ஞாயிறு, 24 ஜனவரி, 2010

தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ!


தயிர் சாதம் சமைப்பது(!)  எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
முதலில் தயிர் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேல் நாட்டறிஞர் மேந்தினுஸ் புர்வாங் என்பவர் அவர் எழுதாத ' The art of curd making' என்னும்  நூலில்  சொல்ல நினைத்து சொல்லாமல் (ஏப்பம்) விட்ட பகுதி இதோ: 
நல்ல தயிர் என்பது நல்ல பாலிலிருந்து, நல்ல முறையில் தயார் செய்யப்பட வேண்டும்.


உங்க ஊர்ல சந்தையில் விற்கும் பால் (எங்க ஊர்ல ஆவின் என்று பெயர்; பக்கத்து ஊருல நந்தினி என்று பெயர்.) எது என்று பார்த்து, அதை ஓர் இனிய மாலைப் பொழுதில் வாங்கி வந்து வீட்டில், ஃப்ரிட்ஜுக்குள் வையுங்கள். வெச்சிட்டீங்களா?


இரவு விஜய் டீ வி இல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர் சீசன் 'n' நடக்கும்பொழுது அந்தப் பாலை, உங்களுக்குக் கிடைத்த அடுப்பு எதுவாக இருந்தாலும், அதற்கேற்றப் பாத்திரத்தில் தண்ணீர் கலக்காமல், காய்ச்சுங்கள். எச்சரிக்கை : பால் பொங்கும்போது, படார் என்று அடுப்பை அணைத்துவிடவேண்டும். பிறகு, குற்றம் நடந்தது என்ன பார்க்கும் நேரத்தில், பாலை பாத்திரத்துடன் பெரிய நீர்ப் பாத்திரத்தில் இறக்கி, அந்தப் பாலின், உஷ்ண நிலையைக் குறைக்கவேண்டும். தொண்ணூற்றைந்து முதல் நூறு டிகிரி (சென்டிகிரேடு) வரையிலும் இருக்கின்ற பால், படிப் படியாகக் குறைந்து, நாற்பது / நாற்பத்தைந்து டிகிரிக்கு வந்தவுடன், நல்ல, புளிக்காத, கெட்டித் தயிர் ஒரு ஸ்பூன் எடுத்து, பாலில் ஊற்றி, ஒரே ஒரு கலக்குக் கலக்கிவிட்டு. பால் பாத்திரத்தை, அப்படியே மூடி வைத்துவிடுங்கள். மறுநாள் காலையில், நல்ல சுவையான கெட்டித் தயிர் தயாராக இருக்கும். 


குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் curd maker  உபயோகிக்கலாம்.  அடியில் heater பொருத்தப் பட்ட ஒரு பாத்திரம் - lacto bactor எனப் படும் தயிர் [உயிர்] வளர சரியான வெப்ப நிலையை நிர்வகிக்கிறது 3 மணி நேரத்தில் தயிர் தயார். 


தயிர் சாதம் பிசைய, நல்ல பச்சரிசிச் சாதம் வேண்டும். அதுவும் குழைந்து இருக்கவேண்டும். சாதம் சூடாக இருக்கக் கூடாது, சில்லென்றும் இருக்கக் கூடாது. இளம் சூட்டில் இருக்கவேண்டும்.  தேவையான அளவு சாதம் எடுத்து, ஒரு எவர்சில்வர் பாத்திரத்திலிட்டு, அதனோடு சிறிதளவு பொடி உப்பு சேர்த்து, நன்றாகப் பிசையவும். கையிடவேண்டாம் என்று நினைப்பவர்கள், ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கலாம். உப்பும் சோறும் கலந்த இந்தக் கலவையில், கொஞ்சம் கொஞ்சமாக தயிர் ஊற்றி, தொடர்ந்து பிசையவும்.  சிலர் இந்தத் தயிர் சாதம் புளிக்காமல் இருக்கவேண்டும் என்றால், சிறிதளவு காய்ச்சிய பால் விட்டு, தயிருடன் சேர்த்துப் பிசைவார்கள்.
திரவம் நிறைய இருப்பது நல்லது - இல்லையானால் ஆற ஆறக் கெட்டியாகி விடும் - அப்புறம் மாடல்லிங் க்ளேதான்!
இனி, இந்த சாதத்தில், மேற்கொண்டு என்னென்ன அயிட்டங்கள் போடலாம் என்று பார்ப்போம். முதலாவதாக, இதற்கு கடுகு தாளிப்பு (இந்த பெயரில் இப்போ ஒரு வலைப் பதிவு இருக்கு) செய்யலாம். கடுகு தாளிப்போடு சேர்த்து, பெருங்காயம் - பொறித்து, பொடித்துப் போடலாம். 
அப்புறம்? உளுத்தம் பருப்பை விட்டு விடலாமோ? சேர்த்துக்குங்க! அதையும்விட நல்ல விஷயம் முந்திரிப் பருப்பு - பொன்னிறமாக வறுத்துப் போட்டுக்குங்க!
உப்பு (மோர்) மிளகாய் - பொன்னிறமாக வறுத்து, கிள்ளிப் போடலாம். எனக்கு பொன்னிறமாக வறுத்து எடுத்த மோர் மிளகாயின் கோமாளிக் குல்லாய் பகுதி மிகவும் பிடித்தமானப் பகுதி.
அதற்கப்புறம்?
மாங்காய்த் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை.
அப்புறம்?
மாதுளை முத்துக்கள்.
அப்புறம்?  சின்ன திராட்சை கருப்பு பச்சை எது வேண்டுமானாலும். 
அதற்கப்புறம்?கை நிறைய எடுத்து வாய் நிறையச் சாப்பிடுங்க.  
இந்தத் தயிர் சாதத்திற்கு, தொட்டுக்கொள்ள - (சென்னை செந்தமிழில் 'கடிச்சிக்க') எதுவும் தேவை இல்லை. இதில் நாம் போட்டிருக்கும் பல விஷயங்கள் - நமக்கு இதை அப்படியே சாப்பிட உதவும். 
பக்கோடா, பருப்பு வடை, மாவடு, இதில் ஏதாவது இல்லாவிடில் தயிர் சாதம் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிப்போரும் உண்டு.   

35 கருத்துகள்:

 1. ஆஹா, பகாளாபாத் பிரமாதமா இருக்கே! படமும் ஜோரா இருக்கு! அப்படியே ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிடணும் போல இருக்கு!

  பதிலளிநீக்கு
 2. நன்றி மீனாக்ஷி. பகாளா பாத் - இதுவா? என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்ததால் தயிர் சாதம் என்று எழுதினோம். எங்களுக்கு தயிர் சாதம் என்றால் தமிழரின் உணவு என்றும் பகாளா பாத் என்றால் வேறு மாநிலங்கள் செய்யும் உணவு என்றும் தோன்றியது ஒரு காரணமாக இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 3. //பொன்னிறமாக வறுத்து எடுத்த மோர் மிளகாயின் கோமாளிக் குல்லாய் பகுதி மிகவும் பிடித்தமானப் பகுதி.//

  எனக்கும், இது மிக பிடிக்கும், அப்படியே சாப்பிடுவேன்,

  தயிர் சாதம் பார்சல் ஒன்னு....:))

  பதிலளிநீக்கு
 4. மேற்சொன்னவற்றோடு ஒரு டேபிஸ் ஸ்பூன் வெண்ணெய் அல்லது ஃப்ரெஷ் க்ரீம் (பாலாடை) சேர்த்தீங்கன்னு வச்சுக்கங்க தேவாமிர்தம்தான். ஆனா கெஸ்ட் வரும் போதும் சின்னப் பசங்களுக்கும். டயட்டில் இருப்பவங்க சிந்திக்கணும்:))!

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. மார்கழி மாதம், 28 தேதி, 'கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்....'. அன்றைய சிறப்பே 'தயிர்-சாதம்' தான். அன்று, 'ததியன்னம்' (தயிர் சாதம், தொத்யோன்னம்) இறைவனுக்கு நிவேதனம் செய்து, மேலே சொன்ன திருப்பாவை பாடலை பாடி, இறைவனை தொழும் நற்பேரினை பெறுவோமாக.
  மார்கழி மாத பொங்கல்(வெண், சர்க்கரை) மற்றும் ததியன்னம் -- இவைகளுக்காகவே கோயில் சென்ற சின்ன வயது ஞாபகம் வருகிறது.

  பதிலளிநீக்கு
 7. இண்ணைக்கு சண்டே.என் வீட்ல என்னோட ஸ்பெசல்
  தயிசாதம் + மீன்பொரியல் !

  பதிலளிநீக்கு
 8. சை கொ ப - அட எங்களுக்குப் பிடித்ததே உங்களுக்கும் பிடிக்குமா! நன்றி. டிசம்பர் இரண்டாயிரத்தெட்டில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில், வாழை இலை தொன்னையில் - வாங்கித் தின்ற சூடான தயிர் சாதத்தின் சுவையும் மணமும், இன்னமும் நினைவில் உள்ளது.

  பதிலளிநீக்கு
 9. ராமலக்ஷ்மி அவர்கள் கூறியுள்ள பாலாடை போடுதல் இதுவரை முயற்சிக்கவில்லை. அடுத்த முறை தயிரன்னம் தயார் செய்யும்போது - செய்து பார்க்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. மாதவன் - புதிய தகவலுக்கு நன்றி. இலக்கியச் சுவையையும் எங்கள் சமையல் பதிவுக்கு சேர்த்துவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 11. ஹேமா - நீங்க மீனாக்ஷி ரசிகையா அல்லது மீனாக்ஷி உங்க ரசிகையா என்று நாங்க குழம்பிகிட்டு இருந்தோம். நீங்க மீன் பொரியலுக்கும் ரசிகை என்று இப்போ தெரிஞ்சிக்கிட்டோம்!

  பதிலளிநீக்கு
 12. என‌க்கு மிக‌வும் பிடித்த‌மான‌ உண‌வு இது அதுவும் தொட்டுக்க‌ சின்ன‌ வெங்காய‌ம் இருந்தால் இன்னும் சூப்ப‌ர்

  பதிலளிநீக்கு
 13. வடுவூர் குமார் - தொட்டுக்க சின்ன வெங்காயம் இல்லே, கடிச்சிக்க - சின்ன வெங்காயம். பல்லாலே கடிச்சி உரிச்சி - பரக் என்று ஒரு கடி வெங்காயம், ஒரு பிடி தயிர் சோறு - இப்படியே மாறி மாறி - ஆஹா நல்ல அனுபவம்.

  பதிலளிநீக்கு
 14. அண்ணே, தயிர் சாதம் தமிழரின் உணவா? தமிழ் ஓவியாவுக்குக் கோபம் வந்துடப் போகுது, பாத்துங்க.

  பதிலளிநீக்கு
 15. சுகம் பெறும் வழிகள்:
  தயிர் சாதம் - மணத்தக்காளிக்காய் நெய் வறுவல் (i think that's what it is called, மிளகு போலிருக்கும்)
  தயிர் சாதம் - வால்மிளகு ஊறுகாய்
  தயிர் சாதம் - தக்காளித் தொக்கு
  தயிர் சாதம் - வதக்கிய பூண்டு வெங்காயத் துருவல் ("உங்க வூட்ல செய்ய மாட்டாங்க துரே, சும்மா எட்து அள்ளிக்க")
  தயிர் சாதம் - சுண்டைக்காய் வற்றல் (நெய்யில் வறுத்தால் இன்னும் சு)
  தயிர் சாதம் - செம்மீன் பொறியல் சுகம். (நண்பன் அ.அரசன் வீட்டில் சாப்பிட்டு விட்டு நைசாக வாய் கழுவி வீட்டுக்குள் வந்தாலும், 'என்னடா துரை, மீன் சாப்பிட்டு வந்துட்டது உங்க வீட்டுல தெரியுமா?' என்று என் மடிசார் பாட்டி காதுபட வத்தி வைக்கும் நண்பர் கூட்டம்)

  பதிலளிநீக்கு
 16. ரா.ல சொல்வது சரி. தயிர்சாதம் பிசையும் போது ஒரு ஸ்பூன் வெண்ணை (கடைந்தெடுத்த வெண்ணை - கடை வெண்ணை ஒத்து வராது) கலந்தால் சாப்பிடும் போது நாக்கிலும் நினைவிலும் ஒட்டிக் கொண்டு இருக்கும், முதல் முத்தம் போல்.

  இப்போ கொலஸ்ட்ராலுக்கு பயந்து தயிர்சாதத்தை நினைப்பதோடு சரி ;<

  பதிலளிநீக்கு
 17. என் பசங்களுக்கு இதை மாதிரி பண்ணலாம் ? ஆனால் அவர்கள் கருவேப்பலை, கடுகு, பச்சைமிளகாய், மிளகு, முந்திரி என்று எல்லாவற்றையும் எடுத்து விட்டு சாப்பிடும்போது எவ்வளவு மேனக்கேடவேண்டுமா என்று இதை போல் செய்வதை என் மாணவி விட்டு பல பல வருடம் ஆகிவிட்டது !

  பதிலளிநீக்கு
 18. //என் மாணவி விட்டு பல பல வருடம் ஆகிவிட்டது !//

  Sorry for the typo

  பதிலளிநீக்கு
 19. உங்கள் படம் பசியை ரொம்ப கிளப்புது அண்ணே !

  இன்னும் மூன்று நாளில் பெங்களூரில் இருந்து சென்னை வரும் அம்மாவின் கையால் தயிர் சாதம், எனக்கு பிடித்த ரெட் மிளகாய் போட்ட மோர் குழம்பு, பீன்ஸ் உசிலி கறி, முருங்கை வெத்த குழம்பு - ஆகா ஆகா - "சுகம் எதிலே இதயத்திலா" என்ற பாட்டு நினைவுக்கு வருது - ஆனால் சோறு தான் சுகம் !

  என்ன ஒரு கஷ்டம் என்றால் ஒரு வார இந்திய பயணத்தில் மூன்று நாள் அலுவலக மீட்டிங் என்று கண்ட கருமத்தை (Five Star ஹோட்டலில் வேகாத அரிசியும் அல்லது நேற்றைய சோறு என்று வைப்பான் !!).

  அதனால், நான் சனிக்கிழமை மட்டும் அம்மாவின் உணவை உண்டு அன்று இரவே அமெரிக்க செல்லவேண்டும் !! மேலே சொன்ன எல்லாவற்றையும் எனக்காக பண்ண சொல்லி கொஞ்சம் கொஞ்சம் போதும் !

  அடுத்த வருடம் தாய் தந்தையரின் ஐம்பதாவது ஆண்டு கல்யாண நாளை விமர்சியாக கொண்டாட ஆசை - தம்பியுடன் நேற்றே பேச ஆரம்பித்துவிட்டேன் !

  கொஞ்சம் மெனு செலக்ட் பண்ண "எங்கள் ப்ளாக்" ரேகமேண்டஷன் வேண்டும் போலிருக்கே !!!

  யாரு சார் சென்னையில் நல்ல சுவையான உணவு சமைக்கும் ஆசாமி !!

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 21. ஆமாம், யாரும் தயிர்சாதம்-நார்த்தங்காய் ஊறுகாய் காம்பினேஷனைப் பற்றி சொல்லவேயில்லையே! இந்த சாப்பாட்டுராமனுக்கு நார்த்தங்காய் இல்லாமல் ஒருவாய் சாதம் உள்ளே போகாது. சென்னை வந்தபின் எடிட்டர் லெனின் தாயார் (பீம்சிங்கின் மனைவியார்) வருடாவருடம் நார்த்தங்காய் ஊறுகாய் போட்டு ‘பெரிய’ ஜாடியில் கொடுத்தனுப்புவார்!அவர் வாழ்க!

  தயிர்சாதத்துக்கு இன்னொரு நல்ல குணம்: ‘நான்-வெஜ்’ சாப்பிடாத ’குடிமகன்’களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! உள்ளே போன சரக்கு வயிற்றை பாதிக்காமல் காப்பாற்ற இது மிகவும் உதவும். தில்லியில் இருந்தபோது, தயிர்சாதம் கடைசியில் இல்லையென்றால், குடிப்பதை தவிர்த்துவிடுவேன். நம்புங்கள், நாற்பது வருடங்களாக தொடர்குடியனாகவிருந்து, கடந்த பத்தாண்டுகளாக சுத்தமாக கைவிட்ட அனுபவசாலியின் வார்த்தைகள்!

  இன்னொரு ஐடியா: பாக்கெட் பாலில் தயிர் உறை குத்த அதை காய்ச்சவேண்டிய அவசியமில்லை. இரவு 9 மணிக்கு மூடிபோட்ட பாத்திரத்தில் பாலைவிட்டு, ஒரு ஸ்பூன் தயிரை கையால் கரைத்து சேர்க்கவேண்டும். மூடிவைத்து மறுநாள் காலை திறந்து பாருங்கள்: கெட்டித்தயிர் தயார்!

  தயிர்சாத புராணம் இன்னும் நிறைய இருக்கு! Five Star Hotel பார்ட்டிக்கு போனாலும், வீட்டுக்கு வந்து தயிர்சாதம் சாப்பிடவேண்டும்!

  பாரதி மணி

  பதிலளிநீக்கு
 22. தயிர் சாதம் பற்றிய சுவையான தகவல்களுக்கு எங்கள் நன்றி பாரதி மணி அவர்களே!

  பதிலளிநீக்கு
 23. தயிர் சாதத்தை நான் ஏன் விரும்புகிறேன் என்றால், என்மகள் அடம் பிடிக்காமல் அப்படியே சாப்பிடும் ஒரே ஐட்டம் இது தான்!

  இதைவிடச் சிறந்த உணவு எதுவென்றால் - அடுப்பிலிருந்து இறக்கி ஐந்து வினாடிகளுக்குள் தட்டில் இறங்கி - கையில் எடுக்க விரல் எலும்புகளையும் சுட்டு - வாயில் வைக்க நெய் வழியும் விரல்களிலிருந்து வழுக்கி மிளகுத் துண்டுகளுடன் நாக்கினை barbecue செய்யும் பொங்கல் தான்!

  எங்கள் ப்ளாக் - குழுவினரே நீங்கள் பொங்கலையும் போற்றி எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

  பதிலளிநீக்கு
 24. தயிர் சாதத்தை நான் ஏன் விரும்புகிறேன் என்றால், என்மகள் அடம் பிடிக்காமல் அப்படியே சாப்பிடும் ஒரே ஐட்டம் இது தான்!

  இதைவிடச் சிறந்த உணவு எதுவென்றால் - அடுப்பிலிருந்து இறக்கி ஐந்து வினாடிகளுக்குள் தட்டில் இறங்கி - கையில் எடுக்க விரல் எலும்புகளையும் சுட்டு - வாயில் வைக்க நெய் வழியும் விரல்களிலிருந்து வழுக்கி மிளகுத் துண்டுகளுடன் நாக்கினை barbecue செய்யும் பொங்கல் தான்!

  எங்கள் ப்ளாக் - குழுவினரே நீங்கள் பொங்கலையும் போற்றி எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

  பதிலளிநீக்கு
 25. தயிர் சாதம் பற்றி படித்தேன். என்னதான் பெண்மணிகள் சமைத்தாலும், ஆண்கள் சமையலுக்கு ஈடாகாது! தொழில் முறையில் சமைப்பவர்கள், அதுவும் நன்றாக சமைப்பவர்கள், ஆண்கள் தான். அதற்கு, அத்தாட்சி எனது வலைப்பதிவில், நான் எழுதிய இடுகை, "தயிர் வடை செய்து மனைவியை அசத்துவது எப்படி?"

  பதிலளிநீக்கு
 26. தயிர் சாதம் Best! எந்த கேள்வியும் கிடையாது. இருந்தாலும், எல்லா சாதமும் சாம்பார் சாதத்திற்கு அப்புறம் தான்.

  விவாதம் செய்ய நான் ரெடி! அதுவும் மயிலாப்பூர் மணி ஐயர் சாம்பார்னா சாம்பார் தான்!!!

  பதிலளிநீக்கு
 27. தயிர் சாதம் Best! எந்த கேள்வியும் கிடையாது. இருந்தாலும், எல்லா சாதமும் சாம்பார் சாதத்திற்கு அப்புறம் தான்.

  விவாதம் செய்ய நான் ரெடி! அதுவும் மயிலாப்பூர் மணி ஐயர் சாம்பார்னா சாம்பார் தான்!!!

  பதிலளிநீக்கு
 28. அன்பின் ”எங்கள் பிளாக் “

  தயிர் சாதம் செய்ய இவவளவு விபரம் வேண்டுமா ? அடேங்கப்பா ..... வீடல எல்லாம் சர்வ சாதாரணமாச் செய்யுறாங்க..... ம்ம்ம் - மறுமொழிக்ளும் அருமை. பதிவும் அருமை. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் அழகாக எளிமையாக எழுதப் பட்டிருக்கிறது. நன்று நன்று ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 29. ஹாஹா... அது சரி.... தயிர் சாதம் செய்வது தான் இருப்பதிலேயே குறைவான சமயம் அதிக ருசியுடன் இருக்கும்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்பா... இங்க போட்டிருக்கிற குறிப்பு பார்த்தால்.. எப்டிப்பா இப்டியெல்லாம்?? அதுவும் கரெக்டா தொலைக்காட்சி சீரியல் ப்ரோக்ராம் இதெல்லாம் போட்டு அந்தந்த சமயம் கரெக்டா செய்முறை சொன்னது ரசிக்க வைத்தது.. அதோடு தொட்டுக்கொள்ள என்னென்ன எப்படி எப்படி என்று சொன்னது இன்னும் சூப்பர்.... அப்பாதுரை தந்திருக்கார் பாருங்க தொட்டுக்க என்று ஒரு லிஸ்ட் அதுவும் அசத்தல்...

  ஆகமொத்தம் பஹாளாபாத் தும்ப ச்சென்னாகிதே....

  எனக்கு மிகவும் விருப்பமான உணவு தயிர்சாதம் தான்...

  அசத்தலான படப்பகிர்வு பொருத்தம்பா..மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...

  வலைச்சரத்தில் சரவெடி வெடிக்க ஆரம்பிச்சுட்டுது....

  அதற்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் குழுவினருக்கு....

  பதிலளிநீக்கு
 30. அருமையான தயிர் சாதப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 31. விருந்துக்கு நன்றி :-)

  நார்த்தங்காய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் இல்லாம தயிர்சாதம் ருசிக்காது :-)

  பதிலளிநீக்கு
 32. //மார்கழி மாத பொங்கல்(வெண், சர்க்கரை) மற்றும் ததியன்னம் -- இவைகளுக்காகவே கோயில் சென்ற சின்ன வயது ஞாபகம் வருகிறது.//

  maddi73, மதுரையிலே இருக்கிறச்சே வடக்குமாசி வீதி வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்கு இதுக்காகவே கோஷ்டி நடக்கும் சமயம் போவோம். ஆஹா, அந்த ருசி! இப்போ நினைச்சாலும் மறக்கவே முடியாத சுவை!

  பதிலளிநீக்கு
 33. தயிர்சாதம் செய்யும்போது முழுக்க முழுக்கத் தயிர் மட்டுமே பயன்படுத்தினால் சீக்கிரமாய்ப் புளிச்சுடும். ஆகவே பாலை விட்டுப் பிசைந்து கொண்டு தயிரில் இருந்து எடுத்த ஆடைகளை அதில் போட்டுப் பிசையுங்கள். இரண்டு நாளானாலும் புளிக்காது. எங்க வீட்டில் வாங்கும் பாலில் வீட்டிலேயே வெண்ணெய் எடுப்பதால் பாலாடை எப்போதுமே கையிருப்பில் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 34. இன்னொரு முறை. சாதம் வடிக்கையிலேயே ஆழாக்கு அரிசிக்கு அரைலிட்டர் பால் என்ற விகிதத்திலே பாலிலேயே குழைய வேக வைத்து எடுக்கவும். பின்னர் பாலாடையைப் போட்டுப் பிசையவும். சுவை அள்ளும். தொட்டுக்கப் பொடிப் பொடியாய் நறுக்கிய உப்பு+மிளகாய்ப்பொடி+பெருங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் கடுகு தாளித்த மாங்காய் ஊறுகாய். அல்லது மோர் மிளகாய்.

  பதிலளிநீக்கு
 35. இதைப் படிக்கும் சுவாரசியத்தில் நான் தேட நினைச்சதை மறந்தே போயிட்டேன் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!