80 களின் பிற்பகுதி.
மதியம்
சாப்பிட்டு விட்டு மீண்டும் அலுவலகம் கிளம்பியபோது தொலைபேசி சிணுங்கியது.
மகன் பதட்டமாகப் பேசினான். அவன் அப்போதுதான் ஒரு வங்கியில் வேலைக்குச்
சேர்ந்திருந்தான். கணக்கு முடிக்கும் நேரம் 10,000 குறைவதாகவும், அதை மாலை
அலுவலகம் முடியும் நேரத்துக்குள் கட்டச் சொல்லி மேனேஜர் சொல்வதாகவும்
சொன்னான்.
'கவலைப்படாதே, பதறாதே' என்று அவனுக்குச் சொல்லி விட்டு அலுவலகம் வந்து கோவிந்தனுக்கு தொலைபேசினான் ஈஸ்வரன். கோவிந்தன் இவன் நெருங்கிய நண்பன். கைகொடுக்கும் தெய்வம். இந்த சமயமும் உடனே கைகொடுத்தான்.
பணத்தை எடுத்துக்கொண்டுபோய் ஊரிலிருந்து ஒருமணி நேரப் பயணத்தில் இருந்த மகன் ஊர் சென்று, வங்கியில் கட்டச் சொல்லிக் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.
ஒரு வாரத்தில் பணம் திரட்டி கோவிந்தன் வீட்டுக்கு வந்தபோது அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டான்.
கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கோவிந்தன் கிளம்பிச் சென்றான்.
அடுத்த அரைமணி நேரத்தில் கோவிந்தனிடமிருந்து ஃபோன் வந்தது. பணத்தைக் காணோம் என்றும், கிளம்பும்போது வீட்டு வாசலில் விழுந்திருக்கலாம் என்றும், பணம் ஏதாவது விழுந்திருக்கிறதா என்று வாசலில் சென்று பார்க்கச் சொன்னான். மஞ்சள் பையில் வைத்து எடுத்துக் கொண்ட பணம் காணோமாம்.
ஈஸ்வரனும் வாசல் பக்கம் போய் நன்றாகத் தேடித் பார்த்தான்.
ஊஹூம்.
மறுநாள் அலுவலகம் முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து வழக்கமாக் கூடும் இன்னொரு நண்பனின் கடையில் குழுமி பேசிக்கொண்டிருந்தபோது இதை அவர்களிடம் சொன்னான் ஈஸ்வரன்.
குழுவில் இருந்த கோபால் என்னும் இன்னொரு நண்பன் மிகவும் ஆச்சர்யப்பட்டு போய், அன்று சம்பளக் கணக்கு அலுவலகம் சென்றுவந்தபோது தானும் 10,000 ரூபாயைத் தொலைத்து விட்டதாகவும், மனைவியின் நகையை வைத்து 10,000 ரூபாய் ஏற்பாடு செய்ததாகவும் கூறினான்.
நண்பர்கள் என்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும் என்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்புறம் நண்பர்கள் அவரவர்கள் அவ்வப்போது பணம், நகை தொலைத்த அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். கலைந்து அவரவர் வீடு சென்றார்கள்.
மறுநாள் காலை அந்த கடைக்கார நண்பன் ஃபோன் செய்தான்.
"ஈஸ்வரா... கடைல திருட்டு போயிருக்குடா... சுவத்தை உடைச்சு கல்லாப்பெட்டியை
உடைச்சிருக்காங்க... திருட்டுப்போன பணம் எவ்வளவு தெரியுமா? 10,000! நானும்
நம்ம நண்பர்கள் லிஸ்ட்ல சேர்ந்துட்டேண்டா..."
குரலில் கவலையை விட உற்சாகம்தான் தெரிந்தது!






