திங்க கிழமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்க கிழமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.1.19

திங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்


அய்யா ஆசிரியரே! 

இது திங்கற கிழமைப் பதிவு. இதுல பூமி சாமி என்றெல்லாம் எதுக்கு போட்டு பயமுறுத்துறீங்க? 

ஏதேனும் பெயர் வைக்கணுமில்லே! 

+++++++++++++++++++++++++++++++++++


15.9.14

தி கி 140915:: தி அ - சப்பாத்தி.

                            
எனக்கு சப்பாத்தி அறிமுகமானது, பத்து வயது ஆன சமயத்தில். அண்ணன், பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்த காலம். . அவரே கோதுமை வாங்கி, அரைத்து வாங்கி வருவார். அவரே சப்பாத்தி மாவு பிசைந்து தருவார். அம்மா சப்பாத்தியை தோசைக்கல்லில் இட்டு, சுட்டுத் தருவார். அண்ணன் இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி சாப்பிட்டு, பாலிடெக்னிக் உள்ள திசை நோக்கி நடையைக் கட்டுவார். 
               
சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது சப்தம் இல்லாமல் பிசைவார். கொஞ்சம் சப்தம் கேட்டாலும்  எங்கேயோ பர் பர் என்று பாட்டு இசைத்துக் கொண்டிருக்கின்ற என்னுடைய தம்பி, அங்கே ஓடிவந்து, பிசைந்த சப்பாத்தி மாவை  அப்படியே வாங்கி, வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடுவான்! 
            
அவனுக்கு பயந்து, எங்கள் வீட்டில் அஹிம்சை முறையில்தான் சப்பாத்தி தயாராகும். 
                  


ஆனாலும் சப்பாத்தி கல்லில் இடப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டவுடன் எழுகின்ற சப்தத்தைக் கேட்டு,  மணத்தை மூக்கு உணர்ந்தவுடன் - ஓடி வந்துவிடுவான், "ஆ ! சப்பாத்தி!" என்று அலறிக்கொண்டு! 
               
என்னுடைய இண்டரெஸ்ட் எல்லாம் சப்பாத்தி கிடையாது, அதனுடைய சைடு டிஷ். அம்மா செய்கின்ற பயத்தம் பருப்பு டால், உருளைக்கிழங்கு மசால் என்று எதுவாக இருந்தாலும் அதை அப்படியே சாப்பிட்டு விடுவேன்! பயத்தம்பருப்பு டால்! எலுமிச்சம்பழம் பிழிந்து, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு! அந்தப் புளிப்பும் காரமும்! அடாடா! பச்சைமிளகாயைக் கடித்து, கண்களில் நீர் மல்க, தண்ணீர் தேடிய நாட்கள்! சப்பாத்தி - ஊஹூம் முதலில் தட்டில் போட்ட சப்பாத்தி அப்படியே இருக்கும். சைடு டிஷ் மட்டும் காலி பண்ணுவேன். இன்னும் சைடு டிஷ் வேண்டும் என்று அடம் பிடிப்பேன். 
                       


சப்பாத்தியிலிருந்து இரண்டு வாய் மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதியைப் பிடிக்கவில்லை என்று தட்டோடு வைத்துவிட்டு ஓடிவிடுவேன். 

தம்பிக்கு மாவு பிடிக்கின்ற அளவுக்கு சப்பாத்தி பிடிக்காது. அப்படி சப்பாத்தி சாப்பிட்டால் அவனுக்கு சர்க்கரை தவிர வேறு எதுவும் தொட்டுக்கொள்ளப் பிடிக்காது. 

பிறகு சப்பாத்தி சாப்பிடுவது தவிர்க்க இயலாததாக ஆகிவிட்ட நாட்களில், சப்பாத்தியை லேயர் லேயராக எடுத்து சாப்பிடுவதுதான் எனக்குப் பிடிக்கும். சப்பாத்தி இடும் பொழுது, மடித்து, மடித்து வைத்து, எண்ணெய் தடவி செய்தால்தான் லேயர் லேயராக வரும். 
             


லேயர் லேயராக இல்லாமல், மொத்தையாக இருக்கின்ற சப்பாத்தி எனக்குப் பிடிக்காது. 

வேலைக்குச் சென்று வந்த நாட்களில் நான் சப்பாத்திக்கு மாவு பிசைந்ததோ அல்லது சப்பாத்தி இட்டதோ இல்லை. மனைவி செய்து கொடுக்கின்ற சப்பாத்திகளை வேகமாக சாப்பிட்டு, ஓடிப்போயிடுவேன் (வேலைக்குதான்!) 

ரிடையர் ஆனா பிறகு, பெரும்பாலும் சப்பாத்திக்கு மாவு பிசைவது என்னுடைய வேலை ஆகிவிட்டது! 
               
என்னுடைய மனைவியிடம், 'எவ்வளவு மாவுக்கு எவ்வளவு தண்ணீர்? பை வால்யூம் ஆர் பை வெய்ட்' என்றெல்லாம் கேட்டு என்னுடைய இஞ்சினீரிங் அறிவை   பறைசாற்றுவேன். அவர், "இதுக்கல்லாம் ஃபார்முலா எதுவும் கிடையாது. ஒவ்வொரு பிராண்ட் மாவு ஒவ்வொரு தினுசு - எல்லாம் நாம்ப திட்டமா போட்டுத் தெரிஞ்சக்கணும்" என்பார். 
       


முதன்முதலில் நான் மாவு பிசைந்து கொடுத்தபொழுது, "சப்பாத்திக்கு மாவு பிசையச் சொன்னால் பூரிக்கு ஏன் பிசைந்து கொடுக்கறீங்க?" என்று கேட்டாள்! எனக்கு ஒரே ஆச்சரியம்! இதே மாவில் சப்பாத்தி செய்ய முடியாதா என்று கேட்டேன்! இரண்டுக்கும் ஒரே மாவு கிடையாதா? "சப்பாத்தி மாவு நெகிழ இருக்கும், பூரி மாவு இப்போ நீங்க பிசைந்து கொடுத்திருக்கீங்களே அந்தமாதிரி கெட்டியாக இருக்கும்" என்றாள்! என்னுடைய அறிவுக்கண் திறந்தது, நான் நெகிழ்ந்து போனேன்! 
           
நாங்க எப்பவும் பயன்படுத்துவது, ஆசீர்வாத் மல்டி கிரெயின் ஆட்டா. (மனைவி உட்பட) எல்லோர் மீதும் இருக்கும் கோபத்தை, மாவு மீது காட்டி, பிசைவேன். மாவு ரொம்ப சூப்பராக வரும். 
                 


இப்போ சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள, காரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி என்று டெக்னிக் கலர் சமாச்சாரங்கள் போட்டு ஒரு கூட்டு செய்கிறார்கள். (உங்க காதைக் கொடுங்க! படு திராபையான சைடு டிஷ் இதுதான்!) அம்மா செய்த பயத்தம்பருப்பு டால் மனதில் ஓட, இந்த உப்பில்லாத சப்பில்லாத கூட்டு, சப்பாத்தியுடன் சேர்ந்து, உள்ளே போய் வயிற்றை நிறைக்கின்றது. 
           
சப்பாத்தி சப்பாத்திதான், டாலு டாலுதான்! 
                

7.4.14

திங்க கிழமை 140407 :: பாதாம் பர்பி.

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு இருநூறு கிராம்.

நெய் இருநூறு மிலி

சர்க்கரை நானூறு கிராம்.

பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, பருப்புகளை மிக்சியில் இட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வாணலியில் தேவையான அளவு (நூற்றைம்பது மி லி) தண்ணீர் விட்டு, காய்ச்சி, அதில் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, பாகாகக் காய்ச்ச வேண்டும்.

பாகு இளம் கம்பிப் பதமாக வந்ததும், (எச்சரிக்கை - பாகு முறிந்துவிடக் கூடாது, பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்கவேண்டியது அவசியம். பாகு முற்றிவிட்டால், பர்பியை உடைக்க ஸ்லெட்ஜ் ஹாமர் தேவைப்படும்!)  அரைத்த பாதாம் பருப்பை பாகுடன் கலந்து, கிளற வேண்டும்.

பாகும் பருப்பும் நன்றாகக் கலந்ததும், நெய்யை விட்டுக் கிளறவேண்டும்.

கலவை கெட்டியானதும், ஏலக்காய் மற்றும் பாதாம் எசென்ஸ் நான்கு துளிகள் விட்டுக் கிளற வேண்டும்.

ஒரு எவர்சில்வர் தட்டில், நெய் தடவி, அதன் மீது இந்தக் கலவையைக் கொட்டிப் பரத்த வேண்டும். சூடாக இருக்கும்பொழுதே, ஒரு கத்தியால், துண்டு துண்டாக வெட்ட வேண்டும்.

ஆறிய பிறகு, பாதாம் பர்பி சுவைத்து சாப்பிடலாம். ரொம்ப கெட்டியாகி விட்டால், அடிக்கடி வருகின்ற விருந்தாளிகளுக்குக் கொடுக்கலாம்!
     




13.1.14

திங்க கிழமை 140113:: பொங்கலோ பொங்கல்!

     
பச்சரிசி : அரை லிட்டர்
பயற்றம் பருப்பு : இருபது கிராம்.
முந்திரிப் பருப்பு: நூறு கிராம்
மிளகு: இருபது.
சீரகம் : ஒரு டீ ஸ்பூன்.
நெய் : நூறு மி லி
இஞ்சி : இரண்டு கன செ மீ
உப்பு : தேவைக்கு ஏற்ப.
மஞ்சள் பொடி: இரண்டு சிட்டிகை.
கறிவேப்பிலை: இரண்டு ஈர்க்கு.
 
 

 
பயற்றம் பருப்பை, ஓர் இரும்பு சட்டியில் இட்டு, மிதமான சூட்டில், இரண்டு மூன்று நிமிடங்கள் ஈரப்பதம் போகும் அளவிற்கு சூடு செய்து கொள்ளுங்கள். சட்டியில் சூடாகும் பருப்பை, ஒரு கரண்டியால் புரட்டிக் கொண்டு இருந்தால், நல்லது.

சூடு ஆறிய பயற்றம் பருப்பை, பச்சரிசியோடு நன்கு கலந்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில், ஒன்றே முக்கால் லிட்டர் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தை ஏற்றி, அடுப்பைப் பற்றவைத்து நீரைக் கொதிக்க வைக்கவும்.

நீர் கொதிக்கும் பொழுது அதில் பச்சரிசி + பயற்றம் பருப்புக் கலவையை போடவும்.

அரிசி & பருப்புக் கலவை நீரில் வெந்தவுடன், மஞ்சள் தூள் மற்றும் தேவைக் கேற்ப உப்பு சேர்த்து, கலக்கிக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி, பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இரும்பு சட்டி (வாணலி) யில் நெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்றவைக்கவும்.

நெய் காய்ந்ததும், மிளகைப் போடவும். மிளகு வெடிக்கத் துவங்கியவுடன் சீரகத்தைப் போடவும்.

உடனேயே முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை இலைகளைக் கிள்ளிப்போட்டு, இஞ்சித் துண்டுகளையும் போடுங்கள்.

முந்திரிப் பருப்புகள் சிவந்ததும், அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டும். (எச்சரிக்கை: முந்திரிப் பருப்புகள் கருக்கக் கூடாது.)

இந்த மிளகு, மு ப, நெய், சீ, க வே, கலவையை, ஏற்கெனவே செய்து வைத்துள்ள பொங்கலில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.

சிலர் இதோடு கொத்துமல்லித் தழைகள் கூட சேர்ப்பது உண்டு.

அப்புறம் என்ன?
   
பொங்கலோ பொங்கல்!  தேங்காய் சட்டினியுடனோ அல்லது கத்தரிக்காய் கொத்சுவுடனோ சேர்த்து நாலு கரண்டி பொங்கல் சாப்பிட்டு மகிழுங்கள்!