வெள்ளி, 15 ஜனவரி, 2010

பட்டம் பற பற ... !அந்தக் காலத்தில் கட்டிடங்கள் கம்மி. வெற்றிடங்கள் நிறைய. எனவே பட்டம் விடுதல் போல விளையாட்டுகள் சாத்தியமாயின. ஆனால் இன்று கட்டிடக் காடுகளின் நடுவே, வெட்ட வெளி மைதானங்கள் குறைவு அல்லது மிகச் சொற்பம். இப்போது பட்டம் விடுவதை நினைத்தே பார்க்க முடியாது..

பட்டத்தில் சைவ பட்டம், அசைவ பட்டம் இரண்டு உண்டு. சாதா நூலில் பறக்கவிடப் படுவது சாதுப் பட்டம் (இது தனி) ட்வைன் நூலில் பறக்க விடப்படுவது சைவப் பட்டம். 'மாஞ்சா' நூலில் பறக்க விடப் படுவது அசைவப் பட்டம். கையை அறுத்து ரத்தம் வருமே...கையை மட்டுமா...மாட்டினால் கழுத்தையே அறுக்கும். சில சமயம் துரோகியாய் மாறி விட்ட நம் டீம் ஜால்ராக்களை அழைத்து மாஞ்சா நூலை அவர்கள் கையில் மாட்டி தண்டனை அளிப்பதும் உண்டு. 

டீம்? ஜால்ரா?  மேலே படியுங்கள் தெரியும்!

சூழ்ச்சம் (!!) எனப்படுவது யாதெனில், 'மூளைக்குச்சி'யின் இரண்டு பக்கமும் சரியான தூரத்தில் கணக்கெடுக்கப் பட்டு பெரிதாகாத வட்டத் துளை இட்டு, நூல் இழுத்து அதை நடுவுக்குக் கொண்டுவந்து சமச்சீர் செய்து மூன்று முடிச்சு இட்டதாக நினைவு. பின்னர் அதை முடிச்சிட்ட நடு பாகத்தில் தூக்கி நிறுத்தினால் பட்டம் ஒரு பக்கம் சாயாமல் இருக்க வேண்டும்!
வால் வைத்த பட்டம், முல்லண்டா, அர்லாண்டா,என்று பெயர்கள் வழங்கப் பட்டன. பெயர்க் காரணம் தெரியாது. முல்லண்டா என்றால் வாலில் ஒரு குமிழ் போலப் பொருத்தப் பட்டிருக்கும். அடல்ட்களின் உயர்ந்த வகைப் பட்டம் அது. குமிழ் இல்லாதது, பக்க வாட்டுகளில் சிறிய இரு அலங்கார குஞ்சங்கள் கொண்டது அர்லாண்டா என்று ஞாபகம். வால் பட்டம் விடுபவர்கள் பொடியர்கள் என்பது வழக்கு. (தஞ்சையில்) டீலுக்கு முல்லண்டா தான் கிங். கடைகளில் போய் கலர் பேப்பர் வாங்கி வந்து முல்லண்டா அர்லாண்டா பட்டம் செய்வோம். விளக்குமாற்றுக் குச்சிக்கு பதில் சற்றே தடித்த மூங்கில் குச்சி. 


ட்வைன் நூல் வாங்கி வந்து வீட்டுத் தோட்டத்தில் ஜன்னல் முதல் மரம் வரை, பின்னர் மரம் முதல் இன்னொரு மரம் வரை..என்று நீளமாகக் கட்டிவிடுவோம். சோற்றை எடுத்து மாவாக்கி அதில் கண்ணாடியை பொடியாக அரைத்து கலந்து நூலில் எல்லாப் பக்கங்களும் வளைத்து வளைத்து தடவி காய வைத்து மரங்களில் சுற்றிய பாகத்திலும் பின்னர் தடவி ஆஸ்பத்திரியில் பொறுக்கிய காலி பிளாஸ்டர் உருளைகளில் சுற்றி மாஞ்சா நூல் தயார் செய்யப் படும்! 


எந்தப் பட்டமாய் இருந்தாலும் அதை ஸ்டார்ட் செய்ய ஒரு ஆள் வைத்திருப்போம். டீலுக்கு அது ஒரு பிள்ளையார் பூஜை போல...தானாக எழ வைக்கப் பட்ட பட்டம் டீம் ஆள் இல்லாத பட்டமாக கருதப் பட்டது. டீம் ஆட்களில் ஒருவர் பட்டத்தை கையில் பிடித்து பத்தடி தூரம் பின்னாலேயே நடந்து சென்று (போதுமா?...போதுமா?...இன்னும் கொஞ்ச தூரம் போ...) காற்றடிக்கும் நேரத்துக்காகக் காத்திருப்பார். காற்று வீசியவுடன் ஆங்..விடு என்று பட்ட இயக்குனர் அலறியவுடன் தூக்கி விடுவார். இதற்கு 'ஏற்றி விடுதல்' என்று பெயர். ஆள் உள்ள டீம் என்றால் டீலில் பொறி பறக்கும்.


ஓட்டைத் தாளில் சிறு சிறு செய்திகள் எழுதி, (எதற்கோ?!) அல்லது கலர் பேப்பர்கள் உருவாக்கி நூலில் சொருகி மேலே 'செய்தி' அனுப்புவோம்.(யாருக்கோ?) நன்றாக மேலே ஏறிவிட்ட பட்டம் எந்த தூண்டு செயலும் இல்லாமல் பறக்கும். ஆடாமல் அது மேலே சிறிய துடிப்புடன் நிற்கும். அப்போது உடன் நிற்கும் டீம் அடிப்பொடிகள் 'உறங்குதுய்யா...' என்று ஜால்ரா போடுவார்கள். சில சமயம் நூலை அருகில் உள்ள கல்லில் கட்டி வைத்து விட்டு ஒரு அலட்டலுடன் இயக்குனர் அருகில் நண்பர்களுடன் 'உலக' விஷயங்கள் அலசிக் கொண்டிருப்பார்.
அறுந்த பட்டம் அல்லது அறுக்கப் பட்ட பட்டம் பிடிப்பது தனிக் கதை. தானாக அறுந்தால் சொந்தக்காரர் தன் டீம் மெம்பர்களுடன் கல், முள் பார்க்காமல் பட்டத்தைப் பார்த்த படியே ஓடுவார். கைக்கு எட்ட்டக் கூடிய தூரம் அது எப்போது வரும் என்று ஓடி, பின்னர் அதைப் பிடித்து 'மெக்கானிக் ஷெட்'டுக்கு (!) எடுத்து வந்து ரிப்பேர்  வேலைகள் பார்ப்பார்கள். அப்போது டீம் மெம்பர்கள், பறந்து கொண்டிருக்கும் 'பட்டர்'களை விரோதத்துடன் பார்த்த படி வேலையில் ஆழ்வார்கள்.


டீலில் அறுந்த பட்டமாக இருந்தால் கதை வேறு. சொந்தக்காரர் துரத்திக் கொண்டு ஓட முடியாது. 'ஜெயித்த' அல்லது  'அறுத்த' பட்டக்காரருக்கு சொந்தம் அது. ஆனால் அவர் ஓட மாட்டார். அதற்குதான் இந்த டீம் மெம்பர்கள் எனப்படும் தொண்டர்கள்.  அவார்கள் ஓடிச் சென்று அதைக் கைப்பற்றிக் கொண்டு வருவார்கள். கைப் பற்றப்பட்ட பட்டத்தின் சேதாரத்தைப் பொறுத்து, அது தலைவனுக்கோ அல்லது சீனியாரிட்டி அடிப்படையில் தொண்டர் (குண்டர்?) படையில் ஒருவருக்கோ பரிசாக வழங்கப் படும். பழைய சொந்தக் காரர் எதிரிலேயே அது மாற்றான் (!) கையால் பறக்க விடும்போது மான, கௌரவப் பிரச்னையால் எழும் பகைகள் நல்ல வேளையாய் அன்று மாலை ஆறு மணியுடன் முடிவுக்கு வரும்!நீயொரு பட்டம்..நானொரு பட்டம் நீயொரு பட்டம்.. நானொரு பட்டம்..என்றொரு தமிழ் சினிமா பாடல் உண்டு.


பட்டம் பதவி, பட்டம் பறக்கட்டும் என்று தமிழ் சினிமாக்கள் உண்டு.
(நான் ரசித்த பட்டப் பாடல், 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில் வரும் 'மானென்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்' என்ற பாடல் - ஹி ஹி பாடலில் ஒன்றும் இல்லை - பாட்டுக்கு நடித்தவர்கள்தாம் சூப்பர்...!) 

8 கருத்துகள்:

 1. இத்தனை நுணுக்கமா? ஒன்றிரண்டு முறை பட்டம் செய்து வீட்டுப் பின்புறத்தில் பறக்க விட்டிருந்தாலும், most of the time நண்பன் சுரேஷுடன் ஓசியில் ஒட்டிக்கொண்டு பட்டம் விட்டதைப் பார்த்ததோடு சரி.

  பதிலளிநீக்கு
 2. ஓசியில் இடம் கொடுத்த காரணத்துக்காக அவன் அறுத்தெறிந்த போட்டி பட்டங்களைத் தேடி தெருத்தெருவாக ஓட விட்டு எடுத்துக் கொண்டு வரச் சொல்வான். பயந்து கொண்டே ஓடியது நினைவிருக்கிறது. என்ன செய்கிறானோ சுரேஷ் இன்னாளில்?!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா... ஸ்கூல் டேஸை நியாபகப்படுத்தியதற்கு நன்றி. நானும் நிறைய காத்தாடி விட்டவன்தான். இதில் முக்கியமான மேட்டர் 'டீல்' தான்.

  இரட்டை கண்ணு, ஒத்தை பட்ட ஓரக் கண்ணு, பானா, டெல்லி பானா என பல வகைகளில் காத்தாடியின் டிசைனை வைத்து அழைப்பது எங்கள் வட்டார வழக்கம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நாஸ்டால்ஜிக்.

  குரோம்பேட்டையில் வாழ்ந்த காலங்களில் நினவு வருவது மிக வாட்டர் தொட்டி உள்ள மைதானத்திற்கு எதிரில் வீடு அதனால் அந்த மைதானத்தில் தல்லேறி என்று விளையாட்டில் பம்பரம் இழந்தது தான். அங்கே இருந்தபோது பட்டம் விட்டது ரொம்ப கம்மி. சில சமயம் எழு கிணறு வரை பட்டத்தை துரத்தி இருக்கின்றேன் !

  அண்ணாநகர் போனபிறகு கிழக்கு அண்ணாநகர் முதல் மேற்கு அண்ணாநகர் வரை கண்டமேனிக்கு ஓடுவோம். வீடுகள் / மைதானங்கள் விடுங்கள், அப்போது தெருவில் வாகன நெரிசல் கிடையாது !

  இப்போது இருக்கும் சென்னை வாழ்க்கைக்கு நம் உயிரை எடுக்க வரும் "எமனே" உயிரை பணயம் வைத்து தான் வரவேண்டும் !!

  எனக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரே பட்டம் இது என்பதால் இந்த பட்டம் ரொம்ப பிடிக்கும் !

  - சாய்ராம்

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. 11 வருடம் (இப்போது அல்ல) குஜராத்தில் இருந்த அனுபவம். 'உத்தராயன்' தினத்தன்றும் அதற்கு அடுத்த நாளும், மொத்த ஊரே மொட்டை மாடியில் தான் குடித்தனம் இருப்பார்கள், பட்டம் விடத்தான்.(சமைப்பது தவிர). இந்த இரண்டு தினங்களும் அவர்கள் அடிக்கும் லூட்டி இருக்கிறதே.. அப்பப்பா.. என்னவொரு இன்பம். இதில் இரண்டு விஷயங்கள் ஆபத்தானவை.. மேலிருந்து பட்டத்தினைப் பார்த்தபடி கீழே விழுந்தவர்களும் உண்டு. 'மாஞ்சா' கயிறு கழுத்தில் பட்டு அடிபட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளும் உண்டு. கவனம் ரொம்பத் தேவை, இந்த விஷயத்தில்.
  காலை பொழுது விடிந்தவுடன் ஆரம்பித்து.. பின்னர் மாலை (அந்தி சாயும்) வரை நீடிக்கும் இந்த பட்டம் விடும் போட்டி.
  பின்னர் இரவில், சற்று பெரிய பட்டத்தினை ஐந்தாறு மேழுவர்த்திகளை சரியான இடைவெளி விட்டு, கயிறில் கட்டி விட்டால்.. இரவில் வானில் ஜொலிக்கும், விளக்குகள் நன்றாக இருக்கும். இதற்கு 'துக்கள்' அல்லது 'டுக்கல்' என்று பெயர்.

  பதிலளிநீக்கு
 7. 'ஒப்புக்கு சப்பாணி' நாங்கெல்லாம் இதான். சின்ன வயசுல எங்க அண்ணா, மத்த அக்கம் பக்கத்து வீட்ல இருக்கற நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரே மொட்டை மாடில, ரொம்ப பெருசு, பட்டம் விடும்போது, நாங்க எல்லாம் எடுபிடி வேலை செஞ்சு குடுத்தா, இவங்க பட்டத்தை நல்லா மேலே பறக்க விட்டு, கொஞ்ச நேரம் எங்க கைல பிடிச்சுக்க சொல்லி நூலை குடுப்பாங்க. நாங்களும் ஏதோ ஏரோப்ளேனையே எங்க கைல குடுத்து ஓட்ட சொல்றமாதிரி, பய பக்தியோட அதை வாங்கிண்டு, அப்படியே பிடிச்சுண்டு இருப்போம். அதெல்லாம் பயங்கர த்ரில் அப்போ! ஆனா இந்த பட்டம் விடறதுக்கு முன்னாடி அவங்க எங்கள வேலை வாங்குவாங்க பாருங்க, மொட்டை மாடில, அதுவும் உச்சி வெய்யில்ல, அது மஹா அட்டூழியம். நாங்களும் கொஞ்சம் நேரம் நூலை பிடிச்சுண்டு நிக்கறதுக்காக விழுந்து விழுந்து எல்லாம் செய்வோம்! ம்ம்ம்ம்...எவ்வளவு அழகான, இனிமையான நாட்கள். அதெல்லாம் இப்ப நெனச்சு பாத்தா கனவு மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
 8. எனக்குப் பிடிச்ச பட்டம் பாட்டு சந்திரமுகியில் வரும் 'கொக்கு பற பற' தான். 'மயிலே பற' என்கிற வரியில் வருகிற வளைவு, மாணிக்க விநாயகத்தின் கணீர்க் குரல் போக ஹி..ஹி... நயன்தாரா, மாளவிகா கூட காரணம்ங்கோ!

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!