புதன், 4 செப்டம்பர், 2024

எ.பி.யில் மீம்ஸ் கிரியேட் பண்ணுவது, வீடியோ எடிட்டிங் போன்ற விஷயங்களை கற்றுத்தரலாமே!

 

ஜீவி :

? பழைய நாணயங்கள் 5, 1,2 பழைய ரூபாய் நோட்டுகள் 5,2,10 இவையெல்லாம் யாரேனும் வைத்திருந்து கொடுத்தால் 10000, 20000 கொடுப்பதாக போன் நம்பர்கள் கொடுத்து முகநூலில் விளம்பாம் போல அறிவிப்புகள் காணப்படுகிறதே! இதெல்லாம் உண்மையா? உங்களுக்கு இது பற்றி ஏதேனும் தெரியுமா?

பழைய நாணயங்கள் பற்றி இங்கு பிரஸ்தாபித்து படித்த பொழுது நினைவுக்கு வந்தது.

இவைகள் யாவும் அதிகமாகவே பலரிடம் இருக்கின்றன. இது ஏதோ அபூர்வ வஸ்து என்கிற பாணியில் வரும் விளம்பரங்களையும் அவர்கள் தரும் ஆசை வார்த்தைகளையும் நம்புவதற்கு இல்லை என்பது எனது திடமான முடிவு. ஆனால் இப்படி செய்து அவர்கள் என்ன லாபம் பார்க்க முடியும் என்பது பற்றி நமக்கு விவரம் தெரியவில்லை. இதை ஒரு தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் மேலும் நம்முடன் தொடர்பு கொண்டு மோசடி செய்யும் சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு.

அறிவிப்புகள் பார்த்ததில்லை. 

ரூபாய் நோட்டுகள் எண்களில் 786 என்று ஆரம்பிக்கும் அல்லது முடிகின்ற நோட்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினர் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்று சில தகவல்கள் பார்த்தது உண்டு. ஆனால் சோதித்துப் பார்த்தது இல்லை. நம்பகமான செய்தியா என்றும் தெரியவில்லை.

* இதெல்லாம் போலி செய்திகள் என்றே நினைக்கிறேன்.  சில ஸ்டாம்ப்கள் மட்டும் அதிக விலைபெறும் என்று அறிவிப்பு ஒள்று குறிப்பிட்ட வட்டத்தில் வெளியாகும்.  அது போல.  ஆனாலும் சில அபூர்வ பொருட்களை வைத்திருந்தால் வாங்கிக்கொள்ள சில சோம்பேறி கோடீஸ்வரர்கள் இருப்பார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.

நீங்கள் இதை ஒரு காரணமாகத்தான் கேட்டிருப்பேர்கள் என்று நினைக்கிறேன்.  அது என்ன என்று அறிய காத்திருக்கிறேன்.

? பிறவி, மறுபிறவி இவையெல்லாம் தத்துவ ஆராய்ச்சிகளா?

அடுத்த சந்தேகம் தத்துவம் என்பதே ஆராய்ச்சி சம்பந்தப்பட்டதா ?

# தத்துவம் என்ற சொல்லே நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு  கோட்பாட்டைக் குறிப்பது தான்.

பிறவி, மறுபிறவி எல்லாமே காணும் சூழலுக்கு ஏற்ற வகையில் தரப்படும் அறிவு-தர்க்க பூர்வமான விளக்கம்தான். 

சொன்னது யார்,  எப்படி அறிந்து கொண்டார் என்ற கேள்வி வரக்கூடாது என்றுதான் "வேதம் ரிஷிகளுக்கு உணரச் செய்யப் பட்டதாக" சொல்லப் பட்டது.

*********************************************

கீதா சாம்பசிவம் : 

பத்துக்குழந்தைகள் இருந்தால் கூட அம்மா/அப்பாவிற்கு ஒரு சில குழந்தைகளே அல்லது குழந்தையே மிகப் பிடித்தமானவராக அமைவது ஏன்?

# சில விருப்பு வெறுப்புகளுக்குக் காரணங்கள் என்று எதுவும் இருக்காது. அல்லது அவை நம் கண்களுக்கு /அறிவுக்குப் புலப்படாது.


கே. சக்ரபாணி சென்னை 28: 

1. நீங்கள். திருமணத்திற்கு முன்  யாரையேனும்  காதலித்தது  உண்டா.  ஒருதலை காதலாக இருந்தாலும் சரி. மனைவிக்கு  தெரியாமல்  சொல்லமுடியுமா? 

# மனைவிக்குத் தெரியாமல் சில இருக்கலாம்.  அதை மனைவி இப்போது தெரிந்து கொள்ள வாய்ப்பளிப்பது சரியல்ல என்பது என் திடமான நம்பிக்கை.

& திருமணத்திற்கு முன்பாக யாரை எல்லாம் காதலித்தேன் என்று எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எண்ணி முடியவில்லை. 

2.இப்போதெல்லாம்  இளம்  தம்பதிகள்  தங்கள். கணவரை  பெயர்வைத்து  கூப்பிடுகிறார்கள்.   நீ.   வா.   போ.    என்று  பேசுகிறார்களே  அதுபற்றி ..

# இருவரும் ஒத்துப் போனால் எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொள்ளலாம்.‌

& 'டேய் பேமானி, பொறம்போக்கு'  என்று எல்லாம் கூப்பிடாமல் இருந்தால் சரிதான்! 

3. சில சமயங்களில் கடைகளில்  பொருட்கள்  வாங்கியபின். நான்  கொடுத்த  பணத்திற்கு. மீதி  பணம்  கொடுக்கும்போது  அதிகமாக  கொடுத்துவிட்டால்  திருப்பி  கொடுத்துவிடுவேன்.   இதேபோல் அனுபவம் தங்களுக்கு வந்ததுண்டா  என்ன செய்தீர்கள்?

# கொடுத்ததும் உண்டு கொடுக்காமல் எடுத்துக் கொண்டதும் உண்டு.  என்ன தொகை எந்த வயதில் என்று கேட்காதீர்கள் !

& சிறு வயதில் திரும்பக் கொடுத்தது இல்லை. சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நியாயமாக எனக்கு வரவேண்டிய மீதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதிகம் கொடுக்கப்பட்டதை திரும்பிக் கொடுத்துவிடுவேன். 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

புதிதாக வாங்கிய கல் சட்டியை உடனே பயன்படுத்தக் கூடாது, பழக்க வேண்டும் என்கிறார்கள். பழக்குவதற்கு புது கல்சட்டியில்  அரிசி கழுவிய கழுநீரை ஊற்றி வைக்க வேண்டும், வென்னீரை ஊற்றி வைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். வென்னீர் ஓகே, கழநீருக்கு விஞ்ஞான பூர்வ காரணம் உண்டா?

# இதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது என்று நம்பப்படுகிறது.

கல் சட்டியின் மேற்பரப்பு: புது கல் சட்டியின் மேற்பரப்பில் சிறிய துளைகள் இருக்கும். இவை உணவுடன் தொடர்பு கொள்ளும் போது உணவில் கல் துகள்கள் கலக்க வாய்ப்புள்ளது.

 கழுநீர் ஒரு இயற்கையான சுத்திகரிப்பான். 

கழுநீர் கல் சட்டியின் மேற்பரப்பில் இருக்கும் தூசி, மண் மற்றும் பிற அசுத்தங்களை உறிஞ்சிக்கொள்ளும்.

அரிசிக் கழுநீரை ஊற்றி வைப்பதால், கல் சட்டியின் மேற்பரப்பு மென்மையாகி, உணவுடன் தொடர்பு கொள்ளும் போது உணவில் கல் துகள்கள் கலப்பது குறைகிறது. வென்னீர் கூட கல் சட்டியின் மேற்பரப்பில் உள்ள எந்தவொரு பாக்டீரியாவையும் கொல்ல உதவும்.

ஆக, கழுநீர் மற்றும் வென்னீரை ஊற்றி வைப்பது என்பது கல் சட்டியைப் பயன்படுத்துவதற்கு முன் அதை சுத்திகரித்து, அதன் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஒரு அந்தக்கால  முறை.

இது ஒரு பாரம்பரிய நம்பிக்கை.

புதன் கிழமை அல்லது வியாழக் கிழமைகளில் எ.பி.யில் மீம்ஸ் கிரியேட் பண்ணுவது, வீடியோ எடிட்டிங் போன்ற விஷயங்களை கற்றுத்தரலாமே! 

# தெரிந்தவர்கள் முன் வந்தால் தாராளமாகச் செய்யலாம்.‌

&: 

அப்போ இனிமே நியூஸ் ரூம் பகுதியில் நீங்க, மீம்ஸ் வடிவத்தில் நியூஸ் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

இதோ நீங்கள் கிரியேட் பண்ணிய  முதல் மீம்ஸ்! 

= = = = = = = =

KGG பக்கம் :

kgs நினைவுகள் தொடர்கிறது .. 

1957 ஆம் வருட சமயத்தில் kgs நாகை தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். 

அம்மா + கைக்குழந்தை(என் தங்கை), அக்கா, விசு(அண்ணன்), நான் - எல்லோரும் கோவில், சினிமா என்றெல்லாம் செல்லும் சமயத்தில், அவர் எங்களோடு கலந்துகொள்ளமாட்டார். அவர் ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டு (பாடப் புத்தகம் , ஆனந்த விகடன் , கல்கி அல்லது இரவல் வாங்கப்பட்ட  Illustrated weekly என்று ஏதாவது ஒன்று!) வீட்டிலேயே இருப்பார். 

சினிமா டிக்கெட் என்ன கட்டணமோ அதை மட்டும் வாங்கி, தன்னுடைய உண்டியலில் போட்டு வைத்துக்கொள்வார். 

பள்ளிக்கூட + பாலிடெக்னிக் படித்த நாட்களில் அவர் பார்த்த சினிமாக்கள் மிக மிகக் குறைவு! 

30.6.2024 அன்று (அதாவது அவர் இறப்பதற்கு 45 நாட்கள் முன்பு) அவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்புகொண்டு அவர் அந்த நாட்களில் பார்த்த சினிமா பற்றிய விவரங்கள்  நான் கேட்டபோது .. அவர் அனுப்பிய பதில் : 

School days .. 

Mother india Vth std

Kalyaanam பண்ணியும் brahmachaari 7th

அடுத்த வீட்டுப்பெண் 

ராம பக்த ஹனுமான் 1957 ix holidays with kgy in ooty

சபாஷ் மீனா VDP film club

Elementary schoolil வருடம் ஒரு படம் - (அநேகமாக இவை பள்ளிக்கூட மாணவர்களை concession கட்டணத்தில் பள்ளி நிர்வாகம் அழைத்துச் சென்ற படங்கள் என்று நான் (kgg) நினைக்கிறேன். 

அந்தக் காலத்தில், வீரபாண்டி பானைக் கடையிலிருந்து  (+ தயிர் விற்பனை நிலையம்) வாங்கப்பட்ட மண் உண்டியல் நாங்கள் (அண்ணன்கள், அக்கா, நான்) எல்லோரும் ஆளுக்கு ஒன்று வைத்திருந்தோம். சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக எங்கள் அப்பா எங்களுக்கு வாங்கிக் கொடுத்திருந்தார். 


ஊரிலிருந்து பெரிய அண்ணன்கள் வந்துபோகும்போதும், அப்பா ஜெ மு சாமி ஜவுளிக் கடை ஆடிட்டுக்காக வெளியூர் செல்லும்போதும், எங்கள் உண்டியலில் காசு சேரும். 

அண்ணனுக்கு இரண்டு அணா, அக்காவுக்கு ஓர் அணா, சின்ன அண்ணன் (விசு) உண்டியலில் அரை அணா, என்னுடைய உண்டியலில் ஒரு ஓட்டைக் காலணா இவைகள் வந்து சேரும்! 

படம் பார்க்காமல், வேறு செலவுகள் செய்யாமல் kgs அவர் உண்டியலில் சேர்த்த காசை என்ன செய்தார்? 

(தொடரும்) 

+ + + +

ரீட்டா & மீட்டா 07 

1) ஆனந்த் ரீத்திகா திருமணம்; ஆனந்தின் முன்னாள் காதலி ரீட்டாவிடமிருந்து மிரட்டல் கடிதம். 

2) ஆனந்த் எழுதிய காதல் கடிதங்களை திரும்ப அவனிடமே சேர்ப்பிக்க பத்து லட்ச ரூபாய் அனுப்பச் சொல்கிறாள் ரீட்டா. 

3) ஆனந்த் பத்து லட்ச ரூபாயை, ரீட்டாவுக்கு அனுப்புகிறான். ஆனந்த் எழுதிய கடிதங்களை அனுப்பி வைக்கிறாள் ரீட்டா. இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதம், ரீட்டாவிடமிருந்து !

4) மேலும் இருபது லட்ச ரூபாய் கேட்கிறாள் ரீட்டா. மீட்டாவின் ஆலோசனைப்படி, 'வேறு வழியில்லை - ரீட்டாவைக் கொல்வதுதான் ஒரே வழி' என்று முடிவு எடுக்கிறான் ஆனந்த். 

5) தடயம் இல்லாமல் நடந்த கொலைகள் பற்றி - மீட்டா சொல்லும்போது CV235 பற்றி குறிப்பிடுகிறது. 

6) ஆனந்த், ரீத்திகா கெமிக்கல்ஸ் - சென்னை சார்பில் CV235 ஆர்டர் செய்துவிட்டு, அதை வாங்குவதற்கு சென்னை கிளம்பினான். 

கொஞ்சம் வம்பு .. 

சென்ற வார கமெண்ட் : 

சில சமயம், தேர்ந்த எழுத்தாளர்களின் கதையை விட காமிக்ஸ் அதிக சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி செவ்வாயை ஓரம் கட்டுகிறது ரீட்டா&மீட்டா.. 

ரீட்டா & மீட்டா எழுதுபவரின் பதில் : " ஆக, இந்தக் கதையை எழுதுபவர், தேர்ந்த எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்! மேலும், இது ஒரு காமிக்ஸ் என்றும் சொல்லிவிட்டீர்கள்! ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் !! 

இனி .. 

சென்னை வந்த ஆனந்த், ரீத்திகா கெமிக்கல்ஸ் வந்து, மறுநாள் கூரியர் டெலிவரி - CV235 பார்சலைப் பெற்றுக்கொண்டான். 

ரீட்டா வசிக்கும் புதிய வீடு, ஊரப்பாக்கம் பகுதியில்தான் உள்ளது என்று ஆனந்த் முன்பே (ரீட்டா அனுப்பிய கூரியர் விலாசத்திலிருந்து ) கவனித்து பதிவு செய்து வைத்திருந்தான். ஆனால் ரீட்டாவின் இருப்பிடத்திற்குச் செல்லவில்லை. 

CV235 ஜாடியை எடுத்துக்கொண்டு, வாடகைக் காரில், நேரே ஊரப்பாக்கம் நர்சரி சென்றான். காரை விட்டு இறங்குவதற்கு முன்பு, தன்னுடைய அடையாளங்களை மறைக்கும் விதமாக தன்னுடைய தோற்றத்தில் சில மாற்றங்களை செய்துகொண்டான். கூலிங் கிளாஸ், தொப்பி, டை இல்லாமல், கோட் அணியாமல் -- என்பது போன்ற சில மாற்றங்கள். பிறகு, வாடகைக் காரைக் கட்டணம் செலுத்தி, திருப்பி அனுப்பினான். 

நர்சரி உள்ளே சென்று, அங்கு ஒரு பெரிய பூந்தொட்டியில், மூன்று ரோஜா மலர்கள் உள்ள ரோஜா செடியைப் பார்த்து, அதைத் தேர்ந்தெடுத்தான். அது என்ன விலை என்று விசாரித்தான். நர்சரி ஆள் சொன்ன விலையைக் கொடுத்தான். 

நர்சரி ஆளிடம், 'ரோஜா செடிக்கு எப்பொழுதெல்லாம் தண்ணீர் விடவேண்டும்? ' என்று கேட்டான். 

நர்சரி ஆள், 'காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஒருமுறை, மாலையில் சூரியன் மறைந்ததும் ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும்' என்றார். மேலும், 'இன்று காலை தண்ணீர் ஊற்றிவிட்டோம். இனிமேல் இன்று இரவு  தண்ணீர் விட்டால் போதும் ' என்றார். 

ஆனந்த், அந்த நர்சரியில் இருந்த pebbles (கூழாங்கற்கள்) விலை விசாரித்து, வாங்கி, அவற்றை தொட்டியில் உள்ள செடி மண்ணுக்கு மேலாக இரண்டு அங்குல உயரத்திற்குப் போடச் சொன்னான். 

ஆனந்த், நர்சரி ஆளிடம், "இதை நான் சொல்லும் விலாசத்திற்கு அனுப்பிவிடுகிறீர்களா? " என்று கேட்டான். 

நர்சரி ஆள் 'சரி' என்றார். 

"ஒரு பேப்பர் கொண்டுவாருங்கள்,  விலாசம் எழுதித் தருகிறேன். அந்த விலாசத்திற்கு உடனடியாக அனுப்புங்கள். இது ஒரு surprise gift. அதனால்தான் உங்களை அனுப்பச் சொல்லிக் கேட்கிறேன்" 

" புரிகிறது சார். வேலன்டைன்ஸ் டே சமயத்தில் இப்படி பலரும் ரோஜா அனுப்புவார்கள். நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்களோ அவருக்குப் பிறந்தநாளா ? " 

" ஆமாம், ஆமாம். அவருக்கு நாளைக்கு ஒரு ஸ்பெஷல் டே! நீங்கள் பேப்பர் கொண்டு வாருங்கள். " 

நர்சரி ஆள் அலுவலகத்திற்கு உள்ளே சென்றதும், ஆனந்த், தன்னிடம் இருந்த CV235 ஜாடியை எடுத்து, அதன் பகுதிகளை இணைத்து, மேலே உள்ள குமிழ்ப் பகுதியை நீக்கிவிட்டு, கைக்குட்டையால் CV235 ஜாடியின் மேல் பகுதியை நன்றாகத் துடைத்துவிட்டு, அதை ரோஜாச் செடியின் அருகே, கூழாங்கற்களுக்கு உள்ளே ஓர் அங்குல ஆழத்தில்  ஜாடியின் வாய்ப் பகுதி இருக்கும்படி நிமிர்த்து வைத்து கூழாங்கற்களால் ஜாடி வெளியே தெரியாமல் மூடினான். 

நர்சரி ஆள் கொண்டு வந்த டெலிவெரி நோட்டுப் புத்தகத்தில், ரீட்டாவின் விலாசம் எழுதினான். டெலிவெரி மெசேஜ் பகுதியில் " Dear R! Here is a surprise gift to you for the special day - from 'you know who' என்று எழுதினான். டெலிவெரி ஆர்டர் எண்ணை தன்னுடைய மொபைல் போனில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டான். டெலிவெரி செய்யும் ஆளிடம், அவருடைய பெயரைத் தெரிந்துகொண்டு, 'இந்த ரோஜாத் தொட்டியை அந்த வீட்டு வரவேற்பு அறையில் வைத்துவிட்டு, எப்பொழுது தண்ணீர் ஊற்றவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துவிடுங்கள். மீதி விவரங்களை அவர் பார்த்துக்கொள்வார்.' என்று சொன்னான். பூந்தொட்டி வாங்கிய நர்சரியின் ஃபோன் நம்பர் வாங்கி வைத்துக்கொண்டான். 

டெலிவெரி வண்டி புறப்பட்டுச் சென்ற பிறகு, வேறு ஒரு கார் - ola  மூலம் பதிவு செய்து, அந்தக் காரில் சென்னை விமானநிலையம் சென்றான். 

ஹைதராபாத் விமானத்திற்குக் காத்திருந்த நேரத்தில், நர்சரிக்கு ஃபோன் செய்து, டெலிவெரி ஆர்டர் எண் சொல்லி, அதை டெலிவெரி செய்தாயிற்றா? என்று கேட்டான்.  

'செய்துவிட்டோம் சார்' 

'டெலிவெரி செய்தவரிடம் பேசவேண்டும்' 

' சொல்லுங்க சார். '

'ரோஜாத் தொட்டியை அந்த விலாசத்தில் கொடுத்துவிட்டீர்களா?'

'கொடுத்துவிட்டேன் சார்.'

'வாங்கிக் கொண்டவர் என்ன சொன்னார்? ' 

'வாங்கிக் கொண்ட பெண்மணி, "கொஞ்சம் இருங்க, ரீட்டாவுக்கு ஃபோன் செய்து, இதை என்ன செய்வது என்று கேட்கிறேன்" என்று சொல்லி போனில் பேசிவிட்டு, என்னிடம், " சரி இதை வரவேற்பறையில் வைத்துவிடுங்கள். ரீட்டா வந்தவுடன் அதைப் பார்த்துக்கொள்கிறாளாம்" என்று சொன்னார்கள்' 

ஆனந்த், ஹைதராபாத் செல்லும் விமானத்தில்   ஏறி,  நிம்மதியாக அமர்ந்துகொண்டான். 

(தொடரும்) 

44 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. கேள்விகளை கேட்டவர்களுக்கும் , அதற்கு தக்க பதில்களை கூறியவர்களுக்கும் வாழ்த்துகள்.

    புது விதமாக சிந்திக்கும் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரின் மீம்ஸ் பகுதியும் சூப்பராக உள்ளது.

    உங்கள் பக்கமும் சுவாரஸ்யமாக இருக்கிறது நல்ல பழக்கமான சேமிப்பின் அவசியத்தை சிறு வயதிலேயே உணர்ந்து கொண்ட தங்கள் அண்ணாவை பற்றி அறிந்து கொண்டேன். அவரது நல்ல செயல்களை நினைவாக கூறி வரும் தங்களுக்கும் பாராட்டுக்கள். அந்த சேமிப்புப் பணத்தை அவர் என்ன செய்தார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளேன்.

    ரீட்டா, மீட்டா கதை நன்றாகப் போகிறது. சுவாரஸ்யமாக செல்லும் கதையின் அடுத்தப்பகுதி என்ன என்று அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. 22- ஆகஸ்டில் மசால் தோசை 50 பைசா பதிவில் பழைய ரூபாய் நோட்டுகள் பற்றி ஒரு கேள்வி. 29- ஆகஸ்டில் அதற்கு ஒரு Reminder.
    அதற்கும் உங்கள் சரியென்ற சம்மதம். அதற்குப் பின்பும் தங்கள் பார்வையில் கேள்வி படவில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி பேஸ்ட்டில் விட்டுப் போயிருந்தது.  சேர்த்து விட்டேன் ஜீவி ஸார்...   

      நீக்கு
  4. புதன் கிழமை காலையில் எழுந்து காபி குடித்தவுடன்
    முதலில் ஆவலாக பார்ப்பது எங்கள் ப்ளாக் கேள்வி பதில் பகுதிதான். வாசகர்கள் கேள்விகளுக்கு நல்ல பதில்கள் அளித்து திருப்தி படுத்துகிறீர்கள்.என்னுடைய
    கேள்வி களுக்கு பதில் அளித்தமைக்கு நன்றிகள்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகள் கேட்டதற்கு நன்றி.

      நீக்கு
    2. அன்புள்ள நண்பர் சக்ரபாணிக்கு ஸ்ரீராம் அநேக நமஸ்காரம்.  இப்பவும் நாங்கள் நலம்.  உங்கள் நலமறிய அவா...  

      நிற்க..

      எபியில் எல்லா கிழமைகளிலும் பதிவுகள் வருகின்றன.  ஏன் மற்ற கிழமைகளிலும் உங்கள் கருத்துகளை நீங்கள் வழங்கக் கூடாது?

      இப்போ உட்காரலாம்!

      நீக்கு
    3. கேள்விகள் கேட்கப்படுவதற்காகவே.
      பதில்கள் சொல்லப் பௌவதற்காகவே.

      சக்ரபாணி ஸார்! உங்கள் பதிலுக்காக ஒரு கேள்வி.

      உங்கள் அல்லது உங்கள் மூதாதையர் சொந்த

      நீக்கு
    4. (தொடர்ச்சி)

      சொந்த ஊர் கும்பகோணம் தானே!

      நீக்கு
    5. சக்ரபாணி கோவில் குடந்தையில் மட்டும்தான் இருக்கிறது என்கிறீர்களா?

      நீக்கு
    6. ஜீவி சார் கேள்வி "கும்பகோணம் தானே?" ஒரு தனி பாணி. ரோஜாவில் அரவிந்தசாமியின் பாஸ் ரோஜாவிடம் இது போன்ற கேள்விகளை கேட்பாரே அது போன்றது. மேலே உள்ள கேள்விக்கு "இலலை அல்லது ஆமாம் என்று மட்டும் சொல்லாமல் உண்மையான ஊரையும் சொல்லி விடுவார்.. அது தான் போலீஸ் முறை!

      நீக்கு
    7. சக்ரபாணி என்பது கும்பகோணத்துக்காரர்களின் அல்லது கும்பகோணத்தில் வாழ்ந்தவர்களின் ஒரு பிரசித்தி பெற்ற பெயர்.

      (ஊருக்குத் தெரிந்த ஒரு உதாரணம்)

      எம்.ஜி. ஆரின் சகோதரர் பெயர்.

      நீக்கு
  5. //நீங்கள் இதை ஒரு காரணமாகத் தான்ல்
    கேட்டிருப்பீர்கள் என்று..//

    விசேஷ காரணம் ஏதுமில்லை. அந்த வியாழன் பதிவில் நாணயங்கள் பற்றி பேசப்பட்டதால் நினைவுக்கு வந்த விஷயம் இது. அவ்வளவு தாந்.

    வேண்டுமானால் இந்த பழைய நோட்டு பரிமாறல் விஷயத்தைக் கருவாக வைத்து செவ்வாய்க்கு ஒரு
    சிறுகதை எழுத கோரிக்கை வைக்கலாம் நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக.... கோரிக்கை வைத்து விட்டேன். எழுதி அனுப்புங்கள்...

      நீக்கு
    2. எபியில் பலர் பார்வையில் படுகிற மாதிரி ஒரு கோரிக்கையை வைப்பது எப்படி?
      கோரிக்கை ஒன்றை உதாரணமாகக் கொடுத்து பதில் சொல்லுங்கள்.

      ஹி..ஹி.. அடுத்த புதனுக்கான கேள்வி
      ஐயா..

      நீக்கு
  6. கேள்வி பதில் பகுதி வளர்ந்து வருவது சிறப்பு. kgs பற்றிய நினைவுகளும் மறக்க முடியாதவை.
    மீம்ஸ் எ பி யில் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதற்குத்தான் X மற்றும் முகநூல் உள்ளனவே. மீம்ஸ் வந்தால் அரசியலும் கூடவே நுழையும் என்று நினைக்கிறேன். ஆலோசிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா வெ சொல்லியிருப்பது, மீம்ஸ் கிரியேட் செய்வது எப்படி, வீடியோ எடிட்டிங் எப்படி செய்வது என்று கற்றுத் தரும் educational post.

      நீக்கு
  7. எதிர்ப்பக்கம் இருக்கும் உங்கள் பிளாக் எங்கள் விருப்பம் பதிவொன்றில் கும்பகோணம் கும்பேஸ்வரர் சுவாமி
    தரிசன ஊர்வலம் ஒன்றிருக்கிறது.
    முதல் நபராக
    யார் கண்டுபிடிப்பார்
    என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைலில் எ பி படிப்பவர்களுக்கு அந்த விவரங்கள் காணக் கிடைக்காது. டெஸ்க்டாப் லாப்டாப் ஆகியவற்றில் படிப்பவர்களுக்குத்தான் அந்த side bar காணக் கிடைக்கும்.

      நீக்கு
    2. வலையில் பார்க்க--வை க்ளுக்கிப் பார்ல்கலஏ!

      நீக்கு
    3. வலையில் பார்க்க யாரும் பயன்படுத்துவது இல்லை.

      நீக்கு
    4. நான் பெரும்பாலும்
      அப்படித் தான் செய்கிறேன்.
      இவ்வளவும் கைபேசி உபயோகத்தில் தான்.

      நீக்கு
  8. கேள்வி பதில்கள் நன்று. கேஜிஜி பக்கம் மற்றும் ரீட்டா பகுதிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. சில சமயங்களில் கடைகளில் பொருட்கள் வாங்கியபின். நான் கொடுத்த பணத்திற்கு. மீதி பணம் கொடுக்கும்போது அதிகமாக கொடுத்துவிட்டால் திருப்பி கொடுத்துவிடுவேன். இதேபோல் அனுபவம் தங்களுக்கு வந்ததுண்டா என்ன செய்தீர்கள்?//

    சமீபத்தில் கூட நடந்தது, அதிகமாகக் கொடுத்திருந்தாங்க. எண்ணிப் பார்த்துவிட்டு பொருட்களையும் செக் செய்துவிட்டு அதிகம் கொடுத்ததைத் திரும்பக் கொடுத்தேன். மற்றொன்று வாங்கிய ஒரு பொருளுக்கு விலை போடாமல் பில். கொண்டு காட்டி அந்தப் பொருளுக்கும் விலை கொடுத்துவிட்டு வந்த அனுபவமும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கேஜிஎஸ் அண்ணா அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் வாங்கியிருப்பார் இல்லைனா அறிவு சார்ந்த புத்தகங்கள்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ரீட்டா மீட்டாவில் இன்று வரும் சில உரையாடல்கள் காட்டிக் கொடுத்துவிடும் போல இருக்கிறதே!!!

    சஸ்பென்ஸ் தொடர்கிறது!!...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! எந்த உரையாடல்கள்? யாரைக் காட்டிக் கொடுக்கும்?

      நீக்கு
  12. பழைய நாணயங்கள், பலநாட்டு நாணயங்கள் என்னிடம் நிறைய உண்டு.

    சில்க் கடித்த ஆப்பிளை ஒரு லட்சம் கொடுத்து ஏலம் எடுத்த பணக்கார கிறுக்கர்களும் தமிழ்நாட்டில் உண்டு.

    பதிலளிநீக்கு
  13. கேள்விகளும், பதில்களும் அருமை.
    அண்ணாவின் நினைவு பகிர்வு அருமை.சேமிப்பு பற்றிய செய்தியும் அண்ணா எதற்கு சேமித்தார் அந்த பணத்தில் என்ன வாங்கினார் ஆறிய ஆவல்.
    கதை நன்றாக போகிறது.
    அவருக்கே ரோஜாத் தொட்டி திரும்பி வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஜாத் தொட்டி ஆனந்துக்கு திரும்ப வர வாய்ப்பு இல்லை. ஆனந்த் தன்னுடைய அடையாளங்களை + விவரங்களை எங்கும் கொடுக்கவில்லை.

      நீக்கு
  14. நண்பர்களுக்கு வணக்கங்கள்.
    ஆமாம் நான் கும்பகோணம் தான். என்வீட்டிற்கு எதிரில் தான் சக்ரபாணி ஸ்வாமி கோயில் உள்ளதுஅதனால் தான் எனக்கு சக்ரபாணி என்று பெயர் வைத்தார்கள். எனது அப்பா பெயர் கூட. கும்பேஸ்வரன்தான். கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் பெயர் கொண்ட கோவில்
    நான் கொஞ்சம் ஹ்யூமர் சென்ஸ் உடையவன் என்பதால் என் கேள்விகள் யதார்த்தமாகவும்
    தமாஷாகவும் இருக்கும்.
    ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
    என்னை பற்றி அறிய விரும்பிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
    வணக்கம்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  15. தங்கள் பதிலுக்கு நன்றி
    சக்ரபாணி ஸார்.
    பெயரைச் சொல்லு நான்
    ஊரைச் சொல்வேன்
    என்ற கலை ஓரளவு
    எனக்கு கைவசமானது
    அதனால் தான் கேட்டுப் பார்த்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. Kgg பக்கம் நன்று.

    ரீட்டாமீட்டா சுவாரசியமாக செல்கிறது அடுத்து காண......

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!