வெள்ளி, 8 ஜனவரி, 2010

மனிதம் (சொன்னது பாதி....)

தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
சாதாரணமாகவே செய்திச் சேனல்கள் உணர்ச்சியைத் தூண்டி விடுவதில் நல்ல சேவை புரிந்து வருகின்றன. ஆனாலும்...

பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் ஒரு சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தான். 1997 ஆம் ஆண்டு. மதுரையில் ஒரு கல்லூரி. பரீட்சை எழுத வேண்டி கல்லூரிக்கு சென்ற போது நடந்தது. பரீட்சை ஹால் மாடியில்...கல்லூரியைச் சேர்ந்த ஊழியர் அந்த ஹாலை திறக்க வேண்டி செல்ல, உடன் என் நண்பனும் சில மாணவர்களும்...அந்தக் கல்லூரியில் மராமத்துப் பணிகள் முடிந்திருந்த நேரம்...கதவின் மீது கூட பெய்ன்ட் அடித்து கண்ணாடிக் கதவு என்று உணர முடியாத படி செய்து வைத்திருந்த கதவைத் திறக்க முயன்ற அந்த ஊழியர் இரண்டு முறை தள்ளிப் பார்த்திருக்கிறார்...திறக்க வரவில்லை, ஏதோ தடுக்கிறது என்ற உடன் கதவை வலுவுடன் தள்ளி இருக்கிறார்.

என்ன நடந்தது என்று உணரும் முன்னே நடந்து விட்டது. என் நண்பன் பார்த்த காட்சி..... உள்ளே நுழைந்த நிலையில் அந்த ஊழியரின் கை. ரத்தம் நீரூற்று போல உயரமான அந்தக் கட்டிடத்தின் மேல் சுவர் வரை பீச்சி அடித்தது. நண்பன் சட்டை எல்லாம் கூட ரத்தம். கையை வெளியே இழுத்த அந்த ஊழியர் ரத்தக் களரியான தன் கையைப் பார்த்து மயக்கமானார். சாதாரண மனிதர்களுக்கே இருக்கக் கூடிய உள்ளுணர்வுடனும், மனிதாபிமானத்துடனும் நண்பனும் இன்னும் சிலரும் உடனடியாக கொஞ்சமும் தாமதம் செய்யாமல் சட்டையைக் கிழித்து ரத்தம் ஊற்றும் கையின் மீது கட்டி, மாடியிலிருந்து மயக்கமாகி விட்ட அவரைத் தூக்கி கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தனர். அப்போதுதான் ஒரு பேராசிரியர் வந்து இறங்கிய ஆட்டோவில் உடனடியாக அவரை ஏற்றி சாலையிலிருந்து தள்ளி இருக்கும் அந்தக் கல்லூரியிலிருந்து மெய்ன் ரோடை அடைந்து, விரைவாக அருகிலிருந்த ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.

அவரை கவனித்த மருத்துவர்கள் நிலைமை 'கிரிடிகல்' என்று கூறி ரத்தப் போக்கை எடுத்துக் காட்டி, பின்னர் காப்பாற்றியவுடன் சொன்னது..."இன்னும் ஒரு எட்டு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் கூட ரத்தமிழந்ததால் இவரை காப்பாற்ற முடியாமல் போய் இருக்கும்.."

பிறகு நண்பன் அந்தப் பரீட்சையை எழுத மனமில்லாமல், முடியாமல், மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக எழுதி பாசும் ஆனது தனிக் கதை. ஆனால்,

மருத்துவத்துறை சேராத மனிதனாய் இருந்தும் நிலைமையின் அவசரம், விபரீதம் உணர்ந்து எதைப் பற்றியும் கவலைப் படாமல் செயலில் இறங்கிய மனிதத்தை என்னென்பது...

யாரையாவது அழைத்து உதவி செய்யுங்கள், வண்டி கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லாமல் தூக்கிக் கொண்டு ஓட வைத்த அறிவு...மனிதம்.

எந்த அதிகாரமும் இல்லாத சாதாரண பொது மக்களில் ஒருவனாய் இருந்தாலும் கிடைத்த வண்டியில் ஏற்றி, காலத்தின் அருமையை உணர்ந்த, வீணாக்காத புத்திசாலி நிமிடங்கள்...

உயிர் காக்கும் நிமிடங்கள்..

மனிதம். தங்க வரிகள்.

19 கருத்துகள்:

 1. திருநெல்வேலி எஸ் ஐ - வெற்றிவேல் அவர்கள் வீதியில் - அரிவாளால் வெட்டப்பட்டு, உதவிக்காக அலறுவதையும் - அதை வேடிக்கை பார்க்கும் இரு அமைச்சர்களையும் - இதோ இப்போதான் என் டி டி வி நியூஸ் ல் பார்த்தேன். ஹூம் - மனிதாபிமானம் - பொங்கி வழிகிறதே !

  பதிலளிநீக்கு
 2. //உயிர் காக்கும் நிமிடங்கள்..


  மனிதம். தங்க வரிகள்//

  sariyaa solli irukkiingka ungkal blog il

  well done

  பதிலளிநீக்கு
 3. உயிரோட அந்த கடைசி திணறலை சரிசெய்து சீராக்க உதவிய அந்த மாணவர் மட்டுமல்ல அத்தைகைய நேரத்தில் உதவும் அனைவருமே கடவுளுக்கு ஒப்பானவர்கள்....

  பதிலளிநீக்கு
 4. Nice to see a good article expressing good deeds. Saving a life is 'greatly appreciable'.

  I also started writing some good(?) articles ( http://madhavan73.blogspot.com ). If time permits please visit & have ur opinion.

  Thanks..

  பதிலளிநீக்கு
 5. ஒரு மனித உயிரின் உன்னதம், இன்னொரு மனித உயிருக்கு தான் தெரியும். தெரியாமல் சிலர் வாழ்வது நம் துரதிருஷ்டமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் மூச்சு விடும் பிணங்கள்

   நீக்கு
 6. நெகிழ்சியூட்டும் சம்பவம். இன்று ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தது வருந்தத்தக்கது.

  பதிலளிநீக்கு
 7. எங்கோ ஓரிரண்டு மனங்களில் மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 8. சமயோஜித புத்தி வாழ்க்கைல எல்லாருக்குமே ரொம்ப அவசியம். இந்த மாதிரி அவசர, அவசிய நேரங்களில அது எவ்வளவு பெரிய உதவியா இருக்கு.
  வாழ்க, வளர்க மனித நேயம்!

  பதிலளிநீக்கு
 9. இதை சிலர் மனிதநேயம் என சொல்லுவார்கள். ஆனால் இது மனிதநேயமல்ல மனிதம்.

  பதிலளிநீக்கு
 10. அனானி,
  அந்தத் தாக்கத்தில் எழுதப் பட்டதே இது..

  ***********
  ***********

  நன்றி தேனம்மைலக்ஷ்மணன்,

  மனிதம் - தங்க வரிகள் என்பதைவிட தங்க வார்த்தை பொருத்தமாக இருந்திருக்கும், இல்லை?

  ***************
  *************

  வசந்த்,
  அந்த மாதிரி சமயங்களில் பாதிக்கப் பட்டவர் இந்த மாதிரி உதவி செய்பவர்களை அருகில் பெற புண்ணியம் செய்திருந்தால்தான் உண்டு...இல்லாவிட்டால் அதிகாரம், சம்பந்தப் பட்ட துறையிலேயே இருந்திருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பின்னர் ஓட்டை சமாதானங்கள்தான் சொல்வார்கள்.

  *******************
  ******************

  பதிலளிநீக்கு
 11. maddy73,

  "Saving a life is 'greatly appreciable'."
  உண்மை. ஆனால் காப்பாற்ற வழிகள் இருந்தும் வீண் செய்து ஒரு உயிர் உதவி கேட்டு மன்றாடிக் கொண்டே பிரிவதை வேடிக்கை பார்ப்பவர்களை...?

  ********************
  ********************

  tamiluthayam,

  இப்படிச் சொல்லி ஆற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

  பதிலளிநீக்கு
 12. பின்னோக்கி,

  அந்த சம்பவத்தில் இரண்டு அமைச்சர்கள், (ஒருவர் சுகாதாரத்துறை) ஒரு கலெக்டர், சுகாதாரத்துறைச் செயலர் இருந்தும் இவர்களின் வழியை சீர் செய்யச் சென்ற அவர் மன்றாடியதை கேட்க ஆளில்லை. என்ன கொடுமை?

  -----------------
  -------------------

  ஹேமா,

  உதவாத ஆட்கள் இருப்பதைப் பார்க்கும்போதுதான் இந்த மாதிரி ஆட்களின் அருமை இன்னும் அதிகமாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 13. உண்மை மீனாக்ஷி,

  என்ன ஆளைக் காணோம் கொஞ்ச நாளா?

  ----------
  ----------

  உண்மை புலிகேசி,

  அதுதான் மனிதம்

  பதிலளிநீக்கு
 14. காலத்தால் செய்த உதவி சிறுதெனினும் .... அதே உதவி உயிர் காக்க என்றால் ...

  உயிர் காக்கும் நிமிடங்கள்.. மனிதம் அல்ல அதையும் தாண்டி.. இறைவன்?

  சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 15. //என்ன ஆளைக் காணோம் கொஞ்ச நாளா?//
  ரொம்ப மும்முரமா கௌதமன் சாரை தேடிண்டு இருந்தேன் படத்துல, அதான்....:)

  பதிலளிநீக்கு
 16. வயதுக்கும் அறிவுக்கும் இடையே முதிர்ச்சி இடைவெளியை வெளிப்படுத்தாமல் நண்பர் நடந்து கொண்ட விதம் மனித நாகரீகத்தின் உச்சம்.. price of life vs. priceless life. some subtleties can be profound.

  பதிலளிநீக்கு
 17. அங்கு சும்மா வேடிக்கை பார்ப்பதினும் கேவலமாக வாளா இருந்த நமைச்சர் பெருமக்கள், வெருவாய்த்துரை ஆணையர், சீவலர்கள், எல்லாருக்கும் ஒரு "சீ" போடுவோமா? வேறு என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 18. ஒரு போலீஸ்காரர் உரிழந்ததைப் பற்றிப் படித்து விட்டு, இந்தப் பதிவைப் படித்ததால், கொஞ்சம் மனதை வருடியதுபோல் இருந்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!