=========================================================================================================
=======================================================================================================
===========================================================================================================================================================================================================================
நான் படிச்ச கதை
(JKC)
தன் குஞ்சு பொன் குஞ்சு
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்
முன்னுரை
இந்தக் கதை தினமும் எங்கள் வீட்டில்
நடைபெறுவதுதான். தினமும் மதியம் சூடு சோறு காக்கைக்கு மதில் சுவரில் வைப்பது உண்டு.
அதே போல் காலை பழைய சோறும். காலையில் வைக்கப்படும் பழைய சோற்றை புறாக்களும் உண்ணும்.
புறாக்கள் உண்டு முடிக்கும் வரை காத்திருந்து அவை சென்ற பின் காக்கைகள் உண்ணும். மதியம்
வைக்கப்படும் சூடு சோற்றை வாயில் கவ்விப் பறந்து செல்லும். இது தினசரி நிகழ்ச்சி.
இக்கதை காக்கை ஏன் இவ்வாறு செய்கிறது
என்பதற்கு விடையாக அமைவதால் எனக்கு பிடித்து விட்டது. ஆகவே பதிவாய் அமைகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------
கா..கா..கா..கா….கிர்..க்ஹா.
ஞாயிற்றுக்கிழமையும்
அதுவுமாய் மனைவியும் குழந்தைகளும் நேற்றைய சாப்பாடையே சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று
சொல்லிவிட்டு போன கோபத்தில் சமையலறைக்குள் ஏதாவது கிடைக்குமா என்று ஒவ்வொரு பாத்திரத்தின்
மூடியையும் திறந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இதன் சத்தம் இடைஞ்சலாக இருந்தது.
வேகமாய்
கொஞ்சம் கோபமாய் வாசல் புறம் வந்தேன். பக்கத்து வீட்டின் காம்பவுண்டின் மேல் நின்று
கொண்டு ஜோடியாய் காகங்கள் மூடியிருந்த கதவை பார்த்து சத்தமிட்டு கொண்டிருந்தது.
ஜோடியாய் காணப்பட்ட இரண்டில் ஒன்று அவ்வபொழுது
சத்தமிட்டு விட்டு மூக்கை காம்பவுண்ட் சுவற்றின் கீழ் தேய்த்துக்கொள்ளும், மற்றொன்று
அடுத்து சப்தமிடும், அடுத்து இது மூக்கை தேய்க்க இன்னொன்று சத்தமிடும். எவ்வளவு விவரமாய்
தன்னுடைய வேலையை பகிர்ந்து கொள்கிறது., மனதுக்குள் அந்த எரிச்சலையும் மீறி யோசித்தேன்.
எப்பொழுதும் இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு அம்மாள் இவைகளுக்கு சாப்பாட்டை போட்டிருப்பார்களே?
இவ்வளவு சத்தத்துக்கும் அவர்கள் வரவில்லை என்றால் கண்டிப்பாய் வெளியூர் சென்றிருக்கலாம்.
இவைகள்
கத்துவதை பார்க்க கொஞ்சம் பரிதாபமாய் இருந்தது, சரி நாம் சாப்பிடற பழைய சோற்றையே இதற்கும்
போடுவோம் உள்ளே வந்தேன்.. ஒரு தட்டில் கொஞ்சம் சாதத்தை போட்டு எடுத்து வந்து பக்கத்து
வீட்டு காம்பவுண்டின் மேல் கொட்டி வைத்து விட்டு, தட்டை எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு
வந்து நடப்பதை கவனித்தேன்.
நான்
அந்த சாதத்தை வைக்கும் வரை சற்று நகர்ந்து போன இரு காக்கைகளும், இப்பொழுது மெல்ல தத்தி
வந்தன. இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்து கா..கா..என்று சத்தமிட்டு விட்டு அந்த பழைய சாப்பாட்டை
சுற்றி வந்தன. ஒரு காக்கை மெல்ல மூக்கை வைத்து பார்த்து நகர்ந்து கொண்டு கா..கா..சப்தமிட்டன
எரிச்சல்
வந்தது, இந்த காக்கைகளுக்கு வந்த வாழ்வை பாரேன்.! பழையதை போட்டால் சாப்பிட மாட்டேனென்கிறது,
மனதுக்குள் சொல்லிக்கொண்டவன் அப்படியே அங்கிருந்த படியில் உட்கார்ந்து என்னதான் முடிவெடுக்கிறது
பார்த்து விடுவோம் இந்த எண்ணத்தில் கவனிக்க ஆரம்பித்தேன்.
அவைகள்
நான் வைத்த சாதத்தை கண்டு கொள்ளவேயில்லை. இவனென்ன பழையது வைப்பது நாமென்ன அதை சாப்பிடுவது
? பழையதை சாப்பிட மறுக்கும் எரிச்சலில், காக்கைகளை சூ..சூ..மெல்ல விரட்டினேன்.
அவைகள்
அலட்சியமாய் என்னை பார்த்து, பழையதை போட்டுட்டு விரட்டறதை பாரேன், கேலியாய் பார்ப்பது
போல பார்த்து விட்டு பின் முகத்தை திருப்பிக்கொண்டது.. சே..நானாக உன்னிடம் வந்து அசிங்கப்பட்டுக்
கொண்டேன். பசிக்கு கத்துகிறாயே என்று உனக்கு சோறு போட வந்த என்னை …நானே எனக்குள் திட்டிக்கொண்டேன்.
பக்கத்து
வீட்டு கதவு சடாரென திறக்கும் சத்தம் கேட்டவுடன் இவைகள் என்னை கவனிப்பதை விட்டு விட்டு
அவர்கள் வாசலை பார்த்தன. உள்ளேதான் இருந்தார்களா?
பக்கத்து
வீட்டு அம்மாள் ஆவி பறக்க ஒரு தட்டில் கலவையாக காணப்பட்ட சாத்ததை எடுத்து வந்தார்கள்.
அட்டா.. காலையில எழுந்துக்கறதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்ச், அதனால சமையல் லேட்டாயிடுச்சு,
அதுக்குள்ள கத்தி கூப்பாடு போட்டு ரகளை பண்ணிடுச்சு. என்னை பார்த்து சொல்லிக்கொண்டே
வந்தவர்கள் காம்பவுண்டில் இருக்கும் சாப்பாட்டை பார்த்து யாரு நீங்க போட்டீங்களா? நானும்
ஆமாம் நீங்கள் ஊர்ல இல்லயோன்னு நினைச்சுட்டு…… இழுத்தேன். பரவாயில்லை, அவர்கள் அந்த
சாப்பாட்டை தள்ளி வைத்து விட்டு சுடு சோற்றை காம்பவுண்ட் சுவரின் மேல் கொட்டி விட்டு
உள்ளே சென்றார்கள்.
ஒன்று
மட்டும் தத்தி தததி வந்து சோற்றை முகர்வது போல் மூக்கை வைத்து விட்டு…கா..கா..சப்தமிட்டது.
மற்றொன்று பறந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு அவர்கள் போட்டிருந்த சோற்றை ஒரு கவளம் அலகில்
கவ்விக் கொண்டு பறந்தது. இரண்டு நிமிடங்கள் ஆனதும் பறந்து சென்ற காக்கா மீண்டும் காம்பவுண்ட்
சுவரில் வந்து உட்கார அதுவரை சாதத்தின் மீது வாய் வைக்காமல் இருந்த மற்றொன்று இப்பொழுது
தனது அலகை வைத்து ஒரு கவளம் சோற்றை கவ்விக்கொண்டு பறந்தது. இப்படி மாறி மாறி பறந்த
காக்கைகள் அடுத்து செய்த ஆச்சர்யம் !.
சுடு
சாப்பாடு குறைவது போல் தென்பட்டதும், இரு காக்கைகளும் நான் வைத்த சோற்றை கொத்தி தின்ன
ஆரம்பித்தன. ஐந்து நிமிடங்களில் நான் வைத்த சாதத்தை காலி செய்து விட்டு மீண்டும் சுடு
சோற்றை வாயில் கவ்விக் கொண்டு பறந்தன.
என்ன
காக்காய் சாப்பிட்டுட்டு போயிடுச்சுங்களா? கேட்டவாறு வந்த பக்கத்து வீட்டம்மாளின் குரல்
கேட்டு நினைவுக்கு வந்தேன். என்னங்க உங்க சாப்பாட்டை எடுத்துட்டு போகுது, நான் வச்ச
சாப்பாட்டை தின்னுட்டு போகுது சிரித்து கொண்டே கேட்டேன்.
எங்கியாவது
குஞ்சு பொறிச்சிருக்கும், அந்தம்மா சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்கள்.
பாருய்யா
! நீயும் நானும் பழசு சாப்பிட்டுக்கலாம், நம்ம குஞ்சுக்கு சூடா கொடுக்கலாம்!
என்ன
ஒரு பாலிசி !. ஹும்..நமக்கு காலையில பழசுதான் நினைத்துக் கொண்டே,வீட்டுக்குள் வந்தேன்.
ஆசிரியர்.
பெயர்:
ஸ்ரீ.தாமோதரன்
பிறந்த
வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து
கொண்டிருக்கிறார்.
1.
“மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது
2.
தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு
மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.
3.
“நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை
ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
4.
“மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்”
மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு
தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
5.
“குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு
போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக இவரது “காற்று வந்து காதில் சொன்ன
கதை” குறு நாவலை தேர்ந்தெடுத்துள்ளது
6.
கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது
பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும்
கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்.
7.
‘பாக்யா’ பத்திரிக்கையில் “நானே என்னை
அறியாமல்” சிறுகதை வெளிவந்துள்ளது.
8. சிறுகதை.காம்,வலைதமிழ்.காம்,எழுத்து.காம்,பிரதிலிபி,போன்ற
வலைத்தளங்களில் சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் சிறுகதைகள், குழந்தை பாட்டு
போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.
இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குநம்பிக்கைச் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டேன். நல்ல செய்திகள். விரிவாக வாசிக்க வருகிறேன்....
காக்கைகளின் கதைக்கும் வருகிறேன்...
கீதா
இப்போதெல்லாம் நாம் செட் செய்யும் font களை ப்ளாகர் வெளியிடும் போது மாற்றிவிடுகிறது. ப்ளாகரில் எல்லாம் சரியாக இருப்பது போல் இருப்பவை வெளியிட்டுப் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக font size.
பதிலளிநீக்குஎங்கள் தளத்திலும் மிகப் பெரிதாக இருக்கிறது வெளியிட்ட பின். அது போல இப்பதிவில் எண்கள் இட்டு இப்படி வெளி வருபவை வெளி வரும் போது கன்னாபின்னான்னு வருது.
கீதா
நல்ல செய்திகள். தன்னம்பிக்கை, மனிதநேயம் இவற்றை சொல்லும் செய்திகள்.
பதிலளிநீக்குகதை கவனமாக காகத்தை கவனித்து எழுதி இருக்கிறார் கதை ஆசிரியர்.
பதிலளிநீக்குஇப்படித்தான் காகம் செய்யும்.
கதையைத் தவிர மற்றப் பகுதிகளைப் படித்துவிட்டேன். ரொம்ப பிசி. பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குநெல்லை அண்ணனை பிடிக்கவே முடியலை!!!!
நீக்குகீதா
செய்திகள் அருமை.
பதிலளிநீக்குமாணவர்களையும், சொந்தக்காலில் நின்றுகாட்டும் அம்மாவுக்கும் வாழ்த்துகள்.
காகத்தின் செயல் எங்களுக்கு எல்லாம் படிப்பினை.ஐந்தறிவு என வகைப்படுத்தியது தவறு. அவற்றிற்கு இருக்கும் அறிவு மனிதர்களுக்கு இல்லை என்றே கூறவேண்டும்.
மூன்று நம்பிக்கைச் செய்திகளுமே நல்ல செய்திகள் என்றாலும் மிகவும் கவர்ந்தது தங்கமாரியம்மாளின் செய்திதான். தன்னம்பிக்கைச் செய்தி!
பதிலளிநீக்குகீதா
காகம் கதை மிக யதார்த்தம். அதைவிட அதை நுணுக்கமாகக் கவனித்ததை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அது என்ன நினைக்கும் என்பதையும் மனதில் கற்பனையோடு எழுதியிருக்கிறார்.
பதிலளிநீக்குகீதா
தமிழருவி, ஜனனி, மற்றும் ஆசிரியர் ராம்பிரபுவுக்குப் பாராட்டுகள். வேகத்தடை மட்டும் போதாது இதுவும் தேவை வாகனங்களில்.
பதிலளிநீக்குதங்கமாரியம்மாள் போன்றவர்களைப் பற்றிய, எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் ,பெண்ணின் பெருமையை பாராட்டும் தகவல்கள் மனதிற்கு இதமாக இருக்கிறது.
மருத்துவருக்கும் வாழ்த்துகள்
துளசிதரன்
காகத்திற்கு சோறு வைக்கும் பழக்கம் இல்லை என்றாலும், ஆசிரியரின் கவனிப்பு அதை எழுதிய விதம் மிக நன்று. காக்கையும் பேசுவது போன்று இடையிடையே அது தன்னைத்தான் கவனிக்கிறதோ என்ற ரீதியில் எழுதியதையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
காக்கை கதை சுவாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. தன்னம்பிக்கையுடன் மருத்துவராக பல சேவைகள் செய்பவரையும், மனதாற வாழ்த்துவோம்.
விபத்துக்களை தடுக்க புதிதாக கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்களை பாராட்டுவோம்.
தங்கமாரியம்மாள் அவர்களின் சொந்த பகிர்வு படிக்கவே நல்ல ஒரு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. அவரின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் பாராட்டுவோம். மூன்றுமே முத்தான செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதைப்பகிர்வும் அருமை. கதையில் வரும் அந்த காக்காய்களின் செயல்கள் அது தன் குஞ்சுகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறது என்பதை காட்டுகிறது. அருமையாக கதை எழுதிய கதாசிரியருக்கும், கதையை இங்கு பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கமாரியம்மாள் வாழ்க்கையும் பல் மருத்துவர் வாழ்க்கையும் நெகிழ்ச்சியானவை. காக்கைக் கதையின் அவதானிப்பும் விளக்கமும் அழகு
பதிலளிநீக்குசெய்திகள் அனைத்தும் நன்று.
பதிலளிநீக்குமுதல் செய்திக்கான ஒரு படம் இரண்டு முறை வந்திருக்கிறது.