சனி, 31 ஆகஸ்ட், 2024

​ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் - மற்றும் நான் படிச்ச கதை

 

யானைகளை விரட்ட தொழில்நுட்பம் கோவை அருகே கிராமத்தில் அசத்தல்

வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க, கெம்மாரம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், சோதனை முறையில், நவீன தொழில்நுட்பமான, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, இரும்பு கம்பத்தில், கண்காணிப்பு கேமராவும், ஒலிபெருக்கியும் பொருத்தியுள்ளனர்.  கேமரா கம்பத்தில் இருந்து, 50மீ., சுற்றளவில் எந்த வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தாலும், கேமராவில் பதிவாகும். கேமரா பதிவு, கம்ப்யூட்டர் மானிட்டருக்கு செல்லும்.  அங்கிருந்து ஒலிபெருக்கியில், மனிதர்கள் விலங்குகளை விரட்டுவதை போல சத்தம் ஒலிபரப்பாகும். அதனால் அந்த சத்தத்தை கேட்டு, வனவிலங்குகள் பயந்து, விவசாய நிலங்களுக்கு வராமல், வனப்பகுதிக்குள் செல்லும்.  வனவிலங்குகள் தாக்குதலால், வாழை போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்து வந்தன.  இதை தடுக்க, ஊராட்சியின் சார்பில் இருளர்பதி பழங்குடி கிராமம் அருகே, பட்டா நிலமும், வனப்பகுதியும் முடியும் பகுதியில், ஏ.ஐ., தொழில்நுட்ப முறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  ஒலிபெருக்கியில் தொடர்ந்து சப்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், வனவிலங்குகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி சென்று விடுகின்றன. இதனால் பயிர்களை பாதுகாப்பதோடு, மனித உயிர்சேதமும் தடுக்கப்பட்டது. இதற்கு, 70,000 ரூபாய் செலவாகிறது.

=================================================================================== 

செங்கல் சூளையில் வாழ்நாளெல்லாம் வெந்த ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை யட்ஷிவிட கைம்மாறு என்ன செய்துவிட முடியும்?  அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்திருக்கும் இந்த அன்பு மகனை வாழ்த்துவோம்.


=============================================================================================

பஸ்சில் வலியால் துடித்த கர்ப்பிணியை பாதுகாப்பாக மருத்துவமனை வார்டில் சேர்த்த பெண் டாக்சி டிரைவரை அனைவரும் பாராட்டினர்.  கோவையை சேர்ந்த, 28 வயது கர்ப்பிணி அரசு பஸ்சில் தனியாக பயணம் செய்து கொண்டு இருந்தார். பஸ் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.  உடனே பஸ்சில் இருந்த பயணிகள் கண்டக்டரிடம் தெரிவித்தனர். கண்டக்டர், டிரைவரிடம் கூறி பஸ்சை அரசு மருத்துவமனைக்கு இயக்கினார்.  மருத்துவமனை நுழைவாயில் முன் பஸ் நின்றதும் அரசு மருத்துவமனை டீனின் டிரைவர் சிவக்குமார் அங்கு ஓடி வந்தார். கர்ப்பிணியை மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல உதவி கேட்டார்.  இதைப் பார்த்த அங்கிருந்த பெண் டாக்சி டிரைவர் ஒருவர் தாமாக முன் வந்து தனது காரில் கர்ப்பிணியை ஏற்றி கொண்டு பிரசவ வார்டில் சேர்த்தார். அவரை அனைவரும் பாராட்டினர்.  இதுகுறித்து பெண் டாக்ஸி டிரைவர் ரமாதேவி கூறியதாவது:

நான் தேனியில் இருந்து கோவை வந்து கார் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். அரசு மருத்துவமனை முன் வாடிக்கையாளரை இறக்கி விட்டு நின்றிருந்தேன்.  அப்போது அரசு பஸ் வேகமாக வந்து மருத்துவமனை முன் நின்றதை பார்த்தேன். உள்ளே பிரசவ வலியால் பெண் துடித்து கொண்டு இருந்தார்.  அவரை காரில் அழைத்து சென்று பிரசவ வார்டில் அனுமதித்தேன். அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தேன். குழந்தை பிறந்ததும் அவர்கள் எனக்கு மொபைல் போனில் அழைத்து தெரிவித்தனர்.  

சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மகிழ்ச்சியாக இருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

===============================================================================================================================================



 

நான் படிச்ச கதை (JKC)

வருகை

கதையாசிரியர்: சுப்ரபாரதி மணியன்

எஸ் ரா 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக சுப்ரபாரதிமணியணின் ===>ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்<==== என்ற கதையை உட்படுத்தியிருந்தார். அதை இவ்வார நான் படிச்ச கதையாக அலசலாம் என்று வாசித்தால் ஒரே நாற்றம் தான். அசைவம் சாப்பிடும் எனக்கே வாந்தி வரும் அளவுக்கு ஆடு, கோழி அவற்றின் ஒவ்வொரு பாகங்களையும் (இரத்தம், குடல் உட்பட) சமைக்கும் முறைகளை, அவற்றின் தனி ருசியை கிட்டத்தட்ட 9 பக்கங்களுக்கு விவரிக்கிறார். பின்னர் கதை சொல்லும்  பையன் தன்னுடைய தட்டில் இருந்து ஈரலைத் திருடினான் என்று அவன் தம்பியை தள்ள, சுவரில் மோதி இரத்தக் காயம் ஆக, வீட்டில் 6, 7 வாரங்களுக்கு அசைவ சமையல் நிறுத்தப்படுகிறது.

இங்ஙனம் 10 ஆவது பக்கத்தில் தான் தலைப்புக்கேற்ற கதை துவங்குகிறது.  

பக்கத்து ஊரிலிருந்து ஒரு நாள் குமரேசன் மாமா வந்திருந்தார். அவர் சேவல் சண்டைப் பிரியர். அதற்காய்ச் சேவல் வளர்ப்பார். சேவல் சண்டையில் சாகிற கோழியின் கறியை ரொம்பவும் சுவைத்துச் சாப்பிடுவார். அதைக் கோச்சைக்கறி என்பார். அன்றைக்கு வெள்ளையூத்து சேவல்கட்டில் தன் கோழி ஜெயித்ததாயும், அந்தக் கோச்சைக் கறியைக் கொண்டு வந்ததாயும் சொன்னார்இன்னிக்கு ராத்திரி நா இங்கதா இருக்கப் போறேன்..சமைச்சு வை..’.....

அம்மா பாதி வேலையில் குமரேசன் மாமாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவரின் சேவல்கட்டுத் திறமையைப் பற்றி ரொம்பவும் சொன்னாள். ‘நாலு ஊருக்கும் சேவக்கட்டு சின்னதம்பின்னா ஒரு மருவாதைஎன்றாள். ‘கோச்சுக்கறி தின்னு வளர்ந்த ஒடம்புடா அதுவீர முனியப்பா மாதிரி கம்பீரமா..’ அம்மாவிற்கு மாமா மேல் சின்ன வயதில் ரொம்பவும் இஷ்டமாம் நானே அவரெ கல்யாணம் பண்ணியிருந்தா இப்பிடியா ஒடக்கா மாதிரி இருப்பேன். சேவல் கட்டு கோழி மாதிரி கோச்சுக் கறியெத் தின்னுட்டு நிமிர்ந்து நிப்பேனே

அம்மா இப்போது ஒரு புதுக்கதையைச் சொல்வதாய் எண்ணி நிமிர்ந்து அதை முழுசாய்க் கேட்கிற சுவாரஸ்யத்தில் உட்கார்ந்தேன்.’

வண்ணதாசனின் சிறு இசைகதையும், மூக்கம்மை ஆச்சியும் நிழலாக நினைவில் வந்தன. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ஒரு சின்ன சின்ன மனக்கோட்டைஇருந்தது, இருக்கிறது.

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்கதையைப் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள சுட்டிக்கு சென்று வாசித்துப் பாருங்கள்.

=====>ஓவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்<=====

ஆகவே அக்கதையை ஒதுக்கிவிட்டு இன்றைய விமரிசனத்திற்கு வருகை என்ற இக்கதையை உட்படுத்தியுள்ளேன். நேற்று, இன்று, நாளை, என்று எக்காலத்திற்கும் பொருந்தும் கதைகதை அல்ல நிஜம். கிராமத்து மக்கள் எப்படி ஊர் உலகத்தைப் பற்றி அக்கறையில்லாமல், அன்றாட அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது பற்றி கவலைப்படுகிறார்கள் என்பதும், எப்போதும்  குடிநீர் என்பது ஒரு அரிய பொருள், என்பதையும் கதை விளக்குகிறது. கதை வெளியான வருடம் 1989. பரிசு பெற்ற கதை.

சிலர் தலைப்பை எழுதிவிட்டு கதையை முறைப்படி தலைப்பிற்கு ஏற்ப எழுதுவார்கள். சிலர் கதையை எழுதிவிட்டு தலைப்பைத் தேடுவார்கள். இவ்வாசிரியர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர். ராஜகுமாரிக்குள்ளும், மற்றும் வருகை இரண்டும் கடைசி பகுதியின் அடிப்படையில் தலைப்பு வைக்கப்பட்டுள்ள கதைகள்.

இக்கதையை வாசித்து முடிக்கும் போது இப்பகுதியில் உட்படுத்தப்பட்ட கந்தர்வன் கதையான தண்ணீர் கட்டாயம் நினைவில் வரும். இந்திரா  ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது ?”

=====>தண்ணீர் - கந்தர்வன்<=====

வருகை

பிரதமர் வருகை பற்றிக் கிராமத்தில் பத்து நாட்களாய்ப் பேச்சு. செல்லத்தாயிக்கு ஆச்சர்யமாக இருந்தது. மாரியம்மன் பூச்சாட்டு மறுபடியும் வந்துவிட்டது போலிருந்தது, மாரியம்மன் சாட்டுன்னா தலைக்குத் தலை வரி கொடுக்கணும். வரி கொடுக்காத திருவிழா மாதிரி இது, செலவு பண்ண யார் யாரோ. பத்து நாட்கள் வேடிக்கை இன்னமும் தீரவில்லை… பொழுது போகக் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்றிருந்தது.

பிரதமரைச் செல்லத்தாயி பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் டீ.வி.யில் பல தரம் பார்த்திருக்கிறாள், “என்ன நிறம்… என்ன அழகு” என்று வியந்திருக்கிறாள், சுண்டினால் இரத்தம் வரும் நிறம். ஆரஞ்சுப் பழச் சருமம், டீ.வி. யில் பார்க்காத நாளில்லை, டீ.வி. யில் காட்டும்போது யார் என்று அவளுக்கு முன்பெல்லாம் தெரியவில்லை, கிருஷ்ணவேணி – பஞ்சாயத்து போர்டு பள்ளியில் எட்டாவது படிப்பவள் – ஒருநாள் சொன்னாள் – அவர்தான் பிரதமர் என்று. அப்போதிலிருந்து டீ.வியைப் பார்க்கிற போது பிரதமர் வந்தால், செல்லத்தாயி சட்டென அடையாளம் கண்டு கொள்வாள். “அய்… பிரதமர்” என்று முணுமுணுத்துக் கொள்வாள். பிரதமர் இன்னாரின் மகன் என்பதை அறிந்தபின் அவளுக்கு இன்னும் சந்தோஷமாகவே இருந்தது என்ன பிறப்பு, வளர்ப்பு, செல்வச் செழிப்பு, உயர் குடி வகை என்று ஆச்சர்யம் கொண்டிருக்கிறாள். அப்படிப்பட்ட பிரதமர் அவளின் கிராமத்திற்கு வரப்போகிறார். அவளின் குடிசை உள்ள தெருவுக்கு வரப் போகிறார். ஏதாவது பேசினாலும் பேசுவார். பதில் சொல்ல வேண்டும் என்று உள்ளூர்ப் பெரியவர்கள் சொல்லியிருந்தார்கள்.

எளச்சி பாளையத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவாராம். பல ஹெலிகாப்டர்கள் ஊர் மேல் சமீபமாய்ப் பறக்கின்றன – புழுதி பரப்பி. ’புஷ்பக விமானமாய், சப்த மெழுப்பாமல், சினிமாவில் தேவர்கள் வரும் வாகனங்கள் போன்று எதுவும் அவருக்கு இல்லையா?’ என்று செல்லத்தாயியும் நினைத்துப் பார்த்திருக்கிறாள். “அந்த மவராசனுக்குத் தெரியாததா, நமக்குத் தெரியப் போகுது…வரட்டும்…”

இரண்டு நாட்கள் முன் ஒத்திகை மாதிரி எல்லாம் நடந்தது. எளச்சி பாளையத்தில் புழுதி பரப்பி ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. போலீஸும், உயர் அதிகாரிகளும் வந்தனர். பிரதமர் போன்று ஒருவர் வந்தார். அவர் நடக்கும் தெருவில் நடந்தார். அவர் எங்கெல்லாம் நிற்பார். பேசுவார் என்று கணக்கிட்டு நின்றார்; பேசினார். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டுப் போனார்.

“செல்லத்தாயி.. பிரதமர் இந்தத் தெருவிலே வரப் போறார். யார் வீட்டுக்கு வேணா போவார். உங்கிட்டே வந்து ஏதாச்சும் கேட்டா சரியா, மரியாதையா பதில் சொல்லணும்..”

“சரிங்க…ஆனா அந்த மவராசன் எந்த பாஷையிலே பேசுவார். டீ.வி.யிலே அவர் பேசற பாஷை என்ன..?”

“அவர் என்ன பாஷை பேசினாலும், அதைத் தமிழிலே சொல்ல ஆளுங்க இருப்பாங்க..சரியா பதில் சொல்லு…”

“சரிங்க…சட்டுன்னு வூட்டுக்குள்ளே பூந்து சாப்பாடு சாப்பிடற மாதிரியெல்லாம் டீ.வி.யிலே காட்டறாங்களே..?”

“ஆமா…எதுக்கும் கோழிக் கொழம்பு வெச்சி வை. தயாரா!”

“நான் எங்கேங்க போவேன் கோழிக்கு – மாசக் கடைசியிலே…?” – சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.

“சை…சும்மா கெட. வீட்டிலே வந்து கோழிக் கொழும்பு திங்குறதுக்கு அவருக்கு நேரமெல்லாம் இருக்கா.. ”

இதைச் சொல்ல வந்தவர்களை நினைக்க நினைக்கப் பயமெடுத்தது அவளுக்கு. எவ்வளவு போலீஸ்காரர்கள். எவ்வளவு திடமான மனிதர்கள். ஒரு மனிதனைச் சுற்றி இவ்வளவு பேர்களா? இன்றே இப்படி யென்றால் நிஜ மனிதர் வரும் நாளில் எப்படியிருக்கும்? தலை சுற்றும் அளவுக்கு இருந்தது.

எளச்சிபாளையத்திற்கு அந்தப் புறம் ஏதோ தொழிற்சாலை வரப் போவதாக எல்லோரும் பேசிக் கொள்வது செல்லத்தாயிக்குத் தெரியும். ஒரு நாள் தன் மகன் பொன்னுரங்கத்திடம் கூடச் சொன்னாள் :

“ஏண்டா…எளச்சி பாளையத்திலே ஏதோ பெரிசா தொழிற்சாலை வரப் போகுதாம். குண்டு, வெடியெல்லாம் பண்ணுவாங்களாம்…நீயும் போய்ச் சேரேன்…எத்தனை நாளைக்கு மில்லுலே எட்டு ரூபா சம்பளத்துக்கு அலைவே. ஏதோ சர்க்காரு தொழிற்சாலைங்கறாங்க…”

“அம்மா…அது பேக்டரியில்லே..அணு உலை…அணுசக்தி சம்பந்தமானது…”

“என்ன எளவோ ..?”

“நிறைய வெடிகுண்டு மாதிரி என்னென்னமோ செய்வாங்க. ஒடம்புக்கு ஆகாதாமா… மெல்ல மெல்ல சாவு வரும் பக்கத்திலிருக்கிறவங்களையும் விடாதாமா… காச நோய் மாதிரி ஆளை அரிச்சுக் கொன்னு போடும். பொறக்கிற குழந்தைங்க கண்ணு இல்லாமே. கால்கை இல்லாமே பொறக்கும். மூளை வளர்ச்சி இருக்காதுன்னு நிறையச் சொல்றாங்க…”

“அப்புறம் அது எதுக்கு…?”

“விஞ்ஞானம்தான்…”

“என்ன விஞ்ஞானமோ…?”

“அதெல்லாம் இங்கே வந்தால் தாமெல்லாம் ஊரைக் காலி பண்ண வேண்டியிருக்கும். இப்பவே எளச்சி பாளையம் காலியாயிடுச்சுத் தெரியுமா….நம்மளை எப்ப காலி பண்ணச் சொல்வாங்களோ..? அதனால தான் இதெல்லாம் வரக் கூடாதுன்னு போராட்டம் பண்றாங்க சில பேர். நம்ம செண்பகராமன் பையன் கூட அந்தப் போராட்டத்திலே முக்கியமான ஆளுதா…அது சம்பந்தமான போராட்டத்திலதான் அவரை ஜெயில்லே போட்டுட்டாங்க. மூணு மாசத்துக்கு மேலாச்சு. இன்னும் வெளியே வுடலே..என்ன ஆகுமோ..?”

“அய்யோ… நம்மளையும் காலி பண்ணச் சொல்லுவாங்களா..”

“சொல்லலாம். நாலு கிராமம் காலியாயிடுச்சு. நம்மதும் பண்ணணும்னா பண்ணித்தான் ஆகணும். ஆனால் பணம் குடுப்பாங்க.”

“பணம் குடுத்துக் காலி பண்ணச் சொன்னால் பண்ணிட்டாப் போச்சு. நமக்கென்ன இருக்கு பெரிசா? ஓடும். காலி எடமும்தானே…காசு கொஞ்சம் ஜாஸ்தியா கெடச்சா இந்த வூரை வுட்டுட்டுப் போயிடலாம்…எத்தனை தலைமுறைக்கு இங்கே கஷ்டப்படறது..?”

“ஆனா…வழக்கமா விக்கறதை விட பாதிக்குக் கூட விலை தரமாட்டாங்க..”

“அப்புறம் என்னத்துக்கு…! ஆமா வர்ற அத்த மகராசன் பணம் குடுக்கத்தான் வர்றாரா…?”

பொன்னுரங்கம் சிரித்துக் கொண்டான்.

“போராட்டமெல்லாம் நடக்குது பாரு…அது சம்பந்தமாதான்…”

***

“அம்மா. நல்ல தண்ணிக்குப் போகனும்னா போயிட்டு வந்துடு… நாளைக்குப் பிரதமர் வர்றப்போ எங்கேயும் நடமாட முடியாது. போனா திரும்பி வர்ற வரைக்கும் நிச்சயமிருக்காது”.

பொன்னுரங்கம் செகண்ட் ஷிப்ட் வேலைக்குப் போகையில் சொல்லிவிட்டுப் போனான். குடிநீருக்குப் போகிறவர்களைக் கூடத் தடுத்து நிறுத்திச் சிரமம் தருவார்களா என்பது குறித்து ஆச்சரியமாகவே இருந்தது செல்லத்தாயிக்கு, இருந்தாலும் போய்விட்டு வந்து விடலாம் என்று இரு மண் குடங்களையும் எடுத்துக் கொண்டாள்.

உள்ளூர் கிராமத்தில் கிடைப்பது உப்புத் தண்ணீர்தான். அதை வாயில் வைக்க முடியாது. எளச்சி பாளையத்தில் சமீபமாய்த் தொழிற்சாலை வருகிறது என்று பிரமாதமாய்க் குடிதண்ணீர் வசதி, எளச்சி பாளையத்திற்குத்தான் நல்ல தண்ணீருக்கு – குடி நீருக்கு – செல்ல வேண்டும். இரண்டரை மைல்கள். ஐம்பதை எட்டிய தள்ளாத வயதில், மெல்ல மண் குடங்களுடன் நடந்து போய், கொண்டு வருவாள். அளந்து நிதானமாய்த்தான் மொண்டு தண்ணீர் தாகத்தைத் தணிக்க வேண்டும். கொஞ்சம் அதிகம் தாகம் என்று நிதானமில்லாமல் ஊற்றிக் கொண்டால் அவ்வளவுதான் – பக்கத்து வீட்டில் ஒரு சொம்பு கடன் கேட்க வேண்டும். பத்து ரூபாய் கடன் கேட்பது போல் ஒரு சொம்பு தண்ணீர் கேட்பது, எல்லோர்க்கும் அசௌகரியம்தான்.

நடக்க நடக்க நடை நீண்டு கொண்டே போவது போலிருந்தது. கால்கள் சலித்தன செல்லத்தாயிக்கு. மண்குடங்கள் எவ்வளவு கனம் கனக்கின்றன! எளச்சி பாளையத்துத் தண்ணீர்த் தொட்டி பக்கம் அலுத்து, அடைந்த போது, போலீஸ்காரர்கள் குடத்தில் என்ன என்று திரும்பத் திரும்பக் கேட்டனர், தண்ணீர் எடுக்க வந்ததைச் சொன்ன போது காதில் வாங்கிக் கொள்ளாமல், குடத்துக்குள் கைவிட்டு அலசியும் பார்த்தனர், குடத்தை வாங்கி அவசர கதியில் கீழே போட்டு உடைத்து விடுவார்களோ என்ற பயமும் இருந்தது அவளுக்கு. அவர்கள் குடங்களைக் கொடுத்த பின்னும், பயத்தால் குடங்கள் கைகளிலிருந்து நழுவி விடக் கூடாது என்று பதறினாள் செல்லத்தாயி. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. பயத்தால் நழுவி விழுந்துவிட்டால் பொன்னுரங்கம் சத்தம் போட்டாலும் போடுவான்.  தண்ணீர் பிடித்துக் கொண்டு கிளம்புகையில் போலீஸ்காரர் ஒருவர், செல்லத்தாயியைப் பார்த்துச் சப்தம் போட்டார். “நாளைக்கு இந்தப் பக்கம் வந்துராதே. எலும்பு கூட மிஞ்சாது. இந்த வயசிலே தண்ணி எடுக்க வந்தேன்னு சொன்னா யார் நம்புவா? போ, கெழம்!”

பயத்தால் கிடுகிடுவென்று கால்கள் நடுங்க நடந்தாள் செல்லத்தாயி.

கால்கள் வலியெடுத்தன. கால்களிலிருந்து வலி மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. 'ஹெலிகாப்டர் வந்து எறங்கற எடம்னு டாங்க் டாங்க்கா தண்ணியை நெலத்தில் கொட்டறாங்களே. நமக்குக் குடிக்கத் தண்ணியே கெடைக்க மாட்டேங்குது. எத்தனை வருஷம் இந்தக் கஷ்டப்படறது? மூச்சு அடங்கற வயசும் வந்துடுச்சு. இன்னமும் இந்தத் தண்ணிக்குக் கஷ்டம் தீரலியே. இதிலே எளச்சி பாளையத்திலே வெடிகுண்டுத் தொழிற்சாலை எதுக்கு? இதிலே எதுக்கு நாமெல்லாம் எடத்தை வேறே காலி பண்ணித் தரணும்…'  

செல்லத்தாயியின் கோபம் ஆகாசம் அளவு வந்து நின்றது.

*********************

வீதி சட்டெனப் பரபரப்பானது. மாரியம்மன் கோவில் முனையில் பிரதமர் நடந்து வந்து கொண்டிருந்தார். சுற்றிலும் செக்யூரிட்டி ஆட்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள். திண்ணையின் மேல் ஏறி நின்று பார்த்தாள் செல்லத்தாயி. தெரியவில்லை. பரபரவென்று ஓடிவந்த யாரோ, பிரதமர் நாகமணி வீட்டில் இருப்பதாய்ச் சொன்னார். செல்லத்தாயி ‘அப்படியா?’ என்று சொல்லிக் கொள்கையில், இன்னொருவள்: ”என்ன இருக்கு… சாப்பிட, குடேன்னு’ கேழ்வரகுக் கஞ்சியை வாங்கிக் குடிச்சிக் கிட்டிருக்கிறாராம்…” என்றான். வியப்பாயிருந்தது செல்லத்தாயிக்கு. எதிர்த்த வீட்டு ஈஸ்வரி வந்தாள். நன்றாக அலங்காரம் பண்ணியிருந்தாள். நல்ல பட்டுப் புடைவையைக் கட்டியிருந்தாள். திருவிழாவுக்குப் புறப்படுகிறவள் போல், உறவுக் கல்யாணத்திற்குப் போகிறாற் போல் இருந்தது. செலத்தாயி கிழிந்த தன் புடைவையைப் பார்த்துக் கொண்டாள்.

“என்ன பட்டுப்புடைவையும், பௌடரும்…” செல்லத்தாயி மெல்லக் கேட்டாள்.

“பிரதம மந்திரி வர்றார், இல்லியா…? வந்து சட்டுன்னு நம்ம கூட பேசினா போட்டோ புடிப்பாங்க. சினிமா புடிப்பாங்க. டீ.வி. காரங்க புடிப்பாங்க. அப்புறம் டீ.வி. யிலே காட்டுவாங்க, கொஞ்சம் சுமாராவாச்சும் நாம் இருக்க வேண்டாமா.”

செல்லத்தாயிக்குப் பொறி தட்டியது. குடிசையினுள் சென்றாள். உள்ளிருந்த மண் குடங்களை எடுத்து வந்து வெளியில் வைத்தாள், ஒரு குடம் நல்ல குடி தண்ணீர் மட்டும் இருந்தது. அது வீணாகி விடக் கூடாது, இன்றைக்கு எளச்சிபாளையம் போக முடியாது. இனி நாளைக்குத்தான். எனவே நாளை வரை ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டும். இன்னொரு மண் பாத்திரத்தை எடுத்து வந்து அந்த மண் குடத்தை மூடினாள். கடைசியில் பார்த்தால் ஏழெட்டு மண் பாத்திரங்களாகி விட்டன, மண் பாத்திரங்கள் முன்னால் உட்கார்ந்தாள்.

திடீரென வீதியில் பரபரப்பு அதிகமானது. ஜனங்கள் திமுதிமுவென்று ஓடி வந்தார்கள். பிரதமர் வந்து கொண்டிருந்தார். சுற்றிலும் செக்யூரிட்டிகளும், அரசியல் பிரமுகர்களும். கூச்சல் ஆரவாரம். எங்கே ஜனக் கூட்டம் தன் மண் பாத்திரங்களை யெல்லாம் உடைத்து, துவம்சம் செய்து விட்டுப் போய் விடுமோ என்ற பயமும் இருந்தது செல்லத்தாயிக்கு. ஆனால் அவள் மண் பாத்திரங்களுடன் குடிசைக்கு முன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவர்களே சற்று ஒதுங்கி நடக்க ஆரம்பித்தனர். எல்லோரின் பார்வையிலும் அவள் பட ஆரம்பித்தாள்.

பிரதமர் கைகூப்பியபடி வந்தார். கையிலிருந்த பூமாலைகளையும், துண்டுகளையும் மக்கள் மேல் எறிந்து கொண்டே வந்தார். செல்லத்தாயியின் குடிசை முன்பு ஜனத்திரள் அடைத்துக் கொண்டாலும், செல்லத்தாயி பானைகளின் முன்பு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. பிரதமர் குடிசையை நோக்கி வந்தார். கூட்டம் மெல்ல விலகி வழிவிட்டது. இப்போது செல்லத்தாயி அனைவரின் பார்வையிலும் பட்டாள்.

பிரதமர் அவள் முன் இருந்த மண் பாத்திரங்களை நோக்கி வந்தார். புருவங்களை உயர்த்தி என்ன என்பது போல் பார்த்தார். செக்யூரிட்டிகள் அவசரத்துடன் முண்டியடித்தனர், பிரதமரின் சைகை அவர்களைக் கட்டுப்படுத்தியது. செல்லத்தாயியின் பக்கம் சென்றார்.

கைகளைக் குவித்து “வணக்கம்” என்றார். செல்லத்தாயி எழ முயன்று உட்கார்ந்தபடியே “வணக்கம்” என்றாள்.

“எப்படி உள்ளீர்கள்? ரேஷன் ஒழுங்காய்க் கிடைக்கிறதா? அணுசக்தி ஆலை வந்தால் உங்களுக்குத் தொந்தரவு இல்லை யல்லவா?” என்றார் நளினமான ஆங்கிலத்தில். அவரின் நிறத்தையும், உடல் வாகையும் பார்த்துக் கொண்டேயிருந்தாள் செல்லத்தாயி. அவசர அவசரமாய் ஒருவர் தமிழில் பிரதமர் சொன்னதைச் சொன்னார். செல்லத்தாயி எதுவும் பேசாமல் நின்றாள். மொழிபெயர்த்தவர் மீண்டும் கேள்வியைச் சொல்லி விட்டு, “பதில் சொல்லம்மா” என்றார். செல்லத்தாயி நிதானமாய், “எப்பவும் கஷ்டம்தா…கஷ்டமில்லாமே மனுஷ ஜீவனம் இருக்க முடியுமா?” என்றாள்.

மொழிபெயர்ப்பாளர், “எல்லாம் கிடைக்கிறது. அது ஆலை பற்றி ஆட்சேபனை எதுவுமில்லை என்கிறாள்” என்றார்.

பிரதமர் லேசாய்ப் புன்னகை செய்தார்.

“இன்னிக்கு என்ன சாப்பாடு செய்தீர்கள்?”

பிரதமர் தன் கேள்வியை இந்திக்குத் திருப்பினார். மொழிபெயர்ப்பு நடந்தது.

“வழக்கமா கேழ்வரகுதா…நாளைக்கு ஞாயித்துக் கெழமை – கறியும் நெல்லு சோறும்…”

அவள் வீட்டில் கறிக்குழம்பும், அரிசி சாதமும். சாப்பிட அழைக்கிறாள் என்றார் மொழிபெயர்ப்பாளர். டி.வி. கேமராக்கள் இயங்கின. போட்டோக்கள் பளிச்சிட்டன.

“ரொம்பவும் நன்றி. இன்னொரு நாளைக்குச் சாப்பிடறேன்…”

“நாகமணி வீட்லே ஐயா சாப்பிட்டாரா?”

“ஆமா..நான் யார் வீட்லியும் சாப்புடுவேன். சாமானியன்தானே.”

“தண்ணிக்குத்தாங்க கஷ்டம். தினமும் மூணு மைல் இந்த வயசிலே நடக்கறேன்…”

“என்ன சொல்றா அம்மா?”

வெற்றுக் குடத்தை எடுத்துக் காண்பித்தாள் செல்லத்தாயி… ஒரு சொம்பில் இருந்த தண்ணீரைக் காட்டினாள்.

“நீங்க அந்தம்மா வீட்லே தண்ணியாச்சும் சாப்புடனும் என்கிறாள்” என்றார் மொழி பெயர்ப்பாளர்.

“தண்ணி கஷ்டத்தைப் போக்காமெ பக்கத்து ஊர் வெடிகுண்டு தொழிற்சாலை யெல்லா…”

செல்லத்தாயி உரத்த குரலில் சொன்னாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

யாரோ கட்டளையிட்டார்கள். டி.வி. இயங்குவது நின்றது.

“அவள் என்ன சொல்கிறாள்?” பிரதமர் செல்லத்தாயியின் முகபாவத்தைப் பார்த்த படியே கேட்டார்.

“ஒன்றுமில்லை…இருக்கும் இடத்தைக் காலி செய்யச் சொல்வீர்களா..தலைமுறை தலைமுறையாய் இருந்த இடம் என்கிறாள்.”

சரேலென்று பலர் இடம் பெயர்ந்தனர். செல்லத்தாயியை மறித்தனர். பிரதமரிடம் யாரோ போகலாம் என்றனர். பிரதமரும் சரி என்று கிளம்பினார். செல்லத்தாயிக்கு முன்னால் வலிமையான மனிதர்கள் பலர் நின்று கொண்டிருந்தார்கள், கும்பல் பிரதமருக்குப் பின்னால் போனது. புழுதி அவள் மூச்சைச் சிரமப்படுத்தியது. சட்டென ஒரு பூட்ஸ் கால் தண்ணீர் இருந்த குடத்தை மிதித்தது. பளாரென்று குடம் உடைந்து நீர் தரையில் இறங்கியது.

20-08-1989, அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ரூ.375 மூன்றாவது பரிசு பெரும் கதை.

ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் 

இயற்பெயர். ஆர். பி. சுப்பிரமணியன். பிறப்பு 1955 செகடந்தாளி, கோவை மாவட்டம். திருப்பூர் தற்போது சொந்த ஊர். சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், என்று 30 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார். கனவு என்ற இலக்கிய சிற்றிதழை 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.  

தொலைபேசித்துறையில் உதவிக் கோட்டப் பணியாளராக இருந்து 2014 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

  •  சுப்ரபாரதிமணியனின் கதைகள் முதல் பாகம் (1200 பக்கங்கள் - 156 சிறுகதைகள் கொண்டது. காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு - 2011
  •     சுப்ரபாரதிமணியனின் கதைகள் இரண்டாம் பாகம் (600 பக்கங்கள் - 60 சிறுகதைகள் கொண்டது), காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு - 2021

“தமிழில் புறவயமான மொழியும் கச்சிதமான வடிவமும் கொண்ட யதார்த்தவாதப் படைப்புகளை எழுதியவர்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன்….உணர்வு நிலைகளை வெளிக்காட்டாமல், நாடகீயமான தருணங்களை உருவாக்காமல், நேரடியாகச் சிந்தனைகளை விவாதிக்காமல் வாழ்க்கையை நோக்கி ஒரு கண்ணாடியை திருப்பி வைத்ததுபோல எழுதப்பட்டவை சுப்ரபாரதி மணியனின் கதைகள். அவற்றை சமூகவாழ்க்கையின் ஆவணப்பதிவுகள் என்று சொல்லலாம்.” ஜெ மோ

ஜீவி சார் இவரை அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

=======>சுப்ரபாரதிமணியன் - Tamil Wiki<=======

இவரது தளம்  https://rpsubrabharathimanian.blogspot.com/ 

17 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. நல்ல மனம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரையும் மனதாற போற்றுவோம்.

    இன்றைய கதை பகிர்வுகளும் அருமை. எழுத்தாளர் கந்தர்வன் அவர்கள் எழுதிய "தண்ணீர்" கதையை மறக்க முடியாது.

    அதே ரீதியில் இன்றைய கதையான "வருகை" யும் நன்றாக உள்ளது. மக்களின் சிரமங்களை புரிந்து கொள்ளாதிருக்கும், ஆட்சியமைப்பை பற்றி எழுத்தாளர் நன்றாக எழுதியிருக்கிறார். நல்ல எழுத்து.

    கடைசி வரிகள் மனதை வருத்தியது. அந்த மூதாட்டி சிரமப்பட்டு மைல் கணக்கில் நடந்து எடுத்து வந்த குடி தண்ணீர் வீணாக மண்ணோடு கலந்தது போன்றுதான் ஏழை எளியவர்களின் வேண்டுதல்களும் பயனற்றுப் போய்விடும் என்பதை எழுத்தாளர் சுட்டிக் காண்பித்துள்ளார். இது காலங்காலமாக மாற்றமில்லாமல் இருந்து வருவதுதான்.

    கதையை பகிர்ந்தளித்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்து கருத்துக் கூறியமைக்கு நன்றி.

      நீக்கு
  3. டாக்ஸி ஓட்டுனர் மூலம் இன்னும் மனிதநேயம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  4. முதல் செய்தி அருமையான செய்தி.

    ஆனால் இன்னொன்று இனியும் காட்டை அழிக்காம இருந்தா நல்லது!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இரண்டாவது செய்தி காணொளி கண்ணில் நீரை வரவழைத்த நெகிழ்ச்சியடையச் செய்த ஒன்று...அந்த வெள்ளந்திமுகங்களைப் பாருங்க.

    பாருங்க நீட் ல இப்படியான சூழல் உள்ள பசங்க கூட தேர்ச்சியாகி மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவது மகிழ்வான ஒன்று.

    அந்தப் பையன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல மருத்துவராக வருவார் வரவேண்டும் என்று வாழ்த்துவோம் மனதார. அந்த அம்மாவின் இன்றைய மகிழ்ச்சி மகன் மருத்துவராக வெளிய வரப்ப எப்படி இருக்கும் என்பதை விஷுவலைஸ் செய்து பார்த்தேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. முதல்ல டாக்சி ட்ரைவர் ரமாதேவிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் டாக்சி டிரைவராகப் பணியாற்றுவதற்கே பாராட்ட வேண்டும்! இப்ப இந்தச் செயலுக்கும் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வருகை கதை, ஜெகே அண்ணா சொல்லியிருப்பது போல் கந்தர்வன் அவர்களின் தண்ணீர் கதையை நினைவுபடுத்தியது.

    வருகை கதை அருமையா எழுதியிருக்கிறார் ஆசிரியர். இப்போதுதான் ஆசிரியரை அறிகிறேன். குறித்து வைத்துக் கொண்டுள்ளேன்.

    ரொம்ப யதார்த்தமாகச் செல்கிறது. அப்பட்டமாக நம்ம அரசியல்வாதிகளின் முகத்தையும் அவர்களைச் சுற்றிப் பணியாற்றும் அல்லக்கைகளின் முகங்களையும் சொல்கிறது. குறிப்பாகப் பாருங்க அந்த மூதாட்டி சொல்வதை எப்படி மொழிபெயர்க்கிறார் என்று!!!

    படிப்பறிவு அவ்வளவாக இல்லாத மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

    தலைவர்கள் தன்னுடன் வரும் அல்லக்கைகளை நம்புவதை விட நேரடியாகப் பேசும் மக்களின் மொழியை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் தெரியும். மக்களின் குறைகளைக் கேட்க முடியும்.

    கதை எனக்கு மிகவும் பிடித்தது. மிக்க நன்றி ஜெ கே அண்ணா நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து பகிர்ந்ததற்கு

    இன்று இவ்வளவுதான் பணிச் சுமை..ஓடுகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. போற்றுதலுக்கு உரியவர்களைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  9. //அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்திருக்கும் இந்த அன்பு மகனை வாழ்த்துவோம்.//

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். தாய்க்கும் வாழ்த்துகள் காணொளி நெகிழ்வு.

    பஸ் கண்டக்டர், டிரைவர், டாக்ஸி டிரைவர் அனைவரையும் பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. //கால்கள் வலியெடுத்தன. கால்களிலிருந்து வலி மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. 'ஹெலிகாப்டர் வந்து எறங்கற எடம்னு டாங்க் டாங்க்கா தண்ணியை நெலத்தில் கொட்டறாங்களே. நமக்குக் குடிக்கத் தண்ணியே கெடைக்க மாட்டேங்குது. எத்தனை வருஷம் இந்தக் கஷ்டப்படறது? மூச்சு அடங்கற வயசும் வந்துடுச்சு. இன்னமும் இந்தத் தண்ணிக்குக் கஷ்டம் தீரலியே. இதிலே எளச்சி பாளையத்திலே வெடிகுண்டுத் தொழிற்சாலை எதுக்கு? இதிலே எதுக்கு நாமெல்லாம் எடத்தை வேறே காலி பண்ணித் தரணும்…'

    செல்லத்தாயியின் கோபம் ஆகாசம் அளவு வந்து நின்றது.//

    நமக்கும் தான் கோபம் வருகிறது. தண்ணீர் எடுத்து வர வயதான காலத்தில் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு

  11. //சட்டென ஒரு பூட்ஸ் கால் தண்ணீர் இருந்த குடத்தை மிதித்தது. பளாரென்று குடம் உடைந்து நீர் தரையில் இறங்கியது.//

    படிக்கும் போது மனம் கனத்து போனது. இன்றும் குடி தண்ணீருக்கு கஷ்டபடும் ஊர்கள் இருக்கிறது. வெகு தூரம் தண்ணீர் சுமந்து வரும் மக்கள் இருக்கிறார்கள், அவர்களில் செல்லதாயி ஒருவர்.

    கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஜீவி சாருக்கு என்ன கோபமோ, காணவில்லை

    பதிலளிநீக்கு
  13. ஜெஸி ஸார், சுப்ரபாரதி மணியன் தெரிந்தவர் தான். நிறைய இலக்கிய சந்திப்புக்களுக்கு அடிகோலியவர்.

    மகன் வீட்டிலிருந்து மகன் குடும்பத்தோடு என் பெண் வீட்டிற்கு வந்திருக்கிறோம். நேற்று 9 மணி நேர கார்ப்பயணம். காலை கலகலப்பில் கைப்பேசியை எடுக்க வாய்ப்பில்லை. அடுத்த பதிவிற்கு வருகிறேன்.
    இடையில் பூவனத்தில் சந்திக்கலாம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!