1.7.26

குளிப்பதற்கு ஷவர் கண்டுபிடித்ததன் காரணம் என்ன? + சரோஜாதேவி கதை பகுதி 05

 

கேள்வி பதில்கள் :

நெல்லைத்தமிழன்: 

1. மற்றவர்களின் அனுபவம், அறிவுரைகள் தவிர, அக்கப்போர் செய்திகளால், யார் யாரை வைத்திருந்தார், டைவர்ஸ் ஆனது போன்ற தனிப்பட்ட வாழ்க்கை, யாருக்கு என்ன உபயோகம்? ஏன் அவற்றைத் தெரிந்துகொள்ள மக்கள் அலைமோதுகிறார்கள்?  

# வம்பில் மனிதர்களுக்கு ஒரு தனியான சுவாரசியத்தை கடவுள் டிசைன் செய்திருப்பதாகத் தெரிகிறது.

$   நம் வீட்டில் கரண்ட் போனால் உடனே பக்கத்து வீட்டைப் பார்ப்பது இல்லையா?  அது போலதான்!  சம்பந்தமில்லாமல் ஒரு குட்டிக்கதை  :  அந்தத் தெருவுக்கு ஒரு விலைமாது வந்திருந்தாராம்.  ஒருநாள் மனைவி கணவனிடம் ஊர்வம்பு பேசினாளாம்.  "இந்தத் தெருவிலேயே ஒரே ஒரு ஆண்தான் அவளிடம் போகவில்லையாம்.  யாராயிருக்கும்?"  கணவனும் யோசித்தானாம்..  "ஆமாம்..  யாராயிருக்கும்..  பக்கத்து வீட்டு சுப்புவாயிருக்குமோ..  அவன்தான் கொஞ்சம் பயந்த சுபாவம், கூச்ச சுபாவம்" என்றானாம்.

2.  குளிப்பதற்கு ஷவர் கண்டுபிடித்ததன் காரணம் என்ன? தண்ணீர் சிக்கனத்திற்காகவா இல்லை மழையில் குளிக்கும் உணர்வுக்காகவா?  

# சோம்பல் சுகம். சிரமமின்றி நீர் சரியாக நிரந்து விழுவது தரும் திருப்தி.

& மொட்டை மாடியில் முதன் முதலில் மழையில் குளித்த ஆசாமிதான் அந்த மழை இன்பத்தை தொடர்ந்து அனுபவிக்க shower கண்டுபிடித்திருப்பார். அப்போ bath tub கண்டுபிடிச்சவர் யாரு? eureka புகழ் கி மு ஆர்கிமிடிஸா ? 

$  வீட்டில் ஷவர் இருந்தும் நான் ஷவரில் குளிப்பதே இல்லை.  என்ன காரணமாயிருக்கும்?

3. யாராவது அப்பாவிக்கு துன்பமோ இல்லை அநீதியோ செய்திருக்கிறீர்களா?  

# யோசித்துப் பார்த்தால் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

& செய்தது உண்டு. அறியாத வயதில். இப்போ நினைத்து வருந்தி என்ன பயன்?

$ நேற்று கூட செய்தேன்.  பல அப்பாவிகளை ஒரு கதை வெளியிட்டு வதைத்திருக்கிறேன்! 

4.  உங்களுக்குப் பொதுவாகப் பிடித்த காலை உணவு எது?  நேரத்திற்குச் சாப்பிடும் வழக்கத்தைக் கடைபிடிக்கிறீர்களா?  

# காலை உணவு தயிர் சேர்த்த ராகி உப்புக் கஞ்சியாகி பல நாட்கள் ஆகின்றன. நேரத்துக்கு சாப்பிடுவது தானாகவே அமைந்து விடுகிறது.

& தோசை & மிளகாய்ப் பொடி ( with or without எண்ணெய் ) பெரும்பாலும் நேரத்திற்குச் சாப்பிடுவது என் வழக்கம். 

$   99%.  காலை எட்டரை மணி.  மதியம் ஒரு மணி.  இரவு ஏழு மணி!  பிடித்த உணவு என்பது மாறிக்கொண்டே இருக்கும்.  எதுவும் ஒன்றையே தொடர்ந்து சாப்பிட்டால் போர் அடித்து விடும்.

5. முன் போல மக்கள் காலையில் அல்லது மாலையில் கோயிலுக்குப் போகும் வழக்கத்தை ஏன் கடைபிடிப்பதில்லை?

# அசிரத்தை சோம்பல் மற்றும் மதியாமைதான். எதற்கானாலும் அடிப்படையானது  மனதில் இருக்கும் விருப்பம்தான். கலிகால லட்சணம் இந்த அசிரத்தை.

& முன் காலத்தில் வீட்டிற்கு அருகிலேயே கோயில்கள் இருந்ததால் அடிக்கடி கோயில்களுக்கு சென்று வர முடிந்தது. இப்போ நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் அதற்கு எதிரே ஆஞ்சி கோவில் - விஷேச நாட்களில் செல்வது உண்டு. வழக்கத்தைக் கடைபிடிக்காததின் காரணம் : கோயில் அருகில் இல்லை  & வயது அதிகம் ஆகிவிட்டது. 

$ இதோ இந்த பதிலை டைப்பிடிக்கும் இந்த நேரம் (செவ்வாய் மாலை 5:50) கூட பாஸும் மருமகளும் கோவில் சென்றிருக்கின்றனர்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

இப்போது இருக்கும்  நடிகர்களில் பாரதியாராக நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்?  என் ஓட்டு தனுஷ் & சூர்யாவுக்கு.

# பாரதியாராக இன்னும் ஒருவர் நடிக்கத் தேவை என்ன இருக்கிறது ?

& ஏற்கெனவே பல பாரதியார்களை பாத்துட்டோம் - சிவாஜி முதல் கமல் (?) வரை. அதனால ஒரு சேஞ்சுக்கு பவர் ஸ்டார் சீனிவாசனை பாரதியார் வேடத்தில் பார்க்க ஆசை! 

$   AI இருக்கும்போது இவர்களெல்லாம் எதற்கு?!

சிலர் உடைகள் குறிப்பாக உள்ளாடைகள் வாங்குவதில் குறிப்பிட்ட  பிராண்ட்தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பார்கள், நீங்கள் எப்படி?

# நானும் அப்படித்தான் - ஆனால் விலை நியாயமானதாக இருக்கவேண்டும்.

& எனக்கான உள்ளாடைகளை நானே தேர்ந்தெடுத்த காலங்களில் எது cheap & good குவாலிடி என்று பார்த்து தேர்ந்தெடுப்பேன். இப்போ எனக்காக பையனோ அல்லது பெண்ணோ தேர்ந்தெடுத்தால் அவர்கள் branded items மட்டுமே வாங்குகிறார்கள். 

$ ஒரு வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்கள் இருந்தால் (பெண்களுக்கும் பொருந்தும்தான்) இன்னார் இந்த ப்ராண்ட் என்று வகைப்படுத்தி எடுத்து அணிவது சுலபமாகும்.  எல்லோரும் ஒரே நிறத்தில், ஒரே சைஸில், ஒரே பிராண்டில் வைத்திருந்தால் என்ன ஆகும்!

கீதா சாம்பசிவம் : 

1) பெண்கள் அடுத்தடுத்து ஏமாந்து போய்த் திருமணம் ஆனவரையே திருமணம் செய்துக்கறதைப் பார்த்தால் நம்ம தமிழகத்து இளைஞர்கள் திருமணத்துக்குப் பெண்ணே இல்லாமல் திண்டாடுவது தான் நினைவில் வருது. இப்படி இருக்கையிலேயே ஏன் பெண்கள் ஏற்கெனவே திருமணம் ஆகிக் குழந்தை இருப்பவரைக் கல்யாணம் செய்து கொண்டு கஷ்டப்படணும்? சிலர் உயிரையே ஏன் விடணும்? இவ்வளவு ஏமாளிகளா படித்த பெண்கள்?

# அப்படி நடப்பதற்கு சில கட்டாயக் காரணங்கள் இருக்கலாம் என்பது என் ஊகம்.  வசதிபடைத்த பேரழகிகள் தாம் ஏமாறாமல் பாதுகாப்பாக இருப்பதுதான் முக்கியம் என்றெண்ணிச் செய்வதாக நான் நினைக்கிறேன். ஜாக்குலின் கென்னடி நினைவுக்கு வருகிறார்.

$ முன் போல இப்போது அவ்வளவு இப்படியான திருமணங்கள் நடப்பதில்லை என்று நினைக்கிறேன்.

2) அவங்க படிப்பு அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததுதான் என்ன? கொஞ்சமானும் விழிப்புணர்ச்சி இருக்க வேண்டாமா? இன்னொரு பக்கம் காதலன் இருந்தும் வேறொருவருடன் திருமணம் செய்துக்கச் சம்மதம் சொல்லிட்டுப் பின்னர் அந்த மணமகனை ஏன் கொல்ல வேண்டும்?

# நீங்கள் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தைப் பார்த்து இப்படிக் கேட்கிறீர்களோ ? விபரீதமான காரியங்களுக்கு இரண்டு விஷயங்கள் அடிப்படை. கடந்த காலத்தில் அருவருக்கத் தக்க நடவடிக்கை.  இரண்டாவது கொடூர மனம்.

& கேதன் அகர்வால்  - சியால் கோயல் -  சேத்தன் சௌத்ரி விவகாரம்தானே? புரியாத புதிர். இதுவரை கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கேதன் சொத்து & சியால் + சேத்தன் காதல்தான் motive என்று தோன்றுகிறது.  சியாலின் பெற்றோர்கள் பணம் & அந்தஸ்து பார்த்ததால் நிகழ்ந்த விபரீதம்.  'விதியின் கொடூரம் :(((' 😭

$ இதற்கான விவரங்களை இப்போது ஃபேஸ்புக்கில் காலச்சக்கரம் நரசிம்மா தொடராக எழுதி வருகிறார்.

3) இன்றைய பெண்கள் என்னதான் எதிர்பார்க்கின்றனர்?

# வசதியாக உல்லாசமாக இருக்க வேண்டும் என்றுதான்.

& அது அவர்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை என்று தோன்றுகிறது. 

$  சொன்னால் திட்டுவீர்கள்!  அடிக்க வருவீர்கள்!

4) எழுபதுகளில் பெண்கள் குடும்பம், குழந்தைகள், மாமியார், மாமனார், மைத்துனர்கள், நாத்தனார்கள் என அனைவரையும் பார்த்துக் கொண்டு சிலர் வேலைக்கும் போனார்கள். ஆனால் இன்றைய பெண்களோ ஒரு குழந்தையை வளர்ப்பதே சிரமம் எனச் சொல்லிக் கொண்டு இருப்பதோடு அதையும் சரியாக வளர்ப்பதில்லை. செல்லம் கொடுத்துக் கெடுத்து விடுகின்றனர். இதெல்லாம் கடைசியில் எதில் போய் முடியும்?

# எல்லாவற்றுக்கும் கூலிக்கு ஆள் வைத்துக் கொண்டு அதனால் வரக் கூடிய உபத்திரவங்களை எதிர் கொள்வதில் முடியும்.

$ பெண்களை மட்டும் சொல்கிறீர்களே...   அவள் கணவனும் அப்படிதான் நினைக்கிறான்!

5) குறைந்து கொண்டே வரும் இந்துக்கள் எண்ணிக்கை இப்படிப்பட்ட பெண்களினால் விரைவில் 10 அல்லது 20 சதத்துக்கு வந்துடுமோனு நினைக்கிறேன். எதிர்காலம் நினைக்கவே பயமா இருக்கு. நான் என்னமோ இருந்து பார்க்கப் போவதில்லை என்றாலும் வருங்காலம் கொஞ்சம் கவலை தருவதாகத் தான் இருக்கு.

# தேவையற்ற சாத்தியக் கற்பனைக் கவலைகள் நமக்கு இயல்பு.

$  அதீத பயம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.

=====

படமும் பதமும் : 

ஸ்ரீராம் :

இப்போதெல்லாம் KBS பேருந்துகள் இப்படிதான் கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  சமீபத்தில் பேஸ்புக்கில் பாரதியார் படத்தோடு இந்த கம்பெனியின் பஸ்படம்  ஒன்றை ஒருவர் பகிர்ந்திருந்தார்.  அந்தப் படத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது!



சென்னை நித்ய அமிர்தம் உணவகத்தில் ஒரு 'பென்னே தோசை' வாங்கி முதன்முறை சுவைத்தபோது....

பார்க்க சாதாரண தோசை போல இருக்கும் இது..

இங்கேயும்...  

........இங்கேயும் பார்க்கும்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.  இப்படி கஞ்சி போட்ட காவல்காரர் சீருடை போல இது நிற்பதற்கு மாவில் என்ன கலந்திருப்பார்கள்?!


நெல்லைத்தமிழன் :


கேரளாவில் பாரம்பரிய வல்லம் களி எனப்படும் படகுகளையும் அதில் போட்டிக்காகச் செல்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். தாய்வானில் இப்படிப்பட்ட படகுப்போட்டியைப் பார்த்தேன்.  கேரள படகுகள் போலவே இவையும் சிறிய ஆனால் நீளமான படகுகள்.  இந்த மாதிரி படகுப் போட்டிகள் இளைஞர்களுக்கு பொழுது போக்கு மாத்திரம் அல்ல, உடல் வலிமையை அதிகப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. ஆமாம் போட்டியில் கலந்துகொள்ள வந்துள்ளவர்கள் எப்படி இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசையா? அடுத்த படத்தில் அதுதான். 


நல்லா கட்டுமஸ்தா இருக்காங்களா? நான் படகுப்போட்டிக்குத் தயாராக நின்றுகொண்டிருப்பவர்களைச் சொன்னேன். போட்டியும் நன்றாக இருந்தது. வெளிநாடுகளில் நான் பார்த்த விசேஷம், அங்கு பார்வையாளர்களிடம் ஒரு ஒழுங்கு இருந்தது. (குறிப்பா தாய்வான் போன்ற தேசங்களில்). அதுபோல வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள் கொஞ்சம்கூட பயமில்லாமல், ஒரு நட்பான தேசத்தில் பயணிப்பதை உணர முடியும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிக மிகக் குறைவு என்பது ஒன்றுதான் குறை. 

எ பி கமெண்ட் : 

மூஞ்சிய மட்டும் ஃபோட்டோ எடுத்துப் போட்டா கட்டுமஸ்து என்றோ ச ஃபி என்றோ எப்படி சொல்லமுடியும் என்று எழுத ஆரம்பித்து .. பிறகு silent ஆகிட்டோம்! 

"கட்டுமஸ்தா நீயிருந்தா எங்களுக்கென்னம்மா..  கட்டிக்கொள்ளப் போறவன்தான் இஷ்டப்படுவானம்மா..."  SPB குரலில் வரும் பாடல் வரிகள்!

======   

KGG பக்கம் : 

சரோஜாதேவி : 

முன்கதை சுருக்: 

பகுதி 01 :  பாபா ஒரு துப்பறியும் நிறுவனத்தில் private detective ஆக வேலையில் சேர்கிறான். நாநா என்பவரிடமிருந்து appointment கேட்டு - சந்திக்க நேரம் கேட்டு வாட்ஸ் ஆப் செய்தி வருகிறது. பாபா சம்மதிக்கின்றான். 

பகுதி 02 :  நாநா வருகிறான். சரோஜா மெமரி கார்ட் பற்றி விளக்குகிறான். பாபாவின் ஜாதகம் கேட்கிறான். பாபா உள்ளே சென்று ஜாதகம் கொண்டுவருகிறான். 

பகுதி 03 :  நாநா பாபாவிற்கான சரோஜா மெமரி கார்ட் உருவாக்கி, அதை இயக்கி ஒரு ஜோதிட முன் நிகழ்வை சொல்கிறான். 

பகுதி 04 : நாநா சொன்னபடியே பாபாவின் நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. 

பகுதி 05 : " வீட்டுக்கு வாங்க " 

வேகமாக செயலில் இறங்கினான் நாநா. 

பாபாவின் நெற்றியில் உள்ள சிறு காயத்தை டெட்டால் போட்டுக் கழுவி, துடைத்து,  ஹாண்டி பிளாஸ்ட் ஓட்டினான். 

" உங்க அம்மா அப்பா எங்கே இருக்கிறார்கள்? " என்று கேட்டான் நாநா. 

" அவங்க ரெண்டு பேரும் அண்ணன் கூட UKல இருக்காங்க. அண்ணனுக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். நான் மட்டும்தான் இந்தியாவில் இருந்து கொண்டு இந்த வீடு மற்றும் ஊரில் உள்ள சொத்துக்கள் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்கிறேன். வேலைக்காரப் பெண்மணி வீட்டை பார்த்துக் கொள்வது வீட்டை சுத்தம் செய்வது காலை மதியம் உணவு, மாலை டிபன் இரவு உணவு எல்லாவற்றையும் எனக்காக சமைத்து வைத்து விடுவார்கள். இப்போவே மதிய உணவு சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் தயார். சாதம், பருப்பு ரெண்டும்  நான் சூடாகத் தயார் செய்துகொள்வேன். " 

நாநா சொன்னான்: " கவலைப்பட வேண்டாம். சின்ன காயம்தான். ஆனால் இதை வைத்து சில பெரிய விஷயங்கள் செய்யப் போகிறேன். நிறைய தமிழ்ப் படங்களில் கதாநாயகர்கள் செய்வதுதான். ஏதோ பெருசா அடிபட்டது போல சீன் போடணும். அப்படி செஞ்சா விமலாவை உங்க பக்கம் இழுத்துடலாம். " 

" அது சரி - இந்த சின்ன ஹாண்டி பிளாஸ்ட் பார்த்து யார் ஏமாறுவாங்க? " என்று கேட்டான் பாபா. 

" இதோட நான் விடப்போறேன் என்று யார் சொன்னது? " 

" ஆ - அப்போ மம்தா தீதி போல கால் கட்டு போடப் போறீங்களா ? " 

" இல்லை. கால்கட்டு போட தலைக்கட்டு! இன்னும் கொஞ்சம் மேக்கப் எல்லாம் போட வேண்டியது இருக்கிறது அப்பொழுது பார்த்தால் உங்களுக்கு எல்லாம் புரியும்"  என்று சொல்லி  நாநா உடனே  மேக்அப் வேலையைத் தொடங்கினான். பாபாவின் நெற்றியில் என்னென்னவோ வேலை செய்து வாழைப்பழம் குங்குமம் எல்லாவற்றையும் குழைத்து  ஒன்றாக கலந்து நெற்றியில் வைத்து பெரிய கட்டு ஒன்றைப் போட்டான் நாநா. 



" சாயந்தரம் உங்கள் வீட்டு வேலைக்கார பெண்மணி எப்பொழுது வருவார்கள்? "  என்று கேட்டான் நாநா. 

" சாயந்திரம் அஞ்சு மணிக்கு " என்றான் பாபா. 

" சாயந்திரம் அவங்க வந்ததும் உங்களைப் பார்த்து பதறிப் போய் என்ன நடந்தது என்று கேட்பார்கள். உங்க நடிப்புத் திறமையைக் காட்டுங்க. அவங்க உடனே விமலா வீட்டில் வேலை செய்யும் தன் சகோதரிக்கு சொல்லி, அதை அவங்க விமலாவிடம் சொல்லி, விமலாவின் அனுதாபம் உங்க மேல வரவேண்டும். ஓ கே யா? " 

" ஆஹா - அப்படியே செய்கிறேன் " என்றான் பாபா. 

தெருவில் கலாட்டா செய்யும் கூட்டம் இன்னும் கலையவில்லை. வாசல் அழைப்பு மணி ஒலித்தது. பாபாவை அங்கேயே இருக்குமாறு சைகை செய்த நாநா சென்று கதவைத் திறந்தான். 

கையில் உள்ள தன் செல்ஃபோனில் ஒருவர் படத்தைக் காட்டி, "இவர் இந்த வீட்டு ஆளா?" என்று கேட்டான் ஓர் இளைஞன். 

பாபா சொன்ன நிகழ்வுகளைக் கேட்டிருந்ததால், அந்தப் படத்தில் இருப்பது  'எதிர் வீட்டு பெண்களின் தாய் மாமா' படம் என்று யூகித்தான் நாநா. 

" இல்லை. இவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இவரை இந்தத் தெருவில் நான் பார்த்தது இல்லை" என்றான் நாநா. 

" நேத்திக்கு நீங்க இந்த ஊட்ல இருந்தீங்களா"  என்று கேட்டான் அந்த இளைஞன். 

" நானும் இங்கே இருக்கும் என் நண்பனும் நேற்று வேலை விஷயமாக வெளியூர் போயிருந்தோம். இன்றைக்கு காலையில்தான் வந்தோம்" என்று சொல்லியவாறு அப்பொழுது தெருவில் வந்து நின்ற போலீஸ் வேனைப் பார்த்தான் நாநா. 

வேனிலிருந்து ஒரு போலீஸ்காரர் இறங்கி, நாநாவைப் பார்த்து, "என்ன சார் இங்கே கலாட்டா? யார் இவங்க எல்லாம்?"  என்று கேட்டார். 

" தெரியவில்லை சார். யாரோ இந்த வீட்டு ஜன்னல் மீது கல்லெறிந்தார்கள். என் நண்பன் நெத்தியில பெரிய காயம் பட்டுடுச்சு. அதற்கு முதலுதவி செய்து கட்டுப் போட்டுகிட்டு இருந்தேன். டாக்டரைக் கூப்பிட்டுருக்கேன். இவர் யாரோ ஒருவரின் படத்தைக் காட்டி, 'இவரைத் தெரியுமா?' என்று கேட்டார். 'அப்படி யாரையும் எனக்குத் தெரியாது' என்று சொல்லிக் கொண்டிருந்தேன்" என்ற நாநா, எதிரில் இருந்த இளைஞனிடம், " தம்பீ நீங்க அந்தப் படத்தை போலீஸிடம் காட்டுங்க. அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்"  என்றான். இதை சொல்லும்போதே போலீஸ்காரரிடம் லேசாக கண் அடித்தான் நாநா. 

புரிந்துகொண்ட போலீஸ்காரர், "சரி எல்லோரும் வேன்ல ஏறுங்க. ஒரு ஆளுக்கு கல்லு பட்டதால காயம் ஏற்பட்டிருக்கு - ஸ்டேஷனுக்கு வந்து, இன்ஸ்பெக்டர் கிட்ட என்ன விஷயம்னு சொல்லுங்க"  என்றார். 

ஏற்கனவே போலீஸ் வேனைப் பார்த்ததும் சிலர் நழுவி சென்று விட்டனர். கூட்டத்தில் விடாப்பிடியாக நின்றுகொண்டு இருந்த நான்கைந்து பேர்களை ஏற்றிக்கொண்டு சென்றது போலீஸ் வேன். 

நாநா, பாபாவிடம் - " அவ்வளவுதான் இனிமே அவங்க யாரும் இந்தப் பக்கம் தலை காட்டமாட்டார்கள். தெருவில் கூச்சல் குழப்பம் ஆரம்பித்த உடனேயே என்னுடைய நண்பர் இன்ஸ்பெக்டர் ஆனந்த் - அவர்தான் இந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் அவருக்கு தகவல் அனுப்பிவிட்டேன். அவர் இவங்களை கவனிக்கவேண்டிய வகையில் கவனித்துக்கொள்வார். " 

பிறகு நாநா, பாபாவிடம் " சரி நான் கிளம்புகிறேன். நாளைக்கு நீங்க என் வீட்டிற்கு வந்தால், நான் உங்களுக்கு சரோஜாதேவி மெமரி கார்ட் பற்றி விளக்கி சொல்கிறேன். நாளைக்கு என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு முன் நீங்க இன்றைக்கு செய்யவேண்டிய  சில விஷயங்கள் : 

1) நீங்க இன்றைக்கு மாலை செய்யவேண்டிய நடிப்பு - மறக்கவேண்டாம். 

2) இன்று இரவு உங்க புத்தக அலமாரியில் இரண்டாவது வரிசையில் இருக்கும் ' ஒரு யோகியின் சுயசரிதம்' புத்தகத்தில் உள்ள அத்தியாயங்களில் - அத்தியாயம் 5, 18 மற்றும் 43 - மூன்று அத்தியாயங்களையும் ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படித்து விடுவது நல்லது. அது சரோஜாதேவி மெமரி கார்ட் பற்றி நான் சொல்ல இருப்பதை புரிஞ்சிக்க உதவும். 

3)  நாளை என் வீட்டிற்கு வருவதற்கு முன்பு உங்க வேலைக்கார பெண்மணியிடம் ஆஸ்பத்திரிக்கு போவதாக சொல்லிவிட்டு அப்புறம் கிளம்பி வாங்க. முடிந்தால், வீணாவின் சமீபத்திய ஃபோட்டோ ஒன்றை உங்க மொபைலில் பிடித்து எடுத்துக் கொண்டு வாங்க. நான் என்னுடைய நண்பன் - அமெரிக்காவில் வேலை பார்ப்பவனுக்கு அதை அனுப்பி, வீணாவை பிடித்திருக்கிறதா என்று கேட்கவேண்டும். 

" இதோ இது என்னுடைய விசிட்டிங் கார்ட் " என்று சொல்லி, கொடுத்துவிட்டு கிளம்பினான் நாநா . 

(தொடரும்)   

84 கருத்துகள்:

  1. பதிவுத் தலைப்பே ஏடாகூடமாக இருக்கிறதே

    ஷவர், குளிப்பது, சரோஜாதேவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  பயணத்திலிருந்து திரும்பியாச்சா?

      நீக்கு
    2. ஒரு வார பயணம். ஆறு மணி முருடீஸ்வர் கோயில். காலை 10000 ஸ்டெப்ஸ் முடிக்கணும் என்பதால் மூன்றரைக்கு எழுந்தேன்

      நீக்கு
    3. வருக வருக! வாழ்க வளமுடன்

      நீக்கு
    4. நாரு சிவேதிதா கதைத் தலைப்பு ஏதும் ஞாபகம் வந்துவிட்டதா!

      நீக்கு
  2. வீட்டில் ஷவர் இருந்தும் உபயோகிக்காததன் காரணம் இன்னும் நீங்கள் குனிந்து நீரை மொண்டுவிட்டுக் குளிக்கும் அளவு அல்லது உட்கார்ந்து குளித்து எழுந்துகொள்ளும் அளவு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான். அல்லது சுடு நீர் குளிர் நீர் குழாய் எது என்பது மறந்து சட்னு தலைல வெந்நீர் கொட்டிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை.  ஷவர் ஆசை சிறுவயதில் இருந்தது.  இப்போதெல்லாம் குளிக்க உள்ளே செல்லும்போது அது நினைவிலேயே இருப்பதில்லை.  அதைவிட பொறுமை இருக்காது என்றும் தோன்றுகிறது!

      நீக்கு
    2. ஷவரில் குளிச்சால் குளிச்சாப்போலயே இருக்காதே! அதோட குளியலறை முழுதும் ஈரமாகி வழுக்கும். எங்கேயானும் விழுந்து வைச்சால்! எங்க வீட்டில் எல்லாக் குளியலறைகளிலும் ஷவர் இருக்கு.

      நீக்கு
  3. கதை வெளியிட்ட உங்களுக்கே இப்படீன்னா எழுதியவர் எந்த நோக்கத்துல எழுதியிருப்பார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் உலகத்தை உய்ய எழுதி இருப்பார்.  இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு செய்தி சொல்ல முயன்றிருக்கிறார்!

      நீக்கு
    2. ஓ நேற்றைய கதையா.....நிச்சயமாக அதில் செய்தி இருக்கிறது....அதைச் சொல்லும் விதத்தில் கொஞ்சம் குழப்பி....அவ்வளவுதான்.

      கீதா

      நீக்கு
  4. நம்பித் தனிமா வீட்டுல விட்டுட்டுப் போகமுடியாது. இருந்தும் உங்களை விட்டு விட்டுச் சென்றதற்குக் காரணம் இதை சொல்லித் திருத்தமுடியாது என்பதாலா?

    பதிலளிநீக்கு
  5. பாரதியார் வறுமையில் வாடினவர்தான். ஏதோ பாரதியார் மேல பா.வெ மேடத்துக்கு துக்களியூண்டு மரியாதை இருப்பதால் ஓமகுச்சி ரேஞ்சுக்குப் போகாம தனுஷோடு நிறுத்திக்கொண்டாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய பிராஸ்தடிக் மேக்கப் உலகில் எதுவும் சாத்தியம்.  நான் கூட பாரதியார் வேஷம் போடலாம். 

      நீக்கு
    2. பாரதியார் பாரதியாராகவே இருக்கட்டும்/
      அது சரி, ஸ்ரீராம் முன்னெல்லா, * இந்த்ப புள்ளியில் வருவார். இப்போ திடீரென $ டாலருக்கு மாறிட்டாரே? கேஜிஎஸ் இல்லைனா?

      நீக்கு
  6. உள்ளாடைச் சிந்தனை ஸ்ரீராம் சொல்வது வித்தியாசம். பிராக்டிகல் சிந்தனை. பயணங்களில் என்னுடைய இரண்டு உடைகளுக்கு இடையில்தான் உள்ளாடையை உலர்த்துவேன். அடையாளம் நோட் பண்ணிக்கொள்வேன்.

    எனக்கான எந்த உடையும் பிறர் வாங்கித்தருவது பிடிக்காது. நிறம் மாடல் பிடிக்காமல் எந்த உடையையும் அணிவதில்லை, என் செலெக்ஷன் பெண்ணுக்கு சுமார் என்று தோன்றினாலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் உலர்த்தும்போதே குழப்பம் வரும் என்றால் கல்யாணம் விசேஷம் பயணம் போன்றவற்றில் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்!

      நீக்கு
  7. பெண்களைப் பற்றி கீசா மேடம் கேள்வி ஆச்சர்யம். மனதில் ஆசை வந்துவிட்டால் அங்கு மூளை லாஜிக் வேலை செய்யாது. பிரியாணி கடைக்காரனுக்காக தன் இளம் குழந்தைகளைக் கொன்று காதலித்து மணந்த கணவனைக் கொல்ல முயன்ற ஆயுளுக்கும் சிறையில் உள்ள தமிழச்சிகளின் நாட்டில் இருந்துகொண்டு இந்த கேள்வியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பு. அதனால்தான் இந்தக் கேள்வி.

      நீக்கு
    2. இல்லை. எனக்குக் கொஞ்ச நாட்களாகவே/அல்லது மாதங்கள்/வருடங்களாகவே இந்தப் பெண்களின் மனோநிலை புரிவதில்லை. எதுக்கெடுத்தாலும் ஒரு வாக்குவாதம், பிரச்னையை நீட்டிப்பது, சரியான நேரத்துக்கு வேலைகளை முடிக்காமல் உட்கார்ந்து லாப்டாப், மொபைல் பார்த்துட்டுப் பின்னர் ஏனோ தானோவெனவோ அல்லது அவசரம் அவசரமாகவோ வேலைகளைச் செய்வது. வேலைகளிலும் மனம் படியாமல் இருப்பது. வீட்டு வேலை எனில் அலட்சியமாகவும் பாரமாகவும் நினைப்பது. இதை எல்லாம் பார்த்தால் தமிழ்நாட்டுப் பெண்களின் எதிர்காலம் கவலையைத் தருகிறது.

      அதுவும் தேர்தல் சமயத்தில் இளம்பெண்கள் பேசியது எல்லாம் கேட்கவே காது கூசியது. அதிலும் அப்படிப் பேசினது எல்லாம் திருமணம் ஆன பெண்களே. பாரம்பரியம், கலாசாரம்னு இருந்தது எல்லாம் எப்போவோ ஓடி மறைந்து விட்டன.

      நீக்கு
  8. பெண்ணே தோசை விரைப்பாக இருக்கக் காரணம் நிறைய எண்ணெய் விட்டு வார்ப்பாங்க. வெண்ணெயும். தாவெண்கரே bபெண்ணெ தோசை ரொம்ப ஃபேமஸ். அதில் எனக்கு ஆர்வமில்லை. கர்நாடக தொட்டுகைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாங்கியது சென்னையில்.  அவர் கல்லில் தோசை வார்ப்பதையே பார்த்தேன்.  நித்ய அமிர்தம். Self Service.

      நீக்கு
    2. "பெண்ணே தோசை"க்கு எண்ணெய் எல்லாம் விடுவதே இல்லை. முழுக்க முழுக்க வெண்ணெய் தான். ஒரு பெரிய பாத்திரம் நிறைய வெண்ணெயை வைத்துக் கொண்டு தோசை வார்க்கிறார். அடுப்பைச் சின்னதாக எரியவிட்டுக் கொண்டு தோசை மேல் வெண்ணெயை அள்ளி அள்ளிப் போட்டுப் புரட்டி எடுக்கிறார். தோசையை இல்லை. ஒரு பக்கம் வெந்து எடுக்கவே சுமார் 200 கிராம் வெண்ணெய் போடுவாரோனு நினைக்கிறேன். பின்னர் திருப்பிப் போட்டு மறுபடி வெண்ணெய் அபிஷேஹம். அப்படியும் அரை மனதாகவே எடுத்துத் தட்டில் போட்டுத் தேங்காய்ச் சட்னி அல்லது காரச் சட்னியுடன் கொடுக்கிறார். நோ சாம்பார். வெகுநேரம் சூடு ஆறுவதில்லை. அது ஆறுவதற்குள்ளாக ஓரங்களின் முறுகல்களை மெல்ல மெல்லப் பிய்ச்சு எடுத்துச் சட்னியில் தொட்டுச் சாப்பிட்டால் ஆஹா சொர்க்கம் கண்களில் நிச்சயமாய்த் தெரிஞ்சது. இது நடந்தது 2018 ஆம் ஆண்டில் கோல்ஹாப்பூரில்.

      நீக்கு
  9. Bபெண்ணே தோசை விரைப்பாக இருக்கும்போதே சாப்பிடாமல் என்ன போட்டோக்கள் எடுப்பது வேண்டியிருக்கு என்று கமென்ட் வரலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டோ எடுக்காமல் எதையும் சாப்பிட ஆரம்பித்தால்தான் ஆச்சரியப்படுவார்கள்!

      நீக்கு
    2. பார்க்கத் தான் அப்படி விரைப்பாய்த் தெரியுது. உண்மையில் அதைச் சாப்பிட்டால் நடுவில் எல்லாம் அடியில் முறுகலாகவும் மேலே நல்ல மெதுவாகவும் இருக்கும். மெல்லும்போது அந்த வெண்ணெயெல்லாம் வாயில் கரைந்து வந்து வெண்ணெயின் மணமும், சட்னியின் மணமும் சேர்ந்து வாய், மனம், வயிறு எல்லாவற்றுக்கும் ஓர் நிறைவைத் தரும்.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    நேற்று காலையில் வெளியே செல்லும் ஒரு ப்ளான் வந்து விட்டது. (ஒரு முருகன் கோவிலுக்கு.) செவ்வாயன்று அருமையான குமரன் தரிசனம் கிடைத்தது. அதனால் நேற்றைய கதை பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். பிறகு படித்து விட்டு வருகிறேன். (நிறைய பதிவுகள் இப்படி படிக்க காத்திருக்கின்றன.) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வீட்டிற்கு அருகில் பிள்ளையார் கோவில் அதற்கே வாரம் ஒருமுறை - தான் மார்கழி நாட்களில் செல்வது உண்டு. வழக்கத்தைக் கடைபிடிக்காததன் காரணம் மூட்டு வலி & விதி...

    திங்கள் அன்று பௌர்ணமி. நாளில் மதியம் வரை தஞ்சபுரீஸ்வரர் மற்றும் கோடியம்மன் தரிசனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. கடவுள் அருள் என்றென்றும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. நேற்றைய பதிவுக்கு நான் வர இயலாமல் போய் விட்டதை தெரிவித்து விட்டு கேள்வி பதில்களை படிக்கையில், அங்கும் காலை, மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்வதை பற்றியதான கேள்வி பதில்கள். அருமை.

    நேற்று காலையில் நாங்கள் சென்ற கோவிலில் ஏராளமான கூட்டம். வரிசையில் சென்றுதான் தரிசனம் செய்ய முடிந்தது. .இங்கு மாலையிலும் சில கோவில்களுக்குச் செல்லும் போதும் நிறைய மக்கள் கூட்டங்கள் இருப்பதை பார்த்துள்ளேன்.

    முன்பெல்லாம் கோவிலுக்குச் சென்று இறை தரிசனம் முடித்தவுடன் வெளிப் பிரகாரங்களை சுற்றுவதே ஒரு உடற்பயிற்சி என நினைத்திருந்தனர். (தெய்வ நம்பிக்கையுடன் புண்ணியமும் உடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை.) இப்போது ஆங்காங்கே பார்க்குகள் , உடற்பயிற்சி மையங்கள் என வந்து விட்டன. அங்கும் காலை, மாலை வேளைகளில் கூட்டமாக உள்ளது. மக்களுக்கு எது மனதில் நல்லதென படுகிறதோ அதைச் செய்வது வாடிக்கையாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. ​/இங்கேயும் பார்க்கும்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இப்படி கஞ்சி போட்ட காவல்காரர் சீருடை போல இது நிற்பதற்கு மாவில் என்ன கலந்திருப்பார்கள்?!//

    பழைய சாதம்

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா நம்ம ஊர்ல சாதம் சேர்த்து அரைபபங்க இங்கு அவல்! பழைய சாதம் ஆப்பத்துக்கு சரியா இருக்கும் தோசைக்குப் போட்டா அது சாஃப்டா ஆகிடுமே!!! மெத்து மெத்துனு!

      கீதா

      நீக்கு
    2. ​பழைய சாதம் வடாம்/வடகம் பொரித்தால் மெது வாகவா இருக்கிறது. இதுவும் அது போல் தான். பழைய சாதம் சீக்கிரம் புளிக்க வைக்கும்.

      Jayakumar

      நீக்கு
    3. நான் பார்த்தவரை, எனக்குத் தெரிந்நவரை எதுவும் கலப்பதில்லை. கலக்கவில்லை. அவல் போடுவோம் என்றார்கள். அதுவும் அரைக்கையிலேயே ஊற வைத்த அவலைப் போட்டு அரைச்சுடுவாங்களாம். வெந்தயதோசைக்குக் கூட அவல் போடுகின்றனர். ஆனால் அதை செட் தோசை என்னும் பெயரில் கொடுக்கிறாங்க.

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    ஷவர் குளியல் கெடுதலென்று சொல்கிறார்களே .? எதையும் கண்டு பிடித்து விட்டு, பிறகு அது கெடுதலென்று சொல்வதும் நம் வாடிக்கையாகி விட்டதோ.?

    படமும் பதமும் நன்றாக உள்ளது. சகோதரர் நெல்லைத்தமிழர் அனுப்பிய படங்களும், அதற்கு எபி சொன்ன பதிலும் சிறப்பு. (எபி சொன்ன பதிலை மட்டுந்தான் ரசித்தேன்.:)) )

    சகோதரர் ஸ்ரீராம் அனுப்பிய வெண்ணைய் தோசை படங்கள் நன்றாக உள்ளது.(உதாரணம் அருமை) இங்கு வந்த புதிதில் முன்பு எப்போதோ ஒரிரு தடவைகள் வாங்கி சாப்பிட்டுள்ளோம்.

    "நின்று" நிமிர்ந்திருக்கும் அந்த தோசையை, ஆற "அமர" சாப்பிட்டால், கடைசி வரை சாப்பிட முடியாமல் போய் விடும். இப்போதெல்லாம் தோசைகள் மாவில் ஏதாவது கலக்காமல் சிறப்பாக வர முடிகிறதா என்ன.? தசைகளின் விலைகளும் சற்று வானுயற பறக்க ஆசைப்படுகின்றனவே. .!

    தங்கள் பகுதியான கதை பகிர்வு நன்றாக போகிறது . ஏகப்பட்ட உத்தரவுகளை பாபா வுக்கு வாரி வழங்கியிருக்கிறார் நாநா. அத்தனையையும் அவர் முடித்து விட்டு நாநா வின் வீட்டுக்குப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. கேள்விகளும் பதில்களும் அருமை.

    //முன் போல மக்கள் காலையில் அல்லது மாலையில் கோயிலுக்குப் போகும் வழக்கத்தை ஏன் கடைபிடிப்பதில்லை?//

    மாயவரத்தில் வீட்டுக்கு முன் காமாட்சி அம்மன் கோயில் சிறியது இருந்தது தினம் காலை , மாலை போவேன்.

    பிள்ளைகள் கணவர் எல்லாம் வணங்கி விட்டுதான் பள்ளி, கல்லூரி செல்வார்கள்.

    அப்புறம் வீடு மாறியதும் நாலு திசையிலும் பிள்ளையார் கோயில் இருந்தது. இரண்டு பிள்ளையாரை காலையில் தரிசனம், முன்பு இருந்த வீட்டுப்பக்கம் இருந்த புனூகீஸ்வரர் கோயிலுக்கு போகும் போது மாலையில் மற்ற இரண்டு பிள்ளையாரை தரிசனம் செய்து வருவேன்.
    புனூகீஸ்வரர் கோயிலில் உள்ள தோட்டத்திற்கு (நந்தவனத்திற்கு) தண்ணீர் ஊற்றி வருவேன். கொஞ்ச கொஞ்சமாக கால் வலி ஆரம்பித்தவுடன் மெள்ள மெள்ள குறைந்து அறவே நின்று போனது.

    பின் மதுரை வந்த பின் அய்யனார் கோயிலுக்கு தினம் காலை போய் வந்தேன். அங்கு கீழே விழுந்தவுடன் அதுவும் இப்போது இல்லை.

    குடியிருப்பு வளாகத்திற்கு பிள்ளையார் வந்த பின் காலை, மாலை போனேன். அதுவும் இப்போது இல்லை. சங்கடஹரசதுர்த்திக்கு மட்டும் கீழே போய் வணங்கி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வணங்கும் கடவுளர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகள்.

      நீக்கு
  18. ​என் மேனி அழுக்கை போக்க உபயோகிப்பது ஹாண்ட் ஷவர். சோப் போட முடியாத இடங்களுக்கும் தண்ணீர் அடித்து கழுவலாம்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
  19. நெல்லை, இப்ப டாப்ல் போற சானல்களே நீங்க சொல்லியிருக்கும் விஷயங்களைப் பேசும் சானல்கள்....கன்றாவி சேனல்கள் உருப்படாத சானல்கள் டைவர்சை விடுங்க....ஒருவரின் மரணத்தைக் கூட அசிங்கமாகப் போஸ்ட்மார்ட்டம் செய்யும் பண்பு கெட்ட ஊடகங்கள்....இவங்கல்லாம் தமிழ்கலாச்சாரங்களாம்....நம்ம மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப முக்கியம் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறார்கள் இளைஞர்கள்!! உருப்படியா செய்தா வாழ்க்கை எங்கோ போகும்...

    நாம விலகி இருப்பதுதான் நமக்கு நம் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே பெரும்பான்மையோருக்ககு மத்தவங்க விஷயத்துல எட்டிப் பார்க்கும் மனோபாவம் மக்களுக்கு உண்டே அதனால்தான் ...

      கீதா

      நீக்கு
  20. $ - ஸ்ரீராம் என்று தெரிகிறது......பதில் சிரித்துவிட்டேன்....கூடவே கூச்ச சுபாவம்!!! இது க்ளூ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. //இங்கேயும் பார்க்கும்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இப்படி கஞ்சி போட்ட காவல்காரர் சீருடை போல இது நிற்பதற்கு மாவில் என்ன கலந்திருப்பார்கள்?!//

    அதுதானே! என்ன கலந்து இருப்பார்கள்? சாப்பிட முடிந்ததா?
    தோசை படம் அழகு.

    தாய்வானில் இப்படிப்பட்ட படகுப்போட்டி படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. தாய்வானில் படகுப்போட்டி படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. $ நேற்று கூட செய்தேன். பல அப்பாவிகளை ஒரு கதை வெளியிட்டு வதைத்திருக்கிறேன்! //

    ஓகே ஸ்ரீராமேதான்!!!!

    4 - பெரும்பாலும் நேரத்துக்குச் சாப்பிடும் வழக்கம். பிடித்தது இல்லைன்னு எதுவும் இல்லை எல்லாமே....ஆனால் மாற்றி மாற்றிதான் இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. 5 - ஒரு வேளை எல்லோரும் கட-உள் என்பதற்குப் பக்குவப்பட்டுட்டாங்களோ!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பானுக்காவின் முதல் கேள்விக்கு நானும் ஏ ஐ என்று நினைத்த போது $ ஸ்ரீராமும் அதேதான் சொல்லியிருக்கிறார்.

    ஆனா இந்த ஏ ஐ சில சமயம் தர்மசங்கடமான பக்க விளைவிகளையும் குடும்பத்திற்குள் கொண்டு வருகிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) அடுத்த வாரம் சரோஜாதேவி பகுதி 6 ல ஒரு வாயாடி ஏ ஐ வரும் படிங்க.

      நீக்கு
  26. உள்ளாடைகள் பற்றிய கேள்விக்கு.....அணிவதற்கு சௌகரியமாக ஏற்றதாக இருக்க வேண்டும் பருத்தியில். அது ஒன்றுதான்.

    ஸ்ரீராமின் பதில் எங்கள் வீட்டில் எனக்கு சான்ஸே இல்லை ஹாஹாஹா...ஆனால் ஆண்களுக்கு ஏற்படுட்டதுண்டு. ஆனால் இப்பலாம் சைஸ்....வேறு ப்ரான்ட் என்று ...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. //சுயசரிதம்' புத்தகத்தில் உள்ள அத்தியாயங்களில் - அத்தியாயம் 5, 18 மற்றும் 43 - மூன்று அத்தியாயங்களையும் ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படித்து விடுவது நல்லது. அது சரோஜாதேவி மெமரி கார்ட் பற்றி நான் சொல்ல இருப்பதை புரிஞ்சிக்க உதவும். //

    மெமரி கார்டில் என்ன இருக்கும்?

    நாநாவின் திட்டம் என்ன தெரிந்து கொள்ள அடுத்த வாரம் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. கன்னடர்கள் தங்கள் பிரதேசத்தின் ஒருகாலத்திய ஹீரோக்களின் படங்களை இப்போது தீவிரமாகப் போஸ்டர்களிலெல்லாம் போட்டுத்தள்ள ஆரம்பித்துவிட்டார்கள். முதல்வர் சிவகுமாரின் chamchaa -க்களின் போஸ்டர்களில், அரசியல் தலைகளோடு கன்னட ஹீரோ கெம்பெ கௌடா படங்களும் ஆங்காங்கே மின்னுகின்றன. ஆட்டோக்காரர்களைப்பற்றி கேட்கவேண்டாம்: என்றென்றும் கன்னட அசட்டு சினிமா ஹீரோக்கள் படங்கள், சிலைகள், ஊதுபத்திகள் தான்...(ஹீரோ வொர்ஷிப்பில் தமிளனும் குறைஞ்சவனில்லை என்பது தெரிந்ததே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) நீங்க டெல்லியில் இருப்பதால் தப்பித்தீர்கள்!

      நீக்கு
    2. டெல்லியில் இப்போது 40 டிகிரி. Feels like 53 , as reported in national dailies . நான் எப்படி அங்கே இருக்கமுடியும் இப்போ! செப்டம்பர், அக்டோபர் வரட்டும்.. பார்க்கலாம்...!

      நீக்கு
  29. ஸ்ரீராம் அந்தப் பேருந்து படம் செம 3 டி எஃபெக்ட்!!!! ரொம்ப நல்லாருக்கு

    ஸ்ரீராம் பென்னே தோசைன்னு இல்ல மற்ற தோசைகள் கூட இப்படித்தான் கஞ்சி போட்டது போலச் செய்கிறார்கள். தோசை கொஞ்சம் தடிமனாக இருக்கு. ஸோ மடித்தாலும் டக்குனு ஒடிந்துவிடாது சப்பாது. ரெண்டாவது, இங்கு தோசைக்குப் பச்சரிசி தோசா ரைஸ் என்று விற்கிறார்கள் பெரும்பாலும் ஐ ஆர் 8 பச்சை. அரிசி. அப்புறம் கொஞ்சம் வெந்தயம் சர்க்கரை சேர்க்கறாங்க இந்தக் கலர் வருவதற்கு...அப்புறம் கடலைப்பருப்பும், அவலும் சேர்க்கறாங்க.

    அப்புறம் மெதுவா தீயில் வார்ப்பாங்க. ஒரு பக்கம் தான் வார்ப்பாங்க திருப்பிப் போட மாட்டாங்க. உங்களுக்குத் தோசை வர எவ்வளவு நேரமாச்சு!!!!?

    நான் வீட்டிலும் செய்யறப்ப ரோஸ்ட் வேணும்னா மெதுவாக,,,,ஒரு பக்கம் மட்டும் வார்ப்பேன் மூடி போடு!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. நெல்லை படங்கள் பிரமாதம்...தாய்லாந்து கிட்டத்தட்ட நில அமைப்பும் கூட கேரளம் போலதானே இருக்கும்ல?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கௌ அண்ணா, கதை எங்கே எதைப் பற்றிப் போகிறதுனு யோசிக்கிறேன். கூடவே டெக்னாலஜி எல்லம் கலந்து கட்டி வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. தில்லை அகம் இங்கு சைட் பாரில் அப்டேட் ஆகவே மாட்டேங்குது ஏனென்று தெரியவில்லை.

    இன்று பதிவு போட்டிருக்கிறேன் விருப்பமுள்ளவங்க பார்க்கலாம்.

    https://thillaiakathuchronicles.blogspot.com/2026/06/beemanagari-3-thiruvanparisaram.html.html

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கேள்வி, பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. நானும்/நாங்களும் இங்கே அம்மாமண்டபத்திற்குள் இருக்கும் ஆஞ்சநேயரையும் கரையில் இருக்கும் காவிரி அம்மன், சிவன், அம்பிகை, பிள்ளையார் ஆகியோரையும் போய்த் தரிசிப்போம். பிரதோஷங்களுக்குக் கூடப் போனோம். பின்னாட்களில் முடியவில்லை. இங்கே ரங்குவையே 2019 இல் அம்பேரிக்கா கிளம்பும் முன்னர் ரொம்பவே சிரமத்துடன் போய்ப் பார்த்தது. திரும்பி 2020 ஃபெப்ரவரியில் வந்தோம். கூடவே கொரோனாவும் வந்தது. அதுக்கப்புறமா வீட்டை விட்டு வெளியே போவதுன்னா அது மருத்துவமனைதான்னு ஆகி விட்டது. இப்போக் குலதெய்வம் கோயிலுக்கே போக முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டில் இருப்பதால் இந்த நிலையா?

      நீக்கு
  34. @Gouthaman Sir,
    அது சரி, ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகம் நீங்க வைச்சிருப்பது திரு எம். எழுதினதா? நெல்லை கொடுத்திருந்தார், படிச்சிருக்கேன். அல்லது பாபாவே எழுதியதா? அது என்னிடம் இருக்கு ஆங்கிலத்தில். படிச்சிருக்கேன். சில அனுபவங்கள் படிக்கையில் உடல், மனம் சிலிர்க்கும்.

    தாய்லாந்து படகுப்போட்டிப் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. நெல்லை இதில் கை தேர்ந்தவர்.
    கௌதமன் சாரின் சரோஜா தேவி கதையில் வீணா, யார்? விமலா யார்? நு புரியவே இல்லை. போன வாரம் படிக்காமல் விட்டுட்டேனோனு நினைக்கிறேன். என்றாலும் கதை ஏனோ புரியவே இல்லையே?

    நான் கேதன்/சியா பற்றி நரசிம்மா எழுதுவதையும் படிச்சுட்டு இருக்கேன். அதுக்காகக்க் கேட்கலை. பொதுவாகப் பெண்கள் இப்போதெல்லாம் அதிலும் பேரிளம்பெண்களாகத் திருமணம் செய்துக்கறவங்க பத்து வருடம்/பதினைந்து வருடம் திருமண வாழ்க்கைக்குப் பின்னர் கணவனிடமிருந்து பிரிந்து விடுகிறார்கள். அதிலும் குழந்தை பிறந்து அது பெண் குழந்தையாய் இருந்தால் மட்டும் அவங்க வளர்க்கிறாங்க. இல்லைனா கணவன் கிட்டேயே விட்டுட்டுப் போயிடறாங்க. இவங்களோட எதிர்பார்ப்பு என்ன? ஏன் கல்யாணம் பண்ணிண்டாங்க? ஏன் இப்போ விலகிட்டாங்க? அல்லது சிலர் விவாகரத்தும் பண்ணிடறங்க என்றெல்லாம் புரியவே இல்லை. அதான் கேட்டேன். பிரச்னைகளைச் சுமந்து கொண்டு திரிந்த பெண்களை விட இவங்கல்லாம் பிரச்னைகளைத் தேடிப் போய்
    உண்டாக்கிக்கறாங்களேனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாநா சொன்ன புத்தகம் யோகியே எழுதியதின் மொழிபெயர்ப்பாக
      இருக்கும்.

      நீக்கு
    2. லிங்க் மூலமாக சென்று மூன்றாம் பகுதி படித்தால்
      வீணா யார் என்று புரியும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!