திங்கள், 5 ஆகஸ்ட், 2024

"திங்க"க்கிழமை  : எள்ளடை (தட்டை) - துரை செல்வராஜூ ரெஸிப்பி

 எள்ளடை (தட்டை)

துரை செல்வராஜூ 


தேவையானவை :

அரிசி மாவு 200 gr
கோதுமை மாவு 50 gr
பொட்டுக்கடலை மாவு 100 gr
கடலைப்பருப்பு 1 T sp
ஓமம் அல்லது சீரகம் தேவையான அளவு
வெண்ணெய் 1 t sp
பெருங்காயத் தூள் சிறிதளவு
கல்உப்பு சுவைக்கு
கறிவேப்பிலை 1 இணுக்கு
கடலெண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை;
எள்  - இதற்குத் தான் முதலிடம்..

தற்போது பலருக்கும் தோலில் ஒவ்வாமை ஏற்படுகின்ற சூழ்நிலையில் - எள், நல்லெண்ணெய் இவற்றை சற்றே விலக்கி வைக்க வேண்டியதாகின்றது..

எவ்வித பிரச்னையும் இல்லை எனில் ஓமம்  சீரகத்திற்குப் பதிலாக எள் சேர்த்துக் கொள்ளலாம்..

கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி உலர்த்திக் கொள்ளவும்..

பாத்திரம் ஒன்றில்  அரிசி மாவு கோதுமை மாவு பொட்டுக்கடலை மாவுடன் -

பெருங்காயத் தூள், மிளகுத் தூள், ஓமம், உப்பு, உலர்ந்த கடலைப் பருப்புடன்  கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீர் தெளித்து  வெண்ணெயும் சேர்த்து பக்குவமாகப் பிசைந்து கொள்ளவும்.. 

பிசைந்த மாவை  அப்படியே அரை மணி நேரத்திற்கு வைத்து விடவும்..

அரை மணி நேரம் கழித்து
மாவை சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி  மெல்லியதாகத் தேய்த்துக் கொள்ளவும்.

மிதமான சூட்டில் கடலெண்ணெயைக் காய வைத்து - தேய்க்கப்பட்ட தட்டைகளை எண்ணெயில் இட்டு சிவந்ததும் எடுக்கவும்..

கோதுமை மாவு சேர்ப்பது நமது வழக்கமல்ல... பொர பொரப்பாக இருப்பதற்காக கோதுமை மாவு தேவையாகின்றது என்கின்றனர்.. 

இந்த செய்முறையில் சோடா உப்பு சேர்க்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்..

தட்டை காரமாக இருப்பதற்காக சிலர்
மிளகாய்த் தூளைச் சேர்ப்பார்கள்..
மிளகாய்த் தூள் வேண்டாம்.. அதை விட மிளகுத் தூள் நல்லது.. 

விருப்பம் எனில் மிளகுத் தூள் 1 t sp சேர்த்துக் கொள்ளலாம்..

ஃஃஃ

27 கருத்துகள்:

  1. தட்டை என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு அவள் செய்யும் கைமுறுக்கு.

    தட்டை செய்முறை நன்று. படங்கள் சேர்த்திருக்கவேண்டுமல்லவா? கேஜிஜி சார் காணாமல் போய்விட்டாரே

    பதிலளிநீக்கு
  2. மனி தட்டை, இராஜபாளையம் தட்டை எனப் பல்வேறு வேடம் தாங்கி வருவதெல்லாம் பிடிப்பதில்லை. பாரம்பர்யமாகச் செய்யப்படும் தட்டைதான் பிடிக்கும். அதிலும் ஆங்காங்கே பொரிந்து தொட்டால் உடையும் நிலையில் இருப்பவைகளோ இல்லை தொட்டாலே எண்ணெய் வழிபவைகளோ பிடிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பிரியாணிக் கடை ஒன்றில் இட்லி பொங்கல் வடை சட்னி.. மக்களும் சளைக்காமல் தின்று கொண்டு இருக்கின் றனர்...

      வாத்தியாரே.. இது சவர்மா எனும் அரை வேக்காடுகளின் காலம்..

      இப்படித்தான் இருக்கும்...

      நீக்கு
  3. காலையில் போடும் கருத்தே மறைகிறதே

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. வழக்கம் போல விடியற்காலையில் எழுந்தேன்.. வெளியான பதிவைப் பார்த்தேன்.. மகிழ்ச்சி...

    ஒருசில பிரச்னைகளால் வழக்கம் போல வரவேற்க இயலவில்லை...

    மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
  6. துரை அண்ணா சூப்பர் குறிப்பு. நல்ல செய்முறை.

    எள் அடை என்று சொல்வதை நான் பாண்டிச்சேரியில் இருக்கறப்ப கற்றுக் கொண்டேன். தட்டைக்கு வேறொரு பெயரும் சொல்லப்படுவது இப்ப டக்குன்னு நினைவுக்கு வரவில்லை.

    பொதுவான தயாரிப்பில் பச்சை அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து செய்யப்படுவது. நிலக்கடலையும் தட்டிப் போட்டுச் செய்யப்படும்.

    நான் கோதுமை மாவு கலந்து செய்யறப்ப அதை ஆவியில் கொஞ்சம் வைத்து எடுத்து அதன் பின் கலந்து செய்வதுண்டு அப்ப அதில் இருக்கும் க்ளூட்டன் தன்மை கொஞ்சம் குறைந்து பொரிப்பதற்கு நல்ல மொறு மொறுவென்று வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுக்கு சட்னு வராத்துக்குக் காரணம் வயதாவதால் என உண்மையைச் சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமா என்ன?

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை அண்ணே!

      தட்டு வடை ன்றது அது சாட் மாதிரி செய்வது. சேலம் ஃபேமஸ். நான் சொல்றது நார்மல் தட்டை.....தட்ட முறுக்கு இல்லை, நெல்லை.

      கீதா

      நீக்கு
  7. மிகவும் வித்தியாசமான குறிப்பு! பொதுவாய் கீதா சொல்வது போல அரிசி மாவும் உளுந்து மாவும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தான் தட்டை செய்வது. கோதுமை மாவு கலந்து செய்வது வித்தியாசமாக இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிசி மாவும் உளுந்து மாவும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தான் தட்டை ..

      ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு செய்முறை வேறு வேறு..

      முடிந்தவரை மைதா வைத் தவிர்ப்பதே நோக்கம்...

      மேல் விவரங்களுக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
    2. @ கீதா..

      ///பொதுவான தயாரிப்பில் பச்சரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து செய்யப்படுவது. நிலக்கடலையும் தட்டிப் போட்டுச் செய்யப்படும்...///

      இது புதிய தகவல்... அருமை...

      நீக்கு
  8. செய்முறை விளக்கம் சொல்லிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ஊர் பக்கங்களில் எங்கள் வீட்டிலும் கூட புழுங்கலரிசியை ஊறப்போட்டு அதில் சிவப்பு மிளகாய், கட்டிப் பெருங்காயாம் ஊறவைத்துக் கரைத்து அதையும் சேர்த்து நன்றாக அரைத்து அதனோடு ஏற்கனவே (எங்கள் ஊர் பக்கங்களில் உளுந்து மாவு நன்றாகத் திரித்தது கிடைக்கும். அதை வறுத்து வைத்திருப்பாங்க வீட்டில். அதை அரைத்த மாவுடன் (அளவு உண்டு) கலந்து ஊற வைத்த கடலைப்பருப்பு, கறிவேப்பிலை உப்பு எல்லாம் கலந்து தட்டை செய்வதுண்டு.

    திருவனந்தபுரத்தில் இருந்தது வரை உ மாவு கிடைத்ததால் எளிதாகவும் இருந்தது.

    அதன் பின் சென்னைப்பக்கம் வந்த பிறகு வீட்டிலேயே உ மாவு தயாரித்து வைத்துக் கொண்டு தட்டை, முறுக்கும் கூட புழுங்கலரிசி முறுக்குதான்.

    கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டும் பச்சரிசி மாவில் செய்வது.

    கோதுமை மாவுக்குப் பதில் கடைகளில், பல வீடுகளில் மைதா சேர்த்துதான் செய்யறாங்க. மைதாவையும் ஆவியில் சற்று வைத்து எடுத்துக் கலந்து செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தட்டை பற்றிய
      மேல் விவரங்கள் பயனுள்ளவை... மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  10. தட்டை நல்ல குறிப்பு.

    நமது ஊர் குறிப்பு காய்ந்த மிளகாய் இடித்துப் போட்டு காரமாக இருக்கும். மிளகாய் காரம் தவிர்ப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மிளகாய் காரம் குறைப்பது/ தவிர்ப்பது நல்லது..///

      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  11. கோதுமை மாவு, பொட்டுக்கடலை மாவு எல்லாம் சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான தட்டை. படங்கள் எடுக்கவில்லையா? கோதுமை மாவு சேர்த்திருப்பதால் சாஃப்டாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் மிகப் பழைய குறிப்புகள்....

      நேரடியாக தயாரித்தால் தான் உண்டு.. எங்கள் வீட்டில் உணவுப் பொருட்களைப் படம் எடுப்பதற்குத் தடை...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. எனது பதிவையும் பொருட்படுத்தி வருகை தந்து கருத்துரை
    வழங்கிய அனைவருக்கும் நன்றி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  13. தட்டை செய்முறை வழக்கம் போல் இல்லாமல் புதுமையாக இருக்கிறது.
    கோதுமை மாவு சேர்த்தது இல்லை.
    என் மாமியார் மிக அருமையாக தட்டை செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  14. தட்டை எனக்கும் பிடித்தது... செய்முறை நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!