வியாழன், 8 அக்டோபர், 2020

எட்டிப்பார்த்தது எங்கள் வீட்டையும் அந்தப் பொல்லாத கொரோனா..

 எட்டிப்பார்த்தது எங்கள் வீட்டையும் அந்தப் பொல்லாத கொரோனா..


எவ்வளவோ ஜாக்கிரதையாகத்தான் இருந்தோம்.   (இதைப் பற்றி எந்நேரத்திலும் என்னிடம் லேசான எள்ளலுடன் கேட்டவர்களும் உண்டு!)  நான் மட்டும் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன்.  வெளியில் சென்று வந்து கொண்டிருந்த ஒரே ஆள்.  ஆனால் அபார்ட்மென்ட்டில் பக்கத்து கதவு பாதிக்கப்பட, நான்கு நாட்களில் என்னைப் பற்றியது, அல்லது எங்களைப் பிடித்தது அது.

விநாயகர் சதுர்த்தி அன்று தொண்டை  கரகரப்பு, ஜுரம்.  அதற்கு காரணம் ஆறு மாதங்களுக்குப்பின் தாகம் தாங்காமல் முதல்நாள் நான் குடித்த ஐந்து டம்ளர் சூடில்லாத கேன் தண்ணீர் என்று நினைத்துக்கொண்டேன்.  தொடர்ந்த நாட்களில் தாள முடியாத உடல் சோர்வும், ஒரு  நாள் குளிர் ஜுரமும் பயமூட்ட...   

பாஸ் ஏற்றிவைத்த ஊதுபத்தியின் வாசனையே மூக்கில் தெரியாதிருக்க, சந்தேகம் தொடங்கியது.  மறுநாள் சாப்பிட்ட பண்டத்தின் ருசியும் தெரியவில்லை.  அட, காபி வாசனையும் தெரியவில்லை, ருசியும் தெரியவில்லைன்னா பார்த்துக்குங்க..  எதற்கும் இருக்கட்டும் என்று ஒருவருக்கொருவர் தனிமைப்படுத்திக்கொண்டுதான் இருந்தோம்.

அலுவலகம் சென்றால் துரத்தாத குறையாய் அனுப்பினார்கள்.  "போய் ஓய்வெடுங்க...   பயங்கரமா இருமறீங்க...  ரொம்ப டயர்டா தெரியறீங்க..."    அவங்க கவலை அவங்களுக்கு...   அதுவும் நியாயம்தான்.

மறுநாள் டெஸ்ட் கொடுத்தேன்.  நான் கொடுத்தது தனியார் லேபில்.  ஆகஸ்ட் 26 டெஸ்ட்டுக்கு சொல்லி, அவர்கள் வராமல், மறுநாள் மதியம் வந்து எடுத்தார்கள்.  வெள்ளி காலை பாஸிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது.  

பீதிதான்.  பயம்தான்.  குழப்பம்.  கேள்விப்பட்ட அத்தனை சம்பவங்களும் மனதில் அலைமோதுவதைத் தடுக்க முடியவில்லை.  

மாநகராட்சியில் சோதித்திருந்தால் ஏரியாவே அல்லோலகல்லோலப் பட்டிருக்கும்.  உடனே நான்கைந்து பேர் வந்து ப்ளீச்சிங் பௌடர் தெருவெங்கும் தெளித்து,  நம் வீட்டு வாசலில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டி, தெருவில் தகரம் அடைத்து என்று...  எங்களையும் ஒரு வண்டியில் அடைத்து ஏற்றிச் சென்றிருப்பார்கள்.  இப்போது அந்த தகரம் அடிப்பது ஏன் என்று கோர்ட் கேள்வி கேட்டிருப்பதாக செய்தித்தாளில் படித்தேன்.

ஆனால் தனியாரில் எடுத்ததால் எல்லாம் சற்று அமைதியாகவே இருந்தது.  சுகாதார ஆய்வாளர் ஃபோன்செய்து விசாரித்தார்.  ஆம் என்றதும் ஆஸ்பத்திரியா, வீடா என்றார்.  ஹோம் க்வாரன்டைன் என்றேன்.  விவரங்கள் கேட்டு வாட்ஸாப்பில் நான் சொன்ன சவீதா ஆஸ்பத்திரி விவரம் அனுப்பப் சொல்லி அமைதியாகி விட்டார்.  ஹெல்த் டிபார்ட்மெண்ட்டிலிருந்தும், ஆட்சியாளர் அலுவலகத்திலிருந்தும் தொலைபேசி வந்தது.  ஏதாவது அபாயம், அவசரம், உதவி என்றால் இந்த நம்பரில் கூப்பிடுங்கள் என்றார் ஆட்சியாளர் அலுவலக ஹெல்த் டிபார்ட்மென்ட் அதிகாரி.

எனக்கு பாஸிட்டிவ் வந்ததால் மறுநாளே வீட்டில் உள்ள அனைவருக்கும் எடுத்தோம்.  மறுநாள் ரிசல்ட் வந்தது.  பாஸ், பெரியவன்  பாஸிட்டிவ்.  மாமியாருக்கும், இளையவனுக்கும் நெகட்டிவ்.  மாமியாரை அவர் தங்கை வீட்டுக்கு உடனடியாக அனுப்பி வைத்தோம்.  மாமியாரை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் அனுப்பு என்று கேஜிஎஸ் வீட்டிலும் சொன்னார்கள்.  ஆனால் மாமியாருக்கு அவர் தங்கை வீடு என்பது சௌகர்யமாக இருக்கும் என்பதால் அங்கேயே அனுப்பினோம்.  அவரைத் துணிந்து வைத்துக் கொள்ள சம்மதித்தார்கள்.  அது மட்டுமல்லாமல், எங்களுக்கு அடுத்த 16 நாட்களுக்கு சாப்பாட்டுக்கு ஒரு மாமாவை ஏற்பாடு செய்து விட்டார்கள்.  மூன்று வேளையும் அவர் சாப்பாடு கொண்டுவந்து கொடுக்க, இளையவன் எங்களுக்கு உதவ..   எங்கள் 15 நாள் தனிமைப்பயணம் தொடங்கியது.

கேஜிஜி வாட்ஸாப்பில் கேட்டுக்கொண்டே இருந்தார்.  உறவுகள், நண்பர்கள் அனைவரும் தினசரி விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.  ஆறுதல் ​ளி​த்துக் கொண்டே இருந்தார்கள்.  பிரார்​த்​தித்துக் கொண்டே இருந்தார்கள்.  அனைவருக்கும் எப்படி நன்றி சொல்லப்போகிறோம் நாங்கள்?  உங்கள் அன்புக்கு நன்றி.

​வெளியில் சொல்லிக்கொள்ள வேண்டாம் என்று சொல்லி உதவிய நல்ல உள்ளங்களும் உண்டு.​

நான் ஒரு அறையிலும், பாஸும், பெரியவனும் ஒரு அறையிலும் அடைபட்டோம்.  சவீதா கல்லூரி, மருத்துவமனையின் ஹோம் கேர் திட்டத்தில் 5,000 கட்டி சேர்ந்தோம்.  இது முக்கியமாக எதற்கு என்றால் வீட்டிலேயே இருப்பதற்கு சான்றளிக்க.  எங்களுக்கு மருத்துவமனை போக விருப்பமில்லை.

சாதாரணமாக பாசிட்டிவ் வந்தால் செய்யவேண்டிய வேலை என்ன என்றால், உடனே நம் நுரையீரல்களின் நிலையைப் பரிசோதித்து வைத்துக்கொள்ள வேண்டும்.  நெஞ்சில் சளி, கொரோனா இருக்கிறதா என்று எக்ஸ்ரே எடுக்கலாம்.  நம் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் இருக்கிறது என்று பார்க்க ஒரு ரத்த சோதனையும் செய்து கொள்ளலாம்.  நாங்கள் செய்யவில்லை.  சில வசதிக்குறைவுகள்தான் காரணம்.

இதைச் சரி என்று சொல்லமாட்டேன்.  நம்மால் சமாளிக்க முடியும் என்கிற ஒரு தைரியம்.  ஒரு யூகம், ஒரு துணிச்சல்தான்.  இதில் ஒரு கஷ்டம் என்ன என்றால், குறிப்பிட்ட வயதுக்கு மேலே இருந்தாலோ, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை இருந்தாலோ, இந்தச் சோதனைகளில் நுரையீரல் பாதிப்பு சிறிய அளவு இருந்தாலோ கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்கள். 

இத்தனை நாட்களில் நான் கேட்டறிந்த வகையில் வந்த எண்ணத்தில் வீட்டிலேயே இருக்கத் தீர்மானித்தோம்.  ஆனாலும் பயம் நிறைந்த நாட்கள்தான் அவை.

அரசு மருத்துவமனைகளில் கிங் இன்ஸ்டிட்யூட் பரவாயில்லை என்று சொன்னார்கள்,.  ஆனால் அங்கும் வேறு மாதிரி அனுபவப்பட்டுக் கஷ்டப்பட்ட நண்பர்கள் அனுபவங்களைக் கேட்டிருந்தேன்.  எனக்கு மருத்துவமனை செல்வதில் மனதளவில் அலர்ஜி இருந்தது.



சவீதா மருத்துவமனையிலிருந்து தினம் இருமுறை தொலைபேசுவார்கள்.  அவர்கள் ஒரு கிட் கொடுத்திருந்தார்கள்,.   அதில் 20 முகக்கவசம், ZINC மாத்திரை 30, விட்டமின் C 500 15 மாத்திரைகள், ஒரு சானிடைசர் பாட்டில், ஒரு சிறு காட்டன் பாக்கெட், ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர், ஒரு டிஜிட்டல் தெர்மாமீட்டர், ஆகியவை இருக்கும்.  தினம் இருமுறை ஆக்சிஜன் அளவு, (95 ற்கு கீழ் இறங்கக்கூடாது) பல்ஸ், டெம்பெரேச்சர் பார்த்து சொல்லவேண்டும்.  அவர்கள் கொடுக்கும் அட்டையிலும் குறித்துக்கொள்ள வேண்டும்.  அபாய அளவு ஏதாவது இருந்தால்  உடனே ஆஸ்பத்திரி செல்லலாம்.

சி டி  லங்ஸ் பார்க்க வேண்டுமா என்று கேட்டபோது தொலைபேசி மருத்துவர், இப்போது அவசியமில்லை, ஆக்சிஜன் அளவு இறங்கினால் பார்க்கலாம்.  சமயங்களில் இப்போது சரியாய் இருந்தாலும் பின்னர் மாறலாம் என்றார்.  நான் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அதுபற்றி கேட்டதும், தேவையானால் எடுக்கலாம், ஆனால் வந்தால் அட்மிட் செய்து, 10 நாட்கள் வைத்துக் கொள்வோம் என்றார்கள்.  அட்வான்ஸ் 30,000.  தினசரி 9,000.  ராமச்சந்திராவில் தினசரி 8,000 என்று கேள்விப்பட்டேன்.  மியாட்டில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்றார்கள்.

தூக்கமில்லா இரவுகள்.  திடீரென எட்டிப்பார்த்த அதிக இருமல், தாங்க முடியாத தலைவலி, ஒருவாரம் விட்டு விட்டு நீடித்த ஜுரம்..  இவை எனக்கு.  

பாஸுக்கு பெரிய சிம்ப்டம்ஸ் இல்லை என்றாலும் அவர் கேஸ்டிரைடிஸ் நோயாளி.  அது கொஞ்சம் படுத்தியது.  மகனுக்கும் இந்தத்தொல்லை ப்ளஸ் இருமல்.  இருமல் அவர்கள் சொன்ன மருந்தில் மகனுக்கு இரண்டு நாட்களில் குணமானது.  எனக்குத் தொடர்ந்தது.  கீதா அக்காவிடம் கேட்டு நாட்டுமருந்து வாங்கி சாப்பிட்டதில் குணம் தெரிந்தது.

பசி இருந்தாலும் வாய்க்கு எதுவும் பிடிக்காமல் இருந்தது.  ஏன், இப்போதும் அப்படிதான் இருக்கிறது.  ருசியும், வாசனையும் பத்து நாட்களில் மெதுவாய்த் தெரியத்தொடங்கின.  ஆனாலும் இப்போதும் முன் நாக்கு மரத்துப்போனது போலவே ஒரு உணர்வு!

ஆகஸ்ட் 28 இல் பாசிட்டிவ் ஆன நாங்கள் மெதுவாய் குணமானோம் - கடவுளின் கிருபையாலும், நண்பர்கள், உறவுகளின் ப்ரார்தனைகளாலும்.

இப்போதும் உடம்பு அடித்துப் போட்ட மாதிரி களைப்பாய்த்தான் இருக்கிறது.  லேசான இருமலும் இருக்கிறது.  ஆனாலும் பரவாயில்லை.  குணமடைந்து வருகிறோம்.

எங்களைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிலர் இப்போது எங்களைத் தொடர்பு கொண்டு அனுபவங்களைக் கேட்டறிந்து அதற்கேற்ப அவர்களும் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு நான் சொன்னது, "நான் செய்தது இது என்பதால் இது சரியான நடைமுறை என்று அர்த்தமல்ல.  அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி மாறும்.  அவரவர் உடல்நிலையைப் பொறுத்தும், உடலில் ஏற்கெனவே இருக்கும் உபாதைகளைப் பொறுத்தும் நிலைமை மாறலாம்.  எனவே மருத்துவர் யோசனையைக் கேளுங்கள்"

சவீதா மருத்துவமனை போல் சூர்யா, எஸ் ஆர் எம் மருத்துவமனைகளும் ஹோம் கேர் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

======================================================================================================

பொக்கிஷம் :

1950 இல் வெளியான இந்த பொன்னியின் செல்வன்தான் முதல் இல்லையா?  அதற்கான மணியம் அவர்களின் ஓவியங்கள்.  ஒவ்வொரு கேரக்டரின் பெயரும் ஓவியத்துடன் இருக்கிறது.  கொலாஜ் செய்ததில் பெயர்கள் மறைந்துவிட்டது!  எங்கே, கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!


மூன்று தெய்வங்கள் படத்தில் சிவாஜி, நாகேஷ், முத்துராமன் மூன்றுபேரும் எஸ் வி சுப்பைய்யா கடையில் வியாபாரம் செய்வார்கள்.  அப்போது இப்படி ஒரு பனியன் வியாபாரமும் செய்வார்கள்.  அதில் நாகேஷ் உள்ளே போய் அதே பனியனையே இழுத்து நீட்டி அடுத்த சைஸாக கொண்டு வந்து தருவார்.

காங்கிரஸ் - 1951!



எம் எல் வியின் திருமணம்.



==============================================================================================

பாஸுக்கு எழுதிக் கொடுத்த குட்நைட் கவிதைகள் இரண்டை முன்னர் வெளியிட்டிருந்தேன்.  இதோ இன்னும் இரண்டு..

​1) இன்றைய ஆசைகள்
இமைகளில் காத்திருப்பு
திரை போட்டதும்
கனவுப் படம் ஆரம்பம்.


2) இமைக் கதவுகளைச் 
சாத்தி
மனத்துக்கும் உடலுக்கும்
ஓய்வு கொடுக்கின்ற
கண்கள்.
தழுவட்டும் உறக்கம்.


==================================================================================================

ஃபேஸ்புக் பக்கம்...



============================================================================================

102 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அன்பு ஶ்ரீராம் வெல்கம் .நல்வரவு. இனி வலுவோடு வாழ்க்கை தொடரட்டும்.
    இறைவன் அனைவரையும் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நாங்கள் எல்லாம் அசந்துதான் போய்விட்டோம். பயத்தில் மனம் உறைந்தாலும் இறைவனின் கருணையில். நம்பிக்கை இருந்தது. அவனும் கை விட வில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா...   உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் எங்களுக்கு பலம்.

      நீக்கு
    2. அனைவரும் உங்கள் குடும்பத்துக்காகப் பிரார்த்திக் கொண்டோம் .-/\-

      நீக்கு
    3. ஆம் அம்மா.  

      உறவுகள், நட்புகள் அனைவரும்.  

      அனைவருக்கும் நன்றி.

      நீக்கு
  4. உங்களுக்கு கொடுத்த மருந்துகள் ஜுரத்துக்கும் சேர்த்துக் கொடுத்தார்களா. சவிதா மருத்துவமனைக்கு மனம் நிறை நன்றி. எல்லாம் கூடிய சீக்கிரமே. சரியாக வேண்டும் இறைவன் கருணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிகுறிகளுக்குத் தக்கவாறு கொடுத்தார்கள்.  அவர்கள் கொடுத்த கிட்டில் ஜுரத்துக்கு இல்லை.  தேவையானால் சிலவற்றை அவ்வப்போது வெளியில் வாங்கி கொண்டோம்.  இது போன்ற விஷயங்களில் எங்கள் ஆட்டோக்காரர் மிகவும் உதவியாக இருந்தார்.

      எனக்கு ஒரு வாரம் வரை விட்டு விட்டு ஜுரம் மற்றும் தலைவலி  வந்தவண்ணம் இருந்ததால் நான் ஏற்கெனவே வைத்திருந்த DOLO 650 மாத்திரை எடுத்துக் கொண்டேன்.

      நீக்கு
  5. பொன்னியின் செல்வன் படங்களில் ஆதித்த சோழன் அடுத்து யானை மேல் துஞ்சிய பராந்தக சோழன்?
    குந்தவை, ஆதித்த. கரிகாலன்அருள் மொழி,, வந்தியத் தேவன், கண்டராதித்ய சோழன் அவர் பெயர் அங்கேயே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா...   சரி.  இவை 1950 டிசம்பர் கல்கியில் வந்தவை.

      நீக்கு
  6. குட்நைட் கவிதைகள் படித்ததும் எனக்கே உறக்கம் வருகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
  7. எம்எல்வி திருமணப்படம் மிக அருமை,.

    பதிலளிநீக்கு
  8. முத்தையா பிள்ளையின் பதிவிலிருந்து அப்பொழுதே. பிரிவு இருந்தது தெரிய வருகிறதே!

    பதிலளிநீக்கு
  9. அன்பு ஶ்ரீராம், இன்னும் அந்தக் கவலை நீங்கவில்லை. எப்பொழுதும் பத்திரமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். விரைவில் தக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் தாக்கத்திலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  11. @ஸ்ரீராம், உங்கள் உடல்நிலை இப்போது பரவாயில்லையா? மகன்கள், பாஸ் ஆகியோரும் நலமா? மாமியார் திரும்ப இங்கே வந்துவிட்டாரா? வீட்டு வேலைகளை எல்லாம் பாஸே தனியாகச் செய்து கொள்கிறாரா? கவனமாக இருக்கவும். உங்கள் உடம்பு சரியில்லாத நேரம் தான் வாட்சப் நண்பர் கேகேஆர் ரஹ்மானும் அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் ஒரு மருத்துவமனையிலும் அவர் மனைவி கிங்க்ஸ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் குணமடைந்தார்கள். இப்படி நிறையத் தெரிந்த நபர்கள்! நண்பர்கள்! சென்னையில் பலரும் சிகிச்சை சரியில்லாமல் கஷ்டப்படுவதாக இப்போதும் செய்திகள் வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழு நார்மலுக்கு வர மூன்று மாதங்கள் கூட ஆகலாம் என்கிறார்கள். சிலருக்கு அப்படி பாதிப்பு ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள். எங்கள் அலுவலகத்திலேயே 50 வயதுப் பெண் கொரோனா முடிந்து வந்து சுறுசுறுப்பாக இருக்கிறார்.

      மாமியார் வந்தாச்சு. செப் 14 முதல் அலுவலகம் சென்று வருகிறேன். மூவருக்குமே இருமல், உடல் அயர்ச்சி விடவில்லை.

      நீக்கு
  12. நீங்கள் தனிமையில் இருக்கையில் விசாரித்ததோடு சரி. பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது முழுவதும் குணமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்குச் சரியாக இருக்கும் என நம்புகிறேன். அந்த நாட்டு மருந்து நான் எப்போதும் பயன்படுத்துகிறேன். எனக்கு இருக்கும் ஆஸ்த்மா இருமலே சரியாகும். உங்களுக்கு நேரம் எடுத்து இருக்கிறது. நோயின் தாக்கம் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இப்போதும் கவனமாகவே இருங்கள். நிறைய ஓய்வு எடுங்கள். முடிந்தவரை இஞ்சி, நெல்லிக்காய் சேர்த்துச் சாறு எடுத்து அருந்துங்கள். முருங்கைக்கீரை கிடைத்தால் சூப் அல்லது முருங்கைக்கீரை+பாசிப்பருப்புச் சேர்த்து வேகவிட்டுக் கொட்டிய சுண்டல், அல்லது முருங்கைக்கீரை அடை, சப்பாத்தி போன்றவை சாப்பிடுங்கள். கபசுரக் குடிநீரும் போட்டுக் குடிக்கலாம். மாதம் ஒரு முறை ஹோமியோபதி மாத்திரை ஆர்செனிக் ஆல்பம் 3 நாட்கள் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா நேரத்தில் ஆர்செனிக் எடுக்கவேண்டாம் என்று சவீதா மருத்துவர் சொன்னார். ஆர்செனிக் கிட்னியை பாதிக்கும், எனவே ஓரிரு மாதங்கள் போகட்டும் என்றார்.

      ஆர்செனிக் ஆகட்டும், கபசுர, இம்யுனைசேஷன் ஆகட்டும் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும் என்று முன்னர் அதிகாலை எடுத்துக் கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் மாலை எடுக்கிறோம்.

      மகனுக்கு மறுபடி இருமல் வந்திருப்பதால் அந்த நாட்டு மருந்தை இரவு மட்டும் அவனுக்கும் தருகிறேன்.

      ஆர்செனிக் மூன்று நாட்கள் முதல் இரண்டு மாதம் சாப்பிட்டபின் வாரம் ஒரு நாள் எடுத்துக் கொண்டிருந்தோம். அதுவும் ஒரு ஹோமியோபதி மருத்துவர் தொலைக்காட்சியில் சொன்னதுதான்.

      நீக்கு
  13. வாய்க்கு ருசி தெரிய அஷ்டசூர்ணம் என்றொரு நாட்டு மருந்துப் பொடி உள்ளது. எட்டு சாமான்கள் கலந்தது. அதை வாங்கி வைத்துக் கொண்டு சாப்பாடுக்குப் பின்னால் ஒரு தேக்கரண்டிப் பொடியை மோரில் போட்டுக் குடித்து வந்தால் போதும். சரியாகும். சுண்டைக்காய் பிடிக்கும் எனில் வேப்பம்பூவோடு சேர்த்துச் சுக்கு, பெருங்காயம் போட்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சூடான சாதத்தில் ஒரு மேஜைக்கரண்டி பொடியைப் போட்டு நல்லெண்ணெய்/நெய் ஊற்றி ஒரு பிடி சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மற்ற சாதங்கள் சாப்பிடலாம். இவற்றில் நிச்சயம் பலன் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டு மருந்துக் கடையில் அஷ்டசூர்ணப் பொடி என்று கேட்டாலே கிடைக்குமா,,? சுண்டை வத்தலும் முயற்சிக்கிறேன்.

      நீக்கு
    2. அஷ்டசூர்ணம் என்றாலே கிடைக்கும். நாட்டு மருந்துக்கடைகள், ஆயுர்வேத மருந்துக்கடைகள் ஆகியவற்றில் கிடைக்கும். சித்தா மருந்துகளிலும் உண்டு. எல்லாவற்றிலும் அடிப்படை ஒன்று தான் என்பதால் ப்ராண்ட் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாமே கேட்கும். இம்காப்ஸ் எனில் இன்னும் நல்லது.

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. படங்களை எல்லாம் பெரிது பண்ண முடியலை. என்றாலும் குந்தவை, யானை மேல் துஞ்சிய தேவர், அரிஞ்சய சோழர், கண்டராதித்தர், முதல் பராந்தகர் ஆகியோரை அடையாளம் காண முடிந்தது. மூன்று தெய்வங்கள் அயனாவரம் சயானி தியேட்டரில் பார்த்தோம். நல்ல நகைச்சுவைப் படம். அதுக்கப்புறமும் தொலைக்காட்சிகள் தயவில் பார்த்திருக்கோம். எடை தூக்குபவர் சொல்லும் ஜோக்குகளைப் படிக்க முடியலை. படம்பெரிதாகவில்லை. மறுபடி மத்தியானமாப் பார்க்கிறேன்.

    காங்கிரஸில் காந்தி நுழைந்த உடனேயே மனவேற்றுமைகளும் அதிகம் ஆகிவிட்டன. மதன் மோகன் மாளவியா, லாலா லஜ்பத்ராய், பால கங்காதர திலகர் போன்றோரை ஓரம் கட்டிய பின்னரே அது தனிப்பட்ட ஒருவரின் சொத்தாக மாறி விட்டது. இந்த அழகில் இவங்கல்லாம் இப்போ அத்வானியையும், ஜோஷியையும் 90 வயதுக்குக் கட்சிப்பணி ஆற்ற வேண்டாம் என்னும் பிஜேபியால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அத்வானியை ஒதுக்கிவிட்டதாய்ச் சொல்லிக் கொண்டு இருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதன் மோகன் மாளவியா, லாலா லஜ்பதிராய், பால கங்காதர திலகர் போன்ற பெருமக்களை எல்லாம் நம் நினைப்பதே இல்லை...

      வெட்கமாக இருக்கிறது...

      நீக்கு
    2. படங்கள் கொலாஜ் செய்யப்பட்டதால் பெரிதாக்க முடியாது. அதில் உள்ள படங்களில் எதையாவது தனியாகக் கேட்டால் தனிப் படமாக இணைக்கிறேன்.

      நீக்கு
  16. எம்.எல்.வியின் திருமணப் புகைப்படம் நன்றாக இருக்கிறது. இருவரின் நிகழ்ச்சிகளையும் மதுரையில் நிறையக் கேட்டிருக்கேன். உங்க பாஸுக்கு எழுதிய கண்ணுறக்கம் கொள்ளும் கவிதைகளைப் படித்தால் கூட எனக்கெல்லாம் தூக்கம் வரப் படுத்துகிறது. "உள்ளத்தில் நல்ல உள்ளம்" என்று விட்டு விட்டேன் இப்போதெல்லாம். :)))))

    மணிக்கொடி பற்றித் தெரிந்த அளவுக்கு சரஸ்வதி பற்றித் தெரியாது, விபரங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கம் வர ஒரு யோசனை. தேங்காய் எண்ணெயை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள். படுப்பதற்கு முன் இரண்டு மூன்று சொட்டுகள் எடுத்து இரண்டு பாதங்களிலும் நன்கு தேய்த்துவிட்டுப் படுத்துக்கொள்ளுங்கள். நல்ல தூக்கம் வரும்.

      நீக்கு
    2. அடடா... தூக்கத்தைக் கெடுக்கின்றனவா கவிதைகள்?!!!! விகடம் கிருஷ் எங்கள் உறவினர் என்று ஞாபகம்! சரஸ்வதி பற்றி ஜீவி ஸார் எப்போதோ சொல்லி இருந்தார் என்று ஞாபகம். நன்றி கீதா அக்கா.

      நீக்கு
    3. நெல்லை.. ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அவ்வப்போது இரண்டு பாதங்களும் நெருப்பில் வைத்தது போல எரியும். சுடும். பெரிஃபெரல் தியூரோபதி அறிகுறி. இது கொரோனா பக்க விளைவுகளில் ஒன்று. மற்றபடி எனக்கு அல்ப்ராக்ஸ் போட்டி தூக்கம் வரவில்லை.

      நீக்கு
    4. தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றும் கலந்து வைத்துக் கொண்டு பாதங்களில் தினம் தேய்த்துக் கொள்கிறேன் பல வருடங்களாக! காலில் நரம்பு இழுத்துக்கொள்ளும். வலி, அரிப்பு, எரிச்சல் வரும். அதுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கு. ஒரு கிண்ணத்தில் என் படுக்கை அருகே எப்போதும் இருக்கும்.

      நீக்கு
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இந்த வைத்தியத்தை நான் வாட்சப்பில் பார்த்து உபயோகிக்க ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரிந்திருந்தால் முன்பே பகிர்ந்துகொண்டிருந்தால் முன்பே உபயோகித்திருப்பேனே. அது சரி... சம்பந்தமில்லாத மூன்று எண்ணெய் கலவை வேலைக்கு ஆகுமா?

      நீக்கு
    6. இந்த முக்கூட்டு எண்ணெய் பற்றிப்பல பதிவுகளில்/பதிவுகளுக்கான கருத்துகளில் பகிர்ந்திருக்கேன். புதுசா இன்னிக்குச் சொல்லலை! தலைக்குக் கூட இந்த முக்கூட்டு எண்ணெய் தான் தேய்ச்சுப்பேன் எனவும், அம்மா இதில் சின்ன வெங்காயம், வசம்பு, கொம்பரக்கு எல்லாம் போட்டுக் காய்ச்சி வைப்பார் என்றெல்லாம் சொல்லி இருக்கேன். ஒருவேளை நீங்க அப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வந்திருக்க மாட்டீங்க! எனக்குத் தோல் ஒவ்வாமை உண்டு எனவும், அதற்கெனப் பிரத்யேகமாய்க் காய்ச்சிய எண்ணெய் தேய்த்துக்கொள்வது பற்றியும் சொல்லி இருக்கேன். அதுவும் கடும் கோடையில் ரொம்ப சிரமப் படுவேன். ஃபோட்டோ அலர்ஜி! இப்போல்லாம் கோடை இல்லாவிட்டாலும் தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள் அவ்வப்போது தலை காட்டுகின்றன. சில குறிப்பிட்ட நிறப் புடைவை, ப்ளவுஸ் ஆகியவை போட்டுக் கொண்டாலும் வரும். அதில் நிறக்கலவைக்குச் சேர்க்கப்படும் ரசாயனம் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை என மருத்துவர் சொல்லி இருக்கார். ஆனால் அதைக் கண்டுபிடிப்பது தான் கஷ்டம். போட்டுக்கொண்டால் தான் தெரியும். :)))))))))))

      நீக்கு
    7. முக்கூட்டு எண்ணெய் மிக அருமையாகத் தோலுக்கு வேலை செய்யும். நீங்க இன்று வரை கேட்டதில்லை போல! அதே போல் சோப்பும் அதிகம் பயன்படுத்தாமல் குப்பைமேனி, வேப்பிலையை அரைத்துத் தேய்த்துக் கொள்வேன். மாமாவுக்குத் தான் சிரமம். தெருவில் குப்பை மேனி எங்கே முளைச்சிருக்குனு பார்த்துப் பிடுங்கிக்கொண்டு வந்து தருவார். வேப்பிலை கிடைத்துவிடும். :)))) இதைப் பற்றி ஒரு சில பதிவுகளே எழுதி இருக்கேனே! :))))))

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    எவ்வளவு பெரிய சோதனையான கால கட்டங்களை தாங்கி, தாண்டி வந்திருக்கிறீர்கள். எனக்கு இது ஒன்றும் தெரியாததால், நான் ஏதோ தங்கள் கணினி சரியில்லாததால், பதிவுகளுக்கு இயல்பாக வரவில்லை என சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தேன். பதிவில் ஆரம்பத்தில் கெளதமன் சகோதரிடம் விசாரித்த போது "அவருக்கு உடல் அலுப்பாக உள்ளது யாரும் தொந்தரவு செய்ய வேண்டாமென ஸ்ரீராம் கேட்டுக் கொண்டார்" என்றவுடன் நானும் ஏதும் மேற்கொண்டு விசாரிக்கவில்லை. ஆனால் மனதுக்குள் "இதை" நினைத்து ஒரு கவலை வாட்டிக் கொண்டேயிருந்தது. மறுபடியும் பத்து நாட்களுக்கு மேலாக தங்களை பதிவுகளில் பார்த்ததும் ஒரு நிம்மதி வந்தது.இப்போது இன்று இதைப் படித்ததும் மனதுக்கு ரொம்ப கஸ்டமாக உணர்கிறேன். தற்சமயம் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் பூரண நலத்துடன் உள்ளீர்களா? கடவுளை உங்கள் அனைவருக்கும் பூரணநலம் தரும்படி வேண்டி நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இறைவன் அருளால் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் உடல் நலம் தேறி வந்தது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. இறைவன் அருள் தொடர்ந்து அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட நானும் எப்போதும் அவனை வேண்டியபடி உள்ளேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலா அக்கா.. அந்நாட்களைக் கடப்பது மனதளவில் மிகக் கடினமாக இருந்தது. கேஜிஜி ஆரம்பம் முதலே வாட்ஸாப்பில் ஆறுதல், தைரியம், உற்சாகம் கொடுத்துக் கொண்டே இருந்தார். 'நிறைய எழுத வேண்டி இருக்கிறது, சீக்கிரம் வா' என்றார். ஏதோ நான் பெரிய எழுத்தாளன் போல..

      மற்றவர்களும் பேசி உற்சாகமூட்டிக் கொண்டே இருந்தனர்.

      உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அன்புக்கும் நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  18. எப்படியோ -
    இறைவன் துணையுடன் அக்கினி ஆற்றைக் கடந்திருக்கிறோம்..

    உடலளவில் கஷ்டங்களை இந்த அளவுக்கு அனுபவிக்கா விட்டாலும் மனதளவில் மிகுந்த வேதனைகளை அனுபவித்து விட்டேன்..

    தொலைபேசி அதிர்ந்தால் போதும்..
    திடுக்கென்றிருக்கும்...

    குல தெய்வம் காவல் கொண்டு தலை மாட்டில் நிற்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உங்கள் கஷ்டமும் அறிவேன்.
      குலதெய்வம், மஹாபெரியவா, பாபா, முருகன் அனைவரும் காத்து அருளினர்.

      நீக்கு
  19. அணுபவத்தைப் படிக்கும்போது பயமாகத்தான் இருந்தது.
    தாங்கள் மீண்டது மிக்க மகிழ்ச்சி ஸ்ரீராம். சார்.
    அணைவரும் எச்சரிக்கையாக உடல் நலனைக் காத்துக்கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. குடும்பத்தோடு குணமாகி இருப்பதில் மகிழ்ச்சி.

    தங்களது வலைவரவு குறைந்ததற்கான காரணம் இப்பொழுதுதான் புரிகிறது.

    இறைவன் உலக மக்களை காக்கட்டும்....

    பதிலளிநீக்கு
  21. பதிவைப் படித்துவிட்டேன்.

    கொரோனா அனுபவம்.... சரியாகி வந்தது மகிழ்ச்சி. எப்படி உங்களுக்கு என்றெல்லாம் கேட்பதில் அர்த்தம் இல்லை. முன்னெச்சரிக்கை எடுத்தாலும் எப்படியோ வந்து சென்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. இன்றைய உங்கள் வேலை நெருக்கடியிலும் வருகை தந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

      நீக்கு
  22. அனுபவப்பதிவு அனைவருக்கும் அவசியம் பயன்படும்..விரிவாகப்பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  23. நல்லபடியாக குணமாகி வந்ததற்கு இறைவனுக்கு நன்றி.
    இருமலும் உடல் களைப்பும் சரியாகி விடும்.

    //பீதிதான். பயம்தான். குழப்பம். கேள்விப்பட்ட அத்தனை சம்பவங்களும் மனதில் அலைமோதுவதைத் தடுக்க முடியவில்லை. //

    நீங்கள் சொல்வது உண்மை . பயம் இருக்கும் தான்.
    பயப்படாமல் எதிர் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னாலும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.. வரும் வரைதான் பயம். வந்தபின் துணிந்துதான் ஆகவேண்டும் என்ற நிலை.

      நீக்கு
  24. பொக்கிஷபகிர்வுகள், உங்கள் கவிதை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. தொல்லைகள் விலகியது நல்லதே! உடல் நலத்தில் கவனமாக இருங்கள்.

    மற்றவையும் நன்று.

    பதிலளிநீக்கு
  26. கருங்குழிக்குள் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டீர்கள் மூவரும். மகிழ்ச்சி. அவனருள் காக்கட்டும் அனைவரையும்.
    இங்கே குணமடைதல் என்பது ஞானமடைதல் போன்ற நீண்ட, அயரவைக்கும் ப்ராசஸ். அதிகவனம் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்த பயமும் எச்சரிக்கை உணர்வும் இருந்து கொண்டே இருக்கிறது. நன்றி ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  27. எஸ்.ராமகிருஷ்ணனை ’எஸ்.ரா.’ எனத்தான் இலக்கிய உலகில் குறிப்பிடுவது வழக்கம். அவரை ‘SRK’ என்று குறிப்பிடுகிறாரே இந்த முகநூலர் ! ஒரிஜினல் SRK-ஆன Shah Rukh Khan பக்தராக இருக்குமோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ்ரா என்றுதான் அறிவோம்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. ஏகாந்தன் சார்,

      எஸ். ராமகிருஷ்ணன் என்னும் இந்த எஸ்.ஆர்.கே பழம்பெரும் தேவ்சபக்தர். சுதந்திரப் போராட்ட தியாகி. தேச விடுதலைப் போராட்டத்தில் பலமுறை சிறையேகியவர். கம்பனில் ஊறித் திளைத்தவர். பாரதியின் பெருமை பரப்புவதை மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர். மிகச் சிறந்த இலக்கியவாதி. பொதுவுடமைக் கட்சித் தோழர். தோழர் ஜீவா, பாலதண்டாயுதம் போன்றோரோடு இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டவர். இவரைத் தமது குருவென மதித்தார் ஜெயகாந்தன். மாயவரத்தில் பிறந்தவர் பிற்காலத்தில் மதுரையில் வாழ்ந்தார்.
      தீவிரமான இலக்கியவாதி. கம்பனையும் மில்டனையையும் ஒப்பாய்வு செய்து இவர் எழுதிய நூல் பிரச்சித்தி பெற்றது. பாரதி போலவே காசி பல்கலைக் கழகத்தில் பயிலும் பேறு பெற்றவர். ஜெயகாந்தனின் பேரன்புக்கு பாத்திரமானவர்.

      நீங்கள் குறிப்பிடும் எஸ்.ரா., இவரோடு சேர்த்து பார்த்தால் குட்டிக் குழந்தை.

      நீக்கு
    4. இப்போதைய எஸ்ரா வேறே! எஸ் ஆர்கே எனப்படும் இவர் வேறு. எஸ் ஆர்கே தொமு.சியின் நண்பர் என நினைக்கிறேன். தேர்தலில் எல்லாம் அந்தக் காலத்தில் மதுரையில் நின்றதாகவும் நினைவு. இவரும் தோழர் ராமமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள் என்றும் நினைவு.

      நீக்கு
    5. @ ஜீவி, @ கீதா சாம்பசிவம் :

      Oh.. I got it totally wrong! சரியாகப் புரிந்துகொள்ளாமல் கிண்டல்வேறு செய்திருக்கிறேன். அசட்டுத்தனத்தின் உச்சம்!

      @ ஜீவி: இந்த SRK-பற்றி விரிவான தகவல்களுக்கு நன்றி. ஜெயகாந்தன்-ஜீவா நட்பு, தொடர்பு தெரியும். SRK-ஐ எப்படித் தெரிந்துகொள்ளாது போனேன்? மில்டனையும், கம்பனையும் ஒப்பாய்வு செய்து நூல் எழுதியிருக்கிறாரா.. தேசத் தியாகியும். பன்முகம் காட்டிய ஆளுமை. இவரைப்பற்றிக் கேள்விப்பட இவ்வளவு நாளாகியிருக்கிறது. இன்னும் இப்படி எத்தனை, எத்தனை பிரமுகர்களோ, பண்பாளர்களோ, தியாகிகளோ..

      நீக்கு
    6. சரஸ்வதி இதழோ, சரஸ்வதி காலம் புத்தகமோ யாரிடமாவது கிடைக்குமா? 

      நீக்கு
    7. நேற்றே சொல்ல நினைத்துச் சொல்ல முடியாமல் விடுபட்டவை! இந்த எஸ் ஆர் கே அவர்களின் மனைவி பிரபலமான பெண் மருத்துவர். கமலா ராமகிருஷ்ணன் என்னும் பெயர். ஒரு மகன்,ஒரு மகள். மகனுக்குப் பின்னர் பல வருடங்கள் கழித்துப் பிறந்த மகள்னு நினைவு. அவங்க இல்லம்+மருத்துவமனை மதுரை வடக்கு மாசி வீதியில் தான் இருந்தது. மகளின் பெயரும் கீதா தான். என்னோட இனிஷியலில் என். சேரக் காரணமாக இருந்ததே இந்த கீதா தான். என் அப்பா என் ஆர் கே என்னும் என். ராமகிருஷ்ணன். பள்ளி நுழைவுத்தேர்வில் இருவருமே தேர்ச்சி பெற்றிருந்தோம். ஆனால் அறிவிப்புப் பலகையில் ஒட்டும் போது ஆர்.கீதா என்று மட்டுமே இருந்தது. அவங்க வீட்டில் முதலில் போய்ப் பள்ளிக்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்திவிட்டார்கள். பின்னர் நாங்க போய்க் கட்டச் செல்கையில் ஆர்.கீதா கட்டியாச்சே என்று சொல்ல, என் அம்மாவுக்குத் திகைப்பு. நாங்க இப்போத்தானே வரோம்னு சொல்ல ஒரு சிறு குழப்பம். அப்பா பெயரைக் கேட்டு விட்டு அவங்களுக்கும் திகைப்பு. நுழைவுப் படிவங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் மகள் என்றிருக்க, என் அப்பா என். ராமகிருஷ்ணன் என்று நாங்கள் சொல்ல, தேர்வு எழுதிய தாள்கள் பள்ளி வசமே இருந்ததால் ஒரு ஆசிரியை விட்டு அதைப் பார்த்து என் கையெழுத்தில் உள்ளவற்றைக் கண்டு பிடித்து எடுத்துத் தரச் சொன்னார்கள். அதை எடுத்துக் கொடுத்ததும் மீண்டும் கையெழுத்தைச் சரி பார்க்க மறுபடியும் ஓர் கணக்கும், தமிழ்ப் பாடத்தில் கேள்வியும் கொடுத்துத் தனியாக ஒரு பேப்பரில் எழுதச் சொன்னார்கள். பின்னர் கையெழுத்தைச் சரி பார்த்துவிட்டு, நல்ல மதிப்பெண்கள் நான் வாங்கி இருப்பதையும் உறுதி செய்து விட்டு எனக்கு அப்பாவின் இனிஷியலைச் சேர்த்து என்.ஆர். கீதா என்று போட்டு அனுமதிச் சீட்டு கொடுத்துக் கட்டணம் கட்டினோம். ஆனாலும் சமயங்களில் குழப்பம் நேர்ந்தது உண்டு. நான் பள்ளிக்கு வந்திருக்கையில் அந்த கீதா வரவில்லை எனில் ஆப்சென்ட் மார்க் எனக்கு விழும். அந்த ராமகிருஷ்ணனுக்குப் போக வேண்டிய இலக்கிய வட்டச் சொற்பொழிவு அழைப்பிதழ்கள் எல்லாம் என் அப்பாவுக்கு வரும். எங்க பள்ளியிலேயே ஒரு முறை என் அப்பாவைத் தவறுதலாக ஒரு கூட்டத்துக்கு அழைக்கப் பின்னர் அவர் வந்து தான் ஹிந்தி ஆசிரியர் எனவும், எஸ்.ராமகிருஷ்ணன் தான் அவர்கள் அழைக்க வேண்டியவர் எனவும் தெளிவு செய்தார். எஸார்கே மிகவும் பிரபலம் ஆனவர். கீதாவும் பின்னாட்களில் கம்யூனிஸ்ட் ஆகவே இருந்து அதற்காக உழைத்துக் கொண்டிருந்தார். கடைசியாகச் சித்தப்பா வீட்டில் பார்த்தது. எங்க இருவருக்குமே அடையாளம் தெரியவில்லை. விபரங்களைக் கேட்டுவிட்டுத் தான் நான் புரிந்து கொண்டேன். அப்போதைய ஹிந்து நாளிதழில் கீதாவின் கட்டுரைகள் வாரா வாரம் வந்து கொண்டிருந்தன. பின்னர் நாங்க ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா எனச் சுற்றியதில் தொடர்பும் இல்லை. மறந்தும் போச்சு.

      நீக்கு
    8. சுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  28. விரைவில் நலம் பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி... இனியும் கவனமாக இருங்கள்...

    எல்லோருக்கும் ஒருமுறை வந்து போகும் என்று சிலர் சொல்கிறார்கள்... இதென்ன வழக்கமாக வரும் காய்ச்சல், ஜலதோசம் போலவா...? ஒன்றும் புரியவில்லை...

    ஆனால் வீட்டில் இதை கடந்து வந்த நிகழ்வும் உண்டு... இதனால் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த இனிப்பானவனுக்கு, ஹோம் க்வாரன்டைன் ஏழு மாதமாக...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி DD. ஆம், சமயங்களில் நாம் அறியாமலே வந்து போயிருக்கவும் வாய்ப்புண்டு. எல்லா அறிகுறிகளும் இருந்து, வீட்டில் மூன்று நான்கு பேருக்கு பரவியும் டெஸ்ட் செய்யாமலேயே தாண்டி வந்து கொண்டிருக்குறார்கள் என் பாஸ் பக்க உறவினர்கள் சிலர்.

      நீக்கு
  29. மீண்டு வந்ததில் மிகுந்த சந்தோஷம், ஸ்ரீராம். ரொம்பவும் அலட்டிக் கொள்ள வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக வருகை தந்தால் போதும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. மற்ற பகுதிகளும் நன்றாகவே இருக்கு. ஆனால் மனசில் உங்களுக்கு நேர்ந்த பிரச்சனைதான் ஓடிக்கிட்டிருந்தது. சரி..ஒவ்வொருவருக்கும் எப்படி இருக்கேன் என்று எழுத சோம்பலாகவோ அலுப்பாகவோ இருக்கும் என்று நினைத்தேன்.

    வாசனை முழுவதுமாக மீண்டுவிட்டதா? ஏதேனும் உணவில் மாற்றம் மேற்கொண்டிருக்கிறீர்களா? தெய்வ அனுக்ரஹம்தான்.. மத்தவங்களுக்கு (குறிப்பா வயதானவங்களுக்கு) பிரச்சனை வராமல் இருந்தது. அப்படியே தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசனை முழுவதும் மீண்டு விட்டது என்றே நம்புகிறோம் நெல்லை.  முழு அளவு என்றால் என்ன என்றே மறந்து விட்டது!  ருசிதான் நுனி நாக்கு மரத்துப்போன மாதிரி ஒரு உணர்வு..   ஆனாலும் ஓரளவு தெரிகிறது.

      நீக்கு
  31. https://www.luckylookonline.com/2015/04/blog-post_9.html

    -- இதைப் படித்துப் பாருங்கள். உங்களால் நீங்கள் நினைப்பதை மறைக்கவே முடியாது. அது எதுவாக இருந்தாலும் இங்கே பதியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யுவகிருஷ்ணாவின் அந்தப் பதிவை வாசித்தேன்.  நான் ஏற்கெனவே யு டியூபில் ஜேகே பற்றி காணொளிகள் பார்த்திருந்தேன்.  பருவ குமார் சிபாரிசு செய்திருந்தது.  அதுவும் சுவாரஸ்யம்.

      நீக்கு
    2. ஆம். மன்னிக்கவும். திருத்தம். பரிவை குமார்.

      நீக்கு
  32. தாங்கள் மீண்டு வந்தது அறிந்து மகிழ்கிறேன் நண்பரே
    கவனமாக இருங்கள்

    பதிலளிநீக்கு
  33. நலமாக மீண்டது மகிழ்ச்சி. உடல் நலத்தில் கவனம் எடுங்கள்.
    அனைவரும் நலமே இருக்க பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. இறையருளால் ஒரு பெரிய கண்டத்திலிருந்து மீண்டிருக்கிறீர்கள். பிரபலங்கள் உள்பட அங்கே, இங்கே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அத்தனை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நமக்கு தெரிந்தவர்களும், உறவினர்களும் பாதிக்கப்படும்பொழுது மிகவும் கவலைக்கு உள்ளாகிறோம். மூவருமே எச்சரிக்கையாக இருங்கள். 

    பதிலளிநீக்கு
  35. பொக்கிஷத்தை பெரிது பண்ண முடியாததால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. 
    மணியன் அவர்கள் வரைந்த பொன்னியின் செல்வன் படங்களை தனியாக, பெரிதாக்க முடியுமா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்தான் நிறைய இடம் பிடிக்கிறதே என்று கொலாஜ் செய்து போட்டேன். இப்போதும் தனியாக வெளியிட முடியும். ஆனால் எல்லோரும் பார்த்தாச்சே..

      நீக்கு
  36. சிரமமான காலக் கட்டத்தை மன உறுதியுடன் கடந்து வந்து விட்டீர்கள். வீட்டில் அனைவரும் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். விரைவில் பழைய தெம்பு திரும்பட்டுமாக! அவசியப் படுகிறவர்களுக்கு உதவும் உங்களது அனுபவப் பகிர்வு.


    கவித்துளிகள் மற்றும் தொகுப்பு நன்று!

    பதிலளிநீக்கு
  37. தப்பித்தது தம்புரான் புண்ணியம் என்று இங்கு சொல்வார்கள். அடுக்கு மாடி குடியிருப்புகளில் பரவுதலை தடுக்க முடியாது. கடவுளுக்கு நன்றி. 

    இருமலுக்கும் சின்ன சின்ன காய்ச்சலுக்கும் இசொனோபிலியா (eosinophilia) காரணமாக இருக்கலாம். கொரோனா வந்து போனதால் இரத்தத்தில் உள்ள அணுக்களின் சதவிகிதம் மாறுபட்டு இருக்கலாம். அதில் eosinophils அணுக்களின் எண்ணிக்கை கூடியிருக்கலாம். இதை சாதாரண இரத்த (blood count) பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம்.  டெஸ்ட் செய்து பாருங்கள். eosinophilia இருந்தால் வறட்டு இருமல் போகவே போகாது. மருந்துகள்  தேவை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  38. நாங்களும்  அதீத கவனமுடன் இருந்தோம் ஆனாலும் எங்களையும் விட்டுவைக்கலை .மார்ச் இறுதியிலே வந்து சென்றது எங்களுக்கு .இதில் எனக்கு மட்டும் மிக லைட்டா only anosmia .வாசனை சுவை முற்றிலும் போச்சு ஜூலை வரை 80 சதவீதம் மட்டும் திரும்ப கிடைச்சு இப்போ தான் முழுசும் பழைய மூக்கு வந்திருக்கு :) .அந்த காலத்தில் அதிகமா சாப்பிட்டது கௌதமன் சாரும் கீதாக்காவும் சொன்ன புழுங்கலரிசி கஞ்சிதான் சாப்பிட்டோம் :) ஒரு சுவையும் தெரியாதப்போ மிளகு சீராக தாளிப்பில்  அதுவே தேவாமிர்தமா இருந்தது எனக்கு 
    நீங்க வீட்டில் அனைவரும் நலமா மீண்டது மகிழ்ச்சி .இன்னும் கவனமுடன் இருங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நலமாய் வாழப் பிரார்த்திப்போம். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!