ஞாயிறு, 17 ஜனவரி, 2010

பட்டக் கவிதை !
வாலறிவன் தாள் பணிந்து வண்ணங்கள் பல குழைத்து
நூலறுந்து விழாது நுணுக்கமாய் அமைத்திட்டு
சூத்திரங்கள் ஆராய்ந்து சுத்தமாய் பொருத்திட்டு
ஸ்தோத்திரங்கள் சொல்லி வெற்றிக்கு வழிசெய்து
நண்பர்கள் புடைசூழ நல்ல வெளி தேடி 
வம்பர்கள் வயிறெரிய வல்லுனர்கள் போட்டி இட 
மாஞ்சாவுக்குத் தப்பி  மனம் கவர விண்ணேறி
பாஞ்சால் பட்டம் பேருவகை தாராதோ?  
 
சடசடக்கும் வால் பகுதி மீன் போலும் மேலேறும்
படபடக்கும் இதயத்தை பதமாய் மகிழ்விக்கும்
திமிறி மேலெழும்பும் தலை நெளியும் வளைந்து தரும்
சமரில் இருந்தன்ன சடுதியாய் பாய்ந்து செல்லும்
காற்றைக் கிழிக்கும் காண்போரை வசப்படுத்தும்
மாற்றேதும் உண்டோ மயக்கம் தர இது போலே!
 
உயரப் பறந்தால் உவகை களி பெருகும்
துயரமும் வருவதுண்டு துண்டாகிப் பறந்து சென்றால்
கூண்டுகள் குருவி மீன் மலைப் பாம்பு
வேண்டும் வடிவத்தில் விசித்திரமாய் அமைக்கப்படும் 
பைசா பத்து முதல் பல்லாயிரம் வரையில்
நைசாக விலையுண்டு நாடுவோர் பலவுண்டு
வடபுலத்தில் பலபேரும் வள்ளல் பந்தயங்கள்
இடவுறுதி செய்திட்டு இறுதியாய் தோற்பதுண்டு 
பந்தயம் வேண்டாமே, பார்த்து பரவசிப்போமே! 
 
எந்தையர் முன்னவர் எடுத்துச் செய்த பட்டம்
விந்தையாய் பெருவிலையில் விற்கிறது ஆங்காங்கே 
அழுக்குப் படாது ஆராவாரம் செய்யாது 
விலைக்கு வாங்கி விடப் புகுந்தால் வெட்ட
வெளிக்குப் பஞ்சம் விபத்தின் அபாயம்
காலி மனை இல்லை கவரும் திடல் இல்லை
ஜாலி செய்வதற்கே ஜகா வாங்கும் பேரவலம்.
ஓடியாடி பட்டத்தின் பின் செல்ல
நாடி தளர்ந்த சவலையரால் ஆவதில்லை.
 
ஜன்க் உணவு தின்றவர்கள் ஜிம் செல்ல மறந்தவர்கள்
பிங்க் ஆப் ஹெல்த்தில் பிளே செய்ய வருவதில்லை. 
இணையத்தில் தேடி, இறக்குமதி செய்து,
தனயர்கள் தந்தையர் தாம் களித்துப் பார்க்கிறார்!
ஆகா! பட்டம் இதுதானா? அடடா இதுதான் பறப்பதுவா?
ஓகோ நன்று, ஒப்புகிறேன், ஒன்டர்ஃபுல்! பலர்க்கும் அனுப்புகிறேன்!

6 கருத்துகள்:

 1. எந்தையர் முன்னவர் எடுத்துச் செய்த பட்டம்
  விந்தையாய் பெருவிலையில் விற்கிறது ஆங்காங்கே
  அழுக்குப் படாது ஆராவாரம் செய்யாது
  விலைக்கு வாங்கி விடப் புகுந்தால் வெட்ட
  வெளிக்குப் பஞ்சம் விபத்தின் அபாயம்
  காலி மனை இல்லை கவரும் திடல் இல்லை
  ஜாலி செய்வதற்கே ஜகா வாங்கும் பேரவலம்.
  ஓடியாடி பட்டத்தின் பின் செல்ல
  நாடி தளர்ந்த சவலையரால் ஆவதில்லை.

  உண்மை நண்பா..

  பதிலளிநீக்கு
 2. பெரி....ய பட்டக் கவிதை.யாரு விட்டா ?நல்லாவே இருக்கு.நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கு.

  எங்கள் பதிவில் எல்லாருக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அப்பாதுரை சார் - ஆமாம் - பலமான மாஞ்சாதான் (ஆனா கையைக் காயப்படுத்தாது)
  திவ்யாஹரி - நல்வரவு கூறுகிறோம். உங்க பிளாகுல - கவிதையும், குட்டி விமரிசனமும் சூப்பரா இருக்கு. ஹேமா - இந்தக் கவிதையை எங்களுக்கு எழுதியவர் பெயர் போட மறந்துவிட்டார். அதைப் பதிவேற்றிய பிறகுதான், 'அட ராமா' பெயர் விட்டுப் போயிடுச்சேன்னு நெனச்சோம்.

  பதிலளிநீக்கு
 4. வாலறிவன் தாள் பணிந்து வண்ணங்கள் பல குழைத்து
  நூலறுந்து விழாது நுணுக்கமாய் அமைத்திட்டு
  சூத்திரங்கள் ஆராய்ந்து சுத்தமாய் பொருத்திட்டு
  ஸ்தோத்திரங்கள் சொல்லி வெற்றிக்கு வழிசெய்து//

  கவிதை மிக அருமை!!

  பதிலளிநீக்கு
 5. நன்றி ப்ரின்ஸ்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!