ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – நெல்லைத்தமிழன் ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 38

 


சென்றவாரம் விருந்தாவனத்திலிருந்து புறப்பட்டு குருக்ஷேத்திரம் வந்து வரை எழுதியிருந்தேன்குருக்ஷேத்திரத்தில் நாங்கள் தங்கியிருந்த அறை நன்றாகவே இருந்தது. இரவு குருக்ஷேத்திரத்தில் தூங்கிவிட்டு காலையில் 6 மணிக்கு அருகிலிருந்த பிரம்மசரோவர் என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான ஏரியில்   குளிக்கச் சென்றோம்.

நாங்கள் தங்கியிருந்த இடம்

இரவு உணவுதங்கியிருந்த அறை

பிரம்மசரோவர் ஏரி. 

இது பிரம்மாவினால் உண்டாக்கப்பட்டதாம். இந்த இடத்திலிருந்துதான் பூமிப்பந்தை உருவாக்கினார் என்பது ஐதீகம். மஹாபாரத யுத்தத்தின்போது இங்குதான் துரியோதன் கடைசியில் ஒளிந்துகொண்டான் என்றும், பிறகு வீமனால் அறைகூவல் விடப்பட்டு கடைசியில் மடிந்தான் என்று சொல்கின்றனர். மகாபாரத யுத்தத்தில் வெற்றிபெற்ற பிறகு யுதிஷ்டிரர், இந்த ஏரியின் நடுவே பெரிய கோபுரத்தை உண்டாக்கினாராம். இந்த ஏரியையும் அதன் பெருமையையும் 11ம் நூற்றாண்டில் அல் பெரூனி என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறாராம்.


சரோவர்க்குச் செல்லும் அழகிய பாதை

நடைப்பயிற்சிக்கு உகந்த இடம்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏரி. (நெல்லையில் பெருங்குளம் என்று ஒரு ஊர் உண்டு. அங்குள்ள ஏரி/பெருங்குளம் அவ்வளவு பெரியது. இது ஒரு திவ்யதேசமும் கூட)


நல்லா நடந்துவிட்டு மாலை நேரத்தில் பெஞ்சில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம் (ஏரியைப் பார்த்து பெஞ்சை வைக்கவில்லையே).  பெஞ்சைப் பார்த்தும் எனக்கு அதிரடி அதிரா நினைவு வந்தது.

ஏரியின் கரைகளில் மஹாபாரதக் காட்சிகள் பலவும் சிற்பங்களாக (டெராகோட்டாஇருந்தன.




ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அது மஹாபாரதத்தில் எந்த நிகழ்வைக் குறிக்கிறது என்பதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தனர்.









ஏரியைச் சுற்றிலும் நீளமாக நடைபாதை இருந்தது. குளித்துவிட்டு அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு, ஏரியில் சில பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சிறிது தொலைவு நடந்து திருப்பதி பாலாஜி கோவிலுக்குச் சென்றேன். இது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் ஆங்காங்கே அமைக்கப்படும் வெங்கடேசப் பெருமாள் கோவில்.


பிரம்மசரோவரிலிருந்து தங்கியிருந்த இடத்துக்கு நடந்துசெல்லும் வழியில் பார்த்த அழகிய கிருஷ்ணர் சிற்பம்குருக்ஷேத்திரம் என்பது மஹாபாரத யுத்தம் நடைபெற்ற பூமி என்பதையும், அங்கு லக்ஷக்கணக்கான வீரர்கள், பாண்டவர்கள், கௌரவர்கள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் யுத்தம் செய்த பூமி என்பதையும் நினைத்தாலே பிரமிப்பாக இருக்கும்.







உள்ளே திருப்பதி பாலாஜி, அங்கிருப்பதைவிட பிரம்மாண்டமாகத் தெரிந்தார். தரிசனத்திற்குப் பிறகு தங்குமிடத்திற்குத் திரும்பவும் நடந்து சென்றேன்காலை பத்து மணிக்கு சாம்பார், ரசம், கறியமுது, கூட்டு, வடை, பாயசம் என்று நல்ல விருந்து. இதற்குப் பிறகு நாங்கள் குருக்ஷேத்திரத்தில் இரண்டு இடங்களைப் பார்க்கப்போகிறோம். முதலாவது அர்ஜுனுக்குக் கண்ணன் கீதை உபதேசித்த இடம் என்று சொல்லப்படுவது. இரண்டாவது பீஷ்மர் மஹாபாரத யுத்தத்தில் பத்தாம் நாள் வீழ்ந்துபட்ட இடம். இந்த இரண்டையும் அடுத்த வாரம் காண்போமா?

 (தொடரும்) 

55 கருத்துகள்:

  1. புகைப்படங்கள் பிடிப்பதில் முன்னேறி விட்டீர்கள். சினிமாத்தனம் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது (drone shot போன்றவை). படங்களில் இடத்தின் பிரம்மாண்டம் (இருப்பிடம், ஏரி) அழகாக பதிவாகியிருக்கிறது.
    குருஷேத்திரத்தில் ஒளி ஒலி காட்சி ஏதேனும் பார்த்தீர்களா?
    ​ Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... குருக்‌ஷேத்திரத்தில் ஒலி ஒளிக் காட்சி எதுவும் காணவில்லை.

      சிறு வயதில் அந்த இடம் பலப்பல கால்பந்து மைதானம் ஒன்று சேர்ந்ததுபோல மிகப் பிரம்மாண்டமாக்க் காட்சியளிக்கும், அகழ்வாராய்ச்சி செய்தால் போரின் எச்சங்களைக் காணமுடியும் என்றெல்லாம் யோசித்ததுண்டு.

      நீக்கு
  2. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தபின், எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பல்வேறு நாடுகளில் பணி புரியும், சுற்றும் வாய்ப்பு, பிறகு எங்கள் குலத்தில் மற்றவர்களுக்குக் கிட்டாத பாக்கியமான 106 வைணவ திவ்யதேசங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மனது வியந்தது. எதுவுமே முன்வினைப் பயன் என்பதை எப்போதும் மனதில் இறுத்துகிறேன்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. பிரம்மசரோவர் ஏரியை மிக நன்றாக படம் எடுத்து இருக்கிறீர்கள்,
    அதன் அழகு நன்றாக தெரிகிறது.ஏரியின் வரலாறு , மற்றும் மகாபாரத கதையை சொல்லும் சிற்பங்களும் அழகு.

    கிருஷ்ணர் சிற்பம் அருமை.
    உணவு மெனு கேட்டவுடன்

    நாங்கள் சென்று வந்த நினைவுகளும் வந்து போகிறது.

    குருக்ஷேத்திரத்தில் தமிழர் ஒருவர் இட்லி கடை நடத்தினார், நானும் என் கணவரும் ஞாயிறு விரதம் என்பதால் சாப்பிடவில்லை. மகள் குடும்பத்தினர் வாங்கி உண்டனர் மிக நன்றாக இருப்பதாக சொன்னாள் மகள்.

    பிரம்மசரோவர் ஏரியை சுற்றிய இடங்களில் தமிழ் பாடல்களை கேட்டுக் கொண்டு சாமியார் உடை அணிந்த யாசகர்கள் இருந்தார்கள்.
    இப்போது அப்படி பார்த்தீர்களா?

    குருஷேத்திரத்தில் ஒளி ஒலி காட்சி அர்ஜுனுகுக் கண்ணன் கீதை உபதேசித்த இடத்தில் நடைபெற்றது பார்த்தோம். கிருஷ்ணரின் விஸ்வரூப காட்சி அருமையாக இருக்கும்.
    பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருக்கும் போது அர்ச்சுனன் நீர் வரவழைத்து கொடுப்பது அழகாய் காட்டினார்கள்.
    கொடிமரத்துக்கு முன் நிற்கும் உங்கள் கையில் கோவில் பிரசாதமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தள்ளுவண்டி இட்லி கடை , இட்லி கொப்பரை வைத்து சுடச் சுட செய்து கொடுத்தார்கள். என் கணவர் இட்லி பிரியர் . "விரத நாளில் வந்து விட்டேனே" என்று மகளிடம் சொன்னார்கள்.

      நீக்கு
    2. நாங்கள் யாத்திரை செல்வது திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் நடத்துவது. அவருடன் சென்றால் ருசியான உணவுக்கும் தெய்வ தரிசனங்களுக்கும் தடையேதுமில்லை. வெளியில் வாங்கிச் சாப்பிடுவதற்கு வாய்ப்பில்லை (டீ, லஸ்ஸி, இளநீர், பழம் போன்றவை தவிர) இருந்தாலும் ஆவிபறக்கும் இட்லி, சூடான வடை என் விருப்பம். நீங்கள் எழுதியதைப் படித்ததும் இட்லி சாப்பிடும் ஆசை வந்துவிட்டது (ஆனால் இரண்டு, மூன்று மாதங்களுக்கு நான் முழு கார்போ சாப்பிடக்கூடாது, டயட் ப்ரோகிராமில்.

      நான் குளித்தது, ஏரியைச் சுற்றியது (மூன்று தடவைகளிலும்) காலை ஏழு மணிக்குள்ளாக. அதனால் அவங்க பிசினெஸை ஆரம்பிக்கலை போலிருக்கு.

      நீக்கு
    3. நான் காணொளி பார்க்கலை.

      ஆமாம். கையில் இருப்பது கோவில் பிரசாதம். நான் மட்டுமே தரிசனத்துக்கு வந்திருந்ததால் பிரசாத்த்தை யாத்திரை நடத்தும் குழுவினருக்கு எடுத்துச் செல்கிறேன். கூர்மையாக்க் கவனித்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  6. குருஷேத்திரத்தில் நீங்கள் தங்கியிருந்த இடத்தைப் பார்த்ததும்
    1955-- காலத்து நெல்லை லாட்ஜின் வெளித்தோற்றம் என் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... நெல்லை நினைவுகள் மறக்கக்கூடியதா? நெல்லை செல்லும் ஆசை வந்துவிட்டது. சில வாரங்களுக்குமுன் கும்பகோணத்தில் ஐந்து நாட்கள் இருந்ததைப் போல, பெப்ருவரிக்குள் நெல்லையில் ஐந்து நாட்கள் இருக்கவேண்டும்.

      நீக்கு
  7. (டெராகோட்டா) சிற்பங்கள் அழகு. அவற்ற்கேற்பவான சில மஹாபாரதக் காட்சிகள் தாம் நினைவுக்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு சிற்பத்தின் கீழும், அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் போர்டில் எழுதியுள்ளனர். ஓரிரு படங்களில் அவற்றைக் காணலாம்.

      நீக்கு
  8. நீங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வரும் வழியிலிருந்த சிற்பங்கள்
    அழகு. நல்ல வேளை வழியெங்கும் சினிமா கட்-அவுட்டுகளை வைத்து நாசம் பண்ணாமல் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருஷேத்திரம் மற்றும் பல வடநாட்டு முக்கிய இடங்களில் இன்னும் அந்தக் கலாச்சாரம் வரவில்லை, நல்லவேளை

      நீக்கு
  9. அட! திருப்பதி பாலாஜி கோயில் கோபுரம், துவஜ ஸ்தம்பம், உள்பக்க அழகுகள் என்று தென்னக பாணி அழகுகளைப் பார்த்து பார்த்து பரம திருப்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் முழுமையான தென்னகப் பாணி. த்வஜஸ்தம்பம் தாண்டி மொபைல் கொண்டுசெல்லக் கூடாது, மூலவர் திருப்பதிப் பெருமாளைவிடப் பெரியவர். கொள்ளையழகு

      நீக்கு
  10. 1) ஆரம்ப பாராவில்
    வந்து வரை -- வரும் வரை

    2) கடைசி பாராவில்
    அர்ஜூனுக்குக் -- அர்ஜூனனுக்கு

    தட்டச்சுப் பிழைகளைத்
    திருத்தி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌதமன் சாரின் கவனத்திற்கு... (ஒரிஜினல் தட்டச்சுப் பிழைகள் என்னுடையவை) நன்றி ஜீவி சார்.

      நீக்கு
  11. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய கோவில் தரிசன பகிர்வு அருமையாக உள்ளது.
    பிரம்மசரோவர் ஏரியின் அழகு, அதன் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது.அதன் தகவல்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி. நெல்லையின் பெருங்குளம் கேள்வி பட்டுள்ளேன்.

    மஹாபாரத சிற்பங்கள் அனைத்தும் அருமை. நேரில் காணும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். உங்களால் நாங்களும் நேரில் கண்ட உணர்வை பெற்றோம்.

    கிருஷ்ணனின் பெரிய உருவம் மிக அழகாக இருக்கிறது. திருப்பதி பாலாஜி கோவில் மாதிரியே கோபுர அமைப்புடன் உள்ளது. உள்ளே இறைவனும் பிரமாண்டமாய் தெரிவது நல்ல விஷயந்தான். அங்கு மாதிரி இங்கும் பிடித்து தள்ளாமல், ஓரிரு விநாடிகளாவது தரிசனம் செய்ய முடிந்ததா? கோவிலும் அமைப்பும், அழகாக இருக்கிறது. தாங்கள் முகப்பில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படமும் அருமை. அக்கோவிலின் கொடி மர தரிசனம், கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். உங்களால் நானும் பார்க்க இயலாத இங்கெல்லாம் உலா வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பெருங்குளம் பார்த்ததில்லையா? நான் கல்லிடைக்குறிச்சி ஆஞ்சநேயர் கோவில், பிரம்மதேசம்லாம் தரிசனம் செய்திருக்கிறேன்.

      பிடித்துத் தள்ளுவது.... திருப்பதியில் இறைவன் அருளால் பிடித்துத் தள்ளாத தரிசனங்கள் எனக்குப் பலமுறைகள் வாய்த்திருக்கின்றன

      நீக்கு
  12. தங்கியிருந்த இடம் பெரிய வளாகம் போல இருக்கிறதே. இடம் நல்ல பெரிசாக..

    சரோவர்க்குச் செல்லும் பாதை மிக அழகு! ஏரி செம அழகு. தண்ணீர் நிரம்ப்இ, சுத்தமாகவும் இருக்கிறது. எப்பவும் இப்படி இருக்குமா?

    எம்மாம் பெரிய ஏரி. சுத்தி வந்தாலே நல்ல நடைப்பயிற்சி! மனதுக்கும் ரம்மியம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் ஓரளவு சுத்தம். குளிக்கும் படிகள் பாசிபடர்ந்து இருப்பதால் ஜாக்கிரதையாக இறங்கணும்.

      பழைய துணியை நீர்நிலைகளில் விட்டுவருபவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா? ஏழைக்கு அந்த உடையைக் கொடுத்தால் என்னவாம்?

      நீக்கு
    2. உடுத்துக் களைந்த ஆடைகளை எவருக்கும் எந்த வகையிலும் கொடுக்கக் கூடாது..

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார்... நான் உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்.

      உடுத்துக்* களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு*
      தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன* சூடும் இத்தொண்டர்களோம்*

      இறைவனுக்குச் சார்த்திய ஆடையை பக்தர்களாகிய நாங்கள் உடுத்திக்கொண்டோம் என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

      கொஞ்சம் பழசானால் என்ன, பிறருக்கு உதவும் என்றால் கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது? செய்வினை என்றெல்லாம் சிந்திக்கிறீர்களா?

      நீக்கு
  13. நெல்லை, ஏரி படங்கள் எல்லாம் சூப்பர்

    ஏரிக்கரையில் உள்ள மகாபாஉரதக் காட்சிகள் அழகு. உங்க படங்களும் அருமை.

    அட ஏரியில் குளிக்க அனுமதி உண்டா! அதான் நடுல அன்தத் தடுப்பு போல இருக்கோ அந்தப் படத்தில் பெரிய படி தெரிகிறது தண்ணீரில் இதைப் பார்த்ததும் குளிக்கும் இடமா அனுமதி உண்டான்னு கேட்க நினைச்சேன் அடுத்து கீழ நீங்களே சொல்லியிருக்கீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எந்த நீர்நிலையில் குளித்தாலும் நினைவுக்குப் படங்கள் எடுத்துக்கொள்வேன், அங்கேயே பெரும்பாலும் சந்தி செய்வேன். படம் பகிரவில்லை.

      நீக்கு
  14. திருப்பதி கோயிலும் நல்லாருக்கு. கலப்படம் இல்லாத லட்டு உண்டா? பிரசாதம் இல்லையா? திருப்பதி கோயில்ல பிரசாதம் கொடுத்துட்டே இருப்பாங்களே நெல்லை! எனக்கு கோயில் என்றாலே பிரசாதத்துலதான் கண்ணு!!!

    அடுத்து அப்ப போர் நடந்த இடமா ? இரண்டு முக்கிய நிகழ்வு சொல்லியிருக்கீங்களே அதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலப்படம் இல்லாத.... ஆஹா இந்த கீதா ரங்கன்(க்கா) வம்பு வளர்க்கிறாங்களே.

      திருப்பதி போன்ற முக்கியமான, பெரிய கோவில்கள் ந்ந்தினி போன்ற அரசு நிறுவனங்களிடமிருந்தே அனைத்தையும் பெற்றுக்கொள்ளணும். காசு குறைவு என்று நினைத்து திண்டுக்கல் டெய்ரிக்கெல்லாம் போனால் திராவிட நெய்தான் கிடைக்கும்.

      நீக்கு
    2. இங்கு பதிவு செய்வது சரி என்றே நினைக்கிறேன். பெரிய லட்டு, பெரிய வடை, எனக்கு இரண்டு மடங்கு விலையில் கீழ்திருப்பதியில் ஒரு தடவை முஸ்லீம் ஒருவர் டெலிவர் செய்தார். அதுபோலவே சேவைகளும் தங்குமிடமும் ஒரு தடவை இரண்டு மடங்கு பணம் கொடுத்துப் பெற்றிருக்கிறேன்.

      நீக்கு
    3. ஹாஹாஹா வம்பு என்ன அதான் ஊரே பேசிக்குதே அப்புறம் என்ன ரகசியம். இதுல வேற சமீபத்துல யாரோ திருப்பதி போய்ட்டு வந்து அதாவது இந்தக் கண்டுப்பிடிப்புக்கு முன்ன, லட்டு எல்லாம் கொண்டு வந்து பிரசாதம்னு எனக்குக் கொடுத்தாங்க...என்னதான் சொல்லுங்க திருப்பதி லட்டு மாதிரி வராதுன்னு!!!!!!!!ஹான் என் நெருங்கிய உறவினர். நான் சாப்பிடலை. பிரசாதம்னா கூடச் சாப்பிட மாட்டீங்களான்னு கேட்டாங்க....
      கோயில் பிரசாதம் என்றாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதுவும் கோயிலுக்குப் போனா சாமி கும்பிடுவதை விட பிரசாதம் உண்டா என்று பார்க்கும் ரகமாகிய நான் சமீபகாலங்களாக சாப்பிட மிகவும் யோசிக்கிறேன். அதுவும் திருவல்லிக்கேணி புளியோதரையில் நற நறன்னு (சின்ன கல் மண்) அகப்பட்டதும்! (ஸ்டால் புளியோதரை அல்ல) திருப்பதியும் நங்கநல்லூர் மட்டுமே என் லிஸ்டில் இருந்தன இப்ப திருப்பதி கேள்விக்குறி.

      அப்புறம் எதுக்கு இறைவனுக்குப் படைக்கணும் பக்தி என்று சொல்லி என்று மனசுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அது போல பிரசாதம் என்று ஸ்டால் போட்டு பைசாக்கு விற்பதையும் மனம் ஏற்க மறுக்கிறது. தெய்வப்பணி, மருத்துவப்பணி, கல்விப்பணி, சமூகச்சேவை இவற்றில் வர்த்தகம் புகுந்துவிட்டால் அம்புட்டுத்தான்

      கீதா

      நீக்கு
    4. திருநீர்மலைல 200+ படிகள் ஏறிட்டு, பெருமாளைச் சேவித்துவிட்டு, அங்கே இருக்கும் பிரசாத ஸ்டாலில் சிலவற்றைச் சாப்பிட்டால், இறங்குவதற்கு தெம்பு வரும். ஒப்பிலியப்பன் கோவில் பிரசாதமும் நன்று. திருப்பதி கோவிலில், தரிசனம் முடிந்ததும் கிடைக்கும் பிரசாதமும் மடப்பள்ளியில் செய்யப்படுவது. லட்டு என்பது mass production. அதிலும் பத்து வருடங்களுக்கு முன்பு (அதாவது லட்டு 25 ரூ இருந்தபோது, 160 கிராம்), நஷ்டத்துக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போ 33-35 ரூ ஆகிறது என்றார்கள். பிறகு 50 ரூ ஆகிவிட்டது. கீழ்திருப்பதியில் 25 ரூ (முன்பு 10 ரூ). கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டு கிலோ 300-325 ரூ, திருச்சானூர் லட்டு கிலோ 175 ரூ. கட்டுப்படியாகுமா சொல்லுங்க? அதனால்தான் டெண்டர் என்று வரும்போது, தில்லாலங்கடி கம்பெனிகள்லாம் குறைந்த விலைக்குக் கொடுக்கறேன்னு சொல்றாங்க.

      நீக்கு
    5. //தெய்வப்பணி, மருத்துவப்பணி, கல்விப்பணி, சமூகச்சேவை இவற்றில் வர்த்தகம் புகுந்துவிட்டால் // - இவைகள் எல்லாமே வர்த்தகமயமாகி 20-30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. போகப்போக இன்னும் மோசமாகத்தான் போகும் (இந்தியாவில் டயபடீஸ் பிரச்சனை அதிகமானால்தான் நல்லது என்று நினைக்கும் வெளிநாட்டு கம்பெனிகள், இங்குள்ள consumer productsல் நிறைய சர்க்கரையைச் சேர்ப்பதுபோல். கேட்டால், மக்கள் அப்படித்தான் ஆசைப்படறாங்க என்று சொல்லிவிடுவார்கள்.

      நீக்கு
  15. அந்தக் கிருஷர் பெரிய உருவம் ரொம்ப அழகா இருக்கு தங்கும் இடத்துக்கு நடந்து போகும் வழியில் என்றாலும் இந்தச் சிலை இருக்கும் இடம் என்னவாக இருக்கும்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு தெருக்களாகப் பிரியும் இடத்தில் அந்தச் சிலை அழகுற வடிக்கப்பட்டிருந்தது.

      நீக்கு
  16. கோடை விடுமுறையில்
    வியாசர் விருந்தை படித்த போது எனக்கு வயது 16.. அப்போது கல்கியில் சக்ரவர்த்தித் திருமகன் ஓவியர் வினுவின் கை வண்ணத்துடன் வெளியாகிக் கொண்டிருந்தது.. ஆனந்த விகடனில் பரணீதரனின் அருணாசல மகிமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மிகச் சிறுவயதிலேயே இவற்றைப் படித்திருக்கிறேன். என் அப்பா, என் தீவிர வாசிப்பைப் புரிந்துகொண்டு (தீவிர என்றால் நிறைய படிக்கும் ஆசை) பள்ளி லைப்ரரியிலிருந்து ஷேக்ஸ்பியரின் தமிழ்படுத்தப்பட்ட நாவல் ஒன்றை (கழுதையின் காதல் என்பது தலைப்பு) எனக்கு 5ம் வகுப்பு படிக்கும்போது கொடுத்தார். அப்போதுதான் கல்கியில் இரண்டாம் முறையாக ஓவியர் வினு? கைவண்ணத்தில் சிவகாமியின் சபதம் வந்துகொண்டிருந்தது என்று நினைவு. 6வதிலேயே ஸ்ரீமஹா பக்த விஜயம், வியாசர் விருந்து, இராமாயணம் போன்றவைகளைப் படித்திருந்தேன்.

      நீக்கு
  17. மஹாபாரத சுதை சிற்பங்கள் அனைத்தும் அருமை.

    மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றன ..

    நெல்லை அவர்களால் குருக்ஷேத்திர பூமியை நேரில் கண்ட உணர்வைப் பெற்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பவே சந்தோஷம் துரை செல்வராஜு சார்.. மெதுவாக நடந்து, அந்தச் சிற்பங்கள் என்ன என்ன என்பதை வாசிப்பதற்கு நேரமில்லை. ஏகப்பட்ட சிற்பங்கள்.

      குருக்ஷேத்திர பூமி - வட இந்தியர்கள் பலர் அந்த பூமியில் தங்க வருகிறார்கள். அவர்கள் நாங்கள் தங்கியிருந்த இடங்களின் வெளிப்புறத்தில் பெரிய குழுவாக அமர்ந்து மஹாபாரதக் கதையை அவர்களில் ஒருவர் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர், அவர்களுக்கு சப்பாத்தி போன்றவைகளைத் தயார் செய்துகொண்டிருந்தனர். அந்த எளிய மக்களின் பக்தி என்னை மிகவும் வியக்கவைத்தது. அத்தகைய பக்தி உடையவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் நடந்த பாதையில் நடக்கும் பாக்கியம் கிட்டியிருக்கும்.

      நீக்கு
  18. குருக்ஷேத்திரப் போரில் நெல்லை, ஸ்ரீ ராம் ஆகியோரது பங்கு என்னவாக இருந்திருக்கும்?...

    நான் யாராக இருந்திருப்பேன்...

    ஸ்ரீ க்ருஷ்ணனும் நாமும் எப்போது பிரிந்திருந்தோம்!..

    ஜெய் க்ருஷ்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நல்ல கற்பனை... ஆனால் பாருங்க துரை செல்வராஜு சார்... குருக்ஷேத்திரப் போரில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் சுவர்க்கலோகம் சென்றிருந்திருப்பார்கள். போரில் வீரத்தைக் காட்டி மடியும் வீரர்கள் அனைவரும் வீரர்களுக்கான சொர்க்கலோகம் செல்வர். அந்தப் பிறப்பின் நிழல் நம்மீது படிந்திருந்தால், நாமென்ன, அநியாயங்கள் நடைபெரும்போது பம்மிச் செல்வோமா?

      நீக்கு
    2. இருந்தாலும் பாரதப் போரில் சேர்ந்து சண்டையிட்டிருப்பதால உள்ளுணர்வு..

      நீக்கு
    3. யுகங்கள் ஆயிற்றே..

      புண்ணியம் குறைந்து போயிருக்கும்..

      ஹரே கிருஷ்ணா

      நீக்கு
  19. 1969 களில் வெளியாகியது பக்தப் பிரகலாதா ..

    இப்போது பார்த்தாலும் கன்களில் நீர் வருகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம மனசுதான் காரணம் துரை செல்வராஜு சார். உணர்ச்சியோடு ஒன்றைப் பார்க்கும்போது மனம் ஒன்றும்.

      நீக்கு
  20. நெல்லை கையில திருப்பதி கோயில் பிரசாதமோ? ரெண்டு தொன்னை செட் இருக்கு போல!!!!! அதானே பார்த்தேன் பாலாஜி வெறுங்கையோட அனுப்பமாட்டாரேன்னு!! என்ன பிரசாதமோ? காலைல படத்தை பெரிசாக்கிப் பார்க்கலை இப்பதான் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ நினைவில்லை கீதா ரங்கன்(க்கா). அனேகமா வெண்பொங்கலாக இருக்கலாம்.

      நீக்கு
    2. கீதா ரங்கன்.... உங்க கருத்துகளைப் படித்தேன் (commercial). திருப்பதிக்குப் போனால் பிரசாதம் தருவது முறை (லட்டு). ஆனால் அவற்றை திருப்பதியிலிருந்து சென்னையில் உள்ள கோவில், ஆந்திராவில் உள்ள பல கோவில்கள் என்றெல்லாம் அனுப்புகிறார்கள், மாதத்தில் இந்த ஞாயிற்றுக்கிழமை கிடைக்கும் என்பதாக. அது நியாயமா? வியாபாரம் போன்று இது ஆகிவிடாதா? பெருமாள் தரிசனத்தைவிட லட்டு முக்கியம் என்று ஆகிவிடுகிறதே. (ஒண்டிமிட்டா கோவிலிலும் திருப்பதி லட்டு மாதத்தில் ஒரு சில நாட்களில் கிடைக்கும்)

      நீக்கு
  21. பிரமசரோவர்ஏரி அழகாக இருக்கிறது.

    மகாபாரத சிற்பங்கள் ஏரியை சுற்றிலும் அமைத்திருப்பது போற்றுதற்குரியது. அவை பல கதைகளையும் நினைவில் கொண்டு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  22. படங்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கின்றன, நெல்லைத்தமிழன். ஓ இதுதான் பிரம்மசரோவர் ஏரியா? குருஷேத்திரம் அருகிலா? வேறொரு பிரம்மா ஏரி என்று இங்கு வாசித்த நினைவு அதுவும் ராஜஸ்தானில் இல்லையா? பெயர் நினைவில் டக்கென்று நினைவுக்கு வரவில்லை.

    ஆனால் இது பெரிய ஏரியாக இருக்கிறது. சுத்தமாகவும் படிகளும் நடைபாதையுடனும், மகாபாரத நிகழ்வுகளின் சிற்பங்களுடனும் அழகாக இருக்கிறது. நீங்கள் தங்கியிருந்த இடமும் நன்றாக இருக்கிறது.

    அங்கும் திருப்பதி கோயில் என்றதும் தற்போதைய லட்டு விவகாரம் தான் சட்டென்று நினைவிற்கு வருகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார்... நல்லா நினைவு வைத்திருக்கீங்க. அது புஷ்கரில் உள்ள ஏரி.

      நம்ம லட்டு விவகாரம்... பொதுவா கோவிலுக்கு சப்ளை பண்ணறவங்க அந்த கோவில் நடைமுறைகள்ல ஒன்றியவங்களா, அந்த நம்பிக்கையைத் தானும் நம்புகிறவர்களா இருக்கணும். அப்படி இல்லாமல் இதுவும் ஒரு வியாபாரம், அதில் எவ்வளவு காசு பார்க்கலாம் என்று நினைத்தால், தகிடுதத்தங்கள் செய்வாங்க.

      சப்ளையர்களை விடுங்க. நாம, சாதாரண பக்தர்கள், 2 ரூபாய்க்கு கோவில் வாசல்ல நெய் விளக்கு என்று சொல்லி விற்பவைகளை கோவிலுக்குள் ஏற்ற முயல்கிறோம். அதுபோல தீபம் எண்ணெய் என்ற பெயரில் வரும் பல போலி எண்ணெய்களையும். சென்ற வருடத்தில் ஆழ்வார்பேட்டை/மயிலாப்பூர் பகுதியில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் என்ற பெயரில் போலியான அசுத்தமான பொருட்களை வைத்து வெள்ளைக் கலர்ல தயாரித்து விற்பனை செய்திருக்கிறார்கள். நாமதான் விஜிலெண்டாக இருக்கணும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!