சனி, 14 செப்டம்பர், 2024

ஆசிரியை ஆன மாணவி மற்றும் நான் படிச்ச கதை

 




=====================================================================================================

நத்தம் அருகே காட்டுப்பட்டியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு தன்னார்வலர்கள் இணைந்து ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளனர்.  கம்பிளியம்பட்டி காட்டுப்பட்டியில் வசித்து வருபவர் பார்வதி 75. கணவர் இறந்ததால் ஆதரவின்றி சிதிலமடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார்.  இதை கண்ட பசியில்லா தேசம் உருவாக்குவோம் அறக்கட்டளையினர் புதிய வீடு கட்டித்தர முடிவு செய்தனர். அதன்படி ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீட்டை கட்டினர்.  இதை டாக்டர்கள் அமலாதேவி, செல்வராணி திறந்து வைத்தனர். இதோடு மூதாட்டிக்கு 6 மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள், சோலார் லைட், சேலை, பாத்திரங்களையும் வழங்கினர். அறக்கட்டளை நிர்வாகி பிரேம், சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

====================================================================================

மருத்துவத்துறையில் புது சாதனை: மொபைல்போனில் விளையாடிய நோயாளியின் மூளையில் கட்டியை அகற்றிய டாக்டர்கள்


லக்னோ: அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அறுவை சிகிச்சை நடந்த நேரத்தில் நோயாளி மொபைலை பயன்படுத்தி உள்ளார்.  லக்னோவை சேர்ந்த ஹரிஸ்சந்திரா பிரஜாபதி (56) என்பவர், கடுமையான தலைவலி, இடது கை மற்றும் கால்கள் பலவீனமான நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்ததுடன், இதனால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து அவரை கல்யாண் சிங் புற்றுநோய் மையத்தில் அனுமதித்தனர்.   சிகிச்சை  :  அவருக்கு ' அவேக் கிரனியோடோமி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதன்படி, ஹரிஸ்சந்திரா பிரஜாபதிக்கு தலையில் மட்டும் 'அனஸ்தீசியா' மருந்தை செலுத்தி உணர்விளக்க செய்தனர். தொடர்ந்து மொபைலில் விளையாடவும், பேனாவை கையில் வைத்திருக்கவும் செய்த டாக்டர்கள், காலை அசைக்க செய்தனர். இதன் மூலம் நரம்பை கண்காணிக்கும் கருவியை பயன்படுத்தி கட்டி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து அதனை அகற்றினர். இதன் மூலம் நரம்பு பாதிப்பு ஏற்படும் பிரச்னையை தவிர்க்க முடிந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

“பசியோட வலி எப்படியிருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும்ணே. ஏன்னா, நானும் யாராவது சாப்பாடு தரமாட்டாங்களான்னு ஏங்கிப்போய் நின்னவன்தான். ஏதோ இன்னைக்கு குடும்பம், வாழ்க்கைன்னு ஓரளவுக்கு நிறைவா இருக்கேன். நான் என் பங்குக்கு ஏதாவது செய்யணும்ல… அதான், யாரெல்லாம் அரவணைக்க ஆளில்லாம இருக்காங்களோ அவங்களுக்கெல்லாம் போய் துணைக்குத் துணையா நிக்குறேன்…”

ரஞ்சித்திடம் பேசிக்கொண்டிருப்பதே அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. ஆண்டிபட்டி எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக மருந்தாளுநராகப் பணிபுரிகிறார். ஆண்டிபட்டியில் இறங்கி ரஞ்சித் பற்றி விசாரித்தால் எல்லோரின் முகமும் மலர்கிறது. அந்த அளவுக்கு மனதுக்கும் நெருக்கமாக இருக்கிறார். சமீபத்தில்தான் சிறந்த சமூக சேவகருக்கான ஆளுநர் விருதைப் பெற்றிருக்கிறார் ரஞ்சித்குமார். வாழ்த்துக்கான கைகுலுக்கலோடு தொடங்கியது எங்கள் உரையாடல்.............................

  நன்றி JKC ஸார். ]


=======================================================================================================================================================

நான் படிச்ச கதை (JKC)

தண்ணீரும் கண்ணீரும்

கதையாசிரியர்: டொமினிக் ஜீவா


டொமினிக் ஜீவா புனைபெயர் புரட்சிமோகன் (Dominic Jeeva, சூன் 27, 1927 – சனவரி 28, 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார். இவரது தந்தை ஆவுறம் பிள்ளை ஜோசப்; தாய் மரியம்மா. டொமினிக் யாழ்ப்பாணம் செயிண்ட் மேரிஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே கல்வி கற்றார். 

தினகரன், ஈழகேசரி ஆகிய ஈழ இதழ்களிலும், சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய தமிழக இதழ்களிலும் ஜீவாவின் சிறுகதைகளும், படைப்புகளும் வெளியானது. ஆகஸ்ட் 15, 1966 முதல் மல்லிகைஎன்னும் சிற்றிதழை தொடர்ந்து 46 வருடங்களாக நடத்திவந்தார். 

டொமினிக் ஜீவா ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும், பத்து கட்டுரைத் தொகுப்புகளையும், ஒருமொழிபெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளார். ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்நூல் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

1960-ல் வெளிவந்த ஜீவாவின் முதல் சிறுகதைத் தொகுதியான தண்ணீரும் கண்ணீரும்இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்ற முதல் தமிழ் நூலாகும்.

ஜீவாவின் சிறுகதை பாணி எழுத்தில் உரத்துப் பேசும் நேரடியான எளிமையான கதை சொல்லல் முறையாகும்.ஜெ மோ. 

முன்னுரை 

ரயில் தண்ணீர் பிடித்த இந்திரா  ரயிலோடு சென்று மீண்டு வந்ததை கந்தர்வனின் தண்ணீர்கதையில் கண்டோம். சுப்ரபாரதிமணியனின் வருகையில், கிழவி செல்லதாயி நாலு மைல் நடந்து எடுத்த, அடுத்த நாள் குடிக்க வைத்திருந்த ஒரு சொம்பு தண்ணீர் எப்படி மண்ணில் கொட்டி வீணானது என்று கண்டோம். 

பா செயப்பிரகாசம் எழுதிய தாலியில் பூச்சூடியவர்கள்கதையில் தைலி என்ற கீழ் ஜாதி பெண் ஊர்க்காளி மேய்க்கும் தண்டனைக்கு எப்படி ஆளாக்கப்படுகிறாள் என்று கண்டோம். மேல் சாதிக்காரர்கள் வசிக்கும் தெருவில் நடந்தது குற்றம்; மேல்ஜாதியினர் கிணற்றில் தண்ணீர் இறைத்தது குற்றம்; செருப்பு போட்டு நடந்தது குற்றம். இப்படி செய்யத்தூண்டிய மேல்ஜாதி வடரெட்டி ஊர்கூட்டத்தில் அவளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முடிவு எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு.   

இன்றைய தண்ணீரும் கண்ணீரும்கதை  தண்ணீர் கஷ்டப்பாடு மற்றும் ஜாதி ஆதிக்கம் இணைந்த  கதை தான். சின்ன மகன் ஒரு சதம் காசை மண்ணில் புதைத்து காசு செடி முளைக்கும் என்று வீட்டில் இருந்த குடி நீரை மண்ணில் ஊற்றிவிட்டான்.  தகப்பன் பண்டாரி இரவு சாப்பிட்டு முடித்தபின்  குடிக்க தண்ணீர் இல்லாததால்  தண்ணீர் திருடப் போய் அடியும் உதையும் சம்பாதித்ததுதான் மிச்சம். கடைசியில் அடிகொடுத்தவனும் அடி வாங்கியவனும் ரத்தம் ஒரே நிறம்என்று எப்படி இணைகிறார்கள் என்று கதை முடிகிறது. 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல். 

கதைக்காலம் 1955. இலங்கையிலும் தீண்டாமை மிகவும் தீவிரமாக இருந்த காலம். மேலும் இலங்கைத் தமிழ் சற்று மாறுபட்ட தமிழ். இவற்றை மனதில் நிறுத்தி இக்கதையை வாசிக்கக் கோருகிறேன். முழுக்கதையும் தரப்பட்டுள்ளது. 

தண்ணீரும் கண்ணீரும் - டொமினிக் ஜீவா.

யாழ்ப்பாணப் பட்டினத்துக் கடற்கரையோரப் பகுதிகளில் ஒரு நாளாவது குடியிருந்தவர்களுக்குத்தான் அதன் பெருமை சட்டென்று தெரியும்; அதன் அருமை நன்றாகப் புரியும். மருந்துக்குக்கூட நல்ல தண்ணீர் குடிப்பதற்குக் கிடைக்காமல், அந்தச் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள், சாதாரண மக்கள் படும் பாட்டைப் பார்க்கும் பொழுது நமக்கே நாவரட்சி ஏற்பட்டு விடுகின்றதென்றால், அந்தத் தண்ணீர்ப் பிரச்னையின் பூதாகாரமான உருவை நீங்கள் ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம்.

பட்டினத்துக் கடற்கரைப்பகுதி அது; ‘குருநகர்என்ற திருநாமம் தரித்துத் திகழ்கின்றது. அந்த வட்டாரத்தின் ஒரு பகுதியில் கடந்த பத்துப் பதினைந்து வருடகாலமாக வாழ்ந்து வருகிறான் பண்டாரி. அவன் ஒரு ரிக்ஷாக்காரன்.

அதாவது, இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்கள் மனிதமாடு என்று மாற்றுப் பெயரிட்டு எழுதிவரும், மனிதனை மனிதன் இழுத்து வாழும் தொழிலைச் செய்பவன். ஆயினும் சந்தேகப்படத் தேவையில்லை. அவன் மனிதனேதான்! பட்டினத்து நாகரீக வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அவன் திகழ்ந்து வந்தான். ஓர் அம்சமாகிவிட்டான்.

பண்டாரி பரம்பரைக் குலவித்தையாக இந்த இழுக்கும்தொழிலைச் செய்பவனல்ல. பரம்பரையாகக் குலத்தொழில் கள்ளிறக்குவது. இராஜகுமாரனை மணந்த செம்படவப் பெண், ‘இறால் எப்படிச் சுருண்டிருக்கும்?’ என்று கேட்டாளாம். அதைப் போன்று அவன் குலத்தொழிலை மறந்தவனல்ல. அல்லது காற்சட்டை அணிந்து, ‘இங்கிலீஸ்படிப்பின் துணையுடன் உத்தியோகம் பார்த்து அரிசி காய்ச்சி மரத்தைப்பற்றிப் பேசக்கூடிய நாகரிகவானுமல்ல. சென்ற ஆண்டு வரை, காலில் தளை நார்பூட்டி, மரம் ஏறி இறங்கி கள் சேர்த்தவன் தான். ஆனால் பட்டினத்தில் இருக்கும் மது ஒழிப்பு மகாசபையின் பிரச்சார பலமும், அதைத் தவறாகப் புரிந்துகொண்ட சில தீவிரவாதிகளின் திடீர் நடவடிக்கைகளும் ஒன்று சேர்ந்து கள்ளிறக்கும் தொழிலாளரின் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிட்டன; பண்டாரியின் வயிற்றிலும் சேர்த்து மண்ணைத் தூவி விட்டன.

திடீரென்று ஒருநாள் அவனது கள்ளுக்கொட்டில் தீக்கிரையாக்கப்பட்டு எரிந்து சாம்பராகிவிட்டது. அந்த நாள் தொட்டுப் பண்டாரி தன் குடும்பத்தைக் காப்பாற்றும் நிமித்தம் பிச்சை எடுப்பவனாகவோ, ‘பிக்பாக்கட்காரனாகவோ, மூன்று சீட்டுத் திருப்பி முச்சந்தியில்நடமாடும் சூதாட்டச் சாவடிக்காரனாகவோ மாறிவிடவில்லை.

அவன், நேர்மையான உழைப்பாளி; மனந்தளராத் தொழிலாளி. ஆகவே, அவன் மனிதனாகவே மனிதப் பண்புகளுடன் வாழத் தீர்மானித்தான். இப்பொழுது பட்டினத்து ரிக்க்ஷாக்காரனாக நடமாடுகிறான்.

இப்பொழுது, அந்தத் தொழில் இழுக்கும் தொழில் அவனுக்குப் பழக்கப்பட்ட தொழிலாக அமைந்துவிட்டது. “ஐயாதுரைராசா…” – இந்த வார்த்தைகளைக் கீறல் விழுந்த கிராமப்போன் ரிக்கார்டைப்போல ஒலித்துக் கொண்டே நடமாடுவான். அவன் இழுத்து வரும் ரிக்க்ஷா அவனுக்குச் சொந்தமானதல்ல. நாளொன்றுக்கு முக்கால் ரூபாயை வாடகைப் பணமாக, வண்டிச் சொந்தக்காரியிடம் அந்தப் பொக்குவாய்க் கிழவி செல்லத்திடம் செலுத்தினால் தான் அந்த வண்டியை ஒரு நாளைக்குச் சொந்தம் கொண்டாட அவனால் முடியும்.

இப்படியான அவனுடைய வாழ்வு-மனைவியையும் ஒரு குழந்தையையும் கொண்ட அவன் குடும்பத்தின் வாழ்வு ஏதோ ஒரு வழியாக ஓடிக்கொண்டிருந்தது. மண் ஒழுங்கையால் பாரத்துடன் ரிக்ஷா வண்டியை இழுத்துச் செல்வதைப்போல, வாழ்க்கையென்ற வண்டியைப் பண்டாரி மிகச் சிரமத்தின் பேரில்

***

ஒரு நாள்

இரவு பத்து மணி இருக்கும். காந்தீயவாதியும், ஜீவ காருண்ய சங்கத் தலைவருமான, பட்டினத்துப் பிரமுகரொருவரை பென்னம் பெரிய மனிதரை பிரச்சாரக்கூட்டம் முடிந்ததும் அவருடைய வீட்டுக்குக் கொண்டு சேர்த்து விட்டு, அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்தான் பண்டாரி.

மதியத்தில் சாப்பிடாததால், வந்ததும் வராததுமாக அவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. சிறு குடலைப் பெருங்குடல், தின்பதுபோன்ற வேகம் மிக்க பசி. சாப்பாடு என்ற பெயரால் ஆக்கி வைத்திருந்த அமெரிக்கன் மரப் பிட்டையும், சுட்ட கருவாட்டுத் துண்டொன்றையும் அவக் அவக்கென்று விழுங்கித் தீர்த்துவிட்டுத் தண்ணீர் குடத்தைச் சரித்துப் பார்த்தான்.

அதற்குள் ஒரு துளி தண்ணீர்கூட இருக்கவில்லை.

அவனுக்குச் சினம் பொங்கியது. சாப்பிட்டபின் ஒரு சொட்டு நல்ல தண்ணீராவது வாய்க்குள் ஊற்றிக் கொள்ளாது போனால், பண்டாரிக்குப் பத்தியம்ஏற்படாது; அன்று சாப்பிட்ட மாதிரியும் இருக்காது. நாக்குத் தாகத்தால் வரண்டது; தண்ணீர் விடாயால் உலர்ந்தது.

குட்டிபோட்ட நாயைப்போல கோபத்தினால் அவன் மனைவிமீது வள்ளென்று சீறி விழுந்தான்.

ஏய், இந்தாடீ! குடத்திலே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. விடிய விடிய நீ என்னடி செய்து கிழித்தாய்?”- அவனுடைய குரல் கனத்தது. ஆத்திரம் கொப்பளித்தது. –

மனைவி அவனுக்கு ஏற்ற ஜோடிதான். பதிலுக்கு மீன் கடைஇரைச்சலில், “அதுக்கு நான் என்னத்தைப் பண்ண? உன்ரை மோன் தான் ஒரு சதத்தை நட்டு வைச்சுட்டு காசுமரம் முளைக்கும்; அது காய்ச்சதும் காசு பிடுங்கலாம்எண்டு புசத்திக் கொண்டு, நான் அள்ளி வைச்ச தண்ணியெல்லாத்தையும் அள்ளி அள்ளி ஊத்தினான். எல்லாம் நீ உன்ரை மோனுக்குக் குடுக்கிற செல்லம்என பதிலிறுத்தாள்.

மகன்பால் பண்டாரிக்கிருக்கும் பாசம், அவன் கோபத்தினை ஓரளவு மட்டுப்படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு கொடுத்த அந்த ஒரு சத நாணயத்தை, அவன் மண்ணில் புதைத்து வைத்துத் தினசரி, ‘காசு மரம் முளைக்கும்; காசு மரம் முளைக்கும்என்ற அசாத்திய நம்பிக்கையில், உள்ள தண்ணீரெல்லாம் ஊற்றித் தள்ளுவதை நினைத்தபொழுது அந்த நிலையிலும் அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

அவன் வாய் முணுமுணுத்தது. “எடே, பொடியா! காசு மரத்திலை முளைக்கிறதில்லையடா! நல்லாப் பாடுபட்டுத் தான் காசை உழைக்க வேணும்…”

ஐந்து நிமிஷங்கள் மடிந்தன.

ஈயச் செம்புடன் அடுத்த வீட்டுக்கு நல்ல தண்ணீர் கடன்கேட்கச் சென்ற அவன் மனைவி வெறும் செம்புடன் திரும்பி வந்தாள். அயலில் வாழ்பவர்கள் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். ஒரு செம்பு நல்ல தண்ணீர் இரவல் கேட்டாலோ வந்தது வினை. தண்ணீரை வைத்துக் கொண்டே, “ஐயோதண்ணீரெல்லாம் முடிஞ்சு போச்சே!” என்று பல்லிப் பாஷையில் நச்சரித்துப் பதில் சொல்வார்கள்.

அவர்களுக்கல்லவா தண்ணீரின் அருமை தெரியும்? அதை எடுப்பதற்கு அவர்கள் பட்டபாடு இருக்கிறதே!

வெறுங்கையுடன் வந்த மனைவியைக் கண்டதும் அமெரிக்கன் மாப்பிட்டால் பொருமிய குடலில் தண்ணீர் வேட்கை இரட்டித்தது.

நல்ல தண்ணி ஓரிடமும் இல்லையாம். இப்ப என்ன செய்யுறது? உப்புத் தண்ணி யெண்டால் தாறன். ஏதோ குடிச்சிட்டுப் படு.. காலமை பாக்கலாம்”.

உப்புத்தண்ணீர் குடிக்கும் படிமனையாள் அருளிய உபதேசம் அவன் பொறுமையைச் சோதித்தது. பண்டாரி இயற்கையில் வெகு பொறுமைசாலி. வீட்டு நிலைமையை உணர்ந்து ஒத்துப்போகக் கூடியவன். கள்ளுத் தொழிலாளியாக இருந்து, இன்று ரிக்ஷாத் தொழிலாளியாக மாறிய இந்தக் காலம்வரை சோர்வுற்ற உடலுக்குத் தென்பு கொடுக்கஎன்ற சாட்டிலாவது கூட மதுவை அவன் தொட்டுப் பார்த்தது கிடையாது. அப்படிப்பட்டவனுக்கு மனைவியின் வார்த்தைகள், இன்று ஏனோ தெரியாது, பழங்கள்ளின் வேகத்தில் வெறிகொள்ளச் செய்தது-

அவனுடைய குடியிருப்பில் கிணறு கிடையாது. அக்கம் பக்கத்துக் குடிசைகளுக்கும் அந்தப் பாக்கியம்இல்லை. அப்பகுதியில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் தொழிலாளர். கடல் தொழிலாளர், ‘கக்கூஸ்தொழிலாளர், கள்ளிறக்கும் தொழிலாளர், பஸ் தொழிலாளர், வண்டியிழுப்போர், இப்படிப் பல ரகம். ஆனால் தொழிலாளர் என்ற ரீதியில் நகரத்தின் மிகப் பின்தங்கிய அந்தப் பகுதியில் சேரி அமைத்துக் குடியேறியிருந்தனர். ஆகவேதான், அரசாங்கமும், நகராண்மைக் கழகமும் அந்த லேபரேர்ஸ்பகுதியை அலட்சியம் செய்துவிட்டிருந்தன.

மனிதனின் அன்றாடத் தேவையான குடி தண்ணீர் கூடக் கிடைக்க வசதியில்லையென்றால், அந்த வட்டாரத்தின் மகிமையை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

பண்டாரியின் குடிசையிலிருந்து, பத்துக் குடிசைகளுக்கப்பால், பஸ் தொழிலாளி சாமிநாதனின் வீடுஇருக்கிறது. அங்கு தான் மிகக் கிட்டிய கிணறு உண்டு. பெயருக்குக் கிணறேயொழிய, அது நீர் நீரம்பியுள்ள குழியென்பதே பொருந்தும். அந்தக் கிணற்றுத் தண்ணீர்தான் அவசரத் தேவைக்குப் பயன்படும். அதுவும், பல மணி நேரம் காவலிருந்து வீட்டுக்காரர்களிலொருவர் அள்ளி ஊற்றி அருள் பாலித்தாற்றான் கண்ணால் காண முடியும். அல்லது, அற்றது தான்!

அந்தக் கிணற்றில் ஊறும் தண்ணீரைத்தான் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துத் தண்ணியாக ஊற்றி வருகிறார்களோ என்ற பெருஞ் சந்தேகம், வெகு நாட்களாக பண்டாரியின் நெஞ்சத்தில் இருந்து வருகிறது. அந்தச் சந்தேகம் இன்றுகூடத் தீர்ந்தபாடில்லை. அந்தத் தண்ணீர் அப்படிப் பட்ட உவர்ப்பு. குடிக்க முடியாத அளவுக்குக் கைச்சல்’!

இந்தத் தண்ணீரைத்தான் குடிக்கும்படி அவன் மனைவி அவனுக்கு இதோபதேசம் செய்கிறாள். அவனுக்கு எப்படி இருக்கும்?

சற்றுத் தூரத்தில் மாதா கோயிலொன்று இருக்கிறது. அந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்கு அதுவே மிகவும் சிறந்த நல்ல தண்ணீர்க் கிணறு; வற்றாத அருள் சுரக்கும் மகாவலி கங்கை! வட மாகாண மக்களுக்குப் பயனின்றிக் கடலில் சங்கமமாகும் மகாவலி நதியைப் போலவே, அந்த நல்ல தண்ணீர்க் கிணறு இரவில் பயன்படாது. கோயில் நிர்வாகிகள் இரவில் அதன் படலையைப் பூட்டி விடுவார்கள். அதைத் தவிர, இன்னுமொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அப்பகுதியில் இருக்கிறது.. அது தான் அம்மன் கோயில் கிணறு. ‘அம்மன் கோயில் கிணறுஎன்ற விருதை அது பெற்றிருப்பினும், உண்மையில் அக் கிணறென்னவோ பொதுக் கிணறுதான். அம்மன் கோயிலுக்கு அணித்தாக உள்ளதால், நாளாவட்டத்தில் அப்பெயரினைச் சுவீகரித்துக் கொண்டது. அதில் குறிப்பிட்ட சில சாதியாரைத் தவிர வேறுயாரும் தண்ணீர் அள்ளக் கூடாது என்ற சட்டம் கல்வெட்டில் ஏறாமல் நிலைத்துவிட்டது. அக்கிணறு உபயோகக் குறைவினால், ஜாதி வெறியர்களின் நெஞ்சங்களைப் போலவே இருண்டு பாசி படர்ந்து கிடந்தது.

அப்பகுதி மக்களுக்கு இரண்டு கிணறும் தெய்வங்கள். ஒன்று பகலில் கடாட்சிக்கும் தெய்வம்; மற்றது ஒறுப்பாக, ஒரு சிலருக்கு மட்டும் அருள் சுரக்கும் தெய்வம். எது எவ்வாறு இருப்பினும் தெய்வம் தெய்வந்தானே?

இந்த இரண்டு கிணற்றுத் தண்ணீரும் கிடைக்க வழியில்லை யென்றால், பண்டாரி போன்றோர் அந்த ஆஸ்பத்திரி மருந்துத் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். ஆக, மனைவியின் உபதேசந்தான் சாத்திய விட்டத்திற்குட் பட்டது என்று அவனுக்குப் பட்டது.

ஒரு நாளைக்குக் குடிச்சா என்ன கெட்டுப் போயிடும்? நல்ல தண்ணிக்குக் காலமை பாக்கலாம். சொல்லன். உப்புத் தண்ணி வேண்டி வரட்டா?”

அவன் பதில் சொல்லவில்லை. அவளுடைய கையிலிருந்து  ஈயச் செம்பைப் பறித்தான். எங்கும் கவிந்திருந்த கோர இருளில் விறு விறுஎன்று நடந்தான். அவளுக்கு ஆச்சரியம். அவன் சென்ற திக்கைப் பார்த்தபடியே, அசைவற்று, முனிசிப்பல் வெளிச்சக் கம்பமாக நின்றாள்.

***

பண்டாரி எவ்வளவோ சாமர்த்தியமாகத்தான் கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளினான். ஆனால் ஓட்டை வாளி, சல சல வென்று நீரைக் கொட்டி, அவனுடைய திருட்டைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அவனுடைய நெஞ்சு படபடத்தது. பயம் அவனைக் கவ்வியது. புதிதாகத் திருடச் செல்பவன் தனது காலடி யோசையைக் கேட்டே மிரளும் மனோபாவம் அவனைச் சுற்றி நின்றது. தேகம் பதறியது. கைகால்கள் உதறலெடுத்தன. அவனுடைய முதல் முயற்சி வெற்றி பெறவில்லை!

இரண்டாவது முறையும் முயற்சி செய்தான். அவனுடைய புலன் முழுவதும் தண்ணீரள்ளும் வாளியுடன் ஒன்று பட்டிருந்தது. ஒரு தடவை வாளியை நன்றாகக் கோலி விட்டான். வாளி ஒரு தடவை தண்ணீர்ப்பரப்பிற்குள் மூழ்கி எழும்பி  

இடது பக்கத்திலிருந்து குரலொன்று கேட்டது.

ஆரது கிணத்திலே? குடிக்கக் கொஞ்சம் தண்ணீ ஊத்துங்க…”- பஸ் கண்டக்டர் சாமிநாதனின் குரலிது.

பண்டாரி வெலவெலத்துப் போனான். முதல் முதலாகச் சத்திர சிகிட்சை செய்து கொண்டிருக்கும் இளம் டாக்டரின் முகத்தில் சுரப்பதைப் போன்று, பண்டாரியின் முகத்தில் வியர்வைத் துளிகள் மலிந்தன. அம்மன் கோயில் சிலையைப் போன்று மௌனத்துடன் இணைந்து மௌனியாய் நின்றான். வாளி தண்ணீருக்குள் தாழ்ந்தபடி இருந்தது; அவன் கைகள் துலாக்கொடியைப் பிடித்தது பிடித்தபடி இருந்தன; அவன் சிலையாக நிலைகொண்டு நின்றான்.

அதே குரல் மீண்டும் ஒலித்தது. சற்றுப் பலமான அதட்டல். “ஆரப்பா கிணத்திலை? காது கேக்கல்லையா? கொஞ்சம் தண்ணி ஊத்துறதுக்கென்ன?”

மௌனம்.

என்னமோ ஏதோஎன்ற பயம்-பயங்கர நினை வெழுப்பும் பீதி-சாமிநாதனைத் தன்பால் ஈர்த்தது. அதற்குக் காரணமும் உண்டு.

இரவு நேரத்தில், அம்மன் கோயிலுக்கு அருகில் சங்கிலி மாடன் வீதிவலம் வந்து போவான் என்பது வழக்கழியாக் கதை. இந்தக் கதையைச் சாதாரண காலங்களில் சாமிநாதன் ஒப்புக்கொள்ள மாட்டான். ஏனெனில், அவனுடைய பஸ்ஸில் பிரயாணம் செய்திருக்கக்கூடிய நீங்கள் அவன் தன்னுடைய வாயினாலேயே தன் வீர, தீர, பராக்கிரமச் செயல்களை யெல்லாம் விஸ்தரிக்கக் கேட்டிருப்பீர்கள்.

அசட்டுத் துணிச்சல் உந்த, சாமிநாதன், வேலியோரம் சாத்தப்பட்டிருந்த சைக்கிளடிக்குச் சென்று, சைக்கிள் விளக்குடன் திரும்பினான். அப்பொழுதும் பண்டாரி சிலையாக, துலாக் கொடியைப் பிடித்த வண்ணமே கிணற்றடியில் நின்றான். அவனுடைய முகத்துக்கு நேரே சாமிநாதன் வெளிச்சத்தைப் பிடித்தான். முகம் தெரித்தது. சவக்களை தட்டியிருந்த அந்தமுகம்

துலாக் கொடியுடன் பண்டாரியைக் கண்ட சாமிநாதன் ஒரு கணம் திடுக்கிட்டான். ‘நான் காண்பது கனவுதானோ?’ என்ற ஐயம் அந்தக் கணம் அவனுடைய மனதை அலைக் கழித்தது. கண்களை மூடித்திறந்து, மறுபடியும் உற்றுப் பார்த்தான். சந்தேகமில்லை. அவனுக்கு முன்னால் பண்டாரியின் உருவந்தான் நின்று கொண்டிருந்தது

‘…நளவன்-‘நளப் பண்டாரி’ – அம்மன் கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளிவிட்டான். கிணற்றைத் தீட்டுப் படுத்தி விட்டான். நளப்பயலின் துணிச்சல் என்ன? மேல் சாதிக்காரர்களின் வீரத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட சவால்; அவர்கள் முகத்தில் பூசப்பட்ட அவமானம்!…எவ்வளவுஎவ்வளவு…’

சாமிநாதனின் உள்ளங்காலிலிருந்து ஒரு கொதிப்பு வெடித்துக் கிளம்பி, அவன் உச்சந் தலையைத் தாக்கியது. மனிதன், அடுத்த கணமே மிருகமாக மாறிவிட்டான்.

நளப்பயலே! அவ்வளவு கொழுப்பாடா உனக்கு? இவ்வளவு தூரத்துக்கு வந்துட்டியளாடா? எங்கட கிணத்திலே தண்ணி அள்ளுறதுக்கு உனக்கு எவ்வளவு முழ நெஞ்சடா? என்னடா நான் கேக்கிறன்; நீ பேசாமல் நிக்கிறாய்?”

கோபக் கொதிப்புடன் கேள்விப் பாணங்களை அள்ளியள்ளி வீசினான். குருக்ஷேத்திரப் போரில், பார்த்தனின் கணைகள் பீஷ்மரின் உடலைப் பிய்த்தனவாம். அந்த அம்புகளிலும் பார்க்க உள்ளத்தைத் தைக்கும் சொல்லம்புகள் கூரியனவாகும். ஆனால் அச்சொல்லம்புகள் வலியற்றன. பண்டாரியின் மனம் புண்படவில்லைஅவன் இந்த உலகத்து உணர்ச்சியே அற்றவனாக….

சாமிநாதன் இரைந்து கத்தினான். கோபக் குரலில் கூப்பாடு போட்டான், அவனுடைய கோபப் பெருங்குரலைக் கேட்டு அயலில் வசிப்பவர்கள், வழிப் போக்கர்கள் ஆகிய அத்தனை பேர்களும் கூடிவிட்டனர்.

கேள்வி மேல் கேள்விகள். கூடியவர்கள் தங்களை மெத்தப் பெரிய வக்கீல்களாகக் கற்பித்துக் கொண்டு பண்டாரியைக் குறுக்கு விசாரணை செய்வதில் முனைந்தார்கள். அவன் வாயே திறக்கவில்லை.

முடிவு?

தமிழ்ப் பண்பாட்டினைக் காப்பாற்றும் திருத்தொண்டுபண்டாரிக்கு, எழும்பப் படுக்க முடியாமல் செம்மையாய் உதை விழுந்தது. முரட்டுப் போலீஸ்காரனிடம் வசமாகச் சிக்கிக் கொண்ட துடியான இளைஞனுக்குக் கிடைக்கும் வரிசையைப் போல மூட்டு மூட்டாக அடிக்கப்பட்டான். இத்துடன் அவர்களுடைய உயர் ஜாதிமான்களின் – பரம்பரையும், பெருமையும், மேன்மையும் இரவுக்கிரவே காப்பாற்றப்பட்டன. கிணற்றில் ஏற்பட்ட  துடக்கு துடைக்கப் பட்டதென்ற நினைவு

பண்டாரிக்கு நஷ்டம் பெரிதல்ல. கொண்டு சென்ற செம்பை யாரோ புண்ணியவாளன் அபகரித்து விட்டான். சில காயங்கள். இரத்தம் சிந்தப்பட்டது. அவ்வளவு தான். உயிருக்கு ஆபத்தில்லை!

பார்க்கப் போனால், இது பண்டாரியின் பூர்வ ஜன்மப் புண்ணிய பலனாக இருக்கலாம். அல்லது, அவனுடைய இல்லாளின் மாங்கல்ய பலனாகக்கூட இருக்கலாம். இந்த வெறிக் கூட்டம், இப்படியான சந்தர்ப்பத்தில், உயிருடன் விடுவதாயின், அது பத்திரிகைகளுக்கே அனுப்பத் தக்க செய்திகூட. ‘நோக்காட்டில் வெந்து, அன்றிரவு படுத்திருந்த பண்டாரி தன் குடிசை நள்ளிரவில் தீப் பற்றி எரிவதைக் கண்டான். மறுநாள். குடிசை இருந்த இடத்தில், வெறும் சாம்பல். ஜாதி அபிமானம் என்ற தீ அவனுடைய குடிசையை ஜீரணித்து ஏப்பமிட்டது. எந்தத் தோஷத்தையும் அக்கினி பகவான் எரித்து, அழித்து, சுத்திகரித்து விடுவாராம். – அக்கினி பகவான் உயர்ஜாதி இந்துக்களின் தீப்பெட்டிக்குள்ளிருந்து தான் அடிக்கடி தலையைக் காட்டும் ஆசாமி யாச்சே!.

***

இந்தச் சம்பவங்கள் நடந்தேறி ஒரு மாதமாகிவிட்டது.

ஒருநாள் மாலை. நல்லூர் மஞ்சத்தைப் போன்று ஆடி அசைந்து நடைபோட்டுக் கொண்டிருந்தான் பண்டாரி. அன்று அவனுக்கு வாடகை எதுவும் கிடைக்கவில்லை. இதுவும் அவனுக்குப் பழக்கம். ஒரு மாதத்திற்குள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மனதை மேயவிட்டுக் கொண்டு, நகரத்தில் பெரிய வீதிகளிலெல்லாம் வெறும்ரிக்ஷாவை இழுத்துக்கொண்டே நடந்தான். காலையிலிருந்து வாடகை பிடிக்க அலைந்த களைப்பு வேறு.

பறங்கித் தெருவிலுள்ள கன்னியாஸ்திரி மடத்தைச் சமீபித்தான்; அங்கே, அலுப்பாந்தி செல்லும் தண்டவாளமும், பெரியே தெருவும் கலவிச் சங்கமிக்கும் திருவிடத்திற்கு, வலது பக்கத்துக் கான் ஓரத்தில், ஜனத்திரள் குழுமியிருப்பது அவனைக் கவர்ந்தது. ‘ஆளை ஆள் எகிறிக் கொண்டு பார்த்து ரஸிக்கும் அந்தக் காட்சிதான் என்ன?’

படித்தவனுக்குப் பின்னாலும் பத்துப் பேர்; பைத்தியக்காரனுக்குப் பின்னாலும்…’ நகர மக்களின் மந்தை மனப்பான்மை என்ற எண்ணம் அவனை முதலில் ஜனத்திரளை அலட்சியம் பண்ணச் செய்தது. மறுகணம் மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள புதினம் பார்க்கும் மனோபாவம். அவனை முன்னேற விடவில்லை.

அதே நேரத்தில், வீதியின் நேரெதிர் பக்கத்திலிருந்து ஏய், ரிக்க்ஷா! கெதியா வா. படத்துக்குப் போகவேணும், வாறீயா?” என்று ஒரு குரல் அவசரப்படுத்தியது.

அவனது எண்ணம் சிறிது சலனப்பட்டது. இறுதியில் அங்கு என்ன தான் நடக்கிறதுஎன்பதைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை வென்றது. “கொஞ்சம் பொறுங்க துரை. இதோ வந்துட்டேன்என்று குரல் கொடுத்து விட்டு, ரிக்ஷாவை ஒரு பக்கமாக நிறுத்தினான். பின்னர், கூட்டத்தில் ஒருவனாகக் கலந்தான்.

அங்கே

கண்டக்டர் சாமிநாதன் இரத்த வெள்ளத்தில் மல்லாந்து கிடந்தான். உடம்பின் பல பாகங்களிலும் காயங்கள். அந்தக் காயங்களிலிருந்து பாயும் இரத்தம். சூழலிலும் தொட்டம் தொட்டமாக இரத்தக் கறைகள். விகாரமான காட்சி

பண்டாரி விஷயத்தை ஒருவாறு ஊகித்தான். விசாரித்து அறிந்தான்.

ரெயிலும் பஸ்ஸும் ஓட்டப்பந்தயம் நடத்தின. பந்தயத்தில் பஸ் தோற்றுவிட்டது. பஸ்ஸுக்கோ பிரயாணிகளுக்கோ அதிக சேதமெதுவும் கிடையாது. ஆனால், ‘புட் போட்டில் நின்ற கண்டக்டர் சாமிநாதனுக்குத்தான் பலமான அடி. அத்துடன் வெகு தூரத்திற்குத் தூக்கியெறியப்பட்டு, ஸ்மரணை இழந்தான். அந்த நிலையில் கிடந்தவனைச் சுற்றித்தான் அந்த ஜனத்திரள்.

பண்டாரியின் மனதில் ஆரம்பத்தில் ஒருவகை மகிழ்வுணர்ச்சி ஏற்பட்டது. அடிபட்ட அன்றிரவு அவன் மனைவி கொடுத்த சாபங்கள் மனதில் குதிர்ந்தன. “குறுக்கால தெறிப்பான்! நல்லாயிருப்பானா? அவன் குடும்பமும் சந்தானமும் நல்லாயிருக்குமா? கொள்ளையில போவான்! எரிஞ்சு போவான்! கட்டையிலே போவான். நல்லூர் பெருமானே, அவனுக்கு ஒரு அழிவைக் காட்டு.”

ஒரேயொருகணம் அந்த அர்ச்சனைகளின் நினைவு அவன் மனதைக் குளிர்வித்தது. சவாரிக்கு அழைத்த துரையின் ஞாபகம் வந்தது. திரும்பலாம் என்ற எண்ணம் தளிர்த்தது. திரும்ப நினைத்தான்.

மறுகணம் அவனுடைய மனிதமனம் அந்தத் தொழிலாளி இதயம் தன்னில் தானே வெறுப்புக்கொண்டது. தன்னுடைய நினைவுக்காகத், தானே வெட்கப்பட்டான். மனதைச் சுதாரித்துக் கொண்டான்.

கூடி நின்றவர்கள் சும்மா ஆகாஊகூ…’ என்று சத்தம் போட்டுச் சந்தடி செய்தனரேயொழிய, ஒருவரும் முதலுதவியோ அல்லது வேறு உதவியோ செய்ய முன்வரவில்லை.

பட்டின நாகரிகம்!

பண்டாரி, இரண்டொருவர் உதவியுடன் சாமிநாதனை ரிக்க்ஷாவில், ஏற்றிப் படுக்க வைத்தான். அடுத்த கணம் வேகமாக, தன்னை மறந்த வேகத்தில், ஓட்டமாய் ஓடினான்.

ரிக்ஷா பட்டிணத்து ஆஸ்பத்திரியை நோக்கிக் காற்றாய்ப் பறந்தது.

***

ஒரு மணி நேரம் சென்றுவிட்டது.

மனைவியின் முதல் பிரசவத்தை எதிர்பார்த்து, அறைக்கு வெளியே துடிதுடிப்புடன் காவல் நிற்கும் இளம் கணவனைப் போல், பண்டாரியும் ஆஸ்பத்திரியின் விறாந்தையில் பரபரப்புடன் காட்சியளித்தான்.

நர்ஸுகள் அங்குமிங்கும் போவதும் வருவதுமாக இருந்தனர். பொறுமை எல்லை கடந்தது. கடைசியில் ஒரு நர்ஸைப் பேச்சுக்கு இழுத்துக்கொண்டான்.

நேசம்மா, இப்ப பஸ்ஸிலே அடிப்பட்டு ஒருவர் வந்தாரே, அவருக்கு எப்படி இருக்குது?” என்று குரலில் ஆவல் தொனிக்கப் பண்டாரி கேட்டான்.

அந்தக் கேஸா? அவருக்கு உடம்பிலே இரத்தமி இல்லை. இரத்தம் கொடுக்கவேணும். ஆனால் பிளட் பாங்கிலே இரத்தம் இல்லையாம். அது தான் டாக்டர் யோசிக்கிறார்.” – செய்தியைச் சொல்லிப் போகத் திரும்பினாள் நர்ஸ்.

நேசம்மா, ரத்தமில்லாட்டி என்ர ரத்தத்தைத் தாறன். குடுக்கிறியளா, அம்மாஎன்று சொன்ன பண்டாரியின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

நர்ஸ் அந்த ரிக்ஷாக்காரனை விசித்திரமாகப் பார்த்தாள்.

எதற்கும் டாக்டரிடம் கேட்டுச் சொல்லுகிறேன். அது மட்டும், அந்த வாங்கில் இருந்துகொள்” -ஆதரவாகச் சொல்லி, டாக்டரிடம் விரைந்தாள்.

***

பண்டாரியின் இரத்தத்தைப் பரிசோதித்த டாக்டர் மகிழ்வுற்றார். இரண்டு இரத்தங்களும் ஒரே ரகமாம், ஒத்துப் போகுமாம் என்ன விசித்திரம்? ஜாதிக்கு , ஜாதி இரத்தம் மாறுவதில்லை!

நளம்பண்டாரியின் இரத்தம், ஜாதிமான் சாமிநாதனின் உடலில் பாய்ச்சப்படும் வேலை முடிந்தது. டாக்டர் வெளியே வந்தார்.

இரத்த தானம் செய்த பின்பு சற்று ஆயாசத்துடன் வாங்கில் அமர்ந்திருந்த பண்டாரியின் முதுகை ஆதரவுடன், தடவிக் கொடுத்து, “நீ செய்தது இரத்த தானமல்ல. அந்த நோயாளிக்கு மறுபிறப்பே வழங்கியிருக்கிறாய். இந்தா பத்து ரூபா. என் அன்பளிப்பு……உடலைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்.” என்று கூறியபடி, அவனிடம் ஒரு பச்சை நோட்டை நீட்டினார்.

பண்டாரி பணத்தை வாங்க மறுத்துவிட்டான். ஆனால் வேறு ஏதோ கேட்க இச்சை கொண்டவனைப்போல, அவன் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பதை அவதானித்தார்; அவருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. “உனக்கு என்ன வேணுமப்பா? என்ன வேணும் கேள்; பயப்படாமல் கேள்!” என்றார்.

டாக்குத்தரய்யா! என்னை ஒரு முறை அவரை காயம் பட்டவரைப் பாக்க விடுங்க

டாக்டர் மகிழ்ச்சியுடன், அவனுடைய வேண்டுகோளை ஏற்றார். அவனுடைய நடத்தை விசித்திரமாகப் பட்டது. இந்த விசித்திரமான நடத்தையை மனதிற்குள் வியந்து கொண்டே ஒப்புக்கொண்டார்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பின் அவனுடைய விருப்பம் நிறைவேறியது. சோர்வினாலும், பலவீனத்தினாலும் வெளிறியிருந்த சாமிநாதனின் முகத்தை ஆர்வம் பிரதிபலிக்க பண்டாரி பார்த்தான். களைப்புக் கலைந்து, களைகொண்டு, களிப்புடன் அவனை நோக்கினான்.

முழு விபரங்களையும் நர்ஸின் மூலம் அறிந்த சாமிநாதன், தனக்கு இவ்வளவு உதவி செய்தவன் பண்டாரிதான் என்பதை அறிந்தவுடன், மலைத்தான். ஒரு கணம் வெட்கிக் குறுகினான். மனச்சாட்சியும், நன்றியறிதல் உணர்ச்சியும் அவனைத் துளைத்தன.

பண்டாரிஎன்று அன்பொழுக அழைத்தான், சாமிநாதன்.

அவனும் கட்டிலை நெருங்கினான். உடனே பித்துப் பிடித்தவனைப்போல,

சொல்லு பண்டாரி, ஏன் எனக்கு உயிர்ப்பிச்சை தந்தாய். நான் கொடியவன், தீயவன். உன்னை மிருகமாக அடித்தேன்; நீ இருந்த வீட்டை எரித்தேன். நான் நாயிலும் கடையன். ஏன் இந்த நாய்க்கு உதவினாய்?” வார்த்தைகள் முடியவில்லை.

சாமிநாதனுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று; கரை புரண்டு வழிந்தது. அவனுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, “சொல்லு , பண்டாரி சொல்லுஎன்று கெஞ்சாக் குறையாகக் கேட்டான். –

பண்டாரியிடம் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. மிகவும் தெளிவான குரலில் அவன் அமைதியாகச் சொன்னான்: நானும் மனிதன். நீயும் மனிதன். நீயும் நானும் தொழிலாளிகள்”.

அந்தக் காட்சியைப் பார்த்து நின்ற நர்ஸின் கண்களிலே கூட

– 11-9-1955- தண்ணீரும் கண்ணீரும் சரஸ்வதி வெளியீடு முதற் பதிப்பு ஜூலை 1960

24 கருத்துகள்:

  1. அறுபதுகளில் வந்த அருமையான கதைப் பகிர்வு. கதை எழுதிய வெளியான காலத்தை மனதில் கொண்டால், நல்ல கதைப் பகிர்வு என்ற எண்ணம் வருகிறது

    பதிலளிநீக்கு
  2. 'ஜீவாவின் சிறுகதை பாணி எழுத்து, உரத்துப் பேசும் நேரடியான எளிமையான கதை சொல்லல் முறையாகும்' என்று ஜெமோ சொன்னது இருந்திருக்க வேண்டும்

    இதான் ன் ஜெமோவின் வார்த்தை அமைப்புகளில் இருக்கும் குழறுபடி. சமயத்தில் இந்த மனிதர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியாது போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழறுபடி என்று குளறுபடியை சிலேடையாக சொல்கிறீர்களா? வரவுக்கு நன்றி. ஒரு தோழர் மறைவுக்கு கேரளம் ஓணத்தையும் மறந்து துக்கத்தில்.
      நன்றி.

      நீக்கு
  3. கதை வாசிக்க ஆரம்பத்திலேயே கோமல் சாமிநாதன் வந்து விட்டார். கொஞ்சம் தாமதித்து புதுமைப் பித்தன், ஜெகசிற்பியன் என்று யதார்த்த நடை போட்டனர். சு.சமுத்திரம் வேறு லேசாக எட்டிப் பார்த்தார்.

    கீழ் வெண்மணி சோகம் நிழலாய் மனவோட்டத்தில் கலக்க கதையில் ஏதேதோ நாடகபாணி திருப்பங்கள். உழைக்கும் வர்க்கத்தின்
    கைகுலுக்கலில் சினிமா பாணி முடிவு.

    ஜாதி மத பேதங்கள் எல்லாம் சாகாவரம் பெற்றவை போலும்.
    அதனால் தான் உயிர்ப்புடன் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. இது போன்ற அலசல்கள் தான் இந்த 'நான் படிச்ச கதை' பகுதியை சிறப்பிக்கின்றன.
      ஜாதி மத பேதங்கள் நகரங்களில் சிறிது சிரிதாய் மறைந்து வருகின்றன. கிராமங்கள் என்ற தாழிட்டுக்கொண்ட சமூகத்தில் தான் இவை இன்றும் தீவிரமாக கடைபிடிக்கப் படுகின்றன.
      நான் முதலில் 10a1 ஆக ஆசிரியப்பணியில் ஒரு கிராமத்தில் வேலைக்கு சேர்ந்தபோது சாதாரணமாக கேட்கப்பட்ட கேள்வி "என்ன ஜாதி?"
      Jayakumar

      நீக்கு
  4. முதல் செய்தி ஆஹா!!!! போட வைத்தது. அக்குழந்தைக்கு மனதார வாழ்த்துகள்! பாராட்டுகள்! நல்ல சூழல் அமைந்து குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும்!

    பார்த்ததும் என் பழைய நினைவுகள் மனதில் ஓடின...இப்படி நானும் ஒரு முறை வகுப்பில் பாடம் எடுத்திருக்கிறேன். பாடம் படித்து தேர்வு என்பதை விட அதைக் குறித்து பல விஷயங்கள் ஆய்ந்து அதையும் சேர்த்துச் சொல்லிப் பாடம் எடுப்பது ரொம்பப் பிடிக்கும். இதில் என்னவென்றால் சின்ன வயதில் தற்செயலாக எடுத்த போது அதை ஆசிரியர் பார்த்துவிட என்னை பல வகுப்புகள் எடுக்க வைத்தார்!!!! (அப்போது நான் வளர்ந்த சூழல் வேறு....ரொம்ப ஊக்கப்படுத்தும் சூழல்) அப்ப இல்லாதிருந்த பயம், 7 வகுப்பிற்குப் பிறகு வந்துவிட்டது. கல்லூரியில் செமினார் எடுக்க பயம் இருந்தது. அப்பவும் தலைப்புக்கான பல தேடல்கள் நூலகத்தில் இருந்து எடுத்து கோர்த்து பாடம் எடுத்தேன்.....ஆனால் செம பயத்துடன் உதறலுடன்!!!!! பயத்தின் காரணம் அப்ப வளர்ந்த பின்னணி!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மருத்துவ சாதனை வியக்க வைக்கிறது! total anesthesia இல்லாமல் local anமூளைக்கட்டியை அகற்றுவது!!!! ' அவேக் கிரனியோடோமி' தொழில்நுட்பத்தை இந்த டெக்னாலஜியின் பெயர் தெரிந்துகொள்ள முடிந்தது.

    ஜெ கே அண்ணா பகிர்ந்திருக்கும் பாசிட்டிவ் செய்தியும் சூப்பர். நல்லோர் மனம் இன்னும் பெருகட்டும்,

    கீதா



    பதிலளிநீக்கு
  6. 1955ல் இப்படி நேரடியாகத் தைரியமாக தண்ணீருக்கான சாதிப் பிரச்சனையை எளிமையான நடையில் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

    தண்ணீரும் கண்ணீரும் இறுதியில் சுபமாக முடிவடைகிறது ஆசிரியரின் உள்ளம் - எல்லார் மனதிலும் இருப்பதுதான் - அப்படி விரும்புவதை அதாவது எல்லார் உடம்பிலும் ஓடும் ரத்தத்திற்கு மனுஷன் பார்க்கும் ஜாதி இல்லை (அண்ணா ஹைலைட்டிருக்கும் பிங்க் கலர் வரி!!) என்பதை ஆசிரியர் சொல்ல நினைத்து அது சினிமாட்டிக் க்ளைமாக்ஸ் - சாமிநாதன் விபத்தில் சிக்குவதும் பண்டாரி உதவுவதும் என்று...முடித்தாலும் அழகாகத்தான் இருக்கிறது. எல்லார் மனதும் விரும்புவதும் இதுவே!

    ஆனால் இப்பவும் இலங்கையில் இப்படியான சாதி பார்க்கும் விஷயம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ஆனால் நம்மூரில் இப்பவும் கிராமத்தில் இருந்துதான் வருகிறது. நகரங்களில் கொஞ்சம் மாறி வந்துகொண்டிருந்தாலும்.

    கதை பிடித்திருக்கு. நல்ல பகிர்வு ஜெ கே அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. 1955 ல் எழுதப்பட்ட கதை....அப்ப இருந்தது இன்னும் இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் மாறியிருக்கிறதா என்றால் வேதனை. இன்னமும் ஆவணக் கொலைகள் கௌரவக் கொலைகள் நடக்கின்றனவே!

    கதையில் ஆச்சரியப்பட்ட, ரசித்த வரிகள் - நிறைய மறைமுக நையாண்டி வரிகளைக் காணலாம். கதையின் வரிகள் சில ரொம்பவே சிந்திக்க வைத்தது அதாவது இப்போதும் அதே நிலை மக்கள் மாறவில்லையோ என்ற எண்ணத்தை...

    //அதாவது, இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்கள் மனிதமாடு என்று மாற்றுப் பெயரிட்டு எழுதிவரும், மனிதனை மனிதன் இழுத்து வாழும் தொழிலைச் செய்பவன்//

    இதில் குறிப்பாக இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்கள் எனும் நையாண்டியை ரசித்தேன்.

    பட்டினத்து நாகரீகம் - பண்டாரியைப் பற்றி சொல்லியிருக்கும் பாரா ரசித்ததோடு....பட்டினத்து என்று சொல்லியிருப்பது அப்படி என்றால் பட்டினத்திலும் தீண்டாமை இருந்திருப்பது தெரிகிறது.

    //அரசாங்கமும், நகராண்மைக் கழகமும் அந்த ‘லேபரேர்ஸ்’ பகுதியை அலட்சியம் செய்துவிட்டிருந்தன.//

    இதிலும் இப்பவும் மாற்றமில்லை!

    அந்தக் கிணற்றில் ஊறும் தண்ணீரைத்தான் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துத் தண்ணி’யாக ஊற்றி வருகிறார்களோ என்ற பெருஞ் சந்தேகம்,// நையாண்டி!

    சிரித்துவிட்டேன்!!!

    //வட மாகாண மக்களுக்குப் பயனின்றிக் கடலில் சங்கமமாகும் மகாவலி நதியைப் போலவே,//

    இந்த வரி எல்லாம் நம்மூரில் இப்பவும்.

    ‘அம்மன் கோயில் கிணறு’ என்ற விருதை அது பெற்றிருப்பினும்,//
    இதோடு அடுத்தாப்ல வரும் தெய்வம் தெய்வந்தானே என்று சொல்லப்பட்டிருப்பதும், நையான்டியாய் அப்போதைய கஷ்டம். பளிச்சென்று சொல்கிறார்.

    //‘தமிழ்ப் பண்பாட்டினைக் காப்பாற்றும் திருத்தொண்டு’ பண்டாரிக்கு,//

    பரம்பரையும், பெருமையும், மேன்மையும் இரவுக்கிரவே காப்பாற்றப்பட்டன. கிணற்றில் ஏற்பட்ட துடக்கு துடைக்கப் பட்டதென்ற நினைவு…//

    பார்க்கப் போனால் - இந்த பாராவில் பத்திரிகைக்கே கூட அனுப்பப்பக் கூடிய செய்தி என்று அதைச் சொல்லும் இடம் செம நையாண்டி! கடைசிவரிகள்....1955லேயே எனும் போது ...
    அப்புறம் ஏன் நாம என்னவோ அந்தக்காலம் இந்தக்காலம்னு ரொம்ப ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் மக்கள் என்று எனக்குத் தோன்றும் தோன்றுகிறது.

    பட்டின நாகரிகம்!// யாரும் உதவவில்லை என்று அப்போது சொல்லியிருப்பதைப் பார்க்கறப்ப இப்ப மட்டும் என்ன மாற்றம்? இப்ப உதவமாட்டாங்க மொபைலில் எடுத்து வைரலாக்குவாங்க!!! அம்புட்டுத்தான்......

    //“நானும் மனிதன். நீயும் மனிதன். நீயும் நானும் தொழிலாளிகள்”.//

    கொஞ்சம் கம்யூனிஸம்?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இந்த இரத்தம் வரும் பகுதி வாசிச்சப்ப "உன்னால் முடியும் தம்பி" படம் நினைவுக்கு வந்தது அதில் வரும் வசனங்க்ள்,

    தண்ணீர் பிரச்சனையை சாதிப் பிரச்சனையை வாசிச்சப்ப (இதுஎ ழுதப்பட்ட வருடம் 1955) நான் வள்ளியூரில் இருந்தப்ப வீட்டில் கதையில் சொல்லியிருப்பது போல் உப்புத்தண்ணி கிணறுதான். நல்ல தண்ணி வேண்டும் என்றால் ஒரு மைல் தூரம் போக வேண்டும் ப்ளாக் ஆஃபீஸ் என்று சொல்லப்பட்ட இடம் அந்தக் காலனிக்குச் செல்ல வேண்டும். ஐந்தாம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு படித்த சமயம். இடுப்பில் ஒரு பித்தளைக் குடம், மறு கையில் ஒரு பெரிய தூக்கு வாளி. இரண்டையும் சுமந்து வர வேண்டும். இப்படி 5, 6 நடை.

    அப்ப பாட்டி சொல்லி அனுப்பிய அவிஷயம் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இரத்தம் தானம் வரும் பகுதி - தானம் விட்டுப் போச்சு!! இரத்த தானம் என்று கொள்க. இல்லைனா பொருளே மாறிவிடுகிறதே

      கீதா

      நீக்கு
    2. கீதா மேடம் வரிந்து கட்டிக்கொண்டு கதையை வரிக்கு வரி ஆராய்ந்து சிலாகித்திருக்கிறார். இதுவும் ஒரு விமரிசன கண்ணோட்டம் தான். நன்றி.

      பைப் என்ற ஒன்று வராதவரை நல்ல தண்ணீர் என்பது சுமந்து கொண்டு வர/செல்ல வேண்டிய ஒன்றாகவே இருந்தது. இந்த தண்ணீர் எடுக்கும் வேலையை நானும் செய்திருக்கிறேன் கடலூரில்.
      Jayakumar

      நீக்கு
  9. ஆசிரியை ஆன மாணவி , மூதாட்டிக்கு இல்லம் அமைத்துக் குடுத்தோர் அனைவருக்கும் பாராட்டுகள்.

    இன்று நமது நாட்டு எழுத்தாளர் டொமீனிக் ஜீவா அவர்களின் கதை அன்றைய காலகட்டத்தில் கீழ் மக்கள் பட்ட கஷ்டங்களை கருவாகக்கொண்டது நல்ல கதை. சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட.
    கீழ்மக்களுக்கான போராட்டங்களிலும் கதாசிரியர் பங்கு வகித்துவந்திருக்கிறார் இதை பல கூட்டங்களில் கூறியும் இருக்கிறார்.. இப்பொழுது இலங்கையில் கிராமங்களிலும் மாற்றம் வந்துள்ளது. மகிழ்ச்சியானது.

    எழுத்தாளரின் மல்லிகை மாத இதழ்களின் வாசகியாகவும் திரு ஜீவா அவர்களின் நண்பர்கள் குழு
    விலும் நானும் கலந்து வந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அப்படியா? மகிழ்ச்சி. நன்றி.

    ஆனால் இவர் மலையக தமிழ் எழுத்தாளர்களை மதிக்கவில்லை என்று ஒரு பேச்சு அடிபட்டதே.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  11. அப்படியாக நான் அறிந்திருக்கவில்லை மலையக எழுத்தாளர்கள் தெளித்து ஜோசப் அவர்கள் உட்பட பலரின் கதைகள் இவரின் மாத இதழில் வெளிவந்தது அறிந்திருக்கிறேன். பலரையும் எழுத ஊக்குவித்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  12. தெளித்து என்பது தவறு தெளிவத்தை என வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. குழந்தைகளுக்கு ஆசிரியர் விளையாட்டு பிடித்த விளையாட்டு, உண்மையில் மகிழ்ச்சியாக பாடம் நடத்தி இருக்கும் குழந்தை.

    மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    செய்திகள் நல்ல மனம் படைத்தவர்களை அடையாளம் காட்டுகிறது.
    அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.


    பதிலளிநீக்கு
  14. //அவன், நேர்மையான உழைப்பாளி; மனந்தளராத் தொழிலாளி. ஆகவே, அவன் மனிதனாகவே மனிதப் பண்புகளுடன் வாழத் தீர்மானித்தான். இப்பொழுது பட்டினத்து ரிக்க்ஷாக்காரனாக நடமாடுகிறான்.//

    பண்டாரியின் நல்ல குணம், பண்டாரியின் வாழ்க்கை பற்றி அருமையாக நமக்கு அறிமுகபடுத்தி விடுகிறார்.


    “எடே, பொடியா! காசு மரத்திலை முளைக்கிறதில்லையடா! நல்லாப் பாடுபட்டுத் தான் காசை உழைக்க வேணும்…”//

    பண்டாரியின் உழைத்து வாழவேண்டும் குணம் தெரிகிறது.

    என் மாமா பெண் கடற்கரை மணலில் தன் கம்மலை புதைத்து வைத்து தங்க மரம் வளரும் என்று சொன்னாள் சிறு வயதில் என்று என் மாமா அடிக்கடி சொல்லி சிரிப்பார்கள்.

    //பண்டாரியிடம் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. மிகவும் தெளிவான குரலில் அவன் அமைதியாகச் சொன்னான்: “நானும் மனிதன். நீயும் மனிதன். நீயும் நானும் தொழிலாளிகள்”.

    –அந்தக் காட்சியைப் பார்த்து நின்ற நர்ஸின் கண்களிலே கூட…//

    கதையை படித்து முடித்ததும் என் கண்ணிலும் கண்ணீர் துளிர்த்தது.
    கதை பகிர்வுக்கு நன்றி.

    கதையின் ஆரம்பத்திலும், முடிவிலும் பண்டாரியின் நல்ல குணம் சொல்லபடுகிறது.

    பதிலளிநீக்கு
  15. ஒரு முக்கியமான கதை. கடந்து போன ஒரு காலத்தின் ஒரு சமூக அவலத்தை கலைத்துவத்துடன் அம்பலப்படுத்தும் படைப்பு.
    தீண்டைமை அல்லது சாதிப்பிரிவினை எப்படி அடக்கப்பட்ட சாதியினரை உளரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் கொடூரமாக பாதித்தது என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
    இக்கதையை எழுதிய டொமினிக் ஜீவா ஒரு முக்கியமான முறபோக்கு எழுத்தாளர். மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியர்.
    சமூக அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுவதும் அவரது படைப்புகளில் முனைப்புப் பெற்றிருக்கும்.
    நான் மாணவனாக இருந்த 1970 களிலேயே அவரைச் சென்று சந்தித்திருக்கிறேன்.
    பிற் காலத்தில, அவரது சஞ்சிகையில் நிறைய எழுதவும் செய்திருக்கறேன்.
    வயது வேறுபாடின்றி நண்பர்களாகவும் இருந்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டொமினிக் ஜீவாவின் நண்பர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி. கருத்துக்களுக்கு நன்றி. புகழ் பெற்ற "ஹாய் நலமா" டொக்டர் ஆசிரியரின் கவனத்திற்கும் இப்பதிவு சென்றதில் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஹாய் நலமா வை தமிழ்ச்சரத்திலும் சேர்க்கலாம்!

      நீக்கு
    2. சேர்க்கலாம். ஆனால் இப்போது தொடர்ந்து ஹாய் நலமா வில் எழுத முடிவதில்லை

      நீக்கு
  16. சிறப்பான செய்திகள். ரஞ்சித் குமார் அதிகம் மனதைக் கவர்ந்தார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!