சனி, 3 ஆகஸ்ட், 2024

ஆசிரியர் சீனிவாச தேசாயின் நேர்மை மற்றும் நான் படிச்ச கதை

 

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


சென்னை : சென்னை போரூர் ராமச்சந்திரா மரபணுசார் ஆலோசகர் டாக்டர் அனில் ஜலான் பேசியதாவது :  இந்தியாவில் ஆண்டுதோறும் 2,700 குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கின்றன. வளர்சிதை நோய் குறைபாடுடன், 1,900க்கும் அதிகமாக குழந்தைகள் பிறக்கின்றன. இதை தடுக்க, குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில், குதிகாலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் எடுத்து, அதை உறைய வைத்து ஆய்வு செய்வதன் வாயிலாக, பல வளர்சிதைவு மாற்ற குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.  இதில், 55 வகையான குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு குழந்தை பிறந்தால் கூட, மூன்று சொட்டு ரத்தம் குதிகாலிலிருந்து எடுத்து, பிரத்யேக காகிதத்தில் ஒட்டி காய வைத்து, ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்தால், மூளை வளர்ச்சி குறைபாடை கண்டறிந்து, அக்குழந்தையை குணமாக்க முடியும்.

============================================================================================

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  இதன் காரணமாக அப்பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு4 இடங்களில் மினி டேங்க் அமைக்கப்பட்டு, அதில் 2 மினி டேங்க்கிற்கு மட்டுமே மின் இணைப்பு கொடுத்து பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.இதனால், அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக அப்பகுதியினர் ஊர் பகுதிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.  ஊர் பகுதிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருப்பதால் அப்பகுதியில் கட்டப்பட்டு காட்சிப் பொருளாக மீதமுள்ள 2 டேங்க்கிற்கு மின் இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதனை அதிகாரிகள் கண்டுக் கொள்ளவில்லை.  இதையெடுத்து சில மாதங்களுக்கு முன் அப்பகுதி இளைஞர்கள் பணம் வசூல் செய்து அந்த பணத்தில் காட்சிப் பொருளாக இருந்த ஒரு டேங்க்கிற்குமின் இணைப்பு வழங்கினர்.

ஆனால் ஒரு டேங்க்கிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது அனைத்து குடும்பங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.  மேலும் மீதமுள்ள ஒரு மினி டேங்க்கிற்கு மின் இணைப்பு வழங்கி குடிநீர் விநியோகம் செய்யுமாறு மீண்டும் திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர். அதிகாரிகள் வழக்கம் போல் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால், அப்பகுதி இளைஞர்கள் மீண்டும் பணம் வசூல் செய்து, அப்பகுதியில் உள்ள ஏரி போர்வெல்லில் இருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி புதுமனை தெருவில் மின் இணைப்பு வழங்காமல் காட்சி பொருளாக இருந்த மினி டேங்க்கிற்கு பைப் லைன் அமைத்து இணைப்பு வழங்கினர்.  இது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.மேலும், அப்பகுதி மக்கள் நிரந்தரமாக இடம் தேர்வு செய்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையாவது அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் செவி சாய்ப்பார்களா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

==============================================================================================

ஆசிரியர் சீனிவாச தேசாயின் நேர்மை

வாடிக்கையாளருக்கு தோசைக்கு பதிலாக, ஹோட்டல் உரிமையாளர் 50,000 ரூபாயை, பார்சல் கட்டி கொடுத்தார். கொப்பால், குஷ்டகியில் வசிக்கும் ரசூல் சாப் சவுதாகர் என்பவர், சிறிய ஹோட்டல் வைத்து, வாழ்க்கை நடத்துகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில், வங்கியில் கட்டுவதற்காக 59,625 ரூபாயை, வீட்டில் இருந்து கொண்டு வந்தார். பணம் இருந்த கவரை, உணவு பார்சல் கட்டும் இடத்தில் வைத்திருந்தார்.  இதே பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் சீனிவாஸ் தேசாயி, சிற்றுண்டி வாங்க ஹோட்டலுக்கு வந்தார். இட்லி, வடை, தோசையை பார்சல் கட்டும்படி கேட்டார். அப்போது ரசூல்சாப் சவுதாகர், கவன குறைவாக தோசைக்கு பதிலாக, பணம் இருந்த கவரை பார்சல் கட்டி கொடுத்தார்.  சீனிவாஸ் தேசாயி, வீட்டுக்கு சென்று பிள்ளைகளுடன் சிற்றுண்டி சாப்பிட, பார்சலை பிரித்த போது, தோசைக்கு பதிலாக பணம் இருப்பது தெரிந்தது. ஹோட்டல் உரிமையாளரின் குளறுபடி புரிந்தது. உடனடியாக ஹோட்டலுக்கு வந்து, ரசூல்சாப் சவுதாகரிடம் பணத்தை ஒப்படைத்தார்.  பணத்தை எங்கு வைத்தோம் என, தெரியாமல் தேடிய இவர், பணம் திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியர் சீனிவாச தேசாயின் நேர்மையை பாராட்டினார்.

==================================================================================================


 நான் படிச்ச கதை (JKC)

சித்தி - மா. அரங்கநாதன்

மா. அரங்கநாதன் (1931-2017) கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம்) என்ற ஊரில் பிறந்தவர். சென்னையில் சுமார் 50 வருட காலம் வாழ்ந்தவர். சென்னை மாநகராட்சியில் எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றபின் புதுச்சேரிக்கு குடி பெயர்ந்தார் 

இவரது மகன் அரங்க மஹாதேவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி. 2017 இல் இறந்த தந்தையின் நினைவாக 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அறிஞர்களுக்கு இலக்கிய பரிசு வழங்கி வருகிறார்

மா அரங்கநாதன் 1950ஆம் ஆண்டில் பிரசண்ட விகடன் இதழில் எழுதத் துவங்கினார் முன்றில் என்ற ஒரு சிற்றிதழையும் நடத்தி வந்தார். 90 சிறுகதைகள், 2 புதினங்கள், 47 கட்டுரைகள் என இவரது படைப்புகளின் பட்டியல் நீள்கிறது. சக எழுத்தாளர்களான கிருஷ்ணன் நம்பி, மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோர் இவரது உற்ற நண்பர்கள்.

முன்னுரை

எஸ் ரா இக்கதையை 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார்.

சித்தி என்ற தலைப்பு சித்தர்களின் அடையும் சித்தி என்ற பொருள் கொள்ள வேண்டும். முடிவு, பேறு,  இலட்சியத்தை அடைதல் என்று அர்த்தம் கொள்ளலாம் என்பது எனது கருத்து. வெற்றி அடைய வேண்டிய விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், பாடுபடுதலும் இருந்தால் இலக்கை அடையலாம் என்பதே கதை.

கதை ஒரு புதுக்கவிதை போன்று எழுதப்பட்டது. எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளும், விவரணங்களும் அடங்கியிருக்கும்.

புதுமைப்பித்தனின் சாயல்கொண்ட மெல்லிய கேலி ஓடும் நடை, சைவசித்தாந்தம் சார்ந்த உட்குறிப்புகள், மிகுகற்பனையை இயல்பாகச் சொல்லிச் செல்லும் கதையமைப்பு ஆகியவற்றால் விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றார். ‘ ஜெ.

சித்திகதை நான்  அடிக்கடி வாசிக்கும் கதை. ‘ பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

இக்கதையை படித்தபின் வாசகர்கள் ஆசிரியர் என்ன கூறவருகிறார், கதையின் கருத்து என்ன என்றெல்லாம் ஆலோசிக்கலாம். விடையே சித்தி (உண்மையறிவு)

ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இச்சமயத்தில் இக்கதை எபியில்  வெளிவருவது பொருத்தம் என்று நினைக்கிறேன். கதை முழுதும் தரப்பட்டுள்ளது.


சித்தி - மா. அரங்கநாதன்


அங்கே மைதானங்கள் குறைவு. அவன் குடி கொண்டிருந்த அந்த இடம் காவல் துறைக்குச் சொந்தமானது. ரொம்ப நேரம் அவனைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த காவல்காரரர் ஒருவர் இடையே அவனது ஓட்டத்தை தடை செய்தார். "தம்பி - இங்கே ஓட அனுமதி வாங்கவேண்டும்" என்று கூறி "ஆனாலும் நீ நன்றாக ஓடுகிறாய். முன்னுக்கு வருவாய்" என்றும் சொல்லி சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தார்.

அந்த நாட்டில் விளையாட்டிற்கு அத்தனை மதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் வீரர்களைப் பற்றி தொலைக்காட்சி செய்திகள் மூலமாக மக்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். கஷ்டம் நிறைந்த வாழ்க்கையை எந்தவித உணர்வுமில்லாது இயல்பாகவே அவர்கள் ஏற்று நடத்திக் கொண்டிருந்தபடியால் விளையாட்டுகள் அங்கு எடுபடவில்லை. காலங்காலமாக அவர்களுக்கு தெரிந்த விளையாட்டிலேயே ஈடுபட்டு திருப்திப்பட்டுக் கொண்டனர். "ஒலிம்பிக்" போட்டிகளைப் பற்றி கேள்வியோடு சரி. அந்த மண் உலகிலே ஒரு விசேடமான மண் போலும். அங்கே தான் அவன் ஓடிக்கொண்டிருந்தான்.

"நீ என்ன படிக்கிறாய்?"

காவல்காரர் கேட்டார். அவன் அதற்குச் சொன்ன பதிலை காதில் வாங்கிக் கொள்ளாமலே தொடர்ந்து கூறினார்.

"நீ இப்படி ஓடுவதற்கு முன்னே சில அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் - நானும் ஒரு காலத்தில் ஓடினேன். அதை தொடரவில்லை. என் அந்தக் கால வயதுத் திறனைவிட நீ அதிகமாக இப்போது பெற்றிருக்கிறாய் - ஒன்று செய்யலாம் கேட்பாயா…"

அவன் தலையசைத்தான்.

நான் தரும் முகவரிக்குப் போ. அந்த பெரியவரோடு பேசு. உனக்கு நல்லது கிடைக்கும்.

அவன் மெதுவாக நன்றி சொன்னான். அன்றைக்கு அவன் முடிவெட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்தப் பணம் செலவாகி விட நேரும். அது ஆபத்து-மீண்டும் பணம் கிடைப்பது அரிது. இந்நிலையில் அந்தக் காவலரின் யோசனைக்கு அவன் பதிலும் நன்றியும் திருப்திகரமாக சொல்லியிருக்க முடியாது. ஆனாலும் அவர் ஒரு முகவரியைக் கொடுத்து உற்சாகப்படுத்தி அவனை அனுப்பிவைத்தார்.

தன்னைச் செம்மைப்படுத்தி கொண்டு அவன் மறுநாள் இரண்டு மைல் தூரத்திலிருந்த அந்த வீட்டிற்கு சென்றான். பெரிய மாளிகை போன்ற வீடு-வீட்டின் முழு பார்வையும் விழ, தெருவிலிருந்து காம்பவுண்ட் சுவரைத் தாண்டி மரங்களடர்ந்த பாதை வழி நடக்க வேண்டும். அந்தப் பாதையில் அவன் கால் வைத்த போது - அதன் அழகான நீட்சியில் - அந்த கால்கள் ஓடுவதற்குத் தயாராயின. மாசு மறுவற்ற அந்தப் பாதை வீட்டை சுற்றிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தான். வீட்டின் முகவாயிலில் நாற்காலியில் செடிகள் சூழ்ந்த இடத்தில் அவர் உட்கார்ந்திருந்தார்.

பெரியவர் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் வருபவனுடைய நடை அவருக்கு எதையோ ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். தூரத்தில் வந்து கொண்டிருந்தவனை ஆவலுடன் பக்கத்தில் காண விழைந்தார். "ஏன் இத்தனை நாள்-முன்பே ஏன் வரவில்லை" என்று கேட்கவும் எண்ணினார். அவர்களது சம்பாஷணை இயல்பாக எளிதாகவிருந்தது. "நமது நாடு பாழ்பட்டு விட்ட நாடு. இதை இளைஞர்கள் தாம் காக்க வேண்டும்-இல்லையா" என்று இரைந்து கேட்டார். நடப்பதற்கு முன்பே ஓட ஆரம்பித்து விட வேண்டுமென்று கூறி சிரிப்பு மூட்டப் பார்த்தார்.

பெரியவருக்கு வயது அறுபதிருக்கும். விளையாட்டு விஷயங்களிலேயே தன்னை மூழ்கடித்துக் கொண்டவர். அவைகளைத் தவிர உலகிலுள்ள எல்லாக் காரியங்களையும் இயந்திரங்களைக் கொண்டு நிகழ்த்திவிடலாம் என்று நம்புகிறவர். அந்த நாட்டின் எல்லா செய்தித் தாள்களிலும் வந்த படம் இவருடையதாகவேயிருக்கும். சீடர்கள் அதிகமிருந்திருக்க முடியாது. இருந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறையில் சேர்ந்திருப்பார்கள்.

"நான் எனது நாட்டிற்காக என் விளையாட்டுக் கலையை அர்ப்பணித்தவன்"

அவர் கண்கள் ஜொலித்தன. உண்மையில் அந்த கண்களில் அவர் சொன்னது தெரிந்தது. அவர் பொய் சொல்பவராகத் தெரியவில்லை.

பல மாதங்கள் அவரிடம் தனது விளையாட்டுக் கலையின் பயிற்சிகளைப் பெற்றான் அவன். காலையிலெழுந்து - சூரியன் உதிக்கும் முன்னர் - நெடுஞ்சாலைகளில் ஓடினான். தனது தம்பியைத் தோளில் ஏறச் சொல்லி அவனைத் தூக்கிக்கொண்டு மைல் கணக்கில் ஓடி பயிற்சி பெற்றான். அவனது சாப்பாட்டிற்கு பெரியவர் ஏற்பாடு செய்திருந்தார். பிரியமான கொழுப்புச் சத்துப் பொருட்களை பெரும்பாலும் தள்ளி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அவ்வுணவுக்கலை நேரந்தவறாது உண்டான். பிற நாட்டு வீரர்கள்-போட்டிகள் பற்றி அவ்வீட்டிலேயே திரைப்படங்கள் காட்டப் பெற்றன. அவன் அந்த நாட்டின் சிறந்த ஓட்டப் பந்தய வீரனாக ஆக்கப்பட்டான்.

ஒரு தடவை மல்யுத்தப் போட்டிகளின் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கையில் பெரியவர் அந்த இரு நாடுகளைப் பற்றி விளக்கினார். அவன் கண்டு கேட்டறியாத சங்கதிகள் - நாடு - மக்கள் இனங்கள் - இவைகளின் உணர்வு பூர்வமான விளக்கம் - ஏறக்குறைய ஒரு சொற்பொழிவு.

அவன் மீண்டும் அந்த வீடியோ காட்சிகளில் ஆழ்ந்தான். போட்டியினிடையே காட்டப் பெறும் மக்களின் ஆரவாரம் அவனுக்கு புதிதல்ல. இருப்பினும் வேற்று நாட்டுக்காரன் குத்து வாங்கி மூக்கு நிறைய இரத்தம் விடுகையில் பார்த்தவர்களின் சப்தம் இடையே ஒரு பார்வையாளன் முடித்து விட்ட தனது சிகரெட் துண்டை ஆக்ரோஷத்துடன் கீழே  நசுக்கி துவம்சம் செய்தல் இவ்வகைக் காட்சிகளைக் கண்டு முடிக்கையில் அவன் தனக்குள் ஏதோ ஒன்று ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தான். அது பயம்  என்று பின்னர் தெரிந்து கொண்டான்.

அன்றிரவு தொலைக்காட்சியில் "இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்" என அவன் அறிமுகப்படுத்தப்பட்டான். அவனது படம் நன்றாக இருந்ததாக பலர் சொன்னார்கள். அவ்வாறு சொன்னது பொய்யென்று அவனுக்கு தோன்றிற்று.

ஆனால் நெடுஞ்சாலைகளில் அவனது அதிகாலை ஓட்டம் தொடர்ந்தது. மைதானங்களில் ஓடுவதை விட இதைச் சிறந்ததாகக் கருதினான். அடிவானத்தைப் பார்த்தவாறு, இரு பக்கங்களிலும் மரங்கள் தன்னைக் கடந்து செல்ல, கால்கள் மாறி மாறித் தரையைத் தொட்டு ஓடுகையில் இதுவரை ஆபாசம் என்று அவன் கருதிக் கொண்டிருந்தவை யாவும் தன்னைவிட்டு அகல சுத்த சுயம்புவாக எங்கோ சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். வானமும் தரையும் சுற்றுப்புற ஜீவராசிகளும் தானும் வெவ்வேறல்ல என்று தெளிந்த வகையில் அவன் ஓட்டமிருந்தது.

அன்று அவன் ஓடிய ஓட்டம், பொழுது நன்கு விடிந்து விட்டதாலும், புறநகர்ச் சாலைகளில் நடமாட்டம் ஏற்பட்டதாலும் இருபத்திரண்டு மைல்களுக்குள் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. சிலசமயம் பெரியவர் மாளிகையின் கேட்டைத் திறந்து, அங்கிருந்து தொடங்கிய நடைபாதையிலும் ஓட்டம் தொடரும். நெடுஞ்சாலையில் ஓட முடியாதபோது அந்த வீட்டைச் சுற்றி ஓடுவான். சில மணி நேரங் கழித்து யோசனையோடு பெரியவர் வெளிவந்து அவனை நிறுத்தும்போதுதான் முடியும். ஓட்ட அளவை நாளறிக்கையில் குறித்துக்கொண்டே அவர் பலவித கணக்குகளைப் போட்டுப் பார்ப்பதை அவன் காண்பான். தான் ஓடிய ஓட்டம் எவ்வளவு என்று கூட கணக்கு மூலம் கண்டறிய முடியாதவனிடம் அவர் விளக்கிச் சொல்வார். இத்தனை தூரம் தொடர வேண்டியதில்லை என்றும் உலக ரிக்கார்டை அவன் நெடுஞ்சாலைகளிலேயே முறியடித்துவிட்டான் என்றும் சொல்லி மகிழ்வார். அவனுக்கு கீழ்நாடுகளில் பயிலும் யோகாசனம் பற்றியும் சொல்லித் தரவேண்டிய அவசியம் என எண்ணினார். "யோகா" என்ற பெயரில் ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள் அந்த நாட்டில் பிரபலமடைய தொடங்கியிருந்தன.

"ஒரு மராத்தன் தேறிவிட்டான்" என்றும் "இந்த நாடு தலை நிமிரும்" என்றும் ஆணித்தரமாக பத்திரிக்கை நிருபர்களிடம் கூறினார்.

அவன் இருபத்தேழு மைல்கள் ஓடி தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் அடிபட்டபோது உலக நாடுகள் அவனைக் கவனிக்கத் தொடங்கிவிட்டன. அடுத்த ஒலிம்பிக் வீரனென பேசப்படுபவர்களில் ஒருவனானான். அவனது விவரங்கள் பேசப்பட்டன. அவன் பெயர் பலவாறு உச்சரிக்கப்பட்டது. 'கார்போ' என்று சோவியத்தில் அவன் பெயரை தவறாகச் சொன்னார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் அவன் 'கிரிப்ஸ்'. கிழக்கே அவனை 'கிருஷ்' என்று சொல்லியிருப்பார்கள். தென்புலத்தில் 'கருப்பன்' என்று இருந்திருக்கக்கூடும்.

அன்றுதான் அவனது பெயர் அதிகார பூர்வமாக வெளிவரவேண்டும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்பவனாக. விளையாட்டரங்கு ஒன்றில் பத்திரிக்கையாளர் பேட்டி நடந்தது. கையில் ஒரு சுருட்டுடன் பெரியவர் சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்தார். அவர் புகைபிடிப்பது அபூர்வம். பேட்டி பின்வருமாறு இருந்தது.

"நீங்கள் போட்டியிடும் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி தானே"

"எனக்கு ஓடுவதில் ரொம்பவும் மகிழ்ச்சி"

"நமது நாட்டிற்கு பெருமை தேடித்தருவீர்கள் அல்லவா"

"ஓடுவது ரொம்பவும் நன்றாகவிருக்கிறது"

"போன ஒலிம்பிக்கில் வென்ற வீரர் பற்றி உங்கள் கருத்து?"

"ஓடுபவர்கள் எல்லோருமே மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் எல்லாரையும் நினைத்தால் நான் சமாதானமடைகிறேன்."

"நமது நாடு விளையாட்டில் முன்னேறுமா"

அவன் பேசாதிருந்தான். பெரியவர் தலைகுனிந்திருந்தார். கேள்வி திரும்பவும் கேட்கப்பட்டது.

"எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பது தான் நான் ஓடுவதற்கு காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புதான் அதன் காரணம். எனக்கு வேறெதுவும் தெரியாது."

பெரியவர் கையிலிருந்த சுருட்டு காலடியில் கிடந்தது. முகம் பல மேடு பள்ளங்களாகமாற காலால் சுருட்டை நசுக்கி தள்ளினார். பின்பு மெதுவாக கைகளை தளர விட்டு எழுந்து நின்றார். அப்போது பேட்டி முடிந்துவிட்டது.

சிறிய நிலவுடன் இரவு முன்னேறுகின்ற நேரம். அந்தக் கட்டடத்தின் வெளியே வண்டியருகே நின்று கொண்டிருந்த அவர் பக்கம் வந்து நின்றான் அவன். சிறிது நேரம் வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தார் பெரியவர். பின்னர் தோள்களை குலுக்கிக் கொண்டே காரின் கதவை திறந்தார்.

அவன் வெகுதூரத்திற்கப்பாலிருந்த குன்றுகளைப் பார்த்தவாறே அவரிடம் கெஞ்சலுடன் கூறினான்.

"அந்த அருமையான நிலவில் ஓட முடிந்தால் எப்படி இருக்கும் என்கிறீர்கள்? காலையில் அந்தக் குன்றுவரை சௌகர்யமாக ஓட்டம் முடிந்தது."

பெரியவர் காரின் உள்ளே நுழைந்து உட்கார்ந்து கதவை சாத்திக் கொண்டார். தலையை மட்டும் வெளியே நீட்டி "நன்றாக இருக்கும் - வேண்டுமானால் நீ இப்பவே ஓடு. அந்த குன்றின் உச்சிக்கே போய் அங்கிருந்து கீழே குதித்து செத்துத் தொலை" என்று கூறிவிட்டு காரை ஓட்டிச் சென்று விட்டார்.

பின்னுரை

ஓடுவதே வாழ்க்கை என்றிருந்தவனுக்கு,, வாழ்க்கையில் பல ஓட்டங்களும் உண்டு,  அனைத்திலும்  வெற்றி பெற வேண்டும் என்ற புரிதல் எழவில்லை. பெரியவர் அவன் நாட்டுக்காக ஓடி நாட்டுக்கு புகழ் பொருள் சேர்ப்பான் என்று நினைத்தார். அனால் அவன் தன்னுடைய திருப்திக்காகவே  ஓடுவதாக நினைக்கிறான். //"எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பது தான் நான் ஓடுவதற்கு காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். எனக்கு வேறெதுவும் தெரியாது."//

ஆகவே பெரியவருடையவும், அவனுடையவும் ‘சித்தி’ முழுமை அடையவில்லை. எப்படி வாழப்போகிறான் என்ற கவலையே பெரியவரின் விரக்திக்கு, ஆற்றாமைக்குக்  காரணம் என்று நினைக்கிறேன். 

‘இலக்கல்ல வாழ்க்கை. இலக்கை நோக்கிய பயணமே வாழ்க்கை என்பது புத்தனின் தத்துவம்’ இது சென்ற வாரம் பார்த்த கவிஜியின் கதையில் உள்ளது.  இது இக்கதைக்கு பொருந்துவதாக எனக்கு தோன்றுகிறது.

27 கருத்துகள்:

  1. பதிவின் தோற்றம் மாறுபட்டிருக்கிறது. வலது பக்கம் தனி காலமாக இருந்த விவர பட்டியல் கீழ இறங்கி விட்டது. சரி செய்யவும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் எதையும் மாற்றவில்லை. blogger மக்கள் ஏதோ புரட்சி மாற்றங்கள் செய்துவருகிறார்கள் போலிருக்கு. கம்பியூட்டர் / லாப் டாப் ஆகியவற்றில் பார்ப்பவர்களுக்கு மாற்றம் உள்ளது. மொபைல் போனில் பார்ப்பவர்களுக்கு மாற்றம் இல்லை.

      நீக்கு
    2. ஆமாம் எனக்கும் அப்படித்தான் தெரிகிறது.

      கீதா

      நீக்கு
    3. இப்ப சைடில் வந்துவிட்டன எல்லாமும்!!!

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம்.
    வாசித்து விட்டு வருகிறேன், ஜெஸி ஸார்.

    பதிலளிநீக்கு
  3. முதல் செய்தி அந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் முன்னுதாரணமான செய்தி அப்படியானவர்களாலேயே இவ்வளவு சாதனைகள் முடிகிறதென்றால் நமக்கும் முடியும் என்ற ஒரு ஊக்க சக்தி

    இரண்டாவது செய்தி மிக மிக பயனுள்ள செய்தி. விழிப்புணர்வு தரும் செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அடுத்த இரு செய்திகளும் நல்ல செய்திகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர் எங்கள் ஊர் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் என் சிறு வயதிலும் சரி, ஊரில் இருந்தவரையும் சரி எங்கள் ஊர் எழுத்தாளர்கள் பற்றி எந்தவித அறிமுகமும் வீட்டில் சொன்னதில்லை. நான் கல்லூரிக்கு வந்தப்ப தெரிந்து கொண்டது ஆனால் அதன் பின்னர்தான் விவரங்களும் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கதை இரண்டு முறை வாசிக்க வேண்டியதானது. என்ன சொல்ல வருகிறார் ஆசிரியர் என்பது. அதன் பின் எனக்குப் புரிந்ததை சொல்கிறேன் வருகிறேன் வீட்டுப்பணிகள் முடித்து. பொருள் பொதிந்த வெளிப்படையாகச் சொல்லாத கதிய.

    முதலில் தலைப்பை சித்தி என்ற உறவாக நினைத்தேன் அப்புறம் ஜெ கெ அண்ணாவின் உரையில் தெரிகிறது சித்தி (dhi) அடைவதைப் பற்றி என்று தெரிந்து கொண்டு வாசித்தேன்.

    கருத்திற்கு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சித்தி அதாவது இலக்கு, இலட்சியம் இதை அடைவது என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விஷயம். மாறுபடும். இதில் இலக்கு என்பதை இங்கு எடுத்துக் கொள்ளலாம். சித்தி என்ற ஆன்மீக நோக்கில் கொண்டால் இந்த உலகில் 99.9 % மக்கள் அடைவது இல்லை.

    அந்த நோக்கில் பார்த்தால் கதாபாத்திரங்கள் இருவருமே இல்லை எனலாம்..ஆனால்....

    அடுத்த கருத்து கீழே

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பெரியவருக்குக் கோபம் அவன் நாட்டிற்காக ஓடவில்லை தனக்காக என்றும் இலக்கை அடையவில்லை என்றும்....

    எனக்குத் தோன்றுவது, அவன் தன் இலக்கை அடைந்துவிட்டான் என்றும் சொல்லலாம் இல்லையா? காரணம் அவன் விரும்பிய ஓட்டத்தை தொடர்கிறான். பேரும் புகழும் கிடைக்கிறது. அதையும் விட அவன் அதை இலக்காக வைத்து ஓடவில்லை. அவன் ஓட வேண்டும் அதிலிருந்து கிடைக்கும் ஒரு இன்பம் அவனுக்கு. அது அவன் அதில் எவ்வளவு ஆழ்ந்து உள்ளான் அதையே அவன் தியானமாக விருப்பு வெறுப்பின்றி செய்வதாகத் தோன்றுகிறது, உட்கார்ந்த நிலையில்தான் தியானம் என்பதன்றி ஒரு செயலில் நாம் ஆழ்ந்துவிட்டால் அதுவும் ஒருமுகத்தோடு அதோடு பின்னிப் பிணைந்து விட்டால் அதுவே தியானம் அவனுக்கு வேறு எதைப்பற்றியும் சிந்தனை இல்லை எனும் போது இதுவும் ஒரு சித்திதானே! அவனது பேட்டியில் அவன் சொல்லும் பதில்களே இதைச் சொல்லிவிடுகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஓடுவதே அவன் தவம் அதை அவன் விரும்பி ஆழ்ந்து செய்கிறான் அவன் தனக்காக ஓடுகிறான். இது சுயநலமல்ல...ஒருவித யோகநிலை எனலாமோ? பேட்டி பதில்கள் இது எதுவும் அவனுக்குக் கவலையில்லை. புகழ் வெளிச்சம் பணம் எதைப்பற்றியும் கவலை இல்லை அப்படி இருந்தால் தோல்விகள் அவனை மன அழுத்தத்திற்குள்ளாகும், புகம் மயக்கம், பணம் என்று அவன் வீழவில்லை. எது எப்படியானாலும் அவன் நினைப்பு முழுவதும் ஓடுவதில் அது அவனுக்கு ஒரு சந்தோஷம் எனும் போது சித்தி எனலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதனை ஆன்மீக வடிவிலும் சொல்லலாம். கடவுள், தத்துவம், என்றால் மட்டும்தான் ஆன்மீகம் என்றில்லையே.

      கீதா

      நீக்கு
  10. மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள் பிறந்தவுடன் சரி செய்வது பாராட்டத்தக்கது.

    அமெரிக்காவில் இப்படி சரி செய்ய இயலாத குழந்தைகளை கருணைக்கொலை செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. //வானமும் தரையும் சுற்றுப்புற ஜீவராசிகளும் வெவ்வேறல்ல என்று தெளிந்த வகையில்..//

    இந்த வரிகள் ரொம்பவும் பிடித்திருந்தன. இறைவ படைப்பு ரகசியத்தின் மேன்மையை
    ஒற்றை வரியில் விண்டு சொன்ன மாதிரி உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான கதை. வாசிக்கத் தந்த ஜெஸி ஸாருக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை என்னவோ சிறந்தது தான். ஆனால் வாசகர்களிடம் வரவேற்பு இல்லை. பின்னூட்டத்திற்கு நன்றி.
      Jayakumar

      நீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மகனுக்கு எப்பொழுதும் புத்தகங்களை வாசிப்பதில் அதீத ஈடுபாடு
    கணக்கிலடங்காத புத்தகங்கள். வான சாத்திரம், மனித உடற்கூறு ரகசியங்கள், சாம வேதத்தின் உச்சரிப்பு அழகு, நட்சத்திர மண்டலத்தின் வினோதங்கள் என்று விதவிதமான புத்தகங்கள். விதவித சப்ஜெக்டுகள். "இத்தனை புத்தகங்களையா வாசிக்கிறே?" என்று நாம் மலைத்தால் "வாசிக்க வாசிக்க ஒவ்வொண்ணிலும் நான் அறியாத பல செய்திகள், அங்கிள். வாசிக்க ஆரம்பித்தால் நேரம் போறதே தெரிலே" என்பான்.
    இதுப் பற்றி பெருமை பொங்க அவன் தந்தையிடம் ஒரு நாள் சொன்ன பொழுது, "நீ தான் மெச்சிக்கணும்.
    பாடப்புத்தகங்களைப் படிடான்னா அவனுக்கு வேப்பங்காயா இருக்கு. இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.சி.
    இவன் என்னிக்கு பாடப் படிச்சு பாஸ் பண்ணப் போறானோ தெரிலே" எனறு சலித்துக் கொண்டார்.

    இது தான் இந்தக் கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவருக்கு நிச்சயிக்கப்பட்டதே அவரவருக்கு நடக்கும் என்று நான் நம்புகிறேன். கதையில் உள்ளவனுக்கு ஓடுவது என்ற ஒரே போக்கு தான் தெரியும். நீங்கள் சொல்லிய சிறுவனுக்கு எல்லா சப்ஜெக்ட்டுகளிலும் விருப்பம் உண்டு பாடங்களைத் தவிர. ஆக இரண்டு கதைகளும் வெவ்வேறானவை.
      Jayakumar

      நீக்கு
  15. எங்களுக்கு மதியம் 1 மணி இப்போது. ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிருந்தோம். இன்று அபிஷேகம் பார்க்கும் பேறு கிடைத்தது.. தரிசனம் முடித்து இப்பொழுது தான் திரும்பினோம். பாதியில் விட்ட பின்னூட்டத்தைத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. கதையில் ஓடுவது என்றால் இந்தப் பையனுக்கு வாசிப்பது என்று கொள்ளுங்கள்.
    (நம் நாட்டில் தான் புத்தகப் படிப்பு. அதில் கேள்விகள், மனப்பாடம் எல்லாம்.
    அதனால் வாசிப்பை பாடப்புத்தக வாசிப்பு எந்று தனியாகப் பிரிக்கிறோம்.) தேர்வுக்காக படிக்கணும் என்ற குறிக்கோள் போல இல்லாமல் கதையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் ஓட்டம் என்ற ஒரு செயலில் இவன் காதல் கொண்டிருக்கிறான் என்று கொண்டீர்கள் என்றால் நான் சொல்வது பொருந்தி வரும்.

    பதிலளிநீக்கு
  17. இந்தக் கதையில் அந்தப் பெரியவர் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. மகாபாரத்தில் கூட இதே மாதிரியான பாத்திரப்படைப்பு உண்டு.
    தன்னால் முடியாது துவண்டு போனதை தன் மகனை வைத்து அல்லது சிஷ்யனை வைத்து செயல்படுத்தி பூரிப்படைவது.

    இந்தக் கதையில் அந்த மாதிரியான பாத்திரப் படைப்பு அந்தப் பெரியவர். அவர் கனவு பொய்த்ததால் வந்த வெறுப்பு அது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய விளக்கங்கள் கதையை, கதையின் கருவை தெளிவு படுத்துகின்றன. இந்த விளக்கத்தை வெளிப்படையாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவதால் தான் இந்த கதையை எஸ் ரா சிறந்த கதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இது போன்ற உத்திகள் புதுமைபித்தனுக்கே உரியவை. (காஞ்சனை). விளக்கங்களுக்கு நன்றி.
      Jayakumar

      நீக்கு
    2. தங்களுடைய விளக்கங்கள் கதையை, கதையின் கருவை தெளிவு படுத்துகின்றன. இந்த விளக்கத்தை வெளிப்படையாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவதால் தான் இந்த கதையை எஸ் ரா சிறந்த கதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இது போன்ற உத்திகள் புதுமைபித்தனுக்கே உரியவை. (காஞ்சனை). விளக்கங்களுக்கு நன்றி.
      Jayakumar

      நீக்கு
  18. செய்திகள் அனைத்தும் சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!