ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – நெல்லைத்தமிழன் ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 39

 

குருக்ஷேத்திரத்தில் காலை உணவிற்குப் பிறகு 11 மணி வாக்கில் அர்ஜுனனுக்கு கண்ணன் கீதை உபதேசித்த இடத்திற்குச் சென்றோம்குருக்ஷேத்திரம் முழுவதுமே யுத்தம் நடந்த பூமி என்பதை மனதில் வைப்போம். அதனால் இந்த இடத்தில்தான் கீதை உபதேசம் நடந்தது, இங்குதான் பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்தார் என்பதை ஆங்காங்கிருக்கும் நீர்நிலைகள் மற்றும் அடையாளங்களை வைத்துத்தான் கோவில்கள் எழுப்பியிருக்கின்றனர்.

ஜ்யோதிஷர் என்று அழைக்கப்படும் இடம், ஜ்யோதிஷ சரோவர் கரையில் அமைந்துள்ளது. இங்குதான் ஆலமரத்தடியில் அர்ஜுனனுக்கு கண்ணன் கீதையை உபதேசித்தார் என்று சொல்கின்றனர்.

ஜ்யோதிஷர் தீர்த்தம். இதன் கரையில்தான் ஆலமரம் அமைந்துள்ளது



அந்த வளாகத்திலேயே சிறிய சிறிய கோவில்கள் இருக்கின்றன.

இந்த ஆலமரத்தின் அடியில்தான் (பக்கத்தில்) கீதா உபதேசத்தை மாடல் செய்துவைத்திருக்கிறார்கள்  (காஞ்சி காமகோடி பீடம்)



இந்த இடத்தின் எதிரே நாங்கள் எல்லோரும் அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்.

குழுவினர் அனைவரும் அமர்ந்து சஹஸ்ரநாம பாராயணம் செய்தோம்.

யாத்திரைக்கு அழைத்துச் சென்றவருடன் நினைவுக்காக எடுத்துக்கொண்ட புகைப்படம்.

வைணவ மொழியில், தெண்டன் சமர்ப்பித்தல் என்று சொல்லுவோம். வைணவப் பெரியவரைக் கண்டால் உடனே கீழே விழுந்து வணங்கவேண்டும். ஒரு உலக்கையை சம தளத்தில் நிற்கவைத்து கையை எடுத்தால் எப்படி அது உடனே விழுமோ அதுபோல, அடியற்ற மரம்போல (தமிழ்ல இல்லாத சொற்கள் உண்டா?) விழுந்து வணங்கவேண்டும் என்பது மரபு. ஆனால் பாருங்க, அப்படிச் செய்ய மனம் வருவதில்லை. ஏன், திருவல்லிக்கேணியில் ஸ்வாமி வீதியில் வரும்போது கீழே விழுந்து வணங்க மனம் வருவதில்லை, சாலை இவ்வளவு புழுதியாக இருக்கிறதே, போட்டிருக்கும் உடை அழுக்காகிவிடுமே என்றெல்லாம் மனதில் தோன்றுகிறதுநான் கைப்பையில் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு வருவேன். எங்கள் மரபுப்படி கோவிலிலோ இல்லை பெரியவர்கள் முன்போ, கீழே ஆசனமிட்டு அமரக்கூடாது, அதாவது துண்டைக்கூட கீழே போட்டுக்கொண்டு அதன் மீது உட்காரக்கூடாது. ஆனால் பாருங்க, எல்லா இடத்திலும் உட்கார்ந்தால் வேஷ்டி அழுக்காயிடுமே. இந்தக் கவலையால்தான் நான் துண்டை வேஷ்டி மீதே கட்டிக்கொண்டுவிடுவேன். இந்தப் புகைப்பட த்தைப் பார்த்ததும் எனக்கு எழுதத் தோன்றியது.






ஆலமரத்தடியில் கிருஷ்ணரது திருவடி மற்றும் சிறிய அளவில் அர்ஜுனனுடன் தேரில் இருப்பது போன்று சிலை வடித்துவைத்திருந்தார்கள்.

ஜ்யோதிஷர் தீர்த்தம். 

இந்த இடத்தின் அருகிலேயே (அதே வளாகத்தில்) ஸ்ரீகிருஷ்ணரது விராட் உருவம் (தன்னுடைய முழு உருவத்தை அர்ஜுனனுக்குக் காட்டியபடி) அழகிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அதையும் புகைப்படம் எடுத்தோம்.

எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதும் அந்த இடத்திலிருந்து பீஷ்ம குண்டம் இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டோம்

பீஷ்ம குண்டம்

மஹாபாரத யுத்தத்தின் பத்தாம் நாள் பீஷ்மர் வீழ்ந்துபடுகிறார். அர்ஜுனன் அம்பால் துளைக்கப்பட்ட அவருக்கு ஒரு வரம் இருக்கிறது. அது அவரது அப்பாவினால், அவருக்குக் கொடுக்கப்பட்ட வரம், அதாவது பீஷ்மர் விரும்பும்போது அவருக்கு மரணம் ஏற்படும் என்பது. (இச்சா ம்ருத்யு). தந்தையின் ஆசை நிறைவேறும்பொருட்டு, ஆட்சி பீடம் தனக்கு வேண்டாம் என்று ஆட்சி அதிகாரத்தைத் துறந்த செயல் அவரது தந்தையின் மனதை சந்தோஷப்படுத்தி வரம் கொடுக்க வைத்ததுபீஷ்மர் வீழ்ந்துபட்டதும், அவருக்கு கஷ்டம் இல்லாது இருக்க, அர்ஜுன் அம்புப் படுக்கை அமைத்தான். அதாவது உடல் முழுவதையும் அம்பினால் தாங்கி நிற்கும்படியாக பல அம்புகள் எய்து அவருக்குப் படுக்கை அமைத்தான். அப்போது பீஷ்மருக்கு தாகம் எடுக்க, அர்ஜுனன் அதைப் புரிந்துகொண்டு அம்பை பூமியை நோக்கி எய்து பூமியிலிருந்து நீர்ப்பெருக்கு வரச் செய்து அவரது தாகத்தைத் தீர்த்தான். இந்த நீர்ப்பெருக்கு வந்த இடம்தான் பீஷ்ம குண்டம் என்று தற்போது அழைக்கப்படுகிறது.




இந்த வளாகத்திலேயே கோவில் ஒன்றும் இருக்கிறது. இது மிகப் புராதானமான இடம் என்று சொல்கின்றனர் (கோவில்). அங்கு சில சன்னிதிகள் இருந்தன. அவற்றையும் தரிசனம் செய்துகொண்டோம். பிறகு அங்கேயே வெளிப்புறத்தில் எல்லோரும் அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்.

பீஷ்ம குண்ட் அருகே இருந்த கோவிலின் தோற்றம்

இந்தக் கோவிலில் முக்கியமானது பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடப்பது மாதிரியான சன்னிதிதான். இது தவிர சில சிறிய சன்னிதிகளும் இருந்தன.



இரண்டு இடங்களையும் பார்த்த பிறகு தங்குமிடத்திற்குத் திரும்பினோம். அறைகளைக் காலி செய்த பிறகு, 1 ½ மணி வாக்கில் பேருந்து எங்களை ஏற்றிக்கொண்டு தில்லி நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

பஞ்ச துவாரகா யாத்திரை குருக்ஷேத்திரத்துடன் நிறைவு பெற்றது. நாங்கள் மறுநாள் இரவு ஜிடி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதால் தில்லி சென்று திரும்புவோம். தில்லியில் என்ன செய்தோம் என்பதை அடுத்த வாரம் நிறைவுப் பகுதியில் காணலாம்.

(தொடரும்) 

11 கருத்துகள்:

  1. தீர்த்தக் கரையிலிருக்கும் ஆலமரத்தடியில் தான் கீதோபதேசம் நடந்தது என்று நீங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விட்டபடியால்,

    ஜியோதிஷர் தீர்த்தம், அதன் கரை, ஆலமரம் என்று மனத்தில் இருத்தி வாசித்து வரும் பொழுதே
    அந்த உணர்வு ஏற்பட்டு விட்டது, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... மிகப் பெரிய போர்க்களத்தில், பாண்டவர்களுக்கான பகுதியில், தேரில் இருந்து அர்ஜுன்னுக்கு கண்ணன் கீதை உபதேசித்தான். அந்த இடமே எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும்? நினைத்தாலே புல்லரிக்கவைக்கும் சூழல்.

      நீக்கு
  2. காஞ்சி காமகோடி பீடம்
    நிருவியிருக்கும் மாடல், நாம் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட கீதா உபதேச
    காட்சி போல இல்லாதிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி சார். அதற்கு ஓரளவுக்காவது, கர்ணன் பட இயக்குநர் ஏபி நாகராஜன் அவர்களும் ஒரு காரணம். நம் கற்பனைத் திறனும் ஒரு காரணம். விராட உருவத்தையும், கீதோபதேசத்தையும் சிற்பங்களால், நம் மனதில் விரிந்த காட்சி போல வடிக்க இயலாது.

      நீக்கு
  3. ஆலமரத்தடியில் ரதத்தோடு கிருஷ்ண பகவான் தரிசனம் அருளியதில் பரம திருப்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடத்திற்குச் சென்ற போதெல்லாம் வஷ்ணு சஹஸ்ரநாம்ம் பாராயணம் பண்ணியதில் எங்களுக்கும் மனத் திருப்தி.

      நீக்கு
    2. மகா புண்ணியமான விஷயம். இதெற்கெல்லாம் அருள் பாலித்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  4. அம்புப் படுக்கையில் பீஷ்மர் கல்ங்க வைத்தது., பீஷ்ம குண்டம் அது பற்றிய வரலாற்றுத் தகவல்களையெல்லாம் அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் விளக்கம் தத்ரூபமான
    போட்டோக்கள். அப்படியே
    எங்களை அந்த இடங்களுக்கே
    அழைத்து சென்றதாக
    உணர்ந்தோம். தங்கள் பணிக்கு நன்றி. மேலும்
    கடவுள் அருளால் தொடரட்டும்.
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!