புதன், 18 செப்டம்பர், 2024

பேய். பிசாசு. பூதம். ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?

 

ஜீவி: 

நான் புதன் பதிலுக்காக ஒரு கேள்வியை எழுப்புகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த புதனில் அந்தக் கேள்விக்கான பதிலை அளித்தவர் இவர்தான் என்று எப்படி நான் தெரிந்து கொள்வது? அதற்கு ஏதாவது கண்டுபிடிக்கும் வழி இருக்கா?..

# இருக்கலாம். அதை தெரிந்து கொண்டு என்ன பயன், தெரியாவிட்டால் என்ன இழப்பு ? ஒன்றுமில்லையே.

& யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை; என்ன சொல்லப்படுகிறது என்பதே முக்கியம் என்று சீன அறிஞர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே ! 

谁说的并不重要;所说的很重要。张昌

வாராவாரம் ஒரு எபி வாசகர் புதன் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் புதுமையைப் புகுத்தினால் என்ன?

# புகுத்தலாம்தான். பதில் சொல்லிக் களைத்தால் ஓய்வு எடுத்தாற் போலுமாகும்.

& இதில் புதுமை எதுவும் இல்லை. ஆரம்ப காலங்களில் வாசகர்களுக்கு ஐந்து கேள்விகள் என்று வாரா வாரம் ஸ்ரீராமும் நானும் கேட்டுக்கொண்டிருந்தோம். அப்போது தவறாமல் அப்பாதுரை, கீதா சாம்பசிவம், ஏஞ்சல், அதிரா எல்லோரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 

நெல்லைத்தமிழன்: 

ரொம்ப வயதாகியும் உயிரோடு இருப்பது வரமா இல்லை சாபமா?

# அது வயதானவர் எப்படிப் பட்டவர்களுடன் இருக்கிறார், அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது, அவருக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவைப் படுகிறது, அவரது பணபலம் எப்படியானது, அவர் சிடுமூஞ்சியா, தொணதொணப்பா, தன்னைச் சூழ்ந்திருப்போர் மேல் எந்த அளவு அன்பு செலுத்துபவர் போன்ற பல விஷயங்களைச் சார்ந்திருப்பது.

& நூறு வயதுக்கு மேல் வாழ்ந்த என்னுடைய அம்மா, 'ரொம்ப வயதாகியும் உயிருடன் இருப்பது ஒரு வகையில் சாபம்தான்' என்று கூறினார்.  

கே. சக்ரபாணி சென்னை 28: 

1. ஹோட்டல் தோசைகள் ஒரு  தனி சுவையுடன்  இருக்க காரணம்  தோசைக்கல்லில்  தண்ணீர்  ஊற்றி  வெளக்குமாத்தால  அடித்து விடுவதுதானா?

# தோசைக்கல் கனம் ( தடிமன் ), அதை சூடாக்கும் ஜ்வாலையின் அளவு, எந்த அளவு கல்  சூடாகி எந்த அளவுக்குக் குறைக்கப் படுகிறது , எண்ணெய் விடும் சூட்சுமம் இதெல்லாம் போக மாவில் அளவாகச் சேர்த்தது  அரைக்கப்பட்ட சோறு, ரொம்பக் கொஞ்சம் மைதா இப்படிப் பல சூட்சுமங்கள் ஓட்டல் தோசையில் உள்ளன. கொஞ்சம் ஆறிப் போனால் சகிக்காது - இதை நாம் கவனிப்பதில்லை.

2.  பெண்கள்  முகத்தில்  பவுடர்  போட்டுக்கொள்வது  பொலிவாகவும் வெண்மையாகவும்  சற்று  நறுமணத்துடன் இருப்பதற்குதான்.  ஆனால்  லிப்ஸ்டிக்   போட்டுக்கொள்வதால்  என்ன நன்மை. அதை ஒன்றும்  அழகு என்று  ஏற்றுக்கொள்ளமுடியாது.  தங்கள்  கருத்து என்ன? 

# அலங்காரம் செய்து கொள்வது அவரவர் இஷ்டம்.  லாங் ஷாட்டில் லிப்ஸ்டிக் அழகூட்டுவதைப் பார்த்திருக்கிறேன். தெரிந்த பெண்மணி சொன்னதிலிருந்து , உதடுகள் மிக மெல்லியதாக இருந்தால் அதை  ஈடு செய்ய (மறைத்துக் காட்ட) லிப்ஸ்டிக் உதவும் என்று தெரிந்து கொண்டேன். சினிமா ஷூட்டிங்குகளில் நாயகி நடிகைகளை லிப்ஸ்டிக் அலங்காரம் இல்லாமல் பார்க்க முடியாது. அதில் ஒரு செய்தி இருக்கிறது அல்லவா ?

& Meta விடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அது ஆங்கிலத்தில் சொன்ன பதிலை இங்கே கூகிள் துணையுடன் தமிழ்ப்'படுத்தி' இருக்கிறேன். 

உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடுவதால் பல நன்மைகள் உள்ளன: 

1. அழகியல் ஈர்ப்பு: உதட்டுச்சாயம் முகத்திற்கு நிறத்தையும் உற்சாகத்தையும் சேர்க்கிறது. 

2. மாய்ஸ்சரைசிங்: பல உதட்டுச்சாயங்களில் ஹைட்ரேட்டிங் பொருட்கள் உள்ளன, உதடுகளை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

3. பாதுகாப்பு: உதட்டுச்சாயம் வறண்ட காற்று மற்றும் தீவிர வெப்பநிலைக்கு எதிராக ஒரு தடையை வழங்குகிறது. 

4. தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: உதட்டுச்சாயம் அணிவது சுயமரியாதையை அதிகரிக்கச் செய்து உங்களை மேலும் கவர்ச்சியாக உணர வைக்கும். 

5. ஆளுமையின் வெளிப்பாடு: லிப்ஸ்டிக் வண்ணத் தேர்வுகள் தனித்துவத்தையும் தனிப்பட்ட பாணியையும் பிரதிபலிக்கின்றன. 

6. உதடு வடிவத்தை முன்னிலைப்படுத்துதல்: உதட்டுச்சாயம் உதடுகளின் இயற்கையான வளைவை வரையறுக்கிறது மற்றும் வலியுறுத்துகிறது. 

7. சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவம்: உதட்டுச்சாயம் பெரும்பாலும் கவர்ச்சி, நுட்பம் மற்றும் கலாச்சார மரபுகளுடன் தொடர்புடையது. 

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் சில கூடுதல் நன்மைகள்: - 
8. புற ஊதா பாதுகாப்பு    
9. வயதாவதை  எதிர்க்கும்  பண்புகள். 

இந்த ஒன்பது நன்மைகள் பற்றி '9 தாரா' என்ன சொல்கிறார் பாருங்க! 

3. பேய்.    பிசாசு.     பூதம்.     ஒற்றுமை  வேற்றுமைகள் என்ன?

# வேற்றுமைகள்:

பேய்: இது மனிதர்களை  மட்டுமே பிடிக்கும்.

பிசாசு: அகாரணமாக இது மட்டுமே நம் கண்களுக்குக் காட்சி தரும். 

பூதம்: நல்லது செய்யும் வகையில் பூதம் மட்டுமே இருக்கும்.

ஒற்றுமை:

இவை மூன்றுமே புருடா.

&: மைண்ட் வாய்ஸ் : ' கல்யாணத்துக்கு முன்னாடி இவை மூன்றுமே வேறு வேறு என்று நினைத்திருந்தேன். '


= = = = = = = = = =

KGG பக்கம் :

kgs நினைவுகள் தொடர்கின்றன. 

kgs அண்ணனிடம் சிறு வயதில் பல சந்தர்ப்பங்களில் குட்டு வாங்கி கின்னஸ் உலக சாதனை படைத்தவர் என்னுடைய சின்ன அண்ணன் விசு. அந்த நாட்களில் kgs அவர்களுக்கு 'இரும்புக்கை' என்ற பெயரும் உண்டு. 

விசு அண்ணன் என்ன செய்வார் என்றால், kgs குட்டுவதற்காக அருகில் வரும்போதே " ஆ ! ஐயோ ! அம்மா ! வலிக்குதே " என்று கூச்சல் போட்டு அழ ஆரம்பிப்பார். சமையலறையில் இருக்கும் அம்மா உடனே வெளியே ஓடி வந்து kgs அண்ணனை கண்டிப்பார். kgs உடனே " நான் இன்னும் அவனை தொடக்கூட இல்லை - அதற்குள் கூச்சல் போடுகிறான்" என்பார். 

விசு அண்ணனிடம், ஒரு சமயம் இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் " டேய் - அவர் குட்டுவதற்கு வரும்போதே கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால்தான் குட்டு சிறிய குட்டாக விழும். இல்லையேல் மண்டை பிளந்து போகும் அளவுக்கு பலமாக குட்டிவிடுவார் " என்று சிரித்துக்கொண்டே கூறினார். 

*** 

kgs அண்ணனுக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் அதிகம் கிடையாது. ஆனால் அப்பா பூஜை செய்ய - சந்தனக் கல்லில் சந்தனம் அரைத்துக் கொடுப்பார், அக்கா பூக்களைத் தொடுத்து மாலை கட்டுவார். நான் அப்பா பூஜை செய்து முடிக்கும் வரை நெற்றியில் அப்பா இட்டுவிட்ட விபூதி துலங்க ( அம்மா, சின்ன அண்ணன் எல்லோரும் என்னை அந்த சமயம் ' ஆஷாடபூதி' என்று பரிகாசம் செய்வார்கள்!) உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். அப்பா சொல்லும் ஸ்லோகங்கள், பூஜை மந்திரங்கள் எல்லாம் கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆகியிருந்தது அந்தக் காலத்தில் !   

சமீப காலத்தில், kgs அண்ணனிடம், அவர் சிறிய வயதில் கோவில்களுக்குச் சென்றது உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர், கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில், கோவில் சென்றது உண்டு என்றார். 

அவை :

1) நாங்கள் இருந்த வீட்டின் எதிர்ப்பக்கத்தில், சட்டையப்பர் கோவில் மேற்குப் பிரகாரத்தின் மதில் சுவர். அண்ணன் வீதியில் விளையாடும்போது கோவிலுக்குள் விழுந்த பந்தை எடுப்பதற்காக மட்டும் கோவிலுக்குள் அடிக்கடி சென்றது உண்டு என்றும் ஆனால் சுவாமி சந்நிதி பக்கம் போனதில்லை என்றார். 

2) அம்மா கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் கேட்க, நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோவில் திருவிழா சமயங்களில் செல்வார். அந்த நேரங்களில், kgs அம்மாவுக்குத் துணையாக சென்றது உண்டு என்று சொன்னார். மேலும் அந்தக் கோவில் திருவிழா கடைகளில் அம்மா கல்சட்டி போன்ற பொருட்கள் வாங்கச் செல்லும்போதும், அம்மாவுடன் சேர்ந்து, கோவில் பக்க சந்து வழியாக (குறுக்கு வழி) நுழைந்து நீலாயதாக்ஷி அம்மன் கோவில் சந்நிதியில் - திருவிழா கடைகளில் கல் சட்டி தேர்ந்தெடுக்க உதவியது உண்டு என்று சொன்னார். 

பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் அவருடைய காரில் எங்கள் ஊர் கோவில்கள், குலதெய்வம் கோவில் எல்லாம் சென்றபோது, நான் வற்புறுத்தியதால், குல தெய்வம் (வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமாரசுவாமி ) கோவிலுக்குள் வந்தார். ஆனால் சுவாமி கும்பிட்டாரா இல்லையா என்று ஞாபகம் இல்லை! 

(தொடரும்) 

71 கருத்துகள்:

  1. வாராவாரம் எபி வாசகர் ஒருவர் புதன் கேள்விகளுக்கு பதில் அளித்தால்......

    //இதில் புதுமை ஏதும் இல்லை//

    ஏன் புதுமை இருக்காது?..

    இப்பொழுது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்.

    நான் ஒரு கேள்விக்கு ஒரு பதில் தான் அளிக்கும் முறையைத் தான் கடை பிடிப்பேன். அந்தப் பதிலும் விதவித பாணிகளில் இருக்கும்.

    இது புதுமை இல்லையா?
    புதுமை என்றால் எபிக்குப் புதுமை இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷயம் என்ன என்றால் எங்களை கேள்வி கேட்கும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. விஜய் அரசியலில் ஜொலிப்பாரா? இதற்கு வித விதமாக நீங்கள் ஒருவரே பதில் சொல்லுங்கள்!

      நீக்கு
    2. விதவிதமாக என் பதில் இருக்காது. தீர்மானமான ஒன்றாக இருக்கும்.
      'அட' என்று வாசிப்பவர் வியக்கிற மாதிரி பார்த்துக் கொள்வேன்.

      அச்சடித்த பத்திரிகையிலேயே
      'தேசிங்கு ராஜன் பதில்கள்' என்று பதிலளித்த அனுபவமும் சேர்ந்திருக்கிறது.

      நீக்கு
    3. என் கேள்விக்கு என்ன பதில்! வி அ ஜொ?

      நீக்கு
    4. அடுத்த புதனுக்கான கேள்வியா?

      நீக்கு
    5. பதவிப் பிரமாணம் செய்து வைத்தாயிற்றா?
      ஆம் என்றால், எத்தனை புதன்களுக்கு?

      நீக்கு
    6. வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது நான் ஒருவனாகத் தான்
      அந்த குறிப்பிட்ட வாரங்களுக்கு இருக்க வேண்டும் என்பதே என் ஒரே ஒரு கண்டிஷன்.

      அது தெரிகிற மாதிரி
      'ஜீவியின் பதில்கள்'
      என்று தலைப்பில்
      குறிப்பிட்டு விட வேண்டும்.

      நீக்கு
    7. இப்பொழுது உங்களுக்கு இரவு
      7.15.
      இன்று இரவு 10 மணிக்குள் என் மேற்கண்ட கண்டிஷனுக்கு பதில் அளித்து விடுங்கள்.
      அப்பொழுது தான் அடுத்த புதனுக்கான (கேள்விகள் & பதில்கள்) தயாரிப்பு வேலைகளில் ஈடுபட எனக்கு செளகரியமாக இருக்கும்.

      நீக்கு
    8. ​"ஜீவியின் பதில்கள்" ஓகே. உங்கள் பெயரிட்டு வரும் கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் பதிலளிக்கலாம். அவற்றை இந்த தலைப்பின் கீழ் வெளியிடலாம்.

      மற்ற கேள்விகள் (வந்தால்) வழக்கம்போல... அவையும் இடம்பெறும்.

      நீக்கு
    9. ஓ.கே. இப்படி என் பகுதியை மட்டும் தனியாகப் பிரிப்பது எனக்கு சம்மதமே.

      இரண்டாவது. (உள் நாடு -- வெளி நாடு) அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள். ஆசிரியர் குழுவின் அரசியல் கருத்துக்களுக்கும் என் கருத்துக்களுக்கும் நிச்சயம் மாறுபாடு ஏற்படும். நீங்கள் வலமென்றால் நான் இடம். அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

      என்னைப் பொறுத்த மட்டில் அந்த தர்ம சங்கடத்தைத் தவிர்க்க பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்ட எந்தக் கேள்வியும் என் பெயரிட்டு வந்தாலும் அவற்றிற்கு பதிலளிக்கும் பொறுப்பை ஆசிரியர் குழுவினர் ஏற்றுக் கொண்டாலும் எனக்கு உடன்பாடே.
      இதற்கு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி.

      நீக்கு
    10. KGGயே அரசியல் சம்பந்தப்பட்டு கேள்வி கேட்டிருக்கிறார்.  எனவே பதில் அளிக்கலாம். மாறுபட்ட கருத்துகள் சகஜம்தானே?  மாணவருத்தங்கள் இல்லாமல் கருத்துப் பரிமாற்றம் நடந்தால் சரி...

      நீக்கு
    11. ஜீவியின் பதில்கள் பகுதியில் " பதில்கள் ஜீவி அவர்களின் கருத்துகள் மட்டுமே. எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் கருத்து அல்ல. " என்று ஒரு disclaimer சேர்த்து விடுவோம்.

      நீக்கு
  2. கேள்விகளும் பதில்களும் அருமை.

    //ரொம்ப வயதாகியும் உயிரோடு இருப்பது வரமா இல்லை சாபமா?//

    இந்த கேள்விக்கு இரண்டு ஆசிரியர் பதில்களும் அனுபவ தந்த பதில்கள்.

    //'ரொம்ப வயதாகியும் உயிருடன் இருப்பது ஒரு வகையில் சாபம்தான்' என்று கூறினார். //


    சார் அம்மா சொன்னது போல நான் அடிக்கடி நினைப்பேன். அவ்வளவு வயது இருந்தால் நிறைய நல்லது கெட்டதுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அவர்கள் தனிமையில் இருந்து இருக்கமாட்ட்டார்கள் சுற்றம் சூழ இருந்து இருப்பார்கள் அவர்களே அப்படி சொன்னால் தனிமையில் 100 வயது வாழ்வது கொடுமைதான்.

    நிறைய வயது இருப்பவர்களை வணங்கி மகிழ்வது நமக்கு மகிழ்ச்சி. ஆனால் முதுமையை கடப்பது அது தரும் துன்பத்தை கடப்பது அந்த முதியவருக்கு மிகவும் துன்பம்.

    இறைவனிடம் போகும் வரை அவர்கள் வேலையை யார் துணையும் இன்றி அவர்களே செய்து கொள்வது, பணபலம் முக்கியம் வேண்டும், யார் கையையும் எதிர்ப்பார்த்து இருக்க கூடாது. இப்படி எல்லா வசதியுடன் சுற்றம் சூழ எந்த கவலையும் இல்லாமல் இருப்பவர்கள்
    100 வயது அதற்கு மேலும் வாழலாம். மகிழ்ச்சி அவர்களை வாழவைக்கும்.

    100 வயது வரை தன் வேலையை தானே செய்து கொண்டார்கள் என்மாமனார். கீழே விழுந்து நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்த போது கூட கலங்காமல் 5 வருடம் வாழ்ந்தார்கள்.

    தன் மனைவி மற்றும் குழந்தைகள் மாற்றி மாற்றி பார்த்து கொள்வதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். தன்னை பாதுகாக்க தனி ஆள் போட்ட போது அவர் உற்ற நண்பராக பார்த்து கொண்டது இறைவனின் கருணை என்று மகிழ்ச்சியாக சொல்வார்கள்.

    ஒரு கணம் கூட "இறைவா என்னை எடுத்து கொள்" என்று அவர்கள் சொல்லவில்லை.

    "என் வயது உள்ளவர்கள் எல்லாம் போய் விட்டார்கள்" என்னை ஏதோ காரணம் இறைவன் வைத்து இருக்கிறான் என்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை நெகிழ வைத்த கருத்துரை. மிக்க நன்றி.

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்... காலையில் ஒரு நல்ல கருத்து படித்த திருப்தி.

      இறைவன் மீது ஆழ்ந்த பற்று உடையவர்களுக்கு, ஏதோ ஒரு காரணமாகத்தான் நெடிய ஆயுளைக் கொடுத்திருக்கிறான் என்பது புரியும். பார்த்துக்கொள்ள அன்பானவர்கள் அருகில் இருந்தால் வரம்தான்.

      நீக்கு
  3. &: மைண்ட் வாய்ஸ் : ' கல்யாணத்துக்கு முன்னாடி இவை மூன்றுமே வேறு வேறு என்று நினைத்திருந்தேன். '//

    ஆஹா! வடிவேல் மைண்ட் வாய்ஸா?
    உங்கள் மைண்ட் வாய்ஸா?

    பதிலளிநீக்கு
  4. அண்ணா தன் கடமைகளை செய்வதே இறைவாழிபாடாக கொண்டு இருப்பார் என நினைக்கிறேன்.
    தன் கடமைகளை சரிவர செய்பவர்களுக்கு தனியாக கடவுள் வழிபாடு தேவையில்லை என்று சொல்வார்கள்.
    உயர்ந்த மனிதர்தான்.

    பதிலளிநீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  6. பதிவை ஐந்து மணிக்கெல்லாம் படித்து விட்டேன்....

    பதிலளிநீக்கு
  7. பேய். பிசாசு. பூதம்.

    ஓர வஞ்சனையான கருத்து..

    பதிலளிநீக்கு
  8. பேய். பிசாசு. பூதம்.

    இதுக்கு நல்லதா ஒரு கருத்து சொல்லித் தான் பாருங்களேன்...

    நீங்க தான் தகிரியமான ஆள் ஆச்சே...

    (எதோ நம்மளால ஆன நல்ல காரியம்!..)

    பதிலளிநீக்கு
  9. முன் காலத்தில் பெண்களுக்கு இயற்கையாக உதடுகள் சிவந்திருந்தன, நாணத்தால் கன்னம் சிவந்தது. இயற்கை மறைந்தபோது செயற்கை இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது என்றே நினைக்கிறேன்.

    By the by, பெண்ணுக்கு ஓரிரண்டு பொருட்கள் வாங்க H&G கடைக்குச் சென்றேன். ஆயிரக்கணக்கில் அழகு சாதனப் பொருட்கள். கண் மைக்குப் பதிலான பென்சில், ஏகப்பட்ட பிராண்டுகள், லக்மேல 25% டிஸ்கவுன்ட் இருக்கு, வாங்கவா என்றால், நோ நோ.. வேறு ஒரு பிராண்ட் என்றாள்.

    அம்மா காலத்தில் வீட்டில் செய்த கண்மை, பவுடர் மாத்திரம் கடையில், பிறகு வாசனையூட்டப்பட்ட தேங்காய் எண்ணெய்... இப்போ... காலம் இவ்வளவு மாறிவிட்டது. 93ல் துபாய் சென்றபோது இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவுல்லை.

    பதிலளிநீக்கு
  10. பாடலின் தலைப்பே சட் எனப் பாடலை முழுவதும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.

    வைதேகி காத்திருந்தாள் வித்தியாசமான படம். அப்போ எனக்கு மூன்று கதை என்பதால் முழு திருப்தி தரவில்லை (நினைவு சரிதானா?). விளையாட்டு வினையாகும் என்பது விஜயகாந்த் போர்ஷன் என்ற நினைவு

    பதிலளிநீக்கு
  11. கே. ஜி. ஜி. அவர்களே
    லிப்ஸ்டிக் ஆராய்ச்சி செய்து
    அதில் நயன்தாரா வையும்
    இழுத்து அருமை.

    ஒரு பி ஹெச் டி பட்டமே
    கொடுத்துவிட்டோம் உங்களுக்கு.

    உங்கள். சகோதரர் திரு. கே. ஜி. எஸ் அவர்கள் ஒரு சகலகலா வல்லவராக இருந்திருப்பார் போலிருக்கிறது

    தங்கள் குடும்ப தெய்வபக்திக்கு தலை வணங்குகிறேன்

    நீங்களும் அதேபோல் வாழ்வில் ஜொலிக்க வாழ்த்துகிறேன்

    கே. சக்ரபாணி
    சென்னை 28

    பதிலளிநீக்கு
  12. லிப்ஸ்டிக் விஷயத்தில் புதிதாக நயன்தாராவை இழுத்துவிட்டீர்களே
    அனுஷ்கா. தமன்னா கோவித்துக்கொள்ளமாட்டார்களா
    அவர்களுக்கு என்ன பதில்
    சொல்லப்போகிறீர்கள்

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ்கா, தமன்னா மேக்கப் இல்லாத முகம் போட்டால்தான் கோபித்துக்கொள்வார்கள் ரசிகர்கள். பில்லாவில் பார்த்த அழகிய நயனதாராவை, ரசிகர்கள் மனம் புண்படும்படி மேக்கப் இல்லாத முகத்தைப் போட்டதற்கு யாராவது கௌதமன் அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

      நீக்கு
  13. அனைத்தும் நன்று. கேள்வி பதில் பதிவுகளில் புதுமை - காத்திருக்கிறேன்.

    பேய், பிசாசு, பூதம் - கேள்விக்கான பதில்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. ஜீவி அவர்களுக்கு அடுத்த புதன் கிழமை கேள்விகள் :
    1) ரூபி, ஆஸ்வால்டை ஏன் சுட்டுக் கொன்றார்?
    2) வேல்ஸ் இளவரசரின் கம்போடிய விஜயத்தால் யாருக்கு லாபம்?
    3) தங்கத்திற்கு ஏன் உலகில் அவ்வளவு மதிப்பு?
    4) அமெரிக்கா மற்ற நாடுகளின் விஷயத்தில் தலையிடுவது போல ரஷ்யா ஏன் தலையிடுவதில்லை?
    5) இந்தியா, சீனா, ரஷ்யா மூன்று நாடுகளும் ஒரு அணியாக சேர்ந்தால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை குறைக்க முடியுமா?
    6) சாம்பாருக்கு அரிசி மாவு கரைத்து ஊற்றுவதற்கு பதில் சோள மாவு கரைத்து ஊற்றலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சாருக்கான கேள்விகள். இலக்கியப் படைப்புகள்தான் சமூகத்துக்கு நல்லதா? நாவல் என்பது டிவி சீரியல் மாதிரி பொழுதைப் போக்கக்கூடியதா?

      பொதுவா மொழி, கலை என்பவை காலம் செல்லச் செல்ல வளரும். ஆனால் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த கல்வெட்டு நேர்த்தி, ராஜேந்திரன், பிறகு கராஜராஜசோழன் II காலங்களில் காணப்படாத்தன் காரணம் என்ன?

      நீக்கு
  15. இன்றைய சமூகத்தில்...
    வயதான வாழ்க்கை பலருக்கு சாபம், சிலருக்கு வரமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதான வாழ்க்கை என்பதன் அர்த்தம் ஆளாளுக்கு மாறுபடுகிறது. Purpose and health (தன் செயல்களைத் தானே செய்துகொள்ளும் அளவு) இருக்கும் வரை ஒருவரை வயதானவர் என்று சொல்லிவிடமுடியாது.

      நீக்கு
  16. ரொம்ப வயதாகியும் உயிரோடு இருப்பது வரமா இல்லை சாபமா?//

    ஒவ்வொரு நபரைப் பொருத்து இது. அவர்களின் எண்ணம், உடல்நலன் பொருத்தே அமைகிறது இது. உடல் நலம் நன்றாக இருப்பது வரை தன் வேலைகளைத் தானே செய்யும் வரை சாபம் என்ற எண்ணம் வருவதில்லை.

    அல்லது முதுமையில் குழந்தைகள் போய்விட அவர்கள் இருந்தால் அவர்களை நாம் என்னதான் கவனித்துக் கொண்டாலும் அவர்களின் மன துக்கம் கூடுதலாக இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கேஜி எஸ் அண்ணா வித்தியாசமானவர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய புதன் பதிவு எப்போதும் போல் அருமையாக இருந்தது. கேள்வி பதில்களை ரசித்தேன்.

    பேய், பிசாசு பூதம் பற்றிய மைண்ட் வாய்ஸ் இருபாலருக்கும் பொருந்தும்தானே:))

    உதட்டுச்சாயம் பற்றிய குறிப்புகள் நன்று. ஆனால், இந்த சாயத்தின் தேவை இல்லாமல் இயற்கையாகவே பாதுகாக்க நம் நாக்கில் சுரக்கும் உமிழ்நீர் துணை புரிந்தது அன்று. (உதடுகளை காய்ந்து போகாமல், நம் நாவால் அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்வது.) எல்லாவற்றிலும் கெமிக்கல் கெமிக்கல் என்கிறார்களே..! இந்த சாயம் பூசிய பின் அப்படியே உணவு உண்ணுகிறார்கள். உடல்நலத்திற்கு இது பாதிப்பில்லையா என எனக்குத் தோன்றும்.

    நயன்தாரா படம் எப்படியும், எந்த விதத்தில் பார்த்தாலும் அழகுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேய், பிசாசு பூதம் பற்றிய மைண்ட் வாய்ஸ் இருபாலருக்கும் பொருந்தும்தானே:))//

      மனைவி ஒரு பிசாசு... பேய் மாதிரி என்றெல்லாம் பிறர் கூறக் கேட்டதுண்டு. ஆனால் கணவனுக்கு 'ராட்சசன்' ,'அயோக்யன்' என்றெல்லாம்தானே அடைமொழி சொல்வார்கள். ஹா ஹா ஹா

      நீக்கு
    2. /ஆனால் கணவனுக்கு 'ராட்சசன்' ,'அயோக்யன்' என்றெல்லாம்தானே அடைமொழி சொல்வார்கள். ஹா ஹா ஹா/

      ஹா ஹா. நன்றாக சொன்னீர்கள். ஆண் பேய், பிசாசு பூத வகைகள் என்று கிடையாது போலும். அது சரி.. இவைகளை நேரில் யார்தான் பார்த்துள்ளோம்..? அப்படியே பார்த்தாலும், நாம் எந்த பாலார் என்பது அப்போது நினைவுக்கு வர வேண்டுமே..! :)) நன்றி சகோதரரே.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    /ரொம்ப வயதாகியும் உயிரோடு இருப்பது வரமா இல்லை சாபமா?/

    இதற்கு வந்த பதில்கள் அனைத்தும் உண்மையே.! நீண்ட வயது வாழ்பவர்களை கவனித்து கொள்ளும் நபருக்கு (உறவுகள் ) பொதுவாக மிகுந்த பொறுமையும், அதை விட மிகுந்த அன்புள்ளமும் இருக்க வேண்டும். அப்படியும் நீண்ட வயது வாழ்பவர்கள் தனக்கு ஏதாவது உடம்புக்கு முடியாத போதிலும், தன்னால் பிறருக்கு சிரமமாக உள்ளதென நினைக்கும் போதிலும் "ஏன் இன்னமும் இறைவன் என்னை அழைக்காமல் இருக்கிறான்" என அலுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள். இருப்பினும் யாரையுமே எந்த வயதில் "அவன்" அழைப்பான் என்பது யாருக்குத்தான் தெரியும். பிறப்பு, இறப்பு ரகசியங்கள் அவன் மட்டுந்தானே அறிவான்.

    எங்கள் பாட்டி 87 வயதிலேயே பல முறை அப்படி அலுத்துக் கொண்டதை கண்டிருக்கிறேன். அவர்கள் சிறு வயதில் வாழ்க்கையில் பட்ட கஸ்டங்கள் சொல்லி மாளாது. ஆனாலும் வயதான பின் எந்த ஒரு உடல் சிரமத்தின் போதும் எங்களுக்காக உழைப்பதை நிறுத்தவே மாட்டார். அத்தகைய அன்புள்ளம் கொண்டவர். நீண்ட வருடங்கள் வாழ்பவர்களுக்கு மீண்டும் அடுத்த பிறவி கிடையாது என அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். .

    தங்கள் அண்ணாவை பற்றிய செய்திகள் அறிந்து கொண்டேன். உண்மையிலேயே சிறு வயதிலிருந்தே ஞான மார்க்கமாக சிந்தித்திருக்கிறார். அப்படிபட்டவர்களுடன் பிறந்து வாழ்வதே நமக்கும் ஒரு சிறப்பான வரம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. //சமீப காலத்தில், kgs அண்ணனிடம், அவர் சிறிய வயதில் கோவில்களுக்குச் சென்றது உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர், கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில், கோவில் சென்றது உண்டு என்றார். //

    அவர் எனக்கு அனுப்பிய ஒரு e-mail இங்கு பகிர்கிறேன். playground என்று குறிப்பிடுகிறார்.

    Hello, i am kg subramaniam elder brother of engal blog gouthaman

    I did my initial schooling upto std 8 in cuddalore

    We stayed at 19 reddichatra street
    Shanta nivas now occupied by the grad children of our then house owner
    Day before yesterday we had an opportunity to visit cuddalore &
    I wanted to show my son & daughter in law our playground
    (Read the paved prahaaram near the padiri tree.) and a pair of yaalis at the entrance to the moolastanam guarded by the dwarapalakas.
    The yaalis were famous show pieces which had rolling stone spheres behind their teeth and were freely rolling.
    Now we see a brass arch at the entrance but no yaalis.
    Having asked kgg he told me you also haile from the same town and may be having seniors in the family who knew the temple better.

    Recovering from an operation with restrained movements notwithstanding, i hope you will find some thing about the missing granite yaalis that are not found there any more. 67 years is a considerably long period.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். என்னிடமும் விவரங்கள் சொன்னார். பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  21. Kgs.பக்கங்கள் கண்டோம் வியக்கத்தக்க மனிதர்.

    பதிலளிநீக்கு
  22. ஆஹா, பேய், பிசாசு, பூதம் எல்லாம் வந்திருக்கு. இதைப் படிக்காமல் விட்டுட்டேனே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி! நீங்க எ பி பக்கம் வந்தே பல மாதங்கள் ஆகிவிட்டன!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!