வெள்ளி, 20 அக்டோபர், 2023

வெள்ளி வீடியோ : நாடும் பொருள்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் பணித்து அருள்வாய்

 திடீரென ஒரு நாள் வானொலியில் சீர்காழி கோவிந்தராஜனும் அவர் மகன் சீர்காழி சிவசிதம்பரமும் பாடி அருளிய 'சகலகலாவல்லி மாலை' ஒலிபரப்பினார்கள். அப்புறம் அது மிகவும் புகழ் பெற்றுவிட்டது. அப்பா எங்கிருந்தோ சகலகலாவல்லி மாலை சிறு புத்தகம் கொண்டு வந்தார். தினமும் எங்களை படிக்கச் செய்தார். "படிப்பு நல்லா வரும்டா..."

தினமும் படித்து மனப்பாடமானது. அப்புறம் கேசெட் புழக்கத்துக்கு வந்த உடன் எல்லோரும் முதலில் வாங்குவது சூலமங்கலம் சகோதரிகள் வழங்கிய கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், எம் எஸ் வழங்கிய வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம். சுப்ரபாதம் கெஸெட்டில் என் அப்பா விருப்பத்துக்கிணங்க 'கெட்யம்' இணைக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் வேறு யார் வீட்டிலும் இது இருந்திருக்காது.

சகலகலாவல்லி மாலை கேசெட் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. இசைத் தட்டாகத்தான் வெளிவந்திருந்தது.

வானொலியிலோ மாதத்தில் ஓரிரு நாட்கள்தான் இதை ஒலிபரப்பினார்கள். அதுவும் வெள்ளிக்கிழமையில். அது எந்த வெள்ளி என்று காத்திருக்க வேண்டும்.

எங்கள் மாதவராவிடம் சொல்லி அப்பாவின் விருப்பமாக ("கூத்தாடி பாட்டுகளா ரெகார்ட் பண்ணிக்கிட்டுருக்கியே... இதை முதலில் ரெகார்ட் செய்து வாங்கிட்டு வா...") ரெகார்ட் செய்யப் போனால் இது பதினெட்டு நிமிடங்கள்தான் வர, மிச்ச 42 நிமிடங்களுக்கு என்ன செய்வது என்று யோசித்து, நான் சீர்காழி பக்திப் பாடல்களை தெரிவு செய்து கொடுத்து விட்டு வர, நண்பர் மாதவ்ராவ் ஒரு சர்ப்ரைஸாக ஒரு பக்கம் விநாயகர் அகவலும் (கூகுள் அகவல் என்று அடித்தால் அகர்வால் என்று முதல் சாய்ஸ் தருகிறது!) B சைடில் இதுவும், மிச்ச இடங்களுக்கு அபிராமி அந்தாதியும் போட்டுத் தந்தார். நான் தந்த சீர்காழி பக்திப் பாடல்களை தனி கேசெட் ஆக்கி சந்தோஷப்படுத்தினார், காசு பார்த்தார். 'அவர் பாட்டு இன்னும் ஓரிரு செட் தேறும்' என்று சொல்லி இன்னும் ரெண்டு கேசெட் ரெகார்ட் செய்ய வைத்தார்.

ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த சகலகலாவல்லி மாலை இப்போது தினமும் எங்கள் வீட்டில் ஒலிக்கத்தொடங்கியது.

முதலில் சீர்காழி கோவிந்தராஜன், சிவசிதம்பரம் பாடிதான் வெளிவந்தது. இப்போது பலரும் பாடி இருக்கிறார்கள், வெவ்வேறு ராகங்களில். பாம்பே சாரதா, பாம்பே சகோதரிகள், ஷோபனா என்று பலரும் இசைத்திருக்கிறார்கள். ஆனாலும் First heard இஸ் பெஸ்ட் சாய்ஸ் என்று மனதில் இதற்குதான் இடம். எனவே தேடி எடுத்து இதைப் பகிர்ந்து விட்டேன்!

நவராத்திரி சமயத்தில், சரஸ்வதி பூஜை நாள் நெருங்கி வரும் வேளையில் இது நினைவுக்கு வந்தது சரஸ்வதி கருணை.

இதை இயற்றியவர், இயற்றப்பட்ட காரணம் பற்றிய விவரம் இணையத்திலிருந்து எடுத்துக் கீழே கொடுத்திருக்கிறேன். இந்த மாலையை இசை அமைத்து சிறப்பித்திருப்பவர் திரு டி ஆர் பாப்பா அவர்கள்.

குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாத்ஷாவாக இருந்தார்.

அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. 

தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி ‘சகலகலாவல்லி மாலை’யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.

தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.

அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் ‘காசிமடம்’ என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.

1. வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ?
​ஜெகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
சகல கலாவல்லியே!

2. நாடும் பொருள்சுவை சொற்சுவை
தோய்தர, நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்;
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே!
சகல கலாவல்லியே!

3. அளிக்கும் செ​ழுந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து, உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு,
களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே!

4. தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும், சொற்சுவை தோய்
வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்;
வட நூற்கடலும்,
தேக்கும், செ​ழுந்தமிழ்ச் செல்வமும்,
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே!
சகல கலாவல்லியே!

5. பஞ்சு அப்பி இத​ந்தரு செய்யபொ​ற்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே?
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்
நாவும், அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு! ஒத்​திருந்தாய்;
சகல கலாவல்லியே!

6. பண்ணும், பரதமும், கல்வியும்
தீஞ்சொல் பனுவலும், யான்
எண்ணும் பொழுது​ எளிது எய்த நல்காய்;
எழுதா மறையும்,
விண்ணும், புவியும், புனலும்,
கனலும், ​வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்;
சகல கலாவல்லியே!

7. பாட்டும், பொருளும், பொருளால்
பொருந்தும் பயனும், என்​பால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்;
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே!

8. சொல்விற்பனமும், அவதானமும்,
கவி சொல்லவல்ல
நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய்,
நளின ஆசன​ஞ்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே!
சகல கலாவல்லியே!

9. சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?
நிலம் தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரச அன்னம் நாண, நடை
கற்கும் பதாம்புயத் தா​ளே!
சகல கலாவல்லியே!

10. மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்;
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ?  சகல கலாவல்லியே!



இன்று திரைப்பாடலுக்கு ஓய்வு!

45 கருத்துகள்:

  1. இந்த வெள்ளி உருப்படியான பதிவால் பெருமை பெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. நேற்று உங்களைக் காணோமே...

      நீக்கு
    2. பாரத -- அமெரிக்க கால நேர வித்தியாசங்கள் ஒரு காரணம். எதையும் விரிவாக எழுத வேண்டும் என்ற என்ற உந்துதலுக்கு கைப்பேசி பற்றிய இடது உள்ளங்கை வலி ஒத்துழையாமை இன்னொரு காரணம்.
      முடிந்த பொழுதெல்லாம் முடிந்ததைச் செய்கிறேன், ஸ்ரீராம்.

      நீக்கு
    3. நேற்றைய பதிவை நேற்றே வாசிக்க மட்டும் செய்து விட்டேன். தகவலுக்காக.

      நீக்கு
    4. நன்றி ஜீவி ஸார்...  கைவலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறீர்களா?

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல் பகிர்வு மிக அருமை.

    /நவராத்திரி சமயத்தில், சரஸ்வதி பூஜை நாள் நெருங்கி வரும் வேளையில் இது நினைவுக்கு வந்தது சரஸ்வதி கருணை./

    சரஸ்வதி தேவியின் கருணை அனைவருக்கும் கிடைக்கட்டும். என பிரார்த்தனை செய்து கொள்கிறேன். பாடலும், அது பிறந்த கதையுமாக பதிவு நன்றாக உள்ளது. சீர்காழி அவர்களின் பக்தி பாடல்கள் என்றுமே மெய்சிலிர்க்க வைப்பவை. எங்களிடமும் அவர் பாடிய பாடல்கள் கேசட்கள் இருந்தது. அருமையான பாடலை இன்று தந்திருப்பதற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பாடல், ஆனால் நான் முதன் முறை கேட்கிறேன்.

    நவராத்திரிச் சிறப்புப் பதிவாக அமைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. കോ
    நான் முன்பு வானொலியில் கேட்டதுண்டு. ஆனால் ஈடுபாடின்றி கேட்டு இருப்பேன்.

    இப்போது இந்த நீளமான பாடலை இரண்டு முறை இரசித்து கேட்டேன்

    படிக்கும் பொழுது பாடம் படிப்பது போலவே இருக்கிறது. ஆனால் தந்தையும், மகனும் எவ்வளவு அழகாக உச்சரிப்பு சிதறாமல் பாடுகின்றார்கள் ?

    இப்பொழுதாவது தவறாக பாடினால் அதை மட்டும் மாற்றி இணைத்து கொள்ளலாம்.

    எந்த வரிகளையும் ராகத்தோடு பாடலாம் என்பதற்கு இதுவொரு சான்று.

    டி.ஆர்.பாப்பா எவ்வளவு மென்மையாக இசையமைத்து இருக்கிறார். இதுதான் மேன்மையானவர்களின் திறமை.

    இதே பாடலை உங்களது ஆள் அனிருத் இசைத்து, உங்கள் தனுஷும், சிம்புவும் பாடினால் இல்லை படித்தால் எப்படி இருக்கும் ? கொஞ்சம் நினைத்து பாருங்கள் ஜி நெஞ்சுவலி வரும்.

    இனி இப்பாடலை தினமும் கேட்கப் போகிறேன்.
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜியின் மனதை பக்தி உணர்வை இந்தப் பாடல் தட்டி எழுப்பியிருக்கிறது. அதனால்தான் அபூர்வமான நீண்ட பின்னூட்டம்.

      நீக்கு
    2. தமிழருக்கு...
      நான் அலைபேசியில் கருத்தை பதிவதால் சிறியதாக போகிறது இதுவே காரணம்.

      நீக்கு
    3. சில நாட்கள் தொடர்ந்து கேட்டாலோ, பாடினாலோ மனனம் ஆகிவிடும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான பதிவு..

    குமர குருபரர் திருவடிகள் போற்றி!..

    பதிலளிநீக்கு
  9. இன்றைய பாடல் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    என் கணவர் எப்போதும் பாடும் பாடல் .

    எங்கள் வீட்டில் சரஸ்வதி பூஜைக்கு புத்தகங்கள் வைத்து அதன் மேல் சரஸ்வதி முகம் செய்து அம்மனாக பாவித்து வணங்குவோம்.
    விஜய தசமி அன்று காலை பூஜை முடித்து அம்மனுக்கு கீழ் இருக்கும் புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும், அன்று முதலில் எப்போதும் படிக்கும் பாடல் சகலகலாவல்லி மாலை பாடல்தான்.

    அந்த புத்தகத்தில் தேவி மாகாத்மியச் சுருக்கம், சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதியில் சில குறிப்பிட்ட பாடல்கள் உள்ள புத்தகம். தருமையாதீனம் வெளியிட்ட புத்தகம்.

    இப்போது ஒலிக்க விட்டு கேட்டு கொண்டு கருத்து போடுகிறேன்.

    எங்கள் வீட்டிலும் கேஸட் இருக்கிறது.
    நவராத்திரிக்கு கேட்க வேண்டிய பாடல் பகிர்வுக்கு நன்றி.
    கடைசி மூன்று நாளும் இந்த பாடல் தான் எங்கள் கூட்டு பிரார்த்தனையில் பாட நினைத்து இருக்கிறோம்.
    நீங்களும் பகிர்ந்து இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  எவ்வளவு இனிய நாட்கள் அவை..  இல்லை?  இப்பொழுதும் அடுத்த மூன்று நாட்கள் இதைத்தான் பாடப் போகிறீர்கள் என்பது மகிழ்ச்சி அக்கா.

      நீக்கு
  10. ஔவையார் சொல்லியதைப் போல -

    குமரகுருபரரின் பெருமை சொல்லவும் பெரிதே!..

    பதிலளிநீக்கு
  11. அப்போது (1982) சிங்கப்பூரில் இருந்தேன்..

    அங்கே சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்புவார்கள்..

    அதன் பின் 86 ல ஒலிநாடா இருந்தது..

    இந்த மாலையில் இரண்டு பாடல்கள் மனனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு நான் கேட்ட இன்னொரு கேசெட் யு டியூபில் கிடைக்கிறதா என்று பார்க்கின், கிடைக்கவில்லை.  ஜெயேந்திரர் அருளிய நித்ய பாராயண சுலோகம்.  ஜெயேந்திரர் முன்னுரையோடு SPB விநாயகர் துதியிலிருந்து எல்லா சொல்கேன்களிலிருந்தும் சில வரிகள் பாடுவார்.

      நீக்கு
  12. சக்தி லீலை என தஞ்சையம்பதியில் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன..

    ஆனால்,
    நவராத்திரிக்கு பத்து நாட்களுக்கு முன்பே பட்டியல் இடப்பட்டிருந்தவை வேறு..

    ஏன்.. என்ன காரணம்?..

    பதிலளிநீக்கு
  13. சகலகலாவல்லி மாலை படிக்கும் காலத்தில் நவராத்திரி பத்துநாட்களிலும் பாடசாலை பூசையில் படிப்போம் .

    இந்நாட்களுக்கு ஏற்ற நல்ல பாடல் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. ..சுப்ரபாதம் கெஸெட்டில் என் அப்பா விருப்பத்துக்கிணங்க 'கெட்யம்' இணைக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் வேறு யார் வீட்டிலும் இது இருந்திருக்காது.//

    ஒஹோ! அந்தக்கால தமிழ்நாட்டை, நம்ம காலத்து (த்)திராவிட நாடாக நெனச்சுப்பிட்டீங்க.. போகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை.  சுப்ரபாதம் புகழ்பெற்ற அளவு கெட்யம் பிரபலமாகவில்லை.  நம் வானொலியில் அதை வைக்க மாட்டார்கள்.  விஜயவாடா போன்ற தெலுங்கு ஸ்டேஷனை நிரடி வைக்க வேண்டும்.

      நீக்கு
  15. மிக நன்றாக இருக்கிறது ஸ்ரீராம். இப்போதுதான் கேட்கிறேன்.

    அழகாகப் பிரித்துப் பாடுகிறார்கள் பொருளுக்கு ஏற்ப...இசை அமைப்பும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா..  ராகங்களை வரிசைப்படுத்துவீர்களோ என்று பார்த்தேன்!

      நீக்கு
  16. வித்தியாசமான இசை அமைப்பு மெட்டு. சாதாரணமாக ஒரு ராகம் பாடும் போது வரிகளில் அடுத்து இப்படிப் போகலாம் என்று நாம் யூகிக்க முடியும். இதில் அப்படி முடியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. சகலகலாவல்லி மாலையைப் பகிர்ந்தது சிறப்பு. நானும் அடிக்கடி கேட்டிருக்கேன். கேட்பேன். மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்னி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!