பச்சரிசி : அரை லிட்டர்
பயற்றம் பருப்பு : இருபது கிராம்.
முந்திரிப் பருப்பு: நூறு கிராம்
மிளகு: இருபது.
சீரகம் : ஒரு டீ ஸ்பூன்.
நெய் : நூறு மி லி
இஞ்சி : இரண்டு கன செ மீ
உப்பு : தேவைக்கு ஏற்ப.
மஞ்சள் பொடி: இரண்டு சிட்டிகை.
கறிவேப்பிலை: இரண்டு ஈர்க்கு.




பயற்றம் பருப்பை, ஓர் இரும்பு சட்டியில் இட்டு, மிதமான சூட்டில், இரண்டு மூன்று நிமிடங்கள் ஈரப்பதம் போகும் அளவிற்கு சூடு செய்து கொள்ளுங்கள். சட்டியில் சூடாகும் பருப்பை, ஒரு கரண்டியால் புரட்டிக் கொண்டு இருந்தால், நல்லது.
சூடு ஆறிய பயற்றம் பருப்பை, பச்சரிசியோடு நன்கு கலந்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில், ஒன்றே முக்கால் லிட்டர் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தை ஏற்றி, அடுப்பைப் பற்றவைத்து நீரைக் கொதிக்க வைக்கவும்.
நீர் கொதிக்கும் பொழுது அதில் பச்சரிசி + பயற்றம் பருப்புக் கலவையை போடவும்.
அரிசி & பருப்புக் கலவை நீரில் வெந்தவுடன், மஞ்சள் தூள் மற்றும் தேவைக் கேற்ப உப்பு சேர்த்து, கலக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி, பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இரும்பு சட்டி (வாணலி) யில் நெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்றவைக்கவும்.
நெய் காய்ந்ததும், மிளகைப் போடவும். மிளகு வெடிக்கத் துவங்கியவுடன் சீரகத்தைப் போடவும்.
உடனேயே முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை இலைகளைக் கிள்ளிப்போட்டு, இஞ்சித் துண்டுகளையும் போடுங்கள்.
முந்திரிப் பருப்புகள் சிவந்ததும், அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டும். (எச்சரிக்கை: முந்திரிப் பருப்புகள் கருக்கக் கூடாது.)
இந்த மிளகு, மு ப, நெய், சீ, க வே, கலவையை, ஏற்கெனவே செய்து வைத்துள்ள பொங்கலில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
சிலர் இதோடு கொத்துமல்லித் தழைகள் கூட சேர்ப்பது உண்டு.
அப்புறம் என்ன?
பொங்கலோ பொங்கல்! தேங்காய் சட்டினியுடனோ அல்லது கத்தரிக்காய் கொத்சுவுடனோ சேர்த்து நாலு கரண்டி பொங்கல் சாப்பிட்டு மகிழுங்கள்!