திங்கள், 16 அக்டோபர், 2023

"திங்க"க்கிழமை  :  பேரீச்சம் பழ கேக் -  கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

 

பேரீச்சம்பழ கேக் 

வணக்கம், வணக்கம் எபி உணவுப் பிரியர்களே! எபியில் கேக் செஞ்சு ரொம்ப நாளாச்சே! இந்த முறை எபி அடுக்களையில் பேரீச்சம் பழ கேக்.

கோதுமை மாவு – 1 கோப்பை 

படத்தில் மாவு வெள்ளையாக இருக்கே என்று நினைக்கறீங்களா. அது வேறு ஒன்றுமில்லை. பால் பொடிய அதுக்கு மேல போட்டு அதன் பின் தான் தோன்றியது. அட ஃபோட்டோ எடுக்கலையே என்று.

பால் பௌடர் – ¼ கோப்பை அல்லது 4 டேபிள் ஸ்பூன் heaped. 

அதுக்குதான் படத்தில் மேசைக்கரண்டி காட்டியிருக்கிறேன். ½ கோப்பை கூட பால் பொடி சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பம். அன்று என்னிடம் இருந்த அளவு அவ்வளவுதான். நான் எந்த கேக் செய்தாலும் பால் பொடி இல்லாமல் செய்வது இல்லை. படத்தில் 2 தானே தெரியுதுனு குரல் கேட்குது. 2 அடியில் இருக்கின்றன.  இப்படியான பாக்கெட்டுகள் 4 போடலாம்.

பேரீச்சம் பழம் – 8 -10. 

பழத்தைக் கூழ் போன்றும் அரைத்துக் கொள்ளலாம். நான் பழத்தைக் கூழ் போன்று செய்து கொள்ளவில்லை. கொட்டையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு சும்மா ரெண்டு சுற்று சுற்றி எடுத்துக் கொண்டேன்.

உலர்ந்த திராட்சைப்பழங்கள் – ¼ கோப்பை 

படத்தில் கப் அளவு ½ எனவே அதில் பாதியாகத் தெரிகிறது

ப்ரௌன் சர்க்கரை – ¼ கோப்பை.

பேரீச்சம்பழம் இனிப்பு, பால் பொடி இனிப்பு. இன்னொரு விஷயம் முட்டை போடாமல் செய்யும் கேக்கிற்கு இனிப்பு சற்று குறைவாகப் போட்டால் கேக் நன்றாக வரும். நாம் இனிப்பு பண்டங்கள் செய்வது போல் இனிப்பு போட்டால் குழ குழ என்று ஆகும். அப்படியே நீங்கள் இனிப்பு தூக்கலாகப் போட்டால், கேக் மாவு கலந்த பிறகு ரொம்ப நீர்த்து flowy consistency ஆகிவிடும். கேக் பேக் ஆகும் போது நடுவில் குழியாகிவிடும். எனவே இனிப்பு சற்று கூடுதலாகப் போட்டால் கலவை கொஞ்சம் கெட்டியாக இருப்பது நல்லது.

தயிர் – ½ கப்

வெண்ணை – ¼ கோப்பை (படம் இல்லை)

பேக்கிங்க் பௌடர் – 1 தேக்கரண்டி

பேக்கிங்க் சோடா – ½ தேக்கரண்டி

வெனிலா/கேஸர் எஸன்ஸ் – 1 தேக்கரண்டி (படம் இல்லை)

கேஸர் எஸன்ஸ் இதற்கு நன்றாக இருக்கும். குங்குமப்பூ இருந்தால் சிறிது பாலில் ஊற வைத்து சேர்த்துக் கொள்ளலாம். இரண்டின் விலையும் எனக்குக் கட்டுப்படியாகாது என்பதால் நான் வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கொண்டேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் வெனிலாவிற்குப் பதிலாக ஏலக்காய் பொடி பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் எந்த கேக் டின்னில் பேக் செய்யப் போகிறோமோ அதில் கொஞ்சம் வெண்ணையை தடவி, மாவு கொஞ்சம் தூவி சுழற்றி நன்றாகத் தட்டி எல்லா பக்கமும் அது ஒட்டியிருப்பது போல் செய்து ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் மாவு + இதரப் பொருட்கள் கலவைக்கு படத்தில் உள்ள சைஸ் 6 இன்ச் கேக் டின். கலவை கேக் டின்னின் அரை டின் அளவுதான் இருக்க வேண்டும். அல்லது 2/3 அளவு அதற்கு மேல் இருந்தால் பேக் ஆகும் போது மாவு பொங்கி வெளியில் வழிந்து கேக்கின் வடிவம் மாறும்.

பொருட்கள் எல்லாம் தயாராக வைத்துக் கொண்டதும் பேக்கிங்க் ஓவனை அதாவது OTG பேக்கிங்க் ஓவன். (எனக்கு மைக்ரோவேவ் கன்வெக்ஷன் அளவீடுகள் தெரியாது) ஆன் செய்து விடுங்கள். Pre heating. 10 நிமிட்ங்கள். அது சூடாகிக் கொண்டிருக்கும் போது கலவையை தயார் செய்துவிடலாம்.

வெண்ணையையும், பொடித்த சர்க்கரையையும் கலந்து நன்றாக 2, 3 நிமிடங்கள் வேகமாக அடித்துக் கடைய வேண்டும்.

பால் பௌடர், பேக்கிங்க் பௌடர், பேக்கிங்க் சோடா எல்லாம் சேர்த்து சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும். அதோடு வெண்ணை சர்க்கரை கலவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலந்து விட்டு தயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். படத்தில் காட்டியிருக்கும் பதம் போல் வர ½ கப் தயிர்  போறாதது போல் இருந்தால் ஒரோரு டேபிள் ஸ்பூனாகப் பால் அல்லது தண்ணீர் கலந்து ஜாஸ்தி ஆகிடாம பார்த்துக்கோங்க.

ஒரே பக்கமாகக் கலக்க வேண்டும். வலப்பக்கம் அல்லது இடப்பக்கமாக. இப்படியும் அப்படியுமாகக் கலக்க வேண்டாம். கலக்கும் போது உலர் விஸ்கர் இருந்தால் அதால் கலப்பது நல்லது. கட்டி தட்டாமல் வரும். சிறிய துண்டுகளாக அரைத்து வைத்திருக்கும் பேரீச்சை மற்றும் உலர் திராட்சைகள் மற்றும் எஸன்ஸ் சேர்த்துக்கோங்க மறக்காம.


கலந்ததும் கேக் கலவை படத்தில் காட்டியுள்ளது போல பதத்தில் இருக்க வேண்டும். ஸ்பூனில் எடுத்து வழிய விட்டால் டக்கென்று வழியாமல் மெதுவாக வழியும் பதம். அதனால் தயிர் கலக்கும் போதும் மேலும் சேர்க்க வேண்டி வந்தால் பால் அல்லது தண்ணீர் சேர்க்கறப்ப கூடுதலாகிடாம பார்த்துக்கோங்க.
கேக் டின்னில் கலவை இப்படி டின்னின் அரையளவுதான் இருக்க வேண்டும் அல்லது சற்று தூக்கலாக இருக்கலாம்.

கலவையை, மேக்கப் போட்டுக் கொண்டு தயாராக இருக்கும் கேக் டின்னில் ஊற்றிவிட்டு டின்னைப் பிடித்துக் கொண்டு தரையில் தட்ட வேண்டும். Air Bubble சிறியதாக வந்து, மாவும் கலவையும் சமநிலைப்படும்.

10 நிமிடம் ப்ரீ ஹீட் ஆனதும் கேக் டின்னை நடு ராக்கில் வைத்து 180 டிகிரி செட் செய்து ½ மணி நேரத்திற்கு பேக் செய்ய வேண்டும். உங்கள் ஓடிஜி யின் திறன் பொருத்து இந்த நேரம் மாறுபடலாம். பொதுவாக ½ மணி நேரத்திலிருந்து 40 நிமிடங்கள் ஆகும்.

ஓவன் இல்லாதவங்க பழைய குக்கர் பாத்திரம் இருந்தால் அதில் கல் உப்பு ஒரு பாக்கட் அல்லது நல்ல மணல் போட்டு அதன் மீது குக்கர் அடியில் போடும் தட்டு உண்டே அதைப் போட்டு கேஸ் அடுப்பில் வைத்து சூடாக்கியதும் (ப்ரீ ஹீட்டிங்க்) கேக் டின்னை உள்ளே வைத்து, மூடி போடும் போது கேஸ்கெட் இல்லாமல் மூட வேண்டும். பெரிய பர்னரில் சிறிய தீயில் வைத்து பேக் செய்யலாம். இதுவும் 40 நிமிடங்களில் இருந்து 45 நிமிடங்கள் ஆகலாம் இந்த அளவிற்கு.

கேக் கொஞ்சம் உயர்ந்து மேலே ப்ரௌன் நிறம் வரும் வரை ஓவன் கதவைத் திறக்க வேண்டாம். (குக்கரில் என்றால் மூடியைத் திறந்து பார்க்கக் கூடாது.) அதன் பிறகு ஓவன் கதவைத் திறந்து ஒரு மெல்லிய குச்சி வைத்து நடுவில் நுழைத்துப் பார்த்து ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகிவிட்டது என்று அர்த்தம். ஓவனை அணைத்துவிட்டு அதே சூட்டில் கொஞ்சம் நேரம் அப்படியே விட்டுடுங்க. அப்புறம் கேக்டின்னை வெளியில் எடுத்து கொஞ்சம் ஆறியதும் மெதுவாக கொஞ்சம் ஓட்டைகள் உள்ள தட்டில் அல்லது வலைக்கம்பியில் கவிழ்த்தி வெளியில் எடுத்து வைத்து அதன் அடிபாகமும் நன்றாக ஆற விட வேண்டும். நன்றாக ஆறிய பிறகுதான் கேக்கைத் துண்டு போட வேண்டும்.

பேரீச்சம் பழ கேக் தயார்! 

கேக் எடுத்துக்கோங்க கொண்டாடுங்க!

 

27 கருத்துகள்:

  1. மைதா இல்லாமல் கோதுமை மாவு கேக்.
    பால் பவுடர், தயிர் சேர்க்க்கை தான் கொஞ்சம் இடிக்குது. ஆனாலும் கேக் செய்ய ரொம்ப பாடு படவேண்டி இருக்கிறது. பேசாமல் ஆர்டர் கொடுத்து விடலாம்.

    பேரீச்சம்பழகேக் என்றவுடன் நான் பேரீச்சம்பழ அல்வா மாதிரி கொஞ்சம் கட்டியாக கேக் இருக்கும் என்று நினைத்தேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா, மைதா இல்லாமல் செய்ய கோதுமை மாவு + ரவை சேர்த்து கேக் செய்யலாம். ஒரு வேளை கோதுமை மாவும் குழ குழன்னு ஆகிவிடுமோன்னு தோணினா இந்த ரெசிப்பில கூட அரை கப் கோதுமை மாவு, அரை கப் ரவை சேர்த்து மத்ததெல்லாம் இதே ....போன்று போட்டுச் செய்யலாம்.

      நான் சிறுதானிய மாவிலும் செய்வதுண்டு. இப்போதுதான் செய்து பல மாதங்களாகின்றன

      நீங்க சொல்லியிருக்கற அல்வா கெட்டியாக என்பது ஸ்வீட்னு அதாவது பர்ஃபி என்றோ இல்லை வேறு ஏதேனும் புதிய பெயர் கூடச் சூட்டி சொல்லிருப்பேன்.

      முட்டை இல்லா கேக்கிற்கு தயிர் சேர்ப்பது நல்ல பதம் கொடுக்கிறது. சாப்பிடும் போது எந்தவித வித்தியாசமும் தெரியாது.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. இன்று இந்தப் பதிவுன்றது எனக்கு மறந்தே போச்சு. நினைவு இருந்திருந்தாலும் காலையில் வந்திருக்க முடியாதுதான்.

      ஸ்ரீராம், மற்றும் எபி ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி

      கீதா

      நீக்கு
  2. மிக அருமையான செய்முறை. வீட்டில் செய்துபார்க்கச் சொல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை. செய்யும் போது உலர் பழங்கள், பருப்புகள் இருந்தாலும் போட்டுக்கோங்க. சுவை கூடும்.
      கிறிஸ்துமஸ் கேக் செய்யும் போது அப்படித்தான் செய்வதுண்டு. வீட்டில். ஆனா அதுக்கு சர்க்கரையை காரமலைஸ் செய்து போடுவேன்.

      உங்கள் பெண் செய்யாததா? வித விதமாக அதுவும் மிக அழகாக நேர்த்தியாகச் செய்வாங்களே! ஜமாய்க்க சொல்லுங்க...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. படங்களுடன் கூடிய செய்முறை மிக நன்றாக வந்திருக்கிறது.

    லுலுவில் நிறையவகை பேரீச்சம்பழங்கள் இருக்கின்றன. எங்கள் வீட்டில் வாழைப்பழங்கள் தேங்கிவிட்டால் கேக் செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் லுலுவில் வகை வகையாகக் கிடைக்கும். இங்குள்ள லுல்லு போனதில்லை. தூரமா இருக்கே. ஒரு வகை கிடைக்குமே லைட் ப்ரௌன் பேரீச்சை ஆனா கொஞ்சம் கடினமா இருக்கும் அதை பால் அல்லது வெந்நீரில் ஊற வைத்துப் போடுங்க.

      வாழைப்பழ கேக்கும் இங்கு வரும். நம் வீட்டிலும் பழம் கொஞ்சம் ஓவரா கனிந்து சேர்ந்தவை இருந்தால் செய்வேன். இப்ப செய்வதே இல்லை. கரெக்ட்டா பழம் வாங்கி உடனே தீர்த்துவிடுகிறோம்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. வீட்டில் உறவினர்கள் நடமாட்டம்போல் தெரிகிறது. அதனால்தான் இனிப்புகள் படையெடுக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நெல்லை!!! என் ஆர்வத்தை போய் பிரமிப்புன்னு எல்லாம் சொல்லறீங்க....உங்க பெண் செய்வது செமையா செய்யறாங்க...professional ஆ செய்யறாங்க....என் ஆர்வம் இப்ப ரொம்ப கம்மியாகிடுச்சு. நானும் சாப்பிட முடியாது சாப்பிடவும் யாரும் இல்லை என்பதால். சென்னை என்றால் கூடச் செய்துவிடுவேன். கொடுப்பதற்கு நிறையபேர் உண்டு. இருபக்கமும்.

      //வீட்டில் உறவினர்கள் நடமாட்டம்போல் தெரிகிறது. அதனால்தான் இனிப்புகள் படையெடுக்கின்றன//

      ஹாஹாஹஹ....ஒரு ஈ காக்கா வர மாட்டேங்கறாங்க உறவினர் யாரும் வருவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கானவை நம்ம விட்டில் கிடையாது. ஸோ யாரும் வர யோசிப்பாங்க,...யாரும் வர மாட்டாங்க.

      இது எப்பவோ செய்தது. எபிக்கு அனுப்பாம கிடந்தது. அதிலும் வெண்ணை படம் எல்லாம் காணாம போய்...இருந்ததை வைத்து ஒப்பேத்திட்டேன்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. நெல்லைக்குக் கொடுத்த கருத்தையும் காணலை

      கீதா

      நீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. பேரீச்சை கேக் செய்முறை விளக்கம் அருமை! பால் பவுடர் சேர்த்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. அதனாலேயே செய்து பார்க்க ஆவலாக இருக்கிறது. கேக் செய்யும் உபகரணங்கள் இங்கில்லை.[ தஞ்சை] துபாய் போனதும் செய்து பார்க்க வேண்டும். இதை மைக்ரோ அவனில் செய்து பார்த்திருக்கிறீர்களா கீதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ அக்கா நான் எந்த கேக் செய்தாலும் அதில் பால்பவுடர் சேர்ப்பதுண்டு. பாலுக்குப் பதில். துபாய் போனதும் செய்து பாருங்க. உங்களுக்குத் தெரியாததா....

      மைக்ரோ ஒவன் நம்ம வீட்டில் இல்லை மனோ அக்கா. அதனால் எனக்கு அதில் கேக் செய்து பழக்கமில்லை. மற்ற உணவுகள் செய்யத் தெரியும். கேக் மட்டும் அதில் செய்து பழக்கமில்லை.

      மிக்க நன்றி மனோ அக்கா.

      கீதா

      நீக்கு
    2. மனோ அக்காக்கு போட்ட கருத்து வந்ததோ? இங்கு காணவில்லையே...

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. கேக் எடுத்துக்கோங்க கொண்டாடுங்க!//

    கொண்டாடி விடுவோம்.
    கீதா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். கொண்டாடுங்க.
    செய்முறை சொன்ன விதம், முக்கிய குறிப்புகள் எல்லாம் அருமை.
    கோதுமை மாவில் செய்தது சிறப்பு.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. எனக்கு கிரீம் இல்லாத இந்த மாதிரி கேக்தான் பிடிக்கும். எடுத்து கொண்டேன் கீதா. உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா, கேக் இது எப்போதோ செய்தது. நல்லகாலம் இத்தனை படங்களாவது இருந்தன அதனால் ஸ்ரீராமுக்கு அனுப்ப முடிந்தது.

      //கீதா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். கொண்டாடுங்க.//

      நன்றி கோமதிக்கா. ஆனா இடைல இடைல வேலைப்பளு அப்புறம் சில விஷயங்கள் ஃப்யூஸ் பண்ணதான் செய்கின்றன ஆனா நான் எப்போதும் போல் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

      எனக்கும் க்ரீம் இல்லாத கேக்தான் பிடிக்கும் ஆனா அதுவும் சாப்பிட முடியறதில்லையே.

      நீங்களும் பங்கு கொண்டதற்கும் எடுத்துக் கொண்டதற்கும் மிக்க மகிழ்ச்சி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  9. பேரீச்சை கேக் செய்முறை - பால் பவுடர் சேர்க்கையுடன் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா நான் எந்த கேக் செய்தாலும் பால் பவுடர் சேர்த்து விடுவது வழக்கம். இல்லைனா பாதாம் இருந்தால் பாதாம் பொடி கூடக் கலந்து விடுவேன்.

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  10. பேக்கிங் சோடா போன்ற இரசாயனங்கள் இன்றி இந்த வகையறாக்களை
    செய்வது என்பது இயலாது..

    அதீதமான இரசாயனங்கள் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஆனா இதெல்லாம் எப்போதாவதுதானே செய்வது. இது செய்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேல் ஆகிறது.

      மிக்க நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  11. நல்ல கேக்.

    கோதுமை மாவில் செய்ததில்லை. மைதா, ரவையில் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி, ஆமாம் மைதாவுடன் ரவை கலந்தும் செய்தால் நன்றாக வரும். ரவையிலும் கேக் செய்தால் மிக நன்றாக வருகிறது.

      கோதுமை மாவில் கூட ரவை சேர்த்துச் செய்தால் நன்றாக வரும் மாதேவி.

      மிக்க நன்றி மாதேவி.

      கீதா

      நீக்கு
  12. பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆமாம்ல டிடி நாமெல்லாம் ரொம்பவே இனியவங்க!!! கண்ணாரக் கண்டு களிக்கலாம் அம்புட்டுத்தான்!!! சூப்பர் என்று சொல்லிப்போம்!!!

      மிக்க நன்றி டிடி ஆஹா அருமை என்று சும்மா ரசித்தமைக்கு!!!! நானும் உங்க லிஸ்ட்தானே!!!

      கீதா

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவுக்கு நீங்கள் செய்துள்ள பேரீட்சை பழ கேக் மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் பொறுமையாக ஒவ்வொரு பதமாக படங்கள் எடுத்து நன்கு விளக்கமாக செய்முறைகளை சொல்லியுள்ளீர்கள். தயிர் பாலுடன் செய்திருப்பது நன்றாக உள்ளது. இது போன்ற கேக்குகளை நான் இதுவரை செய்ததில்லை. இதை மகளிடம் சொல்லி செய்ய முயற்சிக்கிறேன். மதியும் அவசரமாக இன்றைய செவ்வாய் பதிவில் ஒரு கருத்து தந்து விட்டேன். இப்போது இங்கு. இதையும் நாளைதான் உங்களால் பார்க்க முடியும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா மிக்க நன்றி....கருத்திற்கு மகளைச் செய்து பார்க்கச் சொல்லுங்க..

      ஹாஹாஹாஆ நீங்க போட்டு ஒரு வாரம் ஆகுது நாளை பார்க்க முடியும்னு நீங்க சொல்லி நான் இன்னிக்குதான் பார்த்தேன்...வேலைப்பளுதான்....அப்புறம் மறந்தும் போய்விட்டது.

      மிக்க மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!