சனி, 21 செப்டம்பர், 2024

தைரிய பாட்டி மற்றும் நான் படிச்ச கதை

 

பல்லடத்தில், கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி மீட்கப்பட்ட நிலையில், அவரது தைரியத்தை கண்ட போலீசார் வியப்படைந்தனர்.  பல்லடம், செட்டிபாளையம் ரோடு, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி 70; விவசாயி. இவரது மனைவி நாச்சம்மாள், 65. கண்பார்வை கோளாறு இருப்பதால், சமீபத்தில் தான் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கண்ணாடி அணிந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, நடந்து சென்றபோது, பார்வை சரியாக தெரியாத நிலையில், அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தார்.  நாச்சம்மாளை காணாத குடும்பத்தினர் அவரைத் தேடியபடி சத்தம் போட்டு தேடி வந்தனர். இதற்கிடையே, கிணற்றில் விழுந்த நாச்சம்மாள் கூப்பிடும் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. ஆனால், நாச்சம்மாள் கிணற்றில் விழுந்ததை அறிந்த நாய், குரைத்ததை கேட்டு, அவர் கிணற்றில் விழுந்ததை குடும்பத்தினர் உறுதி செய்தனர்.  உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கிய தீயணைப்பு படை வீரர்கள், நாச்சமாளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  நாச்சம்மாள் கிணற்றில் விழுந்ததை அறிந்த நாய், குரைத்ததை கேட்டு, அவர் கிணற்றில் விழுந்ததை குடும்பத்தினர் உறுதி செய்தனர்.  போலீசார் கூறியதாவது:கண்பார்வை தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்த நாச்சம்மாள், சிறிதும் பயப்படாமல் தைரியமாக இருந்துள்ளார். அவர் கிணற்றில் விழுந்ததை அறிந்த குடும்பத்தினர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியதும், 'சரி...சரி வரட்டும்,' என, நாச்சம்மாள் சாவகாசமாக பதில் அளித்துள்ளார். மேலும், தீயணைப்புத்துறை வரும் வரை எந்த கூச்சலும் போடாமல், மீட்பு பணிக்கு ஒத்துழைத்துள்ளார். 65 வயதான பாட்டியின் தைரியம் வியப்பினை ஏற்படுத்தியது.இவ்வாறு போலீசார் கூறினர்.


====================================================================================================

மருத்துவ வரலாற்றில் சென்னை மருத்துவர்கள் சாதனை 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வேக்வம் கிளீனர்... குட்டியாக உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்தார் பீகார் மாணவர்!


உலகின் மிகச்சிறிய வேக்வம் கிளீனர் உருவாக்கிய பீகார் மாணவர் தபலா நடமுனி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த 23 வயது மாணவர் தபால நடமுனி. இவர் பல்வேறு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது, உலகின் மிகச்சிறிய வேக்வம் கிளீனர் உருவாக்கி, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது விரல் நகத்தை விட சிறியது. அதன் குறுகிய அச்சு 0.65 செமீ (0.25 அங்குலம்) உள்ளது.  இவர் இதனை உருவாக்க இரண்டு ஆண்டுகள் செலவிட்டுள்ளார். ஏற்கனவே இவர் உருவாக்கிய, வேக்வம் கிளீனர் சாதனத்தை மறுவடிவமைப்பு செய்து, வெறும் 0.65 செ.மீ., அளவுள்ளதாக மாற்றியுள்ளார். 'எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த சிறிய கிளீனரைப் பார்த்து வியந்தனர். ஆசிரியர்கள் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர். இது மிக சிறிய அழகான படைப்பு என்று என்னிடம் கூறினர்' என்று தபால நடமுனி தெரிவித்தார்.  வேக்வம் கிளீனரில் நான்கு வோல்ட் அதிர்வு மோட்டார் மூலம் இயக்கப்படும் ஒரு சிறிய சுழலும் விசிறி, தூசி துகள்களை எளிதில் அகற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

======================================================================================================================================================================

நன்றி JKC ஸார் 

====================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

அரைகுறைக் கதைகள்-1

 கதையாசிரியர்: கொனஷ்டை

கொனஷ்டை இயற்பெயர் S.G. ஸ்ரீநிவாஸாச்சாரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகிலுள்ள செருக்கை என்னும் சிறு கிராமமாகும். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலைமகள் இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் ஆர். சூடாமணி தனக்கான தமிழை இவரிடமிருந்து பெற்றுள்ளார்.

இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளராகக் கருதப்படுகிறார். ஹாஸ்யக் கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.

முன்னுரை:

இன்றைய பதிவாக ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதலாம் என்று விரும்பினேன்.. அந்த ஆராய்ச்சிக்கு நேரம், விவரங்கள் சேகரிப்பு எனறு நிறைய தேவைப்படுகிறது. ஆகவே என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது கொனஷ்டை என்ற புனை பெயர் கண்ணில் பட்டது. கொனஷ்டைக்கு அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் கலைமகளில் வந்ததாகத் தெரிகிறது.

[கொனஷ்டை என்றால் குதர்க்கம்  கொள்ளலாம்.  ஏடாகூடம், ஏட்டிக்குப் போட்டி போன்ற சொற்களும் பொருந்தும் - ஸ்ரீராம் ]

இன்றைய கதை ஒரு புராணக்கதையையும், அந்த புராணக்கதையை ஒரு நாடகம் ஆக்கி ஆசிரியருக்கு பிடித்த  முடிவையும் உட்படுத்தி எழுதிய புனைவு ஆகும்.

கதை எழுதிய காலம் 1946க்கு முன். எ பி வாசகர்களில் ஜீவி அய்யாவைத் தவிர  வேறு யாரும் பிறந்திருக்காத காலம். அன்றைய தமிழ் நடை, பிறமொழி கலப்பு, வாக்கிய அமைப்பு போன்றவற்றை பொக்கிஷமாக நினைத்து ரசித்து வாசிக்கலாம். .

ஆசிரியர் இக்கதையில் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுகிறார். ஒன்று புராணக் கதைகளை பாமரரும் புரிந்துகொள்ளும்படி தருவது. அந்த புராணக்கதையை எப்படியும் திரிக்கலாம், நாடகமாகவும் மாற்றலாம் என்பதையும் வெளிப்படுத்துவது.

ஆசிரியர் நீதிபதியாக இருந்தவர், ஆகையால் தீர்ப்பு எழுதுவது போன்று வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து கதையை நகர்த்துகிறார்.

இந்த கதை இரண்டு பகுதிகளாக வெளி வரும். முதல் பகுதியில் யயாதி, தேவயானி புராணக் கதை இருக்கும். இரண்டாம் பகுதியில் அதை ஒட்டிய ஒரு நாடகம் -(ஆசிரியர் எழுதியது) இருக்கும். கதையின் சில பாகங்களை வெட்டி சுருக்கியிருக்கிறேன்.  தை sirukathaigal.com இல் இருந்து எடுக்கப்பட்டது..

இக்கதையை வாசிக்கும்போது எனக்கு அப்பாதுரை சார் எழுதிய புனைவு தைவாதர்சனம் நினைவில் தோன்றியது. மேலும் அவர் அரைகுறைக் கதைகள்  நிறைய எழுதியுள்ளார். (நாரயண நாராயண)

அரைகுறைக் கதைகள்-1

சிநேகிதன் பலராமன் : அரை குறைக் கதைகளா? யாருக்கு என்ன உபயோகம் ?

கொனஷ்டை : இப்பொழுது அரைகுறையாய் இல்லை. புராணங்களில் சரியாய் விவரிக்காமலும் முடிக்காமலும் விட்டுவிட்டார்கள். அவைகளை 

பலராமன் : அவைகளை நீ புராணத்திற்குச் சமானமாகப் பூர்த்தி செய்துவிட்டாய் போலும்!

கொனஷ்டை : போயும் போயும் புராணத்திற்குச் சமானமாய்த்தானா இருக்கவேண்டும்? அதற்கு மேலாகவே-

பலராமன் : என்ன விஷயம்!

கொனஷ்டை: நவீனத்திற்கே சமானமாக இருக்கும். வாசித்துப் பார்த்தால் தெரிகிறது.

தேவயானி

பகுதி 1/2

அசுரர்களின் குரு சுக்கிராசார்யர். அவருடைய மகள் தேவயானி. சில விஷயங்களில் தகப்பனைக் கொண்டவள். லாவண்யத்தில் அவருக்கு ஏற்ற பெண் தேவயானி. சுக்கிராசார்யருக்கு எப்பொழுதாவது கோபாவேசம் வந்து விடும். வந்துவிட்டால் கோபத்தை அடக்குகிற எண்ணத்தையே அவர் அறியார். “பிடி சாபத்தை!” என்று தான் வீரிடுவார். இவ்விஷயத்திலும் பெண் தகப்பனாரைக் கொண்டவள்.

தேவயானிக்கு, ‘தினம் ஒரு சினம்என்றே சம்பிரதாயமாயிருந்தது. சில சமயம், தகப்பனார் மாதிரி சபிக்கவும் சபிப்பாள்.

இளம் பருவத்தில் அவருடைய சிஷ்யனான கசனிடத்தில் காதல் கொண்டாள். தன்னுடைய சௌந்தர்யத்தில் பூர்ண நம்பிக்கை உள்ளவளாதலால், தன்னை விவாகம் செய்துகொள்ளும்படி அவனைக் கேட்க மனம் துணிந்தாள். அவனோ, “நீ என்னுடைய குருவின் புத்திரியாகையால் என் சகோதரிக் குச் சமானம். உன்னை நான் மணக்க மாட்டேன்என்று மறுத்துவிட்டான். இவ்விதம் தன் வேண்டுகோளைத் தட்டித் தன்னை அவமதித்ததற்காக, தேவயானி அவனை உடனே சபித்தாள். அவனும் சுக்கிர வீக்ஷண்யமுள்ளவனாதலால், பதிலுக்கு அவளைச் சபித்தான். ‘நீ ஒரு பிராமணப் பெண்ணாயிருந்தும் இவ்வளவு அகங்காரம் பாராட்டுகிறபடியால், ஒரு க்ஷத்திரியனையே புருஷனாக அடைவாய்என்று சபித்தான்..

அசுரர்களுக்குக் குருவல்லவா சுக்கிராசார்யர்?. அவர்களுக்கு அரசன் ஒருவன் உண்டே, அவனுடைய பெயர் வ்ருஷபர்வன். அவனுடைய மகள் சர்மிஷ்டை. அவள் தேவயானியின் வயசு உடையவள். அழகிலும் கோபத்திலும் மேற்படி மேற்படியே. பார்வைக்கு இவ்விருவரும் சிநேகிதிகளாயிருந்தார்கள்.

தேவர்கள் எந்தச் சமயத்திலும் எங்கேயும் போகக்கூடுமல்லவா? வாயு பகவான் ஒரு நாள் இவ்விருவரும் ஸ்நானம் செய்து கொண்டிருக்கையில், நதிக்கரைக்குச் சென்று, அவர்கள் தனித்தனியே கழற்றி வைத்திருந்த ஆடைகளைச் சிதறச்செய்து, சிலவற்றை இடம் மாற்றி வைத்துவிட்டார்.

இவ்விளையாட்டின் பலன் என்னவென்றால், கரை ஏறினவுடன், சர்மிஷ்டை தவறுதலாகத் தேவயானியின் ஆடையைத் தனதென்று எண்ணி அணிய எடுத்தாள். உடனே தேவயானியின் கோபாக்கினி கிளம்பிவிட்டது. சர்மிஷ்டையைக் கடிந்து பேசினாள். சர்மிஷ்டை பதிலுக்குக் கடிந்தாள். ஒருவருக்கொருவர் வரம்பு கடந்து பேசினார்கள். அநேக விஷயங்களில் சர்மிஷ்டை தேவயானிக்கு ஒப்பானவள் என்றாலும் ஒருவிதத்தில் உயர்ந்தவள். தேகவன்மை அதிகம். தேவயானிக்குப் பால்யத்திலேயே சுக்கிராசார்யர் செய்திருக்க வேண்டிய கடமையை அன்று சர்மிஷ்டை செலுத்தினாள். கன்னத்தில் ஓங்கி அறை வைத்தாள். அதோடு நிறுத்தவில்லை. அங்கே இருந்த ஒரு கிணற்றில் அவளைக் குண்டுக்கட்டாகக் கட்டித் தள்ளிவிட்டாள்.

நல்ல வேளையாக, கிணற்றில் இடுப்பு ஆழமே தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள்ளே இருந்து தேவயானி கூக்குரலிட்டாள். அதற்குத் துணையாகச் சர்மிஷ்டை வெளியே நின்றபடி அவயமிட்டாள். “ஹே தாத, ஹே தாத!” (அப்பர் அப்பா ) என்று தேவயானி கத்தினாள். ரே ரே பாந்த’ (ஓ வழிப்போக்கரே) என்று சர்மிஷ்டை வீரிட்டாள். இருவரில் சர்மிஷ்டைதான் உரக்கக் கத்தினாள். அது தான் பலன் பெற்றது.

சந்திரவம்சத்து அரசர்களில் ஐந்தாம் மன்னனான யயாதி மகாராஜா, விதிவசமாக அருகில் வேட்டையாடிக் கொண்டிருந்தவர், இவ்வரவத்தைக் கேட்டு ஓடிவந்தார். க்ஷணத்தில் விஷயத்தை அறிந்துகொண்டார். நல்ல யௌவனம், பலவான். கிணற்றிற்குள் கையை நீட்டித் தேவயானியைத் தூக்கி வெளியேற்றினார்.

இக்காலத்து நக்ஷத்திரமாயிருந்தால் தேவயானி அவர்மேல் சாய்ந்து விழுந்து மூர்ச்சை அடைந்திருப்பாள். நாடக மேடையின் ராணியாயிருந்தால், அவள் மூர்ச்சையடையாமல் பக்கத்தில் நிற்கும் தோழியிடம், “இவர் யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ?” என்று பதம் பாடிக் கேட்டிருப்பாள். தேவயானி இரண்டும் செய்யவில்லை. யயாதியை நோக்கி, ”நான் ஓர் அன்னிய ஸ்திரீ. நீ எவ்வாறு மனம் துணிந்து என்னைத் தொட்டு இழுத்தாய்?” என்று சீறினாள். அந்த அற்புதக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், கையைப் பிசைந்து கொண்டும் பேந்தப் பேந்தவிழித்துக்கொண்டும் யயாதி நின்றார்.

சிறிது நேரத்திற்குள் கூட்டம் கூடிவிட்டது. சுக்கிராசார்யர், வ்ருஷபர்வன், மந்திரிமார்கள் எல்லோரும் சேர்ந்தார்கள். நியாயம் பேசித் தீர்மானித்தார்கள். தேவயானியைச் சமாதானம் செய்தார்கள். அவளை யயாதியே விவாகம் செய்து கொள்வது என்று நிச்சயித்தார்கள். இவ்விதம் கசன் அளித்த சாபம் நிறைவேறியது. சர்மிஷ்டை செய்த குற்றத்திற்குத் தண்டனையாக, அவள் சிறிது காலம் தேவயானியின் அடிமையாக வேலை செய்யவேண்டியது என்றும் விதித்தார்கள். யயாதி தம்முடைய குதிரையின்மேல் தேவயானியைத் தூக்கிவைத்துச் சுக்கிராசார்யரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு தம்முடைய நாட்டுக்குச் சென்றார். மற்றொரு குதிரையின்மேல் சர்மிஷ்டை பின் சென்றாள்.

தேவயானி யயாதியின் பட்டமகிஷியாய் விளங்கினாள். ராஜ்யத்தில் (அரசன் உட்பட) யாவருக்குமே, அவளிடத்தில் கொஞ்சம் பீதி.

பெரியோர்களின் தீர்ப்புப் பிரகாரம், குறிப்பிட்ட காலத்திற்குச் சர்மிஷ்டை அடிமை வேலை செய்துவந்தாள். அழகில் அவள் தேவயானிக்கு ஒப்பானவள் என்று முன்பே நாம் சொல்லியிருக்கிறோமல்லவா? இவ்வுண்மையை யயாதியும் ஒரு நாள் உணர்ந்தார். அவளுடைய தண்டனையின் காலம் கழியவே, சர்மிஷ்டையை ரகசியமாய் மணம் புரிந்து, வெகு தூரத்தில் தாம் வேட்டையாடப் போகும் ஒரு காட்டின் மத்தியில், நந்தவனத்தை ஏற்படுத்தி, அதிலுள்ள ஒரு லதா கிருகத்தில் அவளை வசிக்கச் செய்தார்.

நாளடைவில் தேவயானிக்கு இரண்டு குழந்தைகளும், சர்மிஷ்டைக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தன. ஐந்தும் ஆண் பிள்ளைகள்.

பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்ளுவான் என்பது பொய்யாகுமா? ஒரு தடவை வேட்டைக்குப் போன அரசனைத் தேவயானி பின் தொடர்ந்து சென்றாள்.. சர்மிஷ்டையின் மூன்று பிள்ளைகளையும் கண்டாள். முகத் தோற்றத்திலிருந்தே சந்தேகம் தோன்றிவிட்டது. ” நீங்கள் யார்?” என்று வினவினாள். ”நாங்கள் யயாதி மகாராஜாவின் இரண்டாவது பார்யையாகிய சர்மிஷ்டையின் பிள்ளைகள். பட்டமகிஷியாகிய தேவயானி என்பவள் மிகவும் பொல்லாதவளாம். ஆகையால் எங்களுடைய க்ஷேமத்திற்காக இங்கே தனியாக வைக்கப்பட்டிருக்கிறோம்என்று சொல்லி அவளுடைய சந்தேகத்தைத் தெளிவாக்கினார்கள்.

தன் பர்த்தாவின் நடத்தை, சர்மிஷ்டையின் பொல்லாத்தனம், தன்னுடைய துக்கம், இவற்றைத் தேவயானி தன் தகப்பனாரிடம் சாங்கோபாங்கமாய்த் தெரிவித்தாள். சுக்கிராசார்யர் தயக்கமுற்றார்.

ஓர் அரசன் இரண்டு மூன்று பத்தினிகளை மணந்துகொள்வது உலகத்தில் சர்வ சாதாரணம். அவ்விதம் யயாதி செய்ததை எங்ஙனம் குற்றமாகப் பாராட்டுவது? தவிர, ‘சர்மிஷ்டையைச் சில காலம் அடிமையாய்ப் போகும்படி தாங்கள் முன்பே விதித்தது அதிகக் கடூரமான தண்டனையல்லவா?’ என்று மகரிஷியின் மனச்சாக்ஷி சில சமயம் அவரைத் துன்பப்படுத்தியதுண்டு. அவள் இந்தமட்டும் யயாதியால் கௌரவப்படுத்தப்பட்டுச் சௌக்கியம் அடைந்தாள் என்று கேட்பதில் அவருடைய மனத்திற்குச் சற்று ஆறுதல் ஏற்பட்டதே ஒழியக் கோபம் உண்டாகவில்லை. ‘சர்மிஷ்டையின் மேல் கோபிப்பதில் என்ன நியாயம்? அக்கட்டழகியைத் தாங்கள் தாமே அரசனிடத்திற்கு அனுப்பியது!’ இவ்வித மெல்லாம் எண்ணினார். ஆனால் தம் புதல்வியின் சுபாவத்தை நன்குணர்ந்தவராகையால், இந்தத் தர்மங்களையெல்லாம் அவள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பது அவருக்கு நிச்சயம். அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று அறியாமல் தம் தாடியை உருவிக்கொண்டே நிற்கையில், அவள் புதியதாய் எடுத்துச் சொன்ன ஒரு வாதம் அவருடைய காதில் விழுந்தது. இதைப் பௌராணிகர் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். ஏனென்றால், அது முதல் தரவாதம், ரிஷிகள் ஒப்புக்கொள்ளக்கூடியது.

அவருடைய பக்ஷபாதத்தைப் பார். அப்பா! எனக்கு மாத்திரம் இரண்டே பிள்ளைகள். சர்மிஷ்டைக்கு மூன்று பிள்ளைகள்!”

ஹா! பக்ஷபாதமா! மனைவிகளின் மத்தியில் புருஷன் வித்தியாசம் பாராட்டலாமா? என்ன துர் நடத்தை!

யயாதி!” என்றார். “பிடி சாபத்தை! கொழுப்பினாலல்லவா இவ்விதம் செய்யத் துணிந்தாய்? இன்னும் அறுபது நாழிகைக்குள், உன் வயசு இரட்டித்து நீ ஒரு தொண்டு கிழமாய்ப் போவாயாக!” என்று சபித்தார்.

சொந்தப் பெண்ணின் பர்த்தாவை ஒரு தொண்டு கிழமாக மாற்றுவதில் யாருக்கு என்ன லாபமென்று எனக்குப் புரியவில்லை. மத்ஸ்ய புராணக்காரரும் இதைத் தெளிவாக்கவில்லை. அது எப்படியிருந்தால் என்ன? சாபம் பலிக்கப் போவது நிச்சயம் என்று அறிந்த யயாதி மாமனாருடைய காலில் விழுந்தார். மன்னிக்கவேண்டுமென்று கெஞ்சினார். தவிர, இம்மாதிரியான சாபத்தின் பேதைமையைக் குறித்து நமக்குத் தோன்றுகிற சந்தேகம் ஒருகால் அச்சமயம் அந்த மாமனாருக்கும் தோன்றியதோ என்னவோ, அவருடைய மனம் இளகிற்று. “என் வாக்குப் பொய்யாகாது. ஆனால் அதற்கு விமோசனமாக ஒரு வரம் அளிக்கிறேன். வேறு யாராவது தன்னுடைய யௌவனத்தை உனக்குக் கொடுக்கச் சம்மதித்தால், நீ உன்னுடைய கிழத்தனத்தை அவருக்குக் கொடுத்து அவருடைய யௌவனத்தை நீ அடையலாம். இது சம்மதமா என்று உன்னுடைய பிள்ளைகளையே கேட்டுப் பார்என்று சொல்லிவிட்டு, தேவயானி பேன் வார்த்தை பேசுவதற்கு முன் ஆசிரமத்தினுள் பிரவேசித்துக் கதவைப் படீர் என்று சாத்திகொண்டார்.

யயாதியும் தேவயானியும் அரண்மனையைத் திரும்பி அடைந்தார்கள். ரகசியம் வெளிப்பட்ட பிறகும் தோட்டத்தில் வசிப்பானேன் என்று சர்மிஷ்டையும் இங்கு வந்து சேர்ந்தாள்.

யயாதி தம்முடைய ஐந்து புதல்வர்களையும் வருவித்து, தம்மைப் பீடிக்கப்போகும் கிழத்தனத்தையும் அவர்களுடைய யௌவனத்தையும் ஈடு செய்து கொள்ளும்படி அவர்களை ஒவ்வொருவராகக் கேட்டார். முதல் நான்கு பிள்ளைகளும் தலைக்கு ஒரு விதமாய்ப் பதில் சொல்லி மறுத்தார்கள்.

என்னைக் காட்டிலும் மற்றவர்கள் தாமே உனக்குச் செல்வப் பிள்ளைகள்? அவர்களைக் கேட்டுக்கொள்என்றான் ஒருவன். ‘கிழவனாய் விட்டால் பிறகு உலகத்தில் என்ன சுகம் உண்டு? அதை நீயே சொல்லுஎன்றான் மற்றொருவன். “முதலில், குதிரை ஏற வேண்டுமென்றால் ஏற முடியுமா?” என்று கேட்டான் மூன்றாவது பிள்ளை. “ஆகாரம்  தான் வேண்டியிருக்குமா?” என்றான் நான்காம் பையன்.

இவ்விதம் மறுத்துப் பேசினதுமல்லாமல், தகப்பனாருடைய விபரீத வாஞ்சையைத் தங்களுடைய தாய்மாரிடம் தெரிவிக்கப் போய்விட்டார்கள். கெடு வைக்கப்பட்ட அறுபது நாழிகை தீரும் சமயமாய் விட்டது. ஏக்கமடைந்த யயாதி தம்முடைய ஐந்தாம் குமாரன் (சர்மிஷ்டையின் மூன்றாம் புதல்வன்) ஆகிய புருவை அங்கலாய்ப்புடன் பிரார்த்தித்தார்.

அவன், “அப்பாவின் இஷ்டப் படி மாற்றிக்கொள்ள எனக்குச் சம்மதம்என்றான். இவ்விதம் சொல்லி வாய் மூடியவுடன் அவன் தொண்ணூற்றெட்டு வயது நிரம்பி, முதுகு கூனி, கண் பஞ்சடைந்து, வாய் குழறிய ஒரு கிழவனாகக் காணப்பட்டான். சுக்கிர சாபம் அவனைப் பிடித்தது. யயாதியோ, தம்முடைய சரியான நாற்பத்தொன்பது வயதை இழந்து பதினெட்டு வயதுள்ள யுவனாகச் சோபித்தார்; அதுதான் புருவின் வயது.

இதற்கு மேல் நடந்த விஷயத்தை மத்ஸ்ய புராணக்காரர் வெகு சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறார். “இதன் பிறகு யயாதி ஆயிரம் வருஷகாலம் யௌவனத்தை அநுபவித்து, ஒரு க்ஷணம் போல் கழித்துவிட்டு, மறுபடியும் பரிவர்த்தனை செய்து கொண்டு கிழத்தனத்தை வகித்து, புருவுக்கே பட் டம் கட்டிக்கொடுத்து, தாம் வனவாசம் செய்யப் போனார்என்று முடித்துவிடுகிறார்.

ஆயிர வருஷகாலமாவது! யௌவனமாவது! இதற்கு யார் வரம் கொடுத்தார்? பரிவர்த்தனை ஒன்றுக்குத்தானே வரம்? ஆயிர வருஷம் ஜீவித்திருக்க, யயாதிக்காவது புருவுக்காவது வரம் ஏது?

அது போகட்டும். இரண்டாம் தடவை யுவனாகப் போன யயாதிக்கும், எல்லோருக்கும் உள்ள, நாளுக்கு நாள் வயசு வர்த்தித்துச் சுபாவமான கிழத்தனம் வராதபடி தடுத்தது யார்?

இக்கேள்விகளுக்கு விடை தேடியவர்களில் ஒருவராகிய, ஓஹையோ சர்வகலாசாலையில் ஸம்ஸ்க்ருத பண்டிதர் அலோயா என். பிம்பிள் என்பவருடைய அபிப்பிராயத்தில், மத்ஸ்ய புராண சுலோகத்தின் தாத்பர்யம், “யயாதி யௌவனத்தை அடைந்து ஆயிர வருஷகாலத்தை ஒரு க்ஷணம் போல் கழித்தார் என்பதல்ல ; ” யௌவனத்தை அடைந்த யயாதிக்கு ஒரு க்ஷணத்தைக் கழிப்பது ஓர் ஆயிர வருஷம் போலிருந்ததுஎன்பதே. யயாதி அவ்வளவு சங்கடப்பட்டார் என்பது தான் கருத்து.

இதென்ன விபரீதம்! நவயௌவனம், ஒரு ராஜ்யம், இரண்டு களத்திரம், ஐந்து பிள்ளைகள் இவற்றைப் படைத்த பாக்கியவானுக்கு, ஆயுட் காலத்தை உல்லாசமாய்ப் போக்குவதில் தடை என்ன? இதன் மர்மத்தை அறியவேண்டுமானால், விசித்திர தீபிகை என்கிற கிரந்தத்தின் இருபத்தேழாம் அத்தியாயத்தை வாசித்துப் பாருங்கள் என்று ஓஹையோ வித்துவான் சொல்லுகிறார்.

தேவயானி


அதைப் படிக்க இரண்டே நிமிஷம் வேண்டியிருக்கும். ஆனால் கிரந்தம் கிடைப்பது வெகு பிரயாசை யாகையால், அந்த அத்தியாயத்தைக் கீழே எடுத்து எழுதியிருக்கிறேன். ஓர் எச்சரிக்கை. அதில் பாத்திரங்களின் பெயர்கள் வேண்டுமென்று மாற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது, யயாதிக்குப் பதிலாக யவனேந்திரனென்றும், தேவயானிக்குத் தைவமணி என்றும், இவ்விதமே மற்றவர்க்குரிய அடையாளங்களையும் அது மறைத்திருக்கிறது. இதற்குக் காரணம் சரியான பெயர்களை வெளியிட்டால், அக்காலத்தில் ஆண்டுவந்த சந்திரவம்சத்தரசனுக்குக் கோபம் நேர்ந்து கிரந்தகர்த்தா தன் காது, மூக்கு இவைகளை இழக்க நேரும் என்கிற பயமாயிருக்கவேண்டும். நமக்கு இக்காலத்தில் அவ்விதமான பயம் இல்லையாகையால் நான் அந்தப் பொய்ப் பெயர்களை உடைத்துச் சரியான நாமங்களையே எழுதியிருக்கிறேன். இனித் தயை செய்து வாசியுங்கள்:

விசித்திர தீபிகை

இருபத்தேழாம் அத்தியாயம்

யயாதிர் யுவா பவதி (யயாதி யுவனாகிறார்)

[காட்சி: யயாதியின் அரண்மனையில் பூஜைக் கூடம். தேவயானியும் சர்மிஷ்டையும் ஓடி வருகிறார்கள். யயாதியையும் புருவையும் கண்டு பிரமிக்கிறார்கள்].

தேவயானி: (கர்வமான குரலில்) உங்களை யார் இங்கே வரவிட்டார்கள்? மகாராஜா எங்கே?

யயாதி: நான் தான் இதோ இருக்கிறேனே?

தேவயானி: (கர்வம் மேலிட) நீ எங்கே இருக்கிறாய் என்று நான் கவலைப்படவில்லை. மகாராஜா எங்கே?

யயாதி : நான் தான் யயாதி. நான் சொல்வதைக் கேள்

சர்மிஷ்டை : இவனைப் பார்த்தால் என் பிள்ளை புருவின் சாயலாயிருக்கிறது. ஆனால் புரு அல்ல.

தேவயானி : (வெடுக்கென்று) யாரோ ஒரு பைத்தியக்கார வாலிபன் நான் தான் மகாராஜா என்கிறான். அவனைப் பார்த்தால் உன் பிள்ளை சாயலாய் இருக்கிறதா? ஒருவேளை எல்லாப் பைத்தியக்காரர்களும் உன் பிள்ளைகளின் சாயலாகத்தான் இருப்பார்களோ!

யயாதி : இதோ பார், தேவயானி

தேவயானி : என்ன? தைர்யம் மீறிப் போகறதோ? என்னுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறாயா?

புரு: (சர்மிஷ்டையை நோக்கி) அம்மா, நான் தான் உன்னுடைய பிள்ளை புரு. இவர்தாம்

சர்மிஷ்டை : நூறு வயசில் எனக்குப் பிள்ளை இல்லை. இது என்ன ஆச்சர்யம்! துணை சேர்ந்து இரண்டு பைத்தியக்காரர்கள் வந்துவிட்டார்களே

யயாதி : (தேவயானியை நோக்கி) நீ என்னை நம்பவில்லையா? நம் இருவருக்கு மாத்திரம் தெரிந்த ரகசியம் ஒன்றை உன் காதில் சொல்லுகிறேன். அப்பொழுதாவது நான் யயாதி என்று நம்புவாயா? (அவளுடைய அருகில் செல்லுகிறான்.)

தேவயானி : அதிகப் பிரசங்கி! கிட்டே வராதே!

புரு: (சர்மிஷ்டையை நோக்கி) அம்மா, நான் எல்லாம் தெளிவாய்ச் சொல்லுகிறேன். (படபடப்பாய் அவளிடம் போக எத்தனிக்கிறான். விருத்தாப்பியத்தினால் கால் தடுமாறிக் கீழே விழுகிறான்.)

[இச்சமயம் நாரதர் பிரவேசிக்கிறார்.]

தேவயானியும் சர்மிஷ்டையும்: (ஏககாலத்தில்) வாருங்கள் மகரிஷியே. (ஒருவரை ஒருவர் நோக்கி) இரண்டு விநாடி வாயைப் பொத்திக்கொண்டு இரேன். (நாரதரை நோக்கி, ஏககாலத்தில்) இந்த (இரண்டு பைத்தியக்காரர்களையும் பாருங்கள்

நாரதர்: பைத்தியக்காரர்களாவது? இவன் யயாதி, இவன் புரு.

தேவயானியும் சர்மிஷ்டையும்: (ஏககாலத்தில்) என்ன சொல்லுகிறீர்கள்!

நாரதர் : (தேவயானியை நோக்கி) உனக்குக் கூடத் தெரியாதா? நீதான் கூடவே இருந்தாயே? முதலில் நீ முறையிட்டதன் மேல், உன் தகப்பனார் யயாதியை இரட்டித்த வயதுள்ள கிழவனாகப் போகும்படி சபித்தாரே.

சர்மிஷ்டை : அப்பாவிடம் போய்க் கோள் சொன்னாளா? கேட்பானேன்? குடும்பத்திற்கு அனர்த்தம் வருவிக்க வேண்டுமென்றால், அப்பாவைக் கூப்பிட்டுச் சபிக்கச் சொல்வதற்கு எப்பொழுதும் தயார்!

தேவயானி: எல்லாம் கிடக்க, நீ என்ன சொல்லுகிறது, என் புருஷனைத் திருடிவிட்டு?

யயாதி: ஐயோ, போனது போகட்டும்; சண்டை போடாதேயுங்களேன்!

சர்மிஷ்டை: நான் ஒரு புருஷனையும் திருட வில்லை. எதற்காகத் திருடவேண்டும் ? உன் மாதிரியா ? மற்றவர்களுடைய ஆக்கினைக்குப் பயந்து எவனாவது கல்யாணம் செய்து கொண்டால் தான் உண்டு என்று இருந்தேனா? அவராக என்னை வலுவில் தேடிவந்தார். உண்டோ, இல்லையோ, கேட்டுப் பாரேன்!

யயாதி: ஐயோ, சண்டை பிடிக்கா

நாரதர்: (தேவயானியை நோக்கி) பிறகு உன் தகப்பனார் சாபவிமோசனம் கொடுத்தார்

தேவயானி: அப்படியானால் இவர் தம்முடைய சொந்த வயசை அடையாமல் இப்படி ஒரு பையனாகப் போவானேன்?

நாரதர்: என்ன செய்யலாம் ? அவசரத்தில் சுக்கிராசார்யர் கொடுத்த வரம், மற்றொருவனோடு வயசைப் பரிவர்த்தனை செய்து கொள்வதற்குத்தான். அதற்குப் புரு மாத்திரமே சம்மதித்தான். அவனுடைய பதினெட்டு வயசு இவருக்கு வந்து விட்டது! இவருடைய சாப வயசான தொண்தூற்றெட்டு அவனுக்குப் போய்விட்டது!

சர்மிஷ்டை: சபிக்கிறதற்கு அவளுடைய அப்பா; சாபத்தை அனுபவிப்பதற்கு என்னுடைய பிள்ளை! ஐயோ! என் புருவுக்கு இனிமேல் யார் பெண் கொடுப்பார்கள்?

தேவயானி : இனிமேல் மகாராஜாவுடன் பட்ட மகிஷியாகிய நான் ஊர்வலம் போனால், எல்லோரும் பார்க்க, அவருக்குப் பதினெட்டு வயசும் எனக்கு முப்பத்தெட்டு வயசுமாகவா இருக்கும்? அவரை எனக்குத் தம்பி என்று எல்லோரும் சொல்லுவார்களே!

சர்மிஷ்டை: தம்பி என்று சொல்லுவானேன்? பிள்ளை என்றே சொல்லுவார்கள். அவரை மடியில் வைத்துக்கொண்டு ஊர்வலம் போய் வாயேன்!

யயாதி : ஐயோ! சண்டை பிடிக்காதேயுங்களேன்!

தேவயானி : அவள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! என் பிள்ளைக்குத் தொண்ணூற்றெட்டு வயசு ஆகிவிடவில்லையே! நான் அவ்வளவு கிழவி அல்லவே!

சர்மிஷ்டை: அவள் சொல்லுவதைக் கேளுங்கள்! இந்த ஆச்சர்யத்தை! இப்பொழுதுதான் தனக்கு முப்பத்தெட்டு வயசாம்! போன ஆடிக்குச் சரியாய் நாற்பத்துமூன்று வயசு நிறைந்துவிட்டது. ஆடிக்குத் தை, எனக்கு ஆறு மாதம் மூத்தவள் : எனக்குத் தெரியாதோ?

தேவயானி : இந்தாடீ! நீ இனிமேல் என் பேச்சை எடுத்தாயானால் தெரியுமா?

யயாதி : ஐயோ! சண்டை பிடிக்கா

சர்மிஷ்டை : என்ன தெரியும்? கசனைச் சபித்தாற் போல் என்னையும் சபித்துவிடுவாயோ?

யயாதி : ஐயோ! சண்டை

சர்மிஷ்டை: கசனை எதற்காக இவள் சபித்தாள் என்று உங்களுடைய பட்ட மகிஷியைச் சற்றுக் கேளுங்களேன். (யயாதியும் நாரதரும் தனியே பேசிக் கொள்ளுகிறார்கள்.) என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று யாரையாவது நான் கெஞ்சினேனா? மாட்டேனென்று யாராவது என்னைத் தள்ளினார்களா?

தேவயானி : உன்னை ஒருவர் தள்ளுவானேன்? நீதான் மற்றவர்களைக் கிணற்றில் தள்ளுவதில் கெட்டிக்காரியாச்சுதே!

(சர்மிஷ்டையும் தேவயானியும் ஒருவரை ஒருவர் நோக்கிப் பல்லை நெறித்துக்கொள்ளுகிறார்கள்.)

யயாதி : ( புருவை நோக்கி) புரு, இங்கே வா. நாம் மறுபடியும் வயசை மாற்றிக்கொள்ளுவோம்.

புரு : அப்படியே.

(புரு முன் போல யுவனாகிறான். யயாதி. தொண்ணூற்றெட்டு வயசுள்ள கிழவனாகிறான்.)

யயாதி : போதும், இந்தச் சொற்ப காலம் யுவ 18  இல் இருந்த எனக்கு ஒவ்வொரு க்ஷணமும் ஓர் ஆயிரம் வருஷம் போல் இருந்தது. எனக்கு ராஜ்யமும் வேண்டாம், யௌவனமும் வேண்டாம். ஒரு களத்திரம் உள்ளவனுக்கு யௌவனம் வேண்டும். இரண்டு களத்திரம் படைத்தவனுக்கு வெறும் வனமே நல்லது. நாரத ரிஷியே, நீங்கள் இருந்து புருவுக்கே பட்டம் சூட்டிவைக்க வேண்டும். நான் வனவாசம் செய்யப் போகிறேன். யாராவது எனக்கு ஒரு கைத்தடி கொடுங்கள்.

தேவயானியும் சர்மிஷ்டையும்: (ஒருவரை யொருவர் நோக்கி, ஏககாலத்தில்) எல்லாம் உன்னாலே தான்.

(எல்லோரும் கலைகிறார்கள்.)

இருபத்தேழாம் அத்தியாயம் முற்றிற்று.

இதைப் படித்த பிறகு, புராண சுலோகத்திற்கு ஓஹையோ நிபுணர் கூறும் அன்வயமே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுடைய அபிப்பிராயம் எப்படியோ?

பின்னுரை.

//இரண்டு களத்திரம் படைத்தவனுக்கு வெறும் வனமே நல்லது. நாரத ரிஷியே, நீங்கள் இருந்து புருவுக்கே பட்டம் சூட்டிவைக்க வேண்டும். நான் வனவாசம் செய்யப் போகிறேன். யாராவது எனக்கு ஒரு கைத்தடி கொடுங்கள்.//

(களத்திரம்: மனைவிகள்? ஐயோ அப்படியானால் தற்போதுள்ள பல அரசியல் வாதிகள் வன வாசம் செல்லவேண்டியிருக்குமே!)

இது ஆசிரியர் தீர்மானித்த ஒரு நவீன முடிவு. இப்படியொரு முடிவு உண்டு என்று ஆரம்பத்திலேயே ஆசிரியர் கூறி இருக்கிறார்.

இக்கதையின் முதல் பகுதி கதை வியாக்யானம். இரண்டாவது பகுதி நாடகம். இது ஒரு தனி உத்தி.

வாசித்தவர்கள் முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் இடையில் ஒரு நடை வித்தியாசம் காணலாம்.   பிறமொழி சொற்கள் கலப்பு, வாக்கிய அமைப்பு  இவற்றில் ஒரு மாற்றம் உள்ளதையும் காணலாம் பிற்பகுதி அன்றைய புதிய கதையமைப்பில் எழுதப்பட்டுள்ளது.

வைசம்பாயனர் எழுதிய முடிவு

நகுஷ மைந்தனான மன்னன் யயாதி, தனது மூத்த மகன் யது உட்பட அனைத்து மகன்களையும் மிலேச்சராகும்படி விட்டு, தனது இளைய மகன் பூருவை அரியணையில் அமர்த்திவிட்டு, துறவு வாழ்க்கை வாழ, கானகத்திற்குள் சென்றான்.(10)

மன்னன் இதைப் போன்ற வாழ்வை ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். பேசா நோன்பிருந்து, தனது மனத்தை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு, தூங்காமல் ஒரு முழு வருடத்தைக் கடத்தினான். அடுத்த ஒரு வருடம் நான்கு புறமும் நெருப்பு வளர்த்து, மேலே கதிரவன் காயக் கடுமையான தவமியற்றினான். காற்றை மட்டுமே உண்டு, ஆறு மாதங்கள் ஒரு காலில் நின்றான். அந்த மன்னன் தனது புனிதமானக் கடமைகளின் பயனாகத் தேவலோகத்தையும், பூலோகத்தையும் தனது புகழால் மறைத்து தேவலோகத்துக்கு உயர்ந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(14-16)

இந்திரன், "ஓ ஏகாதிபதியே! உன்னைவிடப் பெரியவர்களையும், உனக்கு இணையானவர்களையும், சிறியவர்களையும், அவர்களது உண்மையான தகுதிகளை அறியாமல் நீ மதிக்கவில்லையாகையால், நீ உனது தவத் தகுதிகளை இழந்தாய். நீ தேவலோகத்திலிருந்து விழவேண்டியது தான்" என்றான்.(3)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதன் காரணமாக யயாதி தேவலோகத்தில் இருந்து விழுந்தான்.

விழும்போது அஷ்டகனை கண்டு தனது சிறப்பு சாதனைகளை பட்டியலிட்டார் யயாதி.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படியே தனது சாதனைகளுக்காகச் சிறப்புவாய்ந்த அந்த மன்னன் யயாதி, தனது இணை வழித்தோன்றல்களால் மீட்கப்பட்டு பூமியை விட்டு, தான் செய்த செயல்களின் புகழால் மூன்று உலகங்களையும் மறைத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்."(27)

ஊசிக்குறிப்பு.

கசன் தேவகுரு ப்ரஹஸ்பதியின் மகன். இறந்தவரை உயிர்ப்பிக்கும் ம்ருத்துஞ்ஜய மந்திரம் சுக்ராச்சார்யாருக்கு மாத்திரமே பாடம். அந்த மந்திரத்தை கற்க சுக்கிராச்சாரியாரிடம் சீடனாக 1000 ஆண்டுகள் பணி செய்து மந்திரத்தைக் கற்றான். அவ்வாறு மாணவனாக இருக்கும்போது தேவயானி அவன் மேல் காதல் கொண்டாள். அதை அவனிடம் தெரியப்படுத்தவும் செய்தாள். கசன் அக்காதலை ஏற்கவில்லை. ஆகவே தேவயானி அவன் கற்ற மந்திரம் அவனுக்குத் தேவைப்படும் சமயத்தில் பலனளிக்காமல் போகும் என்று சாபமிட்டாள். கசன் பதிலுக்கு தேவயானி ப்ராமண குலத்தவளாயினும் க்ஷத்ரியனையே  மணப்பாள் என்று சாபம் இட்டான். இதுவே யயாதி தேவயானியின் திருமணத்திற்கு முக்கிய காரணம்.

கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

=======> கதையின் சுட்டி <=======



47 கருத்துகள்:

  1. சிறு விளக்கம்.
    நான் படிச்ச கதை பகுதி கட்டுரையை இரண்டு பகுதிகளாக பிரித்து இரண்டு வாரங்களுக்கு வரும்படி தொடரும், முன்கதை சுருக்கம் எல்லாம் போட்டுத்தான் அனுப்பியிருந்தேன். ஆனால் இரண்டு பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு இவ்வாரம் வெளியாகிவிட்டது. அதனால் முன்கதை சுருக்கம் போன்றவை அவசியமில்லாமல் உள்ளது. மன்னிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் ஒரே கதையைச் சேர்ந்தது என்பதால் ஒரு வாரம் இடைவெளி கொடுக்க மனம் வரவில்லை.  இதன் சுவாரஸ்யம் கெட்டுப்போகும்.  அதுவும் இன்றைய பகுதி வெகு சுவாரஸ்யமாய் அமைந்திருக்கிறது.  அதை இப்படி பிரித்து யாரையும் சரியாக படிக்கமாட்டாமல் செய்ய வேண்டாம் என்றே ஒன்றாக வெளியிட்டேன்.  ஒன்று, செய்கிறேன், முன்கதைச் சுருக்கத்தை நீக்கி விடுகிறேன்.  சரியா?

      நீக்கு
  2. கௌதமன் என்பது புத்தருடைய பெயர் என்றே இதுவரை நம்பியிருந்தேன். இக்கதையை வாசித்தபின் தான் கௌதமன் என்பது ஒரு ரிஷியின் பெயர் என்பதும் ஒரு கோத்திரத்தின் பெயரும் ஆகும் என்பதும் புரிய வந்தது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஒரு ரிஷியின் வழித்தோன்றல்கள் என்பதால் சகோதர சகோதரிகளாகிவிடுவர் என்ற நியதிப்படி, ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மணந்துகொள்வதில்லை. ஒரு கோத்திரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரிஷிகளுக்கும் தொடர்பு உண்டு, அதனால் அந்த கோத்திரம் கொண்டவர்களையும் மணப்பதில்லை என்ற நியதி உண்டு.

      நீக்கு
    2. ஒவ்வொரு கோத்ரமும் ரிஷியின் பெயர்கள் கொண்டவையே.  அந்தந்த கோத்ரத்தில் அபிவாதயே என்னும் சுய அறிமுகம் செய்யும்போது, ஐந்து ரிஷிகளோ, நான்கு ரிஷிகளோ,  எந்தெந்த ரிஷிகள் அந்த கோத்திரத்தில் உள்ளனர் என்பது சொல்லப்படும்.  எங்கள் கோத்திரத்தில் ஐந்து ரிஷிகள்.  நெல்லை சொல்லி இருப்பது போல சகோதரி முறை ஆகி விடும் என்பதால் ஒரே கோத்திரத்தில் மணம் செய்ய மாட்டார்கள்.  இந்தக் காலத்துக்கு இது பொருந்தாது என்றாலும் சம்பிரதாயத்தை மாற்றாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

      நீக்கு
  3. தேவயானி கசன் சுக்கிராச்சார்யார் கதை முன்னமே அறிந்தது. ஆனால் நாடகப் பகுதியை இப்போதுதான் படிக்கிறேன். இளமை திரும்பி வரும் என்பதே சாபம், மகன் வயது ஆகும் என்பதெல்லாம் சாபமில்லை. ய்யாதி முன்பிருந்த நிலையை அடைந்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையில் உள்ள லாஜிக்  ஓட்டைகளை எடுத்துக் காட்டி அதற்கு விளக்கம் தர முயன்றிருக்கிறார் கதாசிரியர்.  சட்டம் பயின்ற நீதிபதி அல்லவா?  சுவாரஸ்யமே அதுதான்.

      நீக்கு
  4. நாச்சம்மாள் அவர்களை வளர்ப்பு நாய் காப்பாற்றி இருக்கிறது , அவரும் உதவிக்கு ஆள் வரும் வரை தைரியமாக இருந்து இருக்கிறார். தைரியத்திற்கு பாராட்டுகள்
    மருத்துவர்களை பாராட்டி வாழ்த்துவோம்.
    பீகார் மாணவன், ராதாமணி அம்மாள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இரண்டு களத்திரம் உள்ளவர்களுக்கு வனம் என்றால் இன்றைய அரசியல்வாதிகள் என்று ஆச்சர்யப்படுகிறாரே... இரண்டு களத்திரங்கள் உள்ள அரசியல்வாதிகள் யார்?

    மூன்றோ அதற்கு மேலோ என்றால் அரச பதவியா?

    பதிலளிநீக்கு
  6. புராண கதை படித்து இருக்கிறேன், கொனஷ்டை அவர்களின் நாடக பாணி கதை இப்போதுதான் படிக்கிறேன். கதை பெரிதாக இருக்கிறதே என்று நினைத்தேன், இரண்டு வார கதை ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. அடுத்தவாரம் வேறு கதை படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. நிரம்ப உழைப்பு ஏற்று தயாரித்து எங்கள் வாசிப்புக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள், ஜெஸி ஸார். உங்கள் அயராத பணி போற்றுதற்குரியது. நாளை வருகிறேன், நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஆம். இன்றைய பகுதி நல்ல தேர்வுகளில் ஒன்று. இந்தப் பகுதிக்காக JKC ஸார் எத்தனையெத்தனை கதைகள் படிக்கிறாரோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

      நீக்கு
  8. தேவயானி என்று ஒரு சினிமா
    நடிகை பெயர் பார்க்கும் போது
    இது என்ன பெயர் என்று நினைத்தேன்.
    இப்போது தெறிந்துகொண்டேன்
    அசுரகுரு சுக்ராச்சாரியாரின்
    மகளின் பெயர் என்று
    நன்றி ஐயா.

    இதேபோல் அனுஷ்கா
    தமன்னா பெயர்களும்
    ஏதேனும் புராணக்கதைகளில்
    உள்ளதா என சற்று
    ஆராய்ச்சி செய்து வெளியிட்டால் நன்றாக
    இருக்கும்

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. 'The Indian name Anushka (अनुष्का) means "ray of light" in Sanskrit.' என்று கூகிள் ஆண்டவர் கூறுகிறார்.

      நீக்கு
    2. தமன்னா என்றால் ஆசை, விருப்பம் என்று பொருள் கொள்ளலாம்.  

      பன்னா கி தமன்னா ஹை ஹீரா முஜே மில் ஜாயே என்றொரு பாடல் இருக்கிறது.  பன்னாவுக்கு அதாவது பன்னா எனும் பெண்ணுக்கு வைரம் தனக்கு கிடைக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது என்று பொருள். 

      நீக்கு
    3. தெய்வானை பெயர் சக்ரபாணி சாருக்கு நினைவுக்கு வரவில்லையா? தெய்வானை என்ற பெயர் செட்டியார் சமூகத்தில் உண்டு.

      நீக்கு
    4. பன்னா இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற வைர சுரங்கம். இப்போதும் வைரம் கிடைக்கிறது. இந்த வாக்கியத்தின் பொருள் பன்னாவின் தமன்னா என்ற வைரம் எனக்கு கிடைக்கப் போகிறது.

      நீக்கு
  9. நன்றி திரு. ஜெயகுமார் சந்திரசேகர் அவர்களே
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  10. 'சரி...சரி வரட்டும்,' என, நாச்சம்மாள் சாவகாசமாக பதில் அளித்துள்ளார்.//

    யதார்த்தம். நாச்சம்மாள் பாட்டி நல்ல தைரியசாலிதான். விவசாய குடும்பம் என்று தெரிகிறது. வாழ்க்கை அனுபவம் நிறைய இருக்குமாக இருக்கும். வளர்ப்பு நாய், பழகிய நாய் என்றால் குரைத்துக் காட்டிக் கொடுத்துவிடும்.

    மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் சாதனைதான்.

    பீகார் மாணவர் வாவ் போட வைக்கிறார். மார்க்கெட்டில் உள்ளதா? முன்பு செய்ததும் சந்தைக்கு வந்துவிட்டதா? சின்னதா இருந்தா அதன் திறன் எவ்வளவு என்பது யோசனையா இருக்கு மின் விசிறி எல்லாம் சுத்தம் செய்யும்னா..திறன் இருக்கும் என்று தோன்றுகிறது.

    ராதாமணி அம்மாவுக்குப் பாராட்டுகள்...கனரக வாகன லைசன்ஸ் வைத்திருப்பது சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. யயாதி கதை தெரியும் ஆனால் நாடம் கவடிவில் ஒரு பகுதியை இப்போதுதான் வாசிக்கிறேன். ஜாலியாக வாசிக்கலாம்

    கேள்விகள் நிறைய எழும்.

    கொனஷ்டை என்ற பெயரும் பார்த்த/கேட்ட நினைவு ஆனால் படைப்புகள் வாசித்திருக்கிறேனா என்ற நினைவு இல்லை.

    இப்படியான புராணக் கதைகளில் பிடி சாபம் என்று நிறைந்திருக்கும் கிளைக்கதைகளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கொனஷ்டை பெயருக்கேற்ப - அவர்களின் னையாண்டி இடையிடையே அவர் எழுதியிருக்கும் விதம் செம. நம்ம மனசுல எழுமே அதே.. கூடவே அந்த ஓஹையோ ஆராய்ச்சியும் சொல்லியிருப்பது புதியதாகத் தெரிங்கு கொண்ட ஒரு விஷயம்.

    பலராமன் கொனஷ்டை உரையாடல் சிரிப்பு...

    //அந்த புராணக்கதையை எப்படியும் திரிக்கலாம், நாடகமாகவும் மாற்றலாம் என்பதையும் வெளிப்படுத்துவது.//

    அதே தான் ஜெ கே அண்ணா. இது கதையில் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பண்டிதர்அலோயா என். பிம்பிள் என்பவருடைய அபிப்பிராயத்தில், மத்ஸ்ய புராண சுலோகத்தின் தாத்பர்யம், “யயாதி யௌவனத்தை அடைந்து ஆயிர வருஷகாலத்தை ஒரு க்ஷணம் போல் கழித்தார் ” என்பதல்ல ; ” யௌவனத்தை அடைந்த யயாதிக்கு ஒரு க்ஷணத்தைக் கழிப்பது ஓர் ஆயிர வருஷம் போலிருந்தது” என்பதே. யயாதி அவ்வளவு சங்கடப்பட்டார் என்பது தான் கருத்து.//

      கதைகளில் read between the lines என்பது முக்கியம் என்பதையும் குறிக்கிறது

      கீதா

      நீக்கு
  13. ஓஹையோ சர்வகலாசாலையில் ஸம்ஸ்க்ருத பண்டிதர் அலோயா என். பிம்பிள் என்பவருடைய அபிப்பிராயத்தில், மத்ஸ்ய புராண சுலோகத்தின் தாத்பர்யம், “யயாதி யௌவனத்தை அடைந்து ஆயிர வருஷகாலத்தை ஒரு க்ஷணம் போல் கழித்தார் ” என்பதல்ல ; ”யௌவனத்தை அடைந்த யயாதிக்கு ஒரு க்ஷணத்தைக் கழிப்பது ஓர் ஆயிர வருஷம் போலிருந்தது” என்பதே. யயாதி அவ்வளவு சங்கடப்பட்டார் என்பது தான் கருத்து.//

    புராணங்களில் சொல்லப்படுவதை கோட் வேர்டாகக் கொண்டு யோசிக்க வேண்டும் ...

    யயாதி பாவம் இறுதியில் இருவரின் சண்டையிலும் தவித்திருப்பான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. சர்மிஷ்டை: அவள் சொல்லுவதைக் கேளுங்கள்! இந்த ஆச்சர்யத்தை! இப்பொழுதுதான் தனக்கு முப்பத்தெட்டு வயசாம்! போன ஆடிக்குச் சரியாய் நாற்பத்துமூன்று வயசு நிறைந்துவிட்டது. ஆடிக்குத் தை, எனக்கு ஆறு மாதம் மூத்தவள் : எனக்குத் தெரியாதோ?//

    சிரித்துவிட்டேன்!!!!

    நானும் நெல்லையும் வழக்காடுவது போல!!!!!!! ஹிஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  15. இரண்டு களத்திரம் உள்ளவர்களுக்கு வனம் என்றால் இன்றைய அரசியல்வாதிகள்//

    ஹாஹாஹா ஜெ கே அண்ணா அப்ப மாதிரி இப்பவும் சாபம் விடறவங்க இருந்திருந்தா வனம் எல்லாம் இப்ப சரிப்படாது ரெசார்ட் எல்லாம் இருக்கே!!! ஜாலி ஜிம்கானாதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஸ்ரீ ராம் சார் அவர்களே
    இதில் என்னைவிட திரு. கே. ஜி. ஜி. சாருக்கு மிகுந்த சந்தோஷம் இருக்கும். என நினைக்கிறேன்.
    இனி எந்த தோஷமும் அவரை அண்டாது எனநினைக்கிறேன்

    வாழ்க வளமுடன்

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  17. இன்று எமது நாட்டு ஜனநாயகக் கடமை வாக்கு அளித்தாகி விட்டது. 😁முடிவுகள் என்னவோ ? அதிகாலை தெரியும்.

    நாச்சியம்மாள் பாட்டியின் தைரியத்தைக் பாராட்டுவோம்.

    மருத்துவர்கள்,பீகார்மாணவர்,ஜெசி ஓட்டும் பெண் இவர்களை வாழ்த்துவோம்.

    கதை நீண்ட கதையாக இருந்தாலும் சுவாரசியமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. நாச்சம்மாள் மற்றும் 11 வகை வண்டி லைசன்ஸ் பெற்றிருக்கும் ராதாமணி அம்மாவும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறவர்கள்.

    மற்ற செய்திகளும் நல்ல செய்திகள் மருத்துவர்களின் சாதனைக்கும், சிறிய வாக்குவம் க்ளீனர் உருவாக்கிய பீகார் பையனுக்கும் வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. யயாதி கதை சுவாரசியமான கதை. புராணக் கதைகள் பலவும் பல மாற்றங்களுடன் இடைச்செருகல்களுடன் சொல்லப்படுபவைதானே. ஆசிரியரும் அதைச் சொல்லி, அதற்கான தேடலில் கிடைத்த கருத்துப்படி நாடகமும் எழுதியது சிறப்புதான். கொனஷ்டை புனை பெயரே வித்தியாசமாக இருக்கிறது.

    ஜெயகுமார் சந்திரசேகரன் சார் இப்படி ஒவ்வொரு வாரமும் தேடித் தேடி கதைகள் பகிர்வதற்கும் பாராட்டுகள் சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு நன்றி துளசி சார். கதை வெளி வந்த காலத்தை கவனித்தீர்களா? நீங்களும் நானும் பிறந்திருக்கவில்லை,
      Jayakumar

      நீக்கு
  20. யயாதி கதை சுவாரசியமான கதை. புராணக் கதைகள் பலவும் பல மாற்றங்களுடன் இடைச்செருகல்களுடன் சொல்லப்படுபவைதானே. ஆசிரியரும் அதைச் சொல்லி, அதற்கான தேடலில் கிடைத்த கருத்துப்படி நாடகமும் எழுதியது சிறப்புதான். கொனஷ்டை புனை பெயரே வித்தியாசமாக இருக்கிறது.

    ஜெயகுமார் சந்திரசேகரன் சார் இப்படி ஒவ்வொரு வாரமும் தேடித் தேடி கதைகள் பகிர்வதற்கும் பாராட்டுகள் சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    நேற்று மலையிலிருந்து இங்கு ஏதோ நெட் வொர்க் ப்ராப்ளம். இன்று மதியத்திற்கு மேல்தான் ஓரளவு சரியாகி வந்துள்ளது. அதனால் தாமதமாக பதிவுகளுக்கு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. மகனுடமிருந்து யெளவனத்தைப் பெற்ற யயாதி பல வருடங்கள் (பல வருடங்கள் என்பதை ஆயிரம் வருடங்கள் என்பது அந்தக் கால பழக்கம்)வாழ்க்கையை அனுபவித்த பின், ஆசைகளை அனுபவிப்பதன் மூலம் ஒரு போதும் ஆசையை அறுக்க முடியாது, அது எரியும் நெருப்பில் விறகு கட்டையை போடுவதற்கு சமம் என்று உணர்ந்து இளமையை மகனுக்கு திருப்பி கொடுப்பதுதான் கதையின் ஹைலைட். புரூவிற்கு இத்தனை வருட அனுபவங்களோடு இளமையும் திரும்ப கிடைத்திருக்கிறதே அது பெரிய விஷயம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  23. யயாதி மகனிடமிருந்து இளமையை பெற்றுக் கொண்டான் என்றுதான் இருக்கிறதே ஒழிய, பதினெட்டு வயது இளைஞனாக ஆனான் என்று குறிப்பிட்டதாக தெரியவில்லை.
    கோணல்மானலாக சிந்தித்து ஒரு கதை. கொனஷ்டை என்று சரியாகத்தான் புனைப்பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  24. தற்காலத்தில் 'அராத்து' என்று ஒருவர் ப்ளாக் எழுதுகிறார். நான் படித்ததில்லை. முன்பெல்லாம் நீயா நானாவில் அடிக்கடி ஸ்பெஷல் கெஸ்டாக வருவார்.

    பதிலளிநீக்கு
  25. இதே ரேஞ்சில் அடுத்த வாரம் அண்ணாதுரையின் கீமாயணத்தை எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீமாயணம் அண்ணாவின் படைப்பல்ல. திருவாரூர் தங்கராசு என்னும் திராவிட கழகம் சார்ந்ததவரது
      அதை எம்.ஆர். ராதா நாடகமாகப் போட்டார்.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. நாச்சம்மாளின் தைரியம் பாராட்டத்தக்கது.

    இன்றைய கதை பகிர்வும், அருமை. முதலிலிருந்து இறுதி வரை சுவாரஸ்யமாக இருந்தது. யயாதி கதை அறிந்ததுதான். . அதையே நாடகமாகவும் மாற்றி எழுதிய விதத்தையும் எழுதியவரின் விபரங்களையும் தொகுத்து தந்த கதாசிரியரை பாராட்ட வேண்டும். மிகவும் ரசித்து படித்தேன் . இது போன்ற புராண கதைகளையும், அதன் விளக்க கதைகளையும் திரட்டி படிக்கத் தரும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. கொனஷ்டை புராணக்கதையை மாற்றி அமைக்கிறாரோ இல்லையோ புராணக்கதையில் எத்தனை விதமான கதைப்பின்னல்கள் என்று ஆச்சரியப்படத்தான் வைக்கிறது. நிகழ்ந்த்தே போலவான அந்த சிருஷ்டிப் பின்னலில் ஒரு துளி அனுக்கிரகம் எனக்குக் கிடைதாலும் போதும் என்று வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  28. இந்த வாரக் கதை எல்லோரையும் சிந்திக்க வைத்தது ஆச்சார்யம் தான். எல்லோருக்கும் நன்றி. இந்த சந்திர வம்சத்தில் தோன்றிய புருவின் பின்காமியர் தான் மஹாபாரத பாண்டவர்களும் கௌரவர்களும்.புருவின் சகோதரன் யாதவின் பின்காமிகள் யாதவர், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன்.. இது உபரி செய்தி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  29. ஒரு கதையை எழுதி முடிக்க வேண்டுமானால் இப்படிக் கொண்டு போகலாம் என்று கதாசிரியருக்கு ஆயிரம் கதவுகள் திறக்கும். அப்படித் திறந்த ஆயிரம் கதவுகளையும் ஒவ்வொன்றாக மூடும் திறமை கொண்ட புராண கதாசியர்களின் திற்மை வியக்க வைக்கிறது. அத்தனை கதவு திறப்புகளில் ஒரு கதவை மூடுவதற்குள் கொனஷ்ட்டை வியர்த்து விறுவிறுத்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு மொழியின் மேன்மையான பழஞ்சிறப்புகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு நிகழ்கால செளகரியங்க்களின் நிழலில்
    மாற்று காண்கிறேன் என்று முயற்சிப்பது வியர்த்தமே.

    கண்ணகி மதுரையை அநியாயமாய் எரிப்பானேன் என்று வெகுண்டெழுந்து மாற்றுக் கதை படைப்பதற்கு ஒப்பாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறியபடி மாற்று முடிவு ஒன்று உள்ள கதையத்தான் இப்பகுதியில் உட்படுத்த முதலில் தேந்தெடுத்தேன். "சீதை ராவணனை மன்னித்தாள்" என்று முடியும் கதை. அது பின்னர் வரலாம்.

      "சீதை ராவணனை மன்னித்தாள். அவன் பாவங்களை எல்லாம் மன்னித்தாள். திரும்பி தூரத்தில் தெரிந்த சரயூவைப் பார்த்தாள். வெள்ளை வெளேரென்ற நுரைவெள்ளத்தோடு அது சிரிப்பது தெரிந்தது. பரிபூரணமான சாந்தி அவளுள் பிரவேசித்தது."

      Jayakumar

      நீக்கு
  30. இந்த வாரத்தின் நற்செய்தியாக பகிர்ந்த அனைத்தும் சிறப்பு. கேரளத்தின் பெண்மணி (பல வித வண்டிகள் ஓட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர் குறித்த செய்தி முன்னரும் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!