செவ்வாய், 25 டிசம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : இரு வழிப் பாதை - ரிஷபன்



 
இரு வழிப் பாதை

ரிஷபன்

ராஜன் இப்படிச் சொல்வானென்று எதிர்பார்க்கவே இல்லை.

மதியம் உணவு இடைவேளையின் போது என்னைத் தேடி வந்தான்.

" தியாகு.. இந்தா  500 ரூபாய்"

வாங்கிக் கொண்டேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு 4000 ரூபாய் வாங்கியிருந்தான். ஒன்றரை வருடங்கழித்து 1000 ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தான்.

" என்னது"

"ஸாரிடா. முழுசாத் திருப்பித் தர முடியல. கொஞ்சம் கொஞ்சமா திருப்பித் தரவா"

என்ன சொல்ல. தலையசைத்தேன்.

மூன்று மாதம் கழித்து 300.. ஆறு மாதத்திற்குப் பின் 400 என்று கொடுத்தான். இன்று 500 .. அடுத்துப் பேசியதுதான் அதிர்ச்சி.

" சரியாயிருச்சா"

அவன் முகத்தில் துளிக்கூட தயக்கமில்லை.

சட்டென்று என்னால் பேச முடியவில்லை.

" என்ன தியாகு"

வற்புறுத்தவும் சொல்லி விட்டேன்.

" இல்லே.. இன்னும் பாக்கி இருக்கு"

இதுவரை கொடுத்த விவரம் சொன்னேன். அவன் முகத்தில் சுருக்கங்கள்.

" சரி நீ சொன்னால் சரியாத்தான் இருக்கும்"

நன்றி இணையம்.

அப்போதுதான் என் சங்கடம் அதிகமானது. ஆக தன் கணக்கு தவறு என்று அவன் உணரவில்லை.

" ராஜன் நீயே யோசிச்சுப் பாரு. முழுக்கக் கொடுத்துட்டதா நினைச்சா விட்டுரு"

பேசாமல் போய்விட்டான். மதியம் என்னால் நிம்மதியாக வகுப்பு எடுக்க முடியவில்லை. மாணவர்களை என் பேச்சாற்றலால் கட்டிப் போடுகிறவன் இன்று என் வகுப்பிலேயே ஏன் பேச்சு சத்தம் என்று ஹெட் மாஸ்டர் வந்து எட்டிப் பார்க்கிற நிலைக்கு ஆளாகி விட்டேன்.

" தியாகு கண்ட்ரோல் யுவர் ஸ்டூடண்ட்ஸ்" என்றபோது அவமானமாய்த் தலையசைத்தேன்.

பணம் தொலைகிறது. நட்புக்குள் அது பெரிதில்லை. ஆனால் வாங்கியதை முழுமையாகவும் திருப்பித் தராமல் எனக்கும் உபயோகப்படாமல் செய்து விட்டுக் கடைசியில் கணக்கும் தவறாக்கி விட்டுப் போனானே.

மேஜையைத் தட்டினேன்.

" நேத்து நடத்தியதை ரிவைஸ் பண்ணுஙக. மகேஷ் இங்கே வா. துளி சத்தம் இருக்கக் கூடாது"

பொறுப்பை வகுப்பு லீடரிடம் கட்டினேன்.

அன்றைய தினமெப்படிக் கழியும் என்றிருந்தது. புவனா என்னை இன்னமும் சங்கடப்படுத்தினாள்.

' அப்பவே சொன்னேன். சும்மா யாராச்சும் கேட்கிறாங்கன்னு எடுத்துக் கொடுத்துட்டு இப்ப முகத்தைத் தொங்கப் போடுவானேன். பட்டால்தான் புத்தி வருது'

' என்ன உளர்ற. அவன் என்ன இன்னிக்கு நேத்து பழக்கமா.. ரெண்டு பேரும் ஒண்ணா ஜாயின் பண்ணோம்'

நன்றி இணையம்.

" அதான் சுலபமா மொளகா அரைச்சிட்டார்"

அவளுடன் பேசப் பிடிக்கவில்லை. என்னங்க இப்படிப் பண்ணிட்டார்னு தேறுதல் எதிர்பார்த்தால் வேல் பாய்ச்சுகிறாள்.

சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியேறி விட்டேன். இருட்டியபிறகு வீடு திரும்பினேன்.

" எங்கே போயிட்டீங்க. டியூஷன் மறந்துருச்சா"

உள்ளே வரும்போதே கேட்டாள். அட என் குழப்பத்தில் கடமையை மறந்து போனேனே. புவனா சமய சஞ்சீவி. இந்த மாதிரி நேரங்களில் ஈடு கட்டி விடுவாள்.

" உங்கள் நண்பர் வந்திருந்தார்"

" யாரு ராஜனா"

" ம். இந்தாஙக மீதி பணம்"

புரியவில்லை. ஏன் முழுமையாகத் திருப்பி விட்டான்

" வீட்டுக்குப் போனாராம். உங்ககிட்ட பேசின விவரம் சொன்னாராம். விமலா.. அதான் அவர் மனைவி.. என்னங்க இவ்வளவுதானே கொடுத்திருக்கீங்க எப்படிச் சரியாப் போவும்னு விரட்டிட்டாளாம். பதறிப் போய் வந்தார்"

சொல்லிக் கொண்டே போனாள்

" ஏதோ ஞாபக மறதியாக் கேட்டுட்டேன். அவ சொல்லவும் தான் உறைச்சுது. மீதிப் பணமும் உடனே கொடுத்தாத்தான் நிம்மதின்னு மோதிரத்தை அடகு வச்சு பணம் கொண்டு வந்தேன்னார்"

கை நீட்டி பணத்தை வாங்கினேன்

இது போதும். நட்புக்குள் நேர்மை அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

" எந்த அடகுக் கடை" என்றேன் மீண்டும் வெளியே கிளம்ப ஆயத்தமாகி.

53 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்

    வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஹை ரிஷபன் அண்ணா கதை...எதிர்பார்த்தேன்...வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை...மனம் நெகிழ்ந்தது இறுதி வரியை வாசித்ததும்!

    பின்னர் வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இம்மாதிரி அனுபவம் எங்களுக்கும் நடந்திருக்கு. தர்மசங்கடமா இருக்கும். பல சமயங்களில் விட்டுக் கொடுக்கிறாப்போல் தான் ஆகும். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா... இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் ஓரளவு இருக்கும்தான். நாம் எப்படி ரீயாக்ட் செய்வோம் என்பதில் வித்தியாசமிருக்கும்!

      நீக்கு
  5. துரைக்குப் பிரச்னை ஏதும் இல்லாமல் நல்லா இருப்பார் என நம்புகிறேன். பிரார்த்தனைகள் அனைவருக்காகவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணாவின் பிரச்சனைகள் எல்லாம் நல்லபடியாக முடியும்....நல்லதே நடக்கும்

      கீதா

      நீக்கு
    2. அனைவருக்கும் வணக்கம்...

      இலாகா இல்லாத மந்திரி மாதிரி ஆகிப் போனது...

      காத்திருப்போர் - என, வைத்திருக்கின்றனர்...

      தினமும் அலுவலகத்துக்குச் சென்று வர வேண்டும்...

      வேறு தலைவலி இப்போதைக்கு இல்லை....

      பார்க்கலாம்...

      நலம் நாடிய அனைவருக்கும் நன்றி..

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று ரிஷபன் அவர்களின் கதையாகத்தான் இருக்கும் என்று உள்ளே ஒரு பட்சி சொல்லியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா. அக்கா மகள் எப்படி இருக்கிறார்?

      நீக்கு
  7. காய்ச்சல் இப்போதுதான் விட்டிருக்கிறது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா உங்களின் இச்செய்தி மனதிற்கு மிகவும் சந்தோஷம் தருகிறது!! கெட் வெல் சூன் வாழ்த்துகளை உங்கள் அக்கா மகளுக்குச் சொல்லிவிடுங்கள் பானுக்கா! பிரார்த்தனைகளும்

      கீதா

      நீக்கு
    2. அக்கா பெண் நலமடைந்து வருவது அறிந்து மகிழ்ச்சி.
      இறைவனுக்கு நன்றி.
      வாழ்க வளமுடன்.

      நீக்கு
    3. ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களது சகோதரியின் மகள் நலமடைந்து வருவது அறிந்து மகிழ்ச்சி...

      இறைவன் துணை நிற்பானாக..

      நீக்கு
  8. தியாகு போன்ற நல்லவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட மன உளைச்சல்கள் வரும். முடிவு அருமை.

    பதிலளிநீக்கு
  9. இப்படியான அனுபவங்கள் பலருக்கும் நடந்திருக்கும்.

    தியாகுவின் மனம் நல்ல மனம். அப்படியானவர்களின் மனம் படும் பாடு சொல்லி முடியாது. என்னதான் சிறு வருத்தம் வந்தாலும் இறுதியில் அதை மீட்க நினைக்கிறாரே அந்தே நிற்கிறது அவரது மனம்!!! அன்பு நட்பின் பெருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மனைவிகளின் மன நிலையும் யதார்த்தம். அவர்கள் இடித்தும் உரைப்பார்கள் (இதை திருவள்ளுவரின் பாணியில் சொல்லுகிறேன் இடித்துரைப்பவன் நண்பன்!!!!!!!)....இப்படி நினைவுபடுத்தி நல்லதும் செய்வார்கள்...
    அதையும் அண்ணாவின் கதையில் யதார்த்தம்
    கணவன் எல்லா விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருந்தால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஏஞ்சல் மற்றும் எல்லோருக்கும் இனிய கிறித்துமஸ் வாழ்த்துகள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிச்சனுக்குள் இரண்டு நாள் முன்பே நுழைந்த தேவதை ஏதாவது செய்திருக்கும் என நம்புகிறேன்!

      ஏஞ்சலினுக்கும் ஏனைய நண்பர்கள்/நண்பிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ்தின நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  12. அனைவருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்!
    எனக்கு பிடித்த ப்ளம் கேக்கை பேக்கரியில் வாங்கி ஏஞ்சல் பெயரை சொல்லி சாப்பிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. கதை மிக அருமை.
    நட்பின் மேன்மையை சொல்லும் கதை.


    பதிலளிநீக்கு
  15. நல்ல கதையை வழங்கிய ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நல்ல கதை. ரிஷபன் ஜி கதை என்றால் சொல்ல வேண்டுமா... ‘கதா’ நாயகன் ஆயிற்றே! :)

    பணம் கொடுத்து விட்டு இப்படி சங்கடப் படுவது எனக்கும் நடந்திருக்கிறது. 1993-ல் கொடுத்த காசு திரும்ப வரவே இல்லை. இப்போதும் நட்பில் இருக்கிறார் - வாங்கியது மறந்தே போய்விட்டது அவருக்கு - கொடுத்துவிட்டதைப் போலவே இருக்கிறார், நானும் வாங்கிக் கொண்டதே போலவே இருக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு
  17. சொன்னால் கேள் சத்தியம் மயிர் ஊடாடா நட்பில் பொருள் ஊடாடக் கெடும்

    பதிலளிநீக்கு
  18. அதையும் தாண்டிய நட்பில் இந்த மாதிரி சஞ்சலங்களுக்கு இடமில்லையே ரிஷபன் சார்....

    நீங்க வித்தியாசமான களங்கள், கருக்களைக் கொண்டு கதை எழுதறீங்க. அரைச்ச மாவே அரைக்காம. இதற்காகவே உங்களை நிறைய பாராட்டலாம்.

    பதிலளிநீக்கு
  19. எங்க அப்பா என் ஸ்கூல் ஹாஸ்டல் சமயத்தில் சொன்னது, 'யாரேனும் ஃப்ரெண்டு கடன் கேட்டான்ன ரெண்டு ரூபாய் கொடு, அதோட மறந்துடு. கடன் கொடுத்தவன் கொடுப்பானோ மாட்டானோ என்று நீயும் மனசில் நினைக்கவேண்டாம். அவன் திரும்பக் கொடுக்கலைனா அந்த ரெண்டு ரூபாயோட போயிடும், உனக்கும் ஒன்று கத்துண்டமாதிரி ஆயிடும்' என்றார்.

    பதிலளிநீக்கு
  20. எனக்கு எதையும் கேட்கவோ (கொடுத்த பணத்தையும்தான்) ரொம்ப சங்கடமாகவும் கூச்சமாகவும் உணர்வேன். அதனால் நானெல்லாம் 'கடன்' கொடுக்க தகுதியில்லாதவன். சென்ற வருட இறுதியில் 50,000 ஒருத்தன் கஷ்டப்படறானேன்னு கடனா கொடுத்துட்டு, அடுத்த மாதம் தருகிறேன் என்று சொன்னவனை, வேண்டாம், மூன்று மாதங்கள் கழித்து ஃபெப்ரவரி 5ம் தேதிக்குள் கொடுத்துவிடு, நான் வந்து கேட்கமாட்டேன் என்று சொல்லிட்டேன்.

    ஆனா பாருங்க... நல்லதுக்கு எங்க காலம்? அவன் என்னை ஏமாற்றுகிறான் என்று புரிந்துகொள்ள எனக்கு மே மாதம் வரை ஆகிவிட்டது. ஏமாற்றும் எண்ணத்தைப் பொறுக்காமல் முதல் முறையா, அவன் கிட்ட பணத்தைத் திருப்பித் தரச் சொன்னேன். என் ஹஸ்பண்டிடம் இந்தத் தவறைச் சொன்னேன் (கடன் கொடுத்த). அவள், 'உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை' என்றாள். எப்படியோ கொஞ்சம் கடுமையா பேசி பணத்தை ஊரிலிருந்து திரும்புவதற்கு ஐந்து நாட்கள் முன்பு வாங்கிவிட்டேன். இனி 'கடவுளே' கேட்டாலும் கடன் கொடுப்பதில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

    'நட்பு' என்று சொல்லும்போது, சாப்பிடப் போகும்போது நாம் நிறைய தடவை பணம் கொடுக்கும்படி ஆகிவிடும். என் கொள்கை, அடுத்தவர் எனக்கு எதுவும் செலவழிக்கக்கூடாது என்பதால், (கேஜிஜி சார் 50 ரூ டாப் அப் பண்ணினதை நான் ரசிக்கலை. மனசிலேயே இன்னமும் இருக்கு. அதுக்கு வேளை வரும் திருப்பிக் கொடுக்க..ஹாஹா), அந்த மாதிரி சமயங்களில் மனசில் அதனை ஏற்றிக்கொள்ள மாட்டேன். இருந்தாலும் நட்பில், 'பொருள் ஊடாடக் கூடாது'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது உண்மைதான், கடன் படுவோர் நல்ல உள்ளங்களை.. இரக்கமற்ற மனசுக்காரர்கள் ஆக்கி விடுகின்றனர்..

      இதேபோல தான் எங்கள் அனுபவமும்.. அவசரமில்லை எனச் சொல்லிட்டோம் என்பதற்காக, இழுத்தடிச்சு.. பின்பு கொஞ்சம் கொஞ்சமா.. பிச்சு பிச்சு தந்து முடிவில் 500 பவுண்டுகள் இருந்தன.. வேண்டாம் அது கிஃப்ட்டாக இருக்கட்டும் என்றே சொன்னோம்ம்.. ஆனா அதையும் 300 தந்தார்கள்.. சரி மிகுதி இருக்கட்டும் என்றோம்.. பின்பு நீஈஈஈஈஈஈஈண்ட நாட்களின் பின்பு மிகுதியும் வந்து சேர்ந்தது... எனக்கு லேட்டானாலும் பறவாயில்லை.. நாம் எப்படிக் கொடுத்தோமோ அப்படி திருப்பி தரொணும் என்பதுதான் விருப்பம்...

      அதுக்காக கடனே கொடுக்கக்கூடாது எனும் முடிவுக்கு இன்னும் வரவில்லை நாங்க:).

      நீக்கு
  21. 1976ல் ஒரு உறவினர் மிகவும் தேவை ரூ 500/ கொடுங்கள் ஒரு மாதத்துக்குள் திருப்புவேன் என்றார் நானும் என் சக்திக்கும் மீறி ரூ 500/- அனுப்பினேன் பணமின்னும் வந்துகொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  22. நட்புகளுக்கிடையே கடன் , கைமாற்று பற்றி நிறைய எழுதலாம்...

    எடுத்தாலும் கொடுத்தாலும் நண்பன் தானே!...

    விமர்சனங்கள் எதற்கு என்று வெளியே சொல்வதில்லை..

    நட்பு - அதற்கிணையாக எதுவுமே இல்லை...

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்திய அன்பர்களுக்கு அன்பு நன்றி

    பதிலளிநீக்கு
  24. புவனா சமய சஞ்சீவி...
    விமலா இதய சஞ்சீவி...

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. "ம்.. இந்தாங்க பணம்.."
    எண்ணிப் பார்த்தேன். நாலாயிரம் இருந்தது. அட! திருப்பிக் கொடுத்த 2200-ஐ மறந்தே போய்விட்டானா?
    புவனாவைப் பார்த்தேன். "பேசாமல் பணத்தைப் பெட்டியில் வையுங்கள்" என்றாள்.
    "என்ன புவனா சொல்றே?" என்று பதறினேன்.

    ---- இந்த கோணத்தில் இந்தக் கதையை ஒரு புரட்டு புரட்டினால் இன்னொரு அழகான சிறுகதைக்கு வழி வகுக்கும்.
    யாரானும் முயற்சித்துப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "என்ன புவனா சொல்றே?" என்று பதறினேன்.
      "எப்போ பார்த்தாலும் உயிர் நண்பன், உயிர் நண்பன்னு எங்களைவிட அவர்தான் உங்களுக்கு உசத்தியாப் போயிட்டாரு. எத்தனை தடவை அவரை வெளில ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கீங்க. ஒரு தடவையாவது அவர் பணம் கொடுத்திருக்காரா? பாரிவள்ளலுக்கு அப்புறம் நீங்கதான்னு எப்போவும் நீங்கதான் பில்லுக்குப் பணம் கொடுத்திருக்கீங்க. நமக்கு மட்டும் என்ன கொல்லைலயா பணம் காய்க்குது"

      "உனக்கு என்னடி தெரியும் எங்க நட்பைப் பத்தி. அவங்க அப்பா எங்க அப்பாவுக்கு ஆரம்ப காலத்துல எவ்வளவு உதவியிருக்கார்னு தெரியுமா? நான் நாலு எழுத்து படிச்சதே அவர் போட்ட பிச்சைன்னு எத்தனை தடவை எங்கிட்ட சொல்லியிருக்கார். ஏதோ விதி... அவங்க அப்புறம் நொடிச்சுப்போயிட்டாங்க. நான் பணக்காரனா யிருந்தால் கடனாகவாடி அவனுக்கு காசு கொடுத்திருப்பேன்? சும்மாவே தூக்கிக்கொடுத்திருப்பேன். எப்படிப்பட்ட பாவத்தை சட்டுனு பண்ணச் சொல்லிட்ட"

      ****

      "விமலா... எதுக்கு நாலாயிரம் கொடுக்கற? அவனுக்கு ஏற்கனவே கொஞ்சம் பணம் கொடுத்திருக்கேனே"

      1. "எல்லாம் எனக்குத் தெரியும். உங்க அப்பான்னாலதானே அவங்க குடும்பமே மேல வந்ததுன்னு சொல்லியிருக்கீங்க. அந்த நன்னி இருந்திருந்தா கடனாவா ரூபாயை உங்ககிட்ட தியாகு கொடுத்திருப்பார். உங்க அப்பா செஞ்ச நன்னிக்குத்தானே உங்க அப்பா பெயரை அவருக்கு அவர் அப்பா வச்சிருக்கார். அதை உணர்ந்திருந்தார்னா திருப்பிக் கேட்கணும்னு மனசு வருமா"

      "அது சரி.. அதுக்கு ஏன் 4000மா தரச் சொல்ற?"

      "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. படிச்ச அசடு நீங்க. 4000த்தைக் கொடுங்க. நல்லதாப் போச்சுன்னு வாங்கிவச்சிக்கிடுவாரு. அப்போவாவது உங்க மரமண்டைக்கு தியாகுவைப் பத்தித் தெரியுதான்னு பார்க்கலாம்"

      "அவன் ரொம்ப நல்லவன்'டீ.."

      "அதையும்தான் நான் தெரிஞ்சுக்கறேனே"

      2. "ஏங்க.. நாம இன்னைக்கு கஷ்டத்துல இருக்கலாம்க. அதுக்காக வட்டி கொடுக்காம பணத்தை தியாகுட்டேர்ந்து வாங்கிக்கலாமா?"

      "ஏய்... அவன் வட்டீல்லாம் எதிர்பார்க்கவே மாட்டாண்டி. எப்போ முடியுதோ அப்போக் கொடுன்னு சொல்லித்தாண்டி அவன் இந்தப் பணத்தைக் கொடுத்தான். நான் கூட 500, 200ன்னு கொடுத்துத்தான் அடைக்கறேண்டீ"

      "இதோ பாருங்க... நம்ம வம்சம் நல்லா இருந்த வம்சம். எல்லாருக்கும் உங்க முன்னோர் கொடுத்துத்தான் பழக்கமே தவிர வாங்கிப் பழக்கமில்லை. நம்ம போதாத காலம் அப்பா நொடிச்சுப் போய் நாமும் கொஞ்சம் கஷ்டப்படறோம். அதுக்காக பெரியவங்க செஞ்ச தானத்தை திரும்பி வாங்கிக்கறமாதிரி காரியத்தை நாம செய்யலாமா?"

      "அவன் என் உயிர் நண்பன்'டீ"

      "எத்தனையோ முறை நீங்க வற்புறுத்தியும் அவர் ஹோட்டல் பில்லுக்கு பணம் கொடுத்திருக்கார்னு சொல்லியிருக்கீங்க. நீங்க இந்த 4000ஐயும் கொடுத்துடுங்க. நாம யார்கிட்டயும் வாங்கக் கூடாதுங்க. அதிலும் உங்க அப்பா கொடுத்த வீட்டுல வாங்கவே கூடாதுங்க. உங்க அப்பா இப்போ இருந்தாலும் நான் சொல்றதுதான் சரின்னு சொல்வாரு. நம்ம கஷ்டம் நம்மளோட. ஆனா நம்ம முன்னோர்கள் செஞ்ச தானத்தை நாம திரும்பி வாங்கறது மஹா பாவம்"

      ஜீவி சார்... வேகவேகமா எழுதறதுனால, refinedஆ இருக்காது. ஆனால் கதை நல்லா தொடர்ந்திருக்கேனா?

      நீக்கு
  27. ஆஹா... நெல்லை.. கதைக்குள்ளே கதை எத்தனை கதைகள்? எவ்வளவு மனித மன கோணல் மாணல்கள்?
    மனித மனங்களைப் படிப்பது ஒரு கலை. அந்தக் கலை உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது என்பதே என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
  28. //நாம யார்கிட்டயும் வாங்கக் கூடாதுங்க.
    அதிலும் உங்க அப்பா கொடுத்த வீட்டுல வாங்கவே கூடாதுங்க. //

    இந்த இரண்டு வரிகள் என்னை உலுக்கி விட்டன.

    பதிலளிநீக்கு
  29. ரிஷபன் ஜியின் கதை மிக அருமை. அவர் ஒரு இனிப்பு கொடுத்தார் என்றால், மீண்டும் பல இனிய கதைகள் நெ த வழி வந்துவிட்டன. நட்ப் பாராட்டப் படவேண்டிய ஒன்று.
    பணம் அன்பு நண்பர்களிடம் விரிசல் உண்டாக்கும்.
    பெருந்தன்மைக்காரர்களையும் பார்த்திருக்கிறேன்.
    பொருளில்லாமல்
    துன்பப் படுபவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதும் துன்பமே.
    ரிஷபன் ஜி வாழ்த்துகள்.
    முரளி மா, பல கோன சிந்திப்பு அதிசயப் படுத்துகிறது. அருமையான எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா... ஜீவி சார் சொன்ன உடனே மனசுல தோணினதால எழுதிட்டேன். அப்புறம், ரிஷபன் சார் கதையோட தொடர்ச்சியா எழுதி கே.வா.போக்கு அனுப்பியிருக்கலாமோன்னு தோன்றியது. கதை எழுத மனசு ஒருமுகப் படணும். அது எப்போதும் அமையறதில்லை.

      நீக்கு
  30. ஹா ஹா ஹா மிக அழகிய கதை... நிறைய டுவிஸ்ட்டு வச்சு எழுதிட்டார் ஆசிரியர்...

    எனக்கும் அப்படியே மனம் கொதிச்சுப் போயிருந்தது ஏனெனில் நமக்கும் இந்த மொத்தமாக் கொடுத்துவிட்டு பின்பு பிச்சுப் பிச்சு வாங்கிய அனுபவம் உண்டு:)..

    நல்லவேளை அவர் மெளமான இருந்தது.. பல நேரங்களில் மெளனம் நல்ல பலன் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
  31. கதை என்பது ஒருவர் மனதில் உதிக்கும் கற்பனை அதை ரசிக்கவோ இல்லாவிட்டால் விலகி நிற்கவோ செய்யலாமில்லாவிட்டால் வேறொரு கோணத்தில் கதைக்கலாம் என்பதே என் அபிப்பிராயம்

    பதிலளிநீக்கு
  32. மிக மிக அருமையான கதை. கடைசியில் ஆசிரியர் முடித்திருப்பது அந்த நட்பின் அன்பைக் காட்டுகிறது. அருமை இம்மாதிரியான மனம் வெகு சிலருக்கே அமையும்.

    இப்படியான அனுபவங்கள் உண்டு.அதனாலேயே நான் கடன் கொடுப்பது என்பதற்கு மிகவும் யோசிப்பேன். நட்பு என்பது மகத்தானது அதை பாழ்படுத்திக் கொள்ள மனம் வராது ஆனால் அதே நட்பு நாம் பணம் கொடுக்கவில்லை என்றால் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லும் ஆனால் நல்ல புரிதல் இருந்தால் கொடுக்கவில்லை என்றால் புரிந்து கொள்ளும்.

    மிக மிக நெருங்கிய நட்பு உறவு திரும்பத் தருவார்கள் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே கொடுப்பதுண்டு.

    நல்ல கதை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. ஆஹா, ரிஷபன் ஜி அவர்களால் அளிக்கப்பட்டுள்ள மேலும்
    ஒரு மென்மையான + மேன்மையான திவ்யப் பிரஸாதம்.

    ஒவ்வொரு கதாபாத்திரங்களும், அவரவர்களின் குணாதிசயங்களும்,
    மிகவும் கச்சிதமாக செதுக்கித் தரப்பட்டுள்ளன.

    மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    -=-=-=-

    என்னை இங்கு மிகவும் கஷ்டப்பட்டு வரவழைக்க, லண்டன் அதிரா வீடு வரை சென்று,
    அரும்பாடு பட்டுள்ள அன்பு நண்பர் நெல்லைத்தமிழன் ஸ்வாமீ ஜி அவர்களுக்கும் என் நன்றிகள்.

    -=-=-=-

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!