருக்கும் சூழ்நிலை கொடுமையானது..

      நீக்கு
  14. 0/90 களில் வளைகுடா நாடுகளுக்கு ஆள் அனுப்பி வைக்கும் புரோக்கர்கள் //

    சேரனின் வெற்றிக் கொடி கட்டு படம் நினைவுக்கு வருகிறது. அதில் பணம் பறி போவதைச் சொல்லும் கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பணம் பறி போவதைச் சொல்லும் கதை.//

      இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடப்பவை..

      இதற்கு மேல் நடப்பவையும் உண்டு..

      நீக்கு
  15. கதை கரு மனதை கனக்க வைக்கிறது. எத்தனை அண்ணையாக்கள் இப்படி வளைகுடா நாட்டில் கஷ்டபடுகிறார்களோ! அவர்களின் உறவுகள் "அயல் நாட்டு சம்பாத்தியம்" என்று எளிதாக அவர்களை பேசிவிடுவார்கள். அவர்களின் கஷ்டங்களை யார் அறிவார்கள்!
    முன்பு "ராஜாராம்" என்ற பதிவர் வளைகுடா நாட்டில் குடும்பத்தை பிரிந்து வாழும் நிலையை கவிதையாக பதிவு போடுவார் படிக்க மனது மிகவும் வேதனைபடும்.

    இப்போது இந்த கதையை படித்த போதும் அப்படி பட்ட மனநிலைதான் எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எத்தனை அண்ணையாக்கள் இப்படி வளைகுடா நாட்டில் கஷ்டப் படுகிறார்களோ!.. ///

      நானும் கஷ்டப்பட்டு விட்டேன்..

      அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. நீங்களும் கஷ்டப்பட்டு விட்டீர்கள் முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  16. அனுபவமே கதையாகும்போது கற்பனையில்லாமல் கதை யதார்த்தம் ஆகிறது. வழக்கில் உள்ள நடை, மொழி இரண்டும் கூடும்போது சிறப்பாகிறது. இன்றைய கதை சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நண்பரே..

      நீக்கு
    2. அன்பின் JKC
      தங்கள் பாராட்டுரைக்கு நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  17. உண்மையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டிய கதை. அருமைனு ஒரு வார்த்தையில் சொல்லிட்டுப் போக முடியாது. அங்குள்ள மனிதர்கள் அவர்களில் பலரும் நம் உறவுகளாயும் இருப்பார்கள். படும் கஷ்டங்களையும் அவர்கள் பின்பற்றியே ஆகவேண்டிய நெளிவு, சுளிவுகளையும் அப்பட்டமாக எடுத்துச் சொல்லி விட்டீர்கள். மிக யதார்த்தமானநடை. உங்களுக்கே கை வந்தது. திரு கௌதமன் அவர்களின் ஓவியமும் அச்சு அசல் உங்களைப் போலவே வரைந்திருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உண்மையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டிய கதை. அருமைனு ஒரு வார்த்தையில் சொல்லிட்டுப் போக முடியாது.//

      இதுதான் என்றில்லை.. பிறரை அனுசரித்துப் போக வேண்டிய நிர்பந்தத்தில் எத்தனை எத்தனையோ...

      அன்பின் வருகையும்
      கருத்தும் நெகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  18. // திரு கௌதமன் அவர்களின் ஓவியமும் அச்சு அசல் உங்களைப் போலவே வரைந்திருக்கார்.. //

    காலையிலேயே டொல்ல வேண்டும் என்று நினைத்தேன்..

    திரு கௌதமன் அவர்களின் ஓவியங்களில் இது ஒரு மைல் கல்...

    வாழ்க..

    பதிலளிநீக்கு
  19. கௌதமன் சார் வரைந்த ஓவியம் கதைக்கு பொருத்தமான ஓவியம், நன்றாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  20. திரைகடலோடியும் திரவியம் தேடு என்றாள் அந்நாளில் ஒருத்தி. அவளுக்குத் தெரிந்திருந்ததா - திரைகடல் ஓடி.. திரவியத்தைத் தேடுதேடென்று தேடி... தேய்ந்தேபோய்விடுவார் மனிதரில் சிலர், ஒரு காலகட்டத்தில் என.

    தெரிந்தும் இருந்திருக்கலாம். அவள் சாதாரணப் பெண்ணல்லவே.. இருந்தும் சொன்னாள், திரைகடல் ஓடச் சொல்லி. தேடித் தேய்ந்த நிலையிலும், ஒருவாறு ஓய்ந்த நிலையிலும்.. சிலவற்றைத் தெரிந்துகொண்டவாறு, கொஞ்சம் புரிந்துகொண்டவாறு மீள்வார் அவர்களில் சிலர் என்கிற நினைப்பில் சொன்னாரோ என்னவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஏகாந்தன்..

      நீக்கு
  21. திரவியம் தேடு - என்பது வணிகம் செய்து பொருள் ஈட்டுவது.. அது மன்னராட்சியில்!..

    திறமை இருந்தும் புறக்கணிக்கப்படுவது மக்களாட்சியில்..

    மண்ணில் பிறந்த உயிர் ஒன்று காரில் போவதும் மற்றொன்று குப்பை மேட்டில் மேய்வதும் நவீன சனநாயகம்!..

    பதிலளிநீக்கு
  22. அந்தக் கிழவியம்மாள் காலத்தில் - பாரதத்தில் இருந்து எவனும் கூட்டிப் பெருக்கவும் குப்பை அள்ளவும் பிற தேசங்களுக்குப் பயணப் படவில்லை..

    வெள்ளை நரிகள் அதைத் தொடங்கி வைத்தன..

    பதிலளிநீக்கு
  23. வித்தியாசமான கதை இயல்பான நடையில். படம் நன்று.

    வளைகுடா நாடுகளில் வேலை செய்வோரின் நிலை மனதை கனக்கவைத்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!